Wednesday, July 08, 2009
நடிகமணி வி.வி.வைரமுத்து 20 ஆம் ஆண்டு நினைவு இன்று
நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள் மறைந்து இன்றோடு 20 ஆண்டுகள் கடந்திருக்கின்றது. இந்தத் தகவலை இன்று தான் அறிந்து கொண்டதனால் நினைவுத் தொகுப்பை முழுமையாகத் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன். தற்போது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் நினைவைச் சிறப்புக்கும் முகமாக இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்காகத் தயாரித்து வழங்கிய "பக்த நந்தனார்" நாடகத்தை தற்போது வழங்கிக் கொண்டிருக்கின்றேன்.
தமிழ்விசை என்னும் இணையத்தளத்தில் வெளியானா வி.வி.வைரமுத்து அவர்கள் குறித்த பதிவை நன்றியோடு மீள் இடுகையாகத் தருகின்றேன்.
கூத்திசை நடிகர். இசையமைப்பாளர்
பிறந்தது: காங்கேசந்துறை - தமிழீழம்
வாழ்வு: பெப்ரவரி 11, 1924 - ஜூலை 8, 1989
ஈழத்தின் இசை நாடக வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மாபெரும் கலைஞராகத் திகழ்ந்தவர் அமரர் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள் அன்று மட்டுமல்ல இன்றும்கூட ‘அரிச்சந்திரா” நாடகமென்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது வைரமுத்து அவர்கள்தான்!. கலைஞர்கள் பல நாடகங்களில் பல பாத்திரங்களில் நடிப்பார்கள். ஆனால் அரிச்சந்திரனாக நடித்தால் மட்டும் அவர்களை நடிகமணி வைரமுத்து அவர்களுடன் ஒப்பிட்டே பார்ப்பார்கள். அப்படியாக மக்கள் மனங்களில் எல்லாம் அரிச்சந்திரனாகவே வாழ்ந்து மறைந்தவர் இவர்.
இவர் நடித்த ‘அரிச்சந்திரா மயானகாண்டம்” நாடகம் மட்டும் 3000க்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டு பெரும் சாதனையை நிலை நாட்டியிருப்பதோடு இலங்கை வானொலியிலும் பல தடவைகள் ஒலிபரப்பப்பட்டிருப்பதும் இலங்கையில் தயாரான நிர்மலா” என்னும் திரைப்படத்தில் இன் நாடகத்தின் ஒரு சிறு காட்சி இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நாடகமே இலங்கை ரூபவாகிணி கூட்டுத்தாபனம் ஒளிபரப்பு செய்த முதல் தமிழ் நாடகமும் ஆகும்.
எவ்வளவுதான் புகழ் உச்சியில் இருந்தபோதும் சிறிதேனும் தலைக்கனம் இல்லாத அர்ப்பணிப்பு மிக்க கலைஞர் நடிகமணி அவர்கள். பாடி நடிப்பது மட்டுமல்ல! மிருதங்கம் ஆர்மோனியம் வயிலின் ஜலதங்கரம் போன்ற வாத்தியங்களை இசைப்பதிலும் வல்லவராய் இருந்ததோடு இலங்கை வானொலியில் கர்நாடக இசைக் கச்சேரிகளும் செய்திருக்கின்றார்.
சிறந்த நாடக நெறியாளரான இவர் கலைப்பணிமீது கொண்ட பற்றால் தான் பணிபுரிந்து வந்த ஆசிரியத் தொழிலைத் துறந்து ‘வசந்தகான சபா” என்னும் நாடக மன்றத்தை ஆரம்பித்து சரித்திர புராண இதிகாச நாடகங்களை தத்ரூபமாக நடித்து மக்கள் மனங்களில் பதியவைத்திருந்தார்.
கலையரசு சொர்ணலிங்கம் ஜயா அவர்களே இவருக்கு நடிகமணி என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருந்தார். பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் எழுதிய நாடக தீபம் என்னும் நூலில் ‘தமிழ் நாடகத்தின் மரணிக்காத குரல்” என்று வைரமுத்து அவர்களுக்கு புகழாரம் சூட்டியிருக்கின்றார். அது மாத்திரமல்ல பேராசிரியர் திரு வித்தியானந்தன் அவர்கள் ‘கலைக் கோமான்” என்னும் விருதையும் பேராசிரியர் திரு கைலாசபதி அவர்கள் நவரச திலகம்” என்னும் விருதையும் தென்னிந்திய தமிழ் மூதறிஞர் திரு.மா.பொ.சிவஞானம் அவர்கள் நாடக வேந்தன்” என்னும் விருதினையும் முன்னாள் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் நடிப்பிசைச் சக்கரவர்த்தி” என்னும் விருதினையும் பாசையூர் சென்றோக் படிப்பகத்தினர் ‘முத்தமிழ் வித்தகர்” என்னும் விருதினையும் வழங்கி வைரமுத்து அவர்களைக் கௌரவப் படுத்தியிருக்கின்றார்கள். இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் 2004ம் ஆண்டில் இவருக்கு “கலாநிதி” பட்டத்தை வழங்கி கௌரவித்திருந்ததும் நடிகமணி அவர்களின் கலைப்பணிக்குக் கிடைத்த மேலதிக சிறப்பாகும்.
வைரமுத்து வாழ்க்கைக் குறிப்புக்கள் நன்றி: தமிழ் விசை
படம் உதவி : தமிழ் விக்கிப்பீடியா
7 comments:
இசை நாடகம், கூத்து போன்றவை எமது மண்ணுக்குக்கேயுரிய பிரத்தியேகமான பலவியல்புகளுடன் இருந்தன. ஆனால் அதை மெல்ல மெல்ல மறந்து வருகிறோம் என்ற எண்ணம் எனக்கு உண்டு.
உதாரணமாக வடமோடி, தென்மோடி கூத்துகள் இன்று கிறீஸ்தவ மதம் பரப்பும் நோக்கில் மட்டுமே பயன்படுகின்றன. ஆனால், மதப் பிரச்சாரம் என்றூ வரும்போது சில புனிதங்களை காக்கவேண்டும் என்பதால் தென்மோடிக் கூத்தில் பின்னர் ஆடல் குறைந்து பாடல் மட்டும் முக்கியமாக்கப்பட்டது. கனடாவில் வாழும் சில கூத்துக் கலைஞர்களுடன் அண்மையில் உரையாடியபோது இது பற்றி அறிந்தேன்.
அந்த வகையில் வைரமுத்து போன்றவர்கள் பற்றி நாம் நிறாஇய தெரிவதால் மட்டுமே எமது சில வரலாறுகளை மீள நினைவுபடுத்த முடிகின்றது.
நன்றிகள் பிரபா
வணக்கம் அருண்மொழி வர்மன்
2 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் சென்றபோது அங்கே செல்லையா மெட்ராஸ் மெயில் என்ற நாட்டுக்கூத்துக் கலைஞர் வெளியிட்ட 15 சீடிக்களை வாங்கினேன் அதெல்லாம் பொக்கிஷம் ஒரு சீடியில் 3 - 4மணி நேரம் இருக்கும் முழுமையான கூத்துக்கள் கூட ஒலிவடிவில் இருக்கின்றன.
நீங்கள் சொல்வது போல திருமறைக்கலாமன்றம் கூட இந்த நாட்டுக்கூத்துக்களை வளர்ப்பதில் அரும்பணியாற்றுகின்றது.
அரிச்சந்திரன் மயாண காண்டம் என்று எவர் கதைத்தாலும் எம் மனக்கண் முன்னாலே வருவது வி.வி.வைரமுத்து ஐயாதான்.
"ஆதியிலும் புலையனல்ல - நான்
சாதியிலும் புலையனல்ல...
பாதியில் புலையனாகினேன்..
பராபரமே...!"
என்ற பாடும் அந்த கணீர் குரல். அந்த ஒலிப்பேழையை காலம் காலமாக வைத்திருந்தேன். ஆனால் சில அநியாய இடப்பெயர்வுகளுக்குள் காப்பாற்ற பட முடியவில்லை.
உங்களிடம் இருந்தால் தயவு செய்து ஒருதடவை அதனை வலையேற்றம் செய்யுங்கள்....!
ம்ம்ம்....கனத்த பதிவு. வி.வி.வைரமுத்து அராலியூர் செல்வமணி கலக்கிய அரிச்சந்திரா மயாணகாண்டம் இன்றும் மனதில் அப்படியே இருக்கிறது. இது 93,94,95 காலப்பகுதிகளில் மீண்டும் செல்வணியுடன் இணைந்து அரிச்சந்திரனாக ஈழத்தின் புகழ் பெற்ற பாடகர் எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் நடித்து பல மேடையேற்றம் கண்டிருந்தது. நான் நினைக்கிறேன் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் வருடாந்த இசைவிழாவில் (முன்பு நடக்கும்..இப்ப அது மலையேறி போய்விட்டது) இந்த நாடகத்தை மேடையேற்ற முனைந்தனர். கட்டுப்படுத்த முடியாத ரசிகர்கள்களால் இறுதியில் நாடகம் மேடையேற்றப்படவில்லை. கவலையுடன் வந்தேன்.
நன்றி பிரபா....!மீண்டும் ஈழம் பெற்ற மகத்தான கலைஞனை கொண்டு வந்து இருக்கிறீர்கள் பதிவு மூலமாக...!!
நடிகமணீ வி.வி. வைரமுத்துவை இலங்கை கலைஉலகம் மறந்துவிட்டது. வைரமுத்டுவௌ வளர்த்துவிட்டவர்களீல் கலாவினோதன் அண்ணாச்சாமி முக்கியமானவர். காரை.செ.சுந்தரம்பிள்ளை இவரைப்பற்றி நிறைய எழுதி உள்ளார்.
அன்புடன்
வர்மா
வருகைக்கு நன்றி கதியால், தமிழ் விரும்பி மற்றும் வர்மா
அரிச்சந்திர மயான காண்டம் தொகுப்பு ஒரு நண்பரிடம் இருக்கின்றது அதைப் பெற்று நிச்சயம் தருவேன். கூடவே போன வாரம் வைரமுத்து அவர்களுக்கு 84 ஆம் ஆண்டில் எடுத்த மணி விழா குறித்த இலங்கை வானொலி ஒலித்தொகுப்பு கிடைத்திருந்தது அதையும் பின்னர் பகிர்கின்றேன்.
உங்களுக்கு விருது கொடுத்திருக்கேன். நீங்களும் தொடருங்களேன்.
Post a Comment