தேனிசை செல்லப்பா அவர்கள் மறைந்த தினம் ஏப்ரல் 28 ஆம் திகதி.
இதே ஏப்ரல் மாதத்தில் தான் அவர் தமிழீழத்துக்கு வருகை தந்திருந்தார் 1990 இல்.
ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நிகழ்ந்த அந்த சனக் கடலில் நானும் ஒருவனாகப் போயிருந்தேன்.
சுதுமலைக் கூட்டத்துக்குப் பின்னர் பார்த்த ஒரு அலைகடல் அது.
தேனிசை செல்லப்பாவோடு பாடகி ஸ்வர்ணலதாவும் வந்திருந்தார்.
அவர் பழைய பாடகி. தற்போது கனடாவில் வசிக்கிறார்.
தேனிசை செல்லப்பாவின் அந்த இசை நிகழ்ச்சியை, யாழ்ப்பாணம் முற்றவெளியில் தமிழாராய்ச்சி மாநாட்டுக்குப் பின்னர் கண்ட பெரும் மக்கள் கூட்டம் என்று அப்போது பத்திரிகைகள் வர்ணித்திருந்தன.
தமிழீழத்தின் போர்க்கால இலக்கியங்களில் பாடல்களுக்கு மிகுந்த பங்குண்டு.
அவற்றைப் பின்வரும் வகையில் பார்க்கலாம்.
ஏற்கனவே திரையில் வந்த எம்.ஜி.ஆர் போன்றோரின் பாடல்கள் குறிப்பாக தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை.
பின்னர் களத்தில் கேட்கும் கானங்கள் போன்ற சுயாதீன முயற்சிகள் மூலம் தென்னிந்தியப் பாடகர்களை வைத்து, தேவேந்திரன் போன்றோரால் இசையமைக்கப்பட்ட பாடல்கள்.
மூன்றாவது தமிழின உணர்வாளர்களை எழுச்சிப் பாடல்களுக்குப் பயன்படுத்தியது.
நான்காவது தமிழீழப் போராட்டக் களத்தில் இருந்த போராளிக் கவிஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்களை உள்வாங்கிக் கொண்டது.
இவற்றில் மூன்றாவது வகையில் இருக்கக் கூடியவர் தேனிசை செல்லப்பா. அவர் தமிழின உணர்வாளர். அதுவும் அந்தக் காலத்து ஈழத்து வாழ்வில் அவர் பாடிய பாடல்களைத் தாண்டி அடையாளம் அறியப்படாதவர்.
இந்த நிலையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இசை நிகழ்ச்சி நடந்தது என்றால் அந்த நேரம் இயங்கிய தலைமையும், கலை பண்பாட்டுக் குழுவும் என்றால் ஐயமில்லை.
12 வருடகாலத்துக்குப் பின்னர் தான் இன்றைய சிறுவர்களுக்கு முற்றவெளி அறிமுகமாகியிருக்கிறது என்று புதுவை இரத்தினதுரை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அதாவது அறுபதுகளில் எழுச்சிப் பாடல்களைப் பாடியவை இன்று கண்முன் நிதர்சனமாகி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்பது தான் அப்போது மக்கள் மத்தியில் அவரை எடுத்துச் சென்ற பாட்டு.
தமிழனுக்காகப் பாடுபவனைத் தமிழக அரசு கெளரவிக்கவில்லை, தமிழீழ அரசு கெளரவித்து விட்டது என்று நெகிழ்ச்சியோடு அவர் பேசினார்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி என்ற ஊரில் பிறந்த அவருக்கு தேனிசை என்ற பட்டத்தை வழங்கியவர் சி.பா.ஆதித்தனார்.
கலைமாமணி என்ற பட்டம் வழங்கப்பட்டு புலிப்பதக்கம் அவருக்கு அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.
மாலை 5.30 தொடங்கி இரவு 10.30 வரை நடந்த அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் கண்ணீர் மல்க தேனிசை செல்லப்பா மக்களிடமிருந்து விடைபெற்றார்.
தேனிசை செல்லப்பாவின் பாடல்களில் இரண்டு பரிமாணங்கள் விளங்குகிறது.
ஒன்று தாயக எழுச்சிப் பாடல்கள்.
இன்னொன்று தாயகத்தை நேசிக்கும் பாடல்கள்.
அதில் பச்சை வயலே, மீன்மகள் பாடுகிறாள், அழகான அந்தப் பனைமரம். தங்க தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள் போன்றவை தாயகத்தை நேசிக்கும் பாடல்கள்.
வானுயர்ந்த காட்டிடையே, மாங்குயிலும் மரங்கொத்தியும் வரிசையில் தொடரும் பாடல்கள் தாயக எழுச்சிப் பாடல்கள்.
விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணியின் கலை, கலாசாரப்பிரிவின் சார்பில் புங்குடுதீவு, மன்னார், நெடுங்கேணி, முல்லைத்தீவு போன்ற இடங்களிலும் நடைபெற்றது.
பதிவை எழுதியவர்:
கானா பிரபா
உதயன் நாளிதழில் வந்த நிகழ்வுப் படங்கள். நன்றி நூலகம் தளம்



