மன்னார் சித்தப்பா என்று தான் நாம் எல்லோரும் அன்போடு அழைப்போம் அவரை. எங்களுக்கு அந்த நேரடி உறவுமுறை இல்லாவிட்டாலும் அவரின் பெறாமக்கள் அப்படி அழைப்பதைக் கண்டு, சகபாடிகள் நாமும் அப்படி அழைப்போம்.
மன்னாரில் கடை வைத்திருந்தார். அதுவே மன்னார் சித்தப்பா என்ற பட்டத்தை அவருக்கு வழங்கிவிட்டது. பலருக்கு அவரின் உண்மைப் பெயர் தெரிந்திருக்க நியாயமில்லை.
யாழ்ப்பாணத்துக்கு எப்போதாவது திருவிழா, பண்டிகைக் காலத்தில் அவரின் மனைவியோடு வருவார். வளைத்து நெளித்த மீசையை அடிக்கடி தன் இருவிரல்களாலும் முறுக்கி விட்டு நெஞ்சை நிமிர்த்தி, ஒரு கையால் சாறத்தை இழுத்துக் கட்டிவிட்டு நடக்கும் போது மாயா பஜார் கடோத்கஜன் ஆக உருவம் கொண்ட எஸ்.வி.ரங்காராவ் தான் நினைவுக்கு வருவார். பதின்ம வயதுகள் வரை அவரின் உறவுக்காரப் பையன்கள் என் நண்பர்களாக இருந்ததால் மன்னார் சித்தப்பா யாழ்ப்பாணம் வரும் போதெல்லாம் அவரின் போக்கும் வரத்தும் எங்களைச் சுற்றியே இருந்தது. அப்போது பத்து, பதினைந்து வயசுக்காரர்களாக இருக்கும் எமக்கும் அவருக்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இருக்கவில்லை. அவ்வளவுக்குச் சேஷ்டையும், கும்மாளமுமாக எங்களுக்கு வேடிக்கை காட்டி மகிழ்வார்.
"பிரபு இஞ்ச வா" என்று சத்தம் கேட்கும். திரும்பிப் பார்த்தால் ஒரு நீண்ட மர வாங்கு (பெஞ்ச்) இல் குப்புறப்படுத்திருப்பார். படுத்தவாக்கிலேயே தூரத்தில் படலையைத் திறந்து அவர்கள் வீட்டுக்கு நான் வருவதைக் கண்டு தான் அந்த அழைப்பு.
கிட்டப் போனால்
"முதுகைச் சொறிஞ்சு விடப்பு" என்பார்.
ஆரம்பத்தில் சிரித்துக் கொண்டே என் கைவிரல் நகங்களின் முனையைப் பதமாக அவரின் பரந்த முதுகுப்பரப்பில் எறும்பு நடை போல இழுப்பேன் வட்டமாக, வளையமாக என்று. அது அவருக்குச் சுகமாக இருந்திருக்கும். நாளடைவில் எனக்கு அறிவிக்கப்படாத அந்தப் பதவியைக் கொடுத்த போது சிணுங்கிக் கொண்டே ஓடி ஒளிவேன். என்னுடைய அவஸ்தையைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்.
அந்தப் பதின்ம வயது நினைவுகளின் எச்சங்கள் தான் மிச்சம், அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த பிறகு மன்னார் சித்தப்பாவை நான் கண்டு பழகும் வாய்ப்புக் கிட்டவில்லை.
தன்னுடைய பருவ காலக் கணக்கில் அவரின் சமீப காலத் தோற்ற மாறுதலை இன்னொரு புகைப்படத்தில் இன்று கண்டிருந்தாலும் அது அந்நியப்பட்டு நிற்க, என்னளவில் அந்தக் கறுப்பு உருவம், வெள்ளைச் சிரிப்பு மன்னார் சித்தப்பாவைத் தான் பதியம் போட்டு வைத்திருக்கிறது.
"மன்னார் சித்தப்பா செத்துப் போனார்" நண்பன் முகுந்தனிடமிருந்து இன்று வந்திருக்கும்
செய்தியும் எனக்கு அந்நியமாகவே படுகிறது.
நேசம் சேர்த்த அந்த நினைவுகளுக்கு இறப்பு இல்லை.
1 comments:
நேசம் சேர்த்த அந்த நினைவுகளுக்கு இறப்பு இல்லை.
அது தான் உண்மை!
புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
Post a Comment