கடந்த ஆகஸ்ட் 13, 2006 ஆனந்த விகடனை நோட்டமிட்டபோது கண்ணில் பட்டது வாரியார் சுவாமிகளுக்கு வயது 100 என்ற அருமையான கட்டுரை. 25 - 08 - 1906 இல் வேலுரில் அவதரித்த கிருபானந்த வாரியார் சுவாமிகள், தன் ஆன்மீகப் பணிகள் மூலம் 64 ஆவது சிவத்தொண்ட நாயனார் என்கிற அந்தஸ்தைப் பெற்றார். உங்களின் வாழ்வின் முடிவு எப்படியிருக்கும் என்று ஒருவர் கேட்டதற்கு , " என் அப்பன் முருகன் எனக்கு மயிலை அனுப்பி , ஒரு கஷ்டமும் நேராமல் அப்படியே என்னை அழைத்துக் கொள்வான்” என்றார் வாரியார். லண்டனின் ஆன்மீகத் சொற்பொழிவாற்றிவிட்டுத் தாயகம் திரும்பி வந்துகொண்டு இருந்தபோது வாரியாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, விமானத்தில் பறந்துகொண்டு இருந்தபோதே, 7.11.1993 அன்று அதிகாலை உயிர் பிரிந்து, முருகன் அனுப்பிய மயிலில் முருகனடி போய்ச் சேர்ந்தது .
80 களின் ஆரம்பப்பகுதியில் தனது ஆன்மீகச் சொற்பொழிவுப் பயணததினை நடாத்த யாழ்ப்பாணம் வந்த வாரியார் சுவாமிகள், எங்களுர் செல்வந்தரும் எனக்குப் பாட்டனார் முறையான உறவினர் வீட்டுக்கு வாரியார் சுவாமிகள் வந்த நிகழ்வும், பேச்சின் நடுவே தானே இரசித்துத் தன் தொந்தி வயிறும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த காட்சியும் என் சிறுவயது ஞாபகத்தில் கறுப்பு வெள்ளைப் படமாக நிரந்தரமாக ஒட்டிக்கொண்டு விட்டது. பின்னாளில் நான் வாரியாரின் சொற்பொழிவு ஒலிப்பேழைகளைக் கேட்கும் காலம் தோறும் அந்தத் தெளிந்த நீரோடை போன்ற வாரியாரின் பேச்சில் வசீகரிக்கப்பட்டேன்.
சேக்கிழார் சுவாமிகள் தன் திருத்தொண்டர் புராணத்தில் 63 மூன்று நாயன்மாரின் ஆன்மீகப் புகழ் வரலாற்றைச் சொல்லிப் போனபோது ஒரு கட்டத்தின் "அடியார்க்கும் அடியேன்" என்று குறிப்பிடுவது போல் நாம் வாழும் காலத்தில் , கடந்த நூற்றாண்டின் மாமணிகளில் ஒருவராக இவ்வையகம் வந்து,பாமரமக்களிற்கும் ஆன்மீக அறிவை வளர்த்த அந்தப் பெருந்தகைக்கு "இராமர் அணைக்கு அணில் போட்ட மணல்" போல நேற்றைய செப்டம்பர் 09, 2006 எமது இன்பத்தமிழ் வானொலியில் நான் படைக்கும் கருத்துக்களம் என்ற நிகழ்ச்சின் முதற்பாதியை வாரியார் சுவாமிகள் பற்றிய நினைவுப் பதிவாகவும், ஈழத்துக்குச் சுவாமிகள் வந்தபோது அவரைத் தரிசித்து சொற்பொழிவுகளைக் கேட்ட அன்பர்களின் நினைவு மீட்டலாகவும் என் பங்கிற்குப் படைத்திருந்தேன்.
சீரணி நாகம்மாள், வல்வை அம்மன், உசன் கந்தசுவாமி கோவில், மஞ்சவனப்பதி முருகன் என்று பல ஈழஸ்தலங்களின் வாரியார் சுவாமிகளின் பாதம்பட்டது குறித்தும், அவுஸ்திரேலிய மெல்பன் தமிழ்ச்சங்கம் இவருக்கு முத்திரை வெளியிட்டுச்சிறப்பித்தது குறித்தும் அன்பர்கள் பேசுகின்றார்கள். அதன் ஒலிவடிவத்தை இங்கு தருகின்றேன்.
ஒலிப்பதிவைக் கேட்கக் கீழ்ச்சுட்டிகளை அழுத்தவும்.
முன்னை நாள் அகில இலங்கைக் கம்பன் கழகத் தலைவரும், தற்போது சிட்னி வாழ் தமிழ் அறிஞருமான
திரு. திருநந்தகுமாரின் வாரியார் சிறப்புப் பகிர்வு.
கேட்க
எமது வானொலியின் பெருமைக்குரிய நேயர்களின் வாரியார் சுவாமிகள் குறித்த அனுபவப் பகிர்வு.
கேட்க
கடந்த ஏப்ரல் 2006 நான் தாயகம் சென்றபோது செய்த உருப்படியான வேலைகளில் ஒன்று, எங்கள் வீட்டில் இருந்த பழைய புகைப்பட ஆல்பத்தைப் பத்திரமாக நான் நான் வாழும் நாட்டுக்குக் கொண்டு வந்தது. அதில் எம் ஊருக்கு வந்த சில பிரபலங்கள் எமது பாட்டனார் வீட்டுக்கு வந்த போது எடுத்த படங்களும் அடக்கம். அந்த வகையில் வாரியார் சுவாமிகள் ஈழம் வந்த போது எடுத்த படத்தையும் சிறப்பாக இங்கு தந்திருக்கின்றேன்.
அன்புடன்
கானா.பிரபா
29 comments:
பிரபா, நேற்று நீங்கள் நடத்திய அந்த நிகழ்ச்சியை நானும் செவிமடுத்தேன். வாரியாருக்கு சிறந்த ஒரு அஞ்சலி நிகழ்ச்சியாக அமைந்தது. அதனை நிகழ்த்திய உங்களுக்கு எனது தனிப்பட்ட பாராட்டுக்கள். வாரியார் பற்றிய எனது நினைவுகளை பின்னர் பின்னூட்டத்தில் தருகிறேன்.
உங்கள் சுட்டிகள் வேலை செய்ய மறுப்பது போற் தெரிகிறது. பாருங்கள்.
வருகைக்கு நன்றி அண்ணா
ஒலிப்பதிவு இணைக்கப்பட்ட தளத்தின் Bandwidth அதிகரித்ததன் கோளாறு இது, இப்போது சரிசெய்துவிட்டேன்.
வாரியார் பற்றிய உங்களின் அனுபவப் பகிர்விற்காகக் காத்திருக்கின்றேன்.
prabaa....
நல்ல பதிவு....
இதே திருநந்தகுமார் எமக்கு ஆரம்பத்தில் சைவசமயமும் பின்னர் ஆங்கில இலக்கியமும் படிப்பித்துள்ளார். சற்று கண்டிப்பானவர். யாழ் இந்துவில் திரு புண்ணியலிங்கம், திரு பஞ்சாட்சரம், திரு குணாசிங்கம் போன்றவர்கள் அடிக்கடி வாரியார் ஸ்வாமிகள் பற்றி நினைவுகூர்வதுண்டு. எல்லாருமே சற்று மந்தமாக இருந்த வேளையில் அவரையும் அவர் நினைவுகளையும் மீட்டியமைக்கு நன்றி
கானா பிரபா,
நல்ல மீள்நினைவுப் பதிவு. எங்களின் குடும்பத்திற்கும்[எனது பேரனார், பெரியப்பா] வாரியார் சுவாமிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நான் சின்னப் பெடியனாக இருந்த நேரத்தில் எமது ஊர் ஆலயத்திற்கு வந்த போது எமது பெரியப்பா வீட்டிற்கும் வந்திருந்தார். வாரியார் சுவாமிகள் சைவப்பழம் மட்டுமல்ல ஒரு சிறந்த தமிழறிஞரும் கூட. அவரின் குரலில் ஒரு தெய்வீக சக்தி இருப்பது போல இருக்கும் அவரின் உரையைக் கேட்கும் போது.
//யாழ்ப்பாணம் வந்த வாரியார் சுவாமிகள், எங்களுர் செல்வந்தரும் எனக்குப் பாட்டனார் முறையான உறவினர் வீட்டுக்கு வாரியார் சுவாமிகள் வந்த //
மில்க்வைற் சோப் அதிபரா.... அண்ணா பற்பொடி அதிபரா உங்கள் உறவினர்...சும்மா பகிடிக்கு கேட்டன்...கண்டுக்காதையுங்க கானபிரபா...
//சீரணி நாகம்மாள், வல்வை அம்மன், உசன் கந்தசுவாமி கோவில், மஞ்சவனப்பதி முருகன்//
இது எனது தனிப்பட்ட கருத்து.... பிழைக்க தெரிந்த பிரசங்கி ..வாரியார்.அவர்கள்....தேவர் எடுத்த தெய்வம் படத்தில் இவர் தான் ஆறுபடை வீடு பற்றியும் அதன் கதைகளையும் சொல்றார்......
......
வல்வெட்டித்துறைக்கு திருவிழா மூட்டம் வந்த வாரியாரை நானும்.பார்த்திருக்கிறேன்
வணக்கம் அருண்மொழி
திருநந்தகுமார் அவர்கள் சிட்னி அவுஸ்திரேலியாவிலும், புண்ணியலிங்கம் மாஸ்டர் தாவடியிலும் (கடந்த ஆண்டு சந்தித்தேன்), இருக்கின்றார்கள்.பஞ்சாட்சரம் ஆசிரியர் கனடா வந்ததாகக் கேள்வி.
தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.
பிரபா!
வாரியார்;மஞ்சவனப்பதி,இணுவில் கந்தசாமி கோவில்களில் பிரசங்கம் செய்தபோது;பக்கத்தில் இருந்து பார்த்துக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் தமிழ்ப்புலமைக்குத் தலை வனங்குகிறேன்.எனக்குச் சங்கீதம் நன்கு பிடிக்கும்; அதனால் இவர் பிரசங்கங்களை வெள்ளி தோறும் அப்போ வானொலியில் கேட்பேன்.சென்னை இசைவிழாவில் இறுதியாக "கதாகாலசேபம்" அந்த நாளின் வாரியார் தான் ,நடத்துவார்.அவருக்குப்பின் எவருமே! அந்தக் கலையைச் செவ்வனே செய்யவில்யென்பது;என் தாழ்மையான கருத்து.
என்னைப் பொறுத்தமட்டில் வாரியார்; அருணகிரிநாதரின் மறுபிறவி! காரணம் திருப்புகழை;அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தாய்வதுடன்; தேவையான போது, தேவையான பொருத்தமான அடிகளை எந்தப் புகழிலும் இருந்து கையாள்வது;ஆக்கியோனால் மட்டுமே ஆனவேலை!
தள்ளாத வயதிலும் தமிழுக்கவர் ஆற்றிய பணி அளப்பரியது.அவரை 90 களில் மிகத் தள்ளாத வயதில் நடைவண்டியுடன் பாரிஸ் வந்து பிரசங்கம் செய்த போது கடைசியாகப் பார்த்தேன்.அவர் சரீரம் தளர்ந்திருந்ததே! தவிர சாரீரம் அதே கணீர் என ரீங்காரமிட்டது.அதே நகைச்சுவை; குலுங்கிச் சிரித்தலேன ;தன் வருத்தத்தைப் பாராது மகிழ்வித்தவர்.
அவர் ஒப்பாரும்;மிக்காருமற்ற புகழுக்குரியவர்.சந்தேகமில்லை.
சின்னக்குட்டி அண்ணருக்கு!
"பிழைக்கத் தெரிந்த பிரசங்கி"- இன்றைய உலகின் பணம்;என்பது எல்லோருக்குமே! தேவையாகிவிட்டது. சன்யாசிகலுக்குக் கூட! ;பண்டமாற்று போய் பல நூற்றாண்டாகிவிட்டது.பெரியாரை பெரிதும் மதிக்கும் நான் ;"பிழைக்கத் தெரிந்த பெரியார்" எனக் கூற பல கேள்விப்பட்ட கதைகளைக் கூற முடியும். இன்று ஒளிவட்டத்துடன் வாழ்பவர்கள்;வாழ்ந்தவர்கள் அனைவரையும்; பிழைக்கத் தெரிந்தவர் எனப் போட பல விடயம் இருக்கும். எனவே! வாரியாரின் தமிழ்புலமையை; இளையதலைமுறை போற்றத்தவறுவது. வாரியாருக்கு இழுக்கல்ல!
யோகன் பாரிஸ்
அருந்தமிழ்க்கடல் வாரியார் அவர்களின் எளிமையும் அருளும் நிரம்பிய சொற்பொழிவுகள் நன்மை மட்டுமே பயந்தன. பயக்கின்றன. பயக்கும்.
மூச்சு விடுவது என்பது முருகன் பெயரைச் சொல்வது என்று வாழ்ந்த பெருமகனார் அவர். தனக்கென்று எதுவும் அவர் செய்து கொள்ளவில்லை. பல திருக்கோயில்களுக்குத் திருப்பணியும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும் செய்து, மக்களை நல்வழிப் படுத்துவதிலேயே குறியாக இருந்தத் திருமகனார்.
அவர் ஈழத்திற்கு வந்திருந்தது சாலப் பொருந்தும். அவரைக் கொண்டாடாத தமிழர் யார்!
அவருடைய சொற்பொழிவுகளை கேட்டு விட்டு மீண்டும் பின்னூட்டம் இடுகிறேன்.
//வெற்றி said...
வாரியார் சுவாமிகள் சைவப்பழம் மட்டுமல்ல ஒரு சிறந்த தமிழறிஞரும் கூட. //
வணக்கம் வெற்றி
சரியாகச் சொன்னீர்கள், வாரியார் சுவாமிகள் வெறுமனே ஆன்மீக விடயங்கள் மட்டுமன்றி தமிழ்மொழியின் சிறப்புக்குறித்த பிரசங்கங்களையும் வழங்கியிருக்கிறார். வருகைக்கு என் நன்றிகள்
வணக்கம் சின்னக்குட்டி
நீங்கள் சொன்ன இரண்டுபேருமே கிடையாது:-)
வாரியார் தமிழும், இந்துமதமும் பிழைக்கவந்த மாமணிகளில் ஒருவர்.
வாரியாரின் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அமைந்த உங்கள் பதிவு கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையாக அமைந்தது. காதிற்கு வீட்டிற்குப் போய்தான் கேட்கவேண்டும்.
வணக்கம் யோகன் அண்ணா
எனக்கு நினைவு தெரிந்த நாளில் அவரின் பிரசங்கத்தை நேரே கேட்கமுடியாதது என் துர்பாக்கியம். எங்களூருகெல்லாம் வந்து வாரியாரின் பிரசங்கத்தை நீங்கள் கேட்டதை அறிந்து மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.
வாரியார் பற்றிய ஒரு முக்கிய தகவல், அவர் இறக்கும் போது, அவரது சொத்து மதிப்பு ' 0' எனப் பெருமையாகக் குறிப்பிடப்படுவதுண்டு. அவரை ஒரு சமயப்பிரச்சாரகர் என்பதையும் கடந்து நல்லதொரு தமிழறிஞராகவும் பிடிக்கும். நினைவை நனைவித்தமைக்காக நன்றி பிரபா!
வணக்கம் ராகவன்
வாரியாருக்கெனப் பிரத்தியோகமாக வலைப்பூ அமைத்து நீங்கள் பெருமைப்படுத்தியதும் இந்த நேரத்தில் சிறப்பாக நினைவுகூரவேண்டியது, தங்களின் விரிவான பின்னூட்டத்தை எதிர்பார்க்கின்றேன்.
வணக்கம் ராகவன்
வாரியாருக்கெனப் பிரத்தியோகமாக வலைப்பூ அமைத்து நீங்கள் பெருமைப்படுத்தியதும் இந்த நேரத்தில் சிறப்பாக நினைவுகூரவேண்டியது, தங்களின் விரிவான பின்னூட்டத்தையும் எதிர்பார்க்கின்றேன்.
//மணியன் said...
வாரியாரின் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அமைந்த உங்கள் பதிவு கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையாக அமைந்தது. காதிற்கு வீட்டிற்குப் போய்தான் கேட்கவேண்டும். //
வணக்கம் மணியன்
கேட்டுவிட்டு உங்கள் கருத்தையும் தாருங்கள். தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.
பிரபா மீண்டும் நான். வாரியார் பற்றிய என் நினைவுகள் சில:
வாரியார் அந்தக்காலத்தில் கொழும்பு ஜிந்துப்பிட்டி கோயிலுக்கு வருடம் தவறாமல் வருவார். வந்தால் ஒரு மாதம் தங்கியிருந்து தினமும் மாலையில் பிரசங்கம் செய்வார். இராமாயணம், மகாபாரதம் என்று பல விடயங்களில் அவர் சொற்பொழிவாற்றுவார். சிறு பிள்ளைகளை ஊக்குவிப்பதற்கு சொற்பொழிவின் இடையிடையே சில கேள்விகள் கேட்பார். சரியாகப் பதில் சொல்லும் குழந்தைக்கு சிறிய பரிசளிப்பார். அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்ட பாக்கியவான் நானும் ஒருவன். சிறிய பொன்முலாம் பூசிய முருகன் படம் ஒன்று அவர் கையால் கிடைக்கப் பெற்றேன்.
அவரைப் போல இராமானுஜ ஐயங்கார் என்பவரும் அந்தக்காலத்தில் (!!)தமிழகத்திலிருந்து வந்து பிரசங்கம் செய்வார். ஈழத்திலிருந்து இந்தியா சென்று பிரசிங்கத்தவர்களில் ஆறுமுக நாவலர் பிரபல்யமானவர்.
வணக்கம் மலைநாடான்,
நட்சத்திரவார வேலைப்பழுவிலும் என் வீட்டுப்பக்கம் வந்து கருத்துச் சொன்னமைக்கு என் நன்றிகள்.
வணக்கம் சிறீ அண்ணா
வாரியார் பற்றிய உங்கள் பகிர்விற்கு என் நன்றிகள்.
// கானா பிரபா said...
வணக்கம் ராகவன்
வாரியாருக்கெனப் பிரத்தியோகமாக வலைப்பூ அமைத்து நீங்கள் பெருமைப்படுத்தியதும் இந்த நேரத்தில் சிறப்பாக நினைவுகூரவேண்டியது, தங்களின் விரிவான பின்னூட்டத்தை எதிர்பார்க்கின்றேன். //
பிரபா. அது நானில்லை. கோபி தொடங்கிய வலைத்தளம். அவர்தான் அதைச் சிறப்பாக கொண்டு செல்கிறார். நானும் அதில் ஒரு பங்கு. ஆனால் இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட்டதில்லை. :-(
பிரபா,
நீங்க சொன்ன வாரியாருக்கு வயது 100 கட்டுரய நேத்து தான் விகடன்ல படிச்சேன். அறுபத்து மூனு நாயன்மார்களோட அறுபத்து நாலாவதா வாரியார் அய்யாவ சேக்கரதுல தப்பே கிடையாது. இந்துக்கள் மட்டுமல்லாது நெறய கிறித்துவ, இஸ்லாம் சகோதரர்களும் வாரியார் சாமிகளோட சொற்பொழிவு, கதா கலாட்சேபம் இதயெல்லாம் வானொலில தவறாம கேக்குதத பாத்திருக்கேன். எப்பேர்பட்ட மகான் நம்மோட காலத்துல வாழ்ந்திருக்காருங்கத நெனச்சா பெருமயா இருக்கு... வாரியார் அய்யாவோட அரிய புகைப்படங்களயும், ஒலிப்பதிவயும் அளித்தமைக்கு நன்றி.
வாரியார் அய்யாவோட எல்லா சொற்பொழிவுகளும் இசைத்தட்டுகளில் எங்கயாவது கெடைக்குமா?
பிரபா,
நல்ல பதிவு.
வாரியார் குறித்த செய்திகள்,படங்கள்,ஒலி/ஒளி வடிவிலும் உரை வடிவிலும் வலைப்பதிவு ஊடகத்தில் சேமித்து வருங்கால சந்ததியினருக்கு ஓரிடத்தில் அளிக்கும் முயற்சியே வாரியார் வலைப்பூ.
உங்களின் இந்தப் பதிவினை வாரியார் வலைப்பூவிலும் இடவும், இங்குள்ள புகைப்படம், ஒலிக்கோப்புகளை வாரியார் வலைப்பூவில் பயன்படுத்த அனுமதி தேவை.
உங்களை வாரியார் வலைப்பூவில் பங்கேற்க அழைக்கிறேன்.
வணக்கம் நெல்லைக்கிறுக்கரே
தங்கள் கருத்துக்கு என் நன்றிகள், நெல்லைச் சீமை போய் அங்குள்ள தனித்துவங்களைப் பதிவிட வாழ்த்துகின்றேன். சுகமான பயணம் அமையட்டும்.
வாரியாரின் பெருந்தொகையான ஒலிப்பதிவு நாடாக்கள் வெவ்வேறு சொற்பொழிவுகளாக எம் வானொலிக் கலையகத்தில் உள்ளன. சீடியில் கிடைக்கின்றதா என்று தெரியவில்லை.
கடந்த 2 மாதம் முன் அவள் விகடன் சஞ்சிகையோடு இலவச இணைப்பாக வாரியாரின் சொற்பொழிவு சீடி கொடுத்திருந்தார்கள். எனக்கு அதைப் பெறும் பாக்கியம் கிட்டவில்லை.
வணக்கம் கோபி
தங்களின் பெருமுயற்சியில் என் சிறுபங்களிப்புக் கட்டயம் இருக்கும். தங்கள் அழைப்பை உவப்போடு ஏற்கின்றேன். நீங்கள் தாராளமாக என் பதிவில் இருக்கும் படங்கள், ஒலிப்பதிவுகளைப் பயன்படுத்தலாம்.
பிரபா,
//நீங்கள் தாராளமாக என் பதிவில் இருக்கும் படங்கள், ஒலிப்பதிவுகளைப் பயன்படுத்தலாம்.//
வெட்டி ஒட்டுவதைவிட உங்களுக்கு சுட்டி கொடுப்பதே சரியாக இருக்கும் என்பதால். இந்தப்பதிவின் சுட்டியை ஒரு தனிப்பதிவாய் வாரியார் வலைப்பூவில் சேர்த்துவிட்டேன்.
நன்றி
மிக்க நன்றிகள் கோபி
நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்... திருநந்தகுமார் அவர்கள் என் வகுப்பாசிரியராக இருந்தார். ஆங்கிலம் படிப்பித்தார். அவரையும் அவரின் அடியையும் மறக்கவே முடியாது. ஞாபகங்கள் தாலாட்டுகின்றன.
வருகைக்கு நன்றிகள் செந்தூரன்
வாரியார் ஆடியோ இணைப்பு இல்லையே...சரி செய்யவும்...எனக்கு தேவைப்படுகிறது
வாரியார் ஆடியோ இணைப்பு இல்லையே...சரி செய்யவும்...எனக்கு தேவைப்படுகிறது
Post a Comment