எங்கள் ஊரில் துரை என்ற ஒரு பணக்காரர் வீட்டைக் கடந்து போகும் போதெல்லாம் சித்தி மகன் சொல்லுவார் "உந்த வீட்டில் தான் தெய்வம் தந்த வீடு" படம் எடுத்தவை என்று". வருஷங்கள் பல கழிந்த நிலையில் நான்கு வருஷங்களுக்கு முன் வானொலிப் பணியைச் செய்து கொண்டிருக்கும் வேளை, ஒரு வானொலி அன்பர் பாரிஸில் இருக்கும் ஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதனைப் பேட்டி எடுக்கலாமே என்று வேண்டுகோள் விடுத்ததோடு அவரின் தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுத்தந்தார். சிறுவயதில் எங்களூரில் படமாக்கப்பட்ட தெய்வம் தந்த வீடு படத்தின் நாயகன் ரகுநாதன் அவர்களை வானலையில் சந்தித்தேன். அதற்குப் பின் அவரை அவர் நடித்த குறும்பட முயற்சிகளில் மட்டுமே தரிசிக்கின்றேன், நேரடித் தொடர்பில்லை.
இரண்டு வருடங்களுக்குப் பின் சிட்னிக்கு வருகின்றார் ரகுநாதன். அவரை வானொலி நிலையத்துக்கு அழைத்து வருகின்றார் உள்ளூர்க் கலைஞர் கருணாகரன்.
"எப்படித் தம்பி பிரபா, சுகமா இருக்கிறீரோ" ஞாபகம் வைத்திருந்து கேட்கின்றார். கையோடு கொண்டு வந்திருந்த தன் கலையுலக வாழ்வின் சாட்சியாக அமைந்திருக்கும் புகைப்பட ஆல்பங்களை விரித்துக் காட்டுகின்றார். அவற்றில் இருந்து ஆசையோடு சில படங்களைப் பிரதி எடுக்கின்றேன்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நேருக்கு நேராக மீண்டும் தன் பழைய ஞாபகங்களை அசை போடுகின்றார். பாடுகின்றார்.
இந்த ஆண்டு எமது ரகுநாதன் ஐயாவுக்கு பவள விழா ஆண்டு. கடந்த மாதம் அவர் வாழும் பாரீஸ் மண்ணில் விழா எடுத்துக் கெளரவித்திருக்கின்றார்கள் எம் உறவுகள்.
மேடை நாடகக் கலைஞனாக, ஈழத்துத் தமிழ் சினிமாவின் படைப்பாளியாக, குறும்பட நடிகராக இன்றும் ஓயாது கலைப்பணி ஆற்றிவருகின்றார் எங்கள் ரகுநாதன் அவர்கள்.
இந்த நிலையில் அந்தக் கலைஞனைச் சிறப்பிக்கும் முகமாக ரகுநாதன் ஐயாவுடன் வானலையில் கடந்த நான்கு வருஷங்களுக்கு முன்னர் நான் கண்ட பேட்டி
வணக்கம் ரகுநாதன் ஐயா, உங்கள் நடிப்புலகப் பிரவேசத்தின் ஆரம்பம் பற்றிச் சொல்லுங்களேன்
1947 ஆம் ஆண்டு முதன்முதலில் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கல்விகற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அப்போது நடந்த இல்லப் போட்டிகளில் நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் நடிக்க வேண்டி வந்தது அது தான் என் ஆரம்பம்.
மானிப்பாய் இந்துக்கல்லூரியில் என் நண்பன் கனகரட்ணத்தின் வேண்டுகோளில் தான் நடிக்க ஆரம்பித்தேன். அதுகூட ஒரு சுவையான விடயம். அந்தக்காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் கலந்து படித்த காலமது. அப்பொழுது நாடகத்தில் வில்லனாக நடிப்பதற்கு யாருக்கும் பிடிக்காது காரணம் கூடப்படிக்கும் பெண்களுக்குப் பிடிக்காது என்று. நண்பன் கனகரட்ணமும் நானும் மலேசியாவில் பிறந்தவர்கள், தொடர்ந்த அந்த நட்பு மூலம் நான் புத்தகங்கள் வாங்கி வாசிப்பது வழக்கம். அந்த நட்பின் உரிமையில் அவன் விடுத்த அன்பு வேண்டுகோளுக்கமைய குறித்த நாடகத்தில் வில்லனாக நடித்தேன்.
அதைத்தொடர்ந்து ஈழத்தின் நாடகத்தந்தை கலையரசு சொர்ணலிங்கம் ஐயா அவர்களின் நெறியாள்கையில் நடிக்க ஆரம்பித்தேன். அவர் போட்ட பிச்சை தான் என் இந்தக் கலைப்பணி என்று சொல்லுவேன்.
கலையரசு சொர்ணலிங்கம் ஐயா மூலம் இந்த நாடகப்பயிற்சியை நீங்கள் பெற்றிருந்தீர்கள்?
யாழ் நாடக மன்றம் என்ற நாடகப்பள்ளி மூலம் அவர் தேரோட்டி மகன் என்னும் நாடகத்தை நெறிப்படுத்தி எங்களுக்குப் பயிற்சியளித்தார். பயிற்சி என்றால் இன்றைய காலம் போலல்லாது ஆறுமாதங்களாகத் தினசரி பயிற்சியளித்து நாடகம் முழு நிறைவு பெற்றதன் பின்னர் தான் மேடையேற அனுமதிப்பார். அவ்வளவு ஒழுங்கு, ஒழுக்கம், கட்டுப்பாடுகள் அமைந்த ஒரு மாபெரும் கலைஞர் அவர்.
அந்த நாற்பதுகள் காலகட்டம் ஒலிவாங்கிகள் எல்லாம் சரியாக இல்லாத காலங்கள், ஐயா எங்களுக்குப் பயிற்சியளிக்கும் போது ஹார்மோனியப்பெட்டியை வைத்துக் கொண்டு அஞ்சரைக்கட்டை சுருதியிலே வைத்துக் கொண்டு அதற்கு மேலாகப் பேச எங்களுக்குப் பயிற்சி எடுத்தார். அதாவது மைக் இல்லாமலேயே எங்களைப் பேசக்கூடிய தன்மையை அவர் ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் சொல்லுவார் சொற்களை உச்சரிப்பதல்ல, எழுத்துக்களை உச்சரிக்க வேண்டும் என்று. இப்பொழுது எனக்கு எழுபது வயதாகிவிட்டது. இருந்தாலும் அவர் கொடுத்த பயிற்சி இன்னமும் இருக்கிறது. முக்கியமாகச் சமஸ்கிருதச் சொற்கள் அந்தக்காலத்து நாடகங்களில் இருக்கும், அவற்றையெல்லாம் எம்மவர்கள் உச்சரிக்கக் கஷ்டப்படுவார்கள். அவற்றைக் கூட அவர் எழுத்தெழுத்தாகச் சொல்லிக் கொடுத்தார். உதாரணத்துக்கு தேரோட்டி மகன் நாடகத்தில் ஒரு வசனமொன்று
"சந்திர குல ஷத்திரியன் திருதராஷ்டிர சக்கரவர்த்தியின் மூத்த குமாரன் தக்க்ஷணாபுரத்துச் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு" என்றிருக்கும். இந்த வசன அமைப்பை இன்றைக்கும் என்னால் சொல்லக்கூடிய அளவுக்கு இருப்பதற்குரிய பெருமை அந்தப் பெருமகனாருக்கே போய்ச்சேரும்.
நாடகத்தைத் தவிர வேறு ஏதாவது கலை, இலக்கியப்படைப்புக்களில் உங்களுக்கு நாட்டம் இருந்ததா அப்போது?
நிறைய சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் என்று எழுதியிருக்கின்றேன் ஆனால் நாடகத்தில் தான் என் முழு நாட்டமும் இருந்திருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்த எஸ்.டி.அரசு, கொழும்பில் சுவைர் ஹமீட், லடீஸ் வீரமணி என்று அந்தக் காலத்தில் மிகச்சிறந்த நெறியாளர்கள் அத்தனை பேரின் நெறியாள்கையில் நான் நடித்திருக்கின்றேன். இப்பொழுது கூட இங்கே சுவிஸில் இருக்கும் அன்ரன் பொன்ராஜ், சுபாஷ் என்று பலருடைய நெறியாள்கையில் நடித்திருக்கின்றேன்.
பள்ளிக்கூட நாடகங்கள் பலவற்றுக்குப் பயிற்சி கொடுக்க சொர்ணலிங்கம் ஐயா என்னைத் தான் அனுப்புவார் என்பது எனக்குப் பெருமை. ஐயா எங்களுக்குச் சொல்லுவார்
"எங்கு நல்லதைக் காண்கிறாயோ அங்கே அதை மனம் திறந்து பாராட்டு" என்று அப்படிப் பாராட்டும் போது அதை நீ கற்றுக் கொண்டாய் என்று அர்த்தம். எங்கள் சமுதாயத்தின் பெரும் குறையே அதுதான், பெற்ற பிள்ளையைக் கூட மனம் திறந்து பாராட்ட மாட்டோம்.'
ஈழத்தின் திரைப்படப்பத்துறையில் உங்கள் பங்களிப்புக் குறித்துச் சொல்லுங்களேன்?
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு, கண்டி , மாத்தளை போன்ற இடங்களில் நாடகங்களை அரங்கேற்றியிருக்கின்றேன். நான் அரச பணியில் 24 வருடங்கள் கடமையாற்றியவன், விவசாயத்தில் நான் டிப்புளோமா செய்தவன். ஒரு நாள் ரயிலில் வந்து கொண்டிருக்கும் போது வேதநாயகம் என்னும் ஒரு சங்கீதக் கலைஞர் , பலாலி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் விரிவுரையாளர் அவர் என்னைக் கண்டு "நான் எடுக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்கிறீர்களா?" என்று கேட்டார்.
அப்படியாக கடமையின் எல்லை என்ற படம், இது வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஹம்லெட் என்ற நாடகத்தின் மொழி பெயர்ப்பு அது 1963 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட போது அதில் கதாநாயகனின் நண்பனாக நடித்தேன். அந்தப் படம் உரியமுறையில் சிறப்பாக எடுக்கப்பட்டது என்று சொல்லமுடியாது காரணம் அந்தப் படத்தின் நெறியாளர் புதியவர். ஆனால் படத்தில் நடித்த எனக்குப் பத்திரிகைகள் பாராட்டியிருந்தன. இலங்கையில் தயாரான ஒரே சரித்திரப்படம் அதுதான்.
கடமையின் எல்லையைத் தொடர்ந்து?
அந்தப் படத்தில் நடிக்கும் போது இந்தப் படத்தைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்ற மனக்கவலை இருந்தது. அந்த ஆதங்கத்தில் நானே ஒரு படத்தைச் செய்தால் என்னவென்று நினைத்து 1967 ஆம் ஆண்டு "நிர்மலா" என்ற படத்தை ஆரம்பித்து 1968 ஆம் ஆண்டு யூலை 15 ஆம் திகதி தயாரித்து வெளியிட்டேன். அந்தப் படத்தில் கதாநாயகியின் அண்ணனாக நடித்திருந்தேன். அந்தப்படம் இலங்கையின் சகல பத்திரிகைகளாலும் நம்பிக்கையூட்டும் படம் என்று பாராட்டப்பட்ட படம். அந்தப் படத்தை நெறிப்படுத்தியது அருமைநாயகம் என்னும் என் சகபாடி, மிகச்சிறந்த கலைஞன் அவன். அவர் இறந்து விட்டார். அவரும் கலையரசு ஐயாவுடைய மாணவன் தான்.
நிர்மலா படத்தில் வரும் "கண்மணி ஆடவா" என்ற பாடல் 10, 15 வருடங்களாக இலங்கை வானொலியில் ஒலிபரப்ப்பட்ட புகழ்பெற்ற பாடல் அது. பாடல்களுக்கான இசையை திருகோணமலை பத்மநாதன் என்பவர் தான் அமைத்திருந்தார்.
நிர்மலா படத்தில் வரும் "கண்மணி ஆடவா" பாடலைக் கேட்க
அந்தப் படத்தைத் தயாரிக்கும் போது இலங்கை முழுவதுமுள்ள கலைஞர்களை ஒன்று திரட்டிச் செய்தேன். கதாநாயகனாக நடித்தவர் மட்டக்களப்பு, இசையமைத்தவர் திருகோணமலை, ஒளிப்பதிவாளர் மன்னாரைச் சேர்ந்த கபூர், தயாரிப்பாளர் இயக்குனர் யாழ்ப்பாணம், கதாநாயகியாக நடித்தவர் கொழும்பு, தவிர மலையகத்தில் இருந்து விஸ்வநாதராஜா, சிலோன் சில்லையா என்று இரண்டு நடிகர்கள். இந்தப் படத்திற்குப் பாடல்கள் எழுதியவர்கள் இங்கையின் மிகச்சிறந்த கவிஞர்களாகக் கொள்ளப்படும் முருகையனும், சில்லையூர் செல்வராஜனும்.
அந்தப் படத்தைத் திரையிட முனையும் போது தென்னிந்தியப் படங்களோடு போட்டி போடவேண்டிய சிரமங்களுக்கும் உள்ளாகியிருப்பீர்கள் இல்லையா?
நிச்சயமாக. எங்கள் படம் திரையிட முன்னால் ஒரு பத்திரிகைக் காட்சி பாமன்கடை தியேட்டரில் பண்ணியிருந்தோம். அதற்கு நாம் எம் அரசியல் தலைவர்களை அழைத்திருந்தோம். அப்போது யூஎன்பி ஆட்சியில் இருந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, டட்லி சேனநாயக்கா, திருமதி பண்டாரநாயக்கா, கொம்யூனிஸ்ட் தலைவர்கள் வந்திருந்தார்கள். ஆனால் அழைப்பு விடுத்திருந்த எம் தமிழ் எம்பிக்கள் யாரும் வரவில்லை. ராஜதுரை கடிதம் அனுப்பியிருந்தார், எனக்கு நேரமில்லை என்று. நினைத்துப் பாருங்கள் எவ்வளவு மனவேதனையாக இருக்கும் என்று.
திருமதி பண்டாரநாயக்கா என்னைக் கூப்பிட்டுக் கேட்டார் "நாங்கள் ஒரு தமிழ்ப்படத்தைத்தானே பார்க்கப் போகிறோம்?" என்று.
"ஓம்" என்றேன்
"தமிழ் எம்பிமாரைக் கூப்பிடவில்லையா?" என்று கேட்டார்.
நான் அப்போது அவகாசம் இருந்ததால், கொள்ளுப்பிட்டி சென்று செல்வநாயகம் அவர்களை அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு வந்தேன். பின்னர் திருமதி பொன்னம்பலமும் வந்து சேர்ந்தார்.
எங்கள் தமிழ்த்திரைப்படக்கலையை யாருமே ஊக்குவிக்கவில்லை, அதுதான் உண்மை.
எல்லாப் பத்திரிகைகளும் நம்பிக்கையூட்டும் படம் என்று எழுதிவிட்டன. அப்போது திரைப்பட விநியோகஸ்தர்களாக இருந்த நம் தமிழர்கள் இந்தியாவில் இருந்து அரசகட்டளை, பணமா பாசமா, நான் என்று நான்கு பெரும் வெள்ளிவிழாப்படங்களை ஒரு நாள் அவகாசத்தில் இறக்குமதி செய்து திரையிட்டு எங்கள் படத்தை ஓடவிடாமல் செய்தார்கள். இருந்தாலும் ஓரளவுக்கு எம் படத்தை ஓடச்செய்தவர்கள் அப்போது யாழ்ப்பாணத்தில் டாக்சி ஓட்டிக்கொண்டிருந்த சாதாரண மனிதர்களும், பள்ளிக்கூட ஆசிரியர்களும் தான் காப்பாற்றினார்கள். பள்ளிக்கூட ஆசிரியர்கள், இது எங்களுடைய படம் என்று சொல்லி குழந்தைகளை அழைத்து வந்து தியேட்டர்களை நிரப்பினார்கள். ஆனாலும் வர்த்தக ரீதியில் இந்தப் படம் எனக்குத் தோல்வியே.
நிர்மலா படத்தைத் தொடர்ந்து உங்கள் முயற்சிகள்?
இந்தப் படத்தைத் தொடர்ந்து வி.பி.கணேசன் நடித்த புதிய காற்று திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தேன். பின்னர் இலங்கையில் தயாரான முதல் சினிமாஸ்கோப் தமிழ்த் திரைப்படம் "தெய்வம் தந்த வீடு" . நாதஸ்வரக்கலையை முக்கியமான கருப்பொருளாக வைத்து நாதஸ்வரக்கலைஞன் என்.கே.பத்மநாதன் இசையில் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தேன். அந்தப் படத்தை இந்திய வம்சாவளித் தமிழர் ஹட்டனில் உள்ள வி.கே.டி.பொன்னுச்சாமி என்பவர் தயாரித்திருந்தார். அந்தப் படம் தான் நான் கதாநாயகனாக நடித்த ஒரே படம். இலங்கையில் தயாரான ஒரேயொரு சினிமாஸ்கோப் படமும் இதுதான்.
தெய்வம் தந்த வீடு திரைப்படத்திற்கு விமர்சனங்கள் எப்படி அமைந்திருந்தன?
விமர்சனங்கள் பெரிதாக நல்ல விதத்தில் அமையவில்லை என்பேன். காரணம் தமிழ்ப்படங்கள் போடும் தியேட்டர்களில் சினிமாஸ்கோப் படத்தைக் காண்பிக்கும் அமைப்பில் திரை அமைப்பு இருக்கவில்லை.
படம் பாதி திரையில் பாதி சுவரில் விழும் அளவுக்கு மோசமான நிலை. இலங்கையில் சினிமாஸ்கோப் படத்தை எடுக்கக் கூடிய ஒரேயொரு லென்ஸ் தான் இருந்தது. நிஹால் சிங்க, இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆரம்பகாலத் தலைவராக இருந்தவர். அவருடைய அந்தக் கமரா மூலம் மிட் ஷொட் மூலம் மட்டுமே எடுக்க முடிந்தது. இசையை கண்ணன் அற்புதமாகப் பண்ணியிருந்தார். பாடல்களை காலம் சென்ற வீரமணி ஐயர் எழுதியிருந்தார். நாதஸ்வர மேதை என்.கே.பத்மநாதனின் நாதஸ்வர இசை என்று எங்கள் மண்ணின் கலைஞர்களைக் கெளரவிக்கும் முகமாகச் செய்திருந்தேன். நாட்டுக்கூத்துக் கலைஞர் பூந்தான் ஜோசப்புவின் நாட்டுக்கூத்தையும் அதில் சேர்த்திருந்தேன். முதலில் நிர்மலா படத்தில் பெருங்கலைஞன் வி.வி.வைரமுத்து அவர்களையும், நாடகத்தந்தை கலையரசு சொர்ணலிங்கம் ஐயா அவர்களையும் நடிக்க வைத்துப் பதிவாக்கினேன். ஆனால் சிலோன் ஸ்டூடியோவில் இருந்த இந்த எல்லாப்படங்களுமே 83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் எரிந்து சாம்பலாக்கப்பட்டு விட்டன. ஒரு நெகடிவ் கூட எஞ்சவில்லை.
திரைத்துறையில் வேறு அனுபவங்கள்?
நான் சிங்களத் திரைப்படங்களிலும் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கின்றேன். காமினி பொன்சேக்கா, ஜோ அபேவிக்ரமசிங்க போன்றோருடனும் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். உலக அரங்கில் புகழப்படும் இலங்கை நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசுடனும் பணியாற்றியிருக்கின்றேன்.
தற்போது நீங்கள் குறும்பட முயற்சிகளில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றீர்கள், இந்த அனுபவம் எப்படியிருக்கின்றது?
நான் 1991 ஆம் ஆண்டு பாரிஸ் வந்தடைந்தேன். 1994 ஆம் ஆண்டில் ஒரு படத்தில் நடித்திருந்தேன்.
இலங்கையில் வாழ்ந்திருந்த காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு, கிழக்கு, கொழும்பில் மாத்திரமே திரையிடமுடிந்தது. அதாவது வியாபாரச் சந்தை எமக்கு இருக்கவில்லை. அந்த வகையில் குறும்படங்கள் எமக்குப் பெரும் வரப்பிரசாதம். ஐரோப்பா, கனடாவில் பெருமளவு குறும்பட முயற்சிகள் வந்திருக்கின்றன. இவற்றின் மூலம் ஒரு நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் நாம் பெரிய படங்களைச் செய்யக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.
நான் முழுநேரமாக இந்த முயற்சிகளில் இருப்பதற்குரிய களம் இங்கே அமைந்திருக்கின்றது. அடிப்படையில் நான் விளையாட்டு வீரனாகவும், எந்தத் தீயபழக்கவழக்கங்களுக்கும் என்னை ஆட்படுத்தாத காரணத்தாலும் உடல் நலம் சீராக இருக்கின்றது. கலைத்துறையில் இரண்டு பணிகளைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றேன்.
ஒன்று, நான் இலங்கையில் 1947 ஆம் ஆண்டு முதல் நாட்டுக்கூத்து, இசை நாடகம், நவீன நாடகம் என்று வடிவங்களிலும் ஐந்து தலைமுறைக் கலைஞர்களுடனும் அதாவது 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த கலையரசு ஐயா, 20 ஆம் நூற்றாண்டின் சம காலத்துக் கலைஞர்கள், 21 ஆம் நூற்றாண்டின் இன்றைய இளையோர் என்று எல்லோருடனும் நடித்திருக்கின்றேன். என்னுடைய அனுபவத்தையும், நான் கண்ட கலைஞர்கள் குறித்த ஒரு நூலையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன்.
இரண்டாவதாக, எம் மண்ணின் கலைஞர்கள் உலகம் முழுதும் பரவலாகச் சிதறிக்கிடக்கும் கலைஞர்களை ஒன்று திரட்டி ஒரு படமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கின்றேன்.
பாரிசில் செப்டெம்பர் 25, 2010 இல் கலைஞர் ரகுநாதன் அவர்களின் பவளவிழாக் காணொளி
நன்றி:
சிட்னி வந்த போது புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட ரகுநாதன் அவர்கள்
பவளவிழா சிறப்புக் காணொளியைத் தயாரித்தளித்த ஈழசினிமா
கண்மணி ஆடவா (நிர்மலா) பாடலை தன் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட கனக.சிறீதரன் அவர்கள்
2 comments:
ரகுநாதன் ஐயா அவர்களின் கனவு விரைவில் நிறைவேற வாழ்த்துகிறேன். அவர் சொன்னது போலவே இளம் கலைஞ்சர்களை ஊக்குவிப்பதும் எங்கள் முக்கியமான கடமையாகிறது. அழகாக இந்த நிகழ்வை தொகுத்து தந்த உங்களுக்கும் மிக்க நன்றி பிரபா. அன்புடன் மங்கை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மங்கை அக்கா
Post a Comment