"என்ன தெரியுதா..இன்னும் திருப்ப வேணுமோ?"
"இன்னும் கொஞ்சம்...கொஞ்சம்...ஆ இப்ப சரி படம் வருகுது"
கூரையில் இருந்த அன்ரெனாவின் கழுத்தை மத்தாகத் திருகிக் கைவலித்த சின்ன அண்ணன் கீழே ஓடி வருகிறார். வீட்டுக்குள் இருந்து ரீவியின் காதைத் திருகித் திருகிப் படம் வரப் பண்ணி ஓரளவு ஆடி அசையும் முகங்களைக் கண்ட சந்தோசத்தில் நான்.
இதெல்லாம் ஒரு காலத்தில் எங்களூர் வீடுகளில் பெரும்பாலும் காணும் நிகழ்வுகள் தான். எதற்காக இந்தப் பகீரதப் பிரயத்தனம் என்றால் அது வெள்ளிக்கிழமை "ஒலியும் ஒளியும்" தூரதர்ஷனில் பார்க்க வேண்டுமே.
இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்பது போல என்னதான் இலங்கை வானொலியும், ரூபவாஹினி தொலைக்காட்சியும் இருந்தாலும், திருச்சி வானொலியைக் கேட்பதும், தூரதர்ஷனைப் பார்ப்பதும் எங்களுக்கு அலாதியான விஷயங்கள். எண்பதுகளின் ஆரம்பத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் எங்களூர் பணக்காரர் வீட்டுச் சொந்தங்களாக மட்டுமே இருந்தன. அப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியைக் காணாத சனம் சில புரளியையும் கிளப்பிவிட்டிருக்கும்.
"உந்தப் பெட்டியிலை இருக்கிற அன்ரெனாவை ராஜா தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை ஓடுற படம் வருமாம், சிறீதர் தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை போடுற படம் காட்டுமாம்" இப்படி தேவிமாமியின் தாய்க்கிழவி ஒரு புரளியைச் சந்தடி சாக்கில் போட்டு விட்டுப் போயிருந்தா.
தொலைக்காட்சிப் பெட்டிகளின் அறிமுகத்தை எங்களூர் வாசிகசாலைகள் செய்த கதையை முந்தி ஒரு பதிவில் சொல்லியும் இருக்கின்றேன்.
மெல்ல மெல்ல தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்ட ஒவ்வொரு வீட்டுக் கூரையிலும் கொம்பு (அன்ரெனா) முளைத்தது. அப்போதெல்லாம் ரூபவாஹினி தொலைக்காட்சி ஆரம்பித்த நாள் முதலே கலர் திரையில் தமது ஒளிபரப்பைத் தந்தாலும் அதைப் பார்க்கும் ஆர்வம் ஏனோ அதிகம் எமக்கு வரவில்லை. சின்னப் பிள்ளைகளை வைத்து "காயனா" என்ற பெயரில் ஒரு பாட்டு நிகழ்ச்சியும், "கோப்பிக் கடே" என்ற நாடகமும் , காதம்பரி, ஒரு சில ஈழத்துத் திரைப்படங்களைப் பாகம் பாகமாகக் காட்டியது என சொற்பமான சில நினைவுகளையுமே நினைவுகளையுமே ரூபவாஹினி விட்டுச் சென்றிருக்கிறது.
ஆனால் சென்னைத் தொலைக்காட்சி மேல் அந்தக் காலத்தில் இருந்த வெறிபிடித்த ஆசையை நினைத்தால் இன்றும் வியப்பாக இருக்கின்றது. கலர்ப்படங்கள் வந்த காலத்திலும் பிடிவாதமாக கறுப்பு வெள்ளைப் படங்களை எடுத்துத் தள்ளிய பாலசந்தர் ரகமாய் தூரதர்ஷனும் தன்னுடைய ஒளிபரப்பை அந்த எண்பதுகளிலும் கறுப்பு வெள்ளையாய் சில காலம் இருந்து வந்தது. அதனால் தான் ஒரு வேடிக்கையும் நிகழ்ந்தது. எப்போதாவது அத்தி பூத்தாற் போலத் தெளிவாக வரும் ஒளிபரப்புக்கு மத்தியில் பாயாச மழையாய் காட்சி தரும் ரீவியில் "கிளியரா வரப் பண்ணுறன் பாருங்கோ" என்று சின்ன அண்ணா அம்மாவிடம் கெஞ்சிக் கேட்டு வீட்டுக் கூரையில் ஏறிப் போய் அன்ரெனாவை ஒவ்வொரு பக்கமாகத் திருப்ப ஆரம்பிப்பார். அதிலும் ஒரு ரெக்னிக் இருக்கு. கீழ்க் குழாயில் செருகியிருக்கும் மேல்த்துண்டை மெல்ல நிமிர்த்தி லாவகமாக, மெதுவாகத் திருப்ப வேணும். கொஞ்சம் அதிகப்படியாகத் திருப்பினால் போச்சு "உள்ளதும் பேச்சேடா நொள்ளைக் கண்ணா" என்று திட்டு வாங்க வேண்டியது தான்.
சின்ன அண்ணரின் இந்த முயற்சிக்குக் கண்காணிப்பாளராக நான். வீட்டுக்குள் பாய்ந்து ரீவியை எட்டிப் பார்ப்பதும் வெளியில் ஓடி வந்து கத்துவதுமாக இருக்கும். சில வேளை திரையில் தோன்றும் பாயாச மழையைப் பார்த்து ஏதோ சனக்கூட்டம் தெரிவது மாதிரி இருக்கு என்று நானே முடிவுகட்டிப் பின்னர் டோஸ் வாங்கியதும் உண்டு.
எப்படா வெள்ளிக்கிழமை வரும் ஒலியும் ஒளியும் பார்க்கலாம் என்று காத்திருந்தால் அந்த நிகழ்ச்சி வருவதற்கு முன்னால் தமிழ்ப்பாடமெடுக்கும் பேராசிரியர் நன்னன் எல்லாம் தெளிவாகத் தெரிவார். ஏழரைக்கு ஒலியும் ஒளியும் என்று கடிகாரத்தின் நாடி பிடிக்கும் நேரம் பார்த்து ரீவித்திரை கழுத்தறுத்து விடும். சிலவேளை எங்கள் அன்ரெனா திருப்பும் படலம் ஒலியும் ஒளியும் ஆரம்பிப்பதற்கு முன்னிருந்து அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த நேரம் வரை கடந்து அலுத்துப் போவோம். தப்பித் தவறி நல்ல தெளிவான காட்சியா ரீவியும் குழப்படி இல்லாமல் வேலை செய்தால் ஆற அமர உட்கார்ந்து பார்ப்போம்.
"அரை மணித்தியாலத்தில் அஞ்சு பாட்டுப் போடலாமே, ஏன் உவங்கள் மூண்டோட நிப்பாட்டிட்டாங்கள்" என்றும் சில வேளை கடுப்பை ஏற்படுத்தும் தூரதர்ஷன். கோவா கலரில் "இயற்கை என்னும் இளைய கன்னி" சாந்தி நிலையம் பாட்டு, கறுப்பு வெள்ளையில் "காதோடு தான் நான் பேசுவேன்" என்று இன்றும் அருமையாகப் பெருமையாகப் பார்த்த பாட்டுக்கள் நினைப்பில் இருக்கு,.
புதிதாக வரும் ஐ.ஆர் ரக அரிசி விளக்கத்தோடு ஒருவர் "வயலும் வாழ்வும்" நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு சீரியசாகப் பாடமெடுப்பார். செய்திகளைத் தொடர்ந்து வரும் காணாமற் போனோர் அறிவிப்பை விநோதமாகப் பார்ப்போம். தூரதர்ஷன் தவிர இந்தக் காணாமற் போனருக்கு முக்கியத்துவம் கொடுத்த தொலைக்காட்சி உண்டா என்ன?
எண்பதுகளின் இறுதிப் பகுதியில் தூரதர்ஷன் சிக்கல் இல்லாமல் ஓரளவு ஒளித்தரத்தில் தன்னைக் காட்ட எங்களுக்கும் அடிக்கடி அன்ரெனா திருப்பும் வேலையும் அதிகம் இருக்கவில்லை.
ஒளிபரப்பு ஆரம்பிக்கும் முன் வளையமாகச் சுழன்று எழுப்பும் அந்த ஒலியை நாமும் வேடிக்கையாக வாயில் ரியூன் போட்டு ரசிப்போம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஒளிபரப்பில் "மஹாபாரத்" என்ற கணீர்க் குரலோடு வரும் பாடலோடு ராமானந்த் சாகரின் மகாபாரதம் பார்த்த காலமும் உண்டு. இரண்டரை மணி நேரப் படத்தில் ஆயிரத்தெட்டு இடைவேளைகளும், "தடங்கலுக்கு வருந்துகிறோம்" அறிவிப்பும் வந்து போகும். ஒரு நாற்காலியும் பேப்பரும் பின்னால் திரையும் அமைந்த செட் அமைத்து அரங்கேற்றிய இழுவை தொலைக்காட்சி நாடகங்கள் கழிந்து, மெல்ல மெல்ல நிகழ்ச்சிகள் மெருகேறி, "ரயில் சினேகம் ரயில் சினேகம்" என்று ஜேசுதாஸ் பாட பாலசந்தரின் இயக்கத்தில் நிழல்கள் ரவி நடிப்பில் வந்த "ரயில் சினேகம்", ஓவ்வொரு
விதமான பெண் பாத்திரங்களை எடுத்து பார்த்திபன் போன்ற ஹீரோக்களை இணைத்து சுஹாசினி இயக்கிய "பெண்", எஸ்.வி.சேகர் இயக்கிய "வண்ணக்கோலங்கள்" என்று வரிசை கட்டி வந்த நாடகங்களைப் பார்த்த ஞாபகமும் உண்டு. இவற்றுக்கு மத்தியில் சுஜாதா எழுதிய "டாக்டர் நரேந்திராவின் விநோத வழக்கு" நாடகமும் தனித்து நின்றது.
தேசிய ஒளிபரப்பில் என்றோ பார்த்த, அமிதாப்பச்சன் கூலிங் கிளாசுடன் வில்லன் கோஷ்டிகளுக்கு மத்தியில் மறைந்து பாடும் அந்த ஹிந்திப் பாடலின் முகவரி தெரியாமல் அந்த மெட்டை மட்டும் இன்னும் முணுமுணுத்துத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஷோபனா ரவி, வரதராஜன் குரல்களில் வந்த செய்திகளின் தரமே தனி தான், அதெல்லாம் ஒரு காலம்
இருபது வருஷ இடைவெளியில் கடந்த சில வாரங்களாக கடல்கடந்து பொதிகையாய் என் வீட்டுத் தொலைக்காட்சியில் தெரிகிறது இப்போது. தேசியத் தொலைக்காட்சிகளாக மற்றைய நாடுகளில் இருக்கும் சேவைகள் தொழில்நுட்ப ரீதியிலும் நிகழ்ச்சித் தரத்திலும் எங்கோ உச்சத்துக்குப் போய் விட , பொதிகையின் ஒலித்தரமோ லவுட்ஸ்பீக்கரில் வரும் "சிறுபொன்மணி அசையும்" ரகமாக இருக்கின்றது. அதே காணாமல் போனோர் அறிவிப்புக்களும் செய்திகளைத் தொடர்ந்து வருகின்றன. வயலும் வாழ்வும் பெயர் மாறி வேறோர் பெயரில் வருகின்றது. நிழல்கள் ரவியும் ஏதோ ஒரு சீரியலில் போலீஸ் கதாநாயகன் வேஷம் கட்டி நடிக்கிறார். தனியார் தொலைக்காட்சிகள் சுவீகரிக்கமுன் உள்ள காலத்தில் வந்த உரிமம் வாங்கிய படங்களைப் போடுகின்றது. ஒரு காலத்து நினைவுகளை நெஞ்சுக்குள் புதைத்து வைத்த அதே திருப்தியோடு, அது மட்டும் போதும் என்று பொதிகை நினைக்கிறதோ.
21 comments:
சூப்பரான பதிவு.. எனக்கும் நினைவுகள் பின்னோக்கின!
dd than best தான் பெஸ்ட் மத்ததெல்லாம்wasteன்னு இப்ப கண்டிப்பா சொல்லலாம்.
நாங்க ஆண்டெனா திருப்பி ரூபவாஹிணி பாப்போம். :))
லாட்டோ, ஆங்கர் பால் விளம்பரம் சினிமா எல்லாம் மறக்க முடியாத அனுபவம்.
வருகைக்கு மிக்க நன்றி நாரதமுனி
நீங்க டீடீ பாக்க கஷ்டபட்டா மாதிரி நான் ரூபவாஹிணிக்கு கஷ்டப்பட்டிருக்கேன். தோகைமயில் மாதிரி வரும் அந்த ஒலி ரொம்ப பிடிக்கும். விசிறி மடிப்பு புடவை இதெல்லாம் அதிசயம். டீடீயை விட ரூபவாஹிணி தெளிவா தெரியும்.
ஞானஒளி சினிமா பாத்தது ரூபவாஹிணில தான். இலங்கையின் மேல் காதல் வர இதெல்லாமும் காரணம்.
ரூபவாஹீனிக்கு அருகிலேயே என் வீடு. அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் பெருமையா இருக்கும்.
பாஸ் கலக்கல்! :)))))
எங்களுக்கும் உண்டுல்ல இந்த ஃபீலிங்க்ஸு - ஆண்டெனாவ திருப்பி ரூபவாஹிணியில சேதி அப்புறம் புத்தா சரணம் கச்சாமி பிறகு விளம்பரமெல்லாம் பார்த்துருக்கோம்ல!
ஆண்டனா திருப்பி திருப்பி
வருதா வருது வருதா வருது இல்ல போச்சு வர்ல -விளையாட்டு நானும் எங்க பிரதரு கூட வெளையாண்டிருக்கேனாக்கும் :)
ஒலியும் ஒளியும்ல சொல்லமறந்த மேட்டரு - படத்தோட விளம்பர போட்டோ முதல்ல வரும்ல (இப்ப பேப்பர்ல வர்றமாதிரி)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புதுகைத்தென்றல்
பதிவு கலக்கல கானா.. அப்படியே எங்க வீட்டுலயும் இதே ரிப்பீட்ட் ஆகி இருக்கறதால் பதிவுக்கே ரிப்பீட்டு போடலாம்.. ரூபவாகினிக்காக நாங்க இதெ எல்லம் செய்திருக்கோம்.. நீங்க சொன்னமாதிரி மழை உருவங்களை காட்சி தான் வருதுன்னு நாங்களும் ஏமாந்திருக்கோம்.. ரூபவாஹினி விளம்ப்ரமெல்லாம் ஞாபகம் வருது சோப்பு விளம்பரம் ஒன்னு எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல்ல ஆண்டெனா மாட்ட வரும் வரை அப்பா மாடியிலிருந்து செய்ய நானும் தம்பியும் வழியில் நின்னு கத்துவோம் சரியா இருக்கு இல்ல சரியா இருக்கு ன்னு மாத்தி மாத்தி .. மாட்டறதுக்கு ஆள் வந்தப்பறம் எங்க வீட்டு ஆண்டெனா அளவு உயரமான ஆண்டெனா எங்க ஏரியாவில்யே கிடையாதாக்கும் ரெண்டு தென்னமரம் சைஸ் இருக்கும்..
இப்ப சன், ஜெயா, விஜய் என்று என்னதான் பார்த்தாலும் அப்ப பார்த்த தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் தான்
மனதில இப்பவும் நிக்குது. ஒளியும் ஒலியும் பார்க்க எனக்கு சரியான விருப்பம். ஆனால் எங்கட அப்பா அந்த பாட்டு நிகழ்ச்சியை மட்டும் பார்க்கவிடமாட்டார். நாங்களும் அப்பா எப்ப வெளியில வெளிக்கிடுவார் என்று பார்த்துக் கொண்டு இருப்பம். அப்பிடி ஒரு ஐந்தாறு தரம் தான் பார்த்திருப்பேன். அதுவும் எங்களுக்கு 10 மணிக்கு current நிண்டிடும். அப்பிடியிருந்தும்
சனிக்கிழமைகளில் அரை மணித்தியால படம் பார்க்க காத்திருப்போம். அப்ப விளம்பரங்கள் கூட நல்ல கவிதையாக
இருந்ததாக நினைவு.
சுராக் என்று துப்பறியிற நாடகம் திங்கட்கிழமைகளில் பார்த்திருக்கிறீர்களா?
6.55 இற்கு ஒன்று போடுவார்கள், 5 நிமிட திரைப்படக்காட்சிகள். super
'ஆயிரத்தொரு இரவுகள்' என்ற நாடகம் எமது வீட்டில் எல்லோரும் விரும்பி பார்ப்போம். அந்த நேரம் surrent போட்டுதென்றால்
எனக்கு அழுகையே வந்திடும்.
ம்ம் அது ஒரு காலம்.
ஆயில்யன் said...
ஒலியும் ஒளியும்ல சொல்லமறந்த மேட்டரு - படத்தோட விளம்பர போட்டோ முதல்ல வரும்ல (இப்ப பேப்பர்ல வர்றமாதிரி)//
அட, அதை விட்டுட்டேனே ;-), இன்னொரு விடுபட்ட விஷயம், இளமை இதோ இதோ படத்தில் வரும் அள்ளி வச்ச மல்லிகையே பாடலைப் பார்த்த நினைவு
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிவு கலக்கல கானா.. அப்படியே எங்க வீட்டுலயும் இதே ரிப்பீட்ட் ஆகி இருக்கறதால் பதிவுக்கே ரிப்பீட்டு போடலாம்..//
எல்லார் வீட்டிலும் இதே கதையா ;)
அண்ணே அன்ரானா திருப்பிய காலத்தின் பின்னர் புலவர் வீடியோவின் ஒளிபரப்புப் பார்க்க பனை உய்ரத்திற்க்கு அன்ரானாக்கள் கட்டியதும் பின்னர் டைனமோ சுத்தி டிடியில் உலகக்கோப்பை போட்டிகள் பார்த்ததும் நினைவுக்கு வருகின்றது. இப்போ உலகம் சுருங்கிவிட்டது.
கலக்கல் பதிவு தல...நீங்க சொன்னது எல்லாம் எங்க வீட்டிலும் நடந்திருக்கு...பட் இந்த ரூபவாகினிங்கிறது தான் பார்த்து இல்லை.
வண்ணக்கோலங்கள்தான் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்ல வந்த காமெடி சீரியல்னு தோணுது
வாங்கோ வாசுகி
எங்கட வீட்டில வீட்டுப்பாடம் செய்தால் ரிவி பார்க்கலாம் என்று ஒப்பந்தம் ;)
வந்தியத்தேவன் said...
அண்ணே அன்ரானா திருப்பிய காலத்தின் பின்னர் புலவர் வீடியோவின் ஒளிபரப்புப் பார்க்க பனை உய்ரத்திற்க்கு அன்ரானாக்கள் கட்டியதும்//
வந்தி
யாழில் வந்த தனியார் ரிவிக்களை வச்சு ஒரு பாரதமே எழுதலாம் ;)
பாஸ்.. பழைய காலத்துக்கு கொண்டு போய்ட்டீங்க.. எங்க வீட்ல காலையில் இலங்கை வானொலி தான் ஒலிப்பரப்பாகும். காலையில் சுகராகம், தேனருவி என்று ஓடிக் கொண்டு இருக்கும். ராஜேஸ்வரி சண்முகம் என்று ஒருவர் இருப்பார். மாலையில் அச்சமில்லை அச்சமில்லை பாடல் இன்னும் நினைவில் இருக்கு.
அன்ரெனா - தூரதர்சன் ஒருகாலம் தான் அநேகர் வாழ்க்கையில்.
எங்கள் வீட்டிலும் நடந்ததுண்டு.கீழேயே நின்று திருப்பி விடக்கூடியதாக இருந்தது.
ம்ம்ம் என்ன அண்ணை சொல்ல...! ஜப்பான்காரன் வியக்குற அளவுக்கு மண்ணெண்ணை எஞ்சின்ல படம் போட்டு பார்த்த காலம் செத்தாலும் மறக்க முடியாது.
//ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஒளிபரப்பில் "மஹாபாரத்" என்ற கணீர்க் குரலோடு வரும் பாடலோடு ராமானந்த் சாகரின் இராமாயணம் பார்த்த காலமும் உண்டு.//
Ramayanam with Mahabharath title song?
Other than this, your post is pretty good. I even saw from start to end.. all the programs in the evenings.. a couple of times.
With all the deficiencies, it was still very good and I used to look forward to it. Now? Just too much of TV has exposed all its minus points..
தல கோபி
வருகைக்கு நன்றி ;)
சின்ன அம்மிணி
வண்ணக்கோலங்கள் தான் முதல் நகைச்சுவை தொடர்னு எஸ்.வி சேகரும் சொல்லியிருக்கிறார், நன்றி
தமிழ்ப்பிரியன்
வானொலி நினைவுகளும் மறக்க முடியாதவை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி
வணக்கம் கதியால்
மண்ணெண்ணையில் பார்த்த படங்களையும் சொல்லியிருக்கிறேன்.
வணக்கம் ரவி
மஹாபாரதத்தையும், இராமாயணத்தையும் போட்டுக் குழப்பி விட்டேன், தற்போது திருத்தப்பட்டு விட்டது நன்றி, எதுவும் அரிதாய் இருந்தால் தான் அருமை போல
//உந்தப் பெட்டியிலை இருக்கிற அன்ரெனாவை ராஜா தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை ஓடுற படம் வருமாம், சிறீதர் தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை போடுற படம் காட்டுமாம்" இப்படி தேவிமாமியின் தாய்க்கிழவி ஒரு புரளியைச் சந்தடி சாக்கில் போட்டு விட்டுப் போயிருந்தா.//
இதை நம்பி அன்ரெனாவை திருப்பின மாதிரியே இருக்கே... :-))
அன்ரெனாவை எங்க மாமாமார் திருப்பினதுதான் எனக்கு ஞாபகம் இருக்கு தல.. அதில வந்த நிகழ்ச்சியெல்லாம் இப்படி அக்குவேறு ஆணிவேறா எனக்கு சொல்லும் அளவுக்கு ஞாபகம் இல்லை.... இது எல்லாம் உங்களை போன்ற வயது போனவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.. :-))
பதிவும் சூப்பர்... அதுவும் உங்களை போன்ற அனுபவசாலிகளுக்கு மட்டுமே சாத்தியம்.
Post a Comment