ஒருமுறை வரலாற்றாசிரியர் ஒருவரை வானொலிப் பேட்டி காணும் போது அவர் முக்கியமானதொரு கருத்தை முன்வைத்தார். காலத்துக்குக் காலம் இலங்கையில் தமிழ் ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு வேற்று மொழி ஆட்சியாளர்கள் நில ஆக்கிரமிப்பைச் செய்யும் போது, முக்கியமாக அவர்கள் கைவத்து அழித்தது தமிழர் வரலாறு கூறும் முக்கியமான வரலாற்று மூலாதாரங்களைத் தான். இதன் மூலம் இலங்கையில் தமிழரின் தொன்மையான வரலாற்று இருப்பை அழிப்பதே முதன்மை நோக்காக இருந்தது.
ஈழ வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை அந்தக் கையறு நிலையை நம் இனம் சந்தித்துவருகின்றது. கண்ணுக்கு முன்னால் இருந்த பல ஆதாரச் சின்னங்கள் தொலைந்து இருந்த சுவடு இல்லாமல் போயிருக்கின்றன. இதற்கு மிகப்பெரிய சாட்சி தென்னாசியாவின் சிறந்த நூலகங்களில் ஒன்றாகவும், ஈழவரலாற்றின் எஞ்சிய ஆவணங்களையும், ஏடுகளையும் தன்னுள்ளே புதைத்து வைத்திருந்த யாழ் பொது நூலகம் தீயினால் காவு வாங்கப்பட்ட வரலாறு.
இது இவ்வாறிருக்க, தீமையிலும் ஒரு நன்மை என்பது போல இலங்கையைத் தம் காலணித்துவ ஆட்சியில் வைத்திருந்த போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில், நாட்டின் மூல வளங்களை மட்டுமல்லாது அன்றைய காலகட்டத்தில் அகப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். நூற்றாண்டுகளாக ஒல்லாந்து, கோவா உட்பட்ட நூலகங்களில் இந்த வரலாற்று மூலாதாரங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றைத் தேடியெடுத்து அவற்றின் சாராம்சத்தைக் வெளிக்கொண்டு வருமளவுக்கு நம் ஈழத்தமிழ் புலமைசாலிகள் தாயகச் சூழ்நிலை, பொருளாதார நிலை காரணமாக இயங்காதிருந்தனர்.
இந்த நிலையில் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களின் இலங்கை வரலாற்றில் தமிழர் குறித்த வரலாற்றின் மீதான தேடல் ஆரம்பிக்கின்றது. கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் ஏற்கனவே
Sri Lankan Tamil Nationanalism (1999), இலங்கை தமிழ் தேசிய வாதம் அதன் ஆரம்பத் தோற்றம் பற்றியதோர் ஆய்வு (2003) ஆகிய வரலாற்று நூல்களை எழுதியவர். இவற்றைக் கடந்து, இலங்கையில் தமிழர் குறித்த மூல வரலாற்று ஆவணங்களைத் தேடமுற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும் உதவும் முகமாக Primary Sources For History of the Sri Lankan Tamils என்ற நூலை 2005 ஆம் ஆண்டில் அவர் வெளிக்கொணர்ந்தார். இந்த நூல் இலங்கை வரலாற்றைப் பேசும் ஆவணமாக அன்றி, வரலாற்று மூலாதாரங்களின் திரட்டாகவும் அவை எங்கெங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. பல மாதங்கள், சில ஆண்டுகள் உழைப்பில், பல மேற்குலக நாடுகளின் நூலகங்களைத் தேடி அலைந்து திரட்டி உருவாக்கிய வந்த இந்த நூலை ஆக்கும் பணியில் சந்தித்த அனுபவங்களை கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் ஆறு வருடங்கள் முன்னர், என் வானொலி நிகழ்ச்சியில் பகிர்ந்த அனுபவம் ஒலிவடிவில்
தரவிறக்கிக் கேட்க
நேரடியாகக் கேட்க
இதன் பின்னர் "இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)" என்ற நூலை
கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் 2008 ஆம் ஆண்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டிருந்தார். தன்னுடைய பல்லாண்டு ஆய்வுப்பணியில் கிடைத்த மூலாதாரங்களின் உதவியோடு எழுதப்பட்ட இந்த முழுமையான வரலாற்று நூலைத் தொடர்ந்து, இந்த "இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)" என்ற ஒலி ஆவணப்படுத்தலாக இப்போது தென் ஆசியவியல் மையம் - சிட்னி மூலமாகக் கொண்டு வந்திருக்கின்றார். என் அறிவுக்கு எட்டியவரை ஈழத் தமிழர் வரலாற்றின் ஆதி முதல் சமீப வருடங்கள் வரையான வரலாற்றுப் பதிவை ஒலி ஆவணமாக யாரும் முன்னர் கொண்டு வரவில்லை என்றே நினைக்கின்றேன். அங்கொன்றும் இங்கொன்றுமான பதிவுகள் வானொலி ஊடக வழியாகவும், ஒரு சில இறுவட்டுக்களாகவும் வந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த ஒலி ஆவணம் என்பது முக்கியமானதொரு காலத்தின் தேவையாக அமைகின்றது.
"இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)" என்ற இந்த ஒலி ஆவணம் MP3 வடிவில் தனித்தனிப்பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரே இறுவட்டில் கிடைக்கின்றது. இந்த ஒலிப்புத்தகத்துக்குக் குரல் வடிவம் கொடுத்திருப்பவர் மூத்த வானொலியாளர் திரு. அப்துல் ஜபார் அவர்கள். ஒரு வரலாற்று ஆவணத்தை நிதானமான ஒலி நடையில் அழுத்தம் திருத்தமான உச்சரிப்போடும், மூலக் கருத்துக்களைச் சிதைக்காது கொண்டுவருவதில் திரு அப்துல் ஜபாரின் பங்கு வெகு சிறப்பாக அமைந்திருக்கின்றது. உண்மையில் அப்துல் ஜபார் அவர்கள் இலங்கைத் தமிழரின் தேசிய பிரச்சனை குறித்த ஆழந்த கரிசனையும், வரலாற்று உண்மைகளையும் அறிந்தவர் என்பதோடு இந்த நூலின் சாரத்தை முழுமையாக உணர்ந்திருப்பதும் இந்த ஒலி ஆவணத்தின் முக்கியமான நற்பேறாக அமைந்துள்ளது. இப்படியான வரலாற்று நூலைக் ஒலிக்குக் கொண்டுவரும் போதும் போது தகுந்த ஆளுமையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பில் திரு அப்துல் ஜாபார் அவர்களைத் தேர்ந்தெடுத்திருப்பது வெகு சிறப்பு.
மொத்தம் 15 மணி நேரங்களுக்கு மேல் ஒலித்திரட்டாக அமையும் இந்த வரலாற்று ஆவணத்தின் முக்கிய பகுதிகள்
தமிழர் தோற்றமும், ஆரம்ப வரலாறும் (கி.மு 900 - கி.பி 900)
இருண்ட வரலாற்றுக் காலம் (கி.பி 900 - கி.பி 1200)
சோழர் ஆக்கிரமிப்பும், அதன் விளைவுகளும் (கி.பி 1200 - கி.பி 1500)
போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்பும், தமிழ்ப்பிரதேசங்களைச் சுரண்டியமையும் (கி.பி 1505 - கி.பி 1658)
டச்சுக்காரின் ஆக்கிரமிப்பும், தமிழ்ப்பிரதேசங்களைச் சுரண்டியமையும் (கி.பி 1658 - கி.பி 1796)
பிரித்தானியரின் ஆரம்ப ஆட்சியும், தமிழரும் (கி.பி 1796 - கி.பி 1850)
தமிழர்களின் விழிப்புணர்வும், எழுச்சியும்: சமயம், கலாச்சாரம், மொழி, சமூகம், பொருளாதாரம் (கி.பி 1850 - கி.பி 1900)
பிரித்தானியரின் அதிகாரமும், தமிழரின் ஆட்சி உரிமை நிராகரிப்பும் (கி.பி 1833 - கி.பி 1948)
சுதந்திரத்தின் பின் இலங்கை அரசின் நடவடிக்கைகளும், தமிழ் தேசியவாதத்தின் எழுச்சியும் (கி.பி 1948 - கி.பி 1983)
இவற்றோடு அறிமுகவரை, முடிவுரைப் பகுதிகளிலும் இந்த நூலின் ஆக்கத்தில் சந்தித்த அனுபவப் பகிர்வாக அமைகின்றது.
"இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)" என்ற இந்த ஒலிப்புத்தகம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் சென்று சேர்வதன் மூலம் முழுமையான வரலாற்றுப் புரிதலுக்கு வழி சமைக்கும். அந்த வகையில் இந்த ஒலிப்புத்தகம் காலத்தின் தேவை எனலாம்.
14 comments:
இக்குறுவட்டை எங்கே பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை தயவு செய்து அறியத்தாருங்கள்... (இலங்கையில் அல்லது இந்தியாவில்)
தீபன்
மேலதிக விபரங்களை விரைவில் பெற்றுத் தருகின்றேன்
பயனுள்ள பேட்டி. நன்று.
நேரம் இல்லை என்பதால் தரவிறக்கி கேட்கலாம் என்று தரவிரக்கம் செய்தால்..ஹூ...ஹூம் தரவிரக்கம் ஆகவே இல்லை...அருமையான வரலாற்றைக் கேட்கமுடியவில்லை..வருத்தமாக இருக்கிறது....
வருகைக்கு நன்றி அன்பின் அப்பாத்துரை
தியாகராஜன்
right click and "save target" மூலம் கணினிக்கு இறக்கலாம்
வணக்கம் நண்பா,
திரு.முருகர் குணசிங்கம் அவர்கள் எழுதிய “இலங்கை தமிழர் வரலாறு” என்ற படைப்பு pdf வடிவில் கிடைக்குமா? அதன் சுட்டி இருந்தால் தற முடியுமா?
நன்றி
வணக்கம்
உ.கண்ணன்
துபாய்
வணக்கம் அன்பின் கண்ணன்
நான் அறிந்தவரை இது pdf இல் கிடைக்காது
மிக்க நன்றி தங்களின் உடனடி பதிலுக்கு.
புத்தமாக சென்னையில் கிடைக்க வாய்ய்புள்ளது தானே?
வணக்கம் கண்ணன்
சென்னையில் உள்ள காந்தளம் பதிப்பகத்தில் இந்த நூலைப் பெறலாம்
நன்றி நன்றி.
வணக்கம்
அருமையான பதிவும் பேட்டியும். இன்றும் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அருமையான மனிதரும் கூட. இன்று தான் இந்தப் புத்தகம் என் கையில் கிடைத்தது. :-)
அருமையான முயற்சி. பாராட்டுகள்
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
உங்கள் இறுவெட்டை டவுன்லோட் செய்ய ஒரு வழி கூறுங்கள்
R.Vijayalingam
Very Good research about Tamil history in Sri Lanka. Congratulations to author. I like to read
or listen to the history. How can I get it? Is there any website to down load?
Post a Comment