Sunday, September 05, 2010
யாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் நாலு
நல்லூர்ப் பக்கம் உலாத்தல்
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் கொடியேற்ற நாளில் கோயிலுக்குப் போய் கொடியேற்ற நிகழ்வைக் கண்டு தரிசித்தேன். அருச்சனை செய்ய இன்னும் 1 ரூபா தான். கோயில் சுற்றுப் புற வீதியில் செருப்பு, சப்பாத்தோடு திரிய முடியாது. பாதணிகள் பாதுகாப்பு றாக்கைகளை இரவோடிரவாக யாழ் மாநகர சபை செய்து வைத்திருக்கிறது. தென்னிலங்கையில் இருந்து கம்பாயம், சாரத்துடன் வரும் கூட்டம் நல்லூரில் எல்லாப் பக்கமும். களு தொதல் வியாபாரியும் வந்து விட்டார். சேலை, வேட்டி கட்டிக் கொண்டு தான் பக்தர்கள் வரவேண்டும் என்ற நல்லூர்க் கந்தன் ஆலய அறிவிப்பைக் கண்டித்து சில முற்போக்கு இணையத்தளங்கள் கிழித்துக் காயப்போட்டிருந்தன. ஆனால் கந்தனின் அந்த அறிவிப்பு கம்பாயத்தையும் சாரத்தையும் தடுக்கவே அன்றி வேறொன்றுமில்லை என்று கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்.
நல்லூர் வீதியைச் சுற்றிக் கொண்டிருக்கையில் பிரான்சில் இருந்து வந்திருந்த T.R.T வானொலி இயக்குனர் குகநாதனை முன்னர் இணையத்தளங்களில் கண்ட புகைப்பட அடையாளத்தை வைத்து இனங்கண்டு பேச்சுக் கொடுத்தேன்.
"நீங்கள் தானே குகநாதன்?"
"ஓம் தம்பி, நீங்கள்...."
"நான் அவுஸ்திரேலியாவில் இருக்கிறனான் விடுமுறையில் வந்திருக்கிறேன்"
"என்னை எப்படித் தெரியும்"
"நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது ரஜினி பதிப்பகம் வெளியிட்ட நாளில் இருந்து தெரியும்"
ஆச்சரியத்தோடு பக்கத்தில் நின்ற நண்பரோடு அவர் பார்த்துக் கொண்டிருக்க,
"சரியண்ணை வாறன்" என்று விட்டு நடையைக் கட்டினேன்.
நல்லைக்கந்தன் ஆலயம் அருகே இருக்கும் வீரமாகாளி அம்மன்
வலம்புரி இருக்கு உதயன் இல்லை
சிட்னியில் இருக்கும் போது காலை ஏழுமணிக்கெல்லாம் மொபைல் போன் அலாரம் அலறியடித்துக் கொண்டு "எழும்பு மேனை எழும்பு மேனை" என்று தலையணிக்கு கீழிருந்து கத்தினாலும் அதை அழுத்தி விட்டு குறட்டைக்கச்சேரி நடத்துபவன் யாழ்ப்பாணம் போன நாள் தொடங்கி காலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி அள்ளிக் குளித்து விட்டு மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் போய் முதல் பூசை ஆறரைக்குப் பார்த்து விடும் பழக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது. அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. வீட்டுக்குச் சமீபமாக உள்ள காளி கோயிலில் காலை ஐந்து மணிக்கெல்லாம் கே.பி.சுந்தராம்பாள் எழும்பி லவுட்ஸ்பீக்கரில் இருந்து கொண்டு "தக தகவென ஆடவா" என்று கத்திக் கொண்டிருந்தால் அவவுக்கு முந்தியே என்ரை அம்மா நாலரைக்கு எழும்பிக் குசினியில் பாத்திரங்களைத் துயில் எழுப்பும் சத்தமும் கேட்க ஆரம்பித்து விடும். அம்மா ஆசிரியையாக இருந்த காலத்தில் எல்லாம் காலையில் பிட்டு அவிச்சு, மத்தியானத்துக்கான சோறு, கறிகளையும் ஆக்கும் அந்தத் தொட்டில் பழக்கம் அவர் ஆசிரியைப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னும் தொடர்கிறது. அப்பாவும் ஒருபக்கத்தால் யோகர்சுவாமிகளின் நற்சிந்தனையோடு சுவாமி அறைக்குள் ஐக்கியமாகி விடுவார்.
காலைப்பூசை பார்த்துவிட்டு என் லுமாலாக் குதிரை வெங்காயச் சங்கப் பக்கமாக இருக்கும் கடைக்குப் போகும். சொன்னாப்போலை இந்த வெங்காயச் சங்கம் எண்ட பெயர் எப்படி வந்தது என்று நீங்கள் பேந்தப் பேந்த முழிக்கலாம். எங்கள் இணுவில் பகுதியில் விளையும் வெங்காயச் சாகுபடிகள் எல்லாம் மொத்தமாகக் கொண்டுவரப்பட்டு இங்கே உள்ள வெங்காயச் சங்கத்தில் தான் களஞ்சியப்படுத்தப்படும். சரி மீண்டும் விஷயத்துக்கு வாறன். அந்தக் கடைக்கு காலை ஆறேமுக்கால் வாக்கில்போய்
"அண்ணை! உதயன் பேப்பர் இருக்கா" என்று கேட்டால் "இல்லைத்தம்பி வலம்புரி தான் இருக்கு, உதயன் முடிஞ்சு போச்சு" என்று ட்ரேட் மார்க் பதில் வரும்.
வலம்புரியை வாங்கிக் கொண்டு , கூடவே மானிப்பாய் தினேஷ் பேக்கரியில் இருந்து இறக்குமதியாகும் கொம்பு பணிஸ் ஒன்றும், கிறீம் பணீஸ் ( இரண்டு பணிசுக்கு நடுவில் ஒருவிதக் களி போன்ற இனிப்புத் திடப்பொருள்) வாங்கிக் கொண்டு கிளம்புவேன். அந்தக் கடை மாத்திரமல்ல பக்கத்துக் கடைகளிலும் இதே புராணம் தான். என்னடா கொடுமையா இருக்கு இந்த அதிகாலை வேளையிலேயே உதயன் பேப்பர் தீர்ந்து போய்விடுகிறதா யாழ்ப்பாணச் சனம் நான்கு மணிக்கே கடைப்பக்கம் வருகுதோ அல்லது வலம்புரிக்கு இவர்கள் செய்யும் தார்மீக ஆதரவோ என்று நினைத்துக் கொள்வேன். உண்மையில் வலம்புரி பத்திரிகை யாழ்ப்பாண மக்களின் இதயத்துக்கு மிக நெருக்கமாக இருப்பதற்குரிய சமாச்சாரங்கள் அந்தப் பத்திரிகையில் நிறையவே இருப்பதைக் கண்டு கொண்டேன். சாம்பிளுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வந்த செய்தி இது,
"சனீஸ்வரன் தலைமையில் இலங்கை வந்த தமிழக எம்.பிக்கள் குழு – யாழ்.வலம்புரி நாளிதழ்"
பொருள் விளக்கம் : சனீஸ்வரன் = டி.ஆர்.பாலு
ஈ ஓட்டும் இந்தியன் வங்கிகள்
சொந்த நாட்டிலேயே ஈ ஓட்டும் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் முந்திரிக் கொட்டைக்கணக்காய் யாழ்ப்பாணத்தில் கிளை பரப்பி யாழ்ப்பாணத்து ஈ ஓட்டுவதைப் பற்றிச் சொல்லி நண்பர் ஒருவர் விசனப்பட்டார். இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் வன்னியில் கடந்த வருஷம் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை யாழ்ப்பாணத்துச் சனம் இதயத்துக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு இன்னும் இருக்கிறார்கள். இதனால் தான் மேற்கண்ட விமர்சனம் போன்ற விசனங்களைப் பல சந்தர்ப்பங்களில் அங்கிருக்கும் போது கண்டேன்.
தேடி வந்து வாள் கொடுத்துச் சாத்வீகத்தை நிலை நாட்டியதன் பலனாக வன்னியில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட சமூகம் ஒன்று அநாதரவாக யாழ் வீதிகளில் அலைந்து திரிகையில் யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் அமைத்தும் , பலாலி சர்வதேச விமான நிலையம் அமைப்பதில் முழுமையான பங்களிப்பை வழங்கத் தயாராக இருக்கும் இந்தியாவை ரோம் நகரத்து நீரோ மன்னன் ரேஞ்சில் யாழ்ப்பாணப் பொது ஜனம் ஒப்பிட்டு மன நிறைவு கொள்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, கொழும்பில் கூடக் கண்டறியாத இன்சூரன்ஸ் கம்பனிகள், வங்கிகள் என்று ஒருபக்கத்தால் முளைத்திருக்கின்றன. ஹற்றன் நஷனல் வங்கி ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்திருப்பதைக் காண முடிகிறது. இலங்கை வங்கி ஒரு பிரயாண முகவர் நிலையத்தையும் ஆரம்பித்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இன்னும் 2 நாள் நிற்போமே என்ற ஆசையில் என் விமானப்பயணத்தைத் தள்ளிப் போடுவதற்காக இலங்கை வங்கியின் பிரயாண முகவர் நிலையத்தின் கதவைத் தட்டினேன். 500 ரூபா சேவைக் கட்டணத்தோடு 2 நிமிடத்தில் காரியத்தை முடித்து என்னை வீட்டுக்கு அனுப்பிய துரித வேகம் கண்டு பிரமித்தேன்.
15 வருசத்துக்குப் பின் என் யாழ் மண்ணில் உறவினரின் வீட்டுக் கல்யாணத்தை கண்டு சாப்பாடும் கழித்தேன் ;)
24 comments:
அடடா, நல்லூர்க் கொடியேற்றத்தன்று நானும் அங்கேதானே நின்றேன். கண்ணில் தட்டுப்பட்டிருக்கக்கூடாதா? இணையத்தளங்களில் கண்ட புகைப்பட அடையாளத்தை வைத்து இனங்கண்டு பேச்சுக் கொடுத்திருப்பேனே
வாங்கோ சுபாங்கன்
நீங்களும் யாழில் இருந்ததை உங்களின் பதிவை நேற்று வாசித்துத் தான் கண்டு கொண்டேன், இல்லாவிட்டால் கண்டிப்பாகச் சந்தித்திருக்கலாம் :(
மிக்க நன்றி.... பிரபா அண்ணா..... உங்களின் பதிவு நல்லூர் சிறப்பு நேரடி ஒளிபரப்பு போல இருந்தது... தொடர்ந்து நல்லூரில் நடக்கும் சம்பவங்களை எழுதுங்கள்.... நன்றி...
ம்ம்...கோவில் விழா..கல்யாணம்ன்னு நல்லா என்ஜாய்..படங்கள் அனைத்தும் கலக்கல் தல ;)
சொல்லாமல் கொள்ளலாமல் எங்கள் ஊருக்கே வந்துபோய் பதிவிடும் உங்களுக்கு கடுமையான கண்டனங்கள். (ஏன் ஐயா ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா?)
நானும் நல்லூர் கொடிக்கு வந்திருந்தேன்..எவர் கண்ணுக்கும் சிக்காமல் எச்சரிக்கையாகத் தான் உலாவியிருக்கிறீர்கள் போல.. ;)கானா அண்ணா
பட்டர் / மாஜரினையும் சீனியையும் கொஞ்சமாக அடிக்க, அவை மென்மையான பதார்த்தமாக (soft texture) வரும். அதையே (spread) கிறீம் பணிசுக்கு பூசுவார்கள். அது திரவம் அல்ல. ஒரு வகையில் திடப்பொருளே.
தண்ணீர் பந்தலில் தண்ணீ அடித்தீரா.. சீச் சீ.. குடித்தீரா தம்பீ?
அண்ணே உந்தக் கலியாணம் நடந்த ஹோல் எந்த ஹோல் அண்ணை?
படங்கள் வ்ழக்கம் போல் கலக்கல், நீங்கள் ஒரு கமெராக் கலைஞர்.
நன்றி ரவிசாந்
நல்லூரை விட்டு வந்தாச்சு, இனி அடுத்த பயணத்தில் தான் ;)
வருகைக்கு நன்றி தல கோபி ;)
எனக்கும் யாழ் - நல்லூர் கோவில் பார்க்கணும்ன்னு ஆசைதான் பாஸ் இப்ப வந்து சேர்ந்திருச்சு!
முன்னர் எழுதிய கோள்மூட்டல்களுக்கு போட்டிருந்த ஒளிப்படங்களை விட இவை மிக நன்றாகவும் அழகாகவும் இருக்கின்றன. இந்த எழுத்துக்கலையை மிக நன்றாக வளர்தெடுங்கள்.
Jana said...
சொல்லாமல் கொள்ளலாமல் எங்கள் ஊருக்கே வந்துபோய் பதிவிடும் உங்களுக்கு கடுமையான கண்டனங்கள். (ஏன் ஐயா ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா?)//
வணக்கம் ஜனா
அவசரப்பயணம், இருந்ததோ 7 நாட்கள், அடுத்த முறை கண்டிப்பாக வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன் ;) சும்மா ஜோக்கு உண்மையில் அடுத்த முறை உங்களைப் போன்ற நண்பர்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
sinmajan said...
நானும் நல்லூர் கொடிக்கு வந்திருந்தேன்..எவர் கண்ணுக்கும் சிக்காமல் எச்சரிக்கையாகத் தான் உலாவியிருக்கிறீர்கள் போல.. ;)
//
சின்மயன்
;) அடுத்த திருவிழாவுக்கு கட்டாயம் சந்திப்போம்
Anonymous said...
பட்டர் / மாஜரினையும் சீனியையும் கொஞ்சமாக அடிக்க, அவை மென்மையான பதார்த்தமாக (soft texture) வரும்.
//
விரிவான தகவலுக்கு நன்றி அதே தான் ;) பதிவிலும் திருத்தியாச்சு
விசரன் said...
தண்ணீர் பந்தலில் தண்ணீ அடித்தீரா.. சீச் சீ.. குடித்தீரா தம்பீ?//
அண்ணே
அடிக்கும் சீச் சீ குடிக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை ;)
வந்தியத்தேவன் said...
அண்ணே உந்தக் கலியாணம் நடந்த ஹோல் எந்த ஹோல் அண்ணை? //
வந்தி
இவை எங்கட மடத்துவாசல் பிள்ளையாரடி கல்யாண மண்டபமே தான் ;)
ஆயில்யன் said...
எனக்கும் யாழ் - நல்லூர் கோவில் பார்க்கணும்ன்னு ஆசைதான் பாஸ் இப்ப வந்து சேர்ந்திருச்சு!//
ஆயில்ஸ் அடுத்தமுறை அழைத்துப் போகிறேன்
துவாரகன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அருமை...
மீண்டுமொரு தடவை சந்திக்க ஆவல்.
படங்களையும் ரசித்தேன்..
நடப்பு விவகார விமர்சனங்கள் நச்.
பதிவு விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கு. ஒரு புத்தகமே வெளியிடலாம். நல்லபடியாக தொடரட்டும்.
ஆதிரை
கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம் கோல்பேசில் என்றால் சனம் இல்லாத நாளில் ;)
வருகைக்கு நன்றி லோஷன்
yarl said...
பதிவு விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கு. //
நன்றி சகோதரி நீங்கள் இன்னமும் கேரளா போகவில்லையா?
ஈ ஓட்டும் இந்தியன் வங்கிகள்
--------------------------
உளவு வேலை(றோ) பார்க்கத்தான் யாழ் நகரில் இந்திய வங்கிகள் இருக்கிறதாக ஒரு பேச்சு .
வெங்காயச் சங்கம் எங்கடை ஊரிலும் உண்டு. வலி. கிழ. வட பகுதி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் என்பதுதான் "official " பெயர் என்று ஞாபகம். சனம் வெங்காயச் சங்கம் எண்டுதான் சொல்லும்.
யாழ்ப்பானப் பதிவுகள் அத்தனையும் அருமை தல.... ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் பதிவுகள் பக்கம் வந்தேன்... யாழ் பதிவுகள் படிச்சதுல ஒரு மன நிறைவு...
Post a Comment