கடந்த வருஷம் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் சென்றபோதே எனது நண்பர்கள் அடுத்தமுறையாவது ஊர்க்கோயிற் திருவிழாவுக்கு நிக்குமாற்போல வந்துவிடு என்று அன்புக்கட்டளை இட்டிருந்தார்கள். ஊர்க்கோயில் என்பது எனது வலைத்தளத்தைத் தாங்கும் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற பரராசசேகரப்பிள்ளையார் கோவில் தான் அது. ஊரில் இருக்கும் பெற்றோரையும் கூடச் சந்திக்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொண்டேன். வழக்கமாக ஒரு 10 நாட்களுக்குள் என் பயணத்தை முடித்துக் கொள்பவன் முதன்முறையாக 3 வாரங்கள் விடுப்பெடுத்துக் கொண்டு எங்களூர்ப்பிள்ளையார் கோயில் திருவிழாக்காண ஏற்பாடுகளைச் செய்கின்றேன். அப்போதுதான் வழக்கத்துக்கு மாறாகப் புதிய ஒரு நடைமுறையைப் பின்பற்றவேண்டி வந்தது.
அது யாழ்ப்பாணத்துக்குப் போகும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் M.O.D clearance எனப்படும் இராணுவ அனுமதியைப் பெற்றுக் கொண்டு செல்லவேண்டும் என்பது. வெளிநாட்டுக்குப் போனகாலத்தில் இருந்தே என் சுயத்தை இழக்கவேண்டிய அவஸ்தையோடு காலத்தை நகர்த்திவரும் எனக்கு , நான் பிறந்த மண் எனக்கு இனி அந்நியதேசம் என்று முகத்தில் அடிப்பது போல இருந்தது இந்த விஷயம். யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வருஷங்களுக்கு முன் கொழும்புக்கு நகர்ந்த போதும் இப்படியான ஒரு சூழ்நிலை இருந்தது. அப்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக யாழ்ப்பாணம் இருந்தபோது வயசுக்கட்டுப்பாட்டுக்காரன் என்ற எல்லைக்குள் இருந்ததால் புலிகளின் அனுமதியைப் பெற ஒருவரைப் பிணையாக வைத்து ஊர் கடக்க வேண்டி இருந்தது.
நீண்ட வருஷப் பயணங்களுக்குப் பின்னர் இப்போது இந்த ரூபத்தில். கன்பராவில் இயங்கும் சிறீலங்கா தூதுவராலயத்தின் இணைப்பக்கம் சென்று இராணுவ அனுமதிப்பத்திரத்தைத் தரவிறக்கி அதை நிரப்பி, என் பாஸ்போர்ட் பிரதியோடு ஸ்கான் பண்ணி மீண்டும் இராணுவ அனுமதிக்கான மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுகிறேன். இரண்டு நாளில் அனுமதியை பஃக்ஸ் மூலம் அனுப்புகிறார்கள். இருந்தாலும் ஓமந்தைச் சாவடியில் வைத்து இது மூலப்பிரதி அல்ல என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்ற ஐயத்தில் காலிமுகத்திடலில் உள்ள இராணுவ அமைச்சகத்துக்குச் சென்று மூலப்பிரதியைக் கேட்டு வாங்கி வந்தேன்.
என் பாஸ்போர்ட்டோடு ஒட்டிக்கொண்ட காதலியாகக் கூடவே பயணித்தது இந்த இராணுவ அனுமதிப் பத்திரம். போர்ச்சூழல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்படியான நெருக்கடிகளோ நடைமுறைகளோ வரும்போது நம்மவர்கள் சளைக்காது சைக்கிள் கேப்பில் கிடாய் வெட்டுவார்கள். இந்த நடைமுறையையும் ஒரு கூட்டம் வகையாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு முழு நேரத் தொழிலாகச் செய்கிறது என்ற உண்மையைப் பின்னர் அறிந்து கொண்டேன். அது என்னவென்றால் யாழ்ப்பாணத்துக்குப் புறப்படப்போகும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் தமது விபரத்தையும் பாஸ்போர்ட் பிரதியையும் இந்தத் திடீர் வியாபாரிகளிடம் கொடுத்தால் அவர்களே முகவர்களாகச் செயற்பட்டு இராணுவ அனுமதியைப் பெற்றுக் கொடுப்பார்களாம். இதொன்றும் சும்மா பிரைவேட் லிமிட்டெட் இன் சேவை அல்ல, எனக்குத் தெரிந்த உறவினர் இந்தமாதிரி முகவர் ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்து நான்கு பேருக்கான அனுமதியைப் பெற முடிந்ததாம். இது ஆரம்ப கட்டம் என்பதால் விலை குறைவு, காலைப்போக்கில் முகவர்கள் விலைவாசி ஏற்றங்களுக்கு ஏற்ப இந்தக் கட்டணத்தை அதிகரிக்கலாம் ;)
இந்த நேரத்தில் ஒரு விஷயம், இந்த M.O.D clearance ஐ யாழ்ப்பாணம் போவதற்கு மட்டுமே என்று நினைத்துக் கிழித்துப் போட்டுவிடாதீர்கள். கொழும்பு திரும்பும் போதும் இந்த அனுமதியைக் காட்டித் தான் உள் நுழைய முடியும்.
சரி, அடுத்தது என்ன? யாழ்ப்பாணப்பயணத்துக்கான தகுந்த தனியார் பஸ்ஸைத் தேடவேண்டும். இரவு 7.30 இற்குக் கொழும்பில் இருந்து புறப்படும் பஸ் காலை 6.30 மணிக்குத் தான் யாழ் மண்ணை வந்தடையும். உங்கள் கஷ்டகாலத்துக்கு ஒரு லவுட்ஸ்பீக்கர் பஸ்காரனிடம் அகப்பட்டால் காலை யாழ்ப்பாணம் வந்ததும் காது கிழிந்து ஹலோ சொல்லும். அவ்வளவுக்குச் சத்தமாகப் படங்களைப் போட்டு உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள். குளிரூட்டப்பட்ட பஸ்கள் என்று சொல்வதால் இறைச்சியைப் பதனிடும் கடும் குளிர் அளவுக்கு உயர் குளிர் எல்லையில் வைத்துவிடுவார்கள். "ஏஸிக்குக் காசு குடுத்தனாங்கள் எல்லோ? கொஞ்சம் உண்டெனப் போடுமன்" என்று சனங்கள் கேட்குமோ என்னவோ. ஒவ்வொரு முறைப் பயணத்திலும் ஒரு குளிருக்கு உகந்த கம்பளி உடையோடு நான் பயணிப்பது வழக்கம். கடந்த வருஷத்தின் மோசமான அனுபவத்தில் இந்த முறை தகுந்த பஸ்ஸைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகச் செயற்பட்டேன். Avro என்ற பஸ் சேவை நான்கு புதிய சொகுசு பஸ்களை எடுத்திருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். எனவே அந்த பஸ்ஸிலேயே பயணிக்க முடிவு செய்து பதிவு செய்து கொண்டேன்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் சேவை அருமையாக இருந்தது, இரவு 10 மணிக்கெல்லாம் சமர்த்தாக டிவியை நிறுத்திவிட்டார்கள். ஏஸியும் அளவாகப் போட்டார்கள். ஆனால் யாழில் இருந்து திரும்பி வந்த பஸ்ஸில் இதற்குப் பரிகாரமாகப் பயங்கரமாகப் பழிவாங்கிவிட்டார்கள். இளைய தலைவலி விஜய் இன் உலகத்தரப்படங்கள் போக்கிரி, சுக்கிரன், சுறாவை அலறவைக்கும் சத்தத்தில் போட்டு மவனே இனி வருவியா என்று மிரட்டுமளவுக்குப் பண்ணிவிட்டார்கள். கொழும்பில் இருந்து யாழ்போன பயணம் இனிதாக அமைந்தாலும் பக்கத்தில் ஒரு சனீஸ்வரன் உட்கார்ந்து ஊரெல்லாம் ஃப்ரீ கோலில் அழைத்துச் சத்தமாகப் பேசிக்கொண்டு வந்தார்.
கிட்டத்தட்ட எட்டுப்பேரின் நித்திரையைக் கலைத்துக் கடலை போட்டிருப்பார் இந்த மனுஷர். கூடவே ஒரு அழைப்பில் "எடியே என்னைத் தெரியேல்லையே" என்று திரும்பத்திரும்பக் கேட்டுக் கொஞ்ச நேரத்துக்குப் பின் தான் "சொறி றோங் நம்பர் போல" என்று சொல்லிக் கொண்டு அடுத்த கடலைக்குத் தயாரானர் இந்த விக்கிரமாதித்தன்.
பஸ் பயணத்தில் ஓமந்தை இராணுவச்சாவடி கடந்து முறிகண்டிப்பிள்ளையார் கோயிலில் தரிக்கின்றது. கை, கால், முகம் அலம்பிப் பிள்ளையாரைச் சந்திக்கச் செல்கிறேன். செருப்பில்லாத வெறுங்காலோடு குருமணற் துகள்கள் கிசுகிசுக்கின்றன. கண்களை மூடிக்கொண்டு பிள்ளையாரை நேருக்கு நேர் சந்திக்கின்றேன். அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு
"யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்" அந்தச் சத்தம் வந்த திசையைப் பார்க்கின்றேன். பயணி ஒருத்தரின் செல்போனின் ரிங் டோன் தான் அது. ரொம்ப முக்கியம் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே பஸ்ஸில் ஏறுகிறேன். யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கிறது மனசு.
21 comments:
ஈழத்தமிழனின் இன்றைய நிலை சொந்த மண்ணுக்கு விசா எடுத்து.மீதி சுற்றல் பற்றிய பதிவும் வருமா?
நானும் உங்களுடன் பஸ்ஸில் பயணம் செய்வது போல ஓர் உணர்வு!
//யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்//
இப்போ மட்டும் என்ன வாழுதாம்?!
விடுமுறைப் பயணம் என்பதாலோ இல்லை வேறு டென்ஷன்களினாலோ என்னவோ...விறுவிறு நடை! ஆசுவாச மெல்லின்பம் மிஸ்ஸிங்! :)
//இளைய தலைவலி விஜய் இன் உலகத்தரப்படங்கள் போக்கிரி, சுக்கிரன், சுறாவை அலறவைக்கும் சத்தத்தில் போட்டு//
ஹா ஹா ஹா
இளைய தலைவலியாலத் தான் அம்மாவே ஆட்சிக்கு வந்தர்கள் எல்லோ? பகடி செய்யாதீயும்! பாவம்! :)
//யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கிறது மனசு//
எனக்கும் தான்!:)
கா.பி
ஒரு கேள்வி: முள்வேலி முகாம்கள் இன்னும் இருக்கின்றனவா? 95% மக்கள் திரும்பி விட்டனர் என்று செய்திகள் அடிப்பட்டனவே!
ஆஹா கலக்கல், அப்போ யாழ்ப்பாணம் இன்னொரு நாடாகிவிட்டதோ...
தங்கள் வீட்டு மாப்பிள்ளையின் மீது அதீத காதல் கொன்டவர்கள் யாழ் மக்கள் இல்லையென்றால் விஜய் படத்தையா பஸ்ஸில் அதுவும் இரவில் போடுவார்கள்.
சண்முகன்,
இன்னும் வரும்
பாலசேரன்,
மிக்க நன்றி
மாயவரத்தான்,
அதைத்தான் குறிப்பால் ரிங் டோன் ஆக்கினாரோ
கேஆர்எஸ்
அந்தப் பகுதிகளுக்குச் செல்ல அனுமதி இல்லை, அரச செய்திகளின் படி உங்கள் கூற்றுத்தான் சொல்லப்படுகின்றது.
தலைவலி தமிழ் நாட்டின் தலைவிதியை மாற்றியதோ என்னமோ ;)
-:)
தல இந்த பயணத்தை முழுசாக சொல்லிடுங்க ;))
\\குளிரூட்டப்பட்ட பஸ்கள் என்று சொல்வதால் இறைச்சியைப் பதனிடும் கடும் குளிர் அளவுக்கு உயர் குளிர் எல்லையில் வைத்துவிடுவார்கள். \\
இதுல உலகத்தில் உள்ள எல்லா தனியார் பஸ்களுக்கும் உள்ள கொடுமை போல..;))
அட நல்ல பதிவெல்லாம் கூட போடுறீங்க :)
ஆஹா மீண்டும் நீண்ட இடைவேளைக்கு பின் கலக்கல் பதிவு. எமது தாயகம் நோக்கிய விறுவிறுப்பும் கலகலப்பும் நகைச்சுவையும் கலந்த ஆருமையான பதிவு. இன்னும் அங்கே இராணுவ கெடுபிடிகளா? கடவுளே எப்போதுதான் இதற்கு விடிவு? தொடர் நல்லபடியே தொடர்ந்திட எனது வாழ்த்துக்கள் பிரபா.
ஃஃஃஃயாழ்ப்பாணத்துக்குப் புறப்படப்போகும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் தமது விபரத்தையும் பாஸ்போர்ட் பிரதியையும் இந்தத் திடீர் வியாபாரிகளிடம் கொடுத்தால் அவர்களே முகவர்களாகச் செயற்பட்டு இராணுவ அனுமதியைப் பெற்றுக் கொடுப்பார்களாம். ஃஃஃஃ
உண்மை தானண்ணா அடுத்த முறை முயற்சித்தால் நேரம் மிச்சமாகும்.. ஆனால் இப்பவே எடுத்து வச்சிரங்க காரணம் வந்து போகும் செலவுக்கு சமனாக இதற்கான காசு வந்திடலாம் ஹ..ஹ...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)
பிரயாணம் குறித்தே இவ்வளவு எழுதி விட்டீர். ஊர் அனுபவம் குறித்து படிக்க ஆவலாக இருக்கிறது.
வந்தி, வெற்றிக்கதிரவன்
வாங்கோ ;)
தலகோபி
அங்கையுமா ?
இளா
எனி உள்குத்து
மங்கை அக்கா
நன்றி
சுதா
நீங்களும் முகவர் போல?
நாகு
தொடர்வேன் ;)
நிலைமைகளை அறிய முடிந்தது. நன்றி.
next part eppo??!!
வருகைக்கு நன்றி சந்திரவதனா அக்கா,
தூயா,
போட்டாச்சு அடுத்தது ;)
உங்களின் பயண அனுபவம் அட்டகாசமாக எழுதியுள்ளீர்கள்..
விசா பிரச்சனை இன்று மட்டுமல்ல முன்னர் யாழில் இருப்பவர்கள் வெளியில் செல்லவும் இருந்தது (2009 வரை) என்ன செய்வது அவங்களே தனிநாடு என்று சொல்லாம சொல்லுறாங்க போல...
விஜய் படம்..- அண்ணே யாழ்ப்பாணம் விஜய்க்கான ஊர்..அதுதான் நள்ளிரவு கடந்தும் அவர் படத்தை போட்டாங்க..
ஜனகன்
யாழ்ப்பாணச்சனம் புதுசுபுதுசா விசா எல்லாம் காணும் :)
சுறாவில் யாழ்நகர் என்று வச்சதன் வினையாக இருக்கும்:)
//வெளிநாட்டுக்குப் போனகாலத்தில் இருந்தே என் சுயத்தை இழக்கவேண்டிய அவஸ்தையோடு காலத்தை நகர்த்திவரும் எனக்கு , நான் பிறந்த மண் எனக்கு இனி அந்நியதேசம் என்று முகத்தில் அடிப்பது போல இருந்தது இந்த விஷயம்.
:(
நல்லதொரு பயணப்பதிவு
Post a Comment