Tuesday, October 14, 2008
என் சினிமா பேசுகிறது...!
என்னைப் பொறுத்தவரையில் சினிமா என்பது என்னுடைய வாழ்க்கையோடு ஊறிவிட்ட ஒரு அம்சம். அதற்காக ரம்பா எத்தனை நாய் வளர்க்கின்றார், கமலஹாசன் யாரோடு புதிதாக dating போகிறார் போன்ற அதிதீவிர சினிமாப் பக்கம் நான் போவதேயில்லை.
என் வாழ்க்கையில் சந்தித்துப் போன சில தியேட்டர் சம்பந்தமான அனுபவங்களும் நினைவுக்கு வருகுது. இப்பவும் நினைவிருக்கு, கோபாலபிள்ளை மாமாவின்ர சைக்கிள் வெள்ளிக்கிழமை பின்னேரம் சித்தப்பாவீட்டிலை நிண்டா அதின்ர அர்த்தம் எங்கட சித்தப்பாவும், கோபாலபிள்ளை மாமாவும் ரீகல் தியேட்டருக்கு இங்கிலீஷ் படம் பார்க்கப்போட்டார்கள் எண்டு. பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில இதை அவர்கள் ஒரு வாடிக்கையா வச்சிருந்தினம். எண்பதுகளின்ர இறுதியிலயே போரால அந்தத் ரீகல் தியேட்டர் அழிஞ்சு போச்சுது. யாழ்ப்பாணம் கோட்டை ராணுவமுகாமுக்குப் பக்கத்தில அது இருந்தது தான் காரணம். (எனது "சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்து தியேட்டர்களும்" Wednesday, March 15, 2006 பதிவில்)
மேலே சொன்ன என் வாக்குமூலமே தொடர்ந்து நண்பர் ஆயில்யன் என்னைச் சங்கிலித் தொடர் கேள்வி பதிலுக்கு அழைத்ததற்கான முகவுரையாக சொல்லிக் கொள்கின்றேன். இணையக் கோளாறினால் நேற்றுப் போட்ட பதிவை இன்று வெளியாக்கி தமிழ் பிரியனும் சங்கிலித் தொடருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இருவருக்கும் என் நன்றிகள்.
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வயசுக்கணிப்பெல்லாம் தெரியாது, நம்மூரில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தபோது உள்ளூர் சனசமூக நிலையங்களின் முற்றத்தில் மூன்று, நான்குபடங்களை ஒரே இரவில் ஐந்து ரூபா கட்டணத்தில் போடுவார்கள். அப்போது தான் சினிமா என்ற வஸ்து இருப்பதே ஓரளவுக்கு தெரிய வந்தது. அப்போது தான் நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா "அண்ணன் ஒரு கோயில்"
இது பற்றி "எங்களூர் வாசிகசாலைகள்" பதிவில் Thursday, June 15, 2006 இப்படிச் சொல்லியிருக்கிறேன்.
"ரீ.வீயும் வீடியோவும் முதன் முதலில யாழ்ப்பாணம் வரேக்க (அதைப் பற்றி ஒரு பெரியகதை சொல்ல இருக்கு) இந்த வாசிகசாலைகள் தான் மக்களுக்கு அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்த்தவை. 80 களின் ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு வாசிகசாலையிலும் வச்சு விடியவிடியப் படம் காட்டினவை . தலைக்கு அஞ்சு ரூபா எண்டு நினைக்கிறன்.
ஒரு நாள் உந்த வாசிகசாலைப் பெடியள் மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு முகப்பில இருக்கும் கே .கே.எஸ் றோட்டுக்கு அங்காலை உள்ள பற்றைக் காணியை நல்லாச் சுத்தம் பண்ணி, ட்றக்டரில கொண்டு வந்த குருமணல் பறிச்சு கிழுவந்தடிப் பொட்டுக்குள்ளால நுளைவாயில் விட்டுச் சாமம் சாமமாய்ப் படம் போட்டவை.
போட்ட படங்களில "அண்ணன் ஒரு கோயில்" மட்டும் ஞாபகத்தில இருக்கு. அந்தப் படத்தில வரும் "நாலுபக்கம் வேடருண்டு" பாட்டு கனநாள் என்ர ஞாபகத்தில இருந்தது. அந்தப் பாட்டுக்கட்டத்தில பொலிஸ் துரத்தத் துரத்த "ஏன் உவன் சிவாசியும், சுயாதாவும் பத்தைகளுக்குள்ளால ஓடி ஒளியினம்?" என்று எனக்கு நானே கேட்ட விபரம் புரியாத வயசு அது . எனக்குத் தெரிஞ்சு இந்த மக்கள் முன்னேற்றக் கழகம் செய்த பெரிய வேலை உந்த வீடியோப்படம் காட்டினதுதான்.
எனது பாட்டனார் முறையானவர் வீட்டில் அப்போது தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோ காசெட் பிளேயரும் வாங்கியிருந்தார்கள். அந்த ஊருக்கே அது தான் ஒரே காட்சிப் பொருள். அப்பப்ப ஞாயிறு தூரதர்சனிலும் மழை, காற்று அடிக்காத வேளை காலநிலை சீராக இருக்கும் காலகட்டங்களில் படம் பார்க்கக் கூடியதாக இருந்தது. அது பற்றி இன்னொரு பதிவில் நிறையவே ஆராய வேண்டியிருக்கு.
தியேட்டர் பற்றி அந்த பால்யகாலத்தில் என் சகவாலுகளுடன் பேசும் போது, "திரைக்கு பின்னால் இருந்து தான் ஆட்கள் நடிக்கினமாம், ரோச் லைட் அடிச்சு தான் இங்காலிப்பக்கம் தெரியுமாம்" என்று அறிவுபூர்வமாகப் பேசியதும் நினைப்பிருக்கு.
எனக்கு ஓரளவு நினைவு தெரியுமாற் போலப் பயந்து பயந்தே பார்த்த படம் "நீயா".
அப்போது நான் ஆரம்ப வகுப்பில் இரண்டாம் வகுப்பு மாணவன். அதே பள்ளிக்கூடத்தில் அம்மா ஆசிரியை. எமது சித்திமார் அவர்களுக்குச் சொந்தமான காரில் பள்ளிக்கூடம் நடக்கும் வேளை அங்கே வந்து அம்மாவை ஒரு அவசர விஷயத்துக்குப் போகவேணும் என்று ஏமாற்றி, கூடவே என்னையும் அம்மா இழுத்துக் கொண்டு காரில் போனால் அது வின்சர் தியேட்டரில் வந்து நிக்குது. படம் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்று எழுதியிருந்ததை எழுத்துக் கூட்டி வாசித்து விட்டேன். அதில் இச்சாதாரி பாம்பு இருப்பதால் சின்னப் பிள்ளைகள் பயப்பிடுவினமாம். ஆனால் ஏதோ மாய்மாலம் செஞ்சு என்னையும் உள்ளே இழுத்துக் கொண்டு போனார்கள். யாழ்ப்பாணத்திலேயே உருப்படியான தியேட்டர் வின்சர் தான். பல்கனியில் இருந்து அகலத் திரை அளவுக்கு கண்களை அகல விரித்துப் பார்த்தது இப்போதும் நினைவிருக்கு. இச்சாதாரிப் பாம்பு வரும்போது மட்டும் சடாரென்று கண்களை தரையை நோக்கி மேய விடுவேன்.
அடுத்த நாள் முதல் தொடர்ந்து ஒரு மாசத்துக்கு மேலாக அம்மாவின் பழைய நைலெக்ஸ் சாறி ஒன்றை எடுத்து என் ரீ சேர்ட்டின் முதுகுப் புறமாகச் செருகிக் கொண்டே "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா" என்று கத்திக் கத்திப் பாடிக் கொண்டே அங்குமிங்கும் ஓடி விளையாடியதும் நினைப்பிருக்கு.
(மேலே படத்தில் 2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டர் உட்புறம் நான் போய் எடுத்த புகைப்படம்)
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
கடைசியாக அரங்கில் பார்த்த தமிழ் சினிமா "தாம் தூம்". ஒளிப்பதிவாளர் ஜீவாவின் இறுதிப் படம் என்ற ஆர்வக் கோளாறினால் சென்று பார்த்து மனதைத் தேற்றிக் கொண்டே வந்த படம்.
வரும் வாரம் மூன்று தேசிய விருதுகள் கிடைச்ச "சிருங்காரம்" திரைப்படத்தைப் பார்க்க இருக்கிறேன்.
கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக அரங்கிலின்றி நிறைய தமிழ் சினிமாவை ஐந்து, பத்து, பதினைஞ்சு நிமிடம் மட்டும் பார்த்து விட்டு மீதியை பார்க்காமலே மனமாறிக் கொண்ட பட்டியல் நீளம். ஆனால் ஆசையாக இரண்டு வாரம் முன் ஒரிஜினல் டிவிடி ஒன்றை வாங்கி அணு அணுவாக ரசித்து முழுமையாகப் பார்த்த திரைப்படம் கரு.பழனியப்பனின் "பிரிவோம் சந்திப்போம்". இந்தியா, இலங்கையை விட புலம்பெயர் வாழ்வியலுக்கு மிகவும் பொருத்தமான கதைக் களம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பாடல்களை நுட்பமாக கேட்டு வாங்குவதிலும் சரி,எடுப்பதிலும் சரி கரு.பழனியப்பன் சிறப்பானவர். இயல்பான, மேதாவித்தனமற்ற வசனங்களும், காட்சியமைப்புக்களும் இந்த இளம் இயக்குனரின் முதிர்ச்சியான முத்திரைகள். இவருக்கு இன்னும் சிறப்பான பல வாய்ப்புக்கள் கிடைத்தால் இன்னும் மின்னுவார்.
மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
வருஷம் 16.
இந்தப் படத்தை முதல் காட்சியில் பார்த்த அதே உணர்வோடு தான் இன்றும் பார்க்கின்றேன். படம் வந்த போது எனக்கும் வயசு 16, ஆனால் 2 வருஷம் கழித்துத் தான் நம்மூர் திரையரங்கில் வந்தது அப்போது எனக்கு வயசு 18.
அவள் டியூசனுக்கு வரும் போதும், என்னை எதிர்ப்படும் போதும் எனக்கு ஏன் இருதயம் வழக்கத்துக்கு மாறாக வேகமா அடிக்கிது, ஓ! இது தான் காதலா?"
பரீட்சை எடுத்து விட்டு வருஷம் 16 படம் பார்க்க நண்பர்களுடன் வெலிங்டனுக்கு போனேன். ராதிகா (குஷ்பு) கண்ணன் (கார்த்திக்) மடியில் இறப்பதும், "மூர்த்தி மூர்த்தி என்று கண்ணன் அலறிக் கொண்டே அவனை உலுப்புவதும், இறுதிக் காட்சியில் வேலைக்காரன் ராஜாமணியுடன் பெரிய தாத்தா வீட்டை பார்க்க வரும் கண்ணனின் காதுகளில் பழைய கலகலப்பும் கேட்டு ஓய்வதுமாக படத்தின் இறுதிக் காட்சிகள் ரணமாகியதும் அந்தக் காலகட்டத்தில் என் மனநிலை சார்ந்து இருந்ததோ என்னவோ.
"வருஷம் 16 படம் இறுதிக்காட்சியில நாயகி குஷ்பு சாவதைக் கண்டு, கூடவே வந்த நண்பன் காந்தன் மூட்டைப் பூச்சியையும் பொருட்படுத்தாது அதிர்ச்சியில் கதிரையை விட்டு எழும்பவேயில்லை. பின்னால இருந்த தாய்க்குலங்கள் விசும்பி அழுவதும் கேட்டது." (சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்து தியேட்டர்களும்)
வருஷம் 16 படம் பார்த்து விட்டு வீடு திரும்பும் போது சித்தி மகள் சொல்கிறார்.
"இப்ப தான் உம்மடை ஆள் வந்திட்டுப் போனா, ஆள் வேலணைக்கு போயிட்டா, இனி A/L படிப்புக்கு தான் வருவாவாம்"(A/L - பிளஸ் டூ).
வேலணை என்பது யாழ்ப்பாணத்தை அண்டிய சிறு தீவுப் பகுதி, படிப்பதற்காகப் பலர் யாழ்ப்பாணத்துக்கு தான் வந்து தங்கிப் படிப்பார்கள், படிப்பு முடிந்ததும் போய்விடுவார்கள்)
அதுக்கு பிறகு யுத்தம்,வேலணையை இராணுவம் கைப்பற்றல், தொடர்ந்து வந்த இடப்பெயர்வுகள்,சம்பவங்கள் எல்லாம் கலந்து நிரந்த முற்றுப் புள்ளியை என் காதலுக்கும் வைத்து விட்டது.
உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
கமல்ஹாசனுடன் "சண்டியர்" பெயரை மாற்றச் சொல்லி வீம்பாக நின்றவர்கள் மேல் வந்தது முதல் எரிச்சல் , தமிழ் பெயர் மட்டும் வைத்தால் போதும் வரிவிலக்கு உண்டு என்ற கோமாளித்தனமான சட்டம்,இவற்றோடு சமீபத்திய எரிச்சல்+ஆச்சரியம் "சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சிடி" திரைப்படத்துக்கு சிறு பட்ஜெட் படங்களுக்கான மானியம் வழங்கியது.
நீண்டகால எரிச்சல், தமிழ் சினிமாவைப் புறக்கணியுங்கள் என்று சொல்லும் மொழி தாங்கிகள் திருட்டு வீசிடியில் திருட்டுத்தனமாக தமது வீட்டில் இருந்து போன வாரம் வரை வந்த படங்களைப் பார்த்து ரசிக்கும் போலித்தனம்.
தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறையவே உண்டு, ஆனால் இளைஞர்களுக்கு விஜய் அறிவுரை வகையறாக்கள் தவிர்த்து எப்போதும் புதிதாக வரும் படங்களிலில் யார் யாரெல்லாம் பணியாற்றுகின்றார்கள், குறிப்பாக இசையமைப்பாளர் யார்?என்று தேடும் வழக்கம் தொட்டிலில் இருந்து சுடுகாடு வரை இருக்கும்.
சின்ன வயசில் எங்கள் சித்திமார் வாங்கும் பேசும் படம், பொம்மை, ஜெமினி சினிமாவில் இருந்து,சமீபகாலம் தமிழ் சினிமா இணையம், தினத்தந்தி "திரைப்பட வரலாறு" மற்றும் கவிஞர் வாலியில் இருந்து மகேந்திரன் வரை தேர்ந்தெடுத்த படைப்பாளிகளின் நூற்களை வாங்கிப் படிப்பது வரை இது தொடர்கின்றது.
தமிழ் சினிமா இசை?
தமிழ் சினிமா இசை காலத்துக்குக் காலம் மிகுந்த சிறப்பும் தனித்தன்மையும், தனக்கென ஒரு அடையாளத்தோடும் இருந்தது. இளையராஜாவுக்கு முந்திய காலகட்டத்து முன்னணி இசையமைப்பாளர்கள் எல்லோருமே "சினிமாப் பாடல்களுக்கான இசை" என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதில் சிறப்பாகவே தம் பங்களிப்பைக் கொடுத்திருந்தனர். இளையராஜா பாடல்கள் மட்டுமல்ல, படத்தின் பேசாத காட்சிகளை இசையால் பேசவைக்கவும், பேசும் காட்சிகளை வலுப்படுத்தி நிற்கவும் இசை உதவும் என்பதில் பரிபூரணமான திரையிசையை அளித்திருக்கின்றார். இளையராஜாவுக்குப் பின் வந்த ரஹ்மான் கூட பாடல்கள் தவிர்த்த பின்னணி இசையில் பேசத்தக்க சாதனை செய்யவில்லை என்பதே என் கருத்து. இப்போதுள்ள தமிழ் சினிமா இசையையும், எதிர்காலத்தின் தமிழ் சினிமா இசையையும் நினைக்கும் போது பெருங் கவலை ஒட்டிக் கொள்கின்றது. எனக்கு வயசு போகின்றது என்று குறும்பாகச் சொல்லாதீர்கள், தமிழ் சினிமா இசையின் அடையாளம் இளையராஜாவுக்குப் பின் தொலைந்து போய் விட்டது என்றே சொல்வேன்.
தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிறையவே பார்ப்பதுண்டு. கடந்த ஆறேழு வருஷமாக அதிகமாக ஆக்கிரமிப்பது மலையாள சினிமா. அதில் காழ்ச்சா, அச்சுவின்டே அம்மா, வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள், பெருமழாக்காலம், தன்மத்ரா என்று ஒரு மிக நீண்ட பட்டியல் இடலாம்.
தேர்ந்தெடுத்த ஹிந்திப் படங்களைப் பார்ப்பது வழக்கம். குறிப்பாக கொங்கனா சென் நடித்த படங்கள், வயசுக்கேற்ற நடிப்பில் கலக்கி வரும் அமிதாப்பின் Black சமீபத்தில் வந்த The Last Lear.
வங்க மொழிப்படங்களை பெங்களூர் லாண்ட் மார்க்கில் அள்ளி வந்தேன். அதற்குக் காரணம் சத்யஜித் ரேயின் "பதேர் பாஞ்சாலி".
தெலுங்கில் ரசித்து ருசித்த படங்கள் பொம்மரிலு, ஹாப்பி டேய்ஸ், கோதாவரி
தவிர உலக சினிமா வரிசையில் அவுஸ்திரேலிய படமான Rabbit-proof Fence,அகிரா குரோசாவாவின் Seven Samurai போன்ற வித்தியாசமான படங்களையே பார்க்கப் பிடிக்கும். அடிதடி ஆக்ஷன் வகையறைக்கள் என் உடம்புக்கு ஒத்துவராது. பிடித்த நடிகர் என்றால் Tom Hanks இன் படங்களைத் தேடித் தேடிப்பார்பேன். நடிகை என்றால் Meg Ryan தான் எப்போதும்.
நான் சாகும் வரை விருப்பத்தேர்வில் இருக்கும் cinema Paradiso.
தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
தமிழ் சினிமாவுடன் நேரடித் தொடர்பு என்றெல்லாம் இல்லை. ஆனால் தமிழகத்தில் இருக்கும் ஊடக நண்பர்கள் மூலம் சினிமாவில் சாதனை செய்தவர்களையும், வளர்ந்து வரும் கலைஞர்களையும் அவ்வப்போது வானொலிப் பேட்டிகள் செய்து வருவதும், இங்கே சிட்னிக்கு தமிழகக் கலைஞர்கள் வருபோது நேரடிப் பேட்டி எடுப்பதும் என்ற வகையில் எனக்கு ஒரு வகையான மறைமுகத் தொடர்பு உண்டு.
என்ன செய்தீர்கள் என்றால் ஏற்கனவே அறிமுகமான கலைஞர்களின் தெரியாத பக்கங்களைக் கொண்டு வருவதும், அறிமுகமாகும் கலைஞர்களையோ அவர்களின் படைப்புக்களையோ வானொலி, வலை வட்டத்தில் அறிமுகப்படுத்துவது. தவிர றேடியோஸ்பதி மூலம் அண்மைக்காலமாகச் செய்து வரும் பின்னணி இசைத் தொகுப்பு. இதன் மூலம் வலை வழியே உலாவிக்கொண்டிருக்கும் நாளைய இயக்குனர்களுக்கு இந்த இசைத் தொகுப்பு ஒரு முன்மாதிரியாக இருந்து அவர்கள் இயக்கும் படங்களின் இசையமைப்பாளர்களிடம் (சரக்கு இருந்தால்) இதே பாங்கில் வேலை வாங்க வேண்டும் என்பதே என் ஆசை.
தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்பது அந்தந்தக் காலகட்டத்து ரசிகர்களின் ரசனை உணர்வு சார்ந்தது. எழுபதுகளின் இறுதியில் ராஜாக்கள் வந்தார்கள், எண்பதுகளில் மணிரத்னம் வந்தார்.
தொண்ணூறுகளில் ஒரு தேக்கம், இப்போது பாலாவின் வாரிசுகள் வருகின்றார்கள். ஒளிப்பதிவு, கணினி உத்திகளில் கண்ட உயர்ச்சி கதை உருவாக்கத்தில் அதிகம் இருக்காது. சுப்ரமணியபுரம் போன்ற நேர்மறையான சினிமா கதைககரு உத்திகள் அதிகம் வளரும்.
வெற்றிமாறன், வெங்கட்பிரபு போன்றவர்கள் ஆங்கிலப்படத்தைப் பிரதி பண்ணி ஆங்காங்கே நாகாசு வேலைகள் சுலபமான வெற்றியைக் கொடுக்கலாம் போன்ற தவறான முன்னுதாரணங்கள் புதிய சிந்தனையாளர்களை டிவிடியில் பிறக்க வைக்கும்.
அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழர்களுக்கு என்ன ஆகும் என்பதை விட எனக்கு என்ன ஆகும் என்றால், ஒன்றும் ஆகாது. எனக்கு எண்பதுகளில் வந்த படங்களே என் எஞ்சிய ஆயுளுக்குப் போதுமானவை. அவற்றைப் பற்றி நானே எனக்குள் சிலாகித்துக் கொண்டிருப்பேன். அது போலும் ;-)
சரி இனி இந்தச் சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு அன்பாக நான் அழைப்பவர்கள். அழைப்பினை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டுகின்றேன்.
1. ஜி.ரா என்னும் ஜி.ராகவன்
2. கே.ஆர்.எஸ் என்னும் கண்ணபிரான் ரவி சங்கர்
3. கோபிநாத்
4. சின்னக்குட்டி
5. அருண்மொழிவர்மன்
6. வந்தியத் தேவன் (கொழும்பு)
Labels:
தொடர் விளையாட்டு
49 comments:
எங்கள் பள்ளியில் கூட முன்பெல்லாம் சினிமா காண்பிப்பார்கள்.. இதெல்லாம் பள்ளியில் போட வேண்டிய படமான்னு கேக்கும்படி இருக்கும்.. அதுக்கு காசு வேற வாங்கிட்டு.. :(
ஆனந்த் .. பாண்டி நாட்டுத்தங்கம்.
வருசம் பதினாறு பற்றி நீங்கள் சொன்னது உண்மைதான்.. அதிரடியான முடிவு கொஞ்ச நாள் மனசை பாடாய்படுத்தியது...
// "திரைக்கு பின்னால் இருந்து தான் ஆட்கள் நடிக்கினமாம், ரோச் லைட் அடிச்சு தான் இங்காலிப்பக்கம் தெரியுமாம்" என்று அறிவுபூர்வமாகப் பேசியதும் நினைப்பிருக்கு//
-:)) -:)) சூப்பரங்கண்ணா..நாமளும் அப்படி அப்ப நினைச்சதுண்டு..நன்றி
வாங்க முத்துலெட்சுமி
ஆனந்த், பாண்டிநாட்டு தங்கம் கூட பள்ளியில் காண்பித்தார்களா ;-)
இரண்டிலும் ராஜா இசையில் பின்னியிருப்ப்பார்.
//சின்னக்குட்டி said...
// "திரைக்கு பின்னால் இருந்து தான் ஆட்கள் நடிக்கினமாம், ரோச் லைட் அடிச்சு தான் இங்காலிப்பக்கம் தெரியுமாம்" என்று அறிவுபூர்வமாகப் பேசியதும் நினைப்பிருக்கு//
-:)) -:)) சூப்பரங்கண்ணா..நாமளும் அப்படி அப்ப நினைச்சதுண்டு..நன்றி//
சின்னக்குட்டியர்
உங்களை அயத்துபோய் விட்டுட்டன், தயவு செய்து நீங்களும் இந்த சங்கிலிப் பதிவு போடோணும் எனக்காக, சொல்லிப்போட்டன்.
எம்புட்டு பெரிய பதிவு அதுவும் சொன்ன கொஞ்ச நேரத்திலேயே சூப்பரூ தல :))
வேலணை என்பது யாழ்ப்பாணத்தை அண்டிய சிறு தீவுப் பகுதி, படிப்பதற்காகப் பலர் யாழ்ப்பாணத்துக்கு தான் வந்து தங்கிப் படிப்பார்கள், படிப்பு முடிந்ததும் போய்விடுவார்கள்)
அதுக்கு பிறகு யுத்தம்,வேலணையை இராணுவம் கைப்பற்றல், தொடர்ந்து வந்த இடப்பெயர்வுகள்,சம்பவங்கள் எல்லாம் கலந்து நிரந்த முற்றுப் புள்ளியை என் காதலுக்கும் வைத்து விட்டது.
:(
ஆயில்யன் அண்ணாச்சி கேட்க மறந்த கேள்வி:
பிரபா, நீங்க முதலில் நடித்த படம் உங்களுக்கு நினைவிருக்கா? :)
//தமிழ் சினிமா இசையின் அடையாளம் இளையராஜாவுக்குப் பின் தொலைந்து போய் விட்டது என்றே சொல்வேன்//
:)))
அடையாளம் தொலையவில்லை காபி அண்ணாச்சி. மாறி விட்டது-ன்னு வேணும்னாச் சொல்லுங்க!
பாடல் அல்லாத பின்னணி இசையில், இளையராஜா ஒரு சகாப்தம் உருவாக்கியது என்னமோ உண்மை. ஆனால் அது ஒன்றே தமிழ்த் திரையிசையின் அடையாளம் எனச் சொல்லப் போமோ?
அப்படிப் பார்த்தால் பாரம்பரிய நடன இசைக்கு எம்.எஸ்.வி-க்குப் பின் அடையாளம் தொலைந்து விட்டது என்றும் சொல்லலாம்!
உரையாடல்கள் கலந்த இசைக்கு யார் இன்று அடையாளம்? சொல்லுங்க பார்ப்போம்!
பதிவு போட்டாச்சு.
http://gragavan.blogspot.com/2008/10/mad-at-cinema.html
உங்க பதிவு பற்றிய கருத்து பின்னால் வரும்.
மொத்தத்தில் பல உண்மைகள் வந்திருக்கு ;))
விரைவில் பதிவு வரும் தல :)
சரி தலை ஜோதியில் நானும் கலந்துகொள்கின்றேன்.
அழைப்புக்கும் நன்றி ஆயில்ஸ்
வருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆயில்யன் அண்ணாச்சி கேட்க மறந்த கேள்வி:
பிரபா, நீங்க முதலில் நடித்த படம் உங்களுக்கு நினைவிருக்கா? :)//
தல
வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணினோம் ;) சான்ஸ் கொடுங்களேன்பா
எல்லாம் இருக்கட்டும் பதிவு போட்டாச்சா?
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அடையாளம் தொலையவில்லை காபி அண்ணாச்சி. மாறி விட்டது-ன்னு வேணும்னாச் சொல்லுங்க! //
அடையாளம் என்று நான் குறிப்பிட்டது தமிழ் சினிமா வரலாற்றில் ஆரம்பத்தில் பக்தி இலக்கியங்கள் காலகட்டத்து இசை, பின்னாளில் திராவிட இயக்க சார்பின் வெளிபாடாக வந்த சீர்திருத்தப் படங்கள், கிராமியத்தை நோக்கிய பார்வை என்று காலாகாலமாக வடிவமெடுத்த சினிமா இசையின் அடிநாதமாக இருந்த தனித்துவம் (அது எந்த இசையமைப்பாளராக இருந்தாலும் இப்போது சுயத்தை முழுதும் இழந்த மேற்கத்தையச் சாயத்துக்குள் விழுந்து விட்டது என்றே நான் கருதுகின்றேன்
//உரையாடல்கள் கலந்த இசைக்கு யார் இன்று அடையாளம்? சொல்லுங்க பார்ப்போம்!//
இந்தக் கேள்வியை எனக்கு முழுதாகப் புரியவில்லை. பாடல்களை நீங்கள் மனதில் வைத்துக் கேட்டால் உரையாடல் கலந்த இசையமைப்பில் ஏறக்குறைய எல்லா இசையமைப்பாளர்களுமே இருந்திருக்கிறார்கள்.
மெல்லிசை மன்னருக்கு உதாரணம்: சிப்பி இருக்குது.
இசைஞானிக்கு உதாரணம்: கண்மணி அன்போடு
எம்புட்டு பெரிய பதிவு சூப்பரூ தல :))
நான் மட்டும் தான் இந்த தலைப்ப ரொம்ப படுத்திட்டேன்னு நினைக்கிறேன்..:( மத்த எல்லாரும் நல்லா எழுதிருக்கீங்க..!! :))
ஆழமான அனுபவ உணர்வுகளுடன் பகிர்ந்திருக்கிறீர்கள் பிரபா.
மனோகரா தியேட்டர் - கேள்விப்பட்டிருக்கிறேன். புகைப்படம் ஒன்றை இன்றுதான் பார்த்தேன்.
அழகா எழுதி இருக்கீங்க... அதோடு நிறைய உண்மையையும் சொல்லி இருக்கீங்க... வாழ்த்துக்கள்!
கானா அங்கிள்! நீங்க நடிச்ச படமும் இருக்கா? விடியோஸ்பதியில் நேயர் விருப்பமா அதை தாங்களேன்.
கானாஸ், மிகவும் நல்ல நாஸ்டால்ஜிக் பதிவு!! ஒரு சின்ன விஷயம்தான் இலலி..சினிமா பார்க்கறது..ஆனா அதுகூட அசோசியேட் ஆகியிருக்கும் விஷயங்கள் தான் எத்தனை! சில இடங்களில் கண்ணீர் துளிர்த்து..நெகிழ்ச்சிதான் காரணம்!! உங்கள் பேச்சு வழக்கில் எழுதியிருப்பதும் ரொம்ப நல்லாருக்கு படிக்க!! :-)..மாங்காய் பற்றிய பதிவை ரசிக்கற மாதிரி இருக்கு ..:-)
//அம்மாவின் பழைய நைலெக்ஸ் சாறி ஒன்றை எடுத்து என் ரீ சேர்ட்டின் முதுகுப் புறமாகச் செருகிக் கொண்டே "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா" என்று கத்திக் கத்திப் பாடிக் கொண்டே அங்குமிங்கும் ஓடி //
இப்போ உங்களை அப்படி கற்பனை செய்துபார்க்கிறேன்..:-))..சின்னபாண்டி எங்கிருந்தாலும் வரவும்!!
//வருஷம் 16.
இந்தப் படத்தை முதல் காட்சியில் பார்த்த அதே உணர்வோடு தான் இன்றும் பார்க்கின்றேன். ....எனக்கு வயசு 18.//
உனக்கு 16, எனக்கு 18??? அந்த காலத்திலேயேவா!! அண்ணா, எங்கியோ போயிட்டீங்க!!
நல்லா அலசி ஆராய்ந்து பிழிந்து காயப் போட்டிருக்கீங்க தமிழ் சினிமா பற்றி!!
// G.Ragavan said...
பதிவு போட்டாச்சு.//
கடமையுணர்வோடும் பொறுப்போடும் உடன் செஞ்சமைக்கு நன்றி ராகவன் ;-)
//கோபிநாத் said...
மொத்தத்தில் பல உண்மைகள் வந்திருக்கு ;))//
என்ன பெரிய உண்மை இதைவிட பெரிய உண்மையை நீங்க சொல்லணும்.
//வந்தியத்தேவன் said...
சரி தலை ஜோதியில் நானும் கலந்துகொள்கின்றேன்.//
மிக்க நன்றி வந்தி
/// தமிழ் பெயர் மட்டும் வைத்தால் போதும் வரிவிலக்கு உண்டு என்ற கோமாளித்தனமான சட்டம் ///
எனக்குஇதில் உடன்பாடு கிடையாது. தமிழ்சினிமா ஆங்கில மோகம் கொண்டுமிக மோசமாக தலைப்புகளை கொண்டு வந்த காலத்தில் இது கட்டாயம தேவயைானதாகும். ஆனால் இப்படிப்பட்ட சட்டங்கள் கோமாளித்தனமானது என்பது உண்மை. ஆனால் தேவையானதும் கூட. உதாரணத்துக்கு ஒரு இயக்குனரின் பெயர் முருஹன். அப்படி இருக்கிறது தமிழ் பற்று. இவர் தமிழ் நாட்டில் படம் எடுப்பவர். முருகன் என்பதை விட இவருக்கு முருஹன் என்பதில் என்ன இருக்கு என்று எனக்கு தெரியவில்லை. இதைவிட சுஜாதாவின் "ரிங்கினான் என்ற தமிழ் கொலையான சொல்லை ஒரு புதிய சிறந்த முறை என்று கூறும் தமிழ் ஊடகவியலார்களும் உள்ளனர்.
எங்களுக்கு நண்பர்களுடன் பொழுதுபோக்குவற்க்காய் யாழ்ப்பாணத்தில தியட்டரில படம் பார்க்கிற பாக்கியம் 2000 ஆண்டளவில தான் கிடைச்சிது அதுவும் ராஜா தியட்டரில. . .
ராஜா தியட்டர் மீள திருத்தியமைத்தபின் முதல்நாள் S.T.R அவர்கள் போட்ட படம் ஒளிவிளக்கு
:(((((((((((((((
// பாரம்பரிய நடன இசைக்கு எம்.எஸ்.வி-க்குப் பின் அடையாளம் தொலைந்து விட்டது என்றும் சொல்லலாம்!
உரையாடல்கள் கலந்த இசைக்கு யார் இன்று அடையாளம்? சொல்லுங்க பார்ப்போம்! //
நிச்சயமாக நண்பரே ! அது உண்மை தான் !
//நிஜமா நல்லவன் said...
எம்புட்டு பெரிய பதிவு சூப்பரூ தல :))//
மிக்க நன்றி தல, உங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன்
//ஸ்ரீமதி said...
நான் மட்டும் தான் இந்த தலைப்ப ரொம்ப படுத்திட்டேன்னு நினைக்கிறேன்..:( மத்த எல்லாரும் நல்லா எழுதிருக்கீங்க..!! :))//
ஆகா நீங்க மட்டும் என்னவாம் பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்களே
//இறக்குவானை நிர்ஷன் said...
ஆழமான அனுபவ உணர்வுகளுடன் பகிர்ந்திருக்கிறீர்கள் பிரபா.
மனோகரா தியேட்டர் - கேள்விப்பட்டிருக்கிறேன். புகைப்படம் ஒன்றை இன்றுதான் பார்த்தேன்.//
வருகைக்கு நன்றி நிர்ஷான்
2006 இல் ஊருக்கு போன போது எடுத்த நினைவிடங்களில் இன்னும் சில தியேட்டர்களும் இடங்களும் இருக்கின்றன, காலம் வரும் போது அவை பற்றியும் சொல்கின்றேன்.
// தமிழ் பிரியன் said...
கானா அங்கிள்! நீங்க நடிச்ச படமும் இருக்கா? விடியோஸ்பதியில் நேயர் விருப்பமா அதை தாங்களேன்//
ஆகா ஆளாளுக்கு உசுப்பேத்தி விடுறீங்களே, இதுல அங்கிள் வேறயா
வருகைக்கு நன்றி தல உண்மையை பேசும் நேரம் வந்தாச்சுலே ;-)
//சந்தனமுல்லை said...
கானாஸ், மிகவும் நல்ல நாஸ்டால்ஜிக் பதிவு!! ஒரு சின்ன விஷயம்தான் இலலி..சினிமா பார்க்கறது.//
வாங்க சந்தனமுல்லை
சினிமா பார்ப்பது வெறும் பொழுதுபோக்கு சமாச்சாரம் ஆனால் அதைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பும் ஆர்ப்பாட்டங்களுமே இவை, அதுவே என் வாழ்வின் ஒரு பகுதியாகவும் அமைந்து விட்டது.
//உனக்கு 16, எனக்கு 18??? அந்த காலத்திலேயேவா!! அண்ணா, எங்கியோ போயிட்டீங்க!!//
ஆகா உண்மையைச் சொன்னது தப்பாயிடுச்சே ;-)
//வெண்காட்டான் said...
/// தமிழ் பெயர் மட்டும் வைத்தால் போதும் வரிவிலக்கு உண்டு என்ற கோமாளித்தனமான சட்டம் ///
எனக்குஇதில் உடன்பாடு கிடையாது. தமிழ்சினிமா ஆங்கில மோகம் கொண்டுமிக மோசமாக தலைப்புகளை கொண்டு வந்த காலத்தில் இது கட்டாயம தேவயைானதாகும். ஆனால் இப்படிப்பட்ட சட்டங்கள் கோமாளித்தனமானது என்பது உண்மை.//
வணக்கம் வெண்காட்டான்
நான் இங்கே சொல்ல வந்தது வெறும் தமிழ்ப்பெயர் மட்டுமே நல்ல/ஆரோக்கிய சினிமாவுக்கு அடையாளம் அல்ல. ஏகப்பட்ட வருமானம் தரும் இந்தத் தொழிலில் வெறும் தமிழ் பெயர் சூட்டுவதால் வரி விலக்கு அளித்து அந்த வருமான இழப்பினால் நல்ல வாழ்வை இழப்பதும் தமிழ் இனமாகத் தான் இருக்கும். எத்தனையோ நல்ல இயக்குனர்களின் படங்களின் தலைப்புக்கள் தமிழிலேயே வந்து கலக்குகின்றன. ஆங்கில மோகம் என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்குமே.
//மாயா said...
எங்களுக்கு நண்பர்களுடன் பொழுதுபோக்குவற்க்காய் யாழ்ப்பாணத்தில தியட்டரில படம் பார்க்கிற பாக்கியம் 2000 ஆண்டளவில தான் கிடைச்சிது அதுவும் ராஜா தியட்டரில. . //
2006 இல் ராஜா தியேட்டர் வலம் வந்தேன், திருத்தியது மாதிரி இல்லையே :( அதைப் பற்றி படங்களோட பிறகு ஒரு பதிவு வரும்.
//தங்ககம்பி said...
விளக்கங்கள் அருமையாக இருந்தது.
அப்போ! உங்களுக்கு வயது 36முடிந்து 37நடக்கிறதா?//
வாங்க தங்கக்கம்பி
அவ்வளவு பெரிய வயசில்லை நமக்கு, நம்மூர் தியேட்டருக்கு படங்கள் எப்போதுமே லேட்டாகத் தான் வரும் அந்தக் கணிப்பில் தான் சொன்னேன்.
அப்படியே யாழ்ப்பாணம் போய் வந்த உணர்வைத் தந்தது. நல்லதொரு பதிவு.. உங்கள் பதிவுகளிலே உங்களின் இலகுவான ,லாவகமான தமிழ் நடையை நான் ரசிப்பது உண்டு.
ஆனால் ஒன்று உங்கள் வயததையும் காட்டிக் கொடுத்து விட்டீர்கள்.. ஹேஹே
என்ன நாற்பதுக்குள் தானே? இனிமேலும் உங்களை அண்ணா என்று கூப்பிட்டால் போச்சு.
வாங்கோ லோஷன்
நம் பேச்சு வழக்கில் பேசுவதே சொல்ல வந்ததை அந்நியப்படுத்தாது என்பதற்காகவே பயன்படுத்துகின்றேன், உங்கள் கருத்துக்கு நன்றி
ஆகா, எங்கடை வயசை அறியவும் ஒரு குறூப் இருக்கா ;)
ஆலையில்லா ஊரில இலுப்பம்பூ சக்கரை எண்டமாதிரி தியட்டரே இல்லாத இடத்தில அது பெரிசு தானே ?
பிரபா சின்னச் சின்ன ஞாபகங்களைக் கிளறி விட்டீர்கள்.இதே உங்கட வேலையாப்போச்சு."ப்ரியா"படம் எண்டு நினைக்கிறேன்.என் தம்பிதான் படம் போட்டது.சனம் வரேல்ல.
பேசின காசு கொடுக்கமுடியேல்ல.
நல்லா அம்மாட்ட அடி வாங்கி அந்தக் காசு கொடுத்தான்.
பிறகு மானோகரா தியேட்டருகுக்குப் பக்கதிலதான் என் பெரியம்மா வீடு.மனோகராத் தியேட்டர் கிணறு பெரியம்மா வீட்டு பங்குக் கிணறு.
கிணத்தடியிலே நின்றே படக்கதை முழுக்க கேட்டிடலாம்.பக்கத்தில் நாமகள் அச்சகம்.அவர்கள் வீட்டு அக்கா அண்ணா எல்லோரும் ஒரு குடும்பம் போல.அவர்கள் எல்லோரும் இப்போ எங்கேயோ!
"இப்ப தான் உம்மடை ஆள் வந்திட்டுப் போனா, ஆள் வேலணைக்கு போயிட்டா, இனி A/L படிப்புக்கு தான் வருவாவாம்"(A/L - பிளஸ் டூ).
வேலணை என்பது யாழ்ப்பாணத்தை அண்டிய சிறு தீவுப் பகுதி, படிப்பதற்காகப் பலர் யாழ்ப்பாணத்துக்கு தான் வந்து தங்கிப் படிப்பார்கள், படிப்பு முடிந்ததும் போய்விடுவார்கள்)
அதுக்கு பிறகு யுத்தம்,வேலணையை இராணுவம் கைப்பற்றல், தொடர்ந்து வந்த இடப்பெயர்வுகள்,சம்பவங்கள் எல்லாம் கலந்து நிரந்த முற்றுப் புள்ளியை என் காதலுக்கும் வைத்து விட்டது.
இப்போதெல்லாம் கதையம்சம் உள்ள படங்களை யாழ் மண்ணின் திரையரங்குகளில் காண்பது அரிது. இப்போது யாழ் நகரில் பிரபல்யமான தியேட்டர் ராஜா தியேட்டர் தான். அங்கு இப்போது விஜய், அஜித், ரஜினி படங்களுக்குத் தான் அதிகம் மவுசு. நம்மூர் இளசுகளும் இப்போது அதனைத்தான் ரசிக்கின்றார்கள்.
:)
ILA
மாயா
நீங்கள் சொல்றதும் சரிதான்
ஹேமா
என் பதிவு வாயிலாக உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி. சினிமா பார்ப்பது என்பது ஒரு சின்ன விஷயமென்றாலும் அதனைச் சுற்றிய ஆர்ப்பரிப்பு தான் அங்கே கவனிக்கப்படுக்கிறது இல்லையா?
மெல்பன் கமல்
இன்னொரு வட்ட்ம் புதிய ரசனையோடு வந்திட்டினம் போல
இளா
வருகைக்கு நன்றி
அழகான ஞாபகங்களை அழகாக தொகுத்திருக்கின்றிங்கள்.
//சினிமா பார்ப்பது வெறும் பொழுதுபோக்கு சமாச்சாரம் ஆனால் அதைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பும் ஆர்ப்பாட்டங்களுமே இவை, அதுவே என் வாழ்வின் ஒரு பகுதியாகவும் அமைந்து விட்டது.//
வாவ்...!!!
வருசம் பதினாறு எத்தினையாம் ஆண்டு வந்தது என்று பார்த்திட்டு வாறன்
றீகல் தியேட்டரை இன்னமும் மறக்கமுடியல, பிரபா.
நல்ல அனுபவங்கள்!
தீபாவள் வாழ்த்துகள்!
அன்புடன்
செல்லி
//தமிழ் சினிமா இசையின் அடையாளம் இளையராஜாவுக்குப் பின் தொலைந்து போய் விட்டது என்றே சொல்வேன்.
//
very true!
தமிழ்ஜங்ஷன்
இணைப்புக்கு நன்றி நண்பரே
கோகுலன்
வாசித்துக் கருத்தளித்தமைக்கு நன்றி ;-)
சினேகிதி
வருஷம் 16 தேடி வயசு கண்டுபிடிக்க திரியிறியள் என்ன தங்க்ஸ் ;-)
சர்வேசன்
இனி ராஜாவே வந்தாலும் இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது இல்லையா :(
//செல்லி said...
றீகல் தியேட்டரை இன்னமும் மறக்கமுடியல, பிரபா.
நல்ல அனுபவங்கள்!
தீபாவள் வாழ்த்துகள்!
அன்புடன்
செல்லி//
வணக்கம் செல்லி
உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள், நன்றி
றீகல் தியேட்டரின் இடிபாட்டுச் சுவடுகளையும் இப்போது எடுத்து விட்டார்கள், எல்லாம் சுமூகமாக இருக்கு எண்டு காட்ட :(
அதே கண்கள் - ரோஷோமான்
நாயகன் - காட் பாதர்
ரோஜா - ஹெல்ட் ஹாஷ்பேஜ்
ஆயுத எழுத்து - அமரோஸ் பெரோ
கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் - சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி
போக்கிரி - டோனி ப்ராஸ்கோ
குஷி - வென் ஹேரி மெட் சாலி
ஜேஜே - செரண்டிபிட்டி
காதலர் தினம் - யூ ஹேவ் காட் மெயில்
நம்மவர் - டூ சார் வித் லவ்
காக்க காக்க - த அன்டச்சபிள்
வெயில், ஆட்டோகிராப் - சினிமா பாரடைசோ
மே மாதம் - ரோமன் ஹாலிடே
குணா - டை மீ அப் டை மீ டவ்ன்
சதிலீலாவதி - ஷீ டெவில்
புதுப்பேட்டை - சிட்டி ஆப் காட்
கஜினி - மெமண்டோ
துரை - கிளாடியேட்டர்
அந்நியன் - செவென்
பட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ்
வேட்டையாடு,விளையாடு - மர்டர் ஆப் மெமரிஸ்
அஞ்சாதே - மிஸ்டிக் ரிவர்
தாம் தூம் - ரெட் கார்னர்
சரோஜா - ஜட்ஜ்மென்ட் நைட்
வேகம்,நாயகன்(2008) - செல்லுலர்
அலிபாபா - த்ரீ அயர்ன்
அவ்வை சண்முகி - மிஸ்டர் டவ்ட் பயர்
பச்சைக்கிளி முத்துச்சரம் - டிரைல்டு
பொல்லாதவன் - பீஜிங்க் பை சைக்கிள்
நந்தலாலா - கிகிஜிரோ
யோகி - சோட்சி
வாரணம் ஆயிரம் - கிளாசிக்
என்ன நண்பர்களே மூச்சு திணறுகிறதா?
வரப்போகும் படத்தையும் விட்டு வைக்காமல் மூலத்தைக் காட்டியமைக்கு நன்றி நண்பரே ;)
கானா பிரபா,
நீயா படம் சாந்தியில் அல்லவா ஓடியது? ஒரு வேளை இரண்டாவது முறையாக வின்சரில் ஓடியதோ?
நீங்கள் சொன்னது போல ஸ்ரீலங்காவிலேயே வின்சர் மாதிரி விசாலமனதும் வசதிகள் நிறைந்ததுமான அரங்குகள் இல்லை. ஆனால் அண்மைய வின்சர் புகைப்படங்கலைப்பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது.
ரீகல் அரங்கு பங்குச்சண்டையில் உடைக்கப்பட்டு பின்னர் மிகமிக ‘நவீனமாக' கட்டினார்கள் ஆனால் பழைய தரக்கொட்டகை போல் ஒலி/ஒளி தரம் இருக்கவில்லை. ஆங்கிலப்படங்கள் ரீகலில் வெளியிடப்படுவதையே நாம் எல்லோரும் விரும்புவோம். அதிலும் திகில் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். தி ஓமன் (The Oman) அங்கேயே பார்த்தேன்.
எனக்கென்னவோ மனோகரா இப்போது அழகாக இருப்பது போல் தோன்றுகிறது. மூட்டைப்பூச்சிக்கு பெயர் போன அரங்கு மனோகரா! கண்ணை மூடி கொண்டு சென்றால் மலத்தியன் மணத்தில் மனோகரா எனச் சொல்லி விடலாம்!
வணக்கம் நண்பரே
நீயா படம் சாந்தியில் தான் ஓடியிருக்கலாம். என் ஞாபகமறதியில் வின்சர் என்று போட்டு விட்டேன். மனோகரா ஒன்று தான் இப்போது அங்கே பரவாயில்லை ரகம். 2 வருஷம் முன் அங்கே போனபோது எல்லா தியேட்டர் முகப்பையும் ஞாபகமாக எடுத்து வந்தேன்.
றீகலின் உடைந்த சுவடைக் கூட இப்போது அகற்றி விட்டார்கள்.
Post a Comment