skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Thursday, May 18, 2006

நான் உங்கள் ரசிகன்



முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் என்ர பழைய நினைவுகள் வேற வந்து, மனசை அலைக்கழிச்சுக்கொண்டிருந்தது. மனசக்கட்டுப்படுத்தினால் தானே நித்திரைச் சனியனும் வரும் என்று எனக்கு நானே அலுத்துக்கொண்டேன்.
அண்டைக்கு வந்து போன நினைவுகளையே ஒரு பதிவாகப் போடலாம் எண்டு படுக்கையிலிருந்தே
என் ஞாபகங்களைக் கோர்த்தேன், இப்படி.....

அப்ப நான் அம்புலிமாமா, பாலமித்திராக்களின்ர அரச கதைககளையும், விக்கிரமாதித்தனும் வேதாளமும் படிச்ச காலத்தில, ஒருநாள் அம்மம்மா வீட்டில எடுத்த ஈழநாடு வாரமலரைப்பிரித்து சிறுவர் பக்கத்தைத் தேடும் போது கண்ணில பட்டது ஒரு தொடர்கதை.
"கிடுகு வேலி" எண்ட தலைபோட செங்கை ஆழியான் எழுதின கதை தான் அந்த இதழில இருந்து ஆரம்பிச்சிருந்தது. அந்த நேரத்திற்கு எனக்கு எதைக் கிடைத்தாலும் வாசிக்கவேணும் எண்ட வீறாப்பு இருந்ததால மூச்சுவிடாம முதல் அத்தியாயத்தைப் படிச்சுமுடிச்சன். அட .. இவ்வளவு நாளும் நான் வாசிக்காத ஒரு நடையில போகுதே என்று மனசுக்குள்ள நினைச்சன்.
ஈழநாட்டில வந்த "கிடுகுவேலி" வாரந்தத்தொடர்ப்பக்கத்தைக் கத்தரித்து ஒரு சித்திரக்கொப்பி வாங்கி (பெரிய சைஸ் பேப்பரில இருக்கும்) கோதுமை மாப் பசை போட்டு ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு அத்தியாயமாக ஒட்டிக்கொள்வேன்.

அதோட விட்டனானே?
ஒரு கணக்கு வழக்கில்லாம செங்கை ஆழியானின் கதைகளைத் தேடி எடுத்துப் படிக்க முடிவுசெய்துகொண்டன். அப்ப என்ர வயசுக்கு மீறின கதைக்களனாகவும். எழுத்து நடையாகவும் செங்கை ஆழியானின் படைப்புக்கள் இருந்தாலும் ஏதோ இனம்புரியாத ஈர்ப்பு அவரின்ர எழுத்துக்களில இருந்தது.

முதல்ல இந்த வாசிப்புக்குத் தீனி போட்டது எங்கட கொக்குவில் இந்துக்கல்லூரி நூலகம். எனக்கும் அந்தக் கல்லூரி நூலகத்துக்கும் உள்ள உறவைப்பற்றிப் பேசவேணுமெண்டால் ஒரு தனிப்பதிவே போடலாம். அதை இன்னொரு நாளைக்குச் சொல்லுறன். செங்கைஆழியானின்ர நாவல்கள் இருக்கிற அலுமாரி எதோ நான் குத்தகைகு எடுத்த மாதிரிப் போட்டுது. அவரின்ர நாவல்களின்ர முதல் பக்கத்தில என்னென்ன நாவல்கள் இது வரை வெளிவந்தன என்ற பட்டியல் இருக்கும் அதை அளவுகோலாக வச்சுத் தான் ஒவ்வொரு புத்தகமாகத் தேடித் தேடிப் படித்தேன்.

ஒரு நாள் நூலகத்தின் புத்தகச்சுரங்கத்திலே எனக்குக் கிடத்தது ஒரு பழைய சிறுகதைத்தொகுதி. 1964 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில முதன் முதலில் தமிழ்மூலமான பட்டப்படிப்புக் கல்விக்கு தேர்வான மாணவர்குழு ஒன்று வெளியிட்ட "விண்ணும் மண்ணும்" எண்ட சிறுகதைத்தொகுதி தான் அது. யோகேஸ்வரி, ராஜகோபால் (செம்பியன் செல்வன்), குணராசா (செங்கை ஆழியான்), செ.யோகநாதன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் சிலர் தம் சிறுகதைகளால் நிரப்பியிருந் தார்கள்.பின்னாளில் அதில் எழுதிய அனைவருமே ஈழத்தின் இலக்கிய முன்னோடிகளாகத் தடம்பதிருந்தார்கள். நாவல் மூலம் எனக்கறியப்பட்ட செங்கை ஆழியான் நல்ல சிறுகதைகளையும் எழுதாமல் விடவில்லை என்பதையும் எனக்குக் காட்டிகொடுத்துவிட்டது அந்நூல்.

இப்பொது எனக்கு புதிதாக ஒரு பிரச்சனை.
செங்கையாழியானின் நாவல்களை மட்டுமல்ல சிறுகதைகளையும் விடக்கூடாது எண்டு முடிவெடுத்துப் பள்ளிக்கூட நூலகத்தில இருந்த மல்லிகை போன்ற சஞ்சிகைகள் பக்கம் பாய்ந்தேன்.

நூலகராக இருந்த தனபாலசிங்கம் மாஸ்டர் எனக்குப் பெரிதும் கை கொடுத்தார். அவரிப் பொறுத்தவரை நூலகத்துக்குள்ள பெடியளோட அலம்பிகொண்டிருக்காமல் புத்தகங்களோட பேசிற ஆட்களைக் கண்டால் வலு சந்தோசம். எனக்கிருந்த புத்தகத்தீனிக்கு அவர் தான் சரியான ஆளாக இருந்தார்.
நூலகம் கடந்து என் வகுப்பறைக்கு போகும்போது என்னைக் கண்டால் மனுஷன் விடமாட்டார்.
" பிரபாகர், மல்லிகை புதுசு வந்திருக்கு" என்று நூலக வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சொல்லிப்போட்டு ஏதோ ஒரு பெரிய கடமையை முடிச்ச திருப்தியில் போவார்.

வீரகேசரி பிரசுரங்கள் எண்டு செங்கை ஆழியானின் ஒருசில நாவல்கள் எனக்குக் கல்லூரி நூலகத்தில இருந்து எனக்குக் கிடைத்தன.
இருந்தாலும் அப்போது எனக்கிருந்த இலக்கு இவரின் எல்லாப் புததகங்களையும் படித்து முடிக்க வேணும் எண்டு. எப்படி இது சாத்தியம் என்று நான் நினைத்தபோது ஒருநாள் அதுவும் கைகூடியது இன்னொரு சந்தர்ப்பத்தில்.

அண்ணாகோப்பிக்காறர் வீட்டுப் பெடியளோட தான் என்ர பின்னேர விளையாட்டு. ஒருநாள் இப்பிடி நான் விளையாடி முடிச்சு வரேக்க , அண்ணாகோப்பி நிறுவனத்தில வேலை செஞ்ச மேகநாதன் எண்ட மலையகப் பெடியன் வேலை முடித்துக் களைப்பாறும் தருணத்தில் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். நானும் பழக்க தோஷத்தில (?) என்ன புத்தகம் வாசிக்கிறார் என்று எட்டிப்பார்த்தபோது எனக்கோ " கண்டேன் சீதையை" எண்டு கத்தவேணும் போல ஒரே புழுகம்.
இருக்காதே பின்னை, அவன் வாசித்துகொண்டிருந்தது செங்கை ஆழியானின் " இரவின் முடிவு" எண்ட நாவல்.

"இஞ்சை..இஞ்சை... கெஞ்சிக்கோக்கிறன், நான் ஒருக்கா உதை வாசிச்சிட்டுத் தரட்டோ" என்று யாசித்தேன்.

அவனோ " சேச்சே.. இது இரவல் புத்தகம் , கொடுக்கமுடியாது" என்று முரண்டு பிடித்தான். நானோ விடவில்லை.

என் விக்கிரமாதித்தத் தனத்தைப் பார்த்த அவன் ஒரு படி கீழே வந்து " சரி சரி, புத்தகம் தரலாம்,ஆனால் பகலில நீங்க வாசிச்சிட்டு பின்னேரம் கொடுக்கவேணும்" என்ற நிபந்தனையைப் போட்டான். ஏனெண்டால் பின்னேர வேலை முடிந்து வந்து அவன் அதை வாசிக்க வேணும்.

மூண்டாம் தவணை விடுமுறை காலம் என்பதால் பெடியளோட போய் விளையாடும் நேரத்தின்ல் பகலிலை "இரவின் முடிவு" நாவலை வாசிக்கப் பயன்படுத்திக்கொண்டேன். ஒவ்வொரு நாள் பின்னேரம் கைமாறும் புத்தகம் அடுத்த நாள் மீண்டும் என் கைக்கு வரும்.

என்னுடைய நம்பகத்தன்மையைக் கண்ட அவனும் பிரளயம், ஆச்சி பயணம் போகிறாள், காட்டாறு, யானை, ஓ அந்த அழகிய பழைய உலகம், கங்கைக்கரையோரம் , அக்கினிக்குஞ்சு என்று செங்கை ஆழியானின் நாவல்கள் ஒவ்வொன்றாகத் தந்தான். சில நாட்களில் ஒரே மூச்சாக நான் முழு நாவலையும் படித்து முடித்துக் கொடுக்கும் போது வியப்பாகப் பார்ப்பான் அவன்.
பாவம், இவனுக்கு ஏதாவது நன்றிக்கடன் செய்யவேணும் எண்டு நினைத்து என்னிடமிருந்த ராணி காமிக்ஸ், முத்துகாமிக்ஸ் சித்திரக்கதைப் புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச்சொல்வேன். நான் ஒருபக்கம் செங்கை ஆழியானின் எழுத்தில் மூழ்க மேகநாதனோ ஜேம்ஸ் பொண்ட், ஜானி போன்ற துப்பறியும் சிங்கங்களின் கையில் அகப்பட்டுவிட்டான்.

எதோ ஒரு வெறித்தனமான காரியமாக பூபாலசிங்கம், சிறீலங்கா புத்தகசாலை எண்டு ஒருகாலத்தில் அலைந்து செங்கை ஆழியானின், சிறுகதை, கதை, கட்டுரை எனத்தேடியெடுத்து வாசித்தேன், திரும்பத்திரும்பச் சிலவேளை.
ஒரு கட்டத்தில் அவரின் ஒரு சில கைக்கெட்டாத சில படைப்புக்கள் எனக்குக் கிடைக்காது, அவர் எழுதிய "பூமியின் கதை" உட்பட புவியியல் வரலாற்றுப் படைப்புக்களைப் படித்தேன். வேறெந்த எழுத்தாளனின் படைப்பையும் தொட்டுப்பார்க்க விரும்பாத காலம் அது.


இப்ப நினைச்சுப் பார்த்தாலும் என்ற இந்தச் செய்கை ஒரு வியப்பாக இருந்தாலும், இண்டைக்கும் என்னால நினைச்சுப்பார்க்க வைக்குமளவுக்கு எப்படி அவரின் படைப்பைக்கையாண்டார் எண்டதை அவரின்ர சில கதைக் கருக்கள் மூலமே சொல்லுறன்.

ஆச்சி பயணம் போகிறாள் - யாழ்ப்பாணத்தில் தன் கிராமம் தாண்டாத ஒரு கிழவி கதிர்காமம் நோக்கிப்பயணிக்கிறாள். கிராமியம் கடந்த நகர வாழ்வியலும், புதிய உலகம் அவளுக்கு ஏற்படுத்தும் மன உணர்வுமே ஒரு நகைச்சுவை நாவலாக அமைந்திருக்கின்றது.


யானை - ஈழத்துக்காட்டுப் பகுதியில் வெறிபிடித்த ஒரு யானையிடம் தன் காதலியை இழந்தவன் தன் வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட கதை

ஓ அந்த அழகிய பழைய உலகம் - ஓய்வு பெற்ற ஒரு பொறியிலாளர் நகரவாழ்க்கையை வெறுத்துத் தன் கிராமத்திற்கு வரும் போது நாகரீகம் தன் கிராமத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தின்னும் கதைப்புலன்.

வாடைக்காற்று - நெடுந்தீவின் புவியியற்பின்னணியில் காதலும் மீனவரின் வாழ்வியலும் கலந்த கதை (என் அடுத்த விமர்சனப்பதிவாகத்தருகிறேன்)

கிடுகுவேலி - புலம் பெயர்ந்து வெளிநாட்டுக்குப் போகும் போது நம் கிடுகுவேலிப்பாரம்பரியம் சொந்த நாட்டில் எவ்வாறு சிதைகின்றது என்பதைக்காட்டுகின்றது.

முற்றத்து ஒற்றைப் பனை - சோளகக்காற்றில் காலம் காலமாகப் பட்டம் விட்ட, இன்னும் விட ஆசைப்படுகின்ற ஒரு முதியவரின் மனவியலைக் காட்டுகின்றது.






நடந்தாய் வாழி வழுக்கியாறு - வழுக்கியாறுப் பிரதேசத்தில் தொலைந்த தம் மாட்டைத்தேடுபவர்களின் கதை.

கங்கைக்கரையோரம் - பேராதனை வளாகச் சூழலில் மையம் கொள்ளும் காதல் கதை.

கொத்தியின் காதல் - கொத்தி என்ற பெண் பேய்க்கும் சுடலைமாடன் என்ற ஆண் பேய்க்கும் வரும் காதல், சாதி வெறி பிடித்த எறிமாடன் என்ற இன்னொரு பேயால் கலைகிறது. எமது சமூகத்தில் சாதிப்பேய் எப்படித் தலைவிரித்தாடுகிறது என்பதைக்காட்டும் கதை. சிரித்திரனில் தொடராக வந்து மாணிக்கம் பிரசுரமாக வெளிவந்தது.

கடல்கோட்டை - ஒல்லாந்தர் காலத்தில் ஊர்காவற்துறை கடற்கோட்டையப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட அருமையான வரலாற்று நவீனம்.

தீம் தரிகிட தித்தோம் - 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களம் சட்டம் கொண்டுவந்தபோது மலர்ந்த கற்பனைக்காதற் கதை. இதில் புதுமை என்னவென்றால் தனிச்சிங்களச்சட்டவிவாதம் நடந்தபோது எடுக்கப்பட்ட குறிப்புக்களும் விவாதமும் காட்டபட்டிருக்கும் களம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க , இன்னொரு பக்கம் தமிழ்ப்பையனுக்கும் சிங்களபெண்ணுக்குமான காதற் களம் காட்டப்பட்டிருக்கும், நாவல் முடியும் போது இனக்கலவரம் ஆரம்பிக்க அவர்களின் காதலும் இனவெறியில் எரிந்துபோகும்.
நான் இதுவரை இப்படியான இரண்டு வேறுபட்ட களத்தோடு பயணிக்கும் வேறொரு நாவலையும் படிக்கவில்லை. செம்பியன் செல்வன் ஆசிரியராக இருந்த அமிர்தகங்கையில் தொடராக வந்தது. 1986ஆம் ஆண்டு நல்லூர்திருவிழாவின் புத்தகக்கண்காட்சியில் இதைக்கண்டபோது ஐஸ்பழம் வாங்க வைத்த காசில் இதை வாங்கினேன்.

ஈழத்தின் பல்வேறு பகைப்புலங்களைத் தன் கதைக்களங்களில் கையாண்டதோடு, பொருத்தமான சூழலையும் தேர்வுசெய்து புவியியல் ரீதியான விளக்கங்களைக் கொடுப்பதன் மூலம் தன் படைப்பு ஊடாக சமூகப்பார்வையினையும் வரலாற்றுத்தடங்களையும் காட்டுவது இவரின் சிறப்பம்சம். ஈழத்தின் பிரதேச வழக்கியல் பற்றிய விவரணமாகவும் இவை அமைகின்றன.


இப்படி நான் முன் சொன்ன நாவல்கள் அனைத்தையுமுமே எந்த வித உசாத்துணையுமின்றி என்னால் நினைவுபடுத்தி எழுதமுடிந்ததை வைத்தே இவரின் எழுத்துக்கள் எப்படி என்னை ஆட்கொண்டன என்பது புரியும். நான் இதுவரை வாசிக்காத அவரின் படைப்புக்கள் ஒரு சிலவே, அதையும் போனமாதம் பூபாலசிங்கத்தில அள்ளிக்கொண்டு வந்திட்டன்.

1988 ஆம் ஆண்டு அநு.வை நாகராஜனின் "காட்டில் ஒரு வாரம்" என்ற சிறுவர் நாவல் வெளியீடு விழா வைத்தீஸ்வராக்கல்லூரில் நடந்தபோது செங்கை ஆழியானை முதன்முதலில் பார்தேன். அவரின் கையொப்பத்தை அந்த நிகழ்வு நிறைவுற்றபோது பெறாலாம் என்று விழா அழைப்பை நீட்டினேன்.
" காயிததில எல்லாம் கையெழுத்தை வைக்காதயும்" என்று செங்கை ஆழியானைத் தடுத்துவிட்டு
" தம்பி அந்தப் புத்தகத்கைக்குடும், அதில வைக்கட்டும்" எண்டார் பக்கத்தில் நின்ற செம்பியன் செல்வன்.
சிரித்துக்கொண்டே நான் நீட்டிய புத்தகத்தில் தன் கையெழுத்தைப் பதித்தார் செங்கை ஆழியான்.


ஒருநாள் கூட்டாளிமாரோட ரவுணுக்குப் போட்டு பிறவுண் றோட்டால வரேக்க அவரின் விட்டைக் கண்டு " எடே, உதுதான் செங்கை ஆழியானின்ர வீடு" என்று புழுகத்தில் பின்னால் சைக்கிளில் வந்த நண்பனைப் பார்த்துக் கத்தினேன்.
கொல்லென்று பெண் ஒருத்தியின் சிரிப்புக்கேட்டது, எங்களுக்குப் பின்னால் செங்கை ஆழியானின் சைக்கிளும் கரியரில் அவர் மகளும்.

ஓ..சொல்ல மறந்துவிட்டேனே , செங்கை ஆழியானின் "கிடுகுவேலி" நாவல் வந்தபோது எனக்கு வயசு 11.

புலம்பெயர்ந்த என் வாழ்வில் இன்னும் என் புலனைக் கெடாது வைத்திருப்பது செங்கை ஆழியானின் தாயகம் தழுவிய மண்வாசனை எழுத்துக்கள் தான்.

ஆயிரக்கணக்கான மைல் தொலைவில்.....
என் தாயகத்தில் இருக்கும் எனதருமை எழுத்தாளரே!
தங்கள் படைப்புக்களை நுகர்ந்து போகும் வெறும் வாசகன் அல்ல நான்,
உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் நேசிக்கும்
நான் உங்கள் ரசிகன்.

Posted by கானா பிரபா at 8:15 PM Email This BlogThis! Share to X Share to Facebook

63 comments:

ரவி said...

வழக்கம் போல தரமான நடையில் நீண்ட பதிவினை காண்கிறேன்..

அருமை...

May 18, 2006 9:01 PM
senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நான் இவருடைய எழுத்துக்களை படித்ததில்லை, உங்களின் பதிவு இவரை நன்கு அறிமுகப் படுத்தியுள்ளது. அடுத்த முறை புத்தகம் வாங்க செல்லும் சமயம் இவர் புத்தகம் இருந்தால் கண்டிப்பாக வாங்குகிறேன்.

May 18, 2006 9:05 PM
Anonymous said...

அன்புப் பிரபா!
ஈழத்தின் தரமான எழுத்தாள்ர்களில் ஒருவர். பல இவர் கதைகளை விரும்பிப் படித்துள்ளேன்.இவர் பார்த்த அரச வேலை இவருக்கு ;ஈழத்தில் பலபாகங்களிலும் வேலை செய்தது மாத்திரமன்றி; அவ்விடங்களின் வாழ்வியல் முறைகளை ;கதைக் கருவாக அமைந்து. வாசகர்களிடம் வெற்றியும் பெற வைத்தது.
யோகன்
பாரிஸ்

May 18, 2006 9:26 PM
வசந்தன்(Vasanthan) said...

அண்ணோய்,
அந்த மாதிரி.

"முற்றத்து ஒற்றைப்பனை" பற்றிச் சொல்லியிருக்கிறியள். பதினைஞ்சு வருசத்துக்கு முந்தி வாசிச்சது. இண்டை வரைக்கும் என்ர வாசிப்பின்படி முதலிடம் அதுக்குத்தான்.

ஊருக்குள்ள நடக்கிற கூத்துக்களை அப்பிடியே கொண்டந்திருப்பார். விதானைக்குக் கள்ளு வாங்கிக்குடுத்துச் சரிக்கிட்டுறது தொடக்கம், பட்டம் விடுறது, எரிச்சலில அதை அறுக்கிறது, பெட்டிசன் போடுறது எண்டு இயல்பாகச் செல்லும் கதை. வட்டார வழக்கு நடை எனக்கு மிகப்பிடித்திருந்தது.
கிழவர் பலாலியால திரும்பி வரேக்க பனை இல்லை.
பாய் போடட்டோ? எண்டு கேட்ட கிழவிக்குச் சொல்லுவார்,
"பாயென்ன? பாடையே போடு"

May 18, 2006 9:44 PM
கானா பிரபா said...

வணக்கம் ரவி மற்றும் குமரன்

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் என் நன்றிகள்.
கட்டாயம் நீங்கள் வாங்கி வாசிக்கவேண்டிய படைப்புக்கள் இவை, புதியதொரு அனுபவத்தையும் உங்களுக்குத் தரும்.

May 18, 2006 9:55 PM
Anonymous said...

Even I am proud to say that I hooked up with his writings when I was living at Inuvil & Thavady! Thanks to my friend Jegan (espeically for his fathers collection of books) and Thavady Central Community Centre Library. In someways I see a strong connection between yours and my experiences!! Because even I met him at Vaitheeswara college, but on the Arivuk Kalangium Quiz Contact back in 93/94!

BTW, when you used come for Bala Sir's class at ATC (Hindu culture?) , we were just year 9 kids!!

May 18, 2006 11:57 PM
சின்னக்குட்டி said...

நன்றிகள் நல்லதொரு பதிவுக்கு.நானும் செங்கை ஆழியனின் படைப்புகள் விரும்பி படித்ததுண்டு...ஆனால் நாவல்களின் பெயர்கள் பலது மறந்திருந்தன. ஞாபகபடுத்தியதுக்கு நன்றி..செ.குணராசா இயற்பெயருடய அவர் முதலில் புவியியல் பாட புத்தகங்கள் எழுதினார். அவர் உதவி அரசாங்க அதிபராக தொழில் நிமித்தம் இலங்கையின் பல பாகங்களில் வேலை செய்தவர்.நெடுந்தீவில் வேலை செய்த அநுபவம வாடைக்காற்று. ஆகவும் வன்னியில் வேலை செய்த அநுபவம் காட்டாறு. ஆகவும் பேராதானை மாணவனாக இருந்த அநுபவ்ம் கங்கைக்கரையினிலே ஆகவும் உருவாக அப்படியான பின் புலங்கள் உதவியிருக்கின்றன.

80 களின் ஆரம்பத்தில் தனியார் டியூட்டரிகளில் பிரபல ஆசிரியராய் இருந்திருக்கிறார்....அவருடைய சமிபகால படைப்புகள் பற்றி தெரியாது தெரிந்தவர்கள் கூறினால் நல்லம்......நன்றிகள் கானபிரபா.

May 19, 2006 12:23 AM
Anonymous said...

செ. குணராசாவும் அவர் மனைவி கமலாவும் சேர்ந்தும் புவியியற்பாடநூல்கள் எழுதியிருக்கிறார்கள். வீரகேசரிப்பதிப்பகம் அவருடைய மண்வாசனைப்புதினங்களை வெளியிட்டிருந்தது. 'நிலக்கிளி' பாலமோகன், ஜோன்ராஜன், அருள்சுப்பிரமணியம் போன்றவர்களும் இதுபோன்ற ஊர்சார்ந்த புதினங்களுக்காக வாசிக்கப்படவேண்டியவர்கள்.
அண்மையிலே ஈழச்சிறுகதைத்தொகுப்பினைச் செய்தாரெனக் கேள்விப்பட்டேன்.

ஆனால், செங்கை ஆழியான் உள்ள கதையை எழுதப்போய் 'உதை' வாங்கியதாகவும் கதைகளுண்டு. ;-)

May 19, 2006 9:08 AM
கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

இவர் ஈழத்தின் தரமான எழுத்தாளர் என்பது மறுதலிக்கமுடியாத உண்மை, ஆனால் ஈழ எல்லைகளைக் கடந்து இவர் எழுத்துக்கள் இன்னும் முழுமையாகக்கரைசேரவில்லையே என்ற ஏக்கம் என்னிடம் நிறையவே உண்டு.

May 19, 2006 9:19 AM
கானா பிரபா said...

வசந்தன் அண்ணோய் வணக்கம்!

நன்றீங்கண்ணா

கதைமாந்தர்களிடையே அவர்களின் குணாதிசயங்கள் மூலம் நகைச்சுவையை இழையவிடுவது இவர் பண்பு. "முற்றத்து ஒற்றைப்பனை " பற்றிய விசாலமான பார்வையை இன்னொரு பதிவாகத்தருகின்றேன்.

May 19, 2006 9:24 AM
சினேகிதி said...

indu varikum ippidi oru elluthalara patri eanku theriyaathu.arimugathu nanri prabanna.nanbargalidam kedan sengay aalyana patri theriuam endu..avargalukum theriyavilai.oruvar sonar vaadaikatru padamaga vanthathendu.

May 19, 2006 9:25 AM
கானா பிரபா said...

வணக்கம் சிவராம்

தாவடி எங்கட அப்பாவின் ஊர் என்பதால தாவடிப் பொதுநூலகத்தையும் நான் விட்டுவைக்கவில்லை.
அருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரி வாழ்க்கை பற்ரிப் பிறகு சொல்ல இருக்கிறன்.
ஓ நீங்கள் தானோ நாங்கள் இந்து நாகரீகம் படிக்கேக்க, அங்கால இருந்து கத்திக்கத்திக் கதைச்சுக்
கொன்டிருந்தது? (:-))

உங்களுக்கும் எனக்கும் ஒரே எண்ண அலைவரிசை இருப்பது குறித்து உண்மையில் மகிழ்ச்சியடைகின்றேன்.

May 19, 2006 1:17 PM
கானா பிரபா said...

வணக்கம் சின்னக்குட்டி

செங்கை ஆழியான் தற்போது யாழ் மாநகர சபை ஆணையாளராக இருக்கின்றார். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நான் அவரைச் சந்திக்கப் பல முயற்சியெடுத்தும் கைகூடவில்லை. 90 களிலும் விக்னா ரியூட்டரியில் புவியியல் வகுப்பு எடுத்தவர்.
சமீபகாலம் வரை அவரின் முழுமையான படைப்புக்கள் பற்றிய விபரங்கள் என்னிடம் உள்ளன் (விடுவனே நான்?) அதை ஒர் பதிவாகத்தருகின்றேன்.
மேலும் அவரின் அனைத்துப் படைப்புக்களையும் அக்குவேறு ஆணிவேறாக அலசவிருப்பது என் இலட்சியங்களில் ஒன்று.

May 19, 2006 1:20 PM
கானா பிரபா said...

வணக்கம் அநாமோதய நண்பரே!

நீங்கள் குறிப்பிடும் எழுத்தாளர்களும் தங்கள் பாணியில் நம் மண்வாசனையைச் சொன்னவர்கள்.
பாலமனோகரனின் "நிலக்கிளியையும்", அருள் சுப்பிரமணியத்தின் " அக்கரைகள் பச்சையில்லை" நாவலையும் மறக்கமுடியுமா என்ன?

மல்லிகைப்பந்தலுக்காகச் செங்கை ஆழியான் ஈழத்துப்படைப்பாளிகளின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருகின்றார்.

May 19, 2006 1:27 PM
கானா பிரபா said...

சினேகிதி சொன்னவர் இப்படி

" இன்றுவரைக்கும் இப்படி ஒரு எழுத்தாளரைப்பற்றி எனக்குத் தெரியாது. அறிமுகத்திற்கு நன்றி பிரபாண்ணா. நண்பர்களிடம் கேட்டேன், செங்கை ஆழியான் பற்றித் தெரியுமா என்று? அவர்களுக்கும் தெரியவில்லை. ஒருவர் சொன்னார் வாடைக்காற்றுப் படமா வந்ததென்று"

என் பதில் இப்படி

உண்மை தான் சினேகிதி,
"செல்வி", "மனைவி" போன்ற சன் ரீவி இத்தியாதி தொடர்களில் ஒரு குட்டிவேடத்தில்
செங்கை ஆழியான் வந்தால் தான்
வயசான எம்மவர்களில் சிலரிற்கே அவர் யாரெண்டு தெரியும்

May 19, 2006 1:53 PM
இளங்கோ-டிசே said...

நல்லதொரு பதிவு பிரபா.
எனக்கும் உங்களைப்போல செங்கை ஆழியானைப் பிடிக்கும். ஈழத்தில் இருக்கும்வரை அவரது அனேகமாய் நாவல்களை தேடி தேடி வாசித்து இருக்கின்றேன். 'நடந்தாய் வாழி வழுக்கையாறு' கதையில் வருகின்ற இடங்கள் அனைத்தும் எனக்கு பரீட்சயமாய் இருந்த இடங்கள் என்பதால் ஏதோ நானும் அந்தப்பாத்திரங்களில் ஒன்றாக இருப்பதாய் உணர்ந்துகொண்டே வாசித்திருக்கின்றேன். 'ஆச்சி பயணம் போகின்றாள் கதை அந்தமாதிரி நகைச்சுவை ஊடாடும் கதை. 'கொத்தியின் காதலும் நான் மிகவும் சிரித்து சிலாகிக்கக்கூடிய கதை. கங்கைக்கரையோரம்...ம் :-)பேராதனைப்பல்கலைக்கழகத்தில்படித்தவர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கக்கூடும். அந்த அனுபவம் கிடைக்காத என்னைப்போன்றவர்கள் ஏக்கப்பெருமூச்சுதான் விடமுடியும் :-((((.
எனக்கு மிகப்பிடித்த கதை எது என்றால் கதிர்காமம் பகுதியில் இருக்கும் வேடுவர்களை கதாமாந்தராக்கிய கதை ஒன்று. தேனீ மற்றும் பிற பொருட்களை விற்கின்றேன் என்று ஆரம்பித்து அவர்களின் காடு முழுவதையும் வெளியிலிருந்து வந்தவர்கள் ஆக்கிரமிக்க பராம்பரிய நிலங்களை இழக்கின்ற மூத்தகுடிகளின் துயரைப் பதிவு செய்கின்ற கதை அது என்று நினைக்கின்றேன். 'குவேனி' என்ற கதையும் வாசிக்கும்போது பிடித்த கதை ஒன்று. விரிவாக குவேனி கதையை எழுத வெளிக்கிட்டு இடையில் நிறுத்திவிட்டார் என்று நினைவு.

May 19, 2006 2:09 PM
சயந்தன் said...

செங்கையாழியானின் கதைகள் என்றால் எனக்கும் சின்ன வயசில் நிறைய விருப்பம். யாக குண்டம் ஜன்ம பூமி என பொக்கெட் சைசில் எல்லாம் அவருடைய புத்தகங்கள் வந்திருந்தன.

http://sayanthan.blogspot.com/2005/06/blog-post_10.html

இந்தப்பதிவில் அது பற்றி சொல்லியிருக்கிறேன்.

இன்னொரு விடயம். 95இன் இடம் பெயர்வில் புலிகள் மக்களை வன்னிக்கு வரும்படி கேட்கிறார்கள். (வற்புறுத்தவில்லை) ஆனால் பலர் யாழ்ப்பாணம் திரும்பி விடுகிறார்கள். அக்கால கட்டத்தில் புதுவை ஒரு கவிதை எழுதுகிறார்.

குவேனிக்கு பிறந்தவரின்
குற்றங்கள் தீர்க்க
காட்டாற்று வேக
கதைக்காரன்
வீட்டுக்கு வருகிறார்.
பழைய பத்திரிகை கொடுங்கள்
பாரியாருடன் சேர்ந்து
பாடப்புத்தகம் அச்சிடுவார்...

May 19, 2006 3:01 PM
Anonymous said...

"அவரின் அனைத்துப் படைப்புக்களையும் அக்குவேறு ஆணிவேறாக அலசவிருப்பது என் இலட்சியங்களில் ஒன்று."

தங்கள் இலட்சியம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் பிரபா!!!.

அன்புடன்,
துபாய் ராஜா.

May 19, 2006 3:40 PM
சின்னக்குட்டி said...

அநோமதைய நண்பர் ஞாபகபடுத்திய மாதிரி அருள் சுப்பிரமணியம் அவர்களின் அவர்களுக்கு வயது வந்து விட்டது, மர்ம மாளிகை போன்றவைகளும் நினைவு கூரத்தக்கவை...

அநோமதைய நண்பர் நல்ல தகவல்கள் வைத்திருக்கிறார்....

May 19, 2006 8:08 PM
கானா பிரபா said...

வணக்கம் டிசே

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
தாங்கள் குறிப்பிடும் குவேனி நாவல் தமிழ்த்தாய் வெளியீட்டகத்தால் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. அப்போது நூல் வெளியீட்டிற்கு நானும் போயிருந்தேன்.

//கங்கைக்கரையோரம்...ம் :-)பேராதனைப்பல்கலைக்கழகத்தில்படித்தவர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கக்கூடும். அந்த அனுபவம் கிடைக்காத என்னைப்போன்றவர்கள் ஏக்கப்பெருமூச்சுதான் விடமுடியும் :-((((.//

ஏனப்பு மொன்றியல் பல்கலைக்கழகங்கள் கங்கைக்கரையோரம் இருப்பதில்லையோ? :-)

May 19, 2006 8:51 PM
கானா பிரபா said...

ஆ சயந்தன்! வா அப்பு

எங்க மேனை கனநாளாக் காணக்கிடைகேல்லை. போன மாசம் அங்க சந்திக்க வேணும் எண்டிட்டுக் காய் வெட்டீட்டீர் என்ன...

ஓமோம் நீங்கள் சொல்லும் புத்தகங்கள் சில காகிதத்தட்டுப்பட்டால றூல் போட்ட கொப்பிகளின் தாளில் அச்சிட்டும் வெளிவந்தவை.

May 19, 2006 8:57 PM
கானா பிரபா said...

வணக்கம் துபாய் ராஜா

தொடர்ந்தும் என் பதிவுகளைப் பார்த்து உற்சாகமளிக்கும் தங்களுக்கு என் நன்றிகள்.

May 19, 2006 8:59 PM
ஈழநாதன்(Eelanathan) said...

நன்றி பிரபா நல்லதொரு அலசல்.ஈழத்துச் சுஜாதா என்று செங்கை ஆழியானுக்கு பட்டமிருக்கிறது தெரியுமோ?அவரது பெயர் செ.குணராசா இல்லை க.குணராசா
அவரது நாவல்கள் சிறுகதைகள் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன் கிடுகுவேலி நாவலும் பிரபலமானது ஒன்று.நானும் வசந்தனைப் போல முற்றது ஒற்றைப் பனை கதையின் ரசிகன் தான்.

தற்போது யாழ்பாணத்தில் பழைய நூல்களை மீள்வாசித்து பதிப்பிகிறார் யாழ்பாண இராச்சியம் அவரது மீள்வாசிப்புடன் வந்திருக்கிறது.அதே போன்று ஈழத்துச் சிறுகதை வரலாறு என்கிறது அவரது நூலும் ஆய்வுகளுக்கு பயன்படக் கூடியது

May 19, 2006 9:07 PM
கானா பிரபா said...

அருள் சுப்பிரமணியம் கப்பலில் வேலை செய்துவிட்டு ஐரோப்பிய நாடொன்றில் இருப்பதாக அறிகின்றேன். அவரின் தனிப்பட்ட விபரம் தெரிந்தவர்கள் ஒரு தனி மெயிலை எனக்குத் தட்டிவிடுகிறீர்களா?

May 19, 2006 9:08 PM
வசந்தன்(Vasanthan) said...

ஐயா சயந்தன்,
பொறுத்த நேரங்களில கொழுவி விடுற வேலையத் துவங்கீட்டீர்.

May 19, 2006 9:35 PM
Rasikai said...

இணைப்புக்கு நன்றி கானபிரபா. ஈழத்தின் தரமான எழுத்தாளர்களில் என்னைக்கவர்ந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். நான் முதல் முதல் வாசித்த புத்த்கம் யானை. அப்புத்தகம் எனக்கு சின்னனில பரிசா பாடசாலையில் கிடைத்தது. அப்புறம் சில இவரின் புத்தகங்கள் வாசித்து இருக்கிறேன்

May 19, 2006 10:44 PM
கானா பிரபா said...

வணக்கம் ஈழநாதன்

அநாமதோய நண்பர் செங்கை ஆழியான் என்பது அவரின் தகப்பனார் பெயர் என்று நினைத்தோ என்னவோ செ.குணராசா என்று குறிப்பிட்டுவிட்டார்.

கந்தையா குணராசா என்ற இயற்பெயர் கொண்ட அவர் நீலவண்ணன் என்ற பெயரிலும் 24 மணி நேரம், மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது, களம் பல கண்ட கோட்டை ( அவை என்னிடம் இருக்கின்றன) போன்ற உண்மை நிகழ்வுகளின் விவரணப்பதிவுகளையும் அளித்திருகின்றார்.

ஈழராஜா எல்லாளன் புதிய வரலாற்றுப்படைப்பயும் மேலும் சில அவரது நாவல்களையும் கடந்த மாதம் ஊருக்குப் போனபோது வாங்கிவந்தேன்.

ஈழத்துச்சுஜாதா என்பது அவருக்குக் கிடைத்த ஜனரஞ்சகத்துக்குக் கிடைத்த பட்டமானாலும் இவரின் கதைக்களன்கள் முற்ரிலும் மாறுபட்டவை என்பது உங்களுக்கும் தெரியும்.

வணக்கம் வசந்தன்

சயந்தனுக்குக் கொழுவவும் தெரியும் தழுவவும் தெரியும்:-)

May 19, 2006 10:54 PM
இளங்கோ-டிசே said...

அருள் சுப்பிரமணியம் கன்டாவில் இருக்கின்றார் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அதற்கப்பால் தகவல் தெரியாது அப்பு :-).
.....
/ஏனப்பு மொன்றியல் பல்கலைக்கழகங்கள் கங்கைக்கரையோரம் இருப்பதில்லையோ? :-) /
இங்கேயும் ரிடோ ஆறு என்று அழகான ஆறு எல்லாம் ஓடுதுதான். ஆனால் மண்ணின் வாசத்துடன், மஞ்சள் தேய்த்து நீராடும் தேவதைகளுடன்,லவ்வர்ஸ் பார்க்கோடு ஒரு வளாகம் உலகில் எங்கேதான் கிடைக்கும் சொல்லுங்கள் :-).
....
பி.கு: /மஞ்சள் தேய்த்து நீராடும் தேவதைகளுடன்../
என்று எழுதியவுடன், ஏன் கனடாவில் பெண்கள் மஞ்சள்
தேய்த்துக் குளிப்பதில்லையோ என்று வசந்தனோ சயந்தனோ கேட்காமல் இருக்கமாட்டினம் என்றும் தெரியும்.....சரி அவையளுக்கு என்னோடு ஒருநாள்கூட கொழுவாமல்
இருக்காவிட்டால் விடியாதே...? வரட்டும் வரட்டும் :-)).

May 19, 2006 11:10 PM
Anonymous said...

பிரபா, செங்கை ஆழியானின் கதைகளை அதிகமாக வெளியிட்டது சிரித்திரன். சிரித்திரனில் வெளிவந்த கதைகள் அநேகமான கதைகளை வாசித்திருக்கிறேன். 70களின் பிற்காலத்திலேயே வெளிநாடு சென்று விட்டதால் பின்னர் வெளிவந்த கதைகள் வாசிக்க முடியவில்லை.

இப்போது நூலகம் திட்டத்தில் அவருடைய இரண்டு கதைகளை சேர்த்துள்ளார்கள். சித்திரா பௌர்ணமி, முற்றத்து ஒற்றைப்பனை ஆகியன. அங்கு சென்று வாசித்து மகிழுங்கள்.

சில காலத்துக்கு முன்னர் ஈழம் சென்றபோது அவருடைய இரண்டு சரித்திர நூல்கள் வாங்கி வந்தேன். "யாழ்ப்பாண அரச பரம்பரை", "நல்லை நகர் நூல்".
இரண்டும் நிறைய வரலாற்றுத் தகவல்களுடன் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல்கள்.

//அருள் சுப்பிரமணியம் அவர்களின் அவர்களுக்கு வயது வந்து விட்டது, மர்ம மாளிகை போன்றவைகளும் நினைவு கூரத்தக்கவை//

அருள் சுப்பிரமணியம் அவர்களின் மர்ம நாவல் ஒன்று ஆனந்த விகடன் பரிசுத் திட்டத்தில் முதல் பரிசு பெற்றது. அந்த நாவல் ஏற்கனவே அவர் எழுதி இலங்கையில் வெளிவந்தது என்ற தகவல் எட்டி முதல் வாரத்துடனேயே நிறுத்தப்பட்டு விட்டது. அது இந்த "மர்ம மாளிகை" தானா?

May 19, 2006 11:41 PM
சயந்தன் said...

//சயந்தனுக்குக் கொழுவவும் தெரியும் தழுவவும் தெரியும்//

இப்போதைக்கு நழுவத்தான் தெரியும்..

May 20, 2006 6:12 AM
theevu said...

செங்கை ஆழியான் பற்றிய எனக்கு தெரிந்த தகவல் முழுக்க நீங்கள் கூறிவிட்டீர்கள்.
இவரது பிறவுண்றோட் வீட்டிலிருந்துதான் எனக்கு சாண்டில்யன் கல்கி அனைவரும் அறிமுகம்.இவரது வீட்டில் நூலகமொன்றை நடாத்தி வந்தார் .அதில் எமது நூலகம் போலல்லாது புதிய புத்தகங்கள் பாகம் முடிய முடிய சூடாக எடுத்து வாசிக்ககூடியதாகவிருந்தது.ஒவ்வொரு புத்தகத்திற்கும் இரவலுக்குரிய கட்டணம் செலுத்தியாக வேண்டும்.ஆனால் எம்மால் செலுத்தக்கூடிய அளவிற்குள்தான் அந்தக் கட்டணமிருந்தது.

இவருடைய மிக நெருங்கிய உறவினர்தான் பாரிஸ் சபாலிங்கம்.

முற்றத்து ஒற்றைப் பனை நாவல்தான் எனக்குப்பிடித்தது.

அந்தக்கால யாழ்ப்பாண மண்வாசனையை, பட்டம் விடுதல் பற்றிய பதிவு செய்தஒரு நாவல்.

யாழ் கோட்டை பற்றிய ஒரு வரலாற்று நூல் அண்மையில் பார்த்தேன் .அச்சு உதவாது.நகல் கூட எடுக்கமுடியாது.ஆனால் உள் விபரம் மிக பெறுமதியானது.அதில் பழைய நல்லூர் கோவில் கற்களைக்கொண்டுதான் முத்திரைச்சந்தியிலுள்ள தேவாலயத்தை கட்டினார்கள் என்று ஒரு குறிப்பு எழுதியிருந்தார்

மாநகர ஆணையாளர் பழைய c.v.k சிவஞானம் எல்லோ..செங்கை ஆழியான் எப்போதிலிருந்து மாநகர ஆணையாளர்?

நான் இறுதியாக சில வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டது யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் செங்கை ஆழியான் ஏதோ பொறுப்பாக இருப்பதாக..விபரம் சரியாகத் தெரியாது

May 20, 2006 8:53 AM
கானா பிரபா said...

வணக்கம் தீவு

அவர் பிரிய வாசகர் வட்டம் என்ற பெயரில் நீங்கள் குறிப்பிட்டதுபோல ஒரு நூலகம் நடத்தியவர். ஆனால் நான் ஒருமுறையும் போனதில்லை.

நீங்கள் குறிப்பிட்டது "களம் பல கண்ட யாழ்கோட்டை" நீலவண்ணன் என்ற பெயரில் எழுதியிருந்தார். அவரது சொந்தப் பதிப்பான கமலம் பதிப்பக வெளியீடாக 1995 ஆம் ஆண்டு வெளிவந்தது, அக்கால நெருக்கடி நிலையில் நல்ல காகிததையும் சிறீலங்கா தடைசெய்திருந்தது (புலிகள் காகித்தில் கூடக் குண்டு செய்துவிடுவார்கள் என்ற பயமோ என்னவோ)
அப்பிரதியும் என்னிடம் இருக்கின்றது.

நீங்கள் இன்னும் 80களிலேயெ நிக்கிறீங்கள். சீ.வீ.கே சிவஞானத்துக்குப் பிற்கு நிறையப்பேர் ஆணையாளராக வந்திட்டினம்.
குணராசா யாழ் பல்கலைக்கழகப் பதிவாளராக இருந்து இப்ப 2 வருஷமா ஆணையாரா இருக்கிறார்.

May 20, 2006 10:30 AM
Anonymous said...

செ. குணராசா என்று செங்கையாழியன் என்று எழுத வந்தபின்னால், மாற்றப்போனதால் தவறுதலாகத்தான் குறிப்பிட்டேனேயொழிய செங்கை ஆழியான் என்பது அவரின் தகப்பனார் பெயர் என்று நினைத்துச் சொல்லவில்லை.

அருள் சுப்பிரமணியத்தின் கதை, ஆனந்தவிகடனிலே வந்தது, அதற்கு முன்னர் அக்கரைகள் பச்சையில்லை என்ற வீரகேசரிப்பிரசுரமாக வந்தது. அவருடைய சொந்தமச்சான்ரை கதையெண்டு கேள்வி ;-) பிறகு அதுக்குப் பரிகாரமாக சூரசம்ஹாரம் எண்டொரு கோதாரி எழுதிப்போட்டார்.

ஈழத்துச்சுஜாதாவோ?
உருப்படமாட்டியள். ஏன் வீரமணி ஐயருக்கும் ஈழத்துப்பாபநாசம்சிவன், பிரபாகரனுக்கு ஈழத்து விஜயகாந்த், கைலாசபதிக்கு ஈழத்து வானமாமலை, டொமினிக் ஜீவாவுக்கு ஈழத்து ஜெயக்காந்தன் எண்டெல்லாம் குடுக்கிறதுதானே. உப்பிடிப் பட்டம் குடுத்துக்குடுத்துத்தானே இண்டைக்கு சன் ரிவியிலை வந்து நிக்கிறியள். :-(

May 20, 2006 10:43 AM
Anonymous said...

"//தொடர்ந்தும் என் பதிவுகளைப் பார்த்து உற்சாகமளிக்கும் தங்களுக்கு என் நன்றிகள்.//"

அன்பு பிரபா!!,தமிழ் பேசும் அனைவரையும் உறவினர்களாக கருதும் தங்களைப் போல நானும் ஒருவன்."தமிழ்மணம்" மூலம் தங்களோடு பின்னூட்ட தொடர்பு ஏற்படும் முன்னே,"யாழ்" தளத்தில் மடத்துவாசல் பிள்ளையாரடி பதிவுகள்
அனைத்தும் படித்து,வண்ண அச்சுகளாய் தனி கோப்பிட்டு அவ்வப்போது படித்து மகிழ்ந்து வருபவன்.தாங்கள் இந்தியா அல்லது துபாய் வரும்போது நாம் சந்திப்போம்.

அன்புடன்,
துபாய் ராஜா.

May 20, 2006 2:38 PM
கானா பிரபா said...

வணக்கம் ரசிகை

www.noolaham.net சென்று அவரின் கதைகளைப் படித்து இன்புறுங்கள்:-)

May 20, 2006 3:01 PM
கானா பிரபா said...

//டீ சே சொன்னவர்
பி.கு: /மஞ்சள் தேய்த்து நீராடும் தேவதைகளுடன்../
என்று எழுதியவுடன், ஏன் கனடாவில் பெண்கள் மஞ்சள்
தேய்த்துக் குளிப்பதில்லையோ என்று வசந்தனோ சயந்தனோ கேட்காமல் இருக்கமாட்டினம் என்றும் தெரியும்.....சரி அவையளுக்கு என்னோடு ஒருநாள்கூட கொழுவாமல்
இருக்காவிட்டால் விடியாதே...? வரட்டும் வரட்டும் :-)). //

அவர்கள் சார்பில் நான் கேட்கின்றேனே, பதில் சொல்லுங்களேன்? :-)

May 20, 2006 3:04 PM
சினேகிதி said...

அருள் சுப்பிரமணியம் ஆசிரியர் ரொடன்டோவில்தான் இருக்கிறார்.இங்குள்ள தமிழ் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தவர்.தற்போதைய விபரம் தெரியவில்லை.இவருடைய இயக்கத்தில் அமைந்த நாடகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

May 20, 2006 3:11 PM
கானா பிரபா said...

வணக்கம் சிறீஅண்ணா

செஙகை ஆழியானின் கொத்தியின் காதல் உட்படச்சில நாவல்கள் சிரித்திரன் பிரசுரமாக வந்தவை.

விகடன் பொன் விழாப் போட்டியில் கலந்துகொண்ட அருள் சுப்ரமணியத்தில் "தூரத்து ஓவியங்கள்" முதல் பரிசாக ரூ 20,000 வென்றது. ஆனால் அதல் முதல் அத்தியாயம் வெளிவந்த போது மேற்கு மாம்பலத்தைச்சேர்ந்த ஜீ.கல்யாணி என்ற வாசகர் அது ஏற்கனவே வெளிவந்த படைப்பு என ஆதரத்துடள் எழுத, இரண்டாம் பரிசு பெற்ற கலாதரின் "பேசும் கண்கள்" நாவல் முதற்பரிசுக்குத் தேர்வானது. (ஆதாரம் ஆனந்த விகடன் 07.05.2006 இதழ்).

May 20, 2006 3:18 PM
கானா பிரபா said...

சயந்தன் சொன்னவர் இப்படி
//இப்போதைக்கு நழுவத்தான் தெரியும்.. //

ஓமோம் நீர் இருக்கிற சூழ்நிலை அப்பிடி.

May 20, 2006 3:19 PM
கானா பிரபா said...

வணக்கம் துபாய் ராஜா

காலம் கைகூடும் போது நிச்சயமாக உங்களைச்சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.

May 20, 2006 3:26 PM
கானா பிரபா said...

வணக்கம் அநாமோதய நண்பரே,

சும்மா முசுப்பாத்திக்குத் தான் //அநாமதோய நண்பர் செங்கை ஆழியான் என்பது அவரின் தகப்பனார் பெயர் என்று நினைத்தோ என்னவோ செ.குணராசா என்று குறிப்பிட்டுவிட்டார்.//
என்று குறிப்பிடப்பட்டது. சீரியசா எடுக்காதேங்கோ அண்ணை.

ஒருமுறை எஸ்.பொன்னுத்துரையை "ஈழத்து ஜெயகாந்தன்" எண்டு யாரோ சொல்ல , எஸ்.பொ சொன்னாராம் " அவரை வேணுமெண்டால் " தமிழ்நாட்டின் எஸ்.பொ" எண்டு சொல்லுங்கோ .
(ஆனாலும் லொள்ளு சாஸ்தீப்பா)

May 20, 2006 4:08 PM
theevu said...

//நீங்கள் இன்னும் 80களிலேயெ நிக்கிறீங்கள்.// :)
இதையும் ஒருக்கால் பாருங்கோ .இப்பவும் சிவஞானத்தார்தான் .இது எட்டாம் திகதிப்பேப்பர் குறிப்பு

May 20, 2006 4:42 PM
கானா பிரபா said...

வணக்கம் தீவு

நீங்கள் சொல்லுவது சரி, குணராசா கடந்த வருடம் வரை ஆணையாளராக இருந்தவர்.
(இப்ப என்ன பதவியில் இருக்கிறார் என்று தெரியவில்லை)


சீ.வீ.கே.சிவஞானம் மீண்டும் 80 களுக்குப் பிறகு ஆணையாளராக வந்திக்கிறார்.

முன்னாள் ஆணையளர் என்று நான் குறிப்பிட்டிருக்க வேணும், மன்னிச்சுக்கொள்ளுங்கோ
(நீங்கள் பொல்லாத ஆள் போலக் கிடக்குது. :-l

May 20, 2006 6:52 PM
கானா பிரபா said...

சும்மா தேடிப்பார்த்தன், குணராசா (செங்கை ஆழியான் ) அவர்களுக்கு தனிப்பட்ட இணயமும் இருக்கின்றது. ஆனால் படமும் மின்னஞ்சலும் மட்டும் தான் உள்ளது:-(
இதோ
http://www.kunarasa.com/

யாழ் கள ஹரியின் புண்ணியத்தில் செங்கை ஆழியானின் புத்தகம் இணையம் மூலம் வாங்கும் தளம் கிடைத்திருக்கிறது.
இதோ
http://www.tamilemarket.com/pro/book_seng01.htm

May 20, 2006 6:54 PM
கானா பிரபா said...

வணக்கம் நண்பர்களே

என்னிடம் செங்கை ஆழியான் அவர்களின் வீட்டுத் தொலைபேசி எண் இருந்தது. ஒருவாறு அதைத் தேடிப்பிடித்து இரண்டு நிமிடத்திற்கு முன் அவர் வீட்டுக்குத் தொடர்பு கொண்டேன். அவர் அப்போது இல்லை என்றாலும் அவர் மீள்கட்டமைப்புக்கான world bank இன்National Earthquake Hazards Reduction Program (NEHRP) மேற்பார்வையாளராக இருப்பதை அவர் வீட்டார் தெரிவித்தார்கள்.
எமது வானொலிக்கான அவருடனான நேர்காணல் செய்ய இருக்கிறேன். மற்றவை பின்னர்....

May 20, 2006 7:31 PM
கானா பிரபா said...

தமிழவன் சொன்னவர்
//நண்பன் சொல்லறான் எல்லாம் சுத்துமாத்து தான் எண்டு.. //

வணக்கம் தமிழவன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

எழுத்தாளரின் அரசியல் நிலைப்பாட்டில் விசனம் வருவதில் தப்பில்லை.
அவரின் வரலாற்று சமூக நாவல்களில் உங்கள் நண்பர் என்ன குறை கண்டார். அவரின் தெளிவான கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

May 20, 2006 9:28 PM
மலைநாடான் said...

பிரபா!
நேற்று உங்கள் பதிவு பார்த்தேன். ஆனால் பின்னூடடம் எழுதக் கூடிய நிலை இல்லை. ஆனால் பார்த்ததுத் ஒன்று புரிந்தது.
எல்லாம் ஒரே குட்டை மட்டைகள்தானென்று.

செங்கைஆழியானின் எழுத்துக்கள் எனக்கும் பிடித்தவையே. ஆனால் கே.டானியலின் படைப்புக்களான அடிமைகள், பஞ்சமர், கோவிந்தன், போன்றவை படித்தபின், இவரின் எழுத்துக்களை அழிகியலுக்காகவே வாசிக்க முடிந்தது. ஆயினும் வரலாறு தொட்டு எழுதும் அவரது எழுத்துக்கள் ஈழத்து இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவைதான்.
மண்வாசனை எழுத்துக்களை நயம்பட எழுதியவர்களில், செங்கைஆழியான்,நிலக்கிளி பால மனோகரன், குமாரபுரம் தாமரைச்செல்வி, அக்கரைகள் பச்சையில்ளை அருள். சுப்பிரமணியம், தெனியான், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பதிவுக்குப் பாராட்டுக்கள்!

May 21, 2006 7:49 AM
மலைநாடான் said...

//ஈழத்துச்சுஜாதாவோ?
உருப்படமாட்டியள். ஏன் வீரமணி ஐயருக்கும் ஈழத்துப்பாபநாசம்சிவன், பிரபாகரனுக்கு ஈழத்து விஜயகாந்த், கைலாசபதிக்கு ஈழத்து வானமாமலை, டொமினிக் ஜீவாவுக்கு ஈழத்து ஜெயக்காந்தன் எண்டெல்லாம் குடுக்கிறதுதானே. உப்பிடிப் பட்டம் குடுத்துக்குடுத்துத்தானே இண்டைக்கு சன் ரிவியிலை வந்து நிக்கிறியள். //

இந்தக் கருத்துக்கள் எனக்கும் உடன்பாடானவையே. தமிழகக் கலைஞர்களைப்படிப்பதோ பாராட்டுவதோ பிழையல்ல. ஆனால் எங்கள் கலைஞர்களை எங்கள் மண்ணின் தனித்துவத்தோடு அடையாளப்படுத்துதலே, அவர்களுக்கும், எங்களுக்கும், பெருமை.

May 21, 2006 8:04 AM
கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

தாங்கள் குறிப்பிடும் எழுத்தாளர்களும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் விலக்கமுடியாத தனித்துவம் கொண்ட படைப்பை வழங்கியவர்கள் என்பதில் மறுப்பெதுமில்லை.

// எல்லாம் ஒரே குட்டை மட்டைகள்தானென்று.// நீங்கள் குறிப்பிடுவது நாங்கள் எல்லோருமே இப்படியானதொரு வாசிப்பு அனுபவத்தைத் தான் பெற்றோம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் போல:-)

May 21, 2006 9:20 AM
கானா பிரபா said...

வணக்கம் நண்பர்களே

நேற்று இன்பத்தமிழ் ஒலி வானொலிக்காகச் செங்கை ஆழியானுடன் 40 நிமிட நேர்காணல் கண்டேன்.

லண்டன் ஐ.பி.சி வானொலியும் நேற்று அவரை நேர்காணல் கண்டது.

May 21, 2006 9:22 AM
Anonymous said...

கானா பிரபா, நினைத்ததை உடனடியாகவே சாதித்து விட்டீர்கள். பாராட்டுக்கள். நேற்றிரவு இன்பத்தமிழ் ஒலியில் அந்தப் பேட்டியைக் கேட்டேன். மிக நேர்த்தியாக கேள்விகளை கேட்டிருந்தீர்கள். கேள்விகளும் செங்கை ஆழியானின் பதில்களும் அருமை. அவரைப் பற்றி தெரியாத பல தகவல்கள் அறியத்தந்தீர்கள். மிக்க நன்றி.

May 21, 2006 11:15 AM
வசந்தன்(Vasanthan) said...

நீங்கள் எடுத்த செவ்வியை ஒலிவடிவில இணைய்த்தில தரலாமே?
அல்லது எங்களிட்ட தந்தால் நாங்கள் நல்லா யாவாரம் செய்வோமே?

***********************
சோ.தமிழவனுக்கு.
நீங்கள் சொன்னது சரிதான். ஆனால் புலிகளுக்கே கோபமெல்லாம் போய், அவரைக்கூப்பிட்டு உபசரிச்சு அரவணைக்கேக்க, தனிய செங்கை ஆழியானின்ர அரசியலைப்பற்றி மட்டும் ஏன் பேசுவான்?
ஆர் ஆரிட்ட போனது எண்டது உங்களுக்கு உண்மையிலயே தெரியாதோ?
***********************
ஈழத்து சுஜாதாக் கதைக்கு எதிர்பார்த்த பக்கத்திலயிருந்து கருத்து வந்திருக்கு.
அதுசரி, ஆர் குடுத்தது உந்தப்பேர்? கானாபிரபாவோ அல்லது உண்மையிலயே உப்பிடியொரு கருத்து இருக்கோ? நானறிஞ்ச வரையில இப்பிடியொரு கதை கேள்விப்படேல.

உப்பிடித்தான் முந்தி யாழ்ப்பாணத்தில 'ஈழத்து மனோ' எண்டு ஒருத்தர் பாட்டுக்கள் பாடிக்கொண்டு திரிஞ்சவர்.
சிட்டண்ணையை ஆரோ ஈழத்து எஸ்.பி எண்டு சொல்லப்போய் வில்லங்கமானதாகவும் கேள்வி.

இது மற்றவர்களால் வழங்கப்படும் பெயர்கள் என்றளவில் என் எதிர்ப்பு உண்டு. ஆனா எனக்கொரு கேள்வி.
தான் மானசீகமா விரும்பிற ஒரு ஆளுமையின்ர பெயரைத் தன்ர பெயரோடு இணைச்சு எழுதுறவையை பற்றித் தவறாச் சொல்ல ஏதுமிருக்கோ? எடுத்துக்காட்டாக 'உமா ஜிப்ரான்'.;-)
அல்லது அந்த ஆளுமை ஆரெண்டிறதில இருக்கோ எதிர்க்கிறதும் ஆதரிக்கிறதும்?
இது சும்மா ஒரு பொதுஅறிவை வளர்க்கத்தான்.;-)

May 21, 2006 12:01 PM
Anonymous said...

வணக்கம் கான பிரபா, வசந்தனை போலவே முதல் முதல் வாசித்த புத்தகம் செங்கையழியானின் முற்றத்து ஒற்றைப்பனை....
உங்களால் பட்டியல் இடப்பட்ட பெரும் பாலான புத்த்கங்களை வாசித்திருக்கிறேன்..... அவரது கதைகளிறு நானும் ரசிகன் தான்....

கதையில் எழுதும்... அல்லது கதையை வைத்து செங்கையாழியான் இப்படி தான் இருப்பார் என மனதுக்குள் கற்பனையில் வைத்திருந்த எண்ணங்கள் பிற்காலத்தில் அவை பற்றி அறிய வந்த போது தலைகீழகியது ....
அதற்கப்பால் நான் எப்போதும் அவரது கதைகளின் ரசிகன்....

May 21, 2006 7:37 PM
கானா பிரபா said...

பாராட்டுக்களுக்கு நன்றிகள் சிறீ அண்ணா

செங்கை ஆழியானை 40 நிமிடம் பேட்டி கண்டும், இன்னுமொரு சந்தர்ப்பத்தையும் அளிக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டது அவர் பெருந்தன்மை.

பல நேயர்கள் தனிப்பட்ட முறையிலும் அந்தப்பேட்டிக்காகப் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்ததன் மூலம் ஒரு திருப்தியை அடைகின்றேன்.

May 21, 2006 8:23 PM
கானா பிரபா said...

வணக்கம் குழைக்காட்டான்

செங்கை ஆழியானின் இன்னொரு ரசிகரை அடையாளம் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி.

May 21, 2006 8:26 PM
கானா பிரபா said...

வணக்கம் வசந்தன்

ஒலிவடிவில் நான் கண்ட நேர்காணலுக்கான புதிய வீடு கட்ட அத்திவாரம் பேட்டிருக்கிறன், கொஞ்சநாள் பொறுங்கோவன்.

ஈழத்துச்சுஜாதா எண்டு அவருக்கு யார் பட்டம் கொடுத்ததெண்டு ஈழநாதனைத் தான் கேட்கவேணும், என்னை மாட்டாதேங்கோ.

தமிழவன் உட்பட செங்கை ஆழியானின் அரசியல் நிலைப்பாடு பற்றி பேசுவர்களுக்கு என் பதில்.
அவர் எமது சுயநிர்ணயப்போராட்டத்திற்கு 1995 இற்கு முன் எப்படியான செயற்பட்டை வழங்கியிருந்தார் என்பதை அவரின் படைப்புக்களை ஆழ அகலமாக வாசித்தவர்களுக்குப் புரியும். பின்னாளில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், வசந்தன் சொன்னதுபோல அவருக்குக் கிடைத்த அங்கீகாரம் தெரியாமல் பேசக்கூடாது.

ஈழத்தில், இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தன் எல்லைகளுக்கு உட்பட்டவாறு அவர் தன் வரலாற்றுக்கடமைகளை அவர் செய்கின்றார். உறுதிப்படுத்த வேணுமெண்டால் பூபாலசிங்கத்துக்கு ஒரு போன் பண்ணி அவர் சமீபத்தில் வெளியிட்ட ஈழத்தின் வரலாற்று விழுமியங்கள் சார்ந்த நூல்களை ஓடர் செய்து வாங்கிப் படியுங்கள்.
யாழ்ப்பாணத்தில் இருப்பவர் பகிரங்கமாக என்ன அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேணும் எண்டு, ஐரோப்பாவிலும், கனடாவிலும், அவுஸ்திரேலியாவிலும் இருந்து நாங்கள் தீர்மானிக்கவேண்டுமா?

செங்கை ஆழியான் ஒரு நல்ல எழுத்தாளர், எழுத்தாளனுக்குச்சமூகப் பொறுப்பு இருக்கவேணும். ஆனால் யோசித்துப் பாருங்கள் எத்தனை எழுத்தாளர்கள் தம் சொல்லிலும் செயலிலும் ஒன்றியிருக்கிறார்கள்?

தமிழர் தாயகக்கோட்பாட்டைப் பகிரங்கமாகப் வலியுறுத்தியும், எழுதியும் வந்த தேசப்பற்றாளன் செம்பியன் செல்வன் அரசியல் ரீதியாக சிறீலங்கா அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்டதும், தன் பென்ஷன் பணத்தையே பெறமுடியாது தவித்ததையும், சொந்தப் பிள்ளைகள் இன்றி தான் எடுத்து வளர்த்த சிறு பையனின் வாழ்வுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்து எந்தவித வெளிநாட்டுவருவாயும் இன்றி அல்லற்பட்டு இறந்த அவரைப்பற்றி,
இப்படிப் புலம் பெயரந்து அரைகுறை விஷயங்களை மட்டுமே தெரிந்துகொண்டு ஒருவரின் அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் ஒருசிலருக்குத் தெரியுமா?

தயவுசெய்து எமது படைப்பாளிகள் மீது சேற்றை வாரிவிடுவதைவிட்டு அவர்கள் செய்த நல்ல பணிகளைச்சீர்தூக்கிப் பாருங்கள்.
எல்லாரையும் ஒரு நிரந்தர முத்திரை குத்தி ஒதுக்கிவைக்காதீர்கள்,

May 21, 2006 9:35 PM
ஈழநாதன்(Eelanathan) said...

ஈழத்துச் சுஜாதா என்று யார் பட்டம் கொடுத்ததா? தெரிதல் சஞ்சிகையில் ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்கள் என்ற தொடரை எழுதி வரும் ச.இராகவன் கொடுத்த பட்டம் அது எந்த மாதத்தைய இதழ் என்பது மறந்துவிட்டது வேண்டுமானால் மின்படமாகப் போடுகிறேன் வாசித்து இன்புறுக.மற்றும்படி பட்டம் கிட்டமெல்லாம் கொடுக்கும் அளவுக்கு நான் இன்னும் பிரபலமாகவில்லை

ஜனரஞ்சகமாக எழுதினாலும் செங்கை ஆழியானின் கதைகள் ஆகக் குறைந்தது வாசிக்கும் தரத்திலாவது இருக்கின்றன மற்றும்படி யாழ் இலக்கிய வட்டம் முதல் சுதந்திரன் சிறுகதைகள்,ஈழகேசரிச் சிறுகதைகள் மறுமலர்ச்சிச் சிறுகதைகள் என்று பலநூற்றுக்கணக்கான சிறுகதைகளை தொகுப்பாக்கின புண்ணியம் அவரைச் சேரும்.

தற்போது அவர் செய்துவரும் மறுவாசிப்புகளில் மாறுபட்ட கருத்து உண்டு அதைப் பற்றி பின்னர் எழுதுவேன்

May 21, 2006 9:37 PM
theevu said...

//யாழ்ப்பாணத்தில் இருப்பவர் பகிரங்கமாக என்ன அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேணும் எண்டு, ஐரோப்பாவிலும், கனடாவிலும், அவுஸ்திரேலியாவிலும் இருந்து நாங்கள் தீர்மானிக்கவேண்டுமா?//


இதே பிரச்சனை டொமினிக் ஜீவாவிற்கும் இருந்தது.ஐரோப்பிய வானொலி பேட்டி ஒன்றில் இதே போல் ஒரு கேள்வி எழுந்தபோது தனது வாதத்தை முன்வைத்திருந்தார்.அவரையும் தேசியத்திற்கு எதிராக காட்ட முற்பட்டு அவரது திறனையும் ஊடகங்களின் கண்ணில் படாது ஒதுக்கி வைத்துவிட்டோம்.

இன்றும், ஒருவரைப் பற்றி கதைக்கும்போது அவன் முந்தின பிளட் முந்தின ரேலோ என்று முத்திரை குத்தி பேசுவது வழக்கமாகிவிட்டது.

சாமியே சும்மா இருக்கும்போது பூசாரிகள் நாம் (சில சமயம் தார்மீக கோபம் இருப்பினும் கூட)சற்று பேசாமல் இருந்தால்தான் என்ன?

May 21, 2006 10:33 PM
கானா பிரபா said...

வணக்கம் ஈழநாதன்

தக்க சமயத்தில் வந்து என் தலையைக் காப்பற்றியமைக்கு என் நன்றிகள் (வசந்தன், இப்ப திருப்தி தானே)

வணக்கம் தீவு

தங்கள் கருத்துக்கும் என் நன்றிகள்.

May 22, 2006 9:27 AM
மலைநாடான் said...

// எல்லாம் ஒரே குட்டை மட்டைகள்தானென்று.// நீங்கள் குறிப்பிடுவது நாங்கள் எல்லோருமே இப்படியானதொரு வாசிப்பு அனுபவத்தைத் தான் பெற்றோம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் போல//
அதே ..அதே.:-))))))

//யாழ்ப்பாணத்தில் இருப்பவர் பகிரங்கமாக என்ன அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேணும் எண்டு, ஐரோப்பாவிலும், கனடாவிலும், அவுஸ்திரேலியாவிலும் இருந்து நாங்கள் தீர்மானிக்கவேண்டுமா?//

நேர்மையான கேள்வி, நியாயமான கோபம்.
பிரபா இப்பதிவிற்கு வந்த மாறுபட்ட கருத்துக்கள், எங்களுக்குத் தேவையான வாதப்பிரதிவாதம் அன்றி விதண்டாவாதம் அல்ல என்றே நான்கருதுகின்றேன்

May 22, 2006 9:29 AM
கானா பிரபா said...

//பிரபா இப்பதிவிற்கு வந்த மாறுபட்ட கருத்துக்கள், எங்களுக்குத் தேவையான வாதப்பிரதிவாதம் அன்றி விதண்டாவாதம் அல்ல என்றே நான்கருதுகின்றேன் //

அதில் எனக்கும் மாற்றுக்கருத்துக்கள் இல்லை மலைநாடான் அண்ணா

என் பதிற்கருத்துக்கள் என் ஆதங்கமேயன்றி கண்டிப்பாகக் கோபமல்ல. கோபம் கொண்டு நமக்குள் எல்லைகள் போட நான் விரும்பவில்லை. கருத்துக்களைக் கருத்துக்களால் வென்றெடுப்போம்:-)

May 22, 2006 9:36 AM
Anonymous said...

வணக்கம்..
உங்கள் பதிவுகள் நான் முழுமையாக
படிக்கவில்லை..
ஆனால் மிகவும் பிடித்திருக்கிறது..
நான் தான் தாமதமாக உங்கள்
வலைப்பகுதிக்கு வந்துவிட்டேன்போல்..


நேசமுனட்..
-நித்தியா

May 24, 2006 7:53 PM
கானா பிரபா said...

வணக்கம் நித்தியா

தொடர்ந்தும் என் பதிவுகளை வாசித்து உங்கள் அபிப்பிராயத்தைக்கூறுங்கள்.

May 25, 2006 10:42 AM

Post a Comment

Newer Post Older Post Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (7)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ▼  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ▼  May 2006 (3)
      • உலாத்தல் - ஒரு முன்னோட்டம்
      • நான் உங்கள் ரசிகன்
      • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes