"அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராக ஒரு எழுத்துப் போராளியாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சிந்திக்காது "மாயினி" நாவல் எழுதப்பட்டது. அதனுடைய வெற்றி, தோல்விகள் ஓர் இலக்கிய வெற்றி தோல்வியாக அல்லாமல் ஒரு இனத்தினுடைய சத்தியத்துக்கு ஏற்படக்கூடிய வெற்றி தோல்விகளூடாகத் தரிசித்து அதனை நான் எழுதியுள்ளேன்." - எஸ்.பொ மாயினி குறித்து
தமிழில் முயலப்பட்ட முதல் அரசியல் நாவலான "மாயினி"யின் நாவல் அரங்கு நேற்று பரீஸ் நகரத்தில் நடைபெற்றிருந்தது. தனது "மாயினி" குறித்து ஈழத்தின் மூத்த படைப்பாளி எஸ்.பொ என்ற எஸ்.பொன்னுத்துரை அவர்களை ஒலிப்பகிர்வு கண்டு அந்த நிகழ்வுக்காக அனுப்பவிருந்தேன். அவர் தன் உள்ளக்கிடக்கையைப் பகிரும் போது, இந்தப் பகிர்வு பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஒலியை தட்டச்சியும், ஒலிப்பகிர்வாகவும் இங்கே தருகின்றேன்.
ஒலிப்பகிர்வைக் கேட்க
பரீஸ் நகரத்திலே நவம்பர் மாசம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் "மாயினி" நாவல் ஆய்வரங்கிற்கு வாழ்த்துச் செய்தி போன்று இந்தப் பேச்சினை நான் அனுப்பி வைக்கின்றேன்.
தமிழில் முயலப்பட்ட முதலாவது அரசியல் நாவல் என்ற உரிமைகோரலுடன் மாயினி நாவல் என்னுடைய எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவிலே சென்னையில் வெளியிடப்பட்டது. அந்த நாவல் குறித்து சாதகமாகவும், பாதகமாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒன்று, மாயினி தான் தமிழில் முயலப்பட்ட முதலாவது அரசியல் நாவல் அல்ல, அதற்கு முன்னரும் அரசியல் சம்பந்தப்பட்ட நாவல்கள் தமிழில் முயலப்பட்டுள்ளன என்பது அதற்கு எதிராக முன்வைக்கப்படும் முதலாவது விமர்சனமாகும். என் உரிமைகோரலிலே ஒரு சத்தியம் உண்டு என்பதை தவிர்த்து, விமர்சிக்க வேண்டும், எதிர்க்கருத்தை முன்வைக்க வேண்டும் என்று முயலப்பட்டதாகவே அந்த விமர்சனத்தை நான் கருதுவேன். காரணம், மாயினி நாவல் இலங்கையின் இனப்பிரச்சனை சம்பந்தமாக எழுந்த பிரச்சனைகளிலே தமிழ்த்தேசியம் எவ்வாறு தொலைந்தது என்ற மூலக்கருத்தினைப் பாடுபொருளாகக் கொண்டு புனையப்பட்டுள்ள நாவல் மாயினி ஆகும்.
அந்தப் பொறுப்பிலே பங்குபற்றிய அரசியல் நாயகர்கள் பலரைப்பற்றியும் நடுநிலமை தேடி ஆய்வு செய்வது மாயினியுடைய ஒரு நோக்கமாக இருந்தது. மாயினி ஏன் முதல் அரசியல் நாவல் என்று நான் உரிமை கோரினேன் என்றால், வரலாறு என்பது என்ன? இன்றைய அரசியல் நாளைய வரலாறு என்றும் நேற்றைய அரசியல் இன்றைய வரலாறு என்றும் ஒரு முகச் சுலபமான எளிமையான புரிதல் நிலைத்து வருகின்றது. மாயினி நாவல் வரலாற்றுச் சம்பவங்கள் ஊடாகச் செல்லும் பொழுது கூட அவற்றை வரலாற்றுச் சம்பவங்களாகத் தரிசிக்காமல் நிகழ்காலச் சம்பவங்களாகத் தரிசிக்கின்றது. உதாரணமாக கிறீஸ்துவுக்குப் பின் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் மகா வம்சத்தின் புனைவு. மகாநாம தேரர் அந்த மகாவம்சத்தை இயற்றிய பொழுது அதில் ஊடாடி, உட்புகுத்தப்பட்ட ஒரு பிராமண மேலாதிக்கத்தைப் பற்றிய புனைவு அதில் வருகிறது. அது வரலாற்றில் சொல்லப்படாத ஒன்று. அது அரசியல் நிகழ்வாக ஏழாம் நூற்றாண்டில் நடப்பதாகப் புனையப்படுகிறது. அதே போன்று தான் ஒளவையார் வாழ்ந்த காலத்துக்குள்ளாகவே நாங்கள் போகிறோமே ஒளிய, ஒளவையார் வாழ்ந்த ஒரு காலத்துக்குள் போகவில்லை. ஒளவையார் வாழும் காலம், அதே போன்று அப்பரும், திருஞான சம்பந்தரும் உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கக் கூடிய காலத்தினூடாக, இன்று ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளும், நிகழ்காலத்தின் நிகழ்வுகளாகத் தரிசிக்க்கப்படுவதனாலும் நான் மாயினி முதலாவதாகப் புனையப்பட்ட தமிழின் அரசியல் நாவல் என்று உரிமை கோர விழைந்தேன்.
அண்மைக்காலங்களிலே ஈழநாட்டிலே நடைபெறக் கூடிய இனப்போராட்டம் அல்லது மண்மீட்புப் போராட்டம் அல்லாவிட்டால் விடுதலைப் புலிகளுடைய போராட்டம் அல்லது தமிழ் இனத்தினுடைய தாயக மீட்புப் போராட்டம் என்று சொன்னால் என்ன, அல்லது விடுதலைப் புலிகள் நடத்தக் கூடிய ஒரு பயங்கரவாதப் போராட்டத்துக்கு என்று விளங்கிக் கொண்டாலும் கூட நேரிய ஜனநாயக நீரோட்டத்துக்குள் செல்லப் போகின்றோம் என்று ஒரு கருத்தினை முன்வைத்து ஈழத்தில் நடைபெறக்கூடிய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினாலும் கூட அவையெல்லாம் அரசியல் நாவல்கள் என்று விதந்து ஏற்றுக் கொள்வதற்கு இந்தியாவில் ஒரு ஸ்தாபனம் இருக்கிறது. அந்த ஸ்தாபனம் என்னவென்றால் பிராமண ஆதிக்கம். இன்று இந்தியாவில் தமிழர் தேசியம் தொலைந்ததற்கு ஒரேயொரு காரணம் வட இந்திய இந்தி வெறியர்களுடைய எழுச்சி மட்டுமல்ல அது அரசியல் சார்ந்த ஒரு காரணம். ஆனால் அதிகார வர்க்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடிய பிராமண ஆதிக்கம் இன்றும் தமிழர்களுக்கு எதிரான ஒன்று எழுதப்படும் பொழுது அதையே "ஆகா! உச்சம்" என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பார்ப்பனச் சூழல் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு. அந்தப் பார்ப்பனச் சூழலிலே தான் புலம்பெயர்ந்த நாடுகளிலே வாழக்கூடிய எழுத்தாளர்கள் சிலருடைய நாவல்களை இவை அரசியல் நாவல்கள் என்று பாராட்டும் ஒரு போக்கு இருக்கின்றது.
தமிழர் தேசியத்தை மீட்டெடுத்துப் பார்ப்பது தான் மாயினியினுடைய தரிசனப்பயணம். அதுமட்டுமல்லாமல் தமிழர் தேசியத்தைப் பற்றிய ஒரு பார்வையிலே சிங்கள தேசிய இனத்தின் விரோதங்களைக் கக்குவதும், அதன் மீது ஆத்திரங்களையும், வெறுப்புகளையும் கக்குவது அல்ல நடுநிலமை. சிங்கள இனத்தவர்களுடைய செயற்பாடுகளிலே ஒரு விரோதம் ஏற்படுத்தாத ஒரு அறிவு நாகரிகத்தை "மாயினி" நாவல் சோதனை பூர்வமாக, அறிவுபூர்வமாகப் பின்பற்றியிருக்கின்றது என்பது முக்கியமான ஒரு விஷயம். உதாரணமாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தான் இலங்கையிலே ஏற்பட்ட தமிழர் சங்காரத்துக்கான பிள்ளையார் சுழியைப் போட்டார் என்ற வரலாறுமே இதுவரை காலமும் வேதமாகப் பயிலப்பட்டு வந்தது. அதுவே தமிழர்களுடைய எழுச்சியின் பாலமாகவும் குறியீடாகவும், அரசியல் பார்வையினுடைய திருப்புமுனையாகவும் அமைந்தது என்று சொல்லப்பட்டு வந்திருக்கின்றது.
ஆனால் இந்த பண்டாரநாயக்காவினுடைய காலத்திலே தான் தமிழர் தேசியத்தை மீண்டும் தமிழர்கள் கண்டார்கள். ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட்டு, தமிழ் மூலமே எங்களுடைய அடையாளத்தைக் கண்டறிதல் வேண்டும் என்ற உணர்வு பண்டாரநாயக்காவால் ஏற்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தமிழர் சமுதாயத்திலே ஏற்றத்தாழ்வுகள் உண்டு, சிறுபான்மைத் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்படவில்லை, அவர்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட வேண்டும், என்று தமிழ்த்தலைவர்களுக்கு உரத்துச் சொன்ன ஒரு அரசியல் தலைவனாகவும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அமைகின்றார். எனவே பண்டாரநாயக்காவின் இருமுகங்களையும் அதாவது சிங்கள தேசிய இனத்தினுடைய உணர்வில் தேசிய இன உணர்வாக மாற்றிய ஒரு கொடுமைக்கு முன்னுதாரணமாக விளங்கிய போதிலும் கூட தமிழர்களுடைய தேசியத்தை அவர்கள் கண்டறிவதற்கு உபகாரியாக வாழ்ந்தவரும் பண்டாரநாயக்கா என்று "மாயினி" தரிசித்து செல்கின்றது. 1983 ஆம் ஆண்டு நடந்த யூலைக் கலவரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட எழுச்சிகளும், போராட்டங்களும் பற்றி நிறையவே "மாயினி" சொல்கின்றது.
இது வரலாற்றில் கண்டறிந்த சில தகவல்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அந்த சம்பவங்களை கடந்தகாலச் சம்பவங்களாக நோக்காமல் நிகழ்காலச் சம்பவங்களாகத் தரிசிக்க முயல்கிறது. இன்றுவரையில் தமிழர் தேசியத்திற்கு என்ன பங்களிப்புச் செய்தார் அமிர்தலிங்கம் என்பது பற்றி ஒரு நேர்மையான, நடுநிலமையான ஆய்வு நூல் வெளிவரவில்லை. 1983 ஆம் ஆண்டில் நடந்த அந்த யூலை கலவரத்திற்குப் பின்னரும், தமிழர் தேசியத்தை ஜனநாயக முறையில் சிங்கள அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளின் மூலம் முன்னெடுக்க முடியும் என்றோ அல்லது இந்திய அமைதிகாப்புப் படையினர் சிங்களவர்களால் உதைக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட காலகட்டத்தில் இந்திய தூதரகம் தமிழர்களுக்கு கொடுக்கவிருந்த உரிமைகள் குறித்து என்ன பேச்சுவார்த்தைகள் அவர் நடத்தினார் என்பதைப் பற்றியோ இதுவரையில் தகவல்கள் இல்லை. "மாயினி" அந்தத் தகவல்களைத் தராவிட்டாலும் கூட அதற்கான சூசகங்கள் இங்கே எல்லாம் உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன, புதிய வரலாறுகள் அந்த இடங்களிலே நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறது.
"மாயினி" உண்மையிலேயே ஒரு முழுமையான எனக்குத் திருப்தி தந்த ஒரு நாவல் என்று நான் சொல்லவில்லை. "மாயினி" தமிழ் வாசகர்களுக்காக எழுதப்பட்ட நாவலும் அல்ல. அந்த "மாயினி" நாவல் சிங்கள வாசகர்களையும், சர்வதேச வாசகர்களையும் சென்றடைதல் வேண்டும். இன்று ஒரு ஆண்டுகாலமாக "மாயினி" நாவலை நான் ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதும் புதிய நூலிலே "மாயினி" தமிழ் நாவலிலே வராத பல உண்மைகள் வருகின்றன. காரணம், மாயினி நாவல் எழுதப்பட்ட பிறகு தான் எவ்வாறு ராஜீவ் காந்தி காலத்திலே விடுதலைப்புலிகளுடைய தலைமைத்துவத்தை இராணுவ ரீதியாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொல்லவேண்டும் என்ற சதிகள் நடத்தப்பட்டன என்பதைப் பற்றிய புதிய தகவல்கள் இந்திய நூலாக வெளிவந்திருக்கின்றது. அதை எழுதியவர் அக்காலத்திலே இந்திய அமைதிகாக்கும் படையின் தளபதியாக இருந்தவர். இவ்வாறு புதிதாகக் கிடைக்கும் சம்பவங்களையும், அதில் சேர்க்க முனைந்துள்ளேன்.
அத்துடன் தமிழர் தேசியத்தைத் தொலைத்தது தனியே ஈழநாட்டில் மட்டும் வைத்துக்கொண்டு ஆராய்வது தவறு. தமிழர் தேசியம் இந்திய துணைக்கண்டத்தில் எவ்வாறு தொலைக்கப்பட்டது
என்பதை ஒப்பு நோக்கு ரீதியில் "மாயினி" நாவலில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தமிழர் தேசியத்தைத் தொலைத்ததும் திராவிடர் கழகம் அரசியல் நோக்கிலே தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிரிவினை கோஷத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்பது எல்லாம் அந்த தமிழர் தேசியம் தொலைந்த ஆய்விலே அக்கறைக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டிய விஷயங்கள். அதை "மாயினி" நாவலிலே தொடப்படவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்படும் "மாயினி" நாவலிலே இந்தக் குறைபாடுகள் திருத்தி அமைக்கப்படும் என்று நம்புகின்றேன். அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராக ஒரு எழுத்துப் போராளியாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சிந்திக்காது "மாயினி" நாவல் எழுதப்பட்டது. அதனுடைய வெற்றி, தோல்விகள் ஓர் இலக்கிய வெற்றி தோல்வியாக அல்லாமல் ஒரு இனத்தினுடைய சத்தியத்துக்கு ஏற்படக்கூடிய வெற்றி தோல்விகளூடாகத் தரிசித்து அதனை நான் எழுதியுள்ளேன். "மாயினி"யின் இலக்கிய வெற்றிகள், இலக்கிய மேன்மைகள், எனக்கு இலக்கியத்திலே அது சம்பாதித்துத் தரக்கூடிய இடம் ஆகியன பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமல் ஒரு அறுபது ஆண்டு காலம் தமிழ் எழுதுவதை என்னுடைய உயிரும் மூச்சுமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அரசியல் ரீதியாக எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை, அரசியற் சிந்தனைகளாக அல்லாமல் ஒரு புதிய புனைவாக, ஒரு நாவலாக தமிழ் மக்கள் முன் வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் ஒரு படைப்பாகவே மாயினி உங்களுடைய விமர்சன அரங்குக்கு எடுக்கப்படுகின்றது.
இறுதியாக பரீசில் கூடக்கூடிய இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன். என்னுடைய தமிழ் நாவலை நீங்கள் விமர்சியுங்கள். ஆனால் நீங்கள் சொல்லும் குறைபாடுகள், விமர்சனங்கள், எதிர்க்கட்டுக்கள் அனைத்தையும் தயவு செய்து என்னுடைய பார்வைக்கு அனுப்பி வையுங்கள். ஏனென்றால் நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இந்த தவறுகள் நிகழாமல் நீக்கி அதை கொண்டுவருவதற்கு எனக்கு உதவும் என்று நான் நம்புகின்றேன்.
பரீசில் நடந்தேறிய "மாயினி" ஆய்வரங்கின் படங்களும் செய்தியும் "அப்பால் தமிழில்"
2 comments:
//தமிழர் தேசியத்தைத் தொலைத்தது தனியே ஈழநாட்டில் மட்டும் வைத்துக்கொண்டு ஆராய்வது தவறு. தமிழர் தேசியம் இந்திய துணைக்கண்டத்தில் எவ்வாறு தொலைக்கப்பட்டது?//
இது ஆய்வுக்கான கேள்வி.
வருகைக்கு நன்றி அருண்
Post a Comment