தமிழரது புலப்பெயர்வை எடுத்து நோக்கினால் அது மன்னராட்சிக் காலத்தில் நாடு பிடிக்கப் போன ஆட்சியை நிறுவிய வகையிலும், ஐரோப்பியர் காலத்தில் தேயிலை, இறப்பர், கரும்புத் தோட்டங்களுக்கு வேலையாட்களாகச் சென்ற வகையிலும் அமைந்திருந்தாலும், மூன்றாவதாக கடந்த நூற்றாண்டின் இறுதிக் காற்பகுதியில் இருந்து ஆரம்பித்து தொண்ணூறாம் ஆண்டுகளில் இன்னும் பல்கிப் பெருகிய ஈழத்தமிழர் சமூகத்தினது புலப்பெயர்வு என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதொரு அம்சமாக விளங்குகின்றது.
பொருளாதாரக் காரணிகளுக்காக நாடு பிடித்தவர்கள் தவிர, ஏதிலிகள் என்ற அடையாளத்தோடு எந்த நாடு என்ற இலக்கில்லாது பயணித்து ஈழத்தமிழ்ச் சமூகம் இன்று உலகம் பூராகவும் வியாபித்திருந்தாலும் கனடா, ஐரோப்பிய நாடுகளோடு அவுஸ்திரேலியாவையும் தமது பெரும்பான்மை மக்கள் கூட்டத்தைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழனுக்கு ஒரு நாடு இல்லை என்ற அறைகூவலோடு போராடக் கிளம்பிய சமூகத்தின் சிதறுண்ட பாகங்களாகக் கருதப்படும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தம் தாய்மொழிக்கு எவ்வளவு விசுவாசமாக இயங்குகின்றது என்பதை இன்றைய நிலையில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அபாயகரமான காலகட்டம் இது.
காரணம், இன்றைய யுகம் என்பது போர்க்காரணிகளால் புலப்பெயர்வைச் சந்தித்த தமிழரது வாழ்வுச் சக்கரம் ஏறக்குறைய முடிவுறும் நிலைக்கு வந்திருக்கிறது. கடந்த நான்கு தசாப்தங்களாக புலப்பெயர்வைச் சந்தித்தவர்களது வாரிசுகள் தான் இன்றைய தமிழ்ச்சமூகத்தின் அடையாளமாக இருக்கும் யுகம் இது.
கடந்த மூன்று தசாப்தங்களாக தாம் வாழும் ஒவ்வோர் நாடுகளிலும் தமிழ்ச்சங்கங்கள் நிறுவியும், தமிழ்ப்பாடசாலைகளை அமைத்தும் தமிழ், தமிழர் கலாசாரம் போன்ற முக்கிய தேவைகளைப் கொண்டு இயங்கியவர்களிடம் இருந்து அந்தப் பொறுப்பை இன்றைய இளைய சமுதாயம் முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்ற கசப்பான உண்மை தான் தொண்ணூறு விழுக்காடுக்கும் அதிகமான கருத்துக் கணிப்பாக இருக்கும். ஐரோப்பிய, கனேடிய, அவுஸ்திரேலிய நாடுகளின் அரசாங்கங்கள் பல்லின மொழி பேசுவோருக்குத் தடையேதும் இல்லாத வகையில் கைகொடுத்து உதவி வருகின்றன. அவுஸ்திரேலியாவில் 1997 ஆம் ஆண்டிலிருந்து தமிழைப் பல்கலைக் கழகப் புகுமுக மொழிப் பாடமாக எடுக்கும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார்கள். ஆனால் இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிகை மொத்த தமிழ் மாணவர் தொகையில் இரண்டு வீதமானவரே ஆவர்.
"நமது தமிழ் வானொலிகளை இன்றைய இளைய சமுதாயம் விரும்பிக் கேட்பதிலோ, பங்கெடுப்பதிலோ ஆர்வம் காட்டுவதில்லை, இந்த வானொலியின் சிறுவர் நிகழ்ச்சிகள் வாயிலாகத் தொடர்ந்து தமிழைப் பேசிப் பழகிய பிள்ளைகள் இன்று திருமணம் முடிக்கும் பருவத்தை எட்டியிருக்கிறார்கள். அவர்கள் கூட தமிழைக் கைவிட்டு விட்டார்கள்"
அண்மையில் கனேடிய வானொலி ஒன்றின் நேயர் உரையாடலைச் செவிமடுத்துக் கொண்டிருந்த போது அந்த வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்/ஒலிபரப்பாளர் சொன்ன கருத்து அது. இதைக் கேட்கும் போது பயமாக இருந்தது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழரைக் கொண்டு வாழும் கனேடிய மண்ணிலேயே இந்த நிலை என்றால் மற்றைய நாடுகள் பற்றிச் சொல்லித் தெரிவதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் பரவலாக இன்றைய இளைய சமுதாயத்திடம் தமிழைப் பேசவேண்டும், கற்க வேண்டும் என்பதன் மீதான நாட்டம் வலுவிழந்து இருப்பதே கசப்பான உண்மை.
சரி இதற்கு என்ன செய்யலாம்?
வீட்டு மொழி தமிழ்
வீட்டில் பிள்ளைகளோடு பேசும் போதும் உறவு முறைகளை அடையாளப்படுத்தும் போதும் தமிழை முன்னுறுத்த வேண்டும். பெற்றோரைப் போல வேறு யார் சிறந்த ஆசான்?
கணினித் தொழில் நுட்பமும் இணையமும்
இன்றைய கணினித் தொழில் நுட்பமும், இணையமும் தமிழ் போன்ற மொழிகளைக் கற்பதற்குப் பெரும் உறுதுணையாக விளங்கி வருகின்றன. எல்லாருடைய கைப்பேசி வழியாகவும் ஊடாடவும், ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் போன்ற முக்கிய சமூக வலைத்தளங்களில் தமது கருத்துகளைப் பகிரவும் பல்வேறு செயலிகள் (Apps) வந்து விட்டன. மிக முக்கியமான செல்லினம், தமிழ் விசை போன்ற தமிழ்த் தட்டச்சுச் செயலிகள் ஆப்பிள், ஆண்ட்ராய்ட் சாதனங்களில் கிட்டியிருக்கும் நிலையில், நாம் இவற்றின் வழியாகத் தமிழில் பரவலாகக் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழை நன்றாகத் தெரிந்தவர்கள் தமது மொழியைத் தக்க வைத்துக் கொள்ள உறுதுணையாக இருக்கும். செல்போனில் கூடத் தமிழ் வந்திருக்கிறது என்பது என்ன பெருமை, அதைப் பாவிக்காதவிடத்து?
தமிழரோடு தமிழில் பேசுவோம் என்ற சொலவாடையை இணைய அரட்டையில் இருந்து கருத்துப் பரிமாற்றங்களுக்கும் கைக்கொள்ள வேண்டும்.
முன் சொன்ன கணினித் தொழில் நுட்பத்தின் வரப்பிரசாதமாக, இன்று செயலிகள் (Apps) வாயிலாகத் தமிழைக் கற்கவும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. உதாரணமாக Tamil Trace என்ற செயலி தமிழை எழுதிப் பழகவும், சரிபார்க்கவும் வாய்ப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செயலியைப் பரிசோதித்துப் பார்த்தபோது ஏகலைவர்களுக்கான சாதனமாகப்படுகின்றது. இதுபோல் எண்ணற்ற தமிழ்க் கற்கைச் செயலிகள் கைப்பேசி மற்றும் iPad, Tab போன்ற சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் கவர்ச்சிகரமான, எளிமையான பயன்பாட்டை இன்றைய இளைய சமுதாயத்தினர் விரும்பிப் பயன்படுத்துவர் என்பதில் ஐயமில்லை. வழிகாட்டல் என்ற ஒன்றே நாம் செய்ய வேண்டிய முக்கியமான பணி.
புலம்பெயர் தமிழ்ச் சமூக மாணவர்களுக்கு இடையிலான கலாசாரப் பரிவர்த்தனை
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ்க் கல்வி நிலையங்கள் அனைத்தும் தமக்கிடையிலான தொடர்பாடலை வலுவாக்கிக் கொள்ள வேண்டும். இன்றைய கணினித் தொழில் நுட்ப வளர்ச்சியின் பேறாக ஸ்கைப் போன்ற ஊடாடு சாதனங்கள் வழியாக பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களை இணைத்து அந்தந்த நாடுகளின் தம் வாழ்வியலைப் பேசிப் பழகும் கற்கையை ஒரு பிரிவாக அமைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர ஃபேஸ்புக் வழியாகத் தாம் வாழும் நாடுகளில் முன்னெடுக்கும் தமிழர் கலாசார நிகழ்வுகளில் இளையோரின் பங்களிப்பைக் காணொளிகளைப் பகிர்வதன் வழியாகவும் இளையோருக்குத் தமிழ் மொழி மூலமான ஆர்வத்தைத் தூண்டலாம்.
இது மிக முக்கியமானதொரு கற்கை நெறியின் அம்சமாக அமையும் என்று எண்ணுகின்றேன்.
தமிழ்க் கற்கை நெறி நடைமுறை குறித்த மீள் பார்வை
ரஷ்ய நாட்டுக்கு ஆராய்ச்சிப் பணிக்காகச் செல்லும் ஒருவர் ஆறு மாதங்களுக்குள் எப்படி அந்த ரஷ்ய மொழியைக் கற்க முடிகின்றது? இந்த நிலையை ஏன் நம்முடைய தமிழ் மொழிக்கல்விக்கும் ஏற்படுத்த முடியாது என்று அவுஸ்திரேலிய தமிழ் ஆசிரியர் மாநாடு 2015 இல் கலந்து கொண்ட கனேடிய தமிழ் அறிஞர் சுப்பிரமணியம் இராசரத்தினம் கேள்வி எழுப்பினார். மாநாட்டில் இவர் முன் வைத்த முக்கியமான கருத்து, உயிரெழுத்துகள் 12 ஐயும், மெய்யெழுத்துகள் 18 ஐயும் முன்னிலைப்படுத்தி தமிழ்க் கற்பித்தல் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றும், மேலதிக உயிர்மெய் எழுத்துகள் உடல் அசைவின் பாற்பட்டது என்பதை உதாரண விளக்கங்களோடு நிறுவி இவ்வாறான வழியிலேயே இளையோருக்கு எளிமைப்படுத்தப்பட்ட தமிழ்க் கற்கை நெறியை நாம் வழங்க முடியும் என்றார். அதோடு இந்த வழியான கற்பித்தலின் வழியாக ஒருவர் 70 மணி நேர உழைப்பில் தமிழின் இலக்கண அடிப்படையைத் தெளிவாக அறிய முடியும் என்றார். இந்த ஆய்வின் அடிப்படையில் அவர் நூல்களையும் ஆக்கியிருந்தார்.
பேராசிரியை சீதாலட்சுமி அவர்கள் ( தேசிய கல்விக்கழகம், சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப் பல்கலைக் கழகம்) தமிழ்ப்பிள்ளைகள் தமது வீட்டில் பேசும் தமிழைச் சார்ந்ததாக, பேச்சு வழக்கை முதன்மைப்படுத்திய கற்கை வழி குறித்து ஆய்வு ஒன்றை முன்னெடுத்துச் சில வருடங்களுக்கு முன்னர் வழங்கியிருந்தார்.
இவ்வாறான பரந்து பட்ட ஆய்வுகளின் மூலம் தமிழை இரண்டாம் மொழியாக நோக்கும் எமது இளையோருக்கான பொருத்தமான தேர்வைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் காணலாம்.
கல்விச் சுற்றுலாக்கள்
நமது
புலம்பெயர்ந்த தமிழரது பொதுவான குணங்குறியாக இருப்பது சுற்றிச் சுற்றி ஒரே
நாடுகளில் உள்ள உறவினர் இல்லங்களுக்குப் போய் அதே புட்டு, இடியப்பம்,
கோழிக்குழம்பு சாப்பிட்டுவிட்டு மீண்டும் விமானம் ஏறுவது. இந்த நிலை மாறி,
பெற்றோர்கள் தம் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தமிழருடைய தொன்மையையும்
கலாசாரத்தையும் பேணுகின்ற கீழைத்தேய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா,
கம்போடியா, பாலி, பர்மா போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதோடு தமிழகத்தின்
கிராமங்களைத் தேடியும், ஈழத்தின் தமிழர் வழித்தடங்களை நோக்கியும் போகவேண்டும். அங்கே தான் தேடல்களுக்கான பல விடைகள்
கிட்டும். இதன் மூலமாகத் தமது தாய், தந்தையரது மொழி மீதான காதலும்,
கலாசாரம் மீதான பற்றும் வளரும் என்பேன்.
தமிழர் கலாசார நிகழ்வுகளில் இளையோரின் பங்கு
அண்மைக்காலத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு நல்ல செயற்பாடாக தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முன்னரும் இப்படியான விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் சமீப வருடங்களில் இளையோரை அதிகம் ஈடுபடுத்தி நடத்துவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நத்தார் தாத்தாவை குழந்தைகளுக்கான களியாட்ட அடையாளமாகப் பயன்படுத்துவது போல, சமீபத்தில் மெல்பர்னில் நடந்த பொங்கல் விழாவில் சிறுவருக்குப் பரிசில்களை வழங்கி அவர்களைக் களிப்பூட்டவும், சிட்னியில் நடந்த பொங்கல் விழாவில் உறியடித்தல் போன்ற பாரம்பரிய மரபுகளைக் காட்டவும் வழிகோலியது இந்தப் பொங்கல் விழா.
இளையோரை இணைத்து நம்முடைய நிகழ்ச்சிகளை அதிகம் செய்வதில்லை என்று ஒருமுறை எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஆதங்கப்பட்டது இப்போது நினைவுக்கு வருகின்றது.
வடை, சர்பத் விற்பனைக்கு இளையோரை உபயோகப்படுத்தும் நாம் அவர்களுடைய சிந்தனைகளை உள்வாங்கி அவர்களோடு இணைந்து தமிழர் சமுதாய நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும்.
தமிழரது பூர்வீக வாழ்விடங்களில் தமிழ் மொழி மீதான கரிசனை
தமிழகத்தின் அச்சு ஊடகங்களிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் தமிழின் போக்கைச் சொல்லித் தெரிவதில்லை. இப்போது இந்த வியாதி இலங்கை ஊடகங்களுக்கும் மெல்ல மெல்லப் பரவியிருக்கின்றது. அண்மையில் ஒரு வானொலியின் வர்த்தக விளம்பரத்தில் "ரிங்கோ" என்ற ஒரு பதம் பாவிக்கப்பட்டது. அது வேறொன்றுமில்லை "திருகோணமலை" என்ற அழகு தமிழே தான். "ரிங்கோ" ஆக்கிச் சொற் சிக்கனத்தைப் பேணுகின்றார்களோ? யாழ்ப்பாண நகரப்பகுதியில் காங்கேசன்துறை வீதியின் முக்கப்பில் நின்று கொண்டிருக்கிறேன். அந்த வீதியின் பெயர்ப்பலகை "யம்புகோல பட்டுன வீதி" என்று காங்கேசன் துறை வீதியைக் காட்டுகின்றது. அதைப் பார்த்த போது எழுந்த வலி தான் "ரிங்கோ" என்று நம் தமிழ் ஊடகத்தில் "திருகோணமலை"யை அழைத்தபோது வந்தது.
இன்று தமிழ் ஊடகங்களை நாட்டு எல்லைகளைக் கடந்து எல்லோரும் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். இளையோருக்கும் இவை முன்னுதாராணமாக அமைய வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இது.
000000000000000000000000000000000000000000000000000000
இந்தப் பதிவின் ஆரம்பத்தில் நம்முடைய் புலப்பெயர்வைப் பற்றிப் பேசிய போது மன்னராட்சிக் காலத்தில் கீழைத்தேய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேசியா அதில் குறிப்பாக பாலி போன்ற தேசங்களைப் போய்த் பார்த்த அனுபவத்தில் இன்று அங்கு தமிழ் என்பது அந்நியப்பட்டு இந்து மதம் மட்டுமே தன் வரலாற்று எச்சங்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.
ஐரோப்பியர் காலத்துப் புலப்பெயர்வுகளில் தலை தப்பியது என்பது போல மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் மொழி பேணிப் பாதுகாக்கப்பட்டாலும் அங்கும் தமிழ் மொழிக்கான சவால் இல்லாமல் இல்லை என்பதை அங்கு வாழும் தமிழறிஞர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். ஒரு மொழிக்கு இன்னோர் மொழி தான் சவால்.
ஐரோப்பியர் காலத்தின் சந்தித்த இன்னொரு புலப்பெயர்வாக ஃபிஜித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள் , மொறீசியஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர் தமது அடையாளத்தை இழந்தத்தை இப்போது உணர்ந்து வேதனையோடு அதை மீள நிறுவக் கரிசனை எடுத்திருக்கிறார்கள். அதாவது நாம் இப்போது சந்திக்கும் அபாய எல்லையைக் கடந்து இன்னொரு தலைமுறையைக் கண்ட சமூகம் அது,
http://www.madathuvaasal.com/2014/10/blog-post.html
ஒருமுறை நாட்டுக்கூத்துக் கலைஞர் அண்ணாவியார் இளைய பத்மநாதன் அவர்கள் என்னிடம் ஒரு நாட்டுக் கூத்து இறுவட்டை வழங்கியிருந்தார். ஃபீஜித்தீவில் வாழும் தமிழரது அந்த நாட்டுக் கூத்தின் பாடல்கள் தமிழிலும், விளக்க உரைகள் ஹிந்தியிலுமாக ஒரு குழம்பிப் போன சமூக அமைப்பின் பிரதிபலிப்பை உணர்ந்தேன். ஃபிஜித்தீவில் தமிழை மேவி ஹிந்தி நிலைபெற்றுவிட்டது. என்னோடு வேலை செய்த ஒரு ஃபிஜி நாட்டுப் பெண்மணியின் பூர்வீகம் தமிழகம். அவளின் பெயர் கூட கவுண்டர் என்று தான் அமைந்திருக்கும். ஆனால் அவளால் ஹிந்தியையும் ஆங்கிலத்தையும் மட்டுமே சரளமாகப் பேச முடிகின்றது.
கடந்த ஜனவரி 25 ஆம் திகதி அவுஸ்திரேலிய தமிழ் ஆசிரியர் மாநாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களில், பேராசிரியை சீதாலட்சுமி ( தேசிய கல்விக்கழகம், சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப் பல்கலைக் கழகம்) அவர்களின் தேடலும், அனுபவப் பகிர்வும் மிக முக்கியமாக அமைந்திருந்தது.
மார்த்தினி, மொரீஷியஸ், ஃபிஜி, குவாடலூப், ரியூனியன், தென்னாபிரிக்கா போன்ற பகுதிகளில் சிலவற்றில் வாழும் தமிழர்கள், தாங்கள் தமிழர்கள் என்றே அறியாது வாழ்ந்த நிலையும், தமிழ் மொழியோடு வாழ்வியல் விழுமியங்களையும் பண்பாடுகளையும் இழந்தும் மறந்தும் வாழ்ந்த நிலையும் வாழும் நிலையும் கண்கூடாகக் காணும் போது பல வினாக்கள் எதிரொலிக்கின்றன.
குவாடலூப் (Guadeloupe) என்ற பிரெஞ்சு அரசுக்கு உட்பட்ட பகுதியிலும், மொரீஷியஸ் என்ற நாட்டிலும் ரீயூனியன் பகுதியிலும் தமிழர்கள் மெல்ல மெல்லத் தமிழ் மொழியை விட்டு பிரெஞ்சு அல்லது கிரியோல் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்ட சூழல் அமைந்துள்ளது. தாங்கள் தமிழர்கள் என்பதை அறியாத கூட்டம் ஒருபுறம், இந்தியர் என்பது தமது இன அடையாளம் என்று எண்ணும் நிலை, தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்று உள்ளது என்று அறிந்து அதற்கக இப்போது முனைய ஆரம்பித்துள்ளார்கள்.
மொரீஷியஸில் தற்போது "தமிழ் பேசுவோர் ஒன்றியம்" என்ற ஒரு புதிய திட்டம் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆங்காங்கே "தமிழ் பேசுவோர் ஒன்றியம்" உருவாக்கப்பட்டுள்ளது.
வயதானவர்களும் பெற்றோர் பலரும் தமிழில் பேசி உரையாடுவதற்காகக் கற்கின்றனர்"
இவ்வாறு "நம் எதிர்காலத்தலைமுறையின் சவால்களைச் சந்திப்போம், தமிழ்வழி சமாளிப்போம்!" (பக்கம் 17 - 36) என்ற நீண்ட ஆய்வுக்கட்டுரையின் வழியாக பேராசிரியை சீதாலட்சுமி அவுஸ்திரேலிய தமிழ் ஆசிரியர் மாநாடு சிறப்பு மலரில் பகிர்ந்து கொண்டதோடு, அந்த நிகழ்வில் மேற்கிந்திய தீவுகளில் அவர் பயணம் மேற்கொண்ட போது நிகழ்ந்த பொங்கல் விழா 2014 மற்றும் அங்குள்ள தமிழர்களோடு பேசிய முக்கிய விடயங்களையும் புகைப்படங்களோடு வெளிப்படுத்தினார்.
நண்பர், கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களது 'Le
messager de l'hivver' கவிதை நூலின் அறிமுக நிகழ்வு கரீபியன் தீவுகளில் பிரெஞ்ச் காலணிகளில் ஒன்றான குவாடலூப் இயங்கும் " இந்திய மொழிக் கழகம்" முன்னெடுத்த பொங்கல் விழாவில் அமைந்திருந்தை இங்கே குறிப்பிட வேண்டும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழைப் பேண இளையோரை யாசிக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய மதப் பணியை மட்டுமல்ல தமிழ்ப்பணியே உண்மையான சமுதாயப் பணி என்று இயங்கிய தமிழ்த்தூது தனி நாயகம் அடிகளாரது வழித்தடத்தில் மீளவும் நாம் கால் பதிக்க வேண்டும்.
இந்தியா,
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா, வியட்நாம், ஃபிஜி,
டஹிட்டி, தென் ஆபிரிக்கா, ரொடீஷியா, மெரிஷீயஸ், ரி யூனியோன், குவாடலூப்,
மார்த்தினீக், கயோன், சூரிநாம், கயானா, ட்ரினிடாட் ஆகிய பலம் நாடுகளில்
வாழும் தமிழர்கள் குறித்த ஆய்வில்
அ) இனவழியால் தமிழர்ஆ) தாய்மொழியால் தமிழர்
இ) பண்பாட்டால் தமிழர்
ஈ) தலைமுறை வழியால் தமிழர்
என்று முக்கிய பிரிவாகப் பிரித்து இவர் வழங்கியிருந்த "தற்காலத் தமிழ்ச்சமுதாயங்கள் - ஒரு மதிப்பீடு"
மிக முக்கியமானதொரு ஆய்வாகவும் கொள்ளப்படுகின்றது. இதை பாரிசில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் 17-7.1970 அன்று பகிர்ந்து கொண்டார்.
தனிநாயகம் அடிகளாரது மேலைத்தேய, கீழைத்தேய நாடுகளில் தமிழர், பண்பாடு என்ற நோக்கில் செய்த ஆய்வுகளை நாம் விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும். இம்முறை அது கலாசாரத் தூதுவர்களாக நாம் எமது வசதிக்குட்பட்ட அளவில் தமிழரது குடியேற்ற நாடுகளில் நம்முடைய மொழியையும், பண்பாட்டையும் மீள நிறுவ முனைய வேண்டும்.
இன்றைக்கு புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் அறிவுசார் மட்டத்தில் மட்டுமன்றி பொருளாதார ரீதியிலும் வளம் பெற்றிருக்கும் நிலையில், தாயகத்தில் இருக்கும் கல்விமான்கள் இவ்வாறான அறிவுத் தேடல்களையோ, கலாசாரப் பரிமாற்றங்களையோ, தமிழ் மொழியையோ குறித்த நாடுகளுக்குக் கொண்டு சேர்க்க முடியாத வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும். முன்னர் சொன்ன பொங்கல் விழாக்கள் போன்ற நிகழ்வுகள் இவற்றுக்குப் பாலமாக அமையும்
தமிழ்க் கற்கை நெறிக்கு இணைய வழி ஊடகங்களின் உதவி என்ற பகிர்வு விரிவாக அமையும்.
Guadeloupe இல் இந்திய வம்சாவழித் தமிழர் குறித்த மேலதிக வாசிப்புக்கு (ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்சு மொழியில்), மற்றும் புகைப்படங்களுக்கும்
குவாடலூப் இல் இந்துக் கோவில் நன்றி http://www.atout-guadeloupe.com/
பதிவுக்கு மேற்கோளாக அமைந்தவை
பேராசிரியை சீதாலட்சுமியின் கருத்துப் பகிர்வு - அவுஸ்திரேலிய தமிழ் ஆசிரியர் மாநாட்டு மலர்
தனி நாயகம் அடிகளார் ஆய்வு - தனிநாயகம் அடிகளார் - அமுதன் அடிகள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
3 comments:
நீங்கள் சொல்லும் அனைத்துக்கருத்துகளும் ஏறுக்கொள்ளக்கூடியவையே ! இது புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டுமல்ல , தமிழகத்தில் வாழும் எம்போன்றோர்க்கும் முற்றிலும் பொருந்தும் .
வருக நண்பா
ஏற்கிறேன், உள்நாட்டு இடப்பெயர்வைச் சந்தித்தோருக்கும் இதே நிலை தான்.
நன்றி கானாபிரபா. உங்கள் ஆதங்கம் புரிகிறது. இது போல் பலருக்கும் இருக்கும்.வெளிபடுத்தியதற்கு நன்றி. ஆனால் சரியான வழி தெரியாததால் பலர் முழித்துக்கொண்டிருக்கிரார்கள். ஏனென்றால் இப்பொழுது வாழ்கையே போராட்டமாக கழிந்து கொண்டு வருகிற சமயத்தில் இதை நினைத்து பார்க்க கூட நேரமில்லை. குறைந்த பட்சம் வீட்டிலே கூடுமானவரை தமிழில் பேசி இளையோருக்கு தமிழ் மேல் ஈர்ப்பு உண்டாக செய்வோம்.இளம் வயதிலேயே ஈர்ப்பு வந்துவிட்டால் பின்னர் அவர்களை நிறுத்த முடியாது. அவர்களே தேடி பிடித்து பற்றிக்கொள்வார்கள் நமது தாய்மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும்.
நன்றி சகோ வாழ்த்துகள் ஐங்கள் எண்ணம் ஈடேரட்டும்
Post a Comment