Friday, April 20, 2012
"இருளிலே தெரிந்தது"
சாலையைக் கடக்க முயன்ற நாயொன்று எதிர்ப்பட்ட வாகனத்தால் அடிவாங்கி உயிர்பிழைக்க மறுகரை நோக்கி ஓடுமே அதே தள்ளாட்டாட்டத்தோடு ஓடிப்போய் எதிரே Taxi Stand இல் தனியனாகத் தரித்து நின்ற Taxiக்குள் பாய்ந்து மூச்சிரைக்க ஆரம்பித்தான். Preston...Preston... என்று அராத்திக் கொண்டு எதிர்த்திசையை நோக்கி அவன் கைகள் உயர , Taxi சாரதி அவனை விநோதமாகப் பார்த்தவாறே வாகனத்தை முடுக்கினார் மீட்டர் ஓடிக்கொண்டிருந்தது. இரைக்க இரைக்க ஓடிவந்ததால் மார்புக்கூட்டு குத்திக் குத்தி வலித்தது. மார்பைப் பொத்திக் கொண்டே அழ ஆரம்பித்தான் தயாளன்.
ஏ.எல் எடுத்தாச்சு, வெட்டுப்புள்ளியும் வேட்டு வைத்து விட்டது. இனி யூனிவேர்சிற்றிக்கும் போகேலாது. இரண்டாவது தரம் சோதினை எடுத்துப் பார்க்கலாம் என்றால் நாட்டு நிலமை படு கேவலம். சுண்ணாகத்தில இருந்து யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய்ப் படிக்கிறதும் சரி மரண ஆத்தைக் கடக்கிறதும் சரி எல்லாமே ஒன்றாகிவிட்டது. கே.கே.எஸ் றோட்டால் சைக்கிளை மிதித்துக் கொண்டு போகும் அந்த ஒன்றரை மணி நேரமும் மேலே ஏதேனும் வட்டமிடுகுதா என்று பார்த்துக் கொண்டே போய்வரவேணும். மாதம் மும்மாரி பொழியுதோ இல்லையோ, திரும்பவும் சண்டை மூண்டு ரவுண் பக்கம் போகமுடியாத அளவுக்கு பிளேனால் குண்டு மாரியும், ஹெலிகொப்டரால் சன்ன மழையும் பொழிந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள். ஏ.ஏல் படிச்சுக் கொண்டிருக்கும் போதே ஒரு சில கூட்டாளிமார் இயக்கத்துக்குப் போய் விட மிச்சம் இருந்தவர்களில் பாதிப்பேரை கிடைத்த பரீட்சை முடிவுகளும் துவக்குத் தூக்க வைத்தது.
"கொழும்புக்குப் போறதெண்டால் ஆள் பிணை வைச்சுப் போகலாமாம், சீமா படிக்கிறன் எண்டு சொல்லிப் போய் அங்கை இருந்து ஏஜென்சிக்காரர் மூலம் ஏதாவது வெளிநாட்டுக்கு ட்ரை பண்ணலாம், இந்த வாத்தி வேலையோடையே காலத்தைத் தள்ளுவம் எண்டால் சனியன் பிடிச்ச சண்டை நிக்கிற பாட்டைக் காணேல்லை இப்பவெல்லாம் குமருகளை பதினெட்டுப் பத்தொன்பது வயசுக்குள்ளையே வெளிநாட்டு மாப்பிளைக்குக் கட்டி அனுப்பிப் போட்டுறாங்கள், நீ போனால் தான் உன்ர கொக்காவையும், தம்பியையும் கரை ஒதுக்கலாம்,இஞ்சை இருந்து உன்னாலையும் இனிக் காலம் தள்ளேலாது, இனி இந்தப் பொயிலைத் தோட்டத்தை இனியும் இழுத்துக் கொண்டு போகேலாது,அப்பு போனதோட தோட்டவேலை இனிச் சரிப்பட்டுவராது அதை வித்துச் சுட்டாவது உனக்கு நான் காசு தாறன்"
பாலச்சந்தர் படங்களில் அம்மா பேசும் வசனத்தை அப்பா பேசிமுடிச்சு அவரே நாலைந்து பேருடன் கதைத்து முடிவெடுத்து விட்டார். இதுவரை நாளும் படிப்பிலேயே காலத்தைத் தள்ளிவிட்ட அவனுக்கு அப்போது தான் தனக்கு விதிக்கப்பட்ட பொறுப்பு என்று ஒன்று இருக்கிறது என்ற உண்மை உறைத்தது. கோயிலடியில் வயசு வித்தியாசமில்லாமல் பெடியளோட போட்ட கும்மாளம் எல்லாம் மங்கலாகத் தெரிவது போல ஒரு பிரமை. ஆள் பிணையில் வயசுக்கட்டுப்பாட்டுக்காரரின் விசாவோடு இராணுவப் பிராந்தியத்தையும் கடந்து கொழும்பிலும் பேருக்கு சீமா (CIMA) வகுப்பில் சேர்ந்து வார இறுதியில் படிப்பு மற்றும் நாட்களில் ஏஜென்சிக்காரர்களைச் சந்திப்பது என்று காலம் ஒருபக்கம் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்க அங்கை இங்கை திரிஞ்சு தகவல் தேடி அவுஸ்திரேலியாவுக்கு விசா எடுத்து ஸ்ருடண்ட் விசாவில மெல்பனுக்கும் வந்தாச்சு. ஒரு வருஷப் படிப்புக்கான காசுக்குப் பின்னால், ஆண்டாண்டு காலம் அப்பு அனுபவிச்சு நடத்தின பொயிலைத் தோட்டம். வந்த புதிதில் கல்லூரி விடுதியில் மூன்றுமாசம் இருந்து பிறகு, கல்லூரியில் பழக்கமான இலங்கை நண்பர்கள் இருவரோடு சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்தாச்சு.
"எக்கவுண்டன்சி கோர்சிலை சேர்ந்துவிட்டு, ஏதாவது ஒட் ஜொப் செய்து கொண்டே அப்படியே அசைலம் அடிக்கலாம்" முன்னோர்களின் வழிகாட்டலை அவனும் வேதவாக்ககக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தான்.
கடைகளில் போய் வேலை கேட்டால் சாமான் ஏதோ வாங்க வந்த வாடிக்கையாளரைக் கண்டது போலச் சிரித்து வழி அனுப்புவார்கள்,இந்திய உணவகங்களுக்குப் போனால் பெயரையும் வீட்டு நம்பரையும் கொடுத்து விட்டுப் போகவும் என்ற சம்பிரதாயபூர்வமான வார்த்தைகள் வந்துவிழும். ஆறுமாதங்கள் இலங்கைப் பணத்தை டொலரால் வகுத்து வயிற்றை ஓட்டவேண்டியிருந்தது. வேலையில்லாப் பிரச்சனை என்றால் எப்படி இருக்கும் என்பதைச் சகல கோணங்களிலும் அனுபவித்தாகிவிட்டது. அப்போதுதான் ஆபத்பாந்தவனாக பங்கஜ் என்ற வட இந்திய மாணவனின் நட்புக்கிடைத்தது. ஒரு குரூப் அசைன்மெண்ட்டுக்கு அவனோடு சேர்த்து இயங்கவேண்டிய நேரத்தில் அவன் பங்கு என்பது வெறும் பெயருக்காக என்பது அசைன்மெண்ட்டை ஆரம்பித்த சில நாளிலேயே நாடிபிடித்தாகவிட்டது. அவனுக்கும் சேர்த்துச் செய்த அந்த அசைன்மெண்டின் செஞ்சோற்றுக் கடனுக்காக, தான் வேலைபார்க்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னான். வாரத்தின் வெள்ளி, சனி ஞாயிறு நள்ளிரவு வரை வேலை செய்ய வேண்டும். கையில தான் காசு கொடுப்பார்கள் எல்லாத்துக்கும் ஆமாப் போட்ட்டாகிற்று. அப்பாவின் சம்பாத்தியத்தில் காசை விசுக்கி விசுக்கிச் செலவழித்த அந்தப் பொற்காலம் நினைவுக்கு வந்து போனது. கடைக்கு ஆட்கள் வராத நேரத்தில் வெளியே இருக்கும் பொதுக்கழிப்பறைகளில் இருந்து ஒவ்வொரு பெற்றோல் பம்புகள் வரை சுத்தம் செய்ய வேண்டிய இன்னொரு பொறுப்பு. அதற்கும் ஆமா.
காலத்துக்கு மட்டும் கடிவாளம் இல்லை.
"அக்காவுக்கு சம்பந்தங்கள் வருகுது, தம்பியை அங்கை எடுப்பியோ" பழக்கமாகிப் போய் ஒரு கட்டத்தில் "சின்னவன் இயக்கத்துக்க்குப் போனவன் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டு வந்திட்டம், உன்னைத்தான் நம்பியிருக்கிறம், கொக்காளுக்கும் வயசு ஏறுறுது" என்ற ரீதியில் திடீரென்று கடல் மட்டம் மேலே எற ஆரம்பிப்பது போல உணர்வு.
ஒருவருஷப்படிப்பு முடிவதற்கு முன்னமே அகதி என்று கையைத் தூக்கினால் தான் இங்கே இருக்க முடியும் இல்லாவிட்டால் திரும்ப நாட்டுக்குத் தான். அவசரகதியில் ஒரு லோயரைச் சந்தித்து காசு பிறகு தரலாம் என்ற ஒப்பந்தத்தில் அகதிக்கோரிக்கைக்கு விண்ணப்பம் போட்டு நேற்றுத் தான் அந்த முடிவும் கிட்டியது.
"உங்கள் அகதிக்கோரிக்கை விண்ணப்பம் எம்மால் பரிசீலிக்கப்பட்டது, உங்கள் கோரிக்கையை நிராகரிப்பதற்கு வருந்துகிறோம்" என்ற பகீர்க்கடிதம், கல்லூரியால் வந்த களைப்பு,பசியை மறக்கடிக்கவைத்து விட்டது. இனி அப்பீல் பண்ணவேணும் அது எவ்வளவு தூரம் சாத்தியமாகுமோ என்ற குழப்பம் எல்லாம் தலையில் ஒன்று கலந்து விண் விண்ணென்று வலித்தது.
மூன்று நாள் உழைப்போடு கால் பங்கு அரைப்பங்கு வயிற்றை நிரப்பி, மிஞ்சும் ஒவ்வொரு டொலரையும் உண்டியலால் ஊருக்கு நாடுகடத்தி, இதெல்லாம் கொஞ்சக்காலம் தானே, பேர்மனெண்ட் ரெசிடன்சி கிடைச்சால் வேலை செய்யாட்டாலும் கவுண்மெண்ட் கொடுக்கிற காசு கிடைக்கும் என்ற நினைப்பை எல்லாம் அழைத்துவிட்டு நிற்கிறது இமிக்கிறேஷனின் அந்த லெட்டர்.
வெள்ளிக்கிழமை நாளும் அதுவுமா விரதம் பிடிச்ச களைப்பில் நாலு பாண் துண்டுகளை ஜாம் தடவை வாய்க்குள் இறுக்கிவிட்டு வேலைக்குப் போய் பொழுதைத் திசைதிருப்பிக்கொண்டிருந்தால் இன்னொரு இடி கடையின் மனேஜர் மார்ட்டின் வடிவில். வேலை முடியும் நேரம் பார்த்து மனேஜர் வருகிறார். வழக்கமாக இந்த நேரம் வரமாட்டாரே என்னவோ ஏதோ என்று நினைத்தால்
"தயாளன்! இனி நீங்கள் வேலைக்கு வரவேண்டாம், ஃபுல்டைமா ஒரு ஆளை எடுத்துவிட்டோம், போனவாரம் செய்த வேலைக் கணக்கோடு இன்றைய வேலைக் காசையும் சேர்த்துத் தருகிறேன்" மனேஜர் சொல்லச் சொல்ல அந்த நேரம் அவன் கால்கள் தரைக்குக் கீழாகப் பாதாளத்தில் போவது போல ஒரு பிரமை. கல்லாப்பெட்டியின் கணக்கை ஒரு தடவை சரிபார்த்துவிட்டு அதிலிருந்து நோட்டுக்களைப் பொறுக்கித் திணிக்கிறார்.
"தங்க்யூ மார்ட்டின்" இதுக்கு மேல் அவனுக்கு என்ன சொல்ல இருக்கிறது.
சென்றல் ஸ்ரேசனுக்குப் போய் அங்கிருந்து Preston போகவேண்டும்.
சென்றல் ஸ்ரேசனுக்குச் செல்லும் கடைசிபஸ் போகிறது அதை எட்ட்டிப் பிடிக்கவேண்டும். பிடிச்சாச்சு. சென்றலுக்குப் போய் அங்கிருந்து கடைசி ரயில் Preston க்குப் போகும் அதைப் பிடிக்கவேண்டுமே.
சென்றல் ஸ்ரேசனுக்கு வந்தாச்சு. அங்கென்றும் இங்கொன்றுமாக ஆட்கள். டிக்கெட் பரிசோதகர்கள் கூட இல்லாத வெறுமை. Preston செல்லும் பிளாட்பாரத்துக்குப் பாய்ந்தடித்துப் போனால் முன்னால் ரயில் கடந்து கொண்டிருந்தது.
இப்ப என்ன செய்வது, சென்றலில் இருந்து Preston போகும் ஸ்பெஷல் பஸ் ஏதும் இருக்குமா என்ன ஐயோ எனக்கு ஏன் இப்பிடி நடக்குது. அழுகையும் கவலையும் தொண்டையை இறுக்கிக் கொண்டிருக்க, ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் சமயம் பார்த்துத் தான் இன்னொரு சோதனை.
மூன்று தடியன்கள் முன்னால். போதையின் உச்சம் கண்களில் சிவப்பாக.
தொலைந்தோம் என்று நினைத்து தப்ப வழி தேடமுன்னரேயே கால்கள் சதிராட்டம் போட, பாய்ந்து வந்து ஒருத்தன் கையை முறுக்க இன்னொருவன் மணி பர்ஸ் திணித்த பொக்கற்றுக்குள் கையை விடப்போனான். எல்லாச் சக்தியையும் ஒன்று திரட்டி ஓட முனைய, மற்றவன் காலால் இலாவகமாகத் தடுத்து விழுத்தினான். இப்போது அவர்களின் நோக்கம் பணம் அல்ல. கிடைத்த ஒரு அப்பாவிக்குத் தம்முடைய வீரப்பிரதாபத்தைக் காட்டுவது. ஷெல்லடியையும், குண்டுவீச்சையும் தாண்டி ஓடிவந்த அனுபவத்தையெல்லாம் ஒன்று திரட்டித் தள்ளிவிட்டு ஓடுகிறான். பின்னால் துரத்துகிறார்கள்.
சாலையைக் கடக்க முயன்ற நாயொன்று எதிர்ப்பட்ட வாகனத்தால் அடிவாங்கி உயிர்பிழைக்க மறுகரை நோக்கி ஓடுமே அதே தள்ளாட்டாட்டத்தோடு ஓடிப்போய் எதிரே Taxi Stand இல் தனியனாகத் தரித்து நின்ற Taxiக்குள் பாய்ந்து மூச்சிரைக்க ஆரம்பித்தான். Preston...Preston... என்று அராத்திக் கொண்டு எதிர்த்திசையை நோக்கி அவன் கைகள் உயர , Taxi ஓட்டுனர் அவனை விநோதமாகப் பார்த்தவாறே வாகனத்தை முடுக்கினார் மீட்டர் ஓடிக்கொண்டிருந்தது.
அடிவாங்கிய வலி, ஓடிய களைப்பு, தோல்விகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்நியன் ஒருவனின் வாகனத்தில் இருக்கிறோமே என்ற எல்லையைக் கடந்து முகத்தைப் பொத்தியவாறே அழ ஆரம்பிக்கிறான். அதுவரை மெல்லப்பயணித்த Taxi ஒரு இடத்தில் போய் நிற்கின்றது. முகத்தை விரித்துப் பார்க்கின்றான் ஓட்டுனரை நோக்கி. முகமெல்லாம் வெளிறிய தோற்றத்தில் இருந்த அந்தச் சாரதி பேச்சுக்கொடுக்கிறார்.
"சொல்லு உனக்கு என்ன பிரச்சனை?"
ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே போகிறான்.
"பேசி முடித்துவிட்டாயா?"
"ம்"
சட்டையின் பொத்தான்களைக் கழற்றி விட்டுத் தன் முன்பக்க உடம்பைக் காட்டுகிறார் அந்த Taxi ஓட்டுனர்.
உடம்பெல்லாம் வெட்டப்பட்ட தழும்புகள்.
"என் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு வெட்டுத் தழும்புகளும் எனக்கு உள்ளே இருக்கு இருக்கும் வியாதியைச் சொல்லும், நானும் உன்னைப் போலவே நாடு விட்டு நாடு ஓடி வந்தவன். லெபனாலில் இருந்து நான் இந்த நாட்டுக்கு வரும்போது எனக்குப் பத்தொன்பது வயசு, இப்போது நாற்பத்தைந்து. இடைப்பட்ட காலத்தில் நான் உழைத்துச் சேமித்துக் கட்டிய வீடு எல்லாமே இப்போது என்னிடம் இல்லை. காதலித்துக் கட்டியவள் கூட என்னுடைய நோய் முற்றும் நேரம் பார்த்து விவாகரத்து வாங்கிக் கொண்டு போய்விட்டாள்.இனித்தான் நான் என் வாழ்க்கையை முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும், அதனால் தான் இரவுபகலாக Taxi ஓட்டுகிறேன், இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து வந்த உனக்கு பிழைக்க ஆயிரம் வழிகளா இல்லை? சோதனைகள் வரும் போது சோர்ந்து போகாதே, கவலையும், பாரமும் உனக்கு மட்டும் சொந்தமல்ல, புரிகிறதா?"
மந்திரத்தால் கட்டுப்பட்டவன் போலத் தலையை ஆட்டுகிறான். Taxi அவன் காட்டும் திசையில் பயணிக்கிறது.
நாளைக்கு வேலை தேடவேணும், அகதி அந்தஸ்துக்கு மேல்முறையீடு செய்ய லோயரைச் சந்திக்க வேணும்.
"யாவும் கற்பனையல்ல"
11 comments:
தன்னம்பிக்கை தரும் நல்ல அனுபவ பகிர்வு
அருமை தல !
கருத்துக்கு நன்றி ஜோசபின்
// கவலையும், பாரமும் உனக்கு மட்டும் சொந்தமல்ல, புரிகிறதா?"// கண்களில் கண்ணீர வரவழைத்து விட்டது. துன்பம் அனுபவித்தவர்களுக்குத் தான் துன்பப்படுபவர்களின் நிலைமை புரியும். நமக்கு வரும் ஒவ்வொரு தடையையும் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும். சொல்வது எளிது.
நல்ல பதிவு. வாழ்த்துகள்!
amas32
வலிகள் என்பது உடல் ரீதியாக எப்போதுமே இருப்பதல்ல..!
வலி அதிகமானால் உடல் தன்னிலை விடுத்து மயக்க நிலை அடைந்து விடும்.
ஆனால்.., பாளம்.., பாளமாக பொறுப்புகளை சுமந்துகொண்டு தள்ளாடும் போது உண்டாகும் இடைஞ்சல்கள் மிகுந்த மனவலியை கொடுக்கும்.
அதை லாவகமாக கடந்தால் அதுவே மனவலிமையை தரும்.
குடும்ப ரீதியான மனவலிகளை கனகச்சிதமான இடத்தில் பொருத்தியுள்ளீர்கள்.
அருமையான சொல்லாடல்கள்.
"யாவும் கற்பனையல்ல" என சொல்லி சிறுகதைக்கான இலக்கணத்தை குழிதோண்டி புதைத்தது ஏன்...?
நிஜமா... கதையா... என வாசகனின் முடிவுக்கே விடுவது நல்லது இல்லையா..!?
தல கோபி
வருகைக்கு நன்றி
amas
மிக்க நன்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு
ஆனந்தராஜ்
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி யாவும் கற்பனையல்ல என்று குறிப்பிடக்காரணம் புலம்பெயர் சூழலில் இந்தப் பிரச்சனைகளைச் சந்திக்காதோர் இல்லை எனலாம்
Very good one Kana after long time.Could you please share your e-mail id?
மிக்க நன்றி தெய்வா
என் மின்னஞ்சல் kanapraba@gmail.com
யாவும் கற்பனையல்ல - வலிக்கிறது
amas32
Post a Comment