Monday, December 20, 2010
"முகத்தார்" என்ற எஸ்.ஜேசுரட்ணம் நினைவில்
இலங்கை வானொலி என்னும் ஆலமரம் தன் விழுதுகளாகப் பல கலைஞர்களை நிலைநிறுத்தியிருக்கின்றது. வானொலிக் கலைஞராக வருமுன்னேயே பலர் கலைத்துறையில் மேடை வெளிப்பாடுகளின் மூலம் தம்மை அறிமுகப்படுத்தியிருந்தாலும் இலங்கை வானொலி வழி அத்தகைய கலைஞர்களின் பரிமாணத்தை பரந்ததொரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருந்தது. அப்படியொரு கலைஞன் தான் "முகத்தார்" எஸ்.ஜேசுரட்ணம்.
எனது பால்யகாலத்து நினைவிடுக்குகளில் ஆங்காங்கே எச்சமாக இருக்கும் நினைவுகளில் "முகத்தார் வீடு" வானொலி நாடகம் மறக்கமுடியாதது. வானொலி என்ற ஊடகத்தை தொலைக்காட்சி தின்று தீர்க்காத காலமது. அந்தக் காலத்தில் வானொலியே சகலதுமாகிப் போன பொழுதுபோக்கு ஊடகம். எங்கள் வீட்டு சன்யோ ரேப் ரெக்கோடர் காலையிலே இலங்கை வானொலியின் சைவ நற்சிந்தனையோடு ஆரம்பமாகி, சென்னை வானொலியின் தென்கச்சி சுவாமிநாதன் கொடுக்கும் "இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சியோடு ஓயும். மீண்டும் மாலை இந்த வானொலிப் பெட்டி உயிர்ப்பிப்பது "முகத்தார் வீடு" நாடகத்தின் மூலமாகத் தான். அது ஓயும் நேரம் "இரவின் மடியில்".
"முகத்தார் வீடு" நாடகம் வெறுமனே நகைச்சுவைச் சித்திரமாக அல்லாது குறித்த நாடக அங்கத்தின் முடிவில் விவசாயிகளுக்கான பயன்பாட்டுத் தகவல்களோடு சேர்ந்ததொரு படைப்பு. அந்தக் காலகட்டத்தில் என் வயசுக்கு நாடகத்தின் பம்பல் தான் முன்னுக்கு நிக்கும். முகத்தார் என்ற ஒரு குடும்பத் தலைவர் பாத்திரத்தில் ஜேசுரட்ணம் அவர்களின் மிடுக்கான குரல், கூடவே சரவணை என்ற அப்பாவியும் துடுக்குத் தனமும் நிறைந்த பையனாக எஸ். எழில்வேந்தன் அவர்கள். இப்படியாக ஒன்றல்ல இரண்டல்ல பல நூறு அங்கங்களைக் கொண்ட வானொலி அங்கங்கள் அவை. எஸ்.ஜேசுரட்ணம் அவர்கள் பின்னர் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழத்தலைப்பட்டாலும் கூட அவர் கலைத்தாகம் ஓயவில்லை, இறுதி மூச்சு வரை. ஈழத்துக் கலையுலக சாகித்யர்களை, அவர்களை ஒலிப்பேட்டி மூலம் அவர்தம் வாழ்வியல் அனுபவங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற என் முனைப்பை நிறைவேற்ற முன் இன்னொருவராக ஜேசுரட்ணம் அவர்களின் இறுதி மூச்சு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. கடந்த நவம்பர் 27, 2010 ஆம் ஆண்டு முகத்தார் போய்விட்டார்.
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக "முகத்தார்" எஸ்.ஜேசுரட்ணம் அவர்களின் நினைவுப்பகிர்வை வழங்க, அவரோடு சரவணை என்ற பாத்திரத்தில் நடித்த திரு எஸ்.எழில்வேந்தன் அவர்களைத் தொடர்புகொண்ட போது அவர் வழங்கிய பகிர்வுகள் ஒலி வழியாகவும், எழுத்து வடிவிலும்.
முகத்தார் எஸ்.ஜேசுரட்ணம் அவர்களோடு "முகத்தார் வீடு" என்ற நாடகத்தில் இணைந்து பல ஆண்டுகள், குறிப்பாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அந்த நாடகம் தொடர்ச்சியாக ஒலிபரப்பானது. 268 அங்கங்கள் அந்த நாடகம் ஒலிபரப்பானது, 83 ஆம் ஆண்டு இனக்கலவர வேளை புதிய அங்கங்கள் ஒலிபரப்பாகாவிட்டாலும் பழைய அங்கங்களை மறு ஒலிபரப்புச் செய்திருந்தார்கள். அப்படிப் பார்க்கப்போனால் அவை இன்னும் அதிகமாக இருக்கும். அதில் ஒரு 225 அங்கங்காளாவது அவரோடு இணைந்து நான் நடித்திருப்பேன். அந்தவகையில் எங்கள் இருவருக்கும் பெரியதொரு நெருக்கம் இருந்தது.
ஆனால் அதற்கு முன்னதாகவே திரு ஜேசுரட்ணம் அவர்களை எனக்குத் தெரியும். நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குப் பணியாற்றச் சென்றது 83 ஆம் ஆண்டிலே. ஆனால் 76 ஆம் ஆண்டிலிருந்தே நான் ஒரு குரல் தேர்வுபெற்ற கலைஞனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு முறுக்கு மீசையுடன் ஒருவர் கம்பீரமாக நடந்து வருவார், நான் இவர் ஒரு பொலிஸ்காரராக இருக்கவேண்டும் என்று எண்ணியதுண்டு. பேச்சும் அப்படித்தான், ஒரு கம்பீரமான குரல் தொனியில் அவர் பேசுவார். அதன்பிறகு ஒருசில நாடகங்களிலும் சொற்சித்திரங்களிலும் அவரோடு இணைந்து பங்காற்றச் சென்றபோது தான், இவர் யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்தவர் மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்ட் என்று சொல்லப்படுகின்ற சந்தைப்படுத்தல் திணைக்களத்திலே அவர் கணக்குப் பிரிவிலே அதாவது auditing பகுதியிலே இருந்தார். மிகச்சிறந்த உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசக்கூடிய புலமை அவரிடம் இருந்தது.
சில்லையூர் செல்வராசன் அவர்கள் எழுதிய "தணியாத தாகம்" என்ற திரைப்படப்பிரதியை மக்கள் வங்கி அனுசரணையுடன் ஒரு தொடர் நாடகமாக ஒலிபரப்பியபோது அதில் பணியாற்றிய வகையில் ஜேசுரட்ணம் அவர்களோடு எனக்கு நெருக்கம் அதிகமானது. அந்த நாடகத்திலே நான் ராஜன் என்ற ஒரு பாத்திரத்திலும் அவர் ஒரு மலேசியன் பென்ஷனியராகவும் நடித்தார். யாழ்ப்பாண மேற்தட்டு வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அவர் அதில் நடித்தார்.
வானொலி நாடகங்களில் நடித்தது மட்டுமன்றி வானொலி நாடக எழுத்துப் பிரதிகளிலும் அவர் சிறப்பாகப் பணியாற்றினார் என்று சொல்வேன். குறிப்பாக நகைச்சுவை நாடகங்களை எழுதுவதில் அவருக்கு நிகர் அவர் தான். அந்தக் காலகட்டத்தில் கதம்பம் என்றதொரு நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் ஏழு அல்லது எட்டு நிமிடங்கள் கொண்ட சிறு சிறு நாடகங்கள் ஒலிபரப்பாகும். அந்தப் பகுதியில் ஜேசுரட்ணத்தின் ஒரு பிரதி நிச்சயமாக இருக்கும். அந்த கதம்பம் என்ற நிகழ்ச்சியை கே.எம்.வாசகர் தயாரித்தளித்திருந்தார். அந்த கதம்பம் நிகழ்ச்சியில் ஜேசுரட்ணத்தின் பங்களிப்பே பின்னர் இவர் முகத்தார் வீடு என்னும் முழு நீள நகைச்சுவை நாடக அங்கங்களை எழுத இவருக்குத் துணைபுரிந்திருக்க வேண்டும்.
வாடைக்காற்று திரைப்படத்திலே பொன்னுக்கிழவர் என்ற பாத்திரத்திலே நடித்திருந்தார். அந்த நடிப்புக்காக சிறந்த துணை நடிகர் என்ற ஜனாதிபதி விருதும் அவருக்குக் கிட்டியது.
ஜேசுரட்ணம் அவர்களது குணாதியசங்களிலே நகைச்சுவை தவிர்த்து, செய் நேர்த்தி என்னும் perfection அவரிடமிருந்தது. அந்த ஒரு விஷயத்தையும் தனது கற்பனையில் இருந்து எழுதாமல் அது எப்படியிருக்கும் என்பதைத் தேடிக்கண்டறிந்து எழுதுவார். ஒருமுறை வானொலிக்கலையகத்துக்கு வந்த போது சைனிஸ் ரெஸ்டாரெண்டின் மெனு கார்டை கொண்டு வந்திருந்தார். அப்போது நாங்கள் கேட்டோம் , "என்னத்துக்கு ஜேசு இதைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்" என்று. அப்போது அவர் சொன்னார் அடுத்த அங்கத்திலே நாடகத்தில் மகன் பாத்திரம் சொல்வழி கேட்காமல் குழப்படி பண்ணி பிறகு கப்பலில் பல இடங்களுக்கு அலைந்து திரிந்து கடைசியில் ஓரு இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுவான். பின்னர் அவன் சைனீஸ் ரெஸ்டோரண்ட் ஒன்றில் சாப்பிட்டு விட்டு என்ன சாப்பிட்டேன் என்று தந்தைக்குச் சொல்வதாகவும் பின்னர் தந்தையாகிய அவர் எமக்குச் சொல்வதாகவும் தான் நாடகத்தின் கதை. அந்த ரெஸ்டோரண்டின் உணவுப்பட்டியலை எல்லாம் வாங்கி வைத்து அவற்றைச் சரியாக உச்சரிப்புச் செய்யப் பயிற்சி எடுத்துக் கொண்டார். இப்படியாக ஜோதிடர், பரியாரி என்று ஒவ்வொரு அம்சங்களுக்கும் அவர் ஒரு செய் நேர்த்தியைக் கொண்டு வந்திருந்தார். நான், அவர், ஏ.எம்.சி.ஜெயஜோதி ஆகிய மூவரும் ஒவ்வொரு அங்கங்களிலும் வருவோம். இன்னொரு பாத்திரத்தில். இன்னொரு புதிய பத்திரம் ஒவ்வொரு நாளும் வந்து போகும், பரியாரியாக, கடைக்காரராக, விவசாயத் திணைக்கள அதிகாரியாக. பெரியத்தார் என்ற அவருக்கு கஷ்டங்கள் வரும்போது சரவணையாக நடித்த நான் நான் சிரிப்பேன், அதற்காக ஓவ்வொரு நாடகத்திலும் சரவணையாகிய என் பாத்திரத்துக்கு அவரின் அடி கிடைக்கும்.
விவசாயத் தகவல்களை வழங்குவதே இந்த நாடகத்தின் சாரம்சம், இந்த நாடகத்துக்கான நிதியை வழங்கியவர்கள் விவசாயத்திணைக்களத்தின் பண்ணை ஒலிபரப்புச் சேவையினர். அப்போது கரவெட்டியைச் சேர்ந்த திரு சிறீஸ்கந்தராஜா தான் பண்ணை ஒலிபரப்புச் சேவையின் பொறுப்பாளராக இருந்தார், அவரின் எண்ணம் தான் இந்த நாடகத்தின் கரு.
1993 ஆம் ஆண்டிலே பிரான்ஸ் நாட்டுக்குப் புலம்பெயர்ந்திருந்தார். ஏழு ஆண்டுகளுக்கு முன் நான் பாரிஸுக்கு சென்றிருந்தேன். அப்போது இங்கே ஒரு வானொலி நிலையம் இருக்கிறது, முகத்தார் வீடு நாடகத்தை அதற்காகச் செய்வோம் என்று அழைத்தார். அப்போது மணிமேகலை பிரசுரமாக 12 நாடகப்பிரதிகளைக் கொண்டதாக "முகத்தார் வீட்டுப்பொங்கல்" என்ற புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகவும் தந்திருந்தார்.
ஜேசுரட்ணம் அவர்களோடு இரண்டு மேடை நாடகங்களிலும் நடித்திருக்கின்றேன். முகத்தார் வீடு நாடகத்தின் பிரபலத்தின் மூலம் புதுக்குடியிருப்பிலே அப்போது விவசாயத்திணைக்கள ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய மைதானத்திலே நான், ஜேசுரட்ணம் மற்றும் அப்போது விவசாயத்திணைக்களப் பொறுப்பதிகாரியாக இருந்த டேவிட் ராஜேந்திரன், இலங்கையின் பிரபல தொலைக்காட்சி, வானொலிக் கலைஞர் ராஜேஸ்வரன் (ஈழத்துத் திரைப்படமான டாக்சி ட்ரைவர் படத்தில் கதாநாயகனாக நடித்தவர்) ஆகியோருடன் மேடை நாடகமாக நடித்தோம்.
அதைப்போன்று தணியாத தாகம் புகழ்பெற்ற வேளை, யாழ்ப்பாணத்திலே வீரசிங்கம் மண்டபம், சுன்னாகம் இராமநாதன் இசைக்கல்லூரி, தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரி ஆகிய மூன்று அரங்கங்களிலே அந்த நாடகத்தை நடிக்கச் சென்றிருந்தோம்.
முகத்தார் வீடு நாடகம் வெற்றியடைந்த பின்னர் கே.எம்.வாசகர் , கிறீன்லாண்ட்ஸ் ஹோட்டலில் ஒரு பெரிய தேனீர் விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். அபோது தமிழ்ச்சேவை பொறுப்பாளராக இருந்த கே.எஸ்.நடராஜா அவர்கள் விருதுகள் வழங்கிக் கெளரவித்தும் இருந்தார். அந்த நினைவுகள் எல்லாம் பசுமையாக இருக்கிறது.
எஸ்.ஜேசுரத்தினத்துக்கு தேசிய விருதைத் தேடிக்கொடுத்த வாடைக்காற்று திரைப்படத்தில் அவர் தோற்றம்
ஜேசுரட்ணம் அவர்கள் குறித்த வாழ்க்கைக் குறிப்புக்கள் (தமிழ் விக்கிப்பீடியா வழி)
டிசெம்பர் 26, 1931 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இளவாலையில் பிறந்த இவர் இளவாலை புனித ஹென்றீஸ் கல்லூரியில் பாடசாலையில் கல்வி கற்றார். இலங்கை சந்தைப்படுத்தல் திணைக்களத்தில் கணக்குப் பிரிவிலே பணியாற்றி 1984 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.
கொழும்பில் இவர் முப்பத்து மூன்று வருட காலம் பணியாற்றியுள்ளார். இக்கால கட்டங்களில்; இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களினால் ஐந்து தடவைகள் அகதியாக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றிருந்தார். இறுதியாக 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் போது ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய ஆலயத்தில் அகதியாக்கப்பட்டு, பின்பு 1985ம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகள் தமிழ் நாட்டில் திருச்சியிலும், சென்னையிலும் அகதி வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார். 1993 ஆம் ஆண்டில் பிரான்சிற்குப் புலம்பெயர்ந்து தான் இறக்கும் வரை தனது துணைவியார், ஐந்து பிள்ளைகளுடன் பிரான்சிலேயே வசித்து வந்தார்.
மேலதிக வாசிப்புக்கு
எஸ்.ஜேசுரட்ணம் குறித்து கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் நினைவுப்பகிர்வு வீரகேசரியில் வந்தது
நன்றி: ஒலிப்பகிர்வை வழங்கிய திரு எஸ்.எழில்வேந்தன்,
வீரகேசரி வழி திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்
புகைப்படம் நன்றி: தினகரன், வீரகேசரி வாரமலர்
8 comments:
முகத்தார் என்ற மாபெரும் வானொலிக் கலைஞனின் நினைவுகளுக்கு நன்றிகளையும், அவரின் இழப்பில் தவிக்கும் கலையுலகுடனான என் துயர் பகிர்வையும் இங்கு பதிவு செய்கிறேன்.
ஈழக் கலைஞர்கள் குறித்த உங்கள் ஆவணப் படுத்தல்களுக்கும் அதன் மீதான தீராத காதலுக்கும் நன்றிகள் பிரபா.
உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு கலைஞன்,இன்றும் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது, "முகத்தார் வீடு" வானொலி நாடகம் தொடங்குவதற்கு முன் வீட்டு வேலை எல்லா வற்றையும் வேகமாக முடித்துவிட்டு குடும்பத்தோடு வானொலிக்கு முன் கூடுவது, அந்த நேரங்களில் இருந்த அந்த பரபரப்பும் ஆர்வமும் வார்த்தையால் சொல்லமுடியாதவை.... பதிவுக்கு நன்றி பிரபா.
சிறிய அளவிலே இவர் பற்றி அறிந்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் அவர் பற்றிய விபரங்களைத்தந்து, ஆவணபடுத்திய உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
அய்ந்தாண்டு நிறைவுப்பதிவில் சொன்னது போல....ஈழக்கலைஞர்களை வெளிக்கொணரும் உங்கள் மகத்தான பணி தொடரட்டும்...!!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தயானந்தா அண்ணா
வணக்கம் யசோ
உங்கள் வீட்டுக் கதை தான் எம் வீட்டிலும், அந்த நினைவுகள் சொற்களுக்குள் அடக்க முடியாதவை.
s ஜேசுரட்ணம் ஐயா அவர்களையும் முகத்தார் வீடு நாடகத்தையும் தெரியாதவர்களே இல்லை. இதை அழகாக தொகுத்து எங்களுக்கு படைத்த உங்களுக்கு என் நன்றிகள். இந்த மாபெரும் கலைஞனை தமிழ் ஊடகங்கள் மறந்து போனதுதான் மிகப்பெரிய வேதனை. தமிழை வளர்ப்போம்!!! கலையை வளர்ப்போம்!!! என்று ஊடகங்களில் கோஷம் போட்டால் மாத்திரம் போதாது அதை செயலிலும் காட்டவேண்டும். இனியாவது தமிழ் ஊடகங்கள் கண் விழிக்குமா?
அன்புடன் மங்கை
வணக்கம் அன்பின் கதியால்
ஜேசுரட்ணம் அவர்கள் போன்ற கலைஞர்களை அவர் வாழுன் காலத்தில் ஆவணப்படுத்த வேண்டும் என்பதே என் பேரவா மிக்க நன்றிகள்
மங்கை அக்கா
உங்கள் கருத்துக்களோடு முழுதும் உடன்படுகின்றேன் மிக்க நன்றி
Post a Comment