கழிந்து போன யூலை 7 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான குடும்பங்களில் எதையெல்லாம் மறந்திருப்பார்களோ தெரியாது ஆனால் அந்த நேரம் Channel 7 தொலைக்காட்சியின் The Zoo நிகழ்ச்சியை மட்டும் மறந்து தொலைத்திருக்கமாட்டார்கள். அது வேறொன்றும் இல்லை. அன்று தான் தன் வயிற்றில் 22 மாதங்களாச் சுமந்து வந்த தன் பிள்ளையை Thong Dee ஈன்ற பொழுதைக் காட்டிய விவரண நிகழ்ச்சி அது. அட இதுக்குத் தானா என்று நினைக்கலாம், ஆனால் இந்த குழந்தை யானை அவுஸ்திரேலியர்களின் கவனத்தையும் நேசத்தையும் ஈர்க்க ஒரு விசேஷ காரணம் இருந்தது.
Thong Dee தாய்லாந்தின் வீதி யானையாக இருந்து சிட்னியில் உள்ள Taronga Zoo வுக்கு கொண்டுவரப்பட்டவள். இவள் தவிர Porntip, Pak Boon, Tang Mo ஆகிய பெண் யானைகளும் இங்கே உண்டு. 22 மாதங்களாக தன் வயிற்றில் கருவைச் சுமந்த Thong Dee ஐ இந்த சரணாலயத்தின் பாதுகாவலர்கள் கண் போல் காத்தனர் என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் இவள் நல்லபடியாக ஒரு பிள்ளையை ஈன்றால் அதுதான் அவுஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய இனத்து யானை என்ற பெருமையைப் பெறும் என்பதேயாகும்.
யூலை 4 ஆம் நாள் பிறந்தது, Thong Dee இன் வயிற்றில் 96 கிலோவாக இருந்த பாரம் இறங்கும் நாள் அது. Pak Boon, Tang Mo என்ற மற்றைய பெண் யானைகள் தம் கூண்டுகளில் இருந்து Thong Dee இன் போக்கில் ஏற்பட்ட விசித்திரமான மாற்றங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தன. அதிகாலை 3.08 ஆகிறது Thong Dee பெருங்குரலெடுத்து அலறுகிறாள். சரணாலயத்தின் யானைகள் பிரிவின் மேற்பார்வையாளர்களும் மருத்துவரும் Thong Dee ஐ சாந்தப்படுத்த முடியாது திணறுகின்றார்கள். மெல்ல மெல்ல Thong Dee இன் உடம்பிலிருந்து வருகின்ற அந்த உயிர்ப் பொதி தொப்பென்று கீழே விழுந்து அசைகின்றது. அதன் உடம்பெல்லாம் கர்ப்ப நீரால் குளிப்பாட்டிய பீய்ச்சல் பரவியிருக்கின்றது. இவ்வளவு நாள் தன்னில் இருந்த பாரம் இறங்கிதே என்பதை விட அந்த நூறு கிலோக் குழந்தை தன் உடம்பில் இருந்து வெளியேற வேதனையால் Thong Dee துடித்துக் கொண்டே அங்கும் இங்கும் அலைந்து அலறினாள். தான் கீழே போட்ட அந்தக் குட்டியை நோக்கி அவள் வருவது எதற்காக? குட்டியைக் கொல்லவோ என்று பதைபதைக்கின்றார்கள் கூண்டின் உள்ளே இருக்கும் அந்தக் கண்காணிப்பாளர்கள். அந்தக் குட்டியை இவள் சேதாரப்படுத்தக்கூடாது என்ற கவனமும் எச்சரிக்கையும் அவர்களை ஆட்கொள்கிறது. கால்களை மட்டும் அசைத்து மெல்ல எழும்ப எத்தனிக்கும் அந்த ஆண் யானைக்குட்டியின் சின்னத் தும்பிக்கை ஆட Thong Dee மெல்லப்போய் அந்தச் சிறுதும்பிக்கையினைத் தன் தும்பிக்கையால் அலம்பிக் கொண்டே மெல்ல இறுக்கிக் கொண்டாள். அதுவரை சோர்வும், எதிர்பார்ப்பும் கலந்த கலவையாய் இருந்த சரணாலய கண்காணிப்பாளர்கள் ஆறுதல் கொள்கிறார்கள். Taronga Zoo வின் இயக்குனர் Guy Cooper கண்களில் இருந்த நித்திரைக் கலக்கத்தை மீறி ஆனந்தக் கண்ணீர் பரவிக் கண்களைச் சிவப்பாக்கி நிற்கின்றது.
Thong Dee இன் கூண்டுக்குள் வந்திருந்த புதிய விருந்தாளி யார் என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுகார யானைகள் Pak Boon, Tang Mo அந்தக் குட்டியை கூண்டுக்குள்ளால் தும்பிக்கை விட்டுத் தடவிப்பார்க்கிறார்கள். யானை மேற்பார்வையாளர்கள் இந்தப் பெண்களுக்கு இனி எப்படியெல்லாம் இந்தக் குழந்தையோடு மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி கொடுக்கிறார்கள். Thong Dee இன் முலைகளைக் காட்டி பால் குடிக்குமாறு அந்தக் குட்டிக்குப் பழக்குகிறார்கள். ருசி கண்ட பூனை போல ஒரு நாள் பழக்கத்தில் பால்குடித்துப் பழிய அந்தக் குட்டியன் சதா எந்த நேரமும் தாயின் மடி தேடித் தாகம் தீர்க்கிறான். சும்மாவா ஒரு நாளைக்கு இவனுக்குத் தேவைப்படும் பால் 12 லீட்டர் ஆச்சே. சில நேரங்களில் இவனின் அரியண்டம் தாங்க முடியாமல் மென்மையாக விரட்டும் தாயைத் தன் முதுகால் இட்டுத் தள்ளி கூண்டின் ஒரு மூலையில் வைத்துப் பால் குடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தையும் பழகிக்கொண்டான் அந்தக் குட்டி யானை. நேரே பார்த்தபடி பின்னுக்குப் பின்னுக்குப் போகும் விசித்திரமான பழக்கத்தையும் பழகிக் கொண்டான், இவன் தந்தை Gung இற்கு இதே மாதிரியான பண்பு இருந்ததைச் சொல்லி ஒப்பிட்டுப்பார்த்தார்கள். ANZ போன்ற முக்கிய வங்கிகளின் பணக்கொடுப்பனவு இயந்திரத்தின் (ATM)கணினித் திரையில் கூட "அவுஸ்திரேலியா ஈன்றெடுத்த முதல் ஆசிய யானைக் குட்டியை வரவேற்கிறோம்" என்று அமர்க்களப்படுத்தினார்கள்.
எல்லாம் சரி, அவுஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய யானை ஆச்சே என்ன பெயர் வைக்கலாம்? அதற்கும் ஒரு வழி ஏற்படுத்தினார்கள் சரணாலயத்தினர். அவுஸ்திரேலியாவின் எல்லாத் தினசரிகள்,வானொலி தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தக் குட்டி யானைக்குப் பெயர் வைக்கும் போட்டி ஒன்று வைத்தார்கள். அதுவும் சும்மா இல்லை , போட்டியில் சிறந்த பெயரை வைத்துக் கவர்பவருக்கு தாய்லாந்து சென்று வர விமானச் சீட்டு என்றும் கவர் போட்டார்கள். முப்பதாயிரம் பேருக்கு மேல் இந்தப் பெயர்வைக்கும் போட்டியில் கலந்து கொண்டார்கள். யூலை 27 ஆம் திகதி இந்தக் குட்டிக்கு என்ன பெயர் கிடைக்கப் போகின்றது என்று எல்லோரும் ஆவலோடு இருக்க Blayney என்பவருக்குத் தான் பெயர் வைத்த அதிஷ்டம் கிட்டியது, கூடவே அவரின் குடும்பம் தாய்லாந்தின் Lampang யானைச் சரணாலயம் சென்று வரத் தேர்வானது. Blayney வைத்த பெயர் தான் என்ன? “Luk Chai” என்பது தான் இந்தக் குட்டிக்குக் கிடைத்த பெயர் Look- Chai என்று உச்சரிக்க வேண்டிய அந்தப் பெயரின் அர்த்தம் தான் என்ன? தாய்லாந்தின் மரபுரிமை அர்த்தப்படி அந்தப் பெயரின் அர்த்தம் என் மகன் (my son) என்பதாம்.
பிறந்து மூன்று கிழமை கழித்துப் பெயர் வைக்கப்பட்ட “Luk Chai” அந்த மூன்று கிழமைக்குள் நிறையப் பாடங்களைப் படித்து முடித்து விட்டான். தன் தாயுடனும், மற்றைய சித்திமார் Pak Boon, Tang Mo கூட உலாவப் போகும் போது முந்திரிக்கொட்டையாய் அவர்களை விலக்கி விட்டு தான் ஓடிக்கொண்டே முந்திப் போவது போன்ற கெட்ட பழக்கம இவனிடம் இருந்தது, அதை நயமாகச் சொல்லி மெதுவாக குழப்படி செய்யாமல் போக வேண்டும் என்று பயிற்சியாளர்கள் சொல்லிக் கொடுக்க அதைக் கேட்டு நடந்தான் Luk Chai. மண் சகதியில் நீர்க்குளியல் எடுப்பதென்றால் Luk Chai இன் சாதிக்கு (யானைகளுக்கு) கொள்ளைப் பிரியம். இதென்ன புதிய அனுபவமாக இருக்கிறது என்று ஆரம்பத்தில் கொஞ்சம் நெளிந்தவன் பின்னர் சேற்றுக் குளியலை விட்டு வெளியே வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அளவுக்கு அந்த விளையாட்டில் ஒன்றிப் போனான். காலை முழுவதும் நீர்க்குளியல் அடித்துக் களைத்த இவர் மெல்லச் சோர்த்து போய் கீழே பொத்தொன்று விழுந்து தூங்கிப் போகும் அழகே தனி. சில வேளைகளில் நின்று கொண்டே "ஸ்ஸ்ஸ்யப்பா கண்ணைக் கட்டுதே" என்று "குட்டி" தூக்கம் போடுவதுண்டு.
கறுத்த நிறத்தில் கிடைத்த பெரும் உருண்டைப் பந்தை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே அந்தப் பந்தில் வயிற்றில் அமுக்கி அமுக்கிப் பார்த்தான். தினமும் 12 லீட்டர் பால் குடிக்கிறானே இவனின் நிறை எவ்வளவாய் இருக்கும், அந்த நிறை இவனின் வளர்ச்சிக்கு ஏற்றதா என்றெல்லாம் கண்காணிப்பாளர்கள் சோதனை செய்ய வேண்டிய கடனும் இருந்தது. நிறை அளக்கும் இயந்திரத்தைக் கொண்டு போய் அவன் முன் வைத்தால் ஒரு சுற்றுப் பார்த்து விட்டு சரி எதுக்கும் ஏறி நிற்போம் என்று ஏறிய அவனின் இன்றைய நிறை 132 கிலோவாம். இப்போதெல்லாம் அந்த நிறை அளக்கும் இயந்திரத்தில் நீண்ட நேரம் ஏறி நின்றால் என்ன என்று இவன் யோசித்துச் செய்யும் அடம்பிடிப்புக்களும் நடப்பதுண்டாம்.
Luk Chai இற்கு என ஒதுக்கிய நீர்த்தொட்டியில் பயிற்சி கொடுக்க வந்த முதல் நாளன்று தன் முன் இரண்டு கால்களையும் மட்டும் தொட்டியில் வைத்துக் கொண்டே இனி என்ன செய்யலாம் என்று யோசித்துத் திணறியவன் நாளடைவில் நீர் யானையோ என்று எண்ணும் அளவுக்கு நீர்மூழ்கி மகிழ்ந்தான். தன்னுடைய தாய் Thong Dee மற்றைய சித்திமார் Pak Boon, Tang Mo எல்லோரும் ஏதோ பச்சை நிற வஸ்துவை வாயில் தள்ளுகிறாகளே இதுவும் பசியைப் போக்குமா என்றெண்ணி ஒரு நாள் அவர்களுக்குப் பக்கமாகப் போய் தானும் கீழே கிடந்த பச்சிலை,குழைகளை வாய்க்குள் தள்ளப்பார்த்தால் அது பழக்கமில்லாதவன் கையில் கிடந்த சீனத்து chopstick போல மெல்ல நழுவ இவன் தும்பிக்கையைத் தான் வாயில் திணிக்க முடிந்தது. இனிமேல் இந்த விஷப்பரீட்சை வேண்டாம் என்று இன்னும் தன் தாய்ப்பாலின் மகத்துவம் தேடிப் போகிறான் இவன். தாயின் மடியில் பால் குடிக்கும் அழகே தனி. கொஞ்ச நேரம் ஒரு காலை அந்தரத்தில் தூக்கிக் கொண்டே கொஞ்ச நேரம் பால் குடித்து
விட்டு பிறகு இந்தக் காலை நிலத்தில் நிறுத்தி விட்டு அடுத்த காலைத் தூக்கியவாறே தாகம்/பசி தீர்க்கிறான்.
தன் தாயிடம் மட்டுமன்றி சித்திமார் Pak Boon, Tang Mo வுடனும் கூட நேசம் கொள்கின்றான், அவர்களும் இவன் குழந்தை தானே என்று பரிவாக நடப்பதுண்டு. ஆனால் Luk Chai இந்த அனுகூலத்தை அளவுக்கதிகமாகவே பயன்படுத்தித் தொலைப்பதுண்டு. சித்தி Tang Mo படுத்திருக்கும் போது தன் முதுகால் நெம்பித் தள்ளி "எழும்பு எழும்பி விளையாட வா" என்று தொல்லைப்படுத்துவான். தன் தாய் மர்றும் சித்திமாருக்குக் கீழே ஒளிந்து உலாவுவதும் இவனுக்குப் பிடிக்கும்.
மண்மேட்டுத் திட்டியைக் கண்டதும் எவரெஸ்ட் சிகரம் ஏறுபவன் போல ஓடிப்பாய்ந்துப் போய் அதில் ஏறிக் கவிழ்ந்து விழுந்து இவன் அழுத கதை கூட உண்டு. அதற்குப் பிறகு தாய்க்காறி இந்த மண்மேட்டுப் பக்கம் Luk Chai போக விடுவதில்லை. தான் பெற்ற கலைகளை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக்கொடுக்கிறாள் Luk Chai இன் தாய் Thong Dee மெல்ல மெல்லச் சொல்லிக் கொடுக்க கிளிப்பிள்ளை போல பயின்று கொண்டிருக்கிறான் இவன். நீச்சல் குளத்தில் நீரை மொண்டு மெல்லப் பீய்ச்சியடிப்பது, பந்தை அமுக்குவதற்கு மட்டுமல்ல மெல்லக் காலால் உதைத்தால் தொலைவுக்குப் போகும் என்பதையும் அறிந்து கொண்டான். சேற்று மண்ணில் விளையாடுவது மட்டும் முக்கியமல்ல மெல்ல இருந்து சேற்றுக் குளியலைச் செய்வது கூட அவசியமானது என்றெல்லாம் இப்போது அவனுக்குத் தெரியும். இப்போது Luk Chai பிறந்து ஒரு மாதம் கடந்து விட்டது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாயாக Thong Dee யும் அவன் சித்திமாரும் Pak Boon, Tang Mo பார்க்க "நான் வளர்கிறேனே மம்மி" என்று சொல்லாமற் சொல்லி Luk Chai வளர்கிறான் பெரியவனாக.
0000000000000000000000000000000000000000000000000000000000000
அது ஒரு ஏழு, எட்டு வயதிருக்கும் எனக்கு. என் ஆரம்பப் பள்ளியான அமெரிக்கன் மிஷனில் பரிசளிப்பு விழா வருகுதாம். எங்கட வகுப்பில் பேச்சுப் போட்டி, வாசிப்புப் போட்டி, நல்ல வடிவா எழுதுறவைக்கு எண்டெல்லாம் போட்டிகள் வைக்கினம். விடுவனே நான், இரவிரவா கத்திக் கத்திப் பேச்சுப் போட்டியைப் பாடமாக்க முனைய என்ர அப்பாவோ அதை எப்படி ஏற்ற இறக்கத்தோட பேசவேணும் எண்டும் சொல்லித் தருகினம். போட்டி நாள் வந்தது. நானும் மனப்பாடம் செய்ததை கிறுகிறுவெண்டு ஒப்புவிக்கிறன், நான் பேசிக்கொண்டே போக காதுக்குள்ள அப்பா "ஏற்ற இறக்கத்தோட சொல்லவேணும்" எண்டது திரும்பத் திரும்ப வருகுது. அடுத்த நாள் ரீச்சர் ஒழுங்கு முறைப்படி ஆர் ஆருக்கெல்லாம் பரிசு கிடைக்கும் எண்டு அறிவிக்கிறா. எட, பேச்சுப் போட்டியில எனக்குத் தான் முதற் பரிசு.
பரிசளிப்பு விழா நாளும் வந்தது. அப்ப வரைக்கும் தெரியாது என்ர சித்தப்பா தான் எனக்கு பரிசு தருவார் எண்டு. அவர் அந்தப் பள்ளிக்கூடத்தின் பழைய மாணவர், தொழில் அதிபர் என்ற பெருமை வேறு அவரை மேடைக்கு இழுத்து வந்தது. மேடையில் சித்தப்பாவின் கையால் பரிசை வாங்குறேன்.
பிறவுண் பேப்பரால் சுத்திய அந்தப் பரிசைப் பிரித்துப் பார்த்தால் "யானை", மஸ்கோ முன்னேற்றப்பதிப்பகம் என்று போட்டிருந்தது அந்தக் கதைப்புத்தகம். அப்போதெல்லாம் சோவியத் யூனியன் என்ற நாடு இருந்த போது தமிழில் எல்லாம் இப்படியான ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகங்கள் எல்லாம் வரும். சோவியத் நாடு எண்ட 2 ஆனந்த விகடன் சைஸ் சஞ்சிகை கூட வந்தது.
"யானை" என் விருப்பத்துக்குரிய புத்தகமானது. ஏனென்றால் எனக்குக் கிடைத்த முதல் பரிசு நீ தானே. காட்டில் இருந்து களவாக ஓடிவரும் யானை நகரத்தில் வாழும் சிறுவன் ஒருவனின் நட்புக் கிடைத்து இருக்கையில் ஒரு நாள் அந்தச் சிறுவனின் பள்ளிக்குத் தானும் போகவேண்டும் என்று அடம்பிடித்துப் போனது மாத்திரம் இல்லாமல் அங்கே இருந்த சோக்கட்டியையும் கடித்துப் பார்த்தால் வாயெல்லாம் வெந்து, ஐயோ இந்த ஊரே வேண்டாம் என்று ஓடி விடுமாம்.
000000000000000000000000000000000000000000000000000000000000000
அன்று ஆரம்பித்தது என் யானை ஆசை ஆனைக்குட்டியின் படம் வந்தால் என் முகத்தில் ஒளியைக் காணலாம். சின்னச் சின்ன யானைக்குட்டிகளின் சிலைகள் என் முன்னே வீற்றிருக்க தட்டச்சிக் கொண்டிருக்கிறேன் நான். உலகில் நான் நேசிக்கும் முதல் விருப்பத்துக்குரிய யானைக்குட்டியே உன் டயறியை எழுதியதில் பெருமை அடைகின்றேன்.
0000000000000000000000000000000000000000000000000000000000000000
பிற்குறிப்பு: “Luk Chai” என்ற யானைக்குட்டி பிறந்த தினம் முதல் அதன் படிநிலை வளர்ச்சிகளை Taronga Zoo இன் இணையத்தில் டயறிக்குறிப்பாகப் பதிந்து வைக்கிறார்கள், அந்த விபரங்களை நிதமும் வாசித்துத் தலைக்கேற இந்தப் பதிவை எழுதி முடித்தேன். இதில் “Luk Chai” பற்றிச் சொன்ன தகவல்கள் யாவும் உண்மையே.
படங்கள், தகவல் உதவி: Taronga Zoo இணையத்தளம்
“Luk Chai” யானைக்குட்டியின் பிறப்பினைக் காட்டும் காணொளியை ரசிக்க
40 comments:
சூப்பர் கானாஸ்....நல்லதொரு பகிர்வு!! வெகு சுவாரசியமாக இருந்தது...மூச்சு விடாமல் படித்து முடித்தேன்! :-)
//இப்போதெல்லாம் அந்த நிறை அளக்கும் இயந்திரத்தில் நீண்ட நேரம் ஏறி நின்றால் என்ன என்று இவன் யோசித்துச் செய்யும் அடம்பிடிப்புக்களும் நடப்பதுண்டாம்.///
கலக்கல் பாஸ்! ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு படிக்கிறதுக்கு சில இடங்களில் புன்னகை பூக்க வைக்கும் வரிகள்!
//அன்று ஆரம்பித்தது என் யானை ஆசை ஆனைக்குட்டியின் படம் வந்தால் என் முகத்தில் ஒளியைக் காணலாம். சின்னச் சின்ன யானைக்குட்டிகளின்் சிலைகள் என் முன்னே வீற்றிருக்க தட்டச்சிக் கொண்டிருக்கிறேன் நான். உலகில் நான் நேசிக்கும் முதல் விருப்பத்துக்குரிய யானைக்குட்டியே உன் டயறியை எழுதியதில் பெருமை அடைகின்றேன்//
எத்தனை பெரிய விலங்காக இருந்தாலும் எல்லார் மனங்களிலும் எளிதில் கொஞ்சம் பய உணர்வுடனே இடம்பிடித்துக்கொள்ளும் யானை! எப்பொழுது பார்த்தாலும் ஒரு வித இன்பம் மனதில் தானாகவ வந்து அமர்வது எல்லோருக்குமே பொதுதான்! :))
பிரபா கலக்கல் பதிவுடன் ஒரு கோப்பை தேத்தண்ணியும் தாருங்கோ படிச்சுக் களைச்சுப்போனேன்.
அந்தக்குட்டி யானை உங்களைப்போலவே இருக்கிறது
நல்லா ரசிச்சு எழுதியிருக்கிறீங்க. வாசிக்கவும் சுவாரசியமா இருந்தது. குட்டி யானை so cute :).
சுவாராசியமாக இருந்தது...கொடுத்து வைத்த யானைக்குட்டி...:-))
சுவாரசியாமான பகிர்வு....
:)))
சந்தனமுல்லை said...
சூப்பர் கானாஸ்....நல்லதொரு பகிர்வு!! வெகு சுவாரசியமாக இருந்தது...மூச்சு விடாமல் படித்து முடித்தேன்! :-)//
மிக்க நன்றி பாஸ், பப்பு டைம்ஸ் மாதிரி இவனைப் பற்றி எழுதிட்டேன்.
// ஆயில்யன் said...
எத்தனை பெரிய விலங்காக இருந்தாலும் எல்லார் மனங்களிலும் எளிதில் கொஞ்சம் பய உணர்வுடனே இடம்பிடித்துக்கொள்ளும் யானை! எப்பொழுது பார்த்தாலும் ஒரு வித இன்பம் மனதில் தானாகவ வந்து அமர்வது எல்லோருக்குமே பொதுதான்! :))//
உண்மைதான், யானையை மூர்க்கமாக அளவுக்கு மேல் சித்தரிக்கும் மனிதன் என்ன உசத்தியோ, யானையைப் பார்த்தாலே ஒரு முறுவல் வருமே.
மிகச்சிறப்பான எழுத்து நடை கானா.. சுவாரஸ்யமா சொல்லி எங்க மனசையும் படிக்கும் போதே கொள்ளை அடிச்சுடுச்சு அந்த குட்டியானை.
உங்க டைரிக்குறிப்புகள் அழகு. தொடரவும்!
ரசிகனாய்
-சென்ஷி
கானா பிரபா பதிவு இப்படித்தான் இருக்கும் என்பதைத்தாண்டி வந்த ஒரு அருமையான பதிவு. ஒரு மிருகம் என்று பாராமல் அதை எவ்வளவு பக்குவமாக கையாளுகிறார்கள். வேற்று நாட்டு அல்லது வேற்று பிரதேச யானைக் குட்டிக்கு அந்த நாட்டில் அவ்வளவு மரியாதை. ம்ம்ம்ம் அங்கோ...நிலைமை வேறு..மனித இனம் அதே நாட்டுக்குள்..அதே நாட்டு அரசால்..! யானையாக பிறந்திருக்கலாம்.
எனக்கும் யானை பிடிக்கும்.
அங்கிள் அங்கிள் யானைக்கதை சொல்லுங்கள் :)
நான் முதன் முதலாக யானையை நேரில் பார்த்தது மாத்தளையில்தான். எங்கள் வீட்டருகில் ஒரு பூங்கா இருந்தது. அங்கு ஏதும் விழாக்கள் நடக்கும்போது யானைகளின் சாகசக்காட்சிகள் இடம்பெறும். அண்ணாக்கு தெரிந்த ஒருவர்தான் யானைகளுக்குப் பயிற்றுவிப்பவர். ஒருமுறை அவரின் வீட்டுக்குப்போய் அவர் பயிற்றுவிப்பதைப் பார்த்திருக்கிறேன்.
யானைகள் பற்றிய விபரணம் பயம் வரக்கூடியதாகவே எப்போதும் எழுதப்படும் ஆனால் உங்களின் டயறிக்குறிப்பு மிகவும் வித்தியாசம்.
அன்பு கானா,
அழகான படங்களோடு அருமையான பதிவு.கலக்கல் எழுத்துநடையில் காட்சிகளை கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள்.
வாழ்த்துக்கள் பிரபா.
நானும் எந்த கோயிலுக்கு சென்றாலும் யானை இருக்கிறதா என்றுதான் முதலில் பார்ப்பேன்.பின் தரிசனம் முடித்துவிட்டு குறைந்தது அரைமணிநேரமாவது கொஞ்சம் தள்ளி நின்று ரசிப்பேன். :))
குட்டி போட்டதும் வலியால் துடித்த அம்மா யானை, எங்கே குட்டியை தெரியாமல் மிதித்து விடுமோ என்று, காப்பாளர்கள் , குட்டியை கஷ்டப்பட்டு நகர்த்தியதை பார்த்தேன். லுக் சாயின் சித்தியும் கர்ப்பமாம். அம்மாவை விட சித்தியிடம்தான் ரொம்ப நேரம் இருக்கிறானாம்.
வந்தியத்தேவன் said...
பிரபா கலக்கல் பதிவுடன் ஒரு கோப்பை தேத்தண்ணியும் தாருங்கோ படிச்சுக் களைச்சுப்போனேன்.//
ஆகா, தேத்தண்ணியோட வடையும் கேட்பீங்கள் போல;) என்னைப் போல இருக்கிறானா அவன்
கலை said...
நல்லா ரசிச்சு எழுதியிருக்கிறீங்க. வாசிக்கவும் சுவாரசியமா இருந்தது. குட்டி யானை so cute :).//
வாங்கோ கலை, ஒரு மாசமா எழுத நினைத்து மனதில் தேங்கி இருந்தது இன்று தான் மெய்ப்பட்டது.
’டொன்’ லீ said...
சுவாராசியமாக இருந்தது...கொடுத்து வைத்த யானைக்குட்டி...:-))//
வாங்கோ டொன் லீ, ஒரு சின்ன உயிரினத்துக்கு இந்த நாட்டில் கொடுக்கும் கவனத்தைப் பார்த்தீங்களா.
பதி said...
சுவாரசியாமான பகிர்வு....
:)))//
மிக்க நன்றி பதி
உங்களின் ஆக்கத்தைப் படிக்கும் போது மிகவும் சுவையாக இருந்தது. அதன் பின்னர் அவ்வொளித்தொகுப்பைப் பார்த்ததும் ஓர் வெறுமை சூழ்ந்து கொண்டுள்ளது.
எதனையும் அதன் சூழ்நிலையில் இருத்தும் போதுதான் மிகவும் அழகாக இருக்கிறது.
மிக அற்புதமான பதிவாக தந்துள்ளிர்
கள். மிக அழகாக சுவாரசியமான
பதிவு தந்தற்கு மிக்க நன்றிகள்பல
சென்ஷி said...
மிகச்சிறப்பான எழுத்து நடை கானா..//
வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி சென்ஷி
//கதியால் said...
ஒரு மிருகம் என்று பாராமல் அதை எவ்வளவு பக்குவமாக கையாளுகிறார்கள். //
வணக்கம் நண்பா அதுதான் இங்கே முக்கியம், இந்தச் சின்ன உயிரினத்துக்கு கொடுத்த முக்கியத்துவமும் எந்த ஒரு உயிரினமும் அற்பமில்லை என்ற மனப்பாங்கில் உண்மையிலேயே இவர்கள் வளர்ச்சி அடைந்த நாடுகள் தான்.
சுவாரசியமாக இருக்கின்றது... தொடங்கியதும் முடிந்ததும் தெரியாமல் அப்படியே வாசித்து முடிச்சாச்சுது... :)
விபரணங்கள் ஒவ்வொன்றும் பிரமாதம்.. :)
சினேகிதி said...
எனக்கும் யானை பிடிக்கும்.
அங்கிள் அங்கிள் யானைக்கதை சொல்லுங்கள் :)//
வாங்கோ வாங்கோ, பந்தம் படத்தின்ர பாட்டாடோ வாறீங்க, உங்கள் நினைவைப் பகிர்ந்தமைக்கும் நன்றி தங்கச்சி
துபாய் ராஜா said...
அன்பு கானா,
அழகான படங்களோடு அருமையான பதிவு//
மிக்க நன்றி நண்பா
வரிக்கு வரி ரசிக்க வச்சிட்டிங்க தல ;))
சின்ன அம்மிணி said...
லுக் சாயின் சித்தியும் கர்ப்பமாம். அம்மாவை விட சித்தியிடம்தான் ரொம்ப நேரம் இருக்கிறானாம்.//
வாங்க சின்ன அம்மிணி
லுக் சாயின் சித்தியின் வாரிசைப் பார்க்கவும் காத்திருக்கிறோம்.
Open Talk said...
உங்களின் ஆக்கத்தைப் படிக்கும் போது மிகவும் சுவையாக இருந்தது. அதன் பின்னர் அவ்வொளித்தொகுப்பைப் பார்த்ததும் ஓர் வெறுமை சூழ்ந்து கொண்டுள்ளது. //
மிக்க நன்றி நண்பரே, இங்கே நான் வாழும் சூழ்நிலையில் இதை நேரே பொருத்திப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததும் என் ஈடுபாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
சுபானு said...
சுவாரசியமாக இருக்கின்றது... தொடங்கியதும் முடிந்ததும் தெரியாமல் அப்படியே வாசித்து முடிச்சாச்சுது... :)//
மிக்க நன்றி சுபானு
கோபிநாத் said...
வரிக்கு வரி ரசிக்க வச்சிட்டிங்க தல ;))//
நன்றி தல
சிறப்பான எழுத்து நடை. இரசித்து வாசித்தேன்.
நன்றி
//சின்னச் சின்ன யானைக்குட்டிகளின் சிலைகள் என் முன்னே வீற்றிருக்க...//
எனக்கும் இந்த வியாதி உண்டு பிரபா.இன்னொரு வியாதிக்காரனைக் கண்டதில் மகிழ்ச்சி.
உங்கள் நடை அழகு பிரபா (எழுத்தைச் சொன்னேன்).
அவுஸ்திரேலியாவில் இப்படிக் கொண்டாடுகின்றார்கள்...
ஆனால் இலங்கையில் பின்னவலவில், உலகின் முதலாவது யானைகள் காப்பகம் என்று தம்பட்டமடித்துக்கொண்டு இரு யானைக்குட்டிகளைத் தாய்மாரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து விஹாரைகளுக்குத் தானங்கொடுத்திருக்கின்றார்கள். இந் நடவடிக்கையின்போது தாய் யானைகளும் குட்டிகளும் காயமுற்றதாகவும் செய்திகள். பெளத்தத்தின் பெயரால், தமிழர்களை ஒரு வழி பண்ணியாயிற்று. இப்போது வாய்பேசா ஜீவன்கள்...!
http://www.lankatruth.com/index.php?option=com_content&view=article&id=2910:two-elephant-calves-tortured-before-the-ceremonial-handover-&catid=35:local&Itemid=50
பிரபா,ஒரு கதை வாசிப்பதுபோல ரசனையோடு வாசித்தேன்.
எப்படித்தான் எழுதுவீர்களோ மூச்சு விடாம...!
அருமை பிரபா. நேரில் நின்று பார்த்தது போன்ற உணர்வு. மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
HK Arun said...
சிறப்பான எழுத்து நடை. இரசித்து வாசித்தேன்.
//
மிக்க நன்றி அருண்
கரவெட்டியான் said...
எனக்கும் இந்த வியாதி உண்டு பிரபா.இன்னொரு வியாதிக்காரனைக் கண்டதில் மகிழ்ச்சி.
//
வணக்கம் கரவெட்டியான்
எனக்கு ஒரு கூட்டாளி யானையா ;)
எங்கள் நாட்டில் எதுவும் நடக்கும் உயிரோடு சமாதி கட்டிய வம்சம் ஆட்சி செய்யும் நாடல்லவா :(,
ஹேமா said...
பிரபா,ஒரு கதை வாசிப்பதுபோல ரசனையோடு வாசித்தேன்.
எப்படித்தான் எழுதுவீர்களோ மூச்சு விடாம...!//
வாங்கோ ஹேமா, குட்டி யானையின் படத்தைப் பார்த்தாலே போதுமே தெம்பு தானா வரும்.
சிவக்குமார் (Sivakumar) said...
அருமை பிரபா. நேரில் நின்று பார்த்தது போன்ற உணர்வு. மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.//
மிக்க நன்றி சிவக்குமார் வாசித்து தங்கள் கருத்தளித்ததற்கு
ஹைய்யோ....இன்னிக்குத்தான் பார்த்தேன்.
செல்லம்போல இருக்கான். என்ன துறுதுறுப்பு பாருங்க. ஐயோ தூக்கிக் கொஞ்ச ஆசை வருதே:-)
லுக் ச்சாய்க்கு எங்கள் ஆசிகள். குழந்தை நல்லா இருக்கட்டும்.
மைக்கேல் ஜாக்சனின் மறுபிறவியா இருப்பானோ? ஸ்டைலா பின்னாலே நடக்கறான்!!!!
நான் ஆறாப்புப் படிக்கும்போது பள்ளி ஆண்டுவிழாவில் தலைமை தாங்கியவரிடமிருந்து பல பரிசுகள் வாங்கினேன். ஓட்டம், ஸ்கிப்பிங், ஸ்பூனில் எலுமிச்சை எடுத்துக்கிட்டு ஓடுவது, வகுப்பில் முதல் மாணவி இப்படி. எனக்குக் கூச்சமா இருந்துச்சு. ஆனால் பரிசளித்தவர் கண்கள் நிறைஞ்சுபோச்சு. அவர் என் தாய்.
நன்றி பிரபா
வாங்க துளசிம்மா,
வர வர லுக் சாயிற்கு ரசிகர்கள் அதிகமாகிக்கிட்டே போகுதே ;)
உங்க அம்மா கையால் பரிசா, கேட்கவே இனிக்குதே
இவனின் அரியண்டம் தாங்க முடியாமல் மென்மையாக விரட்டும் தாயைத் தன் முதுகால் இட்டுத் தள்ளி கூண்டின் ஒரு மூலையில் வைத்துப் பால் குடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தையும் பழகிக்கொண்டான் அந்தக் குட்டி யானை//
ஆஹா!!!
நீர்க்குளியல் அடித்துக் களைத்த இவர் மெல்லச் சோர்த்து போய் கீழே பொத்தொன்று விழுந்து தூங்கிப் போகும் அழகே தனி. சில வேளைகளில் நின்று கொண்டே "ஸ்ஸ்ஸ்யப்பா கண்ணைக் கட்டுதே" என்று "குட்டி" தூக்கம் போடுவதுண்டு.
கண்முன்னே தோன்றுகிறது அது தூங்கும் காட்சி.
//கொஞ்ச நேரம் ஒரு காலை அந்தரத்தில் தூக்கிக் கொண்டே கொஞ்ச நேரம் பால் குடித்து
விட்டு பிறகு இந்தக் காலை நிலத்தில் நிறுத்தி விட்டு அடுத்த காலைத் தூக்கியவாறே தாகம்/பசி தீர்க்கிறான்.//
ரொம்ப அருமையா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. ஆனைக்குட்டியைப் பிடிக்காதவங்க யாரு?? ரொம்ப நன்றி. மூன்று முறைகள் படிச்சு அனுபவிச்சேன், மனக்கண்களால் கண்டேன். யூ ட்யூபிலும் பார்த்தேன். நன்றி.
கோபி லிங்க் கொடுத்து வந்தேன்.
வாங்க கீதா சாம்பசிவம்
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், லுக் சாயின் அம்மா மற்றும் சித்தி ஆட்களை தாய்லாந்தில் மூன்று வருஷங்களுக்கு முன்னர் பாகனும், புத்த பிட்சுக்களும் நேற்று வந்து பார்த்தார்களாம், அவங்க பேசின "தாய்" மொழியை லுக் சாயின் தாய் இன்னும் ஞாபகம் வச்சு நடந்தது அதிசயமா செய்தியில் சொன்னாங்க .அதான் இப்போது லேட்டஸ்ட் நியூஸ்.
அன்பின் கானா,
உங்களுக்கு ஒரு விருது. http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_28.html
இயல்பான எழுத்துநடை கொண்ட உங்கள் அனைத்து வலைப்பூக்களுமே , எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த விருது.
எனது அன்பிற்காக இந்த பல்சுவை பதிவர் விருதை வாங்கி கொள்ளுங்கள். (நீங்கள் ஏற்கனவே வாங்கி இருந்தாலும் )
நன்றி.வணக்கம்.
அன்பன்
துபாய் ராஜா
படங்களுடன் பதிவு அருமை."பல்சுவை பதிவர் விருதிற்கும்" வாழ்த்துக்கள்.
nalla irundhadhu ..
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?
அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com
நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
@i_thenali
என்ன ஒரு விவரணை அவ்ளோ பெரிய நாட்டில் ஒரு உயிரினத்துக்கு என்னவொரு மரியாதை மொத்தத்துல செம்ம செம்ம செம்ம
Post a Comment