தமிழ் சினிமா உலகின் துரதிஷ்டம் நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புக்களை உள்வாங்காதது, மலையாள சினிமா உலகின் அதிஷ்டம் மேற்கண்ட முதலடியை மாற்றிப் போடுங்கள். அந்த வகையில் மலையாள சினிமா அளித்த, காலத்தால் அழியாத காவியம் "செம்மீன்".
தகழி சிவசங்கரம்பிள்ளை, மலையாள இலக்கிய உலகில் நல்ல பல படைப்புக்களை அளித்தவர், 1929 இல் சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு இவர் அறிமுகமாகிப் பின்னர் நாவல்கள் பலவற்றையும் அளித்தவர். அதில் ஒன்று தான் செம்மீன் என்ற 1956 ஆம் ஆண்டில் இவர் எழுதிய நாவல். இந்நாவல் பின்னர் ராமு கரியத் இன் இயக்கத்தில் 1965 இல் வெளிவந்தது. ஜனாதிபதியின் தங்கப்பதக்கததைப் பெற்ற முதல் தென்னிந்திய சினிமா என்ற சிறப்பையும் இப்படம் தட்டிக்கொண்டது.
கதை இதுதான், செம்மங்குஞ்சு என்ற எழை முதியவனுக்கு உள்ள ஆசை சொந்தமாக ஒரு படகும் வலையும் வைத்திருக்க வேண்டும் என்று. அவனின் அந்த ஆசைக்கு உதவுகிறான் பரிக்குட்டி என்ற இளம் முஸ்லிம் வியாபாரி, ஆனால் செம்மங்குஞ்சு பிடிக்கும் மீன்களைத் தனக்கே விற்க வேண்டும் என்ற உடன்படிக்கையோடு, செம்மங்குஞ்சுவும் அதற்கு உடன்படுகின்றான்.
இதற்கிடையில் செம்மங்குஞ்சுவின் மகள் கருத்தம்மாவிற்கும் பரிக்குட்டி என்ற அந்த இளைஞனுக்கும் காதல் வருகின்றது. கருத்தம்மாவின் தாய்க்கு இது தெரிந்தும் தமது வாழ்க்கைச் சூழல் அதற்கு இடம் கொடுக்காது என்று எச்சரிக்கின்றாள். அதுபோலவே நிகழ்வுகளும் நடக்கின்றன. செம்மங்குஞ்சு தான் உறுதியளித்தது போல் நடவாமல் தான் பிடித்த மீன்களை பரிக்குட்டிக்கு விற்காமல் வேறு ஆட்களுக்கு விற்கின்றான். பரிக்குட்டி இதனால் நஷ்டமடைகின்றான். பரிக்குட்டி கருத்தம்மா காதல் பல சோதனைகளைச் சந்திக்கின்றது. செம்மங்குஞ்சு ஊருக்குப் புதிய வருகையான அனாதை பழனியை கருத்தம்மாவிற்கு மணம் முடித்து வைக்கிறார்கள். தன் காதலியை இழந்த துயரமும், வியாபாரத்தில் பணமுடையும் கொள்ளும் பரிக்குட்டி நலிந்து போகின்றான்.
கருத்தம்மாவின் தாய் நோயில் விழுந்து மரணத்தைத் தழுவுகின்றாள். தனிக்குடித்தனம் போன கருத்தம்மா தன் கணவனோடே இருந்து நல்ல மனைவியாகப் பணிவிடை செய்கின்றாள். இதனால் தன் பிறந்தகத்தை விட்டு நிரந்தரமாக விலகி வாழ வேண்டிய நிலை அவளுக்கு.
இருந்தாலும் பரிக்குட்டி-கருத்தம்மாவின் காதலைப் பற்றி மீண்டும் பேசிக் கருத்தம்மாவின் கணவன் பழனியை வம்பிழுக்கின்றது அந்த மீனவ சமுதாயம். ஊர் என்ன சொன்னாலும் தன் மனைவி மீது சந்தேகம் கொள்ளாது அன்பாக இருக்கும் பழனி ஒரு சந்தர்ப்பத்தில் நிலை தவறி கருத்தம்மா மீது தன் சந்தேகப் பார்வையைக் கொள்கின்றான். தன் காதலையும் பிறந்தகத்தையும் இழந்து தன் கணவனே எதிர்காலம் என்றிருந்த கருத்தம்மா இதனால் துவண்டு விடுகின்றாள்.
நீண்ட நாளின் பின் வந்த எதிர்பாராத பரிக்குட்டி கருத்தம்மா சந்திப்பு மீண்டும் அவர்களின் காதலைப் புதுப்பித்து, அந்தச் சந்தோஷ தருணம் அவர்களின் மரணமாக விடைகொடுக்கின்றது. இறப்பில் ஒன்று சேர்கிறார்கள் அவர்கள். அதே தருணம் கடலுக்குச் சென்ற பழனி சுறா மீனுக்குத் தன்னைக் காவு கொடுக்கின்றான்.
பரிக்குட்டியாக மது (தர்மதுரை படத்தில் ரஜனியின் தந்தையாக வந்தவர்), பழனியாகச் சத்யன் (மிகவும் பிரபலமான நடிகர் விபத்தில் இறந்துவிட்டார்), கருத்தம்மாவாக ஷீலா ( சந்திரமுகி பட வில்லி.. ஹிம் எப்படியிருந்த ஷீலா) என்று தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் குழு. இப்படம் விருதுக்குப் பொருத்தமானது என்பதோடு மட்டும் நின்று விடாது மலையாளம் கடந்து மற்றய மொழி ரசிகர்களையும் கவர்ந்ததற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.முக்கியமாக ஒரு நல்ல கதையும் அதன் இயல்பு கெடாமல் எடுக்கத் தெரிந்த தொழில்நுட்பக் குழுவும் இதன் முதற்படி. தகுந்த நடிகர் தேர்வு அடுத்தது.
காதலின் வீழ்ந்து கருத்தமாவைத் தேடுவதாகட்டும், இழந்த காதலை நினைத்து மருகுவதாகட்டும், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று சஞ்சலப்படுவதாகட்டும் பரிக்குட்டி பாத்திரமான மது இந்தப் பாத்திரப்படைப்பை இயல்பாகவே செய்திருக்கிறார்.
ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்து தன் எல்லைக்குட்பட்ட விதத்தில் காதல் பருவத்தில் நடப்பதும், தன் ஆசைகளை அடகு வைத்துவிட்டு முன்பின் முகம் தெரியாதவனைக்கரம் பிடித்து அவன் மனம் கோணாமல் நடப்பதும், ஒரு கட்டததில் தான் இவ்வளவு தியாகம் செய்தும் கணவன் புரிந்துகொள்ளவில்லையே என்று புழுங்கி " நான் இன்னும் பரிக்குட்டியைத் தான் நேசிக்கிறேன் " என்று ஆற்றாமையோடு வெடிப்பதும் என்று ஷீலாவும் தன் பங்கை விடவில்லை.
கடலோரக்கிராமியப் பின்னணியில் யதார்த்தமான கதைகளத்திற்கு மார்க்கஸ் பாட்லி, யூ.ராஜகோபாலின் ஒளிப்பதிவும் துணைபுரிந்திருக்கிறது.
"கடலினக்கரை போனோரே", "மானச மயிலே வரு" போன்ற பாடல்காட்சிகளில் சூரியன் விழுங்கிய மாலைக் காட்சியும், நிலாவொளி பரப்பும் பின்னிரவுக் காட்சிகளும் கூடைகளில் நிறைந்திருக்கும் மீன் குவியல்களும், கடற் குருமன் மேடுகளும் நல்ல எடுத்துக்காட்டு.
ஒரு நல்ல நாவலை எடுக்கும் போது எழுத்தில் வடிக்கும் நுட்பமான மனித உணர்வுகளையெல்லாம் காட்சியாகக்காட்டமுடியாது என்பதற்கு இப்படமும் ஒரு சான்று. தகழி சிவசங்கர பிள்ளையின் நாவலைப் படிக்காவிட்டாலும் எழுத்தில் பலமடங்கு உணர்வு பூர்வமான நிகழ்வுகள் இருந்திருக்கும் என்பதைப் படம் பார்க்கும் போது உணரமுடிகின்றது. சில காட்சிகள் அதன் யதார்த்த நிலையை இழந்து எனோ தானோ என்று வரும் போது தான் இப்படி எண்ண முடிகின்றது.
செம்மீன் படத்தின் பெரிய பலம் அல்லது அசுரபலம் இசையமைப்பு. சலீல் சவுத்ரியின் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் வெகு நேர்த்தி. இப்படத்தை நான் பார்த்து மூன்று மாதங்களுக்கு மேல், ஆனாலும் "மானச மயிலே வரு" என்ற பாடல் இன்னும் என் காதை விட்டுப் போகமாட்டேன் என்கின்றது.
சங்கராபரணம் போல செம்மீன் திரைப்படமும் திரும்பத் திரும்பப் பார்க்கும் ரசிக வலைக்குள் விழுந்ததிற்கு வயலார் ராமவர்மாவின் பாடல் வரிகளில் " கடலினக்கரை போனோரே" என்ற பாடலும் ஒரு காரணம் என்று நினைக்கின்றேன். இன்று தனியார் தொலைக்காட்சிகளில் நல்ல பாடல் ஒன்றைத் திரும்பத் திரும்பப் போட்டுச் சாவடிப்பதும், நாம் விரும்பியபோது வீசீடி, டீவீடியிலும் பார்க்கமுடியாத நிலை அன்றைய காலத்து ரசிகருக்கு இல்லாத நிலையில் அவன் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கே சென்று பாடலைக் கேட்பதற்காகவே படம் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
யாழ்ப்பாணத்திலும் இப்படம் திரையிடப்பட்டு வெற்றி கண்டது.
நடுத்தரவயசைக்கடந்த யாழ்ப்பானத்துக்காரர் யேசுதாசைச் சந்தித்தால் பெரும்பாலும் " கடலினக்கரை போனோரே" என்ற பாடலைத் தான் ரொம்பவும் சிலாகித்து பேசுவார் என்று நினைக்கிறேன்.
எட்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் மூலம் ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. இன்றும் பத்திரமாக வைத்திருக்கும் அது, 1980 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சுஜாதா (அப்ப ரட்டைச் சடை போட்ட சரியான சின்னப் பிள்ளை) இருவரும் வழங்கிய இசை நிகழ்ச்சி. அப்போது பிரபலமாக இருந்த நியூ விக்டேர்ஸ் வீடியோ எடுத்திருந்தார்கள், பிரபல அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீட், உங்ங்ங்கள்ள்ள் அன்பு அறிவிப்பாளர்ர்ர்ர் கே.எஸ்.ராஜாவும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். வீரசிங்கம் மண்டபமே யாழ்ப்பாணச் சனம் அள்ளுப் பட்டுக்கிடந்தது.
அடுத்த பாடலை அப்துல் ஹமீட் அறிவிக்கின்றார். அவ்வளவு ரசிகர்களும் ஆரவாரித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். அந்தப் பாடல் "கடலினக்கரை போனோரே.... காணாப் பொன்னினு போனோரே..."
செம்மீனையும், கடற்புரத்தையும், "கடலினக்கரை போனோரே" பாடலைப் பற்றியும் எழுதிக்கொண்டிருக்கும் போது விடமுடியாத இன்னொரு நினைவும் ஒண்டும் இருக்குது. தொண்ணூறாம் ஆண்டுகளின் ஆரம்பகாலத்தில நமது தமிழீழ இசைக்கலைஞர்களின் பாடற்தொகுப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்த காலமது. இசையருவி எண்ட ஒலிப்பதிவுக்கூடமும் கஸ்தூரியார் றேட்டில நிறுவப்பட்டு பாடல் ஒலிப்பதிவுகளும் நடந்தன.
அப்பிடி வந்த ஒரு பாடற் தொகுப்புத்தான் ' நெய்தல்".
இசைவாணர் கண்ணன் இசையில் பார்வதி சிவபாதம் , சாந்தன் உட்படப் பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். "ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்", "கடலலையே கொஞ்சம் நில்லு", "முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா", "'நீலக்கடலே", "புதிய வரலாறு" "கடலதை நாங்கள்", "வெள்ளிநிலா விளக்கேற்றும்","நாம் சிந்திய குருதி", அலையே நீயும்" என்று அந்த ஒன்பது பாடல்களுமே முத்தான பாடல்கள்,
இண்டைக்கும் நினைவிருக்கு தொண்ணூறாம் ஆண்டு காலத்தில நாங்கள் விலை கொடுத்து "நெய்தல்" கசற் வாங்கி, டைனமோவில மின்சாரம் எடுத்து றேடியோவில அந்தப் பாடல்களைக் கேட்டது. கூல்பார் பாட்டுக்களிலும் "நெய்தல்" பாடல்கள் தான் இடம்பிடித்தன.
என்னைப் பொறுத்தவரை " கடலினக்கரை போனோரே" என்ற சினிமாப் பாடலை எப்படி இன்னும் கேட்டுக்கேட்டு ரசிக்கிறேனோ அதே அளவு உயர்ந்த இசைத்தரத்தில் தான் பார்வதி சிவபாதம் பாடிய " கடலலையே கொஞ்சம் நில்லு" பாடலையும் சாந்தன் பாடிய "வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்" பாடலையும் ரசிக்கின்றேன், எள்ளளவும் குறையாமல்.
20 comments:
செம்மீன்.....இந்த நாவலின் தமிழ்ப் பதிப்பை நான் பள்ளிப்பருவத்தில் பத்தாம் வகுப்பு முடியுமுன்னமே வாசித்திருக்கிறேன். அப்பொழுதே கீழே வைக்க முடியாமல் என்னைப் படிக்க வைத்த கதை.
இந்தத் திரைப்படத்தையும் பார்த்திருக்கிறேன். பார்க்க அலுக்காத காவியம். ஒவ்வொரு பாத்திரமும் நேர்த்தியாக செதுக்கப்பட்டு சிறப்பாக நடிக்கப்பட்டிருக்கும். மது, ஷீலா, சத்யன் ஆகிய மூவரும் சிறப்போ சிறப்பு.
இசை சலீல் சௌத்திரி. முதன் முதலில் அவர் இசையமைத்த தென்னிந்தியத் திரைப்படம் இது. இதே படத்தில் பெண்ணாளே பெண்ணாளே கறிமீன் கண்ணாளே என்று பி.லீலா பாடிய பாடலும் மிகச் சிறப்பு.
ராமு கரியத் தமிழிலும் கரும்பு என்று ஒரு படம் இயக்குவதாக இருந்தது. அதற்கும் சலீல்தா இசைதான். இரண்டு பாடல்கள் பதிவும் செய்யப்பட்டன. ஆனால் படம் எடுக்கப்படவில்லை. அந்த இரண்டு பாடல்களும் சிலப்பதிகார காணல்வரிகள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழ்க் கவிதையை ஒரு மலையாளி கண்டெடுத்து அதற்கு ஒரு வங்காளி இசையமைத்து தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பி.சுசீலாவும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட யேசுதாசும் பாடி இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. பி.சுசீலா பாடிய பாடல் துள்ளலோடு இருக்கும். கானல்வரிகள்தான். ஆனால் துள்ளலோடும் கொண்டாட்டத்தோடும் இருக்கும். யேசுதாஸ் பாடியதும் அதே வரிகள். ஆனால் சோகம் ததும்பியிருக்கும். இது கேட்கத் திகட்டாத கானம் என்று மெல்லிசை மன்னர் இசையில் ஒரு பாடல் உண்டு. அந்த வரியின் பொருள் இந்தப் பாடல்களுக்கும் பொருந்தும்.
பின்னூட்டலுக்கு நன்றிகள் ராகவன், சுவையான தகவல்களையும் தந்திருக்கிறீர்கள்.
கானபிரபா
தங்கள் விமர்சன எழுத்து நடையில் கடந்த கால நல்ல திரைப்படடங்களையும் அதன் தன்மைகளையும் மனக்கண்ணுக்குள் சித்தரிக்கிறீர்கள் நன்றி!
தொடர்ந்து எழுதுங்கள்.
நான் கூட சிங்கப்பூரில் செம்மீன் பார்த்தேன்.
இனிய குரலான் ஜேசுதாஸின் குரலில் ஒலித்த பாடல் என் இதயம் கவர்ந்த பாடல்களில் முக்கிய இடம் பிடித்தது.....
"கடலினக்கரை போனோரே
காணா பொன்னென போணோரே
போய் வரும்போ
என்ன கொண்டு வரும்.........
ஓ...ஓ......போய் வரும்போ என்ன கொண்டு வரும்?
பதினாராம் வயதிலே
பாலாவிக் கரையிலே
கடலெகரண காணமோ
மாணிக்க கல்லெகரமோ........."
என்றும் இனிமை.....
இராகவனின் தொடுப்பும்
கடந்த மாதம் என் கைக்கு கிட்டிய
சுந்தர ராமசாமியின் தமிழாக்க
செம்மீன் நாவலை திருப்பத் தோன்றியது.
மீண்டும் பரீக்குட்டி "கறுத்தம்மா" என்று முணு முணுத்தான்.
அவளோ தன்னை மறந்த நிலையில்
மயக்க வெறியில்
உணர்வு இழந்த நிலையில்
மனம் நெகிழும்படி மிகவும் அணுசரணையான குரலில்
"என்ன" என்று கேட்டாள்.
"நான் உனக்கு யாரு சொல்லு"
"யாரு? என் ஆசை ராஜா?"
...................
ஆலிங்கனத்தில் ஒரே உடலாக நின்ற அவர்களால் மறுபடியும் பிரிந்து நிற்க முடியவில்லலை.
*************
நம்மாலும்தான்!
நன்றி
கானா பிரபா, பெங்களூரிலிருந்து கேரளாக்காற்றை ரசித்திருக்கிறீர்கள். நல்லதொரு பதிவு. அருமையான விமரிசனம். அன்றைய இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் இந்தப் படம் வெளிவந்த காலத்தில் அடிக்கடி இந்தப் பாடலை ஒலிபரப்புவார்கள். அதனால் இந்தப் பாடல் மிகவும் பிரபல்யமடைந்து என்று சொன்னாலும் மிகையில்லை. தமிழீழப் பாடல்களையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்.
நன்றிகள் அஜீவன்,
செம்மீன் நாவலைப் படித்ததன் மூலம் அந்தக் கதைக்களத்தின் திரையில் சொல்ல முடியாத உணர்வுபூர்வமான பார்வையும் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
நன்றிகள் சீறீ அண்ணா:-)
செம்மீன் பாடல்களைத் தமிழ் ரசிகர்களும் தமதாக்கிக்கொண்டார்கள்.
பிரபா,
பதிவு அருமை.
நெய்தல் பற்றி உங்கள் உணர்வுதான் எனதும்.
இப்போதும் நான் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்கள் நெய்தல் இறுவட்டிலிருந்துதான்.
வணக்கம் பிரபா!
திரைப்பட ஆர்வலர்கள், இசை ஆர்வலர்கள் எல்லோருக்குமே செம்மீன் ஒரு தெவிட்டாத விருந்தே. உங்கள் பதிவு என்னுள் வேறுசில நினைவுகளைக் கிளறிவிட்டது. 80 களில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் கடற் பாதுகாப்பு வலயச் சட்டத்தினால் மீனவர்களின் வாழ்நிலை குலைந்த சோகத்தை கருப்பொருளாக வைத்து, யாழ்கடற்கரைக் கிராமமொன்றில் ஒரு குறும்படத்தை எடுத்திருந்தேன்.அதன் ஒளிப்பதிவுகளை, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நியூ விக்ரேஸ் உரிமையாளர் பார்த்துவிட்டு, செம்மீன் படக்காட்சிகளை நினைவுபடுத்துகின்றன எனப் பாராட்டியிருந்தார். என் முதல் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக அதை நான் கருதினேன். ஏனெனில் அவர் அவ்வளவு திறமைமிக்க தொழில்நுட்பவியலாளர். ஆனால் காலச்சுழற்சியின் அலைக்கழிப்பில், தமிழீழத்தின் முதலாவது குறும்படம் எனும் சிறப்போடு வெளிவந்திருக்க வேண்டிய அப்படம் பிறப்பிற்கு முன்னமே இறந்து போயிற்று...
ராகவன் நீங்கள் குறிப்பிட்ட கரும்பு படப்பாடல்களை, நாமும் கேட்க முடியுமா? ஆவலாக இருக்கிறது. முடிந்தால் உதவுங்கள்.
நன்றி!
வணக்கம் வசந்தன்
நெய்தல் பாடல்கள் அவுஸ்திரேலியாவில் அரிதாகவே கிடைக்கின்றன. 98 ஆம் ஆண்டு மாவீரர் நாளுக்கு மெல்பனில் விற்ற கசற்றைத்தான் இங்கு வந்தபோது வாங்கினேன். இப்போதுதான் சீடீக்கள் கிடைக்கின்றன.
வணக்கம் மலைநாடான்
தங்களின் இன்னொரு பரிமாணத்தையும் அறிந்துகொண்டேன். தங்களின் குறும்பட இழப்பு உங்களுக்கு மட்டுமல்ல, நம் தாயக வரலாற்றுப் பதிவிற்கும் இழப்பு. இதோ ராகவன் குறிப்பிட்ட நீங்கள் கேட்ட பாடலின் இணைப்பு,
http://www.dhool.com/sotd2/270.html
இதனை real playerஇல் தான் கேட்கலாம் downloadசெய்ய முடியாது.
அன்புடன்
பிரபா
இப்படம் யாழில் திரையேறியபோது, எனக்கு ஏற்கனவே பார்த்த சில சிங்களப் படங்களின் நினைவே வந்தது. ஷீலா- மாலினி பொன்சேகா போல் தோற்றம் தந்தார். கதையை ஊகிக்கவே முடிந்தது. பாடல்கள் இனிமை; எனக்கு "காணாமல் போனியே தோணிக்காரா!!தனிப்பிடிப்பு ,அப்பாடல் ஒலிக்கும் போது ராணி திரையரங்கு;வெளி ஒலிபெருக்கியில்; பஸ் நிலையத்திலும்;திரையரங்கின் முன் நிற்பவர்களுக்காகவும்; ஒலிக்கவிடும். வீடு தோறும் ஒலிக்கருவிகளோ; நியூ விக்டரோ இல்லாத காலம்; ஒரு பாடலை மீளக் கேட்பதென்பதே!!! எல்லோருக்கும் அமையாத காலம். அன்றைய இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் ,ஒரு படப் பாடல் நிகழ்சியில் இடம் பெற்ற வேற்று மொழிப் படங்களில் கீத்,ஆராதனா,மலையாளத்தில் "செம்மீன்";பின்பு சங்கராபரணம். இத் தகுதி "ரைம்ஸ்"- சஞ்சிகையின் அட்டையில் வருவது போன்றது. தெருவில் நின்று சைக்கிள் பாரில் தொங்கிக் கொண்டு பாட்டுக் கேட்ட ஞாபகம் வந்தது.
யோகன்
பாரிஸ்
வணக்கம் யோகன்
தங்களின் இனிய நினைவுகளைத் தட்டிஎழுப்பியமைக்காக நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அருமையிலும் அருமையான பதிவு பிரபா.
எத்தனையோ முறை பார்க்கவேண்டும் என்று நான் முயற்சி செய்தாலும், 'செம்மீன்' படம் சமீபத்தில்தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பார்த்தவுடனேயே ஒரு பதிவும் போட்டுவிட்டேன்... இப்போது கூகிள் தேடுதல் கருவிமூலம் இந்த உங்களது பக்கத்திற்கு வந்தேனா,உங்கள் பதிவிலும், பின்னூட்டங்களிலும் நிறைய விஷயங்கள் கிடைக்கிறது எனக்கு.. அப்படியே கொஞ்சம் நம்ப பதிவிற்கும் வந்து பாருங்க பிரபா... :)
பாரதீய நவீன இளவரசரே
ஒரு வருசத்துக்கு மேல் எழுதிய பதிவு இது. செம்மீன் பார்த்தவுடனேயே அதைப் பற்றி எழுதவோ, பேசவோ இயற்கையாகவே தூண்டும். இந்தியாவின் தலைசிறந்த 10 படங்கள் என்றால் விடுபட்டுப் போகாத ஒன்று இது.
//பதினாராம் வயதிலே
பாலாவிக் கரையிலே
கடலெகரண காணமோ
மாணிக்க கல்லெகரமோ........."//
பதினாலாம் ராவிலே
பாலாவிக் கரையிலே
மல்ஸ்ய கன்னிகமாருடே
மாணிக்கக் கல்லு தராமோ
இப்படி இருக்கணும். அப்படின்னு எனக்குத் தோணுது
துளசிம்மா
நீங்க சொன்னது தான் சரியா இருக்கும் போல எனக்கும் படுது, மிக்க நன்றி
பிரபா,
நேத்துதான் 'தன்மந்த்ரா' பார்க்கக் கிடைச்சது. அதைப்பற்றி நீங்கள் எழுதுனது எதாவது இருக்கான்னு தேடிக்கிட்டு 'உங்க வீட்டுக்கு' வந்தேன்.
காழ்ச்ச, சூப்பர்மேன், க்ளாஸ்மேட்ஸ்,ரசதந்த்ரம் கிடைச்சிருக்கு.
கோபாலுக்கு வருடாந்திர விடுமுறை.
இனிதான் ஒவ்வொண்ணாப் பார்க்கணும்.
புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.
வணக்கம் துளசிம்மா
ஆஸி, நியூசிக்கு இப்ப டீவிடி யில் மல்லுவூட் படங்கள் கிடைக்குது, நீங்கள் சொன்ன எல்லாவற்ரையும் வாங்கி வைத்து ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
தன்மத்ரா பற்றி எழுத இருக்கேன், அதுக்கு முன் "ஒரே கடல்" பற்றி எழுத இருக்கிறேன்.
மனதை உருக்க வைக்கும் நினைவுகளை மீட்கும் பதிவு. மிக்க நன்றி. எனக்கு சிறு வயது. பாடல்கள் ஞாபம் இருக்கின்றன. ஆனால் நீண்ட காலமாய் தமிழ் பாடல் என்ன மாயத்ாறற்றம் இருந்தது. நெய்தல் தொகுப்பு மிக அருமை. அந்த காலத்தில் சாரத்துடன் விடுதலலைப்புலிகள் வாழ்ந்த காலமும் மனதை விட்டகலா ஒரு பசுமையான நினைவுகள்.செம்மீன் சங்கராபரணம் நெய்தல் போன்றவை. புதுவையின் பூவரசம் வேலியும்.... புத்தக்தின் முகவுரையில் பேரா. சிவத்தம்பி வெள்ளிநிலா விள்கேற்றும் நேரம் பாடலலுக்கு அருமையான சிறு குறிப்பு வரைந்துள்ளார். தற்போது தரமுடியாத நிலை. காரணம் புத்தகத்தை அழித்துவிட்டேன் என் பாதுகாப்புக் காரணங்களுக்காக.
வணக்கம் வெண்காட்டான்
எனது சிறு பிராயம் முதல் இன்று வரை எம் தாயகப் பாடல்களுக்குக் கொடுக்கும் கெளரவமும் மதிப்பும் இன்று வரை குறையவில்லை.
நெயதல், பரணி பாடுவோம், இந்த மண் எங்களின் சொந்த மண் என்று பட்டியல் நீளும்.
வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள்.
Post a Comment