ஒரு சதுர்த்தி நாளில் எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலில் சுவாமி வீதி வலம் வரும் போது
அண்ணைக்கு ஒரு கொத்து றொட்டி போடு!
தாவடிச் சந்திக் கொத்துறொட்டிக் கடை
"உன்னை எவ்வளவு நேரம் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறன், செவிடு மாதிரி ஏனெண்டு கேளாமல் என்னடா பின்னுக்குச் செய்து கொண்டிருக்கிறாய்" தாவடிச் சந்தியில் இருந்து மானிப்பாய் றோட் பக்கம் போதும் திசையின் ஓரமாய் இருக்கும் கொத்துறொட்டிக் கடைக்குள் நான் நுழைந்ததும் அந்தக் கடைக்கார அம்மா தன் வேலையாளுக்குக் கொடுத்த வசவு தான் அது. ஊரில் முந்திய நாட்களில் வருஷம் 365 நாளில் 356 நாள் கோயில் திருவிழா விரதமிருக்கும் எங்கட வீட்டுக்காரருக்குத் தெரியாமால் கூட்டாளிமாரோட தஞ்சம் புகும் இடங்கள் தான் இந்தக் கொத்துறொட்டிக்கடைகள். கடைக்குள் நுழைந்து ஓடர் கொடுத்ததும் ஏதோ ட்ரம்ஸ் சிவமணி கணக்காய் கொத்து றொட்டி அடிக்கிற இரும்புத் தகட்டில் முட்டையை அடித்துப் போட்டு விட்டு, நறுக்கியிருந்த வெங்காயம் , பச்சை மிளகாய்க் குவியலை ஒரு கையால் எடுத்துத் துளாவி விட்டு , பரோட்டாவைக் கண்டம் துண்டமாய் வெட்டித்தள்ளும் கொத்துறொட்டி மாஸ்டரின் கோடாலியின் இரும்புத் துண்டு போல இருக்கும் ஆயுதம். சைட்டில் இருக்கும் மாட்டிறச்சிக் கறியும் அதில் சங்கமிக்க, மேலே கோழிக்குழம்பு தீர்த்தமாடும். பத்து நிமிஷத்தில் வெங்காயம், மிளகாய், பரோட்டா எல்லாம் திரண்ட கலவை திசூப் பேப்பரில் சுத்திய பிளாஸ்டிக் கோப்பையில் போடப்பட்டுப் பரிமாறப்படும்.
அந்தப் பழைய நினைப்பு மீண்டும் தலைதூக்க, தாவடிச் சந்திக் கடைக்குத் தனியே போய் உட்காருகிறேன். கொத்துறொட்டி வந்தது. பசியில்லை ஆனால் கொஞ்சமாவது சாப்பிட்டுப் பார்ப்போம் என்று ஒரு சில விள்ளல்களை வாயில் வைத்து விட்டுக் கை கழுவுகிறேன். அந்த நாளில் நண்பர்களோடு போய்ச் சாப்பிட்ட காலம் ஒரு தனிச்சுவை போல... அது சாப்பாட்டில் விளைந்ததா அல்லது நட்பில் சுவைத்ததா தெரியவில்லை.
மாடு கண்டு ஈண்டுட்டுது சிக் லீவ்
யாழ்ப்பாணத்து நண்பர்களை விட்டு விலகும் போது பள்ளிக்காலம், இப்போதோ அவர்களைக் காணும் போது உழைப்பாளிகள். ஒரு நண்பன் ஒரு சிற்றூரில் ஆசிரியராக இருக்கிறான். அவனோடு சேர்த்து ஒரு நாலு ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர் அவ்வளவு தான் அந்தப் பள்ளிக்கூடத்தின் கொள்மானம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தலைமை ஆசிரியருக்கு அடுத்து என் நண்பன் தான் சீனியராம் ;). ஒரு நாள் தலைமை ஆசிரியர் இவனைக் கூப்பிட்டு
"ஒருக்கால் வகுப்புகளைப் பார்த்துக் கொள்ளும் நான் கல்விக் கந்தோருக்குப் போட்டு வாறன்"
என்று விட்டுப் போய் விட்டார். தலைமை ஆசிரியர் போனபின் தான் இவனுக்கு உறைத்தது அன்று சொந்தக்காரர் கோயிலுக்குக் காவடி எடுக்கினம், போகவேண்டுமே என்று இவனும் கொஞ்ச நேரத்தில் சாப்பாட்டுக்குக் கிளம்பி விட்டான். காவடிச் சோறு பரமாறப்படப்போகுது. இவன் பந்தியில் உட்கார்கிறான். பக்கத்தில் யாரடா என்றால் சாட்சாத் தலைமை ஆசிரியரே தான்.
"உம்மை எல்லோ வகுப்பைப் பார்க்கச் சொன்னனான்" - தலைமை ஆசிரியர்
"சேர்! நீங்கள் இங்கை வருவீங்கள் எண்டா வந்திருக்க மாட்டன்" இது என் நண்பர்.
ஒரு அலுவலக நாளில் சொந்தக்காரர் வீடொன்றுக்குப் போனேன். அந்த வீட்டுக்காரரின் மகன் அன்றைக்கு வேலைக்குப் போகவில்லை, ஏனென்று ஆர்வக்கோளாறினேன் அதற்கு அவன்
"மாடு கண்டு ஈண்டுட்டுதண்ணை அதான் போகேல்லை"
கிழித்துப் படிக்கப்படும் புத்தகங்கள்
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தடியில் வழக்கம் போலப் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குப் போய் நூல்களை மேய்ந்தேன். சுவாமி(?) நித்தியானந்தாவின் அருள்மொழிகளைத் தாங்கிய குண்டு குண்டான புத்தகங்களைக் கண்டபோது நக்கீரன் சொன்னது ஞாபகம் வந்தது. அட நான் சொல்லவந்தது நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே.
ஆனந்த விகடன், குமுதம் போன்றவற்றில் இலங்கைப் பிரச்சனை குறித்து ஏதாவது கட்டுரையோ, கார்ட்டூனோ வந்தால் அவை கிழிக்கப்பட்டுத் தான் இங்கு விற்பனைக்கு விடப்படுகின்றன. இதே ரீதியில் நக்கீரன் போன்ற சஞ்சிகைகளைக் கிழித்தால் விளம்பரப்பக்கம் தான் மிஞ்சுமோ என்றோ நக்கீரன் போன்ற பத்திரிகைகளுக்குத் தடா. பஸ் நிலையத்தில் இருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலை சிறியது, வேறு பெரிய கடை உண்டா என்று கடையில் வேலை செய்த பெண்ணிடம் கேட்டேன். "வேம்படி றோட்டில் ஒண்டிருக்கு, போய்ப் பாருங்கோ"
அடுத்த நிமிடம் வேம்படி றோட் பூபாலசிங்கத்துக்கு லுமாலா பறந்தது.
அங்கே வேலையில் இருந்த பெண்ணை அழைத்து
"ஈழத்து எழுத்தாளர்கள் படைப்புக்கள் இருக்கா" - இது நான்
"புதுசா ரமணிச்சந்திரன், உமா பாலகுமாரின் புக்ஸ் இருக்கு, வேணுமா" - இது வேம்படி றோட் பூபாலசிங்கம், அங்கே இருந்த பெண்
என்னோடு யாழ்ப்ப்பாண உலாத்தலில் கூடவந்த லுமாலா சைக்கிள்
யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பும் நாள், நண்பர்கள் இணுவில் சந்தியால் வரும் கொழும்பு பஸ்ஸில் என்னை ஏற்ற நிற்கின்றார்கள். பேசாமல் எல்லாவற்றையும் உதறிவிட்டு இங்கேயே இருப்போமா மனம் மாறி மாறி என்னைக் கூறு போடுகிறது. கொலைக்குற்றவாளியின் இறுதி விருப்பங்களை நிறைவேற்றிவ விட்டு தூக்குமேடைக்கு அனுப்பும் நிலை அது.
விருப்பமில்லாத பிள்ளையைப் பாலர் வகுப்புக்குத் துரத்தி அனுப்புமாற் போல மனம் உள்ளே மெளனமாகக் குமுற அம்பாள் பஸ்லில் ஏறுகிறேன். மீண்டும்
"உன்னை நினைத்து" படத்தைப் போட்டுச் சாவடிக்கிறார்கள்.
என் தாய் நிலத்தில் நிரந்தரமாக உண்டு உறங்கும் நாளை எனக்கு ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டி விடைபெறுகின்றேன், என் இனிய யாழ்ப்பாணமே!
அனுராதபுரத்தில் இந்த முஸ்லீம் கடையில் தான் எல்லா பஸ்களும் கொழும்பு - யாழ் பயணத்தின் இடைவேளை
முறிகண்டிப் பிள்ளையார்
26 comments:
//"புதுசா ரமணிச்சந்திரன், உமா பாலகுமாரின் புக்ஸ் இருக்கு, வேணுமா" - இது வேம்படி றோட் பூபாலசிங்கம், அங்கே இருந்த பெண்//
அங்கே பூபாலசிங்கத்தைப் பார்தால் தெரியும், இவர்களின் புத்தகங்கள்தான் நிறைந்திருக்கும். ஏதோ ஒரு மூலையில் சுஜாதாவையும் பார்த்ததாக ஞாபகம். வின்டோஸ் 98 புத்தகம் ஒண்டும் முன்னுக்கு இருந்திருக்குமே? கவனிக்கலயா?
அது சாப்பாட்டில் விளைந்ததா அல்லது நட்பில் சுவைத்ததா தெரியவில்லை.//
நட்பிலாத்தான் இருக்கனும் கானா..
இனியபயணத்தை எங்களோடு பகிர்ந்ததற்கு
நன்றி..
உங்க குதிரை இதுதானா.. நானும் அது என்ன குதிரைவண்டின்னு
யோசிச்சிட்டிருந்தேன்..:)
எப்படியே கொஞ்ச நாட்கள் இருந்தாலும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கோவில் சினமா தியேட்டார்ன்னு எல்லா இடங்களுக்கும் எங்களையும் கூட கூட்டிக்கிட்டு போயிட்டிங்க தல ;)
முறிகண்டிப் பிள்ளையார் இப்ப பெரியாள் ஆகிட்டார் போல கிடக்கு :)
வணக்கம் சுபாங்கன்
கொழும்பில் கொச்சிக்கடைப்பக்கம் இருக்கும் பூபாலசிங்கத்தின் பிரமிப்பை யாழும் கொண்டு வரவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு, நீங்களும் அவதானிச்சிருக்கிறியள் ;)
பாஸ் சூப்பர் கொத்து றொட்டிக்கு இங்கே ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்போறமாக்கும் - இங்கட சிலோன் கடை 1 இருக்கு அங்கே போனா ஸ்பெஷல் கொத்து றொட்டித்தான் ஆனா என்ன 1 எவ்ளோ கொத்துனாலும் சவுண்ட் வெளியே வாரது:)
லுமாலா வண்டி - இதுவரைக்கும் நீங்க கொடுத்த பில்ட்-அப்ல நானும் கூட ஒரு நாலஞ்சு வண்டி யோசிச்சு வைச்சிருந்தேன் சின்ன சைக்கிளுக்கு இம்புட்டு பில்ட்-அப் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)
பசங்க தனியா கார் ஸெட்ல வந்து ஒதுங்கி நிக்கிறாய்ங்க அவுங்களை போட்டோ புடிச்சு இங்கே போட்டுட்டீங்களே மாஸ்டர் வந்து பாக்கப்போறாரு :))
அடுத்த டிரிப் எப்ப சொல்லுங்க நானும் வர்வேன் !
போட்டைப் வடிவாப் பாத்தா தெரியுது இங்க வாங்கிற ஆக்களவிட பாக்கிற ஆக்கள்தான் தினமும் வருகினம் எண்டு.
பேசாமல் எல்லாவற்றையும் உதறிவிட்டு இங்கேயே இருப்போமா மனம் மாறி மாறி என்னைக் கூறு போடுகிறது.
புரிந்து கொள்ள முடிகிறது ; நானும் எதோ ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறேன், கிழவனாகத் தன்னும் அங்கு போய் ஒரு கொட்டில் போட்டு 'settle " பண்ணலாம் என்று. கிழவனாகுவது மட்டும் விரைவாக நடக்கிறது :-(
//என் தாய் நிலத்தில் நிரந்தரமாக உண்டு உறங்கும் நாளை எனக்கு ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டி விடைபெறுகின்றேன், என் இனிய யாழ்ப்பாணமே//! இந்த வரிகளை வாசிக்கும் போது கண்கள் கலங்கின. நாங்களும் உங்களுடனே கூடப்பயணித்தோம். நல்லூர் கந்தன், தியட்டர், ஓடியோ கடை, வீடியோ கடை, மடத்து வாசல் பிள்ளையாரடி, புத்தக கடை எண்டு எல்லா இடமும் உங்கள் கூடவே வந்தோம். நன்றி. கடைசியில் உங்கள் நண்பன் லுமாலா வை அறிமுகம் செய்து வைத்தீர்கள் அருமை.
கொத்துறொட்டி வந்தது. பசியில்லை
நான் நினைக்கிறேன், அந்தப் பழைய சுவைக்குக் காரணம் அந்த வயசும், நண்பர்களின் குதூகலமும்தான். நாம் யாழை விட்டு நகரவில்லை என்றால் எங்கள் பிள்ளைகள் இதுமாதிரி கொத்து சாப்பிடும்போது, கண்டும் காணாதது மாதிரி உள்ளே ரசித்து இருக்கலாம். நாம் இழந்தது வீடு, வாசல், நாடு மட்டுமல்ல . இவை போன்ற அருமையான அனுபவங்களையும்தான். இந்த விஷயத்தில் நம் தந்தையர் கொடுத்துவைத்தவர்கள்.
நினைத்துப் பாருங்கள், நீங்கள் தற்செயலாக வேம்படியில் நிற்கும்போது , உங்கள் 17 நாயது மகன் 'ஸ்டைல்' ஆக நண்பர்களுடன் cycle இல் வருவதைப் பார்க்கிறீர்கள். வெளிக்கு முறைத்துக் கொண்டு, உள்ளுக்கு மலரும் நினைவுகளில் மூழ்குவீர்களல்லவா?
முறிகண்டிப் பிள்ளையார் போனிங்களா..? நல்ல கதைகள் அவரிடம் இருக்கிறது...!!!
சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html
கலை said...
முறிகண்டிப் பிள்ளையார் இப்ப பெரியாள் ஆகிட்டார் போல கிடக்கு :)//
அவர் எந்தக் காலத்திலும் முறி(யாத) பிள்ளையார் கண்டி(யளோ) ;)
ஆயில்ஸ்
வெளிநாட்டில் சவுண்ட் விட்டா போலீஸ் கப்புன்னு பிடிச்சு கொத்துரொட்டி ஆக்கிடுமே.
மூர்த்தி சிறுசு என்றாலும் கீர்த்தி பெருசு நம்ம லுமாலாவுக்கு
அடுத்த முறை வாரும் கூட்டிட்டுப் போறேன். கறுப்பியையும் சந்திச்ச மாதிரி இருக்கும்.
எல்லாரும் ஊருக்குப் போய் வந்து கதை கதையாச்சொல்லுகினம், வயித்தெரிச்சலாக் கிடக்கு!!
Anonymous said...
போட்டைப் வடிவாப் பாத்தா தெரியுது இங்க வாங்கிற ஆக்களவிட பாக்கிற ஆக்கள்தான் தினமும் வருகினம் எண்டு.//
;) சரியா சொன்னீங்கள்
சக்திவேல்
நாங்கள் இரண்டுபேரும் ஒரே அலைவரிசை
நண்பரே நான் ஈழத்தை வெறித்தனமாக நேசிக்கும் தமிழ்நாட்டு தமிழன் .உங்கள் பதிவுகள் மனதை நெருடுகின்றன .என் இனத்தை இப்படி ஒரு சூழ்நிலைக்கு கொண்டு வந்த நாட்டில் இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் .ஈழத்து படங்களை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது.
தயானந்தா சரியாய் சொன்னார். உண்மையிலேயே வயித்தெரிச்சலாக் கிடக்கு!! எல்லாரும் போய் போய் வரினமே!!! ஐயோ !!!ஐயோ!!! எங்களால இப்ப போக இயலாதே!!! ஏன் போகேலாது எண்டு எப்பிடி சொல்றது????
மங்கை அக்கா
கண்டிப்பாக நீங்கள் போய் வரவேண்டும், கடவுள் துணை நிற்பார்
ம.தி.சுதா
முறிகண்டிப் பிள்ளையாரைக் கடக்காமல் வரமுடியாதே, அந்தக் கதைகளைச் சொல்லலாமே? அசின் கதையை நான் சொல்வதை விட நீங்களே நிறையப் பேரிடம் சேர்த்திட்டீங்கள் போல இருக்கே
தயானந்தா அண்ணை
ஒரு எட்டு போட்டு வாறது ;)
Anonymous said...
நண்பரே நான் ஈழத்தை வெறித்தனமாக நேசிக்கும் தமிழ்நாட்டு தமிழன் //
வணக்கம் சகோதரா, தமிழால் நாம் உறவுகள் அரசியல் வியாதிகள் செய்யும் அநியாயங்களுக்கு எப்படி நீங்கள் பொறுப்பேறக முடியும்
எதை வேண்டுமென்றாலும் ஏற்றுக்க் கொள்ளும் மனது, கொத்து றொட்டிக்கு பாலாய் கொதிக்கிறதே. என்ன செய்ய :(
அண்ணே 1997க்கு பின்னர் நானும் யாழைப் பார்க்கவில்லை. இடையில் இரு தடவை போய்வந்தாலும் அந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்காது. இளைஞர் பருவம் (இப்பவும் யூத்து என்பது வேறை கதை) கழிந்தது அங்கே என்றபடியால் இன்னமும் பசுமையான நினைவுகள் நிற்கின்றன. கடைசிவரிகள் ட்ச்சிங்.
வாங்க முத்துலெட்சுமி
இந்த வண்டி குதிரை வண்டியை விடப்பெருசு ;)
தல கோபி
மிக்க நன்றி ;)
இளா
சரி அடுத்தமுறை ஆயில்ஸோடு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்
வந்தி
நீங்கள் சொல்லும் அதே மன நிலையில் தான் :(
"இனிய யாழ்ப்பாணமே" நினைவுகளை மீட்கவைக்கிறது பிரபா.
//
மாடு கண்டு ஈண்டுட்டுதண்ணை அதான் போகேல்லை"
//
ஹா ஹா....
//
என் தாய் நிலத்தில் நிரந்தரமாக உண்டு உறங்கும் நாளை எனக்கு ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டி விடைபெறுகின்றேன், என் இனிய யாழ்ப்பாணமே!
//
விரைவில் பலிக்கட்டும்.......
Sadly, when you are there, there is no 'there'. வாழ்க்கை என்பது நினைவுகளால் ஆனது. புலம்பெயர் அகதிகளான நாம் எல்லோருமே இந்த நினைவுகளைத்தான் பொக்கிஷமாக வைத்துப் பூட்டி இருக்கிறோம்!
அடுத்த ஆண்டாவது யாழ்ப்பாணம் போய்வர எனக்கும் ஆசை!
Post a Comment