அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சி பரவியது.
"எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?"
கலங்கிய கண்களோடு யாழ் பொது நூலகர் திருமதி நடராஜா அப்போது கேட்கின்றார்.
முதல் நாள் இரவு யூன் 1, 1981
"பொலிஸ்மா அதிபரும், பிரிகேடியர் வீரதுங்காவும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தக்கதாக, யூன் 1 ஆம் திகதி 1981 இரவு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் வியப்பானவையாகும். அதே பொலிசார் அன்று இரவு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்குத் தீயிட்டனர். ஏறத்தாள 97000 பெறுமதி மிக்க நூல்கள் எரிந்து கருகிப் போயின. உலகில் எங்கிருந்தும் இனிமேல் பெறுவதற்ககரிய நூல்கள் பல எரிந்து போயின.
உசாத்துணைப் பிரிவின் சிறப்பு நூற் தொகுதிகளில் அழிந்தவைகளில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:
1) கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி
2) திரு.சி.வன்னியசிங்கம் நூற்தொகுதி (சுமார் 100 நூல்கள்)
3) திரு ஐசாக் தம்பையா நூற்தொகுதி (சமயம், தத்துவம் பற்றிய நூல்கள் சுமார் 850)
4) திரு.கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி (சுமார் 600 நூல்கள்)
5) ஏட்டுச் சுவடித் தொகுதி
6) அமெரிக்க நூலகத்திலிருந்து அன்பளிப்பு செய்யப்பட்ட உசாத்துணை நூற் தொகுதி
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எதிரே 700 யார் தூரத்தில் யாழ் பொதுசன நூலகம் அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகத் தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த விஷேஷ பொலிசார் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டு அரங்கும் யாழ் நூலகத்திற்கு எதிரே தான் இருந்தது. இவ்வளவு "பாதுகாப்பு" இருந்தும் திங்கள் இரவு பொது சன நூலகம் தீப்பிடித்து எரிந்தது.
அன்று இரவு 10 மணி போல, நூலகத்துக்குள் நுளைந்த கொடியவர்கள், காவலாளியைத் துரத்திவிட்டு நூலகக் கதவைக் கொத்தித் திறந்து, உள்ளே நுளைந்து 97 ஆயிரம் கிடைத்தற்கரிய மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் உட்பட எல்லாமே பெற்றோல் ஊற்றித் தீக்கிரையாக்கப்பட்டன. சுவர்கள் வெப்பத்தினால் வெடித்து உதிர்ந்தன. யன்னல்கள் சிதறிப்போயின. நூலகத்துக்குள்ளே சாம்பல் குவியல்களே எஞ்சிக்கிடந்தன.
சுவாமி ஞானப்பிரகாச சுவாமிகளின் மாணவர், பன்மொழிப் புலவர் சங்.பிதா கலாநிதி டேவிட் அவர்கள் (தாவீது அடிகளார்) அந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியாதவராய் மனவதிர்ச்சியினால் தம்முயிரை நீத்தார்.
யாழ்ப்பாண நூலகத்தில் ஊழியராக வேலை செய்துவரும் திரு பற்குணம் என்பவர் நூல் நிலையம் எரிந்த நிலையைக் கண்டு பிரமை பிடித்தவரானார். அவர் ஒரு நாடகக் கலைஞர் ஆவார். மூன்று நான்கு நாட்கள் சித்தம் குழம்பிய நிலையில் காணப்பட்டார்.
நூல் நிலையம் தீப்பற்றி எரிவதாக அன்றிரவு 10.15 மணியளவில் மாநகரசபை ஆணையாளர் சி.வி.கே.சிவஞானத்திற்கு செய்தி கிடைக்க, உடனேயே மாநகரசபை தீயணைப்பு பவுசர்களையும், மாநகரசபை ஊழியர்களையும் அனுப்பி தீயை பரவாது தடுக்க முனைகின்றார். அவர்களை நூலகத்திற்கு அருகிருந்த துரையப்பா விளையாட்டரங்கில் இருந்த பொலிசார் தடுக்கின்றார்கள். விசேஷ பொலிஸ் விசாரணைக் குழுவிற்கு சாட்சியமளித்த சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு சாட்சியமளிக்கின்றார்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஜனவரி 19, 2007 சிட்னி, அவுஸ்திரேலியா
ஈழத்தின் பிரபல கட்டிடக்கலை நிபுணர் திரு. வி.எஸ்.துரைராஜாவினால் "The Jaffna Public Library Rises From Its Ashes" என்ற நூல் சிட்னியில் உள்ள Strathfield நகர மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. உயர் தர வழவழப்பான தாள் கொண்டு 96 பக்கங்களை நிறைத்த ஒரு ஆவணமாக இந்நூல் படங்களோடும், யாழ் பொது நூலகத்து வரலாற்றோடும் ஆங்கில மொழியில் அமைந்து மித்ர வெளியீடாக மலர்ந்துள்ளது.
வி.எஸ்.துரைராஜா அவர்கள் வழங்கிய ஒலிப்பேட்டி
1981 ஆம் ஆண்டு அழித்தொழிக்கப்பட்ட பொது நூலகத்தை திருத்தாது யாழ் மாநகரசபை அதை ஒரு கொடிய செயலின் சின்னமாக வைத்திருந்தது. அதன் பின் பக்கத்தில் ஒரு புதுக்கட்டிடத்தை முன்னிருந்த கட்டிடத்தைப் போல் கட்டுவதற்கு தீர்மானித்தது. அக்கட்டிடத்தின் கட்டிடக் கலைஞராக நியமிக்கப்பட்டவர் திரு.வி.எஸ்.துரைராஜா.
1984 ஆம் ஆண்டு யூன் மாதம் அக்கட்டிட வேலைகள் முடிந்தன. ஓரளவு நூற்தொகுதிகளுடன் நூலகம் மீள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தத்தில் புதிய கட்டிடமும், ஏற்கனவே எரிக்கப்பட்ட கட்டிடமும் பாரிய சேதத்துக்குள்ளாயின.
பதின்னான்கு ஆண்டுகளின் பின் 1999 ஆம் ஆண்டு கட்டிடத்தைப் புனரமைக்கத் தீர்மானிக்கப்பட்டு மீண்டும் வி.எஸ்.துரைராஜா அவர்களை நியமித்து முன்பிருந்த கட்டிடம் போல அமைக்க நினைத்தார்கள். இடிந்த பாகங்களைத் தேடி அவைகளைப் படமெடுத்து, வரைந்து கட்டிடத் தோற்றத்தை அமைத்தார் இவர். அன்றிருந்த கட்டிடம் போலவே மீள அமைக்கப்பட்டது.
வி.எஸ்.துரைராஜா அவர்கள் Chartered Architects, Sri Lanka Chaiman ஆகவும் Thurairajah Assocoates இன் Managing Director ஆகவும் இருந்தவர். Diploma in Architecture (London) தகமையைக் கொண்ட இவர், Royal Institute of British Architects, Royal Australian Institute of Architects ஆகியவற்றின் அங்கத்தினருமாவார்.
Architecture and arts in Ceylon என்ற காலாண்டிதழை 1975 இலிருந்து 1983 வரை பதிப்பித்தவர். ஈழநாடு பத்திரிகையின் 1973 தொடங்கி 1975 வரையிலான காலப்பகுதியின் Chairman ஆகவும் இருந்தவர். தவிர ஏராளமான சஞ்சிகைகளில் இவரது கட்டிடக்கலை சம்பந்தமான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், மற்றும் முக்கிய கேந்திர அமைவிடங்கள் இவரது கைவண்ணமாக அமைந்திருக்கின்றன. தவிர இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், அவுஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களிலும் பல எழில் மிகு, கட்டிடக்கலை நுணுக்க வேலைப்பாடுகளோடு அமைந்த கட்டிடங்களை அமைப்பதிலும் இவரது பங்கு இருந்திருக்கின்றது. ஈழத்து திரைப்படமான குத்துவிளக்கு இவரது தயாரிப்பிலேயே வெளிவந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
பெரியதொரு கனமான நூலாக வந்திருக்கும் "The Jaffna Public Library Rises From Its Ashes" ஐ ஆவலோடு வாங்கி இதழ்களைப் பிரிக்கும் போது, இந்நூல் கொண்டிருக்கும் வரலாற்று ஆவணங்களும், அரிய பல புகைப்படங்களும் இயல்பாகவே வியப்பால் விழிகளை விரியச் செய்கின்றன.
இந்த நூலில் இடம்பெறும் புகைப்பட ஆவணங்களைப் பார்த்தோமேயானால் புதிதாக அமையப்பெற்ற நூல் நிலையத்தின் தோற்றம் முதற் புகைப்படமாகவும் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் குறுக்கும் நெடுக்குமான வரைபடங்களும் இருக்கின்றன. பின்னர் யாழ் நூலகத்தின் இரு வேறு தோற்றங்கள் தூரக் காட்சியில் எடுக்கப்பட்டிருக்கின்றன.
1936 ஆம் ஆண்டில் அமையப்பெற்று பின்னர் 1985 இல் முற்றாக அழியப்பெர்ற யாழ் உள்ளூராட்சி சபை, மாநகர சபை (1949 இல்) இன் மூலத் தோற்றம், அழிவதற்கு முன்னிருந்த சுப்பிரமணியம் பூங்காவின் மூலத் தோற்றம், 1956 ஆம் ஆண்டில் கட்டிடக்கலைஞரால் வரையப்பெற்ற யாழ் நூலக வரைபடங்கள் நான்கும் காணக் கிடைக்கின்றன.
துரையப்பா விளையாட்டரங்கம், அழிந்த சுப்பிரமணியம் பூங்கா, 1982 ஆம் ஆண்டில் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நிகழ்த்திய "Jaffna Public Library Week" இன் பல்வேறு புகைப்படங்கள், மற்றும் மீள நிறுவப்பட்ட யாழ் நூலகத்தின் முழுமையான கட்டிட வரைபடத்தொகுதிகள், மற்றும் மீள நிறுவப்பட்ட நூலகத்தின் பல்வேறு கட்டிட அமைப்புக்கள், காட்சிகள் எனப் புகைப்படங்கள் விரிகின்றன.
1981 இல் அழிந்து இடிபாடுகளோடு இருக்கும் யாழ் நூலகம் பல்வேறு அழிவுத் தோற்றப்படங்களுடனும் பல்வேறு புகைப்படத் தொகுதிகளாக அழிவின் சுவடுகளாகப் புத்தகத்தில் நிறைந்திருக்கின்றன.
இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளை எடுத்துக் கொண்டால் முன்னாள் யாழ் மேயரின் முகவுரையோடு ஆரம்பித்து, முன்னாள் யாழ் மாநகர சபை ஆணையாளர் சி.வி.கே சிவஞானத்தின் செய்திக் குறிப்பும், நூலாசிரியரின் முன்னுரை, யாழ் பொது நூலகத்தின் ஆதி வரலாறு தாங்கிய கட்டுரைகள், 1956 ஆம் ஆண்டில் அமையப்பெற்ற நூலகத்தின் இருந்த சகல கட்டிட அமைப்புக்கள் குறித்த முழுமையான கட்டுரை என விரிகின்றன.
தாவீது அடிகளாரின் திடீர் மரணம் உள்ளிட்ட பொது நூலகம் அழியப் பெற்ற கோர வடுக்கள் ஆங்கிலத்தில் வடித்தெடுக்கப்பட்டிருக்கின்றன. Who Burnt the precious Books? என்ற தலைப்பில் வரும் ஆக்கத்தில் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்த நூலக எரிப்பின் சூத்திரதாரிகள் குறித்த சாட்சியங்களாக அமைகின்றன. சிறீலங்கா அமைச்சர்கள் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இருந்த வேளை அவர்களின் தூண்டுதலின் பேரில் காடையர்கள் நிகழ்த்திய தென்னாசியாவின் சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலக அழிவை ஆதரங்களோடு அவை மெய்ப்பிக்கின்றன.
அழிந்தொழிந்த நூலகத்தினை நிர்மாணிக்க எப்படியான முயற்சிகள் ஈழத்தமிழின உணர்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டன, பின்னர் எப்படியான வகையில் இந்த நூலகம் மீள எழுந்தது தொடர்பிலும் சில கட்டுரைகள் அமைந்து காணப்படுகின்றன.
எனவே இந்த "The Jaffna Public Library Rises From Its Ashes" என்ற இந்த வரலாற்று நூல் ஓவ்வோர் ஈழத்தமிழன் வீட்டிலும் இருக்கவேண்டிய, மற்றைய சமூகத்தினருக்கும் எம் இனத்திற்கு ஏற்பட்ட இன்னலின் சாட்சியமாகக் காட்ட வேண்டிய ஒரு ஆவணமாகும். சரி இனி இந்த நூல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற நிகழ்வுகளைப் பார்ப்போம்.
மாலை ஆறு மணிக்கு, அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் Strathfield நகர மண்டபத்தில் கிட்டத்தட்ட 300 பேர் கலந்து கொள்ள ஆரம்பமானது. மங்கல விளக்கேர்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தவர், அன்று யாழ் பொது நூலகம் எரிந்த போது யாழ் நகர மேயராக இருந்த திரு.ராஜா விஸ்வநாதன் அவர்கள்.
இந்த நிகழ்வு இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு நூல் ஆய்வு ஆங்கில அமர்வு, தமிழ் அமர்வு என்ற வகையில் நிகழ்ந்தன. வைத்திய கலாநிதி மனோமோகன் நூல் வெளியீட்டின் அவைத்தலைவராக அமர்ந்து கொண்டார். திரு. வி.எஸ்.துரைராஜா அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, நூலகம் தொடர்பான வரலாற்றுப் புகைப்படங்கள் பெரும் திரையில் காண்பிக்கப்பட்டன.
ஆங்கில அமர்வில் முதலில் நூலாய்வை நிகழ்த்தியவர் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் அவர்கள். இந்த நூலை விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாய் யாழ் பொது நூலகத்தில் அரிய ஆவணங்களைத் திரட்டிப் பேணிப் பாதுகாக்கும் நுண் படங்கள் (Micro films) தொழில்நுட்ப வசதிக்காகக் கையளிக்கப்பட இருக்கின்றது. ஆனால் அழிந்த நூலகத்தோடு போன அரிய நூல்களை இன்றும் ஒரு பிரதியாயினும் பெறமுடியாத நிலை இருக்கின்றது. ஏராளமான மூல ஏட்டுச் சுவடிகள் அழிந்தது அழிந்தது தான். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் முதல் மாணவர் ஒருவரின் அனைத்து நூல்களும் இந்த நூலகத்துக்கு முன்னர் அன்பளிப்பு செய்யப்பட்டன. அவையும் சாம்பலாகிப் போயின என்று ஆதங்கத்தோடு பொன்.பூலோகசிங்கம் பழைய நினைவுகளைத் தன் பேச்சில் மீளக் கொண்டு வந்தார்.
தொடர்ந்து பேசவந்த அ.பரராஜசிங்கம் அவர்கள் யாழ் பொது நூலகத்தின் தோற்றம், வளர்ச்சி, அழிவு என்பவறைக் கொண்டு தனது பேச்சில் பயணித்து, இந்த நூல் நயத்திலும் பின்னர் இணைத்துக்கொண்டார். நம்பிக்கை தான் வாழ்க்கை என்று தன் பேச்சை நிறைவு செய்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மேதகு Virginia Judge அவர்கள் நூல் வெளியீட்டுப் பேச்சை வழங்கிய பின்னர் முதற்பிரதிகளை சிட்னி வாழ் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கினார்.
Virginia Judge ஏற்கனவே வன்னி சென்று எம்மக்களின் வாழ்வியலை அறிந்து கொண்டவர். இன்று வரை தொடர்ந்து தனது ஈழத்தமிழர் மீதான கரிசனையைக் காட்டி வருபவர். தனது பேச்சில் ஈழத்தமிழரின் போராட்டத்தை ஐரிஸ் போராட்டத்தோடு தொடர்புபடுத்தியதோடு, Schindler's Ark என்ற நாவலை (பின்னர் Schindler's List என்று படமாக வந்தது) எழுதிய Thomas Keneally என்ற அவுஸ்திரேலிய எழுத்தாளரின் The Great Shame என்ற நாவலை எடுத்து வந்து அதில் உள்ள அம்சங்களைத் தொட்டு, எமது மக்களின் சுதந்திர வேட்கை தொடர்பான தன் கரிசனையைத் தன் பேச்சில் கொண்டு வந்தார்.
இடைவேளையின் பின்னர் இந்நூல் ஆய்வின் தமிழ் அரங்காக அமைந்தது.
"யாழ் நூலகம் எம்மினத்திற்கோர் வெள்ளை மாளிகை, ஆனால் இது அழிவுக்குத் துணை போன வெள்ளை மாளிகை அல்ல, அறிவு சால் ஆக்கத்துக்குத் துணை போன வெள்ளை மாளிகை" என்று ஆரம்பித்து, தான் இளைஞராக இருந்த காலத்தில் நிகழ்ந்த அனர்த்ததை தன் பேச்சில் கொண்டு வந்தார் தமிழறிஞர் திரு.திருநந்தகுமார் அவர்கள். 1981 ஆம் ஆண்டில் நிகழ்ந்த நூலக அனர்த்ததை 2001 ஆம் ஆண்டில் தான் அரச சார்பு ஆங்கில நாளேடு Daily News தன் ஆசிரியர் தலையங்கத்தில் கண்டித்த வேடிக்கையும், இந்நூலில் காணப்படும், பிரேமதாச ஒக்டோபர் 1991 ஆம் ஆண்டு புத்தளம் முஸ்லீம் கல்லூரியில் நிகழ்த்திய சொற்பொழிவில் காமினி திசாநாயக்கா கூட்டணியினர் தான் இந்த நூலக எரிப்புக்கான காரணகர்த்தாக்கள் என்று சொன்ன குற்றச்சாட்டையும் திருநந்தகுமார் அவர்கள் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் திருமதி கலையரசி சின்னையா அவர்கள், தாம் பேராதனையில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராக வந்த காலகட்டத்தில் , ஈழத்து இலக்கிய முயற்சிகளை இன்னும் பெருக்க வேண்டிய அவசியத்தை பல்கலைக்கழகமட்டதினூடாக பேராசிரியர்கள் செயற்படுத்த முனைந்த வேளை யாழ் பொது நூலகம் தந்த பாரிய உசாத்துணையைக் காட்டி "நூலகமும் சமூகத் தொடர்பும்" என்ற பேச்சில் கொண்டு வந்தார்.
பல்கலைக்கழகமாக ஆகுவதற்கு முன் இருந்த பரமேஸ்வராக் கல்லூரி, மற்றும் ஹாட்லி கல்லூரியின் பாரிய, அரிய நூற் தொகுதிகள் அழிவதற்கு முன்னிருந்த நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதாகவும் அவை யாவும் அழித்தெரிக்கப்பட்டன என்று கவலையோடு தெரிவித்தார். நீங்கள் எல்லோருமே உங்களிடம் ஒரு பிரதியோ கூட இருக்கும் அரிய நூல்களை இந்த புதிய நூலகத்தின் Micro film வடிவச் சேமிப்புக்கு கொடுத்துதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நூலாய்வின் தமிழ் அமர்வில் நிறைவாக திரு எம்.தனபாலசிங்கம் அவர்களின் "ஒரு மக்களின் பாரம்பரியத்தின் கருமூலமே நூலகங்கள்" என்ற அரியதொரு ஆய்வுப் பேச்சை வழங்கிச் சிறப்பித்தார். ' எங்கு புத்தகங்களை தீக்கிரையாக்குகிறார்களோ அங்கு முடிவில் மனிதர்களையும் தீயில் பொசுக்குவர் "
"ஒரு மக்களின் பாரம்பரியங்களின் கருவூலமே நூல்நிலையங்களாகும்,
" Where they have burned books, they will end in burning human beings " –Heinrich Heine (1797-1856)
என புகழ் பெற்ற ஜெர்மன் வீறுணர்ச்சிக் கவிஞரான ஹெயின்றிச் ஹெயின் என்பார் அவரது படைப்பான அல்மன்சொர் (Almansor -1821) என்னும் நாடகத்தில் குறிப்பிட்டமை சிரஞ்சீவித்தன்மை பெற்ற வாக்காக இன்றும் கூறப்படுகின்றது.1500 ஆம் ஆண்டளவில் ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய கலாசாரம் அதன் கொடுமுடியை தொட்டுநின்றபோது அங்கு படையெடுத்த கிறீஸ்தவர்கள் அம் மக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தனர். அதன்போது அவர்களின் கருவூலமான குர்ரானை தீயில் பொசுக்கியதை இந்த நாடகத்தில் வரும் ஒரு இஸ்லாமியர் குறிப்பிட்டபோது இன்னொரு இஸ்லாமியர் கூறிய வார்த்தைகளே இவை. " the burning is but a prologue: where books are burned, people in the end are burned too " என அப் பாத்திரத்தின் வாயிலாகப் பார்வையாளர்களுக்கு தன் காலத்தில் ஜேர்மனியில் நடந்த கொடுமைகளை ஹெயின் நினைவூட்டினார் என்பர் என்று தன் பொருள் பொதிந்த பேச்சினை ஆரம்பித்துத் தொடர்ந்து பல வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்தாண்டு, இறுதியில் எம் மக்களின் சுதந்திர வேட்கையையும் தொடர்புபடுத்தி நிறைவான ஒரு விழாவை நிறைவாக்கினார் மா.தனபாலசிங்கம் அவர்கள்.
நன்றியுரையை நூலாசிரியரின் பேரன் ரிஷ்யன் வழங்க, இந்நூல் வெளியிடு இனிதே நிறைவேறியது.
என்னுடைய தனிப்பட்ட கருத்தையும் பதிவு செய்து இப்பதிவை முடிக்க நினைக்கின்றேன்.
என்னைப் பொறுத்தவரை அழித்தொழிக்கப்பட்ட யாழ் பொது நூலகம் அநியாயத்தின் கோரமுகமாக அப்படியே இருக்க, இன்னொரு நூலகம் அதே வடிவமைப்பில் கட்டியிருக்கலாம் என்பது என் கருத்து.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
யாழ் பொது நூலகம் சில வரலாற்றுத் துளிகள்
1934 ஆம் ஆண்டு யூன் மாதம் 9 ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டமே ஆரம்ப கால நூலகத்தை உருவாக்க வழிகோலியது. இக்கூட்டக் காரியதரிசி க.மு.செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 1184 ரூபா 22 சதம் மூலதனமாகக் கொண்டு ஆஸ்பத்திரி வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36பருவ வெளியீடுகளுடனும் 1934 ஆவணி 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
1935 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி யாழ் பட்டின சபையால் பொறுப்பேற்கப்பட்டு வாடி வீட்டுக்குத் தெற்கே உள்ள மேல் மாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
1952 ஆம் ஆண்டு நவீன பொது நூலகம் அமைப்பதற்கான முயற்சிகளள சாம் ஏ.சபாபதி தலைமையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. புதிய நூலகத்தை அமைப்பதில் அதி.வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்.சென்னை கட்டிடக்கலை நிபுணர் கே.எஸ்.நரசிம்மன் வரைபடங்களைத் தயாரித்தார். நூலகத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ்.ஆர்.ரங்கநாதனின் ஆதரவும் கிடைத்தது.
1953 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது.
1959 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் நாள் நூலகம் திறக்கப்பட்டது.
1981 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் நாள் இன வெறிக் காடையர்களால் நூலகம் அழித்தொழிப்பு.
2001 ஆம் ஆண்டு மீள எழுந்தது யாழ் பொது நூலகம்.
உசாத்துணை:1. "யாழ்ப்பாண நூல் நிலையம் - ஓர் ஆவணம்", மூதறிஞர் க.சி.குலரத்தினம்,
மித்ர வெளியீடு, 1997
2. "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது", நீலவண்ணன், முதற்பதிப்பு ஜீலை 1981,
மூன்றாம் பதிப்பு கமலம் பதிப்பகம் மார்ச் 2003.
புகைப்படங்கள்:
1. என் புகைப்படத் தொகுப்பு
2. "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது", நீலவண்ணன், முதற்பதிப்பு ஜீலை 1981,
மூன்றாம் பதிப்பு கமலம் பதிப்பகம் மார்ச் 2003.
3. http://www.lines-magazine.org
26 comments:
பகிர்வுக்கு நன்றி பிரபா.
யாழ்ப்பாணத்துப் பழைய நூலகம் பற்றி முன்னமே கேள்விப்பட்டிருப்பினும் இவ்வளவு விவரங்களை இன்றுதான் அறிந்தேன்.எரித்தவர்கள் காவலர்களல்ல.காடையர்கள்.எவராலும் மன்னிக்கவோ,மறக்கவோ கூடாத நிகழ்வு நண்பரே.
விவரங்களுக்கு நன்றிகள் கானாபிரபா.
பகிர்ந்தமைக்கு நன்றி பிரபா.
வணக்கம் பிரபா .... யாழ் நூல் நிலைய பற்றிய நல்ல முழுமையான பதிவு மிக்க நன்றிகள்
வி.எஸ் துரைராஜா குத்து விளக்கு திரைபடம் தயாரித்தவர் என்று நினைக்கிறன்?
ஈழத்தின் இணைய நூலகம்
தொடுப்பு சரியாக வேலை செய்யவில்லை.
www.noolaham.net என்று இருக்க வேண்டும்.
(பொருத்தம் கருதி இப்பதிவில் இத்தொடுப்பினைத்தந்தேன்.)
// ILA(a)இளா said...
பகிர்வுக்கு நன்றி பிரபா.//
வருகைக்கு நன்றிகள் இளா
// எம்.ரிஷான் ஷெரீப் said...
யாழ்ப்பாணத்துப் பழைய நூலகம் பற்றி முன்னமே கேள்விப்பட்டிருப்பினும் இவ்வளவு விவரங்களை இன்றுதான் அறிந்தேன்//
வணக்கம் ரிஷான்
என் பதிவு மூலம் உங்களைப் போன்ற நண்பர்களுக்கு இவ்விபரங்கள் அறிவது குறித்து எனக்கும் திருப்தி ஏற்படுகின்றது. நன்றி.
ஃபீனிக்ஸ் பறவை போலவோ மீண்டெழுந்த இந்நூலகம்!
தகவல்கள் பல தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி கா.பி.அண்ணாச்சி
//நீங்கள் எல்லோருமே உங்களிடம் ஒரு பிரதியோ கூட இருக்கும் அரிய நூல்களை இந்த புதிய நூலகத்தின் Micro film வடிவச் சேமிப்புக்கு கொடுத்துதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்//
மிகவும் தீர்க்கதரிசனமான வேண்டுகோள்!
இரத்த தானம், கண் தானம் போல் நூல் தானமும் மிகவும் உயர்ந்த ஒன்று!
நான் பிறக்க முதலே பிறந்து அழிந்தது யாழ் நூழகம் ........எனினும் இன்று பாருங்கள் அதன் வலியை எங்களாலும் உணர்ந்து கொள்ள முடிகிறது. காரணம் மிக சுலபமானது. ஒரு இனத்தினுடைய சான்றுகளின் அல்லது களஞ்சியங்களின் அழிவு என்பது, அவ்வினத்தின் வழித்தோன்றல்களாலும் மறக்க முடியாத ஒன்றாய் மாறும். நான்கு பேரை கொன்றிருந்தால் சிலநேரம் நான்காவது நாளே மறந்திருப்பான் மனிதன். ஆனால் இப்படியான சம்பவங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் எப்போதும் ஒலிக்கும். அன்று சிறீலங்கா அமைச்சர்கள் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ தலைமையில் இட்ட தீ.. இன்றும் எரிகிறது இல்லையா?
கானா நீங்கள் கூறிய "யாழ்ப்பாண நூல் நிலையம் - ஓர் ஆவணம்" என்ற நூலை நான் எனது தமிழ் ஆசிரியர் திருமதி.கோசலை தர படித்த ஞாபகம். மீண்டும் இரைமீட்க வைத்தமைக்கு மிக்க நன்றி. அத்தோடு மேலும் பல புதிய தகவல்களும் அறிந்து கொண்டேன்.
:(
//DJ said...
பகிர்ந்தமைக்கு நன்றி பிரபா.//
வருகைக்கு நன்றி டிஜே
//சின்னக்குட்டி said...
வி.எஸ் துரைராஜா குத்து விளக்கு திரைபடம் தயாரித்தவர் என்று நினைக்கிறன்?//
சின்னக்குட்டியர்
இவர் தான் குத்துவிளக்கு திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்று பதிவிலேயே குறிப்பிட்டிருக்கின்றேனே. இப்படம் குறித்த பதிவைப் பின்னர் தருகின்றேன்.
பிணம் தின்னும் சாத்திரங்கள்..
பகிர்தலுக்கு நன்றி!
பிரபா, பல விடயங்களைப் பதிந்தமைக்கு நன்றிகள். மேலும் சில விபரங்கள் என்னுடைய இந்தப் பதிவில் உள்ளன. உங்கள் இந்தப் பதிவை முழுமையானதாக்க அதன் தொடுப்பைக் கீழே தந்திருக்கிறேன்:
யாழ்ப்பாண நூல்நிலையம் - ஒரு சாட்சியம்
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஃபீனிக்ஸ் பறவை போலவோ மீண்டெழுந்த இந்நூலகம்!
தகவல்கள் பல தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி கா.பி.அண்ணாச்சி//
வாங்க கண்ணபிரானே
பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழுந்தாலும் முறையாக நூற்தொகுதி என்னும் இரத்தம் பாய்ச்சப்படவில்லை.
//U.P.Tharsan said...
நான் பிறக்க முதலே பிறந்து அழிந்தது யாழ் நூழகம் ........எனினும் இன்று பாருங்கள் அதன் வலியை எங்களாலும் உணர்ந்து கொள்ள முடிகிறது. //
வணக்கம் தர்சன்
உங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட விடயங்களோடு நானும் ஒத்துப் போகின்றேன். விரிவான மடலுக்கு நன்றி. என் வாழ்க்கையிலும் 2006 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் இந்த நூலகத்தில் காலடி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
// துர்கா said...
:(//
வருகைக்கு நன்றி சிஸ்டர்
// மு.மயூரன் said...
தொடுப்பு சரியாக வேலை செய்யவில்லை.
www.noolaham.net என்று இருக்க வேண்டும்.//
தொடுப்புக்கு நன்றி மயூரன்
// தங்ஸ் said...
பிணம் தின்னும் சாத்திரங்கள்..
பகிர்தலுக்கு நன்றி!//
வணக்கம் நண்பரே
பிணவேட்டை இன்னும் தொடர்கின்றது, ஆண்டுகள் பல கழிந்தும்.
//யாழ்ப்பாண நூலகத்தில் ஊழியராக வேலை செய்துவரும் திரு பற்குணம் என்பவர் நூல் நிலையம் எரிந்த நிலையைக் கண்டு பிரமை பிடித்தவரானார். அவர் ஒரு நாடகக் கலைஞர் ஆவார். மூன்று நான்கு நாட்கள் சித்தம் குழம்பிய நிலையில் காணப்பட்டார்.//
பெறுமதியான தகவல். வாழ்த்துக்கள் அண்ணா.
// Kanags said...
பிரபா, பல விடயங்களைப் பதிந்தமைக்கு நன்றிகள். மேலும் சில விபரங்கள் என்னுடைய இந்தப் பதிவில் உள்ளன. //
வணக்கம் சிறீ அண்ணா
மேலதிக தொகுப்பைக் கொடுத்தமைக்கு நன்றிகள், இவ்விரிவான பதிவைத் தவறவிட்டவர்கள் வாசிக்க ஒரு வாய்ப்பு இதன் மூலம் கிட்டும்.
//தாசன் said...
பெறுமதியான தகவல். வாழ்த்துக்கள் அண்ணா.//
வருகைக்கு நன்றிகள் தாசன்
தலைப்பைப் பார்த்திட்டு சோமி அண்ணா எடுத்த ஆவணப்பபடம் பற்றியென்று நினைத்துவிட்டன்.
பதிவின் தலைப்பை மட்டும் வாசித்து நீண்ட பின்னூட்டம் இட்டதுக்கு நன்றி சினேகிதி ;-)
//Venkattan said
உங்களின் இறுதிக் குறிப்பு மிகச்சரியானது. அதை மீள் கட்டியவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் அடிவருடிகள். எரிந்ததை ஜப்பானில் உள்ள உடைந்த கட்டடிடம் போல் ஞாபகத்திற்கு வைத்திருந்தால் மிகநல்லது. ஆனால் எங்களின் அழிவு எங்களால் தான் ஏற்படுத்தப்படும். அதை திருத்தி பூசி மெழுகிவிட்டார்கள். அடையாளத்ததையும் அழித்துவிட்டார்கள. காலம் எதையும் மாற்றும் போல இதுவும் மறக்கடிக்கப்பட துணைபோனவர்க்ள யாரோ. இதுபற்றி யாராவது எழுதினால் நல்லம். ஆானல் நூலக கல்வெட்டு இன்றும் யுத்தத்தின் தழும்புகளை கொண்டுள்ளது. (இதைச் சொல்ல பயமாக உள்ளது. காரணம் எங்களின் அடிவருடிச் செல்வங்கள் இதை படித்து அதையும் மாற்றிவிடக்கூடும்.) எனவே முடிந்தால் அதையும் படம் எடுத்து ஆவனப்படுத்த வேண்டும். எனக்கு எமது தமிழர் வரலாறு தொடர்பான ஒரு புகைப்பட வலைப்பூ ஒன்றை தொடங்க ஆசை. நேரம் இல்லை. பிரபா உங்ளின் தொகுப்புக்கு மிக்க நன்றி. தமிழருக்கு பயனுள்ளவை. இன்னமும் இந்த அழிவுகள் தொடர்கின்றன. இதற்கு துணைபோகும் தமிழ் மக்கள் எப்போது அழியப்போகிறார்கள்? பிரபா முடிந்தால் நான் எழுதிய மெட்ரோ நியுஸ் சம்பந்தமான கொமன்ட்ஸ் பற்றி பதில் அளிக்கவும். நன்றி//
வணக்கம்
உங்களின் பின்னூட்டத்தில் சில வார்த்தைப்பிரயோகங்களை நீக்கி வெளியிட்டிருக்கின்றேன். இதனால் வீண் சர்ச்சை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே. ஆனால் உங்கள் கருத்து இங்கு முழுமையாகப் பதியப் படுகின்றது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். மெட்ரோ நியூஸ் தொடர்பாக நீங்கள் எங்கே பதிவிட்டீர்கள் என்பதையும் தயவு செய்து குறிப்பிடவும்.
பிரபா
ஒரு அறிவாலயத்தை எரியூட்டியதன் மூலம் தமிழினதின் ஆதாரங்கள்- மூல வேர்கள் அனைத்தையும் துடைத்தழித்திடவே முயன்றனர் பேரினவாதிகள்.
இனி எந்தத் தீயாலும் அழிக்க முடியாத
ஆவணங்களாக சிலவற்றைத் தான் மாற்ற முடிந்துள்ளது.
எரிந்து போன விலைமதிக்க முடியாத நூல்களும் கொலை செய்யப் பட்ட விலைமதிக்க முடியாத உயிர்களைப் போலவே மீள வராதவை அல்லவா?
எவ்வளவு பெரிய இழப்பை நடத்திவிட்டு வசனம் பேசுகிறது இனவெறி பிடித்த சிங்களம். இவர்களுக்கு இப்படி நடந்தால் தெரியும் இந்த வலியும் வேதனையும்.
//பஹீமாஜஹான் said...
பிரபா
ஒரு அறிவாலயத்தை எரியூட்டியதன் மூலம் தமிழினதின் ஆதாரங்கள்- மூல வேர்கள் அனைத்தையும் துடைத்தழித்திடவே முயன்றனர் பேரினவாதிகள்.//
வணக்கம் சகோதரி
தமிழரின் மூலவேர்களான நூலகம், ஆவணங்களை அழிப்பது தான் இந்தப் பேரினவாதிகள் ஆண்டாண்டுகாலமாய் வரலாற்றில் செய்த கறைகள்.
எத்தனையோ நூல்கள் ஒரு பிரதியாகவும், ஏட்டுச் சுவடியாகவும் இருந்தவை சாம்பலாகிப் போயின.
//பனிமலர் said...
எவ்வளவு பெரிய இழப்பை நடத்திவிட்டு வசனம் பேசுகிறது இனவெறி பிடித்த சிங்களம். இவர்களுக்கு இப்படி நடந்தால் தெரியும் இந்த வலியும் வேதனையும்.//
உண்மை, இந்த வரலாற்றை அழித்து எழுதும் வரலாறு கனியும்.
மிக மிக விரிவான பதிவு. மிக்க நன்றி கானா பிரபா..
நூலகம் தொடாபான சோமிதரனின் ஆவணப்படம் ஒன்றும் வெளியாகியிருப்பதாக செய்திகளில் அறிந்தேன்.
உங்களின் இப்படியான பதிவுகளை தொகுத்து ஒரு நூலாக வெளியிடலாமே. ஒரு ஈழ ஆவணமாகவும் இருக்கும்.
its terrible. write more about these kind of issues. so tha people around the wold can more about the singaleese terrorism.
Post a Comment