Monday, June 25, 2012
"அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு" கணக்கும் வழக்கும்
தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு வாக்கில் ஊரில் இருந்த சமயம், சகதோழன் ஒருவன் தனது மாமாவின் உதவியோடு அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதாகச் சொல்லியிருந்தான். அந்த நேரம் "ஏன்ரா உனக்குப் போக வேற இடம் கிடைக்கேல்லையே, வாத்தியார் சொன்னது மாதிரி பின்னடிக்கு மாடு மேய்க்கப் போறாயோ" என்று கூட்டமாகக் கேலி செய்ததும், "வந்தாண்டா பால்காரன்" என்று அன்றைய அண்ணாமலை காலத்தில் அவன் எங்களுக்குப் பலிகடா ஆனான். அப்போதெல்லாம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என்றால் பால்மாடுகளும், பண்ணையும் தான் என்ற நினைப்பு, எல்லாம் அங்கர் பால்மா விளம்பரம் செய்த சதி. ஆனால் எழுதிச் செல்லும் விதியின் கைகள் அவனை மேற்குலக நாடு ஒன்றுக்கும், கேலி செய்த நண்பர்களுள் தலையாய என்னை அடுத்த ஆண்டே அவுஸ்திரேலியாவுக்கு விஸா அனுப்ப வைத்துவிட்டது.
அதன் பின் நடந்த ஆரம்ப நாட்களின் களோபரங்கள், விஷ்ணுபுரம், காவல் கோட்டம் அளவுக்குப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ள வேண்டியவை என்றாலும் இன்றுவரை எனக்கு முள்ளாய் ஒரு விஷயம் குத்திக் கொண்டே இருக்கிறது. மெல்பனுக்கு நான் வந்த பின்னர் பழக்கமான ஒரு சகபாடி, இவன் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன், வந்து ஆறுமாதம் தான் ஆகியிருக்கும், நம் ஊர்ப்பழக்க வழக்கங்களை நையாண்டி பேசிக் கொண்டும், தான் இனி ஒஸி என்றும் பட்டம் குத்திக் கொண்டான். இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் அந்த நினைவுகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றது, பல சமயங்களில் சிலரது செய்கைகள் அதைத்தானாக நினைப்பூட்டிக் கொண்டு.
கடந்த வியாழன் அன்று அவுஸ்திரேலிய அரசின் உத்தியோகபூர்வ புள்ளிவிபர இலாகாவின் (Australian Bureau of Statistics) 2011 ஆண்டுக்கான குடிசன மதிப்பீட்டு விபரங்கள் வந்தபோதும் பழைய சகா கதவைத் திறவடி கதையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது. எனக்கும் சரி, இந்தக் குடிசன விபரத்தை எதிர்பார்த்த சக நண்பர்களுக்கும் ஓரளவு ஏமாற்றம் தரக்கூடிய செய்தியாகத் தான் எண்ணத் தோன்றியது 2011 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் குடிசன மதிப்பீட்டில் தமிழர் எண்ணிக்கை தொடர்பான தகவல். 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டுத் தரவுகளின் படி அவுஸ்திரேலியாவில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 151 பேர் என்பதாக இருக்கின்றது. இதைவிட சில ஆயிரமாவது மேலதிகமாக இருக்கலாம் என்பதே நமது ஐயமாக இருக்கின்றது. தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்த விரும்பாதோர், இங்கே பிறந்து வளரும் பிள்ளைகள், சிங்கப்பூர், மலேசியா, பிஜித் தீவுகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்தோரில் தமிழை மூத்த தலைமுறை மொழியாக மட்டும் கொண்டு, ஆங்கிலத்தைத் தம் தாய் மொழியாகத் தழுவிக் கொண்டோரும் என்று இந்த இருபதாயிரத்துக்குள் வருமோ என்று நினைப்பதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் புள்ளிவிபர இலாகாவின் அறிக்கையின் பிரகாரம் கிடைத்த தகவல்களை வைத்து அலசி ஆராயலாம் என நினைக்கிறேன். 2011 ஆம் ஆண்டின் ணக்கெடுப்பின் விபரங்கள் கடந்த வாரம் வெளியாகின்றன என்ற செய்தியறிந்து புள்ளிவிபர இலாகாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரமான தகவல் கையேடு ஏதும் அச்சில் கிட்டுமா என்று கேட்டேன். இணையத்தைப் பார்க்கச் சொன்னார்கள். எனது அலுவலகத்தில் இருந்து ஒரு எட்டு நடந்தால் பிராந்திய புள்ளிவிபர இலாகா அலுவலகம் உண்டு எனவே அதன் படியேறினேன். எந்த விபரம் தேவை என்றால் நாங்கள் பிரதியெடுத்துத் தருவோம் ஆனால் நாளாகும், காசும் ஆகும் என்றார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்தக் கணக்கெடுப்பில் ஏன் இணையத்தை மட்டும் நம்ப வைக்கிறார்களோ, மக்கள் வரிப்பணத்தில் கொஞ்சூண்டாவது இப்படியான பயன்தரு வேலைகளின் அச்சிடும் பணிக்கு ஒதுக்கலாமே அரசே?
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 50 ஆயிரத்து 151 பேர். இதன் முக்கிய பங்காளிகளைக் கீழ்வரும் அட்டவணை விளக்குகின்றது.
இதில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் 83 ஆம் ஆண்டுக்குப் பின்னும், 95 ஆம் ஆண்டுக்குப் பின்னர் துரித வேகமாகவும் அகதிகளாகக் குறிப்பிடத்தமிழர்களை உள்வாங்கிக் கொண்டது இந்த நாடு, ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தொழில், கல்வி சார் வழியாகக் குடியுரிமை பெற்றவர்கள். அடுத்த நிலையில் இருக்கும் இந்தியத் தமிழர் தொழில் மற்றும் கல்வி சார் வழியாகக் குடியுரிமை பெற்றவர்கள். சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் வாழ்ந்த அடுத்த தலைமுறைத் தமிழர்கள் தமது வாழ்க்கைத் தரத்தை நோக்காகக் கொண்டு இந்த நாட்டிற்கு இடம்பெயர்ந்தவர்கள். முதியோர் நலன், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் ஒப்பீட்டளவில் ஏனைய ஆசிய நாடுகளோடு ஒப்பிடும் போது பல சலுகைகளை (இலவசம் உட்பட) வழங்குவதே சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இந்த நாட்டிற்குக் குடிபெயர்ந்தார்கள் என்று சொல்லலாம்.
அவுஸ்திரேலியாவை மாநிலங்களாக வகைப்படுத்தி முறையே நியூசவுத்வேல்ஸ் (தலைநகர் சிட்னி), விக்டோரியா ( தலைநகர் மெல்பர்ன்), குயின்ஸ்லாந்து (தலைநகர் பிரிஸ்பேன்), தெற்கு அவுஸ்திரேலியா (தலைநகர் அடலெய்ட்), மேற்கு அவுஸ்திரேலியா ( தலைநகர் பேர்த்), வட மாநிலம் (தலைநகர் டார்வின்), தஸ்மேனியா (தலைநகர் ஹோபார்ட்), ஆகியவை மாநில ஆட்சியின் கீழும் அவுஸ்திரேலிய தலைநகர் பிராந்தியம் (தலைநகர் கான்பெரா) இது அரசாங்கத்தின் நேரடி ஆளுகையிலும் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. பேராசிரியர் ஆ.கந்தையா அவர்களின் People speaking Tamil at home in Australia என்ற நூலில் 2006 ஆம் ஆண்டு வரை தமிழர் குடியேற்றம் தொடர்பில் கீழ்க்காணும் அட்டவணை காணப்பெறுகின்றது. அதைத் தமிழில் தருகின்றேன்.
2000 - 2010 ஆம் ஆண்டுக்கும் உட்பட்ட காலப்பகுதியில் 1303 பேரில் இருந்து 2900 பேர் வரையாக அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இதைவிடக் கண்டிப்பாக குடிபெயர்ந்த தமிழர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மதக் கோட்பாடுகளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்து, அடுத்தவர் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் வழிபாட்டிடங்களை அமைக்கவும், பிரார்த்தனைகளில் ஈடுபடவும் வழி சமைத்திருக்கும் இந்த நாட்டில் தமிழரில் 36,940 பேர் இந்துக்கள், 4932 பேர் கத்தோலிக்கர், இஸ்லாமியர் 1893 பேர், அங்கிலிக்கன் திருச்சபை 1150 பேர், பெந்தகோஸ் 1055 பேர், எந்தவித மதமும் கைக்கொள்ளாதோர் 722 பேர் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.
கீழ்க்காணும் அட்டவணைகள் 2011 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி தமிழரின் தனிநபர் வருமான வகுப்புகளைக் காட்டுகின்றன (SBS - Census Explorer 2012)
தாம் விரும்பிய கல்வியைத் தேர்ந்தெடுத்துக் கற்கவும், எந்தவிதமான பாரபட்சமான கல்விக்கொள்கையும் கொண்டிராத இந்த நாட்டில் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் மேல்வகுப்புப் படித்தோர் பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே கற்றுத் தேர்ந்தோர் மேற்படிப்புக்குமாகத் தம் கல்வியைத் தொடர ஏராளமான கற்கை நெறிகளும், கல்வி நிறுவனங்களும் உண்டு. அதே சமயம் கல்வி, மற்றும் தொழில் சார் அனுபவத்திற்கேற்ப வேலை வாய்ப்புக்களை வழங்குவதிலும் இந்த நாட்டில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. தனியார் வியாபாரங்கள் குறிப்பாக இலங்கை இந்திய மளிகைக்கடைகள், இலங்கை, இந்திய உணவகங்களை வைத்திருப்போரும் கணிசமானோர் உண்டு. மேற்குலக நாடுகளோடு ஒப்பிடும் போது சொந்த வீடு வாங்கி வைத்திருப்போர் இந்த நாட்டில் அதிகம் எனலாம்.
Australia வில் தமிழ்க்கல்வி என்ற வகையில் ஆரம்பக் கல்வி தொட்டு பல்கலைக்கழகப் புகுமுகக் கல்வி வரையாகத் தமிழை ஒரு பாடமாகப் பயிலக் கூடிய வாய்ப்பும் வசதியும் ஆஸ்திரேலிய அரசின் அங்கீகாரத்தோடு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நியூ சவுத்வேல்ஸ் மாநிலம், மற்றும் விக்டோரியா மாநிலம் ஆகிய மாநிலங்களிலேயே பல்கலைக்கழகம் வரையிலான கற்கை நெறிக்கான வசதி உண்டு. இதனால் பெருமளவான தமிழ்ப்பிள்ளைகள் பயன்பெற்று வருவதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இதற்கென ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்ப்பாடசாலைகள் இயங்கி வருகின்றன.
ஊடகம் என்ற வகையில் பத்திரிகை ஊடகத்தைப் பார்ப்போமேயானால், இந்த நாட்டில் 50 இற்கும் மேற்பட்ட தமிழ்ப்பத்திரிகைகள், சஞ்சிகைகள் தொடங்கி ஒருவருடமோ இரண்டு வருடமோ ஓடி ஓய்ந்த வரலாறுகள் உண்டு. இப்போது எஞ்சியிருப்பவை என்று பார்த்தால் ஈழமுரசு, தென்றல், தமிழ் ஓசை ஆகிய இலவச ஏடுகளும் கலப்பை, வல்லினம் போன்ற பணம் கொடுத்து வாங்கக் கூடியசஞ்சிகையும் அடங்குகின்றன. இந்திய சஞ்சிகைகளோடு போட்டி போட வேண்டிய சவாலையும், உள்நாட்டில் பரவலான வாசகர்கள் இன்மை, எழுத்தாளர்கள் அதிகம் நாட்டம் கொள்ளாமை போன்றவையே இந்த நாட்டில் இயங்கும் தமிழ்ப் புதினங்களுக்குச் சவாலாக அமைகின்றன.
வானொலி ஊடகத்தை எடுத்து நோக்கினால் SBS என்ற பல்லின மொழி பேசும் வானொலி வாரத்தில் ஞாயிற்றுக் கிழமையின் ஒரு மணி நேரத்தைத் தமிழுக்காக ஒதுக்கியுள்ளது. இதைத் தவிர பல்வேறு சமூக வானொலிகள் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று வாரத்தின் ஏதாவது ஒரு நாளைப் பங்கு போட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்குவதோடு 24 மணி நேரத் தமிழ் வானொலிகளாக அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இன்பத் தமிழ் ஒலி ஆகியவையும் இயங்குகின்றன. 24 மணி நேர வானொலிகளைக் கேட்பதற்கு விசேட கருவிகள் தேவை .
அதே சமயம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தற்போது இணையமூடாகவும் கேட்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 2 சதவீதமான மக்கள் தொகையைப் பிரதிபலிக்கும் தமிழர் பரம்பல் என்பது இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது போல இயங்கும் இந்த நாட்டின் வாழ்வியல் போன்று இலங்கை, இந்தியத் தமிழர் என்ற பாகுபாடு கடந்து மொழியால் ஒன்றுபட்ட ஒரே இயங்குதளத்தில் சொல்லிலும் சிந்தனையிலும் இயங்கினால் நம் தமிழ் மொழியின் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான அத்திவாரமாக அது நின்று நிலைக்கும் எனலாம்.
உசாவியவை:
Australian Bureau of Statistics 20/06/2012
SBS - Census Explorer 2012
People speaking Tamil at home in Australia - Dr.A.Kandiah (January 2008)
கங்காரு நாட்டில் தமிழரும் தமிழும் - கலாநிதி ஆ.கந்தையா (December 2004)
9 comments:
very nice, very informative and as usual immensely readable .....thanks Praba !!!
very nice, very informative and as usual immensely readable .....thanks Praba !!!
மன்னிக்கணும் வழக்கம் போல பிரிண்ட் எடுத்து படித்து.....
சரி முதலில் இங்கே இந்தியாவில் என்ன நடக்கிறது என ஒரு வரியில் சொல்லிவிடுகிறேன்.
நான் தற்போது வசிப்பது மும்பையில். எனது மனைவி மலையாளத்தை தாய் மொழியாக்கொண்டவர் ஆனாலும் பிறப்புச சான்றிதழ் மும்பையில்.
ஆறு மாசத்துக்கு முன்னே மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வந்தவர்கள் பதிவு செய்த விவரமானது பிறந்த ஊர் மற்றும் சாதி.
மொழியைப் பற்றி ஏதும் கணக்கெடுப்பு எடுக்கவில்லை.
சாதியை ஒழிக்க வந்த ராமதாஸ் கூட "வன்னியர்' என ஒரே சாதியைக்கூறுங்கள் என கூவிக்கொண்டிருந்தார்.
சரி நாம் தான் இந்தியராயிற்றே அதனால் இப்படியான கணக்கெடுப்பு இருக்கும் என சந்தோசம்.
மொரிசியஸ் தீவில் அன்பழகன் என்ற பாதுகாப்புத்துறையைச்சேர்ந்த தமிழருக்கு தமிழ் தெரியாது. தமிழன் எனக்கூறிக்கொள்வதும் கிடையாது. கேட்டால் தான் "Mauritian.., என் அப்பாகாலத்திலிருந்தே" எனக்கூறுகிறார்.
சரி அது அவர் விருப்பம் .
இங்கே இந்தியாவில் பிறந்த இடத்தை வைத்துத்தான் மொழி பேசும் மக்களை கண்டறிகிறார்கள்.
//2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டுத் தரவுகளின் படி அவுஸ்திரேலியாவில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 151 பேர் என்பதாக இருக்கின்றது. இதைவிட சில ஆயிரமாவது மேலதிகமாக இருக்கலாம்//... என்ற உங்களது சந்தேகம் நியாயமே.மேலும் எதுக்கு வம்பு என தஞ்சமடைந்த நாட்டின் "பிரஜை"யாகவே மாறிவிடுகிறவர்களும் உண்டு.
ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்டின் அகதிகள் என்ற கணக்கெடுப்பை விடுத்து..,அரசாங்கமே மொழிவாரி கணக்கெடுப்பை நடத்துகிறதா என்பதே எனது சந்தேகம்.
அவுஸ்திரேலிய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபர இலாகாவின் (Australian Bureau of Statistics) குடிசன கணக்கெடுப்பு முழுதும் வந்த பின் பாக்கலாம்.
சந்தடி சாக்கில்.., புலம் பெயர்ந்த தமிழர்களின் பொருளாதார நிலைமையையும் ஆராய்ந்து விட்டீர்கள் .. ! நல்ல நிலையில் இருப்பதை பார்க்க பெருமை.
பல புள்ளிவிவரங்களை அள்ளித்தெளித்து "கேப்டனாகி" விட்டீர்கள்...!! ;-))
நல்ல பகிர்வு தல ;-)
தகவல்களுக்கு நன்றி பிரபா.
நியூஸியில் இருந்து தமிழர்கள் பலர் ஆஸிக்கு போய்விட்டார்கள்.
வேலைவாய்ப்பு இருப்பதும் ஒரு காரணம்.
வருகைக்கு நன்றி அறிவுக்கரசு சார்,
ஆனந்தராஜ்
விரிவான கருத்துக்கு நன்றி, இங்கே நான் கொடுத்தது அதிகாரபூர்வப் புள்ளிவிபரம் தான்
அண்ணா நல்ல பதிவு தரவுகளுடன்!!!!
கட்டுரை நன்றாக உள்ளது.
நன்றி.
நல்ல பகிர்வு பிரபா. பல தகவல்கள் அறிந்துகொண்டோம்.
Post a Comment