என் நேசத்துக்குரிய எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களின் 75 வது பிறந்த தினம் அன்று அவரின் வீட்டுக்கு எதேச்சையாகச் சென்ற அனுபவம் குறித்துப் பகிர்ந்திருந்தேன்.
அவருடைய பிறந்த நாள் வெளியீடாக "யாழ்ப்பாணம் பாரீர்" என்ற நூலை வெளியிட்டு வைத்ததோடு அன்று எனக்கும் ஒரு பிரதியைத் தந்திருந்தார் செங்கை ஆழியான் மனைவி கமலா குணராசா அவர்கள்.
1963 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்தைச் சைக்கிளில் சென்று சுற்றிப் பார்க்க எண்ணி செங்கை ஆழியானும் அவரின் நண்பர்கள் மூவருமாக நான்கு நாட்கள் யாழ்ப்பாணம்,இயக்கச்சி, தாழையடி, மணல்காடு வல்லிபுரம், பருத்தித்துறை, கீரிமலை, காங்கேசன்துறை, கந்தரோடை, தீவுகள் என்று சுற்றிய கதையைச் சொல்லி யாழ்ப்பாணத்தில் என்ன இல்லை? சுற்றுலாப் பயணிகளைக் கவரத் தக்கவை நிறையவே உள்ளன என்று தன் பழைய நினைவுகளோடு இந்த நூலுக்கு நியாயம் கற்பிக்கிறார் நூலாசிரியர்.
கமலம் பதிப்பகம் வெளியீடாக 84 பக்கங்களுடன் கருப்பு, வெள்ளைப் படங்களோடும் வெளிவந்திருக்கிறது இந்த நூல்.
ஜெயக்குமாரன் சந்திரசேகரன் (J.K) ஈழத்து வாசகர் பரப்பில் செங்கை ஆழியானின் ஆளுமை குறித்துத் தன் இணையப் பகிர்வில் கொடுத்ததைப் பின் அட்டையில் இட்டுச் சிறப்பித்திருக்கிறார்கள்.
யாழ்ப்பாண தேசத்தின் நான்கு திசைகளிலும் இருக்கும் முக்கியமான அமைவிடங்கள், கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள், பாரம்பரிய விழுமியங்கள் போன்றவற்றைத் தாங்கி நிற்கும் அம்சங்கள் என்று 64 தலைப்புகளில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில் வரலாற்றாசிரியன் சக ஜனரஞ்சக எழுத்தாளனால் தான் இம்மாதிரியான முயற்சியை முழுமையாகவும் சிறப்பாகவும் கொண்டு வர முடியும்.
அந்த வகையில் செங்கை ஆழியானைத் தவிர்த்து வேறு யாரையும் சம காலத்தில் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
செங்கை ஆழியான் எழுதிய ஈழத்தவர் வரலாறு, கந்தவேள் கோட்டை, களம் பல கண்ட கோட்டை போன்ற வரலாற்று நூல்களையும் "கடற் கோட்டை" நாவலையும், 24 மணி நேரம், மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது போன்ற இனப்பிரச்சனையின் அறுவடையால் எழுந்த கலவரப் பதிவு நூல்களையும் படித்த வகையில் இவரின் பன்முகப் பார்வையை என் போன்ற வாசகனுக்கு முன்பே காட்டிச் சென்றிருக்கிறார்.
இப்பொழுது "யாழ்ப்பாணம் பாரீர்" என்ற இந்தப் பயணம் மற்றும் வரலாற்றுக் கையேட்டை எழுதும் போது வரலாறு குறித்த ஆதாரபூர்வமான கருத்துகளை முன் வைக்கும் அதே வேளை இந்த நூலுக்கான எழுத்து நடையை ஜனரஞ்சகம் கலந்த அலுப்புத் தட்டாத நறுக்குகளோடு கொடுத்திருப்பது இவருக்கேயான தனித்துவம்.
இருப்பினும், தான் குறிப்பிட்ட அரும் பெரும் வரலாற்று அமைவிடங்கள் பற்றிப் பேசும் போது பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்க வேண்டிய சம கால தமிழ் அரசியல் தலைமை குறித்தும், குறிப்பிட்ட நபர் மீதும் தன்னுடைய விமர்சன ரீதியான கருத்தை முன் வைத்ததைத் தவிர்த்திருக்கலாம்.
இந்த நூலின் அச்சுப் பதிவு உயர்தரப் புகைப்படத் தாளில் வர்ணப் படங்கள் கொண்டு வந்திருந்தால் இதன் வெளியீட்டுத் தரத்தில் மேம்பட்டதாக இருக்கும். ஆனால் இன்றைய சூழலில் உள்நாட்டு ஈழத்து வாசகர்களை எட்டும் அளவுக்கு விநியோகச் சிக்கல் இருப்பதும், புத்தக அடக்க விலையில் உயர்வையும் கொடுக்கும் என்பதே நிதர்சனம்.
1963 ஆம் ஆண்டில் எப்படி ஊர் ஊராகத் தன் சைக்கிளில் சுற்றினாரோ அதே பாங்கில் ஊர் சுற்றி இந்த நூலில் இவர் பயணித்த இடங்களைத் தொட்டு வர வேண்டும் என்ற ஆசை எழுகிறது.
நூலில் சொன்ன பல இடங்களைத் தரிசித்திருக்கிறேன். ஆனால் அவற்றின் பின்னால் பொதிந்திருக்கும் தெரியாத வரலாற்றுப் பின்னணியை இப்போது அறிந்த பின் புறப்படப் போகும் அந்தப் பயணம் புதிய உலக காட்டும் என்பதில் ஐயமில்லை.
துரவு, ஆவுரோஞ்சிக்கல், சுமை தாங்கி என்பவற்றை என் பால்ய காலத்து யாழ்ப்பாணத்து உலாத்தலில் தரிசித்திருக்கிறேன். அந்த வீடுகளுக்கு முன்னால் இருந்தவை பின்னாளில் நவீனம் புகுந்த போது இடித்தழிக்கப்பட்ட அவலம் இப்போது உறைக்கிறது.
"யாழ்ப்பாண வீதி தர்மம்" என்ற பகுதியில் நூலாசிரியர் இந்தத் துரவு, ஆவுரோஞ்சிக் கல், மடம் போன்றவற்றையும் தெரு மூடிமடம், சங்கப் படலை போன்றவற்றைத் தேடி அவை இன்னமும் இருப்பது கண்டு புகைப்பட ஆதாரங்களோடு பதிவாக்குகிறார்.
"யாழ்ப்பாணம் பாரீர்" என்ற இந்த நூலை 2011 ஆம் ஆண்டிலேயே வெளியிட இருந்ததாகவும், யாழ்ப்பாணம் குறித்து செங்கை ஆழியான் சேமித்த படங்கள், விபரங்கள் நாட்டுச் சூழ்நிலையால் தவறி விட்டதாகவும் குறிப்பிடும் அதே வேளை மேலதிக ஆவணங்களைப் பகிர்ந்தால் அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்வதாகவும் குறிப்பிடுகின்றார்.
உண்மையில் இந்த நூலில் திரட்டித் தந்த ஆவணங்கள், படங்களைப் பார்க்கும் போதே இவரிடமிருந்து தொலைந்தவை எவ்வளவு பெறுமதியானவையாக இருக்கும் என்ற ஆதங்கம் எழுகிறது.
"யாழ்ப்பாணம் பாரீர்" என்ற இந்த நூலை பொறுப்பான ஒரு சமூக அமைப்போ அல்லது கலாசார சிந்தனை கொண்ட அரச மட்டத்திலான அமைப்போ பொறுப்பேற்று இதனைப் பரவலான வாசகப் பரப்புக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
சக தமிழக உறவுகளுக்கு மட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கழித்தவர்களுக்கும் இந்த தேசத்தின் வரலாற்று அமைவிடங்கள் குறித்த பெறுமதியான பின்னணியை விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
0 comments:
Post a Comment