இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒரு விழுதான "வானொலி மாமா" என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த திரு.ச.சரவணமுத்து அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 30 திகதி தனது 94 வது வயதில் காலமானார்.
ஈழத்துத் தமிழ் ஒலிபரப்புக்களின் முன்னோடியாக இருந்தவர்களில் ஒருவர் என்பதோடு இவர் ஆரம்பித்து வைத்த சிறுவர் மலர் என்ற நிகழ்ச்சி பல்லாண்டுகாலமாக நீடித்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி என்பதோடு, "வானொலி மாமா" என்ற கெளரவ அடைமொழியை இவரைத் தொடர்ந்து வந்த பல நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் பின்னாளில் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. வானொலி ஒலிபரப்புக் கலையின் தனித்துவங்களான திரு சோ.சிவபாதசுந்தரம், மரைக்கார் ராம்தாஸ் போன்ற கலைஞர்களின் அறிமுகத்துக்குத் துணை புரிந்ததோடு, ஆங்கிலேயர் இலங்கை வானொலியை ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழில் நிகழ்ச்சிகள் வரவேண்டும் என்று முனைப்பு எடுத்துச் செயற்பட்டதோடு நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் திரு.சோ.நடராஜாவுடன் இணைந்து நிகழ்ச்சிகளைப் படைத்திருந்தார். இலங்கையர்கோனின் "விதானையார் வீடு" என்ற நாடகத்திலும் ஈழத்தின் முக்கியமான கலைஞர்களோடு இவர் நடித்திருந்தத குறிப்பிடத்தக்கது.
வானொலி மாமா ச.சரவணமுத்து குறித்த நினைவுப்பகிர்வை வழங்க ஈழத்திலிருந்து மூத்த ஊடகவியலாளர், வானொலிப் படைப்பாளி திரு.எஸ்.எழில்வேந்தன் அவர்களை வானலையில் அழைத்திருந்தேன். அந்த ஒலிப்பகிர்வைத் தொடர்ந்து கேட்கலாம். ஒலிப்பகிர்வின் முழுமையான எழுத்து வடிவைப் பின்னர் தருகின்றேன்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் மலர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவரும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நிகழ்ச்சி ஆலோசகராக விளங்கி வரும் வானொலி மாமா திரு.நா.மகேசன் அவர்கள் வழங்கிய நினைவுப் பகிர்வினைத் தொடர்ந்து தருகின்றேன்.
நான் அறிந்த வானொலி மாமா
அமரர் திரு. ச. சரவணமுத்து
இலங்கை வானொலியில் மிகவும் புகழ்வாய்ந்த நிகழ்ச்சி “சிறுவர் மலர்” என்னும் சிறுவர் நியழ்ச்சி. எட்டுவயது தொடக்கம் பதினைந்து வயது வரையிலான சிறுவர்களைக் கொண்டு தயாரித்து, ஞாயிறுதோறும் காலையில் 45 நிமிடங்கள் ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைச் சிறுவர்கள் மட்டுமல்ல வளர்ந்தவர்களும் கேட்டு மகிழ்வார்கள். சிறுவர்கள் ஞாயிறு எப்போ வரும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, முதலாவது “வானொலி மாமா” என்ற கற்பனைப் பாத்திரமாக நிகழ்ச்சிக்கு அத்திவாரம் இட்டு நடத்தியவர் மதிப்புக்குரிய திரு. எஸ். சிவபாதசுந்தரம் என்று அறிகக் கிடக்கிறது. பெயர் ஒலிபரப்பாகாத இந்தக் கற்பனைப் பாத்திரத்தை பலர் ஏற்று நிகழ்ச்சியை நடத்தி வந்திருக்கிறார்கள்.
இந்த வானொலி மாமாக்களிலே நான் அறிந்த பலர் இருப்பினும், “வானொலி மாமா” என்ற அடைமொழியை நெடுங்காலம் தாங்கி நின்றவர் அமரர் திரு. ச. சரவணமுத்து அவர்கள். இவர் நெடுங்காலமாக கொழும்பில் வெள்ளவத்தையில் வசித்து வந்தார். நானும் வெள்ளவத்தையில் நெடுங்காலமாக வசித்து வந்தபடியால், அடிக்கடி அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நான் வெளிநாடு வருவதற்குமுன் கிட்டியது. பின்னரும் இலங்கை சென்ற போதெல்லாம் “மாமா” வைச் சந்திக்காது வருவதில்லை. இன்று புலம் பெயர்ந்து வாழும் பல வானொலிக் கலைஞர்களை உருவாக்கிய பெருமை, சரவணமுத்து மாமாவைச் சாரும் என்றால் அது மிகையாகாது. அன்னார் பழகுவதற்கு மிகவும் இனியவர். உயர்ந் குணங்கள் உடையவர். உயர்ந்து வளர்ந்த தோற்றம் உடையவர். இன்சொல் அன்றி வன்சொல் பேசாதவர். அவர் தனித் தன்மையோடு சிறுவர் மலர் சிகழ்ச்சியை தயாரித்து வழங்கிவந்தார். சிறுவர்களுக்கு நடிப்பைச் சொல்லிக் கொடுத்து, இயற்கையாக நடிக்க வகை செய்தவர்களிலே இவர் ஒரு முன்னோடி.
சென்ற 29. 10. 2009 அன்று இவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயர் எய்தினேன். அமரர் சரவணமுத்து அவர்க்ள் ஒரு வானொலி நிலையக் கலைஞர் என்றுதான் பலர் கருதுவார்கள். அன்னார் இலங்கை வொனொலின் அழைப்பை ஏற்றுச் சென்ற ஒரு தயாரிப்பாளர். (guest Producer) ஆரம்ப காலத்தில் அரச கரும மொழித் திணைக்களத்தில் கடமையாற்றிப் பின்னர் பாராழுமன்றத்திலும் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். சரவணமுத்து மாமா கலைத்துறையில மட்டுமல்லாது, சமய, சமூகப் பணிகளிலும் நெடுங்காலமாகச் சேவை செய்த பெரும் தொண்டன். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்து, தனது வாழ்நாளின் பெரும் பகுதியைப் பொதுப் பணிகளுக்காக அர்ப்பணித்த ஒரு பெரியார்.
திருக் கேதீச்சர ஆலயப் புனருத்தாரனச் சபையின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து அவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு நெடுங்காலம் தொண்டாற்றியவர். கொழும்பு இந்து மாமன்றத்தின் அங்கத்தவராக இருந்து பல பணிகளில் ஈடுபட்டவர். வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 1966ம் ஆண்டில் இருந்து 2000மாம் ஆண்டுவரை அங்கத்தவராக இருந்து பொதுகச் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளில் நெடுங்காலம் கடமையாற்றித் தமிழ்த் தொணடு செய்தார். அன்னாரின் மறைவு, இலங்கைத் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு. அவரது பிரிவால் துயருறும் மக்களக்கும்; உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் செய்த பணிகளும், தொண்டுகளும் அன்னாரைத் தக்கோன் எனக் காட்டி நிற்கின்றன.
“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.”
நா. மகேசன்
சிட்னி, அவுஸ்திரேலியா
1. 11. 2009
( விதானையார் வீடு நாடகம் ஒலிப்பதிவில், இடமிருந்து வலம் கணபதிப்பிள்ளை விதானையா (கா.சிவத்தம்பி), வைரமுத்துச் சட்டம்பியார் (சரவணமுத்து), செளந்தரவல்லி ( பத்மா சோமசுந்தரம்), விசாலாட்சி (பரிமளாதேவி விவேகானந்தா), சின்னத்துரை விதானையார் ( வீ.சுந்தரலிங்கம்), ஆறுமுகம் (வி.என்.பாலசுப்ரமணியம்).
கொழும்பு தமிழ்ச்சங்கம் விடுத்த இரங்கல் அறிக்கை
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் “வானொலி மாமா” என அழைக்கப்பட்ட திரு.ச.சரவணமுத்து அவர்களின் மறைவையொட்டி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலி இலங்கையில் முதன்முதல் சிறுவர் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடாத்திய “வானொலி மாமா” என அழைக்கப்பட்ட திரு.ச.சரவணமுத்து அவர்கள் தனது 94ஆவது அகவையில் 30.10.2009 அன்று கொழும்பில் காலமானார். அன்னாரது மறைவையொட்டி கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கின்றது. அன்னார் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் (1966ஃ1972) துணைத் தலைவராகவும் (1976ஃ1980) பல ஆண்டுகள் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்து சங்கத்தின் கலை, இலக்கிய செயற்பாடுகளில் தீவிர பங்கெடுத்து சங்கத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றவர். அவரது சேவையினைக் கருத்தில் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்தாகப தின விழாவில் “சங்கச் சான்றோர் - 2006’ விருது அளித்துக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவித்தது. முதுமையெய்தியும் தள்ளாதவயதிலும் சங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை பழக்கமாகக் கொண்டிருந்தார். 13.09.2009ஆம் திகதி நடைபெற்ற சங்கத்தின் 67ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் உணர்வும் தமிழ்ப்புலமையும் இலக்கிய ஆளுமையும் நிரம்பியவர். சிறந்த சமூக சேவையாளரான இவர் கொழும்பு விவோகானந்த சபை, அகில இலங்கை இந்து மாமன்றம், திருக்கேதீஸ்வர திருப்பணிச் சபை, கொழும்பு இந்து வித்தியாவிருத்திச் சபை (சரஸ்வதி மண்டபம்) உலக தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக்கிளை ஆகிய அமைபப்புக்களிலும் அங்கம் வகித்து ஆற்றிய சேவைகள் அளப்பரியன. அரசகருமமொழித் திணைக்களத்தில் அதிகாரியாகவும், பாராளுமன்றத்தில் மொழி பெயர்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். வானொலியில் சைவநற்சிந்தனைகள், பௌத்த நற்சிந்தனைகள் இரண்டையும் நடாத்தினார். அன்னாரின் பிரிவினால் துயரும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி: நினைவுப்பகர்வை வழங்கிய திரு எஸ்.எழில்வேந்தன்
3 comments:
எமது ஆழ்ந்த அஞ்சலிகள்!
வானொலி மாமா மறைந்தாலும் மனதுகளில் வாழ் வழிசமைத்தீர்கள்....! ஆழ்ந்த அனுதாபங்கள்...!
வருகைக்கு மிக்க நன்றி தங்கமுகுந்தன் மற்றும் கதியால்
Post a Comment