Saturday, March 03, 2007
மனசினக்கரே - முதுமையின் பயணம்
முதியவர் ஒருவர் முதுமை தந்த பரிசான வளைந்த வில் போன்ற முதுகோடு குனிந்து கொண்டே நடந்து போகின்றார்.அதைக் கண்ணுற்ற ஒரு வாலிபன் வேடிக்கையாக
" தாத்தா ! இந்த வில்லை எங்கே வாங்கினீர்கள் என்று வினவுகிறான்.
" மகனே! இந்த வில்லை நீ விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை, முதுமைக் காலத்தில் உனக்கு இது பரிசாகவே வந்து சேரும்"
என்று அந்த இளைஞனைப் பார்த்துக் குறுநகையோடு போய்க்கொண்டிருக்கிறார் அந்த முதியவர்.
இன்னொரு காட்சி
முதியவர் ஒருவர் தன் தள்ளாத வயதில் கூனிக்குறுகி நிலத்தைப் பார்த்தவாறே மெள்ள நடந்து போகிறார்.ஒரு இளைஞன் அதைப் பார்த்து
" தாத்தா ! எதையாவது தொலைத்துவிட்டீர்களா?" என்று ஏளனமாகக் கேட்கின்றான்.
" ஆம் மகனே ! தொலைந்து விட்ட என் இளமையைத் தான் தேடுகின்றேன் " என்று சலனமில்லாது சொல்லிவிட்டு நகர்கின்றார் அந்த முதியவர். இளைஞன் வாயடைத்து நிற்கின்றான். மேலே நான் சொன்ன இரண்டு சம்பவங்களும் எனது ஒன்பதாம்
வகுப்பு ( ஆண்டு 10 ) தமிழ்ப்பாடப்புத்தகத்தில்முன்னர் படித்தது. வருஷங்கள் பல கழிந்து இப்போது அவை நினைவுக்கு வரக்காரணம் அண்மையில் நான் பார்த்த மலையாளத்திரைப்படமான "மனசினக்கரே"
யாருமே விரும்பியோ விரும்பாமலோ தம் வாழ்வியலில் கடக்கவேண்டிய கடைசி அத்தியாயம் இந்த முதுமை.முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், கழிந்து போன பந்தங்களையும் அது தேடி ஓடுகின்றது என்று. அதுதான் "மனசினக்கரே" படத்தின் அடி நாதம், மனசினக்கரே - மனதின் அந்தப் பக்கம் என்று பொருள்படும் இப்படத்தலைப்பே எவ்வளவு ரசனையாக இருக்கின்றது பார்த்தீர்களா?
தமது படங்கள் சோடை போனாலும் மலையாளச் சேட்டன்கள் வைக்கும் படத்தலைப்புக்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதோ அல்லது எளிமையானதாகவோ இருக்கும்.
தெரிந்தோ தெரியாமலோ மலையாளப் பட இயக்குனர் சத்தியன் அந்திக்காடுவின் படங்கள் சிலதை நான் பார்த்த மலையாளப் படப்பட்டியலில் வைத்திருக்கின்றேன். தந்தை மகனுக்கு இடையில் இருக்கும் ஆழமான நேசத்தைக் காட்டிய "வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள்". அம்மா ஸ்தானத்தில் இருப்பவருக்கும் மகளுக்கும் உள்ள புரிதல்கள், பிரிவுகளைக் காட்டிய "அச்சுவிண்ட அம்மா" கடந்த வருஷம் கேரளத் தியேட்டரில் நான் பார்த்திருந்த "ரசதந்திரம்". என்று வரிசையாக நான் பார்த்து வியந்த திரை இயக்கங்களுக்குச் சொந்தக்காரர் சத்தியன் அந்திக்காடு. அந்த வகையில் இந்த இயக்குனரின் படம் தானே சோடை போகாது என்று எடுத்து வந்து பார்த்து அனுபவித்த படம் " மனசினக்கரே".
"மனசினக்கரே" , 2003 ஆம் ஆண்டு வெளிவந்து பிலிம் பேரின் , சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர் (ஜெயராம்), சிறந்த இசை (இளையராஜா) ஆகிய நாங்கு விருதுகளை அள்ளிய படம். இருபது வருடங்களுக்கு பின் செம்மீன் புகழ் ஷீலா மீண்டும் திரையுலகிற்கு வரக்காரணமாக இருந்த படம். (இவர் ஏற்கனவே 1975 வரை மலையாள நடிகர் பிரேம் நசீருடன் ஜோடியாக 130 படங்களில் நடித்துச் சாதனை ஒன்றும் இருக்கிறதாம்) இப்படி ஏகப்பட்ட விஷயங்களைப் இப்படத்தைப் பார்த்தபின்னர் தான் அறிந்து கொண்டேன்.
இப்படத்தில் இரண்டு கதைக்களங்கள் கையாளப்படுகின்றன.
ஒன்று பணக்கார வீட்டைச் சுற்றியது. மற்றையது சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சுற்றியது. இரண்டு புள்ளிகளாக ஆரம்பிக்கும் இந்த ஓட்டம் முடிவில் ஒன்றாகக் கலக்கின்றது.
கொச்சு திரேசா ( ஷீலா) அறுபதைக் கடந்த பெரும் பணக்காரி. கணவனை இழந்து தன் வளர்ந்த பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், கூப்பிட்டால் ஓடிவந்து கால் பிடிக்கும் வேலைக்காரியும், பெரும் பங்களாவுமாக என்னதான் பிரமாண்டமான வாழ்க்கை இவளுக்கு வாய்த்தாலும் அவள் இழந்து நிற்பது விலைகொடுக்கமுடியாத பாசமும் கூடவே எளிமையான சின்னச் சின்ன சந்தோஷங்களும். கிழவி ஆயிற்றே வீட்டில் ஒரு மூலையில் கிடந்து வேளா வேளைக்குச் சாப்பாடும், வீடே உலகமுமாக இருக்கலாம் தானே என்பது திரேசாவின் பிள்ளைகளின் எதிர்பார்ப்பு. தன் குறும்புத்தனங்களையும், எல்லையில்லா அன்பைக் கொடுக்கவும் , கேட்டுப் பெறவும் துடிக்கும் மனநிலையில் திரேசா என்கின்ற மூதாட்டியின் நிலை.
இன்னொரு பக்கம் சிறு கோழிப் பண்ணை வைத்து ரெஜி என்னும் இளைஞனும் (ஜெயராம்) சதா சர்வகாலமும் கள்ளுக் குடியே கதியென்று கிடக்கும் மொடாக்குடியனான அவனின் தந்தையும் ( இன்னசென்ட்). என்னதான் இந்த ஏழ்மை வாழ்க்கை இவர்களுக்கு வாய்த்தாலும், இயன்றவரை தன் தந்தையின் ஆசைகளுக்கு அனுசரித்துப் போகும் மகனுமாக இவர்கள் வாழ்க்கை.
மாடிவீட்டில் கிடைக்காத பாசமும் நேசமும், திரேசாவுக்கு பெற்றெடுக்காத மகன் ரூபத்தில் ரெஜியிடமிருந்து கிடைக்கின்றது.
தொடர்ந்து இந்த இரண்டு குடும்பங்களிலும் வரும் வேறு வேறான சோதனைகள் , இறுதியில் மனசினை இலேசாக்கிக் காற்றில் பறக்க வைக்கும் முடிவுமாக ஒரு உணர்ச்சிக்குவியலாக இப்படம் வந்திருக்கின்றது.
ஷீலா , இருபது வருஷ ஓய்வுக்குப் பின் வந்து நடித்தாலும் , இப்படம் இவருக்கு நல்லதொரு மீள்வரவுக்கான சகல அம்சங்களையும் இவர் நடிப்பில் காட்ட உதவியிருக்கின்றது. முக்காடு போட்டுக்கொண்டு கையில் குடையுமாக அப்பாவி போல வந்தாலும், மேட்டார் சைக்கிளில் களவாக லிப்ட் கேட்டு தேவாலயம் (Church) போவது, சேர்ச்சில் பிரார்த்தனை நடக்கும் போது தன் தோழியிடம் குசுகுசுப்பது, பின் அதைச் சுட்டிக்காட்டும் பாதிரியாரிடம் " கடவுளோடு அதிகம் அலட்டாமல் சுருக்கமாக உங்கள் பிரார்த்தனையை வைத்துக்கொள்ளுங்கள்" அவருக்கே ஆலோசனை கொடுப்பது என்று குறும்புத்தனம் காட்டுகின்றார். தன் பிள்ளைகளுக்குத் தெரியாமல் களவாக மதில் பாய்ந்து போய் ஜெயராமுடன் கிராமியச் சந்தோஷங்களை அனுபவிப்பது, கள்ளுக்குடித்து வெறியில் சாய்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
ஜெயராமைப் பொறுத்தவரை இந்தப் படம் ஆளுக்கேற்ற அளவான சட்டை. ஒரு சாதாரண கோழி வியாபாரியாக வந்து மாடிவீட்டுப் பணக்காரப்பாட்டியின் ஓவ்வொரு எதிர்பார்ப்பையும் கேட்டறிந்து அவளுக்கு அவற்றைத் தேடிக்கொடுப்பதாகட்டும், கள்ளே கதியென்று குடித்து அழியும் தந்தையை நினைத்துப் புழுங்குவதாகட்டும், பின்னர் கெட்ட பழக்கங்களைத் திருத்தும் நிலையம் போய் அங்கு கொடுக்கும் கடுமையான பயிற்சிகளைக் கண்டு கலங்கி தன் தந்தையைத் தான் கஷ்டப்படுத்தக்கூடாது என்று திரும்பி வருவதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான இவரின் நடிப்பு மனசில் உட்கார்ந்து டோரா போட்டுக்கொள்கின்றது.அப்பனும் மகனுமாகக் கள்ளடித்து ஆசையைத் தீர்ப்பது வேடிக்கை.
ஷிலாவின் மருமகனாக இளமையான பாத்திரத்தில் நெடுமுடி வேணு (இந்தியன் படத்தில் வந்த சி.பி.ஐ ஆபீசர்) கொஞ்சமே காட்சிகளில் வந்தாலும் வித்தியாசமான நடிப்பு.
கே.பி.ஏ.சி.லலிதா, ஷீலாவின் தோழியாக வரும் முதிய பாத்திரம். தான் ஆசையாகச் செய்த தின்பண்டத்தைத் தன் தோழியின் பிள்ளைகள் தூக்கி எறியும் போது ஏற்படும் ஏமாற்றம் தரும் முகபாவம், சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகன் தன்னை அங்கே வரச்சொல்லுகின்றான் என்று பெருமையடித்துவிட்டு, பின்னர் தன் பேரப்பிள்ளைகளைக் கவனிக்க அவன் அழைக்கும் வேலைக்காரியாக நான் போகின்றேன் என்று சொல்லி விம்மி வெடிக்கும் போது யதார்த்தம் உறைக்கின்றது.
மலையாளத்தில் இளையராஜா - இயக்குனர் பாசில் கூட்டணி தான் நல்ல பாடல்களைத் தரும் என்ற முடிவை மாற்ற இப்படமும் வழிவகுத்திருக்கின்றது. "கொச்சு கொச்சு சந்தோஷங்கள்", "அச்சுவின்ட அம்மா", "ரசந்தந்திரம்" வரிசையில் இதிலும் இளையராஜா - இயக்குனர் சத்தியன் அந்திக்காடு கூட்டணி. பின்னணி இசையில் வருடும் கிராமியத்துள்ளல் , சோகங்களில் கலக்கும் வயலின் ஜாலம், முத்து முத்து மழைத்துளிகள் தெறித்தாற் போல சலனமில்லாது எண்பதுகளின் இசைவிருந்தை மீண்டும் அளிக்குமாற் போல ராஜாவின் ராஜாங்கம் தான்.
"மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா" கிராமியத்துள்ளல், இப்பாடலில் வரும் வரிகள் ஏறக்குறையத் தமிழிலும் புரியும். தன் இளமைக்காலத்தில் தான் பார்த்துப் பழகிய இடத்தைத் தேடிப் போய்ப் பார்க்க ஆசைப்பட்டுப் போகும் திரேசா 52 வருஷங்களுக்கு முன் தன் திருமணம் நடந்த தேவாலயத்தில் பழைய நினைவைப் பகிரும் போது வரும் பாடல் "மெல்லயொன்னு பாடி". தகப்பனும் மகனும் கள்ளருந்திக் களிப்பில் மிதக்கும் போது வரும் அருமையான தாள லயத்தோடு " செண்டைக்கொரு", தந்தையை இழந்த சோகம் அப்பிய சூழலில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் அயல் திளைக்கும் போது வந்து கலக்கும் " தங்கத்திங்கள் வானில் உருக்கும் " (இப்பாடலை எழுதும் போது மெய்சிலிர்க்கின்றது) இப்படி ஒவ்வொரு பாடலும் காட்சியோடு ஒன்றி, உறுத்தாத எளிமையான பின்னணியில் வந்து கலந்து மனசில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கின்றன. இப்பாடல்வரிகளில் ஒளிந்திருக்கும் அழகுணர்ச்சியால் மலையாளப்பாடல்களில் அர்த்தம் பொதிந்த பாடல்களைத் தமிழாக்கித் தரவேண்டும் என்ற முனைப்பும் எனக்கு ஏற்படுகின்றது.
பாடல்களைக்கேட்க
நயன்தாராவிற்கு இதுதான் திரையுலகில் முதற்படமாம். முகப்பூச்சு இல்லாத கிராமியக் களையும் துடுக்குத் தனமான பேச்சாலும், அடவடிப் பேரம் பேசலாலும் கடைவீதியில் எல்லோரையும் அடக்கி வைக்கும் இவரைக் கண்டால் எதிர்ப்படும் மீன் வியாபாரி கூட தன் சைக்கிளைத் திருப்பி வந்த வழியே ஓடும் நிலை. ஆனால் இதே பாத்திரம் பின்னர் அடங்கிப் போய் அமைதியின் உருவமாகப் பிற்பாதியில் வருவது ஒரு முரண்பாடு.சிம்பு மட்டும் விட்டுவைத்திருந்தால் ஊர்வசிப் பட்டம் வரை முன்னேறக்கூடிய சாத்தியம் இவரின் முதற்படத்திலேயே தெரிகின்றது.ஆனால் இப்போது அரையும் குறையுமாக "வல்லவா எனை அள்ளவா" என்று நடித்துப் போகும் நயந்தாரா வேறு.
படத்தில் ஜெயராம், ஷீலா பாத்திரங்களுக்கு அடுத்து மிகவும் கனமான பாத்திரம், ஜெயராமின் தந்தையாக வரும் இன்னசென்ட் உடையது,அதை அவர் கச்சிதமாகவே செய்திருக்கின்றார். கடனுக்குக் கள் குடித்துவிட்டு அப்பாவி போல நடிப்பது, அரசியல் கூட்டத்தில் சம்மணம் கட்டி இருந்து பேச்சாளரின் ஓவ்வொரு பேச்சுக்கும் குத்தல் கதை விடுவது, தன் மகன் குடியை விடவைக்க கள்ளுக்கொட்டிலுக்குக் கொண்டு போய் போத்தலைக் காட்டியதும் ஒரு காதல் பார்வை பார்த்து முழு மூச்சாக இறங்குவது, வெறிகொண்டோடும் தன் வளர்ப்பு மாட்டின் கயிற்றில் மாட்டுப்பட்டு கத்திக்கொண்டே ஓடுவது என்று அத்தனை காட்சிகளிலும் மின்னியிருக்கிறார்.ஒரு நகைச்சுவை நடிகனுக்குக் கதையோட்டத்தோடு கூட நகரும் குணச்சித்திர பாத்திரம் கொடுத்துச் சிறப்பிப்பதைப் பல மலையாளப்படங்களில் பார்த்தாயிற்று. இன்னசென்ட் என்னமாய் ஒரு இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார், அவரின் முகபாவங்களை ஆச்சரியத்தோடு பார்த்துககொண்டே இருக்கலாம்.
தென்னோலைகளைக் கிழித்துப் போடுவது, மாடு வளர்ப்பு, வாழைக்குலைகளை வெட்டிச் சந்தைக்குக் கொண்டுபோவது, என்று ஊர்நினைப்பைக் கிளறும் காட்சிகள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன.
எவ்வளவு தான் அள்ளிக்கொட்டியிருக்கும் பணக்குவியலில் வாழ்ந்தாலும், முதுமை தேடும் தன் ஆரம்பப்புள்ளியை நோக்கிய பால்யகால நினைவுகளும், அதை மீண்டும் அனுபவிக்கத்துடிக்கும் ஆசைகளும் விலைமதிப்பற்றவை. அதைத் தான் அழகாகக் கோடிட்டுக்காட்டுகின்றது இப்படம்.
தாயகத்தில் வாழ்ந்த காலங்களில் ஐஸ்பழ வானில் ஒரு குச்சி ஐஸ்கிறீம் வாங்கிச் சூப்பிக்கொண்டிருக்கும் முதியவரைக் கண்டால் இளசுகளுக்கு வேடிக்கை. "உங்க பார்! பழசு இப்பதான் சின்னப்பிள்ளை மாதிரி ஐஸ்கிறீம் சூப்புது" என்ற கிண்டல் பேச்சுகள் வேறு.
தன் காதலுக்காக 52 வருஷங்களுக்கு முன்னர் பெற்றோரை உதறிவிட்டு எங்கோ போய் , மீண்டும் பழைய ஊருக்கு வந்து எல்லா இடங்களையும் பார்த்துத் தன் நினைவலைகளை மீட்டுக் கனத்த இதயத்தோடு திரேசாக் கிழவி, ரெஜியிடம் சொல்லுவார் இப்படி,
"எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்."
அந்த வசனத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.
எங்கட சமுதாயத்தைப் பொறுத்தவரை அண்ணன் ஒரு நாட்டில், அக்கா இன்னொரு நாட்டில, தங்கச்சி வேறோர் இடத்தில. அப்பா, அம்மா ஊரிலோ, அல்லது ஒவ்வொரு பிள்ளைகளின் வீட்டிலும் சுழற்சி முறையில் தங்கல். பிரான்ஸ் - கனடா - லண்டன் - சிட்னி
என்று எஞ்சிய காலங்கள் ஒவ்வொரு வீட்டிலும் பங்கு போடப்படும். ஒவ்வொரு பருவகாலங்களுக்கும் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு பிள்ளைகளோடு இவர்கள் வாழ்க்கை நகர்த்தப்படும். இல்லாவிட்டால் ஒரே வீட்டில் பேரன் பேர்த்திகளின் காவல் தெய்வங்களாய். இனப்பிரச்சனையின் இன்னொரு சமுதாய அவலம் இது. யாரையும் நோகமுடியாது. பிள்ளைகளைப் பொறுத்தவரை அவர்களின் நியாயம் அவர்கள் பக்கம்.
"உந்தப் பிக்கல் பிடுங்கல்கள் வேண்டாம், நாங்கள் ஊரிலேயே இருந்துகொள்ளுறன், அயலட்டை எங்களைச் சொந்தப்பிள்ளைகள் போல வைச்சிருக்கும்". இது என் அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.
"மனசினக்கரே " திரைப்படத்தில், திரேசாக் கிழவி தன் பிள்ளைகளிடம் தான் காட்டமுடியாத பரிவினை ஏதோ ஒருவகையில் தீர்க்கத் தான் அன்பாக வளர்க்கும் மாட்டை ஜெயராமுக்குப் பிள்ளைகள் விற்றதும் களவாக அதைத் தேடிப் போய்ப் பரிவு காட்டி உணவூட்டுவது.
இதைப்பார்த்ததும் எனக்கு மீண்டும் அப்பாவின் நினைவு வந்தது. அருகே பிள்ளைகள் இல்லாத 13 வருஷங்கள் கடந்த அவரின் வாழ்வில் பிள்ளையாக இருப்பது ஆடு வளர்ப்பு.
அப்பா வளர்க்கும் ஆடுகள்
கடந்த முறையும் ஊருக்குப் போனபோது வீட்டின் பின் கோடியில் இருந்து சத்தம் கேட்டது.
" உதேன், கட்டிவச்ச குழையெல்லாம் அப்பிடியே இருக்குது, ஏன் சாப்பிடேல்லை? இல்லாட்டால் இந்தா, இந்தக் கஞ்சியைக் குடி" அப்பா ஆட்டுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.அந்த ஆட்டுக்கு லட்சுமி என்பது பெயராம், குட்டிக்கு அப்போது பேர் வைக்கவில்லை.
" அப்பா! வயசு போன காலத்தில ஏன் உந்த ஆடு வளர்ப்பு?" அங்கலாய்ப்போடு நான்.
" தம்பி! நீங்களெல்லாம் இங்கை இல்லாத குறைக்கு ஒரு ஆறுதலுமாச்சு" என்று மெல்லச் சிரிப்போடு என் அப்பா சொன்னார்.
என் புலம்பெயர் வாழ்வில் இன்றைய முதுமையின் வாழ்வியல் நடப்புக்களைக் காணும் போது முதுமை என்னும் அத்தியாயத்தை நோக்கி மனசின் ஓரமாய் பயத்தோடு எதிர்நோக்க வைக்கின்றது.
முதுமை என்பது வரமா? சாபமா.....?
47 comments:
உங்கள் பதிவு படத்தை அழகாக அறிமுகம் செய்கிறது. படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காது. உங்கள் பதிவை வாசித்து பார்த்ததாக பாவனை பண்ணலாம் :).
நமது சமூகத்தின் பிய்த்தெறியப்பட்ட குடும்ப அவலம் எப்படியானது என்பதை சொல்லியுள்ளீர்கள் :(
//என் புலம்பெயர் வாழ்வில் முதுமை என்னும் அத்தியாயத்தை நோக்கி பயத்தோடு எதிர்நோக்க வைக்கின்றது மனசின் ஓரமாய், இன்றைய முதுமையின் வாழ்வியல் நடப்புக்கள். முதுமை என்பது வரமா? சாபமா?///
இந்த கேள்வி இந்த புலம் பெயர் நடுகளில் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. முதியோரை சுமையாக நினைப்பது இன்றைய தலைமுறையில் அதிகமாகிவிட்டது. ஆனால் அப்படி நினப்பவர்களுக்கும் முதுமை வரும் என்பது ஏன் அவர்கள் நினைவில் வருவது இல்லையோ தெரியவில்லை... வழமை போல வாழ்வின் சாஸ்வதங்கள் பற்றிய உங்களின் முத்திரை தெரிகிறது.
/// மேலே நான் சொன்ன இரண்டு சம்பவங்களும் எனது ஒன்பதாம் வகுப்பு ( ஆண்டு 10 ) தமிழ்ப்பாடப்புத்தகத்தில்முன்னர் படித்தது////
நீங்கள் சொன்ன அதே இலக்கிய பாட புத்தகத்ஹ்டிஅ தான் நானும் படித்து வந்தேன். அந்த புத்தகத்தில் கம்பராமாயண காட்சிகள் என்று பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் கட்டுரைகள் சில வரும். அவை புத்தகமாக் இப்பொது அச்சில் உள்ளனவா.... எங்கே எடுக்கலாம்
//வி. ஜெ. சந்திரன் said...
நமது சமூகத்தின் பிய்த்தெறியப்பட்ட குடும்ப அவலம் எப்படியானது என்பதை சொல்லியுள்ளீர்கள் :( //
வணக்கம் வி.ஜே
அதைத்தான் பயத்தோடு எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.
மலையாளப்படங்களைக் கனடாவில் எடுக்கமுடியாது போல? இருந்தால் தேடிஎடுத்துப் பாருங்கள். நுட்பமான உணர்வுகளைத் திரையில் தரிசனம் செய்யலாம்.
பிரபா,
இதுவரை நீங்க எழுதனதுலேயே என் மனசை
ரொம்பவே தொட்ட பதிவுன்னு இதைத்தான் சொல்லணும்.
மத்த பதிவுகளை சூப்பர்ன்னு சொன்னா இது அதி சூப்பர்.
அருமையான விமரிசனம். முதுமை நெருங்கிவரும் ஒவ்வொருவருக்கும்
மனசில் ஒவ்வொரு பயம் இருக்கத்தான் செய்யுது.
கே.பி.ஏ.சி. லலிதாவின் நடிப்பு ரொம்ப யதார்த்தம். தோழிக்கு கொஞ்சம்
பலகாரங்களை ஒளிச்சுக் கொண்டுவந்து தருவதும், தோழி ( ஷீலா) கணவன்
கல்லறையில் போய் வீட்டுக்காரியங்களை சொல்றதும் மனசை தொட்டுருச்சு.
//அருண்மொழி said...
இந்த கேள்வி இந்த புலம் பெயர் நாடுகளில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.//
போர் நிகழ்த்திய மறைமுக அவலங்களில் ஒன்று இந்தப் பலவந்த இடநகர்வு. தங்கள் கருத்துக்கு நன்றிகள் அருண்மொழி.
நாம் படித்த பாடப்புத்தகங்களை நினைவில் வைத்துக்கொண்டே எழுதினேன். இப்போது தாயகத்தில் அவை கிடைக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால் போன வருஷம் ஊருக்குப் போனபோது புதிய பாடத்திட்டத்தில் புத்தகங்கள் இருந்த்தைக் காணக்கூடியதாக இருந்தது.
//மலையாளப்படங்களைக் கனடாவில் எடுக்கமுடியாது போல? இருந்தால் தேடிஎடுத்துப் பாருங்கள். நுட்பமான உணர்வுகளைத் திரையில் தரிசனம் செய்யலாம்.//
அதெண்டால் உண்மைதான்.
பிரபா!
படம் பார்க்கக் கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் இந்த முதுமை கிடைக்கும்; தவிர்க்கமுடியுமா?
அதுவும் நம்மவர் முதுமை தான் ; வேதனை மிக்கதாய் போய்விட்டது.
உங்கள் வீட்டு ஆட்டுக்குட்டிப்படம் எனக்கு என் இளமை ஆடு வளர்த்தது. 25 வருசமானாலும் அந்த
ஆடு;மாடு கண்ணுள் நிழலாடுகிறது.
காலையென்ன?; மாலையேன்ன? அவை நம் வாழ்வுடன் ஒன்றியவை!!
உங்கள் பதிவுகளில் ஒரு மீட்டலுணர்வு எப்போதும் இருக்கும்!!
வணக்கம் பிரபா..நல்லதொரு பதிவுக்கு நன்றி.. என்னண்டு இந்த மொழியை விளங்கி கொள்ளுறியள்
//மலையாளப்படங்களைக் கனடாவில் எடுக்கமுடியாது போல? இருந்தால் தேடிஎடுத்துப் பாருங்கள். நுட்பமான உணர்வுகளைத் திரையில் தரிசனம் செய்யலாம்.//
கனடாவில் எடுக்க முடியாதென்றால் பொய். நான் இருக்கும் இடத்தில் முடியாது.
//துளசி கோபால் said...
பிரபா,
இதுவரை நீங்க எழுதனதுலேயே என் மனசை ரொம்பவே தொட்ட பதிவுன்னு இதைத்தான் சொல்லணும்.//
வணக்கம் துளசிம்மா
படம் பார்த்த அதே திருப்தியைப் பதிவிலும் கொண்டுவர முயற்சித்தேன். உங்கள் கருத்தால் மிக்க திருப்தி அடைகின்றேமன்.
படத்தை நீங்களும் பார்த்திருக்கிறீகள் போல. கே.பி.ஏ.சி.லலிதா இயல்பான நடிப்பில் இன்னொரு உதாரணம்.
//கொழுவி said...
//மலையாளப்படங்களைக் கனடாவில் எடுக்கமுடியாது போல? இருந்தால் தேடிஎடுத்துப் பாருங்கள். நுட்பமான உணர்வுகளைத் திரையில் தரிசனம் செய்யலாம்.//
அதெண்டால் உண்மைதான்.//
விளங்குது விளங்குது ;-)
பிரபா.. எங்கேயிருந்து எடுத்துப் பார்க்கிறீர்கள்? ஐங்கரனா?
முதுமை, கேளாமலே (ஆகூழிருந்தால்) கிடைக்கும்.
//எனக்கு மீண்டும் அப்பாவின் நினைவு வந்தது.//
வீட்டு நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருமாதிரியான அனுபவமாய் இருக்கு. :O\
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
படம் பார்க்கக் கிடைக்குமோ தெரியவில்லை. //
வணக்கம் யோகன் அண்ணா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள். உங்கள் நாட்டிலும் இவற்றை எடுக்கமுடியாது போலும்.
//சின்னக்குட்டி said...
வணக்கம் பிரபா..நல்லதொரு பதிவுக்கு நன்றி.. என்னண்டு இந்த மொழியை விளங்கி கொள்ளுறியள்//
சின்னக்குட்டியர்
படங்களைத் தேடியெடுத்துப் பார்க்க மொழிப்பரிச்சாயம் தானாக வரும். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் -ஹிந்திப்படங்களே ஒடியவை தானே?
//'மழை' ஷ்ரேயா(Shreya) said...
பிரபா.. எங்கேயிருந்து எடுத்துப் பார்க்கிறீர்கள்? ஐங்கரனா?
முதுமை, கேளாமலே (ஆயுளிருந்தால்) கிடைக்கும். //
வணக்கம் ஷ்ரேயா
ராகம் மியுசிக் இலை தான் வழக்கமாக எடுத்துப் பார்ப்பேன்.
நல்ல படங்கள் பழைய நினைப்பையும் கிளறிவிடும்.
நீங்கள் சொன்ன நகைச்சுவைகளிரண்டும் " சிரிக்கத்தெரிந்த பாரசீகர்" என்ற அத்தியாயத்திலதானே வந்தது. எனக்குப் பிடிச்சு ரூபினி மிஸ் படிப்பிச்ச பாடமது நிறைய மறந்திட்டன் ஆனால் அவா மட்டும் ஞாபகத்தில நிக்கிறா.அம்மாக்கு அடுத்து என்னை பிரமிக்க வைச்ச ஆசிரியர்.ஞாபகப்படுத்தின பிரபாண்ணாக்கு நன்றி.
இந்த முதுமை பற்றிய பயம் பற்றி நானும் எழுத வேணும் என்று நினைத்திருந்தேன்.
அண்மையில் என் நண்பி சொல்லிக் கவலைப்பட்ட விசயம் அம்மா அப்பாக்கு வயசு போகுதென்பது.எங்களுக்கே தெரியும் அவைக்கு வயசு போகத்தானே வேணும் என்று ஆனால் அதை ஒப்புக்கொள்ளக் கஸ்டமா இருக்கு. ஏழெட்டு வருடங்களுக்கு முதல் இருந்தது போல இப்ப அம்மா அப்பா இல்லை.உடம்பும் மனசும் அடிக்கடி களைச்சுப் போறதால அவைக்கு எங்களோட முன்பு இருந்தது போல அன்பாய் இருக்க முடியேல்லயோ என்றொரு நெருடல். அது தவிர அக்கா அண்ணான்ர பிள்ளைகளோடயே அம்மா அப்பா அதிக நேரம் செலவழிக்கிறதால என்னவே அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ எங்களை விட்டு விலகி நிக்கிறமாதிரி ஒரு எண்ணம்.
என்னையும் தங்கையையும் போலவே என் நண்பிக்கும் அவளுடைய தங்கைக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒன்பது வயது வித்தியாசம்.அப்ப எங்களுக்கே அம்மா அப்பாட்ட இருந்து அந்தந்த வயசில கிடைக்கவேண்டிய ஏதொவொரு பிணைப்பு இல்லாமப்போற மாதிரியொரு உணர்வு இருந்தா எங்களுடைய தங்கைகளுக்கு அந்த உணர்வு இன்னும் அதிகமான ஏக்கத்தைத்தருமென்பது கவலையானது.இதில கொஞ்சம் பொறாமைப் பட வேண்டிய விசயம் என்னெண்டால் அக்கா அண்ணாமார் குடுத்து வைச்சவை.அவை எங்கட வயசில இருக்கும்போது அம்மா அப்பாவை இப்ப இருக்கிறதை விட ஏதோவொரு விதத்தில சந்தோசமா இளமையா வருத்தங்களில்லாம இருந்ததால அவையை நல்லா கவனிச்சிருக்கினம்.
வணக்கம் சினேகிதி
"சிரிக்கத் தெரிந்த பாரசீகர்" உள்ள பாடப்புத்தகம் நீங்களும் படித்திருக்கிறீகள் போல. அப்போது இருந்த பாடவிடயங்கள் பல இன்னமும் என் நினைப்பில்.
உங்கள் பின்னுட்டலில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்களே என்று நினைத்தபோது உங்கள் பதிவையும் வாசிக்கக்கூடியதாக இருந்தது. மிக்க நன்றிகள்.
தரமான பதிவுகளில் குறிப்பிடத்தகுந்தது.
படத்தை விமரிசனம் செய்ததால் மட்டும் அல்ல அது வாழ்வில் ஏற்படுத்திய சலனங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு.
//அந்த ஆட்டுக்கு லட்சுமி என்ற பெயராம்//
அருமையான பெயர் .
குட்டிக்கு என்ன பெயர் என்றும் தெரிவிக்கவும்.
-------------------
//ஒவ்வொன்றும் வித்தியாசமானதோ அல்லது எளிமையானதாகவோ இருக்கும்//
உண்மை .. பல எழுத்தாளக் கதாசிரியர்கள் இருந்ததால் இப்படி நடந்ததா தெரியவில்லை.வசணங்களிலும் காட்சி அமைப்பிலும் கூட இந்த எளிமையக் காணலாம்.
வணக்கம் கார்திக்
வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள். லட்சுமியின் குட்டியின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் ;-)
good post ,sooper review
வணக்கம் கார்த்திக்பிரபு
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
vanakkam pirabanna,
nankal than antha silabusa padichcha kadaaci butch. athatku piraku new silabas. gapaka paduththija pirabannaavukku nanrikal.
"எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்."
entha vatila evvalavu thaththuvam etukku. ennotu palamoli anakku japakam vanthuthu. "KAAVOOLAI VILA KUTUTHTHOLAI SITIKKIRA MATHITI.." anru solluvinam.unkada appa patti solli anakku anta appa pattija ninaiva konanthiddijal. ok no problam.
//Krishna said
வணக்கம் பிரபாண்ணா,,
நாங்கள் தான் அந்த சிலபஸ படிச்ச கடைசி பட்ச். அதற்குப் பிறகு நியூ சிலபஸ். ஞாபக படுத்திய பிரபாண்ணாவுக்கு நன்றிகள்.
"எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்."
என்ற வார்த்தையில எவ்வளவு தத்துவம் இருக்கு. என்னொரு பழமொழி எனக்கு ஞாபகம் வந்துது. "காவோலை விழக்குருத்தோலை சிரிக்கிற மாதிரி.." என்று சொல்லுவினம்.உங்கட அப்பா பற்றி சொல்லி எனக்கு என்ர அப்பா பட்டிய நினைவை கொண்டந்திட்டியள்.//
வணக்கம் கிருஷ்ணா
நீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் கண்டது மிக்க மகிழ்ச்சி. எப்போதும் சுற்றிச் சுற்றி வருவது நம் ஊர் நினைப்புத் தானே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
அப்பா அங்கே பிள்ளைகள் இங்கே. :-(( கஸ்டமாயிருக்கிறது. நான் எல்லாம் ரொம்ப குடுத்து வைத்தவன்(அப்பா அம்மாவோடு இருக்கிறேன்) என்பதை சுட்டிக்காட்டியிருப்பதாகவே நினைக்கிறேன். நன்றி பிரபா அண்ணா.
வணக்கம் தர்ஷன்
குடுத்துவச்சனீங்கள். இயன்றவரை அவர்கள் மனங்கோணாது நடக்கவும். நாம் பெற்றோராகும் நிலை வரும் போது தான் அவர்கள் படும் கஷ்டம் புரியும்.
"நாம் பெற்றோராகும் நிலை வரும் போது தான் அவர்கள் படும் கஷ்டம் புரியும்" appa neenkal ennum pettor aakalajo.....
ஆஹா, விடமாட்டீங்களே, இப்பதானே எனக்கு 18 வயசாகுது ;-)
"இப்பதானே எனக்கு 18 வயசாகுது"
poi sollakkudathu..prabbannna,
naan sonnan thane "antha silabusa padichcha kadaisi butch nankal anru." anakke eppathan 18. anakku muthal padichcha unkalukkum 18 etukkuma? padikkira kaalaththila double promotuionila vanthinkalo? etukkalam. neenkal keddikkatan thane....
இப்பதானே எனக்கு 18 வயசாகுது ;-)
அப்பிடியோ அண்ணை.. அப்ப என்னை விட 4 வயசு மூத்தவரோ நீங்கள்..?
கிருஷ்ணா, சயந்தன்
நல்லா கும்மியடிய்ங்கோ ;-)
பிரபா
முதுமைக்கு ஏற்படும் கஷ்டங்களை பார்க்கும்போது எதிகால பயம் நமக்கு மேலோங்குகிறது.
நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.
பிரபா இந்த பதிவை பார்த்து விட்டு
உடனே படத்தையும் பார்த்துவிட்டு
பதிவிடுகிறேன் மிக நல்ல படம்
மிக அதிகமான குனச்சித்திர நடிகர்கள்
இந்தபடத்தில்.
மோகன்லாலின் NARAN (மனிதன்)என்றொருபடம் பார்த்தீரா.
தொடார்ந்து நல்ல படங்கள் இருப்பின்
அறியத்தாருங்கள்.
//செல்லி said...
பிரபா
முதுமைக்கு ஏற்படும் கஷ்டங்களை பார்க்கும்போது எதிகால பயம் நமக்கு மேலோங்குகிறது.//
வணக்கம் செல்லி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
//சதானந்தன் said...
பிரபா இந்த பதிவை பார்த்து விட்டு
உடனே படத்தையும் பார்த்துவிட்டு
பதிவிடுகிறேன் மிக நல்ல படம்//
வணக்கம் சதானந்தன்
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. என் பதிவில் மலையாளப் படங்களின் கதைக்கருவைக் கோடிட்டுக் காட்டுவதே உங்களைப் போன்ற அன்பர்கள் பின்னர் அவற்றைப் பார்க்கும் போது இலகுவாகக் கதையோட்டத்தோடு போகலாம் என்பதற்காகவே. நரன் இன்னும் பார்க்கவில்லை.
வேலைப்பழு காரணமாக ஏற்கனவே பார்த்த சில படங்கள் இன்னும் பதியப்படாமல் உள்ளன. அவ்வப்போது கட்டாயம் தருகிறேன்.
என் பழைய பதிவுகளில் தந்த நல்ல மலையாளப் படங்கள் இதோ, பார்த்துவிட்டீர்களா என்பதை அறியத் தரவும்
ரச தந்திரம்
http://kanapraba.blogspot.com/2006/07/blog-post_115188773395994139.html
காழ்ச்சா
http://kanapraba.blogspot.com/2006/07/blog-post_115131412458814385.html
வடக்கும் நாதன்
http://kanapraba.blogspot.com/2006/10/blog-post_29.html
காழ்ச்சா படம் மட்டும் கிடைக்கவில்லை
இங்கு மற்றைய படங்கள் அனைத்தும்
உங்கள் பதிவு பார்த்துவிட்டே பார்த்தேன். mayookham என்றொரு
மலையாள படமும் வந்திருக்கிறது நல்ல
படம்.
இன்னும் சில நல்ல படங்கள்
தன்மத்ரா
வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள்
களிவீடு
களி ஊஞ்சல்
பாடம் ஒன்னு விலாபம்
என்டே வீடு அப்புவின்டேயும் (தமிழில் கண்ணாடிப் பூக்களாக வந்தது)
பரதம்
யாத்ரா
மதிலுகள்
சொல்லிக்கொண்டே போகலாம்.
வணக்கம் பிரபா...
அருமையான விமர்சனம்...அப்படியே படத்தை பார்த்த உணர்வு. நானும் இந்த படத்தை பார்த்தேன்...இந்த பதிவிவை படிக்கும் போது என் மனசுக்குள் நான் சொல்ல வேண்டும் என்று நினைத்த அனைத்தையும் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.
\\இளையராஜா - இயக்குனர் சத்தியன் அந்திக்காடு கூட்டணி.\
சூப்பர் கூட்டணி...இவர்கள் கூட்டணியில் வந்த அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன். மீண்டும் இவர்கள் கூட்டணி சேர்ந்து படத்தை ஆரம்பித்து விட்டார்கள். திலீபன்தான் நாயகன்.
\\"அச்சுவின்ட அம்மா"\\
இந்த படத்தை பார்த்திர்களா?? இந்த படத்துக்கும் ராஜாவுக்கு விருது.
கோபிநாத் has left a new comment on your post "மனசினக்கரே - முதுமையின் பயணம்":
\\இன்னும் சில நல்ல படங்கள்
தன்மத்ரா
வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள்
களிவீடு
களி ஊஞ்சல்
பாடம் ஒன்னு விலாபம்
என்டே வீடு அப்புவின்டேயும் (தமிழில் கண்ணாடிப் பூக்களாக வந்தது)
பரதம்
யாத்ரா
மதிலுகள்
சொல்லிக்கொண்டே போகலாம்.\\
அச்சன் உறங்காத்த வீடு
(சரியாக தெரியவில்லை) அருமையான படம்.
classmates - இது ஒரு பாடல் வரும் என்டா கல்பிலன்னு அருமையான பாடல்....
ஐய்யா...எனக்கும் மலையாள பாடங்களை பற்றி சொல்லுவதற்கு எனக்கு ஒரு நண்பர் கிடைத்தில் மகிழ்ச்சி.......நன்றி பிரபா
வாங்க கோபி
மாலுவுட்டை ஒரு கை பார்ப்போம் ;-)
உங்களின் இரண்டாவது பின்னூட்டத்தைத் தவறுதலாக அழித்துவிட்டேன். மீள் பதித்திருக்கிறேன் இப்போது.
அச்சன் உறங்காத வீடு புதுசு.
அச்சுவின்டே அம்மா பார்த்தேன், ரசித்தேன். ராஜா அப்படத்தை விட அதிகமா ரசதந்திரத்தில் கொடுத்திருந்தார் இல்லையா? திலீப் சத்யன் அந்திக்காடுவின் கூட்டணியில் வினோத யாத்ராவை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.
பாட்டுகளுக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பார்க்கவேண்டிய சில படங்கள்:
மீச மாதவன்
சம்மர் இன் பெத்லகம் ( தமிழில் லேசா லேசா)
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா
ஸ்வப்னக்கூடு
தொடரும் ;-)
உங்களோடு இந்த ரசனையை பங்கு போடுவது மகிழ்ச்சியைத் தருகின்றது
இதென்ன.. இந்தப் பக்கம் ஒரே மலையாள வாசனை அடிக்குது. தமிழ்மண விதிகளின் படி தமிழ் தவிர்ந்த மற்றப் பதிவகளை திரட்ட முடியாது எண்டு தெரியும் தானே.. அதனாலை இதோடை இந்தப் பதிவை திரட்டியில இருந்து நீக்குறன். சரி போனால் போகட்டும். நான் எழுதின பின்னூட்டம் மட்டும் காட்டப்படும்.
40 வது பின்னூட்டத்தை பெருமையுடன் வழங்குவது
மாஸ்டர்
எந்த மொழி சார்ந்த விஷயம் என்றாலும் தமிழில் எழுதினால் தமிழ்மணம் எடுக்கும் என்று நேற்றுப் பிறந்த வேலன் சின்னத்திரை சீரியலில் நடிக்கும் குழந்தைக்கே தெரியுமே ;-)
40 போட்டு தடா போடுவதில் உங்களுக்கு ஒரு சுகம், ம் நடத்துங்கோ
"கிருஷ்ணா, சயந்தன்
நல்லா கும்மியடிய்ங்கோ" ijo annai...kudumpaththukkak kulappaththa undu panathenko... pavam... eppathan sajanthan kaljaanam kaddinavar... pavam enna....
அப்பிடியோ அண்ணை.. அப்ப என்னை விட 4 வயசு மூத்தவரோ நீங்கள்..?
Neethipathy:. order...order....order....18 vajathavathatkul 14 vajathithile sadda vitothamana muraijil thetumanam mudiththa sajanthanai kutta vaalik kuundil niruththunkal...
sajanthan (otu thatam..)
sajanthan (2 thatam)
sajanthan (3 thatam)...
பிரபா,
கோபிநாத் கொடுத்த லின்க் பிடித்து வந்தேன்.
படம் நன்றாகத்தான் இருக்கும்.
அதைவிட உங்கள் கருத்துக்கள் இன்னுமாழமாய்ப் பதிகின்றன.
உலகம் வெளியில் தான் இருக்கிறது. பணமும் அங்கேதான் கிடைக்கிறது சிலருக்கு.
பெற்றோர்கள் உலகம் சுற்றலாம். இல்லாவிட்டால் உங்கள் பெற்றோர் போலத் தாய்நாட்டில் இருந்துவிட வேண்டும்.பாசம்.எதுவும் செய்யும்.
நாண்றி ஒரு நல்ல பதிவுக்கு. உங்கள் பெற்றோர் நன்றாக இருக்க வேண்டும்.
வணக்கம் வல்லிசிம்ஹன்
உங்களைப் போன்ற அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் இப்பதிவை வாசித்துக் கருத்தளிப்பதைப் பெருமையான விடயமாக நான் நினைக்கின்றேன். மிக்க நன்றி
அழகான ஆழமான விமர்சனம் தலை...
பட நிகழ்வுகளோடொப்பிய நிஜவாழ்வையும் காட்டியது சிறப்பு..
படம் எனக்கும் பிடித்திருந்தது.
அந்தத் தரகரா வர்றாவர் பத்திச் சொல்லுங்க கானா.. சத்யனோட எல்லாப் படத்துலயும் கலக்குறாரு..
இன்னொசண்ட்டும், ஜெய்ராமும் போடும் ஆட்டமும், பாட்டும் ஆடவைத்தது.
எனக்கு மலையாளம் படிக்கத்தெரியாது. ஆனால் டைட்டிலில் ‘ஸங்கீதம்-இளையராஜா’ எனப் போட்டிருப்பது மட்டும் தெரியும்.அது போதுமென நினைத்துப் படம் பார்க்க ஆரம்பித்து விடுவேன்.
வாங்க தல
அந்த்த் தரகரா வர்ரவர் தானே மம்முகோயா, அருமையான ஒரு கலைஞர் இல்லையா.
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.
Post a Comment