ஒருவருஷத்துக்கு மேலாகத் தாயகம் செல்லாத நிலையில் இந்த நவம்பர் மாதம் தாயகம் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்த வேளை, அப்போதுதான் அங்கிருந்து வந்த நண்பர் "அங்கை கடும் மழை, வெள்ளம், அதோட டெங்குக் காய்ச்சலும் பரவுது, ஏனப்பா வலியப்போய் வினையைத் தேடுறீர்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு இதை விட்டால் வாய்ப்பில்லை, ஷெல், குண்டு மழையிலேயே சீவிச்சனாங்கள், இதெல்லாம் என்ன பெரிசு என்று மனசுக்குள் சமாதானப்படுத்திக் கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்தேன். இரண்டரைக் கிழமை லீவில் ஏகப்பட்ட திட்டங்கள். தாயகப்பயணத்தோடு, இந்தியாவுக்கும் ஆறு வருஷங்களுக்குப் பின் போக முடிவெடுத்தால் அதிலும் இன்னும் ஏகப்பட்ட திட்டங்கள். கொச்சின், குருவாரூர், கோழிக்கோடு, கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் என்று வந்துவிட்டன.
ஊருக்குப் போவதன் முதல் காரணமே அப்பா, அம்மாவைப் பார்க்கவேண்டும். தொலைபேசியில் பேசும் போது "தம்பி! பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினிலும் நனிசிறந்தனவே" என்ற முத்தாய்ப்போடுதான் அப்பா ரிசீவரை வைப்பார்.
கொழும்பு, யாழ்ப்பாணம் போக்குவரத்து ஆதிநாளில் யாழ்தேவி புகையிரதச் சேவை இருந்த காலத்தில் போயிருக்கிறேன். யாழ்தேவி போன தண்டவாளத்தின் சுவடே இல்லாமல் புல்பூண்டு முளைத்து, மண் மேடாய் இருக்க, ரயில் நிலையங்களும் அகதிகளின் தற்காலிக முகாமாகிப் போய்விட்டன. ஒருகாலத்தில் இலங்கையின் ஒட்டுமொத்த ரயில்சேவைகளில் முதன்மையான இலாபம் கொழிக்கும் ரயில்சேவையாக இருந்தது யாழ்ப்பாணம் கொழும்புக்கான யாழ்தேவி ரயில்சேவையாம். என் சித்தியின் மகள் தன் வாழ்நாளிலேயே இலங்கை ரயிலில் பயணம் செய்ய வாய்ப்பில்லாமல் இப்போது கல்யாணம் கட்டிக் குழந்தைகளோடு வெளிநாட்டில் இருக்கும் வரை இந்த ரயில்சேவை இன்னும் வரவில்லை என்றால் பாருங்களேன். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி இப்போதுதான் மெல்ல மெல்லத் தண்டவாளம் போடும் பணிகள் ஆரம்பமாகின்றன என்று கொழும்புப் பத்திரிகையில் வந்திருந்ததை மெய்ப்பிக்குமாற்போல எங்களூரில் இருக்கும் ரயில் நிலையத்தில் பெரிய பார ஊர்த்தி வாகனங்கள் வேலையாட்களோடு இறக்கியதைக் காணமுடிந்தது.
இடையில் தொண்ணூறுகளில் கடும் சண்டை நடந்து கொண்டிருக்க, வானத்தில் விமானக்கழுகு வட்டமிட்டுக் கொண்டிருக்க அவனுக்குப் போக்குக்காட்டி யாழ்ப்பாணம் மினிபஸ்காரன் பளையில் இறக்கி விட, கொம்படி, ஊரியான் பாதையால், முழங்கால் அளவு தண்ணீரில் கால் மைல் நடந்து, ஜெற்றியில் ஏறி இன்னொரு மோட்டார் சைக்கிளில் இன்னும் இரண்டு கிலோ மீட்டர், பிறகு இன்னொரு மினிபஸ் அது ஓமந்தை வரை சென்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் தாண்டி, புலிகள் இராணுவம் இருவரும் இல்லாத சூனிய வெளியில் இறக்கிவிட பின்னர் இராணுவப் பகுதி சென்று அங்கிருந்து பஸ் எடுத்து வவுனியா போய், அங்கே ஒருநாள் தங்கி போலீஸ் வாக்குமூலம் வாங்கி, அடுத்த நாள் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் யாழ்தேவி ரயில் சேவை என்று அந்த நாளில் இளவரசன் காடு, மலை, மேடு, களனி, ஆறு எல்லாம் தாண்டி இரத்தினக் கல் எடுக்கிறது மாதிரியான சமாச்சாரம். அதுவும் இடையில் ஏதாவது சண்டை வந்தால், கிளிநொச்சிப் புத்த விகாரை ஆச்சிரமத்தில் நாட்கணக்கில் இருந்து போகவேண்டும். அந்த அனுபவமும் உண்டு. தேய்ந்து தேய்ந்து நலிந்து அழுது பொங்கி வெடித்த மினிபஸ் டயரால் நடுவழியில் தடைப்பட்ட பயணமும் உண்டு.
பின்னர் பல்கலைக்கழக வாழ்வில் வவுனியாவுக்கும், கொழும்புக்கும் கூட்டாளிமாரோடு ஓடும் யாழ்தேவியில் எட்டிப் பாய்ந்து சீட் பிடித்துப் போன காலமும் கடந்தாச்சு.
இரண்டாயிரமாம் ஆண்டுகளில் விமானப்போக்குவரத்தில் பலாலியில் (யாழ்ப்பாணம்) இருந்து இரத்மலானை (கொழும்பு) என்றும் பயணிச்சாச்சு. இந்த ஏழுகடல் அனுபவங்களை இந்தத் தலைமுறை கண்டிருக்காது.
இப்போதோ நிலமை வேறு. ஏ9 பாதையே கதி என்று தரை வழிப்பாதை மாலையானால் அடுக்கடுக்காகச் சொகுசு பஸ் பயணம், அதைவிடப் பகல் வேளைகளில் அரச பேரூந்தும் இயக்கப்படுகின்றது. ஆனால் காலையில் ஆரம்பிக்கும் அரச பேரூந்துப் பயணம் ஒவ்வொரு தரிப்பாக நின்று கொழும்பு/யாழ் போய்ச் சேர ஒரு முழு நாள் ஆகிவிடும். தனியார் சொகுசுபஸ்காரன் இரவு ஏழுமணிக்குத் தன் பயணத்தை ஆரம்பிப்பதாகச் சொல்லி, கொழும்பில் இருக்கும் குறுக்குச் சாலைகளிலெல்லாம் ஆட்களைக் கவர்ந்து கொழும்பு தாண்ட இரவு பத்து மணி ஆகிவிடும். இடையில் சாப்பாட்டுக்கு இருபது நிமிடம், முறிகண்டிப்பிள்ளையார் கோயிலில் இன்னொரு இருபது நிமிடம் என்று ஆடிப்பாடி ஊர்போய்ச் சேரஅதிகாலை தாண்டி, காலை வந்து ஜன்னலுக்குள்ளால சூரியன் கொக்கட்டம் விட்டுச் சிரித்துக் கொண்டிருப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சொகுசு பஸ்ஸில் பயணிக்கும் போது புதுசு புதுசாக முளைத்திருப்பார்கள். போன ஆண்டு இருந்த பஸ்காரர் எங்கே என்று தேடவேண்டும். ஒரு சிலர் மட்டுமே ஆண்டாண்டு காலமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளவத்தைக் (கொழும்பு) கடைகளில் யாழ்ப்பாணத்துக்குப் போகும் சொகுசு பஸ்கள் ஒவ்வொன்றும் தம் தனித்துவத்தை விளம்பரப்படுத்திக்கொண்டிருக்க ஒரு பஸ்காரர் மட்டும் என் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். கால் நீட்டிப் படுக்குமளவுக்கு இருக்கை வசதி, அத்தோடு Wi Fi இணைய வசதி என்று கண்டதும் எட இதென்ன புதுக்கூத்து என்று முகவரி தெரியாத அந்த பஸ்காரருக்குப் பணம் கட்டியாச்சு. காலி வீதியில் உள்ள ஏதாவது கடைக்கு முன்னால் வந்து ஏறுங்கோ என்ற காலம் போய், வெள்ளவத்தைக் கடற்கரைக்குப் பக்கமாக,இராமகிருஷ்ண லேனில் தான் இப்போது பஸ்கள் முகாமிட்டிருந்தன. ஏழுமணிக்கு வாங்கோண்ணை என்ற பஸ்காரன் பஸ் நிரம்புமளவுக்கு ஆட்களைச் சேர்க்கும் வரை கிளம்பமாட்டான் என்று தெரிந்தது. "உவங்களுக்கு யாழ்தேவி வந்தால் தான் பாடம் கிடைக்கும்" என்று எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த பெரியவர் புலம்பினார்.
"அண்ணை இந்த பஸ் காங்கேசன்துறை வீதியால் போகுமெண்டு றிக்கெற் வித்தவர் சொன்னவர் சரிதானே" என்று நான் கேட்க "
இல்லையண்ணை இது பருத்தித்துறை போற பஸ், யாழ்ப்பாணத்தில இறக்கிவிடுவம் ஓட்டோ எடுத்து ஊருக்குப் போங்கோ" என்று நடத்துனர் முதல் கோணல் வைத்தார்.
பஸ் கிளம்பியது. முன் இருக்கையில் முகவாய் இடிக்குமளவு நெருக்கம். "அறுந்துபோவார் இதைத்தானோ கால் நீட்டிப் படுக்குமளவு சீட் எண்டவங்கள்" என்று நொந்துகொண்டேன்.
முன் சீட்டில் இருந்தவர் வெகு இலாகவமாக ஓடும் பஸ்ஸிலேயே நின்றுகொண்டு ஜீன்ஸுக்கு மேல் சாரத்தை (லுங்கி)க் கட்டி தன் இரவு உடைக்கு மாறினார். எனக்குப் பக்கத்தில் இருந்தவரோ மிகுந்த பொறுமைசாலி, நிமிடத்துக்கு ஒருதரம் பஸ்காரரைத் திட்டிக்கொண்டு வந்தார்.
"தம்பி, உவ்வளவு நேரமாக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறம் பஸ்ஸையும் எடுக்கமாட்டீரில்லை, உதிலை ரீவியிலை ஏதாவது படத்தைப் போடுமன் பாப்பம்" என்று சினந்து கொண்டிருந்தார்.
பஸ் நடத்துனரோ அதைக் காதில் வாங்குவதாயில்லை.
"தம்பி உம்மோடையெல்லே கதைக்கிறன், உந்த ரீவியைப் போட்டால் தேய்ஞ்சு போடுவீரோ" மீண்டும் அவர்
"அண்ணை, வேலை பாக்குற நேரம் கரச்சல் குடுக்காதேங்கோ" நடத்துனர் பெடியன் (அவனுக்கென்ன பஸ் நிரம்பியாச்சு)
"ச்சீ கேவலமான பண்பப்பா" என்று அவர் மீண்டும் திட்ட, வேண்டாவெறுப்பாக அவர் திட்ட,
நடத்துனர் பெடியன் வேண்டாவெறுப்பாக சின்னத்திரையில் கோ பாடலைப் போட்டான்.
"வெண்பனியே வெண்பனியே உன் தோளில் சாய்ந்திடவா" என்று டிவி பாடிக்கொண்டிருக்க, எனக்குப் பக்கத்தில் இருந்த அந்த அவர் ஸ்டீரியோவில் குறட்டை ஒலி கொடுத்துக் கொண்டிருந்தார்.
"சுத்தம், உம்மை நித்திரையாக்குறத்துக்கோ படம் போடச் சொன்னனீர்" என்று மனதுக்குள் முணுமுணுத்தேன்.
ஏ9 பாதை கடந்த ஆண்டை விடச் சீராக இருந்தது. போனவருஷப் பயணத்தில் அடிக்கடி பஸ் குத்தாட்டம் போட்டுப் பயணித்திருந்தது, இம்முறை பாக்யராஜ் நடனம் போல வெகு நிதனமாக.
Wi Fi ஐக் காணவில்லை என்று புகார் கொடுக்கலாம் போல, இந்த ஓட்டை பஸ்ஸில் அதுதான் இல்லாத குறை என்று நினைத்துக் கொண்டேன். பஸ்ஸுல் துப்பாக்கி படம் கள்ள டீவியில் போட்டு காதைச் செவிடாக்கும் அளவுக்கு விஜய் சுட்டுக் கொண்டிருந்தார் அவ்வளவு சத்தம்.
குளிரூட்டப்பட்ட ஏஸி பஸ் என்றாலே பதப்படுத்தும் மீனை குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கும் அளவுக்குத் தான் யாழ்ப்பாண பஸ்காரர் வைப்பார்கள், அவ்வளவு குளிர். லண்டனில் இருந்து வரும் வெள்ளைக்காரனே யாழ்ப்பாண பஸ்ஸில் ஏறினால் விறைச்சுச் செத்துப்போவான்.
செல்போனில் இணைய வசதி இருந்ததால் அதை நோண்டிக் கொண்டிருந்தேன். நள்ளிரவு தாண்டி சென்னை ட்விட்டர்கள் ஒருபக்கம் நடுநிசிக்கீச்சு, கவிதை என்று களைகட்டிக்கொண்டிருக்க, அமெரிக்க வாழ் ட்விட்டர்கள் இந்தியப் பொருளாதார மேம்பாடு குறித்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்துகொண்டிருந்தார்கள்.
முகம், கால் கழுவி, முறிகண்டிப் பிள்ளையாரைக் கும்பிடும்போது நாலுமணி ஆகியிருந்தது. முறிகண்டிப்பிள்ளையார் அன்று முதல் இன்றுவரை அமைதியாக இருந்தார். அந்த அமைதிக்குப் பின்னால் ஆயிரம் செய்திகளிருக்கும்.
யாழ்ப்பாணம் நோக்கி நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தது பஸ்.
16 comments:
நேரிலே பார்த்தது போல் உணர்ந்தேன்
உலாத்தல் தொடங்கிடுச்சேய்ய்ய்ய் :)
பதிவுகளோடு சேர்த்து வித விதமாய் டிவிட்டரில் வலம் வந்த போட்டோக்களையும் தொகுத்து தரவும் ! #ரிக்குவெஸ்ட்
***********
டிவிட்டர்கள் நநிகீ அமெரிக்கர்கள் பொருளாதாரம் பத்தி பேசுறதெல்லாம் #ம்ம்ம்ம் அண்ணே அரசியல் குதிக்கப்போறாருடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)
நேர்முக வர்ணனையாக அருமையாக எழுதியுள்ளீர்கள்.
பாராட்டுகள்
வர்ணணை அசத்தல்...
ஆகா, கானாஸ்...உங்ககிட்டே உலாத்தல் பத்தி எழுத கத்துக்கணும்..நேரா பார்த்தமாதிரியே இருந்துச்சு.
ஆனாலும், வை ஃபைல்லாம் ஓவராத் தெரியலை?!:)
ஏழுகடல்,ஏழுமலை தாண்டி பயணிச்ச அனுபவம் ம்ம்ம்....
வாவ்.. ஆரம்பமாயிடுச்சா.. ;)
கொழும்பு- யாழ் சாலை வழி எத்தனை கி.மீ இருக்கும் ?
மிக்க நன்றி அர்விந்த்
ஆயில்ஸ்
படங்களும் வரும் ;)
மஞ்ஞூர் ராஜா
மிக்க நன்றி
அகல்விளக்கு
வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி
முல்லை பாஸ்
ஏழுகடல் தாண்டிப் பயணித்தோம் தோம் ;)
தமிழ்பிரியன்
யாழ் கொழும்பு கிட்டத்தட்ட நானூறு கிலோமீட்டர்
சூப்பர் ஆரம்பம்
இலங்கைத் தமிழில் படிக்க சுகமாயிருந்தது கானா.
ரேகா ராகவன்.
\\ நற்றவ வானினிலும் நனிசிறந்தனவே" \\
விளக்கம் சொல்லுங்கள் தல...
மத்தபடி எப்போதும் உங்க கூட உலாத்தலில் வருவது சுகமே..;))
ஆனா முறையாக முடிங்கோ ;)))
Travelogue பதிவுகள் தொடங்கிவிட்டன.. படங்கள் பலவற்றை ட்விட்டரில் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன். பதிவுகளை இனி தொடர்வோம்.. ! அடுத்த முறை நாம் எல்லோரும் உங்களோடு இலங்கை வந்தாலும் வரக்கூடும்.
மிகவும் ரசித்தேன்! நீங்க சிரமப்பட்டாலும் எங்களை மகிழ்விக்குமாறே எழுதியுள்ளீர்கள். கூடவே பயணம் செய்ததுபோல் இருந்தது !
இதுக்குத்தானய்யா காத்துக்கிட்டிருந்தேன். ஊருக்குப் போன பிறகுதான் பயணத்தொடர் தொடங்கும்னு தெரியும். ஊருக்குப் போயிட்டிங்கன்னு தெரியுது.
உங்களோடு சேர்ந்து நானும் பயணம் செய்கிறேன். நான் மட்டுமல்ல உங்கள் நண்பர்கள் எல்லாருமே :)
//கொச்சின், குருவாரூர், கோழிக்கோடு, கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம்//
கோயம்புத்தூர் வந்தீங்களாக்கும்...?
பதிவு பரவசப்படுத்தியது.
மீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் போய் வந்த உணர்வைத் தந்தது உங்க அனுபவப்பதிவு !முருகண்டிப்பிள்ளையார் மட்டும் அப்படியே !ம்ம்ம்
Post a Comment