இந்த வாரம் நாங்கள் குடியிருக்கும் வீதியில் சுத்தம் செய்யும் நாள் (Clean up day) என்று எனது நகரப்பகுதியை நிர்வகிக்கும் நகரசபை நிர்வாகத்திலிருந்து ஒரு துண்டுப்பிரசுரத்தைத் தபால் பெட்டியில் போட்டிருந்தார்கள். வருடத்தில் இரண்டு தடவை இம்மாதிரியான வசதியைச் செய்து கொடுப்பார்கள்
கடந்த இரண்டு நாட்களாகவே எங்கள் தெரு போகிப்பண்டிகைக் கோலத்தில் இருந்தது. ஒவ்வொரு வீட்டின் முன்னாலும்
மின்சார உபகரணங்களில் இருந்து வீட்டுத் தளபாடங்கள் ஈறாக நிறைந்து குவிந்திருந்தன.
வீட்டில் இது நாள் வரை சேகரித்த பொருட்களை ஒருமுறை மீளவும் நோட்டமிட்டேன். 1995 ஆம் ஆண்டில் Australia வுக்குக் குடிபுகுந்த காலம் முதல் 1999 ஆம் ஆண்டுவரை வாங்கிய ஆனந்த விகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகள் ஒரு பெரிய பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தன, அவற்றை வீசவும் மனமில்லை. அதுக்குப் பிறகு அவற்றைச் சேகரிக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை. இன்னொரு பெட்டியில் நான் சஞ்சிகையில் எழுதிய கட்டுரைகளின் பிரதிகள், அச்சு வடிவங்கள், என் வானொலி நிகழ்ச்சிக்காக நேயர்கள் அனுப்பிய ஆக்கங்கள். மற்றொன்றில் தட்டுமுட்டு மின்சாரத் துணைக்கருவிகள் என்று எல்லாமே பக்காவாக இருக்கிறது. எறியத் தகுந்த எதுவும் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே கண்கள் அந்தக் கதிரை மீது வலையை வீசின.
1999 ஆம் ஆண்டு மெல்பர்னில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு ஆறு மாதங்கள் ஒரு வங்கியில் வேலை செய்துவிட்டு அதே ஆண்டின் டிசெம்பர் மாதத்திலேயே சிட்னிக்குக் குடிபெயர்கின்றேன். படித்ததற்கேற்ற வேலை கிடைக்கவேண்டும் என்ற முனைப்பே இந்த இடப்பெயர்வின் முக்கிய காரணி. நாலு வருடங்கள் சேமிப்பில் இருந்தது நண்பர்கள் மட்டுமே. சிட்னியில் அப்போது அவ்வளவு தூரம் நட்பு வட்டமும் இல்லை. இப்போது மட்டும் என்னவாம் :-)
சிட்னியில் அப்போது ஓரளவு அறிமுகமான நண்பருடன் Auburn என்ற பகுதியில் புதிதாக வாடகைக்கு ஒரு அறை எடுத்துக் கொண்டோம். அந்த இடம் இலங்கைத் தமிழர் மற்றும் சீனர்கள், லெபனான் போன்ற நாடுகளில் இருந்து வந்த முஸ்லீம்கள் வாழும் பகுதி.
ஒரேயொரு சூட்கேசுடன் மட்டும் மெல்பர்னில் இருந்து வந்தவன் குறைந்த பட்சம் ஒரு கதிரையாவது ஆஸ்திக்காக வாங்கி வைப்போம் என்று நினைத்து அடுத்த நாள் கடைத்தெருவை நோட்டமிட்டேன். அப்போது இருந்த என் கையிருப்பில் செல்வத்துக்கு ஏற்ற கடை கண்ணில்பட்டது. பழைய சாமான்கள் விற்கும் கடை அது. அங்கு தான் இந்தக் கதிரையைக் கண்டேன். அப்போது ஒரு இருபது டாலர் தான் கதிரைக்கான பெறுமதியாகக் கடைக்காரன் நிர்ணயித்திருந்தார். கதிரையை வாங்கியாச்சு எப்படிக் கொண்டு போவது?
ரயில் நிலையத்துக்கு மறுகரையில் இருந்த கடையில் இருந்து கதிரையைத் தூக்கித் தலைமேல் கிடத்தி வைத்துக் கொண்டேன். இலேசான கனம் என்றாலும் கதிரையை வாங்கிய புளுகம் என்பதால் சுமக்கவில்லை. திருவிழாவில் சுவாமி காட்டத் தன் பிள்ளையைக் கழுத்தில் சுமந்த தகப்பன் நிலையில் பொடி நடை போட்டேன். அங்கியிருந்து ஒரு இருபது நிமிடமாவது நடந்து தான் என் வாடகை அறைக்குச் செல்ல வேண்டும். வருவோர் போவோர் கொஞ்சம் வேடிக்கைக் கண்ணோடு பார்த்தார்கள்.
"உங்க பார் இவரை" என்ற சத்தம் கேட்டுத் திரும்பினேன். அந்தக் காலகட்டத்தில் வானொலியில் நேயராக என்னை ஓரளவுக்குச் தமிழ் சமூகம் அடையாளம் கண்டு வைத்திருந்தது. அவர்களில் ஒருத்தர் தான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தன்னுடைய இன்னொரு நண்பருக்கு என்னைக் கிண்டலாகக் காட்டினார், எதிர்த்திசையில் இருந்து. ஒரு மழுப்பல் சிரிப்போடு பொடி நடையைத் தொடர்ந்தேன்.
1999 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இருந்து நேற்று வரை என் வீட்டில் நான் இருக்கும் போதெல்லாம் இருந்த கதிரை இது ஒன்று தான் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். வேலைக்குப் போய் விட்டு அகால நேரத்தில் வந்தாலும், வானொலி நிகழ்ச்சியை அதிகாலை ஒரு மணி இரண்டு மணிக்கும் சிலவேளை நீட்டித்துவிட்டு விட்டு வீடு சேர்ந்தாலும் முதலில் வந்து இளைப்பாறுவது இந்தக் கதிரையில் தான்.
முன்னூறைத் தொடும் மடத்துவாசல் தளம் வழியான பதிவுகள், அதில் இரு மடங்கான றேடியோஸ்பதி மற்றும் இன்ன பிற வலைத்தளப் பகிர்வுகளையும் பத்திரிகைகளுக்கான ஆக்கங்களை எழுதி முடிக்கவும் என்னை இருத்தி வைத்திருந்தது இந்தக் கதிரை. மணிக்கணக்கில் இருந்திருப்பேன் இதில். கூட்டிப்பார்த்தால் என் இது வயசில் 10 வீதமாது இருக்குமோ.
கிட்டத்தட்ட நாட்டாமைக்காரரின் கதிரை போல எனக்குத் தோன்றி மனதுக்குள் நான் சிரிப்பதுண்டு. ஒருமுறை நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்து இந்தக் கதிரையை நோட்டமிட்டுவிட்டு "கடவுளே! இதில இருந்தா இவ்வளவும் எழுதினீங்கள் முதுகுவலி ஒண்டும் வரேல்லையா" என்று நாவூறு பட்டார்.
சில தேவாலயங்களில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர்களின் பேச்சுக்குரல்கள் கேட்குமாம். பதினைந்து வருடங்களாக என் ஆன்மாவில் உறைந்திருக்கும் சுக துக்கங்களைப் பேச ஒரு சடப்பொருள் இருக்குமானால் அது இந்தக் கதிரையாகத் தானிருக்கும்.
உயிருள்ளவைகளுடனான பந்தத்தோடு ஒப்பிடும்போது நாம் பற்றியிருக்கும் சடப்பொருட்களில் மீதான பந்தம் அவ்வளவு ஒன்றும் குறைந்ததல்ல. பழைய பொருட்களைப் பத்திரப்படுத்தி வைக்கும் பண்பு அப்பாவிடமிருந்து தான் எனக்கு வந்திருக்க வேண்டும். இப்போது ஊருக்குப் போனாலும் அந்தப் பழைய ட்ரங்குப் பெட்டி அப்பாவின் இளமைக்காலத்தைச் சொல்லிச் சிரிக்கும்.
போன மாதம் இந்தக் கதிரையின் மேல் ஏறி மின் குமிழைப் பொருத்த எண்ணிய முடிவுதான் அதுக்குப் பிடிக்கவில்லைப் போல. நான் ஏறிய அதே கணத்தில் என்னை வழுக்கி விழ வைத்து உதைத்துத் தள்ளியது. நல்ல வேளை பக்கத்தில் இருந்த மேசையில் தலை அடிபடப் போய் மயிரிழையில் விலகினேன். கதிரையை ஆட்டிப் பார்த்தேன். இலேசாகக் குலுங்கியது. அதன் கால்களில் பொருத்திய ஆணிகளின் நிலையை நோட்டமிட்டேன். ஒரு ஆணி கிட்டத்தட்ட வெளியே வரவா? என்று கேட்குமாற் போல. வயோதிபர் ஒருவரின் வெற்றிலை போட்ட பல்லு கருத்துத் துருத்திக் கொண்டு வெளியே நிற்குமாற் போல அந்த ஆணி.
கதிரைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று மூளை சொல்லியது மனம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் போட்டு நிராகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் நேற்று முளை தான் வென்றது. இரவோடிரவாக கதிரையைத் தூக்கிக் கொண்டு போய் வீதியில் வைக்கிறேன். இதுவரை மூன்று வீடு மாறியிருப்போம். இப்போது சொந்த வீட்டுக்கும் வந்தாச்சு. அதுவரை வீட்டுக்காரனாய் வளைய வந்த கதிரை இன்று வீதியில். 1999 ஆண்டுக்குப் பிறகு இதை அந்நியப்படுத்திவிட்டு வந்திருக்கிறேன் என்ற நினைப்பில் நித்திரைக்குப் போனேன்.
இன்று காலை எழுந்து வீட்டின் மேல் மாடத்தில் இருந்து வீதியை நோட்டமிட்டேன். அந்தக் கதிரை அப்பிடியே இருந்தது. சுற்றும் இருக்கும் பொருட்களில் நல்ல தரத்தில் இருப்பதை வீதியால் போவோர் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். குளித்து விட்டு வீதியில் இறங்கிப் போய்க் கதிரையைப் பார்த்து ஒரு போட்டோ எடுப்போம் என்று போனேன்.
சுற்ற நின்ற மரத்தின் மேலிருந்த குருவிகளின் வெள்ளை எச்சம் கதிரையில் திட்டு திட்டாக இருக்கு.
இந்தப் பதிவை எழுதிவிட்டு மீண்டும் வீதியை நோட்டமிடுகிறேன். கதிரை அங்கே தான் இருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் நகரசபையின் பாரிய வாகனம் இதை அள்ளிப் போட்டுக் கொண்டு குப்பையோடு குப்பையாக் கொண்டு போகும்.
13 comments:
செம. உயிரற்ற பொருட்களும் வாழ்வில் எத்தனை அன்பை உணர வைக்கின்றன! அழகுத்தமிழில் உணர்வுப்பூர்வமான பதிவு.
மிக்க நன்றி பிரேமாவின் செல்வி
நாற்காலியைச் சுற்றிக் கதைகள்
சிறந்த பகிர்வு
இந்த நாற்காலியைப் பார்க்கும் பொழுது நீங்கள் அதில் அமர்ந்து எழுதுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது :-)
எங்கள் வீட்டிலும் ஒரு soldier சிலை உண்டு. Gun metalலினால் ஆனது. அதை என் தம்பியின் நண்பர் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக 1985ஆம் வருடம் வந்து தங்கியபோது சென்னையில் இருந்து சேன் ஹோசே கலிபோர்னியாவிற்குத் தூக்கிக் கொண்டு வந்துக் கொடுத்தப் பரிசு பொருள். நல்ல கனம், 4அடி உயரம். நாங்கள் வீடு மாறும்போதெல்லாம் எங்களுடன் அதுவும் வரும். இத்தனைக்கும் அது அவ்வளவு அழகானக் கலைப் பொருள் அல்ல. அவர் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த அன்பே காரணம் :-)
சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்தபோதும் மத்த furnitureகளை எல்லாம் விட்டுவிட்டு இந்த ஈட்டி ஏந்திய வீரன் மட்டும் எங்களுடன் வந்தான். பின் சென்னைக்குக் குடி பெயர்ந்த பின் எங்கள் புது வீட்டில் வரவேற்பு அறையிலும் இடம் பிடித்தான்.
இந்த சிலைக்கு என் மகன் எங்கள் முதல் கார் ஓட்டுநர் பெயரான மணி என்ற பெயரை சூட்டியிருந்தான். 29 வருடங்கள் எங்களுடன் இருந்து போன மாதம் தான் என் தற்போதைய கார் ஓட்டுநரிடம் என் பிள்ளைகளின் அனுமதியுடன் கொடுத்தேன் :-)
உங்கள் உணர்வுகள் புரிகிறது :-)
amas32
Yarlpavanan Kasirajalingam
மிக்க நன்றி நண்பரே
amas
நன்றிம்மா உங்கள் அனுபவப்பகிர்வையும் ரசித்தேன்
ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு....கனத்த மனதுடன் வேறுவழியின்றி இதுவரை துறந்த பொருட்களின் வரிசை கண்முன் வந்தது.
@shanthhi
மிக்க நன்றி சகோதரி
நாற்காலிக்கு கதிரை என்று பெயர் உள்ளது என்று இன்று தான் தெரியும். வைரமுத்து 'மரம்' குறித்து எழுதியது போல, இந்த கதிரை குறித்தான எழுத்தும் காலம் தாண்டி நிற்கும். சிறந்த பதிவு...
அன்பு நண்பரே
பதிவை வாசித்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
நாற்காலியின் பின்னே நெஞ்சம்மும் அசைபோடுது பிரபாவின் பதிவுகளை சுமந்த கதிரையின் இருப்பு பற்றி.
நன்றி சகோதரா
உழைச்சு உழைச்சு உயிரை விட்டுச்சுன்னு சொல்வாங்களே.... அது இந்த கதிரைக்குப் பொருத்தம்!
Post a Comment