"நான் சுவர் பக்கமா நிண்டு கண்ணப் பொத்துறன், நீங்கள் எல்லாரும் ஓடிப்போய் ஒளியுங்கோ" எண்டு சொல்லிப் போட்டு ஒரு சின்னப் பெட்டையோ, பெடியனோ மதிலில் தன் முகத்தைச் சாத்தி விட்டு ஒண்டு, ரண்டு எண்ணத் தொடங்கும். மற்றப் பெடி பெட்டையள் ஆளாளுக்கு ஒவ்வொரு திக்காகப் போய் ஒளிப்பினம். எல்லாரும் ஒளிச்ச பிறகு ஒராள் "கூஊஊஊஊ" எண்டு கூக்காட்டினவுடன மதில் பக்கமா நிண்டவர் இப்ப ஒவ்வொரு ஆளாகத் தேடிக் கண்டுபிடிக்க வெளிக்கிடுவார். மாமரங்களுக்கு மேலை ஏறியும், கோழிக்கூடு, பெட்டி அடுக்குகளுக்குப் பின்னாலும் எண்டும் ஓவ்வொருவராய் தேடித் தேடிப் பார்த்து பிடிக்கவேணும். வீடுகளுக்குள்ள போய் ஒளிக்கேலாதாம், பிறகு வீட்டுக்காரார் விளையாட விடாமல் தடுத்துப் போடுவினம் எல்லோ. அது ஆட்டத்தில் வராதாம்.ஒளிச்ச ஆட்களைத் தேடிப் பிடித்து அவரைத் தொட்டால் பிடிபட்டவர் அந்த விளையாட்டில் தோல்வியாம்.
அப்ப தான் யாழ்ப்பாணத்தில இருந்து வந்து கொண்டிருந்த ஈழமுரசு பேப்பரில் புதுத் தொடர் ஒண்டு ஆரம்பிச்சுது. "விமானக் குண்டு வீச்சில் இருந்து எம்மைப் பாதுகாப்பது எப்படி" எண்டு உலக மகாயுத்த காலத்தில் எடுத்த பதுங்கு குழிகளின்ர படங்களை எல்லாம் போட்டு, வீடுகளிலும், றோட்டுப் பக்கங்களிலும் எப்படி பதுங்கு குழிகளை வெட்டலாம் எண்டு படங்கள் கீறி எல்லாம் விளங்கப்படுத்தியிருந்தினம். எங்களுக்கு அப்ப அது புதினமான செய்தியா இருந்துது, என்னடாப்பா இப்பிடியெல்லாம் நாங்கள் பங்கர் வெட்ட வேண்டி வருமோ எண்டு. ஆனா அதுக்கெல்லாம் அச்சாரம் வச்சது போல, இலங்கை அரசாங்கமும் பிளேனால குண்டு போட்டு அழிக்க ஆரம்பிச்சாங்கள்.
வீடுகளுக்கை இருக்கவும் ஏலாது, றோட்டாலை போகவும் வழியில்லை. பிளேன் வர முதல் ஹெலிகொப்ரர்கள் வந்து நாலு பக்கமும் ரவுண்டு அடிச்சுப் போட்டு றோட்டாலை போற சனத்தைப் பார்த்துச் சட சட வெண்டு சன்னங்களை ஏவுவாங்கள். சிலநேரத்திலை "கோள்மூட்டி" எண்டு நாங்கள் பட்டம் வச்ச சீ பிளேன்களும் வந்து றவுண்ட் அடிச்சு இடங்களைப் பாத்து வச்சிட்டுப் போவாங்கள். சனத்துக்கு விளங்கிவிடும் அடுத்த எமன்களும் வானத்தில வரப்போறாங்கள் எண்டு ஆளாளுக்கு ஒவ்வொரு திக்காகப் போய் மறைவாக ஒளிப்பினம்.கொஞ்ச நேரத்திலை ஒவ்வொரு பிளேனா வந்து தங்கட வைத்தில ஹெலி போய் முடிய பிளேன்கள் ஒவ்வொண்டா பலாலிப் பக்கமிருந்து வரும். முதலில் கோள் மூட்டிகள் பாத்து வச்ச இடங்களைச் சுற்றி இவங்களும் மேலால றவுண்ட் அடிச்சிட்டு, குத்திட்டு பிளேனை கொஞ்சம் இறக்கி, கொண்டு வந்த குண்டுகள் ஒவ்வொண்டா போட தொடங்குவாங்கள். சிறுசுகள், பெருசுகள் எண்ட பேதமில்லாமல் ஐயோ ஐயோ எண்டு அலறக் கொண்டே இன்னும் மறைவான இடங்களைத் தேடி ஓடுவினம். ஆனால் ஆப்பிட்ட ஆட்கள் சின்னா பின்னமா சிதற வேண்டியது தான்.
அப்ப தான் பங்கர் வெட்ட வேணும் எண்ட யோசினை பரவலா எல்லாருக்கும் ஒரு தேவையா மாறீட்டுது. ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு முற்றத்திலோ, பின் வளவுக்குள்ளையோ ஒரு சோலை மறைப்பான நிலம் தேடி ஆள் உயரத்துக்கு "ட" வடிவத்தில கிடங்கு வெட்டி, கிடங்குக்கு மேல் மரக்குற்றிகளை அடுக்கி மூடி மறைத்து விட்டு, அதுக்கு மேலை மண் நிரவு மூடி விடுவினம். ஒரு வாசலும், படிக்கட்டுகளும் உள்ளே போக வரவும். நிலமை மோசமாக, இரவு வேளைகளில் பதுங்கு குழிகளுக்குள்ளேயே சாப்பாடும், நித்திரையுமா இருந்த காலமும் இருந்தது. அப்பவெல்லாம் பிளேன் குண்டு மட்டுமில்லை, பலாலியில் இருந்து ஆட்டிலறி ஷெல்லும் அடிப்பாங்கள்.
பிளேன் குண்டிலை இருந்து தப்ப, பங்கருக்குள்ளை ஒளிக்கப்போன சிலர் உள்ளுக்கை இருந்த பாம்பு கடிச்சுச் செத்துப் போன கதையளும் இருக்கு. இப்பிடி ஏதும் நடக்கக் கூடாது எண்டதுக்காக காலையில் ரோச் லைட்டும் கையுமா பங்கருக்குள்ள போய் மண்ணெணையை ஒவ்வொரு பங்கரின் ஒவ்வொரு மூலையிலும் பீச்சியடிப்பினம் சில பேர். ஆனால் ஆபத்து அந்தரத்துக்கு பங்கருக்குள்ள பாய்ந்து ஒளித்தால் மண்ணெண்ணை மணம் மூக்கை கூறு போட்டு விடும்.
தொண்ணூறாம் ஆண்டு யாழ்தேவி ரெயில் தன்ர கடைசி பிரயாணத்தை காங்கேசன் துறையில் வந்து நிறுத்திக் கொண்டது. அதுக்கு பிறகு இந்த பதினெட்டு வருஷமா யாழ்ப்பாணத்துக்கு ரெயிலே இல்லை. எத்தனையோ பிள்ளையள் ரெயிலே காணாமல் இன்னமும் இருக்கினம். சிலர் காணாமலேயே செத்தும் போச்சினம். ரெயில் போக்குவரத்து நிண்டாப் பிறகு தண்டவாளத்தில் சிலிப்பர் கட்டைகள் தான் பிறகு பங்கர்களுக்கு மேலால் அடிக்கும் மரத்துண்டுகளாக பாவிச்சினம். இப்ப யாழ்ப்பாணப்பக்கம் போனா ரெயில் போக்குவரத்து நடந்த சுவடே இருக்காது, சிலிப்பர் கட்டைகளும் தண்டவாளங்களும் இல்லை அந்த இடத்தில புல் பூண்டு தான் இருக்கும்.
நான் ரண்டு வருஷத்துக்கு முன் எங்கட ஊருக்கு போனபோது இருந்த கோண்டாவில் புகையிரத நிலையத்தின்ர படத்தை மறக்காமல் எடுத்து வந்தனான். அது இருக்கிற கோலத்தைப் பாருங்கோ.
வீடுகளில வீரமான, பலமான ஆம்பிளையள் இருக்கிறவை தாங்கள் தாங்களாவே தங்கட வீட்டில பங்கர் வெட்டி வச்சிருப்பினம். அப்படி இல்லாதவை கூலிக்கும் ஆட்கள் பிடிக்கிறது வழக்கம். இப்பவும் நினைப்பிருக்கு. மணியண்ணையின்ர மேன் பாலகுமார் எங்கட கூட்டாளி. அவையின்ர குடும்பம் பெரிசு. பங்கர் வெட்டோணும் எண்டால், நிலத்துக்கு கீழை வீடு கட்டோணும். அவ்வளவு பேர் அவையின்ர வீட்டிலை. அந்த நேரத்தில பாலகுமார் எங்கட பெடியளிட்ட வந்து "இஞ்ச பாருங்கோ, நீங்கள் ஒரு பெரிய பங்கர் வெட்டித் தந்தால் ஒரு சாமான் பிறசண்டா தருவன்" எண்டு சொல்லி பெடியள் எல்லாருக்கும் ஆசை காட்டி பென்னம் பெரிய பங்கறை வெட்ட வச்சான். கிட்டத்தட்ட அஞ்சு நாள் பகல் முழுதையும் பாலகுமார் வீட்டு பங்கர் வெட்டும் வேலையே பிராக்காப் போயிட்டுது. அவன்ர தமக்கையின்ர புருஷன் அந்த நேரம் மிடில் ஈஸ்டில வேலை செஞ்சு கொண்டிருந்தவர். அவர் குடுத்தனுப்பின சொக்கிளேட்டுகளும், ஆளுக்கொரு கொக்கோ கோலா படம் போட்ட கீ செயினும் தான் இந்த பங்கர்ர் வெட்டினதுக்கு பாலகுமார் கொடுத்த சன்மானம்.
சில வீடுகளிலை கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு நாளும் பங்கர் வெட்டப் போய், அது ஒரு நாள் அடிக்கும் மழை வெள்ளத்தில் அப்படியே பாழ் படுவதும் உண்டு. பிறகு அந்த பஙக்ர் குப்பை கூழம் போடத் தான் பயன்படும்.
தொண்ணூற்றி ஒராம் ஆண்டு சாதாரண தரம் சோதினை முடிஞ்ச புழுகத்திலை பெடியள் எல்லாருமாச் சேர்ந்து ராஜா தியேட்டரில ஓடின "ராஜாதி ராஜா" படம் பார்த்து விட்டு சைக்கிளை எடுக்கலாம் எண்டு திரும்பேக்கை, "தம்பிமார், ஒருக்கா கோட்டை பக்கம் வரவேணும்" எண்டு சொல்லி இயக்க அண்ணாமார் வந்து கூட்டிக் கொண்டு போச்சினம். அது கோட்டையில் இருந்து ஆமிக்காறனை முற்றுகை போடப் பாதுகாப்பாக வெட்டின பங்கர்கள்.
கோட்டைப்பக்கத்தைப் பற்றிச் சொல்லேக்க தான் நினைப்பு வருது. அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் யாழ்ப்பாணம் இருந்த வேளை ஊரிலை சின்னச் சின்ன களவு வேலைகள் செய்யிறவைக்கு தண்டனை கோட்டைப் பக்கம் பங்கர் வெட்டுறது,, பிறகு கோட்டை பிடிபட்ட பிறகு கோட்டை உடைக்கவும் தண்டனை கிடைச்சது. நாங்கள் ரண்டு மூண்டு நாள் ரியூசனுக்கு போகாட்டால் மாஸ்டர் கேட்பார், "டேய்! என்ன கோட்டைப் பக்கம் பங்கர் வெட்டவோ போனனீ?" எண்டு.
அச்சுவேலிப்பக்கமாவும் பங்கர் வெட்ட வேணும் எண்டு சொல்லவும் பெரிய வகுப்பு பெடியளா இருந்த நாங்கள் ஒரு நாள் விடியவே ஒரு செற்றாப் போனாங்கள். அது இயல்பாகவெ ஐதான மண் உள்ள குருமணல் பிரதேசம். ஆளுக்காள் பகிடி விட்டுக் கொண்டு, அவை அவ்வியின்ர காதல் கதைகளையும் கதைச்சுக் கொண்டு பங்கர் வெட்டினால் நேரம் போனதே தெரியேல்லை. மத்தியானம் கோழிக் குழம்போட சாப்பாடும் கிடைச்சது. மத்தியானம் மூண்டு இருக்கும் அதுவரை வெட்டின பங்கரின் ஒரு பக்கம் மெல்லப் பொறிந்து பாழாப்போனாது.
ஒளிச்சுப் பிடிச்சு விளையாட்டு இப்ப எங்கட ஊர்ப்பிள்ளைகளுக்கு மறந்திருக்கலாம். ஆனா இருபது வருஷமா பிளேனுக்கு ஒளிச்சு ஓடுறதை மறக்கமாட்டினம். அதுதான் இன்னும் தொடருதே.....
தொடர்புபட்ட என் முந்திய இடுகைகள்
இரை தேடும் இயந்திரக் கழுகுகள்
எங்க ஊரு காவல்காரங்கள்
படங்கள்: எனது பிரத்தியோகமானவை
32 comments:
//ஒளிச்சுப் பிடிச்சு விளையாட்டு இப்ப எங்கட ஊர்ப்பிள்ளைகளுக்கு மறந்திருக்கலாம். ஆனா இருபது வருஷமா பிளேனுக்கு ஒளிச்சு ஓடுறதை மறக்கமாட்டினம்.//
:(
நல்ல பதிவுன்னு சொல்ல மனசு கஷ்டமாயிருக்கு!!
நிலைமை எப்போ மாறுமோ??
:(
நல்ல பதிவுன்னு சொல்ல மனசு கஷ்டமாயிருக்கு!!
நிலைமை எப்போ மாறுமோ??
:(
repeat
மனதினை ஆழ்த்தும் ரணங்களாய் வாழ்க்கை!
எத்தனை சுலபமாய் இருக்கிறது எழுத்து பிரயோகங்கள்
இது பட்ட கஷ்டத்தின் பாதிப்பில் விளைந்தவை விழுந்தவை என்று!
ஒழியட்டும் !
விளையாட்டு மட்டுமல்ல!
ஒளிந்து மறையும் அவல வாழ்க்கையும் கூட...!
என்ன எழுதுவதென்றே தெரியவில்லை... எனக்கு கதிரவனின் நினைவுகள் தான் வருகின்றது :(
கட்டுரையைவிட படங்கள் கதைசொல்கின்றன . .
படங்கள் அருமை :(
படங்கள் அருமை என்று கூறக்கூடாது தான் . . . . .
வருகைக்கும், உங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கும் நன்றி ஆயில்யன்
//சந்தனமுல்லை said...
நல்ல பதிவுன்னு சொல்ல மனசு கஷ்டமாயிருக்கு!!
நிலைமை எப்போ மாறுமோ?? //
வருகைக்கு நன்றி சந்தனமுல்லை
சின்னஞ்சிறுசுகளின் வாழ்வு என்பது அங்கு எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் அவல நிலை மாறவேண்டும்
எங்கட வீட்டிலயும் ஒரு பங்கர் இருந்தது. அப்ப சின்ன பிள்ளையளா ஒளிச்சுப் பிடிச்சு விளையாடேக்க பங்கருக்குள்ளையும் ஒளிச்ச ஞாபகங்கள் இருக்கு.
மனம் பாரமாய் இருக்கிறது....(
விடியல் பிறக்க வேண்டுதல்களுடன்..!
பிரபா,ஐயோ...எண்டு குளறவேணும் போல இருக்கு.உண்மையா அழுகிறேன்.எங்கட கோண்டாவில் றெயில்வே ஸ்டேசன்.ம்ம்ம்ம்....
கடவுளே என் காலங்கள் எனக்கு வேணும்.திரும்பவும் பிறப்பேனோ தெரியாது.என் ஊரில் என் மண்ணில் நான் வேணும்.எனக்கு வேணும்.
நந்தாவில் குளம் வேணும்.
முனியப்பர் கோவில் வேணும்.
தாவடிச்சந்தி தாண்டி பாத்துக்கொண்டே நடக்க வேணும் கொக்குவிலுக்கு.இஞ்சால திரும்பினா சுதுமலை அம்மன் கோயில்,
வயல்வெளி வேணும்.கோண்டாவில் ஸ்டேசன் றோட்டில காளிகோயில் தாண்டி ஸ்டேசன் கேட் தாண்டி அரசடிப் பிள்ளையார் தாண்டி...
நாவல் மரம் வேணும்
முடியேல்ல.காலைச் சுற்றும் ஞாபகங்கள்.கொல்லும் ஆயுதங்களாய் நினைவுகள்!!!இப்படியான ஞாபகங்களைப் பதிவுகளாகப் போடுங்கோ எண்டு சொல்லவா... இல்லாட்டி வேணாமா.உயிரோட கொல்ற மாதிரி இருக்கு பிரபா!!!
பிரபா,பங்கர் பதிவுக்கும் என் வலிக்கும் சம்பந்தம் இல்லைதான்.
என்றாலும் கோண்டாவில் ரெயில்வே ஸ்டேசன் பார்த்தேன்.முடியவில்லை
காத்திருப்போம்.என் அஸ்தியையாவது என் ஊரில் கலக்கவிட ஆவன செய்ய முயற்சியில் இருக்கிறேன்.இது ஒரு மனச் சாந்திக்காக மட்டுமே!!!
:(
பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திவிட்டிர். 87ல் இந்திய அரசாங்கம் உணவு பொட்டலங்களை வானத்தில் இருந்து போட , அந்த மீராஜ் விமானத்தின் சத்தத்துக்கு ,இலங்கை அரசாங்கம் புதிதாக வாங்கிய விமானத்தில் இருந்து குண்டு போடுகிறார்கள் என நினைத்து நானும் பதுங்கு குழிக்குள் சென்று விட்டேன். பிறகு சத்தம் குறைய வெளியில் வந்து பார்த்தால் விதி முழுக்கச்சனம் வேடிக்கை பார்க்கிறது.
இந்தியன் ஆமி யாழ்ப்பாணத்தினைப்பிடிக்கப் கே.கே.எஸ் விதியினால் போனபோது சில பொதுமக்களினைச் சுட்டுப் பதுங்குகுழியில் போட்டு விட்டுச்சென்றார்கள்.
எனது உறவினர் கொக்குவில் இருந்து ஒட, அவர்களது தாய் தகப்பன் மார் வருத்தம் காரணமாக ஒட முடியாமல் பதுங்குகுழியில் இருந்தினம். பிறகு உறவினர், திரும்பி வந்து பார்க்க அவையல் இறந்து கிடந்தினம்.அவசரம் அவசரமாக அவையாளை பதுங்கு குழியில் மூடி தாட்டுவிட்டு பாதுகாப்பாக வேறு இடத்துக்குப் போனார். 40 நாளுக்குப்பிறகு தான் திரும்பி அவர் தனது வீட்டுக்கு வர முடிந்தது
90ம் ஆண்டு பலாலியில் இருந்து இலங்கை ஆமி செல் அடித்துக் கொண்டு வர குப்பிளான் மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அப்பொழுது, ஒருவர் தனது வயதான நோய் வாய்ப்பட்ட தகப்பனை பதுங்குகுழியில் விட்டு ஒடினார். இன்று வரை அவர் தனது வீட்டுக்குப் போக முடுயவில்லை. உயர் பாதுகாப்பு வலயத்தினால், குப்பிளானின் ஒரு பகுதிக்கு(குரும்பசிட்டி பக்கம்) இன்னும் ஒருவரும் செல்லமுடியாது
சில பதுங்கு குழியில் பாம்புகள், பூச்சிகளின் கடியும் கிடைக்கும். அதனால் 90 கார்த்திகையில், பலாலி ஆமி செல் அடிக்க முக்கைப்பொத்திக்கொண்டு 3,4 மணித்தியாலம் சாணகத்தினால் மெழுகி விட்டிருந்தா பதிங்குகுழியில் இருந்தோம்
இப்பொழுது நான் வசிப்பது ஒரு விமான நிலையத்தின் அருகில். 95 இற்குப் பிறகு நான் யாழ்ப்பாணத்தில் வசிக்கவில்லை. ஆனாலும் எப்போதாவது என் யன்னல் திறந்திருக்கும் இரவு நேரத்தில் இன்றும் விமானம் தரை இறங்கும் அல்லது ஏறும் நேரத்தில் என்னை அறியாமல் எழுந்து ஓடுவதும் கணவர் என்னைப் பிடித்து ஆசுவாசப் படுத்துவதும் இன்றும் தொடர்கிறது. இதனாலேயே வேறு வீடு பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இதுவெல்லாம் வாழ்நாளின் நிரந்தர வடுக்கள்.
பதுங்கு குழி வாசலிலேயே எனது உறவுகள் இறந்ததும் உயிரற்ற உடல்களைத் தாண்டி பதுங்கு குழியில் இருந்து வந்த அவலங்களும் நினைக்கவே முடியாதவை.
பிரபா பழைய நினைவுகளை வெளிக்கொணர்ந்ததற்க்கு நன்றிகள். நான் உயர்தரப் ப்ரீட்சை எடுத்தபோது விமானக்குண்டு வீச்சும் கடலில் இருந்து நேவிக்காரனும் சுட்டான் வழியில் எதிர்ப்பட்ட மதகுகளுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் பதுங்கி பதுங்கிப்போய் சோதனை எடுத்தது. எங்களுக்கு 2மணித்தியாலம் பிந்தித்தான் பேப்பரே தந்தார்கள். பாடசாலைக்கு அருகில் எல்லாம் ஷெல் வந்து விழுந்தது, அதே நாள் இரவு ஊர்க்கோவிலில் திருவிழாவும் பார்த்தது ராஜன் கோஷ்டி என நினைக்கின்றேன். காலையில் விமானத் தாக்குதல் மாலையில் நாம் வழமைக்குத் திரும்பிவிடுகின்றோம் இந்த ஓர்மம் இருப்பதால் தான் இன்னமும் யாழ்ப்பாணத்தில் மக்கள் திடமாக இருக்கிறார்கள்.
பின்குறிப்பு நீங்களும் தொண்ணூற்றி ஓராம் ஆண்டு ஓஎல் எடுத்தவரா? (ஹிஹிஹிஹி)
//ஒளிச்சுப் பிடிச்சு விளையாட்டு இப்ப எங்கட ஊர்ப்பிள்ளைகளுக்கு மறந்திருக்கலாம். ஆனா இருபது வருஷமா பிளேனுக்கு ஒளிச்சு ஓடுறதை மறக்கமாட்டினம். அதுதான் இன்னும் தொடருதே.....//
:((
//மாயா said...
கட்டுரையைவிட படங்கள் கதைசொல்கின்றன . .//
நன்றி மாயா
//நிமல்/NiMaL said...
எங்கட வீட்டிலயும் ஒரு பங்கர் இருந்தது. அப்ப சின்ன பிள்ளையளா ஒளிச்சுப் பிடிச்சு விளையாடேக்க பங்கருக்குள்ளையும் ஒளிச்ச ஞாபகங்கள் இருக்கு.//
நிமல்
பங்கர்கள் இந்த விளையாட்டுக்கும் பயன்பட்டது என்பதை நான் சொல்லமற்ந்து விட்டேன்.
//நிஜமா நல்லவன் said...
மனம் பாரமாய் இருக்கிறது....(
விடியல் பிறக்க வேண்டுதல்களுடன்..!//
வணக்கம் நண்பா
நிரந்தர விடியல் கிடைக்கவேண்டும் என்பதே நம் பிரார்த்தனை
எப்படித்தான் உங்களால் முடிகிறதோ? இங்கேதான் நீங்கள் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகிறீர்கள். வாழ்த்துக்கள் பிரபா!!
ஒழிச்சுப் பிடிச்சு விளையாடுறது மேலால போடுற பிளேனுக்கு மட்டும் இல்லை. கீழால வந்து தூக்கிற வெள்ளை வானுக்கும் தான். மேலாலையும்,கீழாலையும் தமிழனை வதைக்கிறார்கள். மிக நல்ல பதிவு. சங்கத்தனையில் இப்படி பதுங்கு குழிக்குள் இருந்த போதுதான் அதற்கு மேலே விழுந்த குண்டால் பதுங்குகுழியோடு பரலோகம் போன பழிக்கதைகளும் பாவ தமிழினத்துக்கு உண்டு. தொடரகூடது இது. ஆனால் தொடரவேண்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்!!!
//பிரபா,பங்கர் பதிவுக்கும் என் வலிக்கும் சம்பந்தம் இல்லைதான்.
என்றாலும் கோண்டாவில் ரெயில்வே ஸ்டேசன் பார்த்தேன்.முடியவில்லை
காத்திருப்போம்//
வணக்கம் ஹேமா
ஊருக்கு போனபோது இப்படியான நினைவின் எச்சங்களைப் புகைப்படமாக்கிக் கொண்டேன். வலிகள் தொடர்கதையான வாழ்வு தானே நம்மவருடையது.
வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி
:(
ஒழியட்டும் !
இந்த விளையாட்டு மட்டுமல்ல!
ஒளிந்து மறையும் அவல வாழ்க்கையும் கூட...!
வேதனை தரும் பதிவு பிரபா. என்னுடைய பழைய ஞாபகங்களையும் நினைவூட்டுகிறது.
மட்டக்களப்பில் போரினால் இடம்பெயர்ந்தவர்கள் பற்றி நேரடித் தகவல் சேகரிப்பதற்காக இதழியல் கல்லூரியினால் நியமிக்கப்பட்டு நானும் சகோதர ஊடகவியலாளரும் சென்றிருந்த போது முறக்கொட்டாஞ்சேனை முகாமை விடுதலைப்புலிகள் தாக்கினர். அப்போது நாம் பின்னாலுள்ள வீடுகளில் மக்களிடம் கதைத்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்தோம்.
தாக்குதல் ஆரம்பமானபோது மக்கள் செங்கலடி பகுதி மக்கள் அனைவரும் பதறியடித்துக்கொண்டு ஓடத்தொடங்கினர். எம்மீது அக்கறை கொண்ட பிரதேசவாசிகள் இருவர் எம்மை அழைத்துச்செல்ல முற்பட்ட போதும் அதிக ஷெல் தாக்குதல்களால் அகல முடியாமல் போனது.
சுற்றி சுற்றி ஓடித்திரிந்து துப்பாக்கி வேட்டுகளை தீர்த்த படையினர் எம்மை நிலத்தில் படுத்துக்கொள்ளுமாறு சத்தமாக பயங்கரமான கோபத்தில் கூறினர். சுமார் மூன்றரை மணிநேரங்கள் காதைப் பொத்திக்கொண்டு நிலத்தில் படுத்து இறைவனை வேண்டிக்கொண்டு வீட்டாரை நினைத்து கண்ணீர் வடித்தது இன்னும் நினைவிருக்கிறது பிரபா.
கோபத்தில் அங்கிருந்த தமிழர்களை எல்லாம் துப்பாக்கியால் படையினர் அடித்தார்கள். வாய்திறக்க முடியாமல் நாம் பார்த்துக்கொண்டிருந்தோம்.
என்ன செய்வது விதி என்பது இதற்குத்தான் போல?
சுதந்திரத்தை கொண்டாடுவோம்!
சுதந்திர தினநல்வாழ்த்துக்கள்!
http://mohideen44.blogspot.com
//Aravinthan said...
பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திவிட்டிர்.//
வணக்கம் அரவிந்தன்,
நீங்களும் நானும் சமகாலத்தில் ஒரே ஊரில் இருந்ததால் பல பழைய நினைவுகளை நீங்களும் இரைமீட்டி விட்டீர்கள். காலம் தான் பழசு ஆனால் அந்தக் கொடுமைகள் விதவிதமா, புதுசு புதுசா இன்னும் தொடருது இல்லையா
// Sathananthan said...
இன்றும் விமானம் தரை இறங்கும் அல்லது ஏறும் நேரத்தில் என்னை அறியாமல் எழுந்து ஓடுவதும் கணவர் என்னைப் பிடித்து ஆசுவாசப் படுத்துவதும் இன்றும் தொடர்கிறது.//
வணக்கம் சகோதரி
முதன் முதலில் விமானம் ஏறும் போது எனக்கு கால்கள் கூசினதும் நினைப்புக்கு வருகுது. கொழும்பில் இடைப்பட்ட காலத்தில் இருந்த போது ஹெலிகொப்டர்கள் வானில் பறந்தாலே தலை தானாக கிறுகிறுக்கும். தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி
//வந்தியத்தேவன் said...
பிரபா பழைய நினைவுகளை வெளிக்கொணர்ந்ததற்க்கு நன்றிகள். நான் உயர்தரப் ப்ரீட்சை எடுத்தபோது விமானக்குண்டு வீச்சும் கடலில் இருந்து நேவிக்காரனும் சுட்டான்//
வணக்கம் வந்தியத் தேவன்
பரீட்சை காலங்களில் ஓடி ஒளித்துக் கொண்டு பரீட்சை எழுதுவது, மூன்று மாடிக் கட்டிடத்தின் கீழ் பாதுகாப்பா இருந்து எழுதுவது என்று எல்லாமே நடந்திருக்கு.
//இந்த ஓர்மம் இருப்பதால் தான் இன்னமும் யாழ்ப்பாணத்தில் மக்கள் திடமாக இருக்கிறார்கள். //
சரியாகச் சொன்னீர்கள்
கோகுலன்
வருகைக்கு நன்றிகள்.
எமது பச்சிளம் சிறுமிகள் பதுங்கு குழியினுள் பயந்து அழுதபடி இருக்கும் நிலையை தங்களின் வலைப்பதிவின் ஊடாக காட்டியதற்கு மிக்க நன்றிகள்
//தமிழ் விரும்பி said...
ஒழிச்சுப் பிடிச்சு விளையாடுறது மேலால போடுற பிளேனுக்கு மட்டும் இல்லை. கீழால வந்து தூக்கிற வெள்ளை வானுக்கும் தான். //
வணக்கம் நண்பா
முன்பெல்லாம் வெள்ளை வானுக்கு இளைஞர்கள் மேல் குறி, இப்போது தான் அதுக்கும் வயசு வித்தியாசம் இல்லையே. சிறீலங்கா தலைநகரிலேயே தொடரும் கொடூரம் இது.
//தமிழ் பிரியன் said...
:(
ஒழியட்டும் !
இந்த விளையாட்டு மட்டுமல்ல!//
உங்கள் கனவு மெய்ப்படவேண்டும் நண்பா.
//இறக்குவானை நிர்ஷன் said...
வேதனை தரும் பதிவு பிரபா. என்னுடைய பழைய ஞாபகங்களையும் நினைவூட்டுகிறது. //
நிர்ஷான்
தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி, வேதனையும் வேதனை இவை இல்லையா?
//ச.இலங்கேஸ்வரன் said...
எமது பச்சிளம் சிறுமிகள் பதுங்கு குழியினுள் பயந்து அழுதபடி இருக்கும் நிலையை தங்களின் வலைப்பதிவின் ஊடாக காட்டியதற்கு மிக்க நன்றிகள்//
மிக்க நன்றி சகோதரனே
\\ சந்தனமுல்லை said...
நல்ல பதிவுன்னு சொல்ல மனசு கஷ்டமாயிருக்கு!!
நிலைமை எப்போ மாறுமோ??
:(
\\
:( ரீப்பிட்டு
பதிவு மனதில் ஏற்படுத்திய கணத்தை விவரிக்க போதிய வார்த்தைகள் இல்லை:((
நிலைமை மாற பிரார்த்திக்கிறேன்.....
கோபி
வருகைக்கு நன்றி தல
மிக்க நன்றிகள் திவ்யா, நம் உறவுகள் நிம்மதியானதொரு வாழ்வில் நிரந்தரமாய் இருக்கவேண்டும்.
தற்போது வன்னி களம் தினமும் அதிர்கிறது. சனமும் இடம்பெயர்ந்துக் கொண்டிருக்கினம். ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடக்கவிருந்த உளர்ச்சார்பு பரீட்சையும் எம் சிறார்கள் எழுத முடியாமல் போயுட்டுது.
எதிர்வரும் மாதங்களில் மழை ஆரம்பிக்கும். வெட்டிய பங்கருக்குள்ளும் தண்ணீர் நிரம்பிவிட்டால், ஆமியின்ர செல் அடியில் இருந்தும் வான் குண்டுத் தாக்குதலில் இருந்தும் காப்பாற்றிக் கொள்ள சனம் என்ன செய்யப் போகுதோ .....???
நீங்கள் எழுதும் விதம் எனக்கு எப்பவுமே பிடித்தது... இந்த நிகழ்வுகளை மிகவும் உணர்வுபூர்வமாக எழுதியுள்ளீர்கள். வெகு விரைவில் எனது பதிவொன்றினை ஆங்கிலத்தில் எழுத உள்ளேன் (பாகம் 4)
Post a Comment