தூரதர்ஷன் யுகம் மெல்ல மெல்ல மக்களிடம் ஒதுங்கும் சூழலுக்கு முன்னோடியாக சன் தொலைக்காட்சி யுகம் ஆரம்பமாவதற்கு முன்னர் பூமாலை என்ற பெயரில் வீடியோ வெளியீடுகளையும், ஏக்நாத் வீடியோவின் வீடியோப் படத் தயாரிப்புகள் (மாதம் ஒன்று என்று நினைவு) தொண்ணூறுகளில் வெளிவந்தபோது அந்தக் காலகட்டத்தில் சினிமாப் படப்பிடிப்புகள் மற்றும் கலைஞர் பேட்டிகள், சின்னஞ்சிறு பாடல் துணுக்குகள் என்று நிரப்பியிருக்கும் வீடியோ காசெட்டுகளாக வந்து கொண்டிருந்தன. ஒரு தடவை ரகுவரனைப் பேட்டி எடுத்தபோது மனுஷர் போதைக்கு அடிமையாக இருந்த நேரம், பேட்டி கேட்டவரைப் பார்த்துக் கெட்ட வார்த்தைகளால் நிரப்பித் தள்ளி அழிபட்டு வந்ததும் நினைவிருக்கு. இதுதான் அப்போதைய உச்ச பட்ச சின்னத்திரை அனுபவம்.
புலம் பெயர்ந்து Australia வுக்கு வந்த பின்னர் 90 களின் இறுதியிலே இந்த நாட்டுக்கு முதன்முதலில் சின்னத்திரையில் காலடி வைத்த தொலைக்காட்சிகளில் ராஜ் டிவியின் பங்கு அளப்பரியது. ஏதோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் போல வீட்டின் பின்புறமோ அல்லது கூரையின் முதுகிலோ பென்னம் பெரிய கறுத்த சாட்டலைட் சட்டியொன்று கவிழ்த்து விடப்பட்டிருக்கும். அதன் பரப்பளவு கிட்டத்தட்ட பாதி வீட்டைப் பிடிக்கும். ராஜ் டிவி பார்க்க வேண்டும் என்று சட்டியைக் கவிழ்த்தவர்களுக்கு சில மாதங்களிலேயே அது சின்னத்திரையில் கானல் நீராகிப் போகப் பின்னர்
"சட்டி சுட்டதடா கை விட்டதடா" என்று பாடிக் கொண்டே அந்தச் சேட்டலைட் சட்டியில் வடகம் காயப் போட்ட வரலாறும் உண்டு.
சன் டிவியின் ஒளிபரப்பு Australia வின்
மேற்கு Australia பிராந்தியமான பேர்த் போன்ற பகுதிகளில் தெளிவாக வந்து கொண்டிருந்தது அந்தத் தொண்ணூறுகளின் இறுதிக் காலத்தில். அதுக்கும் ஒரு சட்டி மட்டத்தான் வேண்டும். சிட்னி, மெல்பர்ன் போன்ற நகரங்களில் இருந்து மூன்று மணி நேர நேர வித்தியாசத்தில் இருக்கும் நகரம் இந்த பேர்த். ஆசிய நாடுகளின் வலயத்துக்குள் இருப்பதால் சன் டிவியும் பேர்த் நகர வாசிகளுக்குக் கிடைக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் இலங்கை இந்திய மக்கள் குறைவாக வாழும் இடம் இது.
"பேர்த் இல இருந்தீங்கள் எண்டால் சன் டிவி பார்க்கலாம்" என்று அப்போது மாய வலை போட்டோரும் உண்டு.
டார்வின் இல் முருங்கைக்காய், கருவேப்பிலை நன்றாக விளையும். அங்கிருந்தே சிட்னி, மெல்பர்னுக்கு இவை இறக்குமதியாவதும் உண்டு. அந்த வரிசையில் கருவேப்பிலை, முருங்கைக்காய் வரிசையில் பேர்த் இல் இருந்து சின்னத்திரை நாடகங்கள் பதிவு பண்ணி சிட்னி, மெல்பர்ன் மக்களின் பொழுதுபோக்குப் பசியை ஆற்றின.
அது கொஞ்சக் காலம் தான் அதற்குப் பிறகு சின்னத்திரை நாடகங்களைப் பிரதிபண்ணி வீடியோ காசெட்டுகளாக அடித்து விற்கும் ஒரு சிறு கைத்தொழில் முயற்சியே பரவலாக நம் தமிழ் சமுதாயத்தில் பரவியது. தமிழனுக்கு எப்படித் தொடங்குறது என்பதில் தானே குழப்பம் யாரும் தொடங்கி விட்டால் இலகுவாக ஒன்று பத்தாகி பத்து நூறாகி விடுமே?
அண்ணை!
சித்தி - 204
கங்கா, யமுனா. சரஸ்வதி 227
சொந்தம் 68
மர்மதேசம் 20
ப்ரேமி 54
குடும்பம் 77
இதெல்லாத்தையும் எடுத்து வையுங்கோ" என்று கையில் இருக்கும் துண்டுச் சீட்டுடன் இலங்கை இந்திய மளிகைக்கடைகளில் வீடியோ பகுதியில் வரிசையில் நம்மாட்கள் நிற்பது சர்வசாதாரணம். அந்தத் துண்டுச்சீட்டில் சின்னத்திரை நாடகப் பட்டியலைத் தொடர்ந்துதான் மளிகைப் பட்டியலில் ஆங்கே வயிற்றுக் சிறிது ஈயப்படும்.
இன்றும் அந்த நிலை தொடர்கிறது வீடியோ காசெட்டுக்குப் பதில் சீடியாக மாறி விட்டது. சாட்டலைட் சட்டி பொருத்தாதவர்கள் தங்கள் சின்னத் திரைத் தாகத்தைத் தீர்க்க இது ஒரு வழி.
நமக்குத் தான் இருக்கே சப்தஸ்வரங்கள் (சன்), ராகமாலிகா (ஜெயா) என்று அவற்றோடு ஒதுங்கிவிடுவேன்.
எனக்கும் வீட்டில் ஒரு சாட்டலைட் சட்டி பூட்டவேண்டும் என்ற ஆசை பீடித்துக் கொண்டது. ஆனால் அப்போது நான் தங்கியிருந்தது தொடர்மாடி வீடு என்பதால் இங்குள்ள நடைமுறைகளுக்கு சிலவேளை ஒத்துவராது என்று காத்திருந்தேன். தனி வீடு வாங்கிய பின்னர் தான் என் தணியாத தாகம் அடங்கியது.
அப்போது வந்த சிகரம் என்ற தொலைக்காட்சியைப் பார்க்க வீட்டில் ஒரு சேட்டலைட் சட்டியைப் பொருத்தினேன். கொஞ்சக் காலத்தில் அந்தத் தொலைக்காட்சியும் சீராக மூச்சை இழுத்து நிறுத்திவிடவே, அதே சேட்டலைட் சட்டியுடன் சன் தொலைக்காட்சிக்குப் பாய்ந்தேன்.
ஆனால் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் 1 நிமிடம் 20 செக்கன் வரை நாடகம், நாடகம், நாடகம் என்று போட்டுத் தள்ளும் தொலைக்காட்சியா உவ்வே என்றது என்மனசு. கள்ளக்காதல், அதற்குள் ஒரு தெய்வீகக் காதல், அந்த தெய்வீகக் காதலுக்குள் ஒரு ஒருதலைக் காதல் என்று தானே பெரும்பாலான தமிழ் கூறும் நல்லுலகின் சின்னத்திரை நாடகங்கள் திகழ்கின்றன?
என் பிரச்சனை தொலைக்காட்சி நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்ப்பதல்ல, வீட்டின் சூழ் நிலை ஏதோவொருவகையில் தமிழோடு இருக்க வேண்டும் என்பது கொஞ்சக்காலத்திலேயே புரிந்து விட்டது.
ஒரு பத்திரிகை விளம்பரத்தில் இன்னொரு சேட்டலைட் சட்டி பூட்டினால் ஜெயா தொலைக்காட்சி மற்றும் மலையாள டிவிகளைப் பார்க்கலாம் என்று ஒரு விளம்பரம் வந்தது. அடடே எனக்கு மலையாளம் என்றாலும் உசிராச்சே என்று நினைத்துப் பத்திரிகை விளம்பரத்தில் வந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தால் ஒரு கொரிய நாட்டவன் பேசினான்.
அவன் கடகடவென்று ஜெயா, மக்கள், பொதிகை, ஏஷியா நெட் என்று ஒப்புவிக்க எனக்கு உச்சி குளிர்ந்தது "தமிழ் வாழ்க" என்று மனதுக்குள் விசிலடித்துக் கொண்டேன். பின்னே கொரியனுக்கும் ஒரு சில தமிழ்ப் பெயர் தெரிஞ்சிருக்கே?
ஒரு சுபயோக, சுப தினத்தில் இன்னொரு பென்னம் பெரிய வெள்ளை நிற சேட்டலைட் சட்டி என் வீட்டுப் பின் வளவில் பொருத்தப்பட்டது. உவன் வீட்டில் பூ மரங்கள் வளர்கிறதோ இல்லையோ நாளுக்கு நாள் புதுப்புது சேட்டலைட் சட்டி வளருது என்று பக்கத்து வீட்டுக்காரன் நினைத்திருப்பான்.
கொரியன்காறன் எல்லாத்தையும் பொருத்திவிட்டு அடிவளவை நோக்கிக் கையைக் காட்டுகிறான். தூரத்தில் புள்ளியாகத் தெரியும் மரமொன்றைக் காட்டுகிறான் என்று புரிந்தது. பின்னே இதுக்கெல்லாம் கொரிய இயக்குனர் கிம் கிடுக்கின் படங்களைப் பார்த்தா புரியணும் ஹும்.
அந்த மரம் மறைப்பதால் ஜெயா டிவி வராது ஏஷியா நெட் உம், SS Music உம் தான் வரும் என்று அவன் சொன்னதை மொழிபெயர்த்து முழி பெயர்த்துக் கொண்டேன்.
கொஞ்சக்காலம் எஸ் எஸ் மியூசிக் பூஜா, க்ரெய்க் இன் கடித்தாண்டவங்களையும் சகித்துக் கொண்டு இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்தினேன். ஒரு பக்கம்
"இனி எண்டே தேசம் கேரளம் எண்டே சியெம் அச்சுதானந்தன்" என்று ஏஷியா நெட்டின் வல்லிய சுந்தரமாயிட்டு சித்ரங்களைக் கண்டு கழிச்சுன்னு.
ஆறு மாதம் போயிருக்கும், வெறும் காத்து தாங்க வருது படம் ஒன்றையும் காணோம்.
கொரியனைத் தேடிப் பிடித்துத் தொலைபேசினேன். "எல்லா அலைவரிசைகளையும் மாற்றிவிட்டார்களாம் இனி இந்த டிஷ் ஆண்டெனாவில் ஒன்றும் வராது எனக்கு ஒன்றும் தெரியாது" என்று கஜினி சூர்யாவாகப் பேசினான்.
அட கைபர் கணவாயால் போனவனே உன் சட்டியை எடுத்துட்டுப் போடா காசு வேண்டும் என்றால் தருகின்றேன் என்று கே.ஆர்.விஜயா கணக்கா கெஞ்சினேன் கதறினேன் (ஹிஹி ச்சும்மா பில்ட் அப்பு)
இதை வச்சு நான் என்ன செய்ய என்று த்ரிஷ்யம் மோகன்லால் கணக்காக இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக உனக்கோ எனக்கோ தெரியாது என்று தொலைபேசியை அணைத்துவிட்டான்.
கடந்த மூன்று வருடங்களாக வீட்டின் பின் புறத்தில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் காட்சியகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் டைனோசரின் எலும்புக்கூடு போல அந்தப் பருத்த டிஷ் அன்டெனா சட்டி முகம் கவிழ்ந்திருந்தது.
மூன்று வருடங்களுக்கு முன்னர் இணையத்தில் எதையோ தேடப்போய் கிட்டியது IP TV இன் அறிமுகம்.அப்போது Channel Live என்ற நிறுவனமே கொஞ்சம் நம்பகரமாக இந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருந்தது. சானல் லைவ் வழியாக இணையத் தொலைக்காட்சி பார்க்கலாம் என்று பரிசோதனையில் இறங்கினேன். IP TV இன் சிறப்பு என்னவெனில் தமிழ் நாட்டில் இருந்து இயங்கும் எல்லா நண்டு சிண்டு தமிழ்த் தொலைக்காட்சிகளையும் பார்க்க முடிவதுடன், இச்சேவையை வழங்குன் குறித்த நிறுவனம் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பதிவு பண்ணி வைத்திருப்பார்கள். விரும்பியதைத் தேடிப் பார்க்கலாம்.
Amazon வழியாக Roku Box ஒன்றை வாங்கினேன். அதுதான் முதல் தடவை இணைய வழிக் கொள்வனவுக்கும் பிள்ளையார் சுழி போட்டது. ஆரம்பத்தில் ஏகப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சிகளை ஒரே கூரையின் கீழ் பார்க்கும் போது சந்தோஷமாகத் தான் இருந்தது. ஆனால் இணையத்தின் வேகம் இருந்து விட்டு விக்கல், குக்கல் எடுக்கும் போது ரஜினிகாந்த் அசையாமல் பத்து நிமிஷம் ஒரே திரையில் நிற்பார். அதைவிடக் கொடுமை சானல் லைவ் காரன் துண்டு துண்டாய் கொடுக்கும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் நேரவாரியாக இருப்பது. இதில் எங்கே போய் எனக்குப் பிடித்த நிகழ்ச்சியைத் தேடுவது என்று குழப்பம்.
எனவே Channel Live இலிருந்து Yupp TV எனும் இன்னொரு இணையத் தொலைக்காட்சிச் சேவைக்குப் பாய்ந்தேன். அங்கே நிகழ்ச்சிகளை ரகம் வாரியாகப் பிரித்துக் கொடுத்தாலும் நேரடி நிகழ்ச்சிகள் இழுத்து இழுத்து இழுத்து இழுத்து வந்தன. ஒரு சில மாதங்களில் அதற்கும் ஒரு கும்புடு.
உள்ளூரில் Optus என்ற தொலைபேசி நிறுவனம் வழியாக Fetch TV என்ற இணையத் தொலைக்காட்சிச் சேவை மூலம் சன் குழுமத் தொலைக்காட்சிகள் வருவதாக அறிந்து இங்கேயும் ஒரு கால் வைத்தேன். இதுதான் இப்போது கொஞ்ச மாதங்களாக வீட்டில் ஓடுகிறது. அட்டகாசத் தரம் ஆனால் ஒரே குறை முந்திய நாள் நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். நாம் தான் விரும்பிய நிகழ்ச்சியைப் பதிவு செய்து பார்க்க வேண்டும். அதற்கும் இன்னொரு தீர்வு கிட்டியது.
Smart TV இப்போது எங்கும் வந்துவிட்டாலும் நான் ஒரு Apple Tv box ஐ வாங்கினேன். எனக்குப் பிடித்த YouTube Channel ஐ எல்லாம் சேர்த்தேன். இப்போது தானே விளம்பரம், லெட்டு, லொடுஸ்கு ஏதும் இல்லாமல் சன், விஜய் என்று ஆளாளுக்கு அவர்களே தங்களது நிகழ்ச்சிகளை YouTube இல் செருகி விடுகிறார்கள். அதுவும் high definition என்ற அதி துல்லிய ஒளித்தரம் வேறு. என்னைப் போல கணினியில் தொலைக்காட்சி பார்க்க ஒவ்வாமை கொண்டோருக்கும் வழி பிறந்தது. இனிமேல் டிஷ் அண்டெனா யுகம் மெல்ல மெல்ல அழிந்து விடும்.
இந்த வார முற்பகுதியில் ஒரு தொட்டாட்டு வேலை செய்யும் (handyman) சீனனுக்கு ஐம்பது டாலர் கொடுத்து என் வீட்டுப் பின்புறத்தில் இருந்த செத்துப் போன வெள்ளை டிஷ் அண்டெனாவைத் தூக்கிக் கொண்டு போ ராசா என்று வேண்டி, அவனும் காசை வாங்கிக் கொண்டு காரியத்தை முடித்து விட்டான்.
இந்தப் பதினான்கு வருட டிஷ் அண்டெனா மற்றும் ஐபி டிவி பரிசோதனையில் எடுத்த நேரத்துக்கு என் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைச் சொன்னால் வெக்கக் கேடு. ஒவ்வொன்றையும் அலசி ஆராய வேணும் என்ற ஆர்வம் மட்டுமே அங்கே மிகுதியாக இருக்கும். என் நண்பர்களுக்கு நான் பரிசோதனைச்சாலை எலி. இப்ப அவையள் வீட்டில நான் சோதிச்ச Yupp TV ஈறாக இருக்கு.
நான் இன்னும் ஏதாவது புதுசா வருமோ என்று கிண்டிக் கொண்டே இருப்பேன் :-)
8 comments:
:-) வெளிநாட்டில் வாழ்பவர்கள் சேட்டிலைட் மூலம் எப்படி இந்திய தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பைப் பார்த்து வந்தார்கள், அதன் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றையே எழுதி விட்டீர்கள். மிகச் சிறந்த ஆய்வு கட்டுரை எப்பொழுதும் போல் இழையோடும் நகைச்சுவையோடு :-)
amas32
இலங்கைத்தமிழிலேயே இதை படிக்கும் பொழுது மேலும் சுவை கூட்டுகிறது.
சுவையான, அறியாத தகவல்கள்!
அந்த 'பூமாலை' என்பது மட்டும் நினைவிருக்கின்றது.
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு அமாஸ் அம்மா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாலா
Yarlpavanan Kasirajalingam
நன்றி நண்பா
அ. முஹம்மது நிஜாமுத்தீன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அற்புதமான கட்டுரை போங்கள்! (:)
Post a Comment