Monday, July 09, 2007
விளையாட்டுப் போட்டியும் வினோத உடைக்கூத்தும்
"இலகுவா......ய் நில்
க...வ...னம்
செற்
றெடி
கோ"
கையில் மாட்டியிருந்த பலகைச் சட்டம் இரண்டையும் ஒரு சேர அடிக்கின்றார் விளையாட்டுப் பாட மாஸ்டர். ஒவ்வொரு கோட்டு எல்லைக்குள் இருக்கும் வீரர்கள் தொலைவில் தெரியும் கயிற்று முடிவிடத்தையே கண்கள் நோக்க, விர்ரென எழும்பும் அம்பு போலப் பாய்கிறார்கள்.
"நாகலிங்கம்! ஓடு ...... ஓடு"
"செல்லையா! விடாதை முந்து"
"டோய் கார்த்திகேசு! செல்லையாவின்ர கோட்டுக்குள்ளை போகாதை",
ஓடும் வீரர்களைக் கலைத்துக் கொண்டு அதுவரை மைதானத்தின் கரையே நின்ற ஒவ்வொரு போட்டி இல்லத்து மாணவர்களும் ஓடுகின்றார்கள்.
வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள் மட்டும் ஓடினால் மானக்கேடு என்று, கையைப் பிசைந்து கொண்டே "கடவுளே....கடவுளே... எங்கட இல்லம் தான் வெல்லவேணும்" என்று ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் மைதானத்துக்கு அழைக்கிறார்கள்.
உணர்ச்சி வசப்பட்டு ஓட்ட மைதானத்தின் கயிற்று எல்லைகளைக் கடப்பவர்களை கணேசலிங்கம் மாஸ்டரின் சவுக்குப் பிரம்பு பதம்பார்க்கின்றது.
மைதானம் எங்கும் வெற்றி, தோல்வி, முதலாம் இடம், இரண்டாம் இடம், இதுவே பேச்சு. மைதானத்தின் கரையெங்கும் அந்தந்த விளையாட்டு இல்லங்களுக்கான கொட்டகை போடப்பட்டு அந்தந்த இல்ல பாட்ச்களைச் சட்டையில் அணிந்த மாணவர் கூட்டத்தால் நிரம்பி வழியும். ஒரு போட்டியில் வென்றால் என்ன தேற்றால் என்ன திரும்ப வரும் வீரனுக்கு குளுக்கோஸ் கொடுக்கவென ஒரு பகுதி மாணவியர் நிற்பார்கள். போர்க்களம் சென்று திரும்பும் வீரன் போல பெனியன் தொப்பமாக நனைய நனைய வீரரும் குளுக்கோஸ் தேடி வருவார். கூடவே வென்றாலும் தோற்றாலும் துணை வரும் இல்லக் கொடியுடன் ஒருவர்.
"உங்கட பள்ளிக்காலத்தில் மறக்கமுடியாத நாட்கள் எவை? "
என்று யாராவது என்னைப் பேட்டியெடுத்தால் நான் விழுந்தடிச்சுச் சொல்வேன்,
"விளையாட்டுப் போட்டி நடக்கிற நாட்கள் தான்" என்று.
வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வெறும் பீ.ரி ( physical training) வகுப்புக்குத்தான் எட்டிப் பார்க்கும் மைதானம் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் என்றால் தான் முழு நேர ஊழியனாக மாறிவிடுகின்றது.
அதுவரை காலமும் தலைகுனிந்து நாணிக் கோணியிருந்த மைதானம் தலை நிமிர்ந்து நிற்க வழி சமைப்பது இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலம்.
முதல் வாங்கில் இருந்து படிப்பில் முதலாம் இடம் பெறத்துடிக்கும் மாணவர்களைப் புறந்தள்ளிக் கடைசி வாங்கிலிருந்து வந்து விளையாட்டுப் போட்டியில் கலந்து வெற்றிக்கோப்பையைப் பறிக்கும் மாணவனை இனங்காட்டுவதும் இந்த விளையாட்டுப் போட்டிகள் தான்.
ஆறாம் வகுப்பிலிருந்து கொக்குவில் இந்துக் கல்லூரியில் தான் என் படிப்பு தொடர்ந்தது. செல்லையா, நாகலிங்கம், கார்த்திகேசு, சபாரத்தினம், என்று கல்லூரியின் பழைய அதிபர்களின் பெயரே விளையாட்டு இல்லங்களுக்கும் இருந்தது. பாவியர் போகும் பாதை பள்ளமும் திட்டியும் என்பது போல நான் சேர்ந்த நாகலிங்கத்தின் நிலை தேர்தலில் நிற்கும் சுப்பிரமணியசாமி போல கவலைக்கிடமானது. என்னைப் போல ஆட்கள் நாகலிங்கம் இல்லத்தின் அணித் தேர்விலேயே நாலாம் ஐந்தாம் இடம் எடுக்கக்கூடிய வல்லமை மிக்கவர்கள்.
செல்லையா இல்லக்காரங்கள் தான் தொடர்ந்து பெரும்பாலான ஆண்டுகளின் விளையாட்டுப் போட்டிகளில் முதலாம் இடம் வருவார்கள். தாங்கள் ஏதோ அவுஸ்திரேலிய கிறிக்கற் அணி என்ற தோரணையில் போட்டி ஆரம்பமாக முதலேயே வீறாப்புடன் வளைய வருவார்கள். அக்னி நட்சத்திரம் பிரபு - கார்த்திக் போல ஆளை ஆளை முறைச்சுப் பார்த்துக்கொண்டே தம் பயிற்சிகளை எடுப்பார்கள். விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு ஒரு மாதம் முன்பே மதிய நேர வகுப்புக்கள் காலி. விளையாட்டு மைதானத்தில் வந்தும் ஒரமாக இருக்கும் மர நிழலில் இருந்து விளையாட்டு நேரத்திலும் புத்தகமும் கையுமாக இருந்து படிக்கிறவையும் இருக்கினம்.
கொக்குவில் இந்து கலவன் பாடசாலை என்பதால் விளையாட்டுப் போட்டி நடக்கும் நாட்களில் பொம்பிளைப்பிள்ளையள் விளையாடுற கூத்தைப் பார்க்க யாழ் இந்து, சென் ஜோன்ஸ், சென்றல் பள்ளிக்கூடப் பெடியளும் வந்து மதிலில் இருந்து வேடிக்கை பார்ப்பினம். வழக்கமாக கண்டிப்புடன் இருக்கும் மகேந்திரன் மாஸ்டரும் இவர்களைக் கண்டும் காணாமல் கருணை காட்டுவார். இவ்வளவு நாளும் லேடீஸ் கொலிச், வேம்படிப் பிள்ளையளை சைற் அடிச்சுப் போட்டு இப்ப எங்கட பள்ளிக்கூடப்பிள்ளையளையும் பார்க்க வந்திட்டாங்கள் என்று உயர்தர வகுப்பு அண்ணாமார் பெருமுவார்கள்.
என்னைப் போல ஆட்கள் விளையாட்டுப் போட்டி முடிஞ்ச அடுத்த நாள் தான் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளை அறிவிக்கும் பெட்டியில் ஆசை தீர ஏறிப் பார்க்கலாம்.
நாங்கள் உயர்தர வகுப்பில் காலடி எடுக்கவும் அவ்ரோ, புகாரா, சியாமாசெற்றி என்று இலங்கை அரசாங்கம் வானத்தில் வாண வேடிக்கை காட்டவும் சரியாக இருந்தது. இலங்கை விமானப்படையின் விளையாட்டுப் போட்டிக்கு இடம் கொடுத்து கல்லூரி விளையாட்டுப் போட்டிகளும் காலவரையறையின்றி ஒத்திப் போடப்பட்டன.
என் ஆரம்பப் பாடசாலை வாழ்க்கை ஐந்தாம் வகுப்பு வரை இணுவில் அமெரிக்கன் மிசனில் வாய்த்தது. இணுவில் என்றாலே சமயப்பற்றுக்கு கேட்கவே வேண்டியதில்லை. அதனாலோ என்னவோ எங்கட பள்ளிக்கூடத்தின் விளையாட்டு இல்லங்களுக்கு அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்று நாலு திருமூர்த்திகளின் பெயரை வைத்துவிட்டார்கள்.
"அப்பர் ஓடு",
"சம்பந்தர் விடாதை"
என்று சிவனே என்று இருந்த நாயன்மார்களை மைதானத்துக்கு இழுத்து வேடிக்கை நடக்கும் காலம் இந்த விளையாட்டுப் போட்டிகளில் தான் நடக்கும்.
பாடசாலைப் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு விளையாட்டு இல்லம் ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கே தான் எனக்கு ஏழரைச் சனி தொட்டது. அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த என் அம்மாவோ சுந்தரர் இல்லத்துக்கு பொறுப்பாசிரியை. நானோ சம்பந்தர் இல்லம். ஒரு வீட்டுக்குள்ளேயே எதிரியை வைத்துக்கொண்டிருந்தேன். விளையாட்டுப் போட்டி நடக்கும் நாள் என் அம்மாவுடன் போகும் போது வழியில் இருக்கும் ஞான வைரவர் ஆலயத்தில், ஏற்கனவே கடையில் வாங்கி வைத்த கற்பூரத்தைக் கொழுத்தி தேங்காயை உடைத்து விட்டு மனமுருகப் பிரார்த்தனை செய்வார் எங்கட அம்மா.
"எனக்கு தெரியும், தன்ர சுந்தரர் இல்லம் வெல்லவேணும், மற்ற இல்லம் தோக்கவேணும் எண்டு தானே நீங்கள் இப்ப கும்பிட்டனீங்கள் " என்று சிணுங்கியவாறே அம்மாவின் கையைப் பிடித்து வலிக்கும் போல கிள்ளுவேன்.
அம்மா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே " அப்பிடியில்லை, பேசாம வாங்கோ" எண்டு கொற இழுவையில் பள்ளிக்கூடம் கொண்டு போய்ச் சேர்த்துவிடுவார்.
அம்மாவின் பிரார்த்தனை தான் பெரும்பாலான ஆண்டுப் போட்டிகளில் வெல்லும். "எனக்குச் சம்பந்தர் இல்லம் எண்டு சொல்லவே வெக்கமா இருக்கு " என்று மனதுக்குள் புழுங்குவேன்.
இணுவில் அமெரிக்கன் மிசன் ஒரு சிறு பாடசாலை என்பதால் பெரிய மைதானம் கிடையாது. அயலில் உள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையின் விளையாட்டு மைதானம் தான் ஆபத்துக்கு கை கொடுக்கும். எங்கள் பாடசாலை விளையாட்டுப் போட்டியென்றால் எங்களை விட சைவப்பிரகாச வித்தியாசாலைப் பெடியளுக்குத் தான் சந்தோசம். ஏனெண்டால் பள்ளிக்கூடம் வெள்ளென விட்டால் தானே விளையாட்டுப் போட்டி நடக்கும். அவங்களுக்கும் அரை நாள் பாடசாலை.
ஆரம்பப் பாடசாலைக்கு உரித்தான நூறு மீற்றர் , இரு நூறு மீற்றர் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம் போன்ற சில்லறை விளையாட்டுக்கள் தான் வழக்கமாக இருக்கும். கூடவே வினோத உடைப் போட்டி என்ற ஒரு கூத்தும் நடக்கும்.
ஓவ்வொரு விளையாட்டு இல்லத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகள் புராண அல்லது நடைமுறைப் பாத்திரத்துக்கு உருமாற்றி விளையாட்டுப் போட்டியின் இடைவேளை நேரத்தில் உலா வருவார்கள். சிறந்த நடிப்பை வழங்கிய நடிகருடைய இல்லத்துக்கு விசேட புள்ளி கிடைக்குமாம்.
நாலாம் வகுப்பு படிக்கும் போது என் கனவுப் பாத்திரமான (?) குடிகாரன் பாத்திரத்தில் நடிக்க எனக்கு ஆசை வந்தது. வாழ்வே மாயம் கமல் மாதிரி நடிக்கலாம் என்று கற்பனையெல்லாம் பண்ணி வைத்திருந்தேன். யானை மார்க் சோடாப் போத்தலில் சவர்க்காரத் தண்ணீரை நிரப்பினால் கள்ளு மாதிரி இருக்கும் என்று சிவாஜி பட கலை இயக்குனர் தோட்டாத்தரணி ரேஞ்சுக்கு பிளான் பண்ணினேன்.
என்னுடைய விளையாட்டு இல்லத்தின் பொறுப்பாசிரியையிடம் என் கனவுப் பாத்திரத்தைச் சொல்லி அனுமதி கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே எட்டி நடந்து அம்மாவின் வகுப்புப் போய்
"இஞ்சை ரீச்சர், உங்கட மகன் வினோத உடைப்போட்டிக்கு என்னசெய்யப்போறார் எண்டு கேளுங்கோ"
என்றவாறே எல்லாத்தையும் சொல்லிப் போட்டார்.
" வீட்டை வாரும், உமக்கு இருக்கு"
என்று எட்டிய தூரத்தில் என்ன நடக்கின்றது என்று உளவு பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து கைவிரலால் உறுக்கினார் அம்மா. ஒரு எதிர்கால நடிகனின் கனவுக் கோட்டை அன்றே தகர்ந்தது. அதற்கு பிறகு அந்த வருஷ விளையாட்டுப் போட்டியில் என் சம்பந்தர் இல்லத்தை ஒத்துழையாமை இயக்கம் போல் இருந்துகொண்டே கலந்துகொண்டேன்.
ஐந்தாம் வகுப்பில் தடை தாண்டி ஓட்டத்தில் எனக்கும் இடம் கிடைத்தது.
முதலில் ஓட்ட வரிசையில் நின்று வேகமாய் ஓடிப்போய் ஓட்டப்பாதையின் நடுவே கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் பணிசை கையை பின்புறம் கட்டிக் கொண்டே சாப்பிட்டு விட்டு ஒடவேண்டும். இன்னும் கொஞ்சத்தூரம் போனால் மேசைகளில் தோடம்பழ இனிப்புத் துண்டங்கள் மாவில் கரைத்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றையும் கைகளால் தொடாமல் நக்கி நக்கிச் சாப்பிட்டு விட்டு முடிவிடத்தை நோக்கி ஓடவேண்டும். என் வாழ்க்கையிலேயே ஒரு விளையாட்டுப் போட்டியில் பரிசு கிடைத்தது இந்தத் தடை தாண்டி ஓட்டத்தில் தான். கிடைத்த அதுவும் மூன்றாம் பரிசு.
28 comments:
தலைவா பதிவு கலக்கல் ;)))) ஒரே சிரிப்பு தான் போங்க
\\என் வாழ்க்கையிலேயே ஒரு விளையாட்டுப் போட்டியில் பரிசு கிடைத்தது இந்தத் தடை தாண்டி ஓட்டத்தில் தான். கிடைத்த அதுவும் மூன்றாம் பரிசு.\\
ஆஹா....இப்ப விளையாடி பாருங்க தல...உங்களுக்கு தான் முதல் பரிசு ;)))
நான் தடை தாண்டலிலை கூட தேற மாட்டேன் ஆக்கும்... :)
விளையாட்டு போட்டிலை நான் விளையாடுறனோ இல்லையோ என்னோட இல்லம் வெல்லவேணும் எண்டு ஆசை... ஆனா எப்பவும் நான் இருந்த இல்லம் 4/5 எண்ட இடத்தைவிட்டு முன்னுக்கு பின்னுக்கு போனதே இல்லை................
நானும் உங்களைப்போலத்தான்.
ஐயர் பள்ளிக்கூடத்தில் படித்ததனால் எமது இல்லங்களுக்கும் 'அப்பர், சம்பந்தர் , சுந்தரர்.....' தான். விளையாட்டுப் போட்டிக்கு முன்னர் இரண்டு மூன்று கிழமை பள்ளிக்கூட மைதானத்தில் விதி முறைகள் பழக்குவார்கள். பின்னர் நந்தாவில் குளத்தருகில் (குளம் வற்றி அறுவடை முடிந்த) உள்ள வெளியில் தான் போட்டிகள். ஏனோ ஒருதடவையும் போட்டி அன்று நான் போனதில்லை. அதுவும் அடுத்த நாள் தான் நண்பர்கள் சொல்வார்கள் சம்பந்தர் வென்றது அப்பர் படுதோல்வி அப்படி இப்படி என்று. அப்போதான் தெரியும் நேற்று விளையாட்டு போட்டி முடிந்து விட்டதென்று. ஏன் எனது அம்மா கூட எனக்கு சொல்வதில்லை என நானும் அறிய முயற்சிக்கவில்லை.
எனது அம்மா அதே ப்ள்ளிக்கூடத்தில் ஆசிரியை மட்டுமல்ல போட்டி நடுவராகவும் பணியாற்றியவர் என சொல்வார்கள்!!! 5ம் வகுப்பு வரை விளையாட்டுப்போட்டி என்றால் 'குளுக்கோஸ்' தான் என்றிருந்தது!
பின்னர் 6ம் வகுப்புக்கு யாழ் இந்துக் கல்லூரி சென்ற பின்னர் தான் விளையாட்டுப்போட்டி பற்றியும் அதன் இறுக்கமான விதிகள் பற்றி அறிந்தேன். அங்கே கூட பங்குபற்றிய தில்லை. வெறும் பார்வையாளன் தான். நீங்கள் எல்லோரும் ஊகித்தது போலவே எனது இல்லமான 'சபாபதி' கடைசி தான். ஒரு முறை 4வதாக வந்தனர். ஒருமுறை முதலாவதாக வந்தனர் ஆனால் நாம் அவ்வெற்றீயில் பங்குகொள்ள முடியவில்லை ஏனென்றால் ஆரம்பப்பாடசாலையுடன் தான் எம்மையும் சேர்த்தனர் (7ம் வகுப்பு வரை)!
எமது நண்பன் ஒருவன் 100மீ ஒட்டப்பந்தயம், நீளம் பாய்தல், உயரம் பாய்தலில் கெட்டிக்காரன். அவனோ நாகலிங்கம் இல்லத்தில் இருந்தான். நாகலிங்கம் இல்லம் அவனை மிகவும் நம்பி இருந்தனர். அவனும் வெளிப்படையாகவே மற்றைய இல்லத்தினரை விமர்சித்தும் சண்டைக்கும் இழுத்து திரிந்தான். ஆனால் போட்டி ஆரம்பமாக 2 வாரத்தின் முன்னர் யாரோ ஒரு 'புண்ணியவான்' இவன் செல்லத்துரை இல்லத்துக்கு போகவேண்டியவன் என கண்டுபிடித்து விட்டார். (இது சேர்விலக்கத்தின் முடிவு எண் கொண்டு தீர்மானிக்கப்படும்) இதில் 'குழறுபடி'(?) செய்து நாகலிங்கம் அவனை எடுத்து கொண்டது என எல்லோரும் பேசித்திரிந்தனர். அவனோ மிகவும் இக்கட்டான நிலைக்குத்தள்ளப்பட்டான். முன்னர் இவன் வம்புக்கிளுத்தவர்களும் இவனுக்கு ஆதரவளித்தவர்களும் இவனுக்கு விரோதிகளாயினர். அதன் பின்னர் எனக்குத்தெரிந்து வெளிப்படையாக 'அலம்புவதை' தவிர்த்தான்.
சபாபதி இல்ல வண்ணம் நீலம். எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லாத நிறம் ஏனென்றால் சிறீமாவின் சுதந்திரக்கட்சியின் நிறமென்பதனால்! ஜே.ஆர் வந்து ஒன்றும் கிழிக்க மாட்டார் எனத்தெரிந்தும் சிறீமா என்றால் ஆத்திரம் தான் வரும். ஆனாலும் யாழ் இந்துக் கல்லூரியின் நிறமும் நீலம் தானே என சமாதானப் பட்டுக்கொள்வேன்.
இந்த வினோத உடைப்போட்டி எனக்கு இன்னமும் விளங்காத ஒன்று தான். எப்போதும் நோயாளி, பிச்சைக்காரன், மலம் அள்ளுபவன் போன்றவர்களுக்கே பரிசு கிடைத்தது. எங்களை ஆசிரியர்கள் படித்து டாக்டர் , எஞ்சினியர் ஆக வரவேண்டும் என்பார்கள் ஆனால் எனது அம்மாவும் சேர்ந்து பிச்சைக்காரன் தான் திறமான வேஷம் என தெரிவு செய்வார்கள். இதில் இன்னுமோரு விளங்காத விடயம் எமது வாசிகசாலை நடாத்திய போட்டியில் மலம் அள்ளுபவனாக வேடமிட்டவருக்கேமுதல் பரிசு வழங்கினர். ஆனாலும் நான் அறிந்தவரை எமது கிராமத்தில் (கோண்டாவில்)) 2 அல்லது 3 வீடுகளே அவ்வாறான மலசல கூடங்களை கொண்டிருந்தன! அது மட்டுமல்ல வாசிகசாலை இளைஞர்களோ முற்போக்கு சிந்தனை அது இது என்று வேறு கதைத்துக்கொண்டு திரிந்த காலமது. சிவகுமாரன் ராத்திரி வந்தவன், சத்தியசீலன் மத்தியானம் வந்தவன் என்றெல்லாம் பேசி எம்மை வியப்பிலும் ஆழ்த்தினர். ஆனாலும் கக்கூஸ் அள்ளுபவனுக்கு முதல் பரிசு வழங்கினர்!
//கோபிநாத் said...
தலைவா பதிவு கலக்கல் ;)))) ஒரே சிரிப்பு தான் போங்க
ஆஹா....இப்ப விளையாடி பாருங்க தல...உங்களுக்கு தான் முதல் பரிசு ;)))//
வாங்க தோழரே
நம்ம சிறுவயசு அனுபவங்களை நினைக்கும் போது வேடிக்கையா இருக்கும் இல்லையா? ;-))
இப்போ ஜிம் போறதோட சரி, விளையாட்டுப் பக்கம் விளையாட்டுக்குக் கூடப் போவதில்லை.
// வி. ஜெ. சந்திரன் said...
நான் தடை தாண்டலிலை கூட தேற மாட்டேன் ஆக்கும்... :)//
கிடைச்ச பணிசையாவது மெதுவாச் சாப்பிட வேண்டியது தானே?
அது சரி வினோத உடைப்போட்டியில் பங்குபற்றினீங்களா? அல்லது உங்கட அம்மாவும் தடா போட்டவவோ?
படிக்க ரொம்ப நல்லா இருந்தது பிரபா ..ரொம்ப அழகில்ல நம் பால்யங்கள்
வாங்க அய்யனார்
முதல் தடவை நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க. நன்றி
உண்மைதான் பால்ய காலத்து நினைவுகள் இதமானவை.
நான் சின்னனில படிச்ச பாடசாலையில நாலு வருடத்துக்கு ஒருமுறைதான் விளையாட்டுப் போட்டியே நடக்கும். அங்க கம்பன், பாரதி, இளங்கோ எண்டு 3 இல்லங்கள். அதில நான் இருந்த இல்லம் கம்பன். நான் படிக்கும் போது நடந்த ஒரேயொரு விளையாட்டுப் போட்டியில இந்த இல்லம் தான் முதலாவதா வந்தது.
அதுக்குப் பிறகு மேல் வகுப்புக்குப் போனபோதும் அந்தப் பாடசாலையிலும் முன்னைய பள்ளியில் இருந்தது போலவே இல்லங்கள் அதனுடன் வள்ளுவரும் சேர்ந்துகொண்டார். இங்கயும் பாத்தா நம்ம கம்பரோட இணைச்சிட்டாங்க. ஆனா என்ன கவலை எண்டா கம்பர் ஒருக்காலும் முதலாவதா வரவேயில்லை.:( நீளம் பாயிறதில நான் முதலாவதா வந்திட்டன். ஆனாலும் அதையும் இன்னொராளோட பங்குபோடவேண்டி வந்திட்டு. இரண்டுபேரும் ஒரே அளவு நீளம் தான் பாஞ்சிருந்தம்.
//நான் சின்னனில படிச்ச பாடசாலையில நாலு வருடத்துக்கு ஒருமுறைதான் விளையாட்டுப் போட்டியே நடக்கும். அங்க கம்பன், பாரதி, இளங்கோ எண்டு 3 இல்லங்கள்
//
PUNNALAIKADDUVAN G.T.M.S. Is this your school???
//Anonymous said...
நானும் உங்களைப்போலத்தான்.
ஐயர் பள்ளிக்கூடத்தில் படித்ததனால் எமது இல்லங்களுக்கும் 'அப்பர், சம்பந்தர் , சுந்தரர்.....' தான்.//
வணக்கம் நண்பரே
உங்கள் பின்னூட்டமே ஒரு இரசனைக்குரிய பதிவு போல் இருக்கின்றது. உங்கள் காலத்து நினைவுகளைத் தந்தமைக்கு நன்றிகள்.
வினோத உடைப்போட்டி எப்படி விளையாட்டுப் போட்டிக்குள் புகுந்தது என்பது ஒரு புரியாத புதிர் தான். பிச்சைக்காரன் போல கூட வேஷம் கட்டி காசு கேட்பார்கள்.
சிலருடைய உருவ அமைப்பைப் பொறுத்தும் அவர்களுக்கு வேசம் கொடுப்பதுண்டு. எனக்கு 2 வகுப்பு முந்திப் படித்த குள்ளமான பெண்ணை அவர்களின் விளையாட்டு இல்லம் அகத்தியருக்கு வேடம் போடச் சொன்னதை இப்போது நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது.
//Anonymous said...
நான் சின்னனில படிச்ச பாடசாலையில நாலு வருடத்துக்கு ஒருமுறைதான் விளையாட்டுப் போட்டியே நடக்கும். //
பிளேன் குண்டு அதிகம் போடுற காலத்தில படிச்சனீங்கள் போல இருக்கு.
//நீளம் பாயிறதில நான் முதலாவதா வந்திட்டன். ஆனாலும் அதையும் இன்னொராளோட பங்குபோடவேண்டி வந்திட்டு. //
உது கொடுமையிலும் கொடுமை பாருங்கோ, வெற்றியைப் பங்கு போட வந்திடுவினம்.
நீங்கள் PUNNALAIKADDUVAN G.T.M.S. பாடசாலையிலோ படிச்சனீங்கள் என்று ஒரு ஆள் கேட்டிருக்கிறார், பதில் சொல்லுங்கோ. உங்கட பெயர் தேவையில்லை ;-)
இந்த 'குளுக்கோஸ்' பற்றி இன்னும் ஒரு சுவாரசியம் இருக்கிறது. முதல் நாள் போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு குளுக்கோஸ் கொடுக்க அனேகமாக பெண்பிள்ளைகளைத்தான் நியமிப்பார்கள். அவர்களும் அக்கடமையை செவ்வனே செய்து மிகுதி குளுக்கோசை திருப்பி கொடுத்து விடுவார்கள். ஆனாலும் சில பெடியள் அதை அங்கிருந்து 'சுருட்டி' விடுவார்கள். அடுத்த நாள் வகுப்பில் பின் வாங்கு அருகில் கூட்டமாக இருக்கும், எல்லோர் வாயிலும் வெள்ளை வெள்ளை யாக இருக்கும். நான் முன் வாங்குக்காரர் போனால் பிடிபட்டு விடுவமோ என போவதில்லை. ஆனாலும் இடைவேளையில் அதை பெற்று விடுவோம். ஒருத்தரும் வாய் திறக்கக்கூடாது என்ற உறுதி மொழியுடனே இருந்தாலும் சொல்லி வைத்த மாதிரி 10 நிமிடத்துக்குள் தலமை ஆசிரியர் பிரம்புடன் வந்து விடுவார். பின்னர் உபதேசங்கள் , அம்மாவைக் கூட்டிவா, அப்பாவின் கடிதம் கொண்டுவா என எல்லாம் முடிந்து 'திருடுதல் கூடாது' என 10 முறை கொப்பியில் எழுதிய பின்னர் எல்லோருக்கும் மேலதிக குளுக்கோஸ் வரவழைக்கப்பட்டு வழங்கப்படும்.
நான் அறிந்தவரை திருடன் பிடிபட்டால் நன்மை கிடைப்பது பள்ளிக்கூட குளுக்கோஸ், நெல்லிக்காய் திருட்டில்தான்!!!!
குளுக்கோஸ் சாப்பிட்ட அனுபவப் பகிர்வுக்கு நன்றி நண்பரே
விளையாடினமோ இல்லையோ, குளுக்கோஸ் சாப்பிட ஒரு கோஷ்டி உலாவும், அதில் நானும் ஒருவன்.
அம்மா ஆசிரியை என்பதால் சில சலுகைகளும் உண்டு (அதிகாரத் துஷ்பிரயோகம்) ;-)))
:) படிக்கும் பொழுதே ஒரு மகிழ்ச்சி. :) விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவராக இருந்திருக்கின்றீர்கள். நான் விளையாட்டென்றாலே அந்தப் பக்கமே போக மாட்டேன். அப்படியொருவன்.
குடிகாரன் வேடம்...ம்ம்ம்...சரி சரி
// "அப்பர் ஓடு",
"சம்பந்தர் விடாதை"
என்று சிவனே என்று இருந்த நாயன்மார்களை மைதானத்துக்கு இழுத்து வேடிக்கை நடக்கும் காலம் //
ஹா ஹா ஹா
வணக்கம் ராகவன்
விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கும் ஆர்வம் தான் நமக்கு ;-)
கதைப்புத்தகமும் கையுமாத்தான் நம்மைப் பார்க்கலாம்.
கா.பி,
நல்ல நினைவுமீட்டல் பதிவு. எங்கடை ஊர்ப் பள்ளிக்கூடம் சின்னப் பள்ளிக்கூடம். மாணவர் தொகை குறைவு எண்டதால் மூன்று பிரிவுகள்.
சேரன், சோழன், பாண்டியன் என்பனதான் எனது ஊர்ப் பள்ளிக்கூட இல்லங்களின் பெயர்கள். இதிலை பகிடி என்னெண்டால், என்னை முதலில் சோழன் இல்லத்திற்கு விட்டார்கள். ஆனால் என்னைச் சேரன் இல்லத்தில் இணைத்துவிடுமாறு அதிபரைக் கெஞ்சிக் கூத்தாடி சேரன் இல்லத்தில் இணைந்தது இண்டைக்கு நினைச்சாலும் சிரிப்பு வரும். என்னவோ தெரியேல்லை சேரர்கள் என்றால் எனக்கு ஒரு பிடிப்பு.
பின்னர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் சேர்ந்த பிறகு அங்கை 5 இல்லங்கள். எல்லாம் முன்னாள் கல்லூரி அதிபர்களின் பெயரில்.
துரையப்பா இல்லம், ஜெயரத்தினம் இல்லம், சின்னப்பா இல்லம் என 5 இல்லங்கள்.
பிரபா நல்லதொரு நினைவு மீட்டல் பதிவு.. உந்த விளையாட்டு போட்டி நேரம் தான் பெட்டையள் பொடியள் கதைக்க நல்ல வாய்ப்பு என்ன....
வெற்றி அண்ணை
முறையா நீங்கள் சோழனில தான் இருந்திருக்க வேணும், "ஆழக்கடலெங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே என்று" அந்தப் பாட்டு கேட்டீங்களோ தெரியவில்லை.
வருகைக்கு நன்றி. கூடவே உங்கட பள்ளிக்கூடத்தையும் அறிந்துகொண்டேன்.
//சின்னக்குட்டி said...
பிரபா நல்லதொரு நினைவு மீட்டல் பதிவு.. உந்த விளையாட்டு போட்டி நேரம் தான் பெட்டையள் பொடியள் கதைக்க நல்ல வாய்ப்பு என்ன...//
வாங்கோ சின்னக்குட்டியர்
என்னதான் விளையாட்டு வீராங்கனையளா இருந்தாலும், மதிலால எட்டிக் கூக்காட்டுற பெடியளைக் கண்டால் தட தடத்துப் போயிடுவினம், அதைப் பற்றிச் சொல்லிப் பழசைக்
கிளறாதேங்கோ ;-))
பிரபா!
அழகான காலம் பற்றிய பதிவு.
மீட்டுப் பார்க்க சந்தோசமாக இருக்கும்!
வணக்கம் யோகன் அண்ணா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
வணக்கம்
அருமையான பதிவு
எனது பாடசாலையிலும் 3 இல்லங்கள்.. நாவலர் கம்பர் வள்ளுவர் என்று. அதன் முறையே பச்சை சிவப்பு மஞ்சள். நாவலர் இல்லம் தான் எப்பவும் முதலிடம். அந்த இல்லம் தான் நானும்.
ஆகிலும் உயரம் தாண்டல் போட்டியில் மட்டும் எனக்கு பரிசு கிடைக்கும்.
இல்ல கொட்டகையை அலங்கரிப்பதற்கு எங்களுக்கு பிரச்சனையே இல்லை.. மற்றவர்கள்தான் சிவப்புக்கும் மஞ்சளுக்கும் ஒடித்திரிவார்கள்.அதைப்பார்த்து நாங்கள் சிரிப்போம்.
பிரபா அண்ணா,
நல்ல ஒரு பதிவு. பாடசாலை நாட்களில் பல மறக்க முடியாதா சம்பவங்கள் என்றால் எனக்கு விளையாட்டுப் போட்டிகளின் போது தான். நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்ததற்காக நன்றிகள்.
எனக்குப் பாடசாலை நாட்களில் நெருங்கிய நண்பர்கள் என்று கூறினால் விளையாட்டுப் போட்டிகளின்போது எனக்கு எதிராகப் போட்டியிட்டவர்கள் தான்... ஒவ்வொருவரும் இன்று ஒவ்வொரு திக்காக, ஒரு நண்பன் வெளி நாடு செல்லும் போது கடலில் கப்பல் கவிழ்ந்ததால் இறந்துவிட்டான்... பலர் இன்று தாயகத்தில் விடுதலைப்புலிகளாக...
நல்ல சிரிப்புத்தான்
நாங்கள் NCGE batch காரர். ஏங்கடை தமிழ் புத்தகத்திலை வன்னியிலிருந் து வந்த வரதன் தேசிய மெயவல்லுனர்போட்டியிலே ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்றார் என்ற சிறுகதை போன்ற கட்டுரை இதைப் படிக்க ஞாபகம் வருகுது.
நீங்கள் அந்தப் புத்தகம் பார்த்திருக்கிறீர்களா
பிரகலாதன்
//நந்தியா said...
வணக்கம்
உயரம் தாண்டல் போட்டியில் மட்டும் எனக்கு பரிசு கிடைக்கும்.//
வணக்கம் நந்தியா
உயரம் தாண்டலில் பரிசு கிடைக்கக் குடுத்து வைக்க வேணும், வீட்டிலை ஏதாவது சண்டை சச்சரவு வந்தால் வேலியால் எட்டிப் பாயலாமெல்லோ ;-)
பச்சை நிறக்காறர் ஊரில் இருக்கும் இலை தழைகளால் தங்கட விளையாட்டு இல்லத்தைச் சோடிக்கலாம் இல்லையா?
//Haran said...
பிரபா அண்ணா,
நல்ல ஒரு பதிவு. பாடசாலை நாட்களில் பல மறக்க முடியாதா சம்பவங்கள் என்றால் எனக்கு விளையாட்டுப் போட்டிகளின் போது தான். //
வணக்கம் ஹரன்
ஊர் நினைப்பு வரும்போது வரும் பதிவுகள் இவை, தொலைந்த நட்பை நினைத்தால் மனசின் மூலையில் வலிக்கும்
//வரதன் தேசிய மெயவல்லுனர்போட்டியிலே ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்றார் என்ற சிறுகதை போன்ற கட்டுரை இதைப் படிக்க ஞாபகம் வருகுது.
நீங்கள் அந்தப் புத்தகம் பார்த்திருக்கிறீர்களா
பிரகலாதன் //
வணக்கம் பிரகலாதன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. சில சமயம் சொந்த விசயங்களை நினைத்தாலோ எழுதினாலோ இப்படிச் சிரிப்பு வரும் ;-)
வரதன் ஓட்டப் போட்டியில் பரிசு பெற்ற கதை என்னுடைய அண்ணன்மாரின் பாடப்புத்தகத்தில் இருந்து படித்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. அருமையான கதையல்லவா?
தங்க. முகுந்தன்
நானும் தெல்லிப்பழை மகாஐனாக் கல்லூரியில் தான் படித்தேன். ஏனைய இரண்டு இல்லங்கள் சின்னையா அருளம்பலம்.
Post a Comment