Thursday, June 14, 2012
இன்று முதல் "கள்ளத்தீனி" கொடுக்கிறேன்
வெகுநாளாக மனக் கிடப்பில் போடப்பட்டிருந்த சமாச்சாரத்தை இன்று முதல் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். என்னைச் சுற்றி நடப்பவை, நான், பார்த்த, கேட்ட, சுவைத்த, ரசித்த, ருசித்த, ருசிக்காத சமாச்சாரங்களின் கலவையாக சின்னச் சின்னதாய் துணுக்குகளாகக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இந்த சமாச்சாரம் ஒன்றும் வலையுலகிற்குப் புதிதான அம்சம் அல்ல, வாரா வாரம் நண்பர் கேபிள் சங்கர் வெற்றிகரமாகக் கொத்துப் பரோட்டாவாகத் தரும் விடயம் போலத் தான். இன்னும் சொல்லப் போனால், எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா அவர்கள் "கற்றதும் பெற்றதும்" போன்ற தொடர்களில் தொட்டுக் காட்டிய விஷயம் தான். ஆனால் இங்கே ஒப்பீடு எதுவுமின்றி மனம் போன போக்கில் என் பாணியில் பகிரலாம் என்றிருக்கிறேன். இப்போதெல்லாம் வலையுலகத்தை மெல்ல மெல்ல ட்விட்டர் தன் 140 எழுத்துக்கள் தின்று ஏப்பம் விடும் சூழலில், நறுக்குகளாகச் சில விஷயங்களைக் கொடுத்துக் கடந்து போகவும் இப்படியான தொடர் ஒரு வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
கள்ளத்தீனி என்ற சொற்பதம் தமிழக நண்பர்கள் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருப்பார்களோ தெரியவில்லை. சிறு அளவில் அடக்கப்படும் மிக்சர், இனிப்பு வகையறா உள்ளிட்ட தின்பண்டங்களைத் தான் ஈழத்தில் பொதுவாக இந்தப் பெயர் கொண்டு அழைப்பார்கள். இந்தத் தின்பண்டங்கள் உடலுக்கு எவ்வளவு தூரம் ஆரோக்கியத்தை விளைவிக்கின்றன என்பது முக்கியமல்ல ஆனால் சாப்பிடும் கணம் கொடுக்கும் சுவை மட்டுமே முக்கியம். இந்தளவோடு நிறுத்தி என் கள்ளத்தீனிப் பதிவுக்குப் பாய்கிறேன்.
000000000000000000000000000000
சமீப காலங்களில் இணையத்தில் நுனிப்புல் மேய்ந்து பழகியதால் ஏற்கனவே வாங்கிக் குவித்த புத்தகங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் வேளை மீண்டும் ஒரு சபதம், வாரம் ஒரு புத்தகம் படித்து முடிக்கவேண்டும் என்று. அதன் பிரகாரம்
கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பின் சிட்னியில் இயங்கும் தமிழ் அறிவகம் சென்றேன். சிட்னியில் பிராந்திய அளவில் செயற்படும் நூலகங்களில் தமிழ் நூல்கள் ஏழைக்கேற்ற எள்ளுப்பொரியாக இருக்கும் நிலையில் சிட்னியில் உள்ள இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான ஒரே தமிழ் நூலகம் என்ற பெருமை. ஆனால் எத்தனை பேர் இந்த நூலகத்தைப் பயன்படுத்துகின்றார்கள் என்பது மில்லியன் அவுஸ்திரேலிய டாலர் கேள்வி. இதையெல்லாம் சொல்லும் நானே 10 மாதங்களுக்குப் பிறகு தானே சென்றேன் ;-) .
எடுத்த எடுப்பில் தமிழ்மகன் எழுதிய "ஆண்பால் பெண்பால்"(நாவல்), Gordon Weiss இன் "இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்", பாமரன் தமிழக அரசியலில் தொடராக எழுதிய "எழுதுவதெல்லாம் எழுத்தல்ல" என்று மூன்று புத்தகங்கள்.
பாமரனின் "எழுதுவதெல்லாம் எழுத்தல்ல" படித்து முடித்தாயிற்று என்பதை விட ஒரு பெரும் பாறாங்கல்லை நெஞ்சில் தூக்கி வைத்தாயிற்று என்று சொல்லலாம். பாமரன் யார் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு தமிழ் வாசக உலகம் அவரை அறியாமல் இல்லை. பாமரனின் உள்ளத்து உணர்வுகளின் வடிகாலாய் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பே "எழுதுவதெல்லாம் எழுத்தல்ல" (உயிர்மை வெளியீடு). முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் இருந்து போபால் விஷவாயுக் கசிவு வரை கிட்டத்தட்ட மூன்றாண்டுகளின் பதிவுகளாகப் பார்க்க முடிகின்றது. எள்ளல் தொனியோடு ஒவ்வொரு கட்டுரைகளும் சொல்லும் செய்திகள், அலங்காரம் இல்லாத எழுத்து நடை என்று ஈழத்தில் இறுதிக்கட்ட யுத்த அனர்த்தம் நடந்த வேளை பாமரன் கனத்த மனத்தோடும் கண்ணீரோடும் எழுதிய கட்டுரைகள் சமகாலத்தவர்களுக்கு வேண்டுமானால் தெரிந்த, அனுபவித்த நிகழ்வுகளாக இருக்கலாம். ஆனால் மறதி வியாதி தமிழ்ச்சமூகத்துக்கு எதிர்காலத்தில் தமிழகத்தில் ஊமையாய் வெதும்பித் தீர்த்த உணர்வாளர்களின் சாட்சியங்களாக உண்மைகள் பலதைப் பகிரும்.
இப்போது தமிழ்மகனின் "ஆண்பால் பெண்பால்" நாவலை எடுத்துப் புரட்ட ஆரம்பிக்கிறேன்.
00000000000000000000000000000000000000000000000000000000000000
ஒரு காலத்தில் சுவர் விளம்பரங்களும் சரி, கட் அவுட் விளம்பரங்கள் ஆனாலும் சரி, தூரிகை ஓவியங்கள் தான் முன்னிற்கும். காலப்போக்கில் தொழில் நுட்ப மாறுதல்களால் டிஜிட்டல் விளம்பரங்கள் வரை வந்து விட்டன. எண்பதுகளில் நம்மூர் தியேட்டர்களின் கட் அவுட்டில் மணியம் ஆட்ஸ் என்று ஓரமாகக் கையெழுத்திட்ட தூரிகை ஓவியங்களும் சரி, பொம்மை, பேசும் படம் போன்ற இதழ்களில் பரணி என்று கையெழுத்திட்ட சினிமா விளம்பரங்களின் தூரிகை ஓவியங்களும் சரி மறக்கப்பட்ட சூழலில், சமீபத்தில் ஒரு விளம்பரம் என்னை ஈர்த்தது. ரவுடி ரத்தோர் என்ற ஹிந்திப் படத்துக்கான விளம்பரங்களில் தூரிகையால் வரையப்பட்டதான பிரதிபலிப்பில் அவை இருந்தன. இப்போதுள்ள உயர் தொழில் நுட்ப உலகில் இந்தத் தூரிகை போல நகாசு வேலைகளைக் காட்டுவது ஒன்றும் பெரிய வேலை இல்லை ஆனாலும் அந்த விளம்பர உத்தி திரும்பிப் பார்க்க வைத்தது. எண்பதுகளில் சினிமா விளம்பரங்களுக்குத் தன் தூரிகையால் கைவண்ணம் கொடுத்த ஓவியர் பரணி "வறுமையின் நிறம் சிகப்பு" படத்தில் கே.பாலசந்தரால் வாய் பேச முடியாத ஓவியராகவே நடித்துத் தன்னைப் பதிவு செய்துவிட்டார். இப்படியான துறைகளில் இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்துத் தன் படங்களிலோ, சின்னத்திரையிலோ பிம்பமாக்கிப் பதிவு செய்த பாலசந்தரின் பணியும் தனியே நோக்கப்பட வேண்டியது.
000000000000000000000000000000000000000000000000000000000000000
சிட்னியின் காலை ரயிலைப் பிடித்து ஒரு மணி நேரப் பயணத்தில் ஏகப்பட்ட கூத்துக்களைப் பார்க்கலாம். அதில் சகிக்க முடியாதது எட்டு கம்பார்ட்மெண்டுக்கும் கேட்குமளவுக்குத் தம் இயர்ஃபோன் வழியாக வழிந்தோடும் இசையைக் கேட்டுப் பக்கத்தில் இருப்போரை இம்சைப்படுத்தும் , உரக்கப் பேசி ஊரைக் கூட்டும் சக பயணிகள். இந்த அனர்த்தங்கள் எல்லாம் ரயில்வே கடவுளின் காதுகளை எட்டியிருக்க வேண்டும். அமைதி காக்கும் பெட்டிகள் என்று சிட்னியின் ரயில்வே நிர்வாகம் சோதனை முறையில் சில ரயில்களை இயக்க ஆரம்பித்திருக்கிறது. பார்ப்போம் இதற்கு எதிராக ஏதேனும் கூச்சல் வருகிறதா என்று.
00000000000000000000000000000000000000000000000000000000000000000
சங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணா அவர்களைப் பேட்டி எடுக்கவேண்டும் என்று நான் பணிபுரியும் வானொலி நிர்வாகியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. அன்று மாலையே என் நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்குகொள்கிறார் என்றும் சொன்னபோது கையும்,காலும், வாயும் ஓடவில்லை. பாலமுரளிகிருஷ்ணா போன்ற மேதைகளைப் பார்த்தாலே போதும் என்ற அளவில் இருக்கும் எனக்கெல்லாம் இது ஓவர் தான் ;-) ஆனால் பேட்டிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே வந்து காத்திருந்து, குழந்தைச் சிரிப்போடு பொறுமையாகவும் நிதானமாகவும் நாற்பது நிமிடப் பேட்டி கொடுத்து நெகிழ வைத்து விட்டார். வெறும் மூன்று மாதம் பாடசாலைப் படிப்பு, எனக்கு சங்கீதத்தைத் தவிர வேறெதுவும் தெரியாது, எதிர்மறையான விமர்சனம் தான் என்னை மேலும் ராக ஆராய்ச்சியில் பணி செய்ய வழி செய்தது போன்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் பாலமுரளிகிருஷ்ணா ஒரு நிறைகுடம் என்பதை மீண்டும் மெய்ப்பித்தது.
0000000000000000000000000000000000000000000000000000000000000000000
காதல் கைகூடிக் கல்யாணக் கதவு தட்டும் வேளை காதலர்கள் அமெரிக்காவில் இருந்து பாரிஸ் நகரத்துக்குப் போகின்றனர். காதலனோ ஒரு எழுத்தாளன், நித்தமும் கனவுலகமே கதி. அரையும் குறையுமாகத் தான் எழுதிய நாவலை வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கும் வேளை, கடந்த நூற்றாண்டுக்குப் பயணித்து Ernest Hemingway உள்ளிட்ட அந்தக் காலத்து எழுத்தாளர்களோடு அளவளாவும் கனவுலகில் சஞ்சரிப்பதும் நிகழ்காலத்துக்குத் தாவுவதுமான கதையோட்டம். இரண்டு மாறுபட்ட ரசனை கொண்ட காதலர்களைக் குறியீடாக வைத்து நவீனத்துக்கும், பழங்காலத்துக்குமான பயணமாகப் பதிவாக அமைந்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியவர் ஹாலிவூட் இன் பல்துறை வித்தகர் Woody Allen. படத்தைத் தேடிப்பிடித்துப் பாருங்கள், நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.
13 comments:
ரவுடி ராத்தோர் போஸ்டர் பற்றி நானே எழுதணும்னு நினைச்சேன் கானா.. சூப்பர்..
Do continue:)
முதல் கள்ளத்தீனியே சூப்பர் ;))
இப்போது எல்லாம் நீங்கள் சொல்லுவது போல போஸ்டர்கள் அந்த காலத்தில் ஓவியம் மாதிரி வர photoshopயில் effectல் சில வழிகள் இருக்கு கூடவே இதுக்காக special filter plug-inகள் நிறைய இருக்கு...அதனால டிஜிட்டலி எடுத்து அதையே இந்த மாதிரி ஓவியமாக செய்யறாங்கன்னு நினைக்கிறேன்.
எல்லாமே இனி ரீமேக் தான் ;-))
கள்ளத்தீனி திங்க நான் ரெடி:-)
என்னை கள்ளத்தமிழர்ன்னு ஒரு இலங்கைத் தோழி சொன்னாங்க..
தாய்மொழி தமிழ் இல்லை என்பதால்....
நல்ல பதிவு சகோ... தமிழகத்தில் கள்ளத்தீனி கேள்விப் பட்டதில்லை .. ஆனால் அவற்றை நொறுக்குத் தீனி என சொல்வதுண்டு !!!
பாமரனின் நூலை வாசிக்க வேண்டும் ..
மிட்நைட் இன் பாரிஸ் படத்தை பார்க்க வேண்டும் ..
நன்றிகள்
கானா,
நாம எல்லாம் பெரும்தீனிக்காரன் , எம்ப்புட்டு போட்டாலும் இறங்கும், கள்ளத்தீனியை ஒரு கைப்பார்க்க கள்ளத்தோணி பிடிச்சாவது வந்துடுறேன்,
ஹி...ஹி விடாம தீனி போடணும் இல்லை உங்களை புடிச்சு கடிச்சிறுவேன் :-))
கள்ளத்தீனி நல்லத்தீனியா தான் இருக்கு.
பாரதி ராஜாவின் "நாடோடித்தென்றல்" படத்துக்கு கூட ஆயில் பெயிண்டிங்க் போல போஸ்டர் டிசைன் செய்தார் ஓவியர் "மணியம் செல்வம்"
அண்ணே கள்ளத்தீனி நலலாயிரிக்கு !!!
வார வாரம் எதிர்பாக்கலாமோ?
//சிட்னியின் காலை ரயிலைப் பிடித்து ஒரு மணி நேரப் பயணத்தில் ஏகப்பட்ட கூத்துக்களைப் பார்க்கலாம். அதில் சகிக்க முடியாதது எட்டு கம்பார்ட்மெண்டுக்கும் கேட்குமளவுக்குத் தம் இயர்ஃபோன் வழியாக வழிந்தோடும் இசையைக் கேட்டுப் பக்கத்தில் இருப்போரை இம்சைப்படுத்தும் , உரக்கப் பேசி ஊரைக் கூட்டும் சக பயணிகள். இந்த அனர்த்தங்கள் எல்லாம் ரயில்வே கடவுளின் காதுகளை எட்டியிருக்க வேண்டும். //
இது நீங்க இருக்கிற எரியா ஆக்களூடைய பிரச்சனை :-). நம்ம லைனில வந்து பாருங்க, எல்லாரும் பதுமையிருப்பாங்க :)
கள்ளத்தீனி சாப்பிடேக்க.. இப்பவே அம்மாட்ட பேச்சு வாங்க தொடங்கியாச்சு. ஆனாலும் களவா சாப்பிடுவம் .. நீங்க எழுதுங்க அண்ணே.
"கள்ளத்தீனி" கச்சிதமாய் வந்திருக்கு கான... இனி தொடர்ந்து அடிச்சாட வேண்டியது தானே..
பாஸ் நானும் தீனிக்கு ரெடி :))
கலக்குங்க பாஸ்.
கேபிள்
உங்கள் பதிவையும் எதிர்பார்க்கிறேன்
வாங்க AC
தல கோபி
விரிவான தகவல்களுக்கு நன்றி ;0
வாங்க துளசிம்மா
எல்லாருமே கள்ளத் தமிழர் ஆகிட்டோமே ;)
இக்பால் செல்வன்
மிக்க நன்றி சகோதரா
வவ்வால் நண்பா
பொய்க்கால் குதிரை படத்தின் ஆரம்ப எழுத்துக்களும் அரஸ் இன் கார்ட்டூனுடன் வந்ததை அவதானித்தேன்
திலகன்
உதுக்காகவே ஊர் மாறோணும் போல
ஜேகே
வாங்கோ
யசோ
நன்றி ;)
புதுகை பாஸ்
நன்றி ;)
Post a Comment