சின்ன வயசில இருக்கக்கூடிய சில பேராசைகளில ஒண்டு இந்த ரயில் பயணம். சீனிப்புளியடிப் பள்ளிகூடத்தில பாலர் வகுப்பு படிக்கும் காலங்களில் எங்களுக்குப் பன்னண்டு மணிகெல்லாம் பள்ளிகூடம் முடிஞ்சுடும், ஆனால் ரீச்சரா இருந்த அம்மா எங்களை வீட்டுக்குத்திரும்பிக் கூட்டிக்கொண்டு போக ரண்டு மூண்டு மணி ஆகிவிடும். இந்த இடைப்பட்ட வேளைகளில் என்னைப் போலவே காத்திருக்கும் அருமைமணி ரீச்சரின் மகன் ரூபனுக்கும் விளையாட்டுக் களமாக இருப்பது பாலர் வகுப்பு அறைகள் தான். சின்னதாக இருக்கும் மரக்கதிரைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி முன் கதிரையை மட்டும் பிறப்பக்கமாகத்திருப்பி அடுக்கிவிட்டு முன்கதிரையில் நான் உட்கார்ந்து றெயின் சாரதியாகப் பாவனை செய்வேன். ரயில் பெட்டிகளில் கடப்பது போலப் பாவனை செய்து பின்னால் இருக்கும் கடைசிக்கதிரையில் இருந்து முதல் கதிரை வரை ரூபன் தாவித்தாவி வருவான். பின்னர் என்முறை. ரீச்சர்மாரின் பிள்ளைகள் என்பதால் இப்படியான எங்கள் அடாவடித்தனங்களை மற்ற ரீச்சர்மார் கண்டு கொள்வதில்லை.
ஆரம்பகாலக் கல்வியின் பாட இடைவேளை நேரத்திலும் சிலசமயம் ரயில் விளையாட்டு இருக்கும். அது சற்று வித்தியாசமானது. ஒருவரின் தோளில் மற்றவர் தன் இருகைகளையும் நீட்டிப் பிடித்து நீண்ட வரிசையாகத் தயார்படுத்திக் கொண்டு
" சுக்குபக்கு சுக்குபக்கு கூ, கடகட வண்டி கடுகதி வண்டி போகுது பார், சுக்குபக்கு கூ" என்று ஒருசேரப் பாடிக்கொண்டே பள்ளிக்கூட மைதானத்தில் வட்டமடிப்போம்.
இரண்டாம் வகுப்புப் புத்தகம் என்று நினைக்கிறேன். நமது நாட்டுப் பொதுப் பாவனைச் சொத்துக்களை நமது உடமை போல நினைக்கவேண்டும் என்ற கருப்பொருளில் ஒரு ரயில்வண்டிச் சம்பாஷணை இருந்தது. அதில் பெரியவர் ஒருவர் பொதுப் பொருட்களை நம்கண் போற் பாதுகாப்பது நம் உரிமையும் கடமையுமாகும் என்று சொல்லவும் அறிவுரைக்கேட்ட அந்தக் கதையில் வரும் சிறுவன் யன்னல் பக்கமாகக் காதைவைக்கவும்,அச்சிறுவனுக்கு அந்த ரயில் எழுப்பும் ஓசை "உரிமை, கடமை" என்று கேட்பதாகவும் கதை முடிகின்றது. அந்த நேரத்தில் எனக்கு அந்தக் கதை கூறிய அறிவுரையை விட ரயிலில் பயணம் செய்யவேண்டும் என்ற அவாவைத் தான் அதிகம் கிளப்பியிருந்தது.
என்ர அம்மாவும் அப்பாவும் மலையகத்தில் ஆசிரியர்களாக இருந்த காலகட்டத்தில் எனக்கு அவ்வளவாகச் சம்பவக் கோர்வையை நினைவில் நிறுத்த இயலாத மழலைப் பருவம் அது. அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கும் ஹற்றனுக்கும் ரயில்பயணம் இருக்கும். கோண்டாவில் ஸ்ரேசன் தான் எங்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. றெயினில ஏறி சீற்றில் உட்கார்ந்து போவதை முதல் நாள் இரவே கற்பனை செய்து பார்த்துவிடுவேன்.
கோண்டாவில் ஸ்டேசனில் றெயினின் வருகைக்காக்காத்து நிற்பதும். பச்சை சிகப்பு கலர்களுடன் பெரிய பிளிறல் சத்தத்தை ஹோர்ன் மூலம் எழுப்பிகொண்டே வருவாள் யாழ்தேவி. தூரத்தில் அதைக் கண்டதுமே அம்மாவின் கைப்பிடியைத் உதறிவிட்டுப் புளுகத்துடன் தரைக்கும் வானத்துக்குமாகத் துள்ளிக் குதிபேன். பெரியாளா வந்தா அப்பாட்டச் சொல்லி ஸ்ரேசன் மாஸ்டரா சேர்த்துவிடச்சொல்ல வேணும் என்று மனதுக்குள் நினைபேன் நான்.
பொல்காவலை ஸ்ரேசனை யாழ்தேவி ரயில் சமீபித்ததும் எழும் சிங்கள ஒலிபெருக்கிக் குரலும், "வடே வடே" , "பார்லி பார்லி" என்ற திடீர் ரயிலடி வியாபாரியின் குரலும் இன்னும் என்ர நினைவில இருக்கு. அதைப்போல இன்னும் இரண்டு விஷயங்களில் ஒன்று ஒருவித வித்தியாசமான தொதல் போல (ஆனால் தொதல் இல்லை) திசுப் பேப்பரில் சுற்றபட்டு விற்கப்படும் ஒருவகைத் தின்பண்டம் , மற்றது பொன்னான் பெரிய பூரான்களைக் கூடையில் சுமந்து போகும் வியாபாபாரி.
யாழ்ப்பாணத்தில இருந்து தன் விளைச்சலில் வந்த உருளைக்கிழங்கு, வெங்காயப் பெட்டிகளை
எங்கட மாமா யாழ்தேவியில் தென்னிலங்கைக்கு அனுப்பிய காலமும் ஞாபகத்தில இருக்கு.
அஞ்சாம் வகுப்பு எண்டு நினைகிறன். ஒருநாள் எங்கடவீட்டுக்காரருக்குத் தெரியாமல் றெயினைப் பார்க்கும் ஆசையில் இணுவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியில் வசிக்கும் கூட்டாளி சதானந்தனுடன
தண்டவாளத்தை ஒட்டிய தோட்டப்பாத்திகளுக்க நிண்டுகொண்டு நானும் அவனுமா கடந்துபோன றெயினுக்க இருந்த சனத்துக்குக் கைகாட்டி அனுப்பின பிறகுதான் யாம் முத்தி பெற்றோம்.
இன்னொரு நாள் அவன் 10 சத நாணயக்குற்றியைத் தண்டவாளத்தில வச்சு றெயின் சில்லால நசிபட்டுப் பெருத்துப் போன அந்த நாணயத்தைக் காட்டினான். அதை அதிசயமாப் பார்த்துக்கொண்டே "ஹிம் நானும் சதானந்தன் போல தண்டவாளப் பக்கம் உள்ள வீட்டில இருந்திருக்கலாம்" எண்டு அப்ப நினைச்சனான்.
தொண்ணூறாம் ஆண்டு பிரேமதாசா அரசு வந்தபோது கொழும்பு நோக்கியதான பயணம்.
இந்திய இராணும் யாழை ஆக்கிரமித்திருந்த காலமது.
கோண்டாவில் ஸ்டெசனில நாங்கள் றெயினுக்காக நிற்கும் போது திடீரென்டு சில பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய போஸ்டர்கள் கட்டுகளோடும் பசை தாங்கிய வாளிகளோடும் வந்தார்கள். வந்தவர்கள் கொண்டுவந்திருந்த போஸ்டர்களை ரயில் பெட்டிகளில் ஒட்டினார்கள். பின்னர் விறு விறுவென்று கிளம்பினார்கள். இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்த போஸ்டர்கள் அது.
பின்னர் கொழும்பிலிருந்து ரயிலில் திரும்பும் போது வவுனியா அண்மிக்கிறது. ரயிலின் சன்னலால் எட்டிப் பார்க்கின்றேன். சிவப்பு மஞ்சள் கொடிகள் நிறைந்து, விடுதலைப் புலிவீரர்கள் பலரின் நடமட்டம் தெரிகிறது. அவர்களில் சிலர் பயணிகளுக்குக் கையசத்துக் காட்டுகிறார்கள். 87ஆம் ஆண்டுக்குப் பிறகு பரவலான தொகையில் அவர்களை நான் இப்போது தான் பார்க்கிறேன். அந்தப் பகுதிகளைச் சடுதியில் கடக்கும் ரயிலிம் வேகத்தை முந்திகொண்டு தெரியும் சுவர்களை நிரைத்திருக்கும் போஸ்டர்களை வாசிக்கிறேன். வீரமரணம், மேஜர் விசு இவற்றைத்தான் படிக்கமுடித்தது.
பிரேமதாசா அரசு வழக்கம் போலத்தன் தேனிலவுச் சமாதானப் போச்சுக்களை நிறுத்தவும் தொண்ணூறாம் ஆண்டு கடைசியாக் காங்கேசந்துறை நோக்கிப் போன யாழ்தேவி அதோட தன்ர பயணத்தை நிறுத்திக்கொண்டாள்.
கோண்டாவில், யாழ் உட்படப் பிரதான ஸ்ரேசன்கள் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிக வாழ்விடங்களாயின. இணுவில் ரயில்வே ஸ்ரேசன் இன்றும் கட்டாக்காலி ஆடு மாடுகளின் புகலிடமாகவும் வீட்டுக்காரருக்குத் தெரியாமல் கூட்டளிகளோடு ஒதுங்கி பீடி, சிகரட், கள்ளுக் குடிப்போருக்கான அந்தப்புரமாக....
அதோட தண்டவாளங்களும் சிலிப்பர் கட்டைகளும் பிளேன் குண்டில இருந்து தப்பிக்க அமைக்கும் பதுங்கு குழிகளுக்கு நல்ல உதவியாகவும் உறுதியாகவும் நின்று உழைத்தன. தண்டவாளம் இருந்த சல்லிக்கல்லுப் பாதை புதர்மண்டி இருந்த இடம் தெரியாமல் இருக்கின்றன. எதிர்காலத்தில யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு, யாழ்ப்பாணத்தில் ரயில்கள் ஓடின என்பதற்கு இவை நிச்சயம் சான்று பகரும்.அந்தக் காலகட்டங்களில் பல பிள்ளைகள் பிறந்து பல ஆண்டுகளாக ரயிலையே கண்டிராததை நான் கண்டிருகின்றேன்.
தொண்ணூற்றி நாலாம் ஆண்டு பல்கலைக் கழக வெட்டுப்புள்ளி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒதுக்கி என்னை வவுனியாப் பல்கலைக்கழகக் கல்லூரிக்குத் துரத்தியது.
திங்கள் முதல் வெள்ளி வரை வவுனியாவில் பல்கலைக்கழக் கல்லூரிப் படிப்பு.
சனி ஞாயிறு கொழும்பில் வணிக முகாமைத்துவப் (CIMA) படிப்பு. வெள்ளிக்கிழமை இரவு வவுனியாவிலிருந்து கொழும்பு ரயிலைப் பிடிப்பதும் பின் கொழும்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வவுனியா ரயிலைப் பிடிப்பதுமாக ஆகா நல்லாக ஆசைதீர அனுபவிக்க ஒவ்வொரு வாரமும் ரயில் பயணம். கொழும்பிலிருந்து ஞாயிறு புறப்படும் ரயிலில் போகச் சனக்கூட்டம் அதிகம் இருக்கும். எனக்கும் கூட வரும் சகபாடிகளுக்கும் இளரத்தம். விடுவோமா, பிளாட்போர்மில் வந்து சனத்தை அள்ள வரும் ரயிலின் வேகம் குறையுமுன்னே பாய்ந்து பெட்டிகளில் நுளைந்து யன்னல் பக்கமாச் சீற் பிடிப்போம். சிலர் இப்படிச்செய்து ரயில் சில்லுகளுக்குள் அவர்களின் கால் போன கதை தெரிந்தாலும் அந்த நேரத்தில் வரும் அசாத்தியத் துணிச்சல் எனக்கு இண்டைக்கும் வராது.
யன்னலால் எட்டிப்பார்க்கும் போது மலைகளும் மடுக்களும், தோட்டங்களும் துரவுகளும், சிக்னல் போஸ்டில் காத்திருக்கும் வாகன அணிகளும், றெயினோடு ஒடிக்கொண்டே கையாட்டி மகிழும் சின்னஞ்சிறுசுகளும், தூரத்தே எதோ ஒரு ஆற்றில் ஜலக்கிரீடை செய்யும் பெண்களும், என்று படைப்பின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டிக் கொண்டே இன்னும் காட்டுகிறேன் பார் என்று சொல்வது போல இன்னும்... இன்னும்... காட்சிப் பதிவுகளைக் காட்டிகொண்டே போகும் ரயில் பயணம்.
ரயிலில் விற்கும் தின்பண்டங்களை வாய்க்குள் அமுக்கிக் கொண்டே அரட்டையும் ஆனந்தவிகடனுமாக அந்த ரயில் பயணம்.
இன்றைக்கும் அந்தப் பயணங்கள் களைப்பை ஏற்படுத்தாத சுகமான நினைவு ஒத்தடங்கள். கூட்டாளிமாரோட பயணித்த அந்த ரயில் பயணத்தை நினைக்கேக்க இப்பவும் கண்களை நனைக்குது.
யாழ்தேவி ரயிலில் ஏறியதும் கிளம்பும் நறுமணமும் இல்லாத நாற்றமும் இல்லாத அந்த நொடியின் வாசனை நாசியில் நிறைப்பதை உணர்கின்றேன்.
ஈழத்தில் எங்கோ ஒரு மூலையில தூரத்தில் புள்ளிகளாக யாரோ சில பிள்ளைகள் ரயில் விளையாட்டு விளையாடுவது போல ஒரு உணர்வு மனதை நிறைக்கின்றது.
" சுக்குபக்கு சுக்குபக்கு கூ, கடகட வண்டி கடுகதி வண்டி போகுது பார்,
சுக்குபக்கு சுக்கு பக்கு கூ"
படங்கள் உதவி: பல்வேறு சிறீலங்கா ரயில்வே தகவல் தளங்கள்
படங்கள் உதவி: பல்வேறு சிறீலங்கா ரயில்வே தகவல் தளங்கள்
21 comments:
பழைய ஞாபகங்களைக் கிளறிறியள் கானா பிரபா. அந்த யாழ்தேவி, உத்தர தேவி, மெயில் ரயில் பயணங்கள் ஒரு கலாதியான அனுபவம் தான். அந்த ரயில் பயணங்களை நினைத்தால் இன்னமும் எனக்கு நினைவுக்கு வருவது அந்த மகுடி பதில் தான்:
தூங்கி விழுந்த தமிழனைத் தட்டி எழுப்பியது யார்?
மகுடி:அநுராதபுரத்தில் ரயிலில் ஏறிய சிங்களப் பிரயாணி.
அருமையான பதிவு. நன்றிகள்.
இரை மீட்டுப் போக வந்தனான்.
மறுபடியும் ஒரு நல்ல பதிவு பிரபா.
இந்த 'வடே வடே' & 'பார்லி பார்லி' யை எந்த ஈழத்தமிழராலும் மறக்கமுடியாது போல. huh!
பழைய இடுகை ஒண்டு -
http://mathy.kandasamy.net/musings/2004/05/01/114
-மதி
>>>அந்தக் காலகட்டங்களில் பல பிள்ளைகள் பிறந்து பல ஆண்டுகளாக ரயிலையே கண்டிராததை நான் கண்டிருகின்றேன்.>>>
என்ர சொந்தக்காரர் ஒருத்தர் 12 வயசில 2002 இலதான் முதன்முதல் நேரில தொடரூந்தைப் பாத்தவர். அதுவரைக்கும் சினிமாப்படங்களிலதான்.
***********
இரசிக்கத்தக்க பதிவு.
பின்னூட்டம் இட்ட சிறீ அண்ணா, அனாமோதய நண்(பி)பர், வசந்தன், மற்றும் மதி உங்களுக்கு என் நன்றிகள். நாம் வாழ்ந்து கழித்த நினைவுகளை இப்படிப் பதிவு செய்வதிலும் என்னுடைய எண்ணவேட்டம் போலவே நம் நாட்டுநினைவுகளோடு தங்களும் இருப்பதும் கண்டு ஆறுதலும் மகிழ்வும் அடைகின்றேன்.
மகுடியின் காலத்தால் அழியாத பதிலும், மதியின் பழைய இடுகையும் சிறப்பாக இருக்கின்றது.
"கொழும்பு ரயில்! இன்ரசிற்றி! சொகுசிருக்கை
எழும்பு என்று சொல்லுமுன்பே கொழும்பு போகும்"
இது பாடலா அண்ணா?
//இது பாடலா அண்ணா//
இது நீண்ட கவிதை ஒன்றிலிருந்து எடுத்த இரு வரிகள். மட்டிக்களிக் கவிராசன் என்பவர் எழுதியது. அந்தக் கவிதையிலிருந்து மேலும் சில வரிகளைத் தருகிறேன்:
"வருது வருது அனுராதபுரம் வருது...
எங்கடை ஊர் இனிப் போச்சுது
எங்கடை 'அப்பிட்ட எப்பா' இப்போ வருது
தமிழ் மக்களைத் தட்டி எழுப்பும்
சிங்கள மக்கள் ரயிலில் புகுந்த
சிரித்திரன் பகுடி இப்போ வந்தது!"
இன்னும் சில வரிகள்:
"இறாகமை தாண்டிச் செல்கையிலே
ஊரைப் பார்த்து ஓரவன் அழுதான்!
பெறாத மகனே அழுவது எதனால்
சொல்லுக என வினாவிக் கேட்டேன்!
எங்கடை மச்சான் கந்தசாமி
ஆண்டு 58 தனிலே...
அடித்து எறிந்த புண்ணிய பூமி
இது எனப் புகன்றான்
விக்கல் எடுத்த அவன் பேச்சில்
தக்கி நின்று தடுமாறிப் போனேன்"
இப்படி நீண்டு போகிறது கவிதை.
//அந்தக் காலகட்டங்களில் பல பிள்ளைகள் பிறந்து பல ஆண்டுகளாக ரயிலையே கண்டிராததை நான் கண்டிருகின்றேன். //
" அம்மா.. அம்மா.. ரெயினுக்கும் ஹெலிகொப்ரர் மாதிரி பெரிய காத்தாடி இருக்குமோ.." - சிறுவயதுச் சயந்தன்-- ஹிஹி.. என்ர வயதை எவ்வளவு குறைத்துவிட்டன்..?
வணக்கம் கானா பிரபா
இன்றுதான் உமது வலைப்பூவை படித்தேன். இயல்பான எழுத்து. தாயக ஏக்கம். இலக்கிய முகம் தெரிகின்றது. வாழ்த்துக்கள்.
கி.பி.அரவிந்தன்
சயந்தன் தம்பி
நன்றி உங்கள் பதிவிற்கு.
இந்தச் சிறியவயசிலும் இவ்வளவு அழகாகத்தமிழ் எழுதியிருக்கிறீர்கள்:-)
கி.பி.அரவிந்தன் அண்ணா
போராட்ட வாழ்வியலோடு வாழ்ந்தும், வரலாற்றின் வடுக்களை இலக்கியத்தில் பதிவு செய்துவரும் தங்களின் கருத்து எனக்கு மிகவும் உற்சாகமூட்டுகின்றது.
மிகுந்த நன்றிகள்.
வணக்கம்.
ரயில் அனுபவங்களைத் தூண்டி விட்டிருக்கிறது உங்கள் பதிவு.என்னையும் அக்காவையும் மாமா ஒரு நாள் ரெயின்ல கூட்டிக்கொண்டு போனார்.ரெயின்ல தொங்கட்டானை துலைச்சுப்போட்டு அழுதழுது போனான் வீட்ட.அதுக்குப்பிறகு ரெயின்ல ஏறவே பயம்.ஆனால் மாத்தளையில இருக்கும்போது ரியூசனுக்கு ஒவ்வொருநாளும் ரெயின் தான்.2ம் வகுப்பில படிச்சதெயல்லாம் ஞாபகம் வச்சிருக்கிறீங்கள். "வட வட பார்லி" நான் கேள்விப்படலையே.மதி அக்கா எந்த ரெயின்ல வாங்கிச் சாப்பிட்டனீங்கள்:-)
வணக்கம் சினேகிதி,
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, மறக்கமுடியாத சில பழைய ஞாபகங்களில் ஒண்டு தான் ரண்டாம் வகுப்பு நினைவு:-)
79 - 83;காலப் பகுதியில் பதுளையில்,வேலை செய்த பொழுது; யாழ்தேவியுடன் உடரட மெனிக்கே அனுபவமும் நிறைய உண்டு. 20 மணி நீண்ட மறக்க முடியாத பயணங்களும் மக்களும்.....சிங்கள மக்களுடனான துர்ச்சம்பவங்களையே நினைவு கூர்கிறோம்.நல்லனுபவங்கள் இல்லாமலா? மறைக்கிறோமா?
இந்த வண்டியில் ,இன்னுமொன்றும் ;நம் தமிழ்ச் சில வயதாளிகள்,பக்கத்திலிருப்பவரை குடைந்தெடுப்பார்கள்; வேறு என்ன? "சாதி" அறியத்தான்; அரசவண்டியில் கூட பக்கத்தில் ஒதுக்கப் பட்டவர்களுடன் ;இருந்துவிடக்கூடாதெனும் "கொள்கை"ப் பிடிப்பு!!!!;அனுராதபுரத்துக்கங்கால எல்லோருடனும் இருப்பார்கள். இதை மிக அழகாக "மல்லிகை -டொமினிக் ஜீவா" தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.இன்றைய தலைமுறைக்கு சில வேளை புதினமாகவிருக்கலாம். நாங்கள் நமடுச் சிரிப்போடு பார்த்து இரசித்த கூத்துக்கள்.
மறக்க முடியாத பயணங்கள்.அப்படியான பயணானுபவங்களை இனிவரும் தலைமுறை பெறுமென;நான் எதிர்பார்க்கவில்லை.
நன்று தொடரவும்.
யோகன்
பாரிஸ்
வணக்கம் யோகன்,
என்பதிவுகளை வாசித்துத் தாங்கள் பதில் பின்னூட்டமிடும் போது சுவையான தங்கள் அனுபவங்களை இடுவதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மறக்க முடியாத பயணங்கள்.அப்படியான பயணானுபவங்களை இனிவரும் தலைமுறை பெறுமென;நான் எதிர்பார்க்கவில்லை.
உண்மைதான்.
இந்த நாட்டிற்கு வந்து என்னதான் சொகுசு ரயிலில் பிரயாணம் செய்தாலும் அந்த ரயிலுக்கு ஈடாகுமா? நல்ல ஒரு பதிவு. பழைய ஞாபகங்களை அசைபோட வைத்தது.
வணக்கம் தர்சன்
தங்களின் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்.
உள்ளதைச் சொல்லவேட்டும் பிரபா!
என்னனுபவங்களை,உங்களுடன் உரசிப் பார்க்கும் கலையை உங்களிடம் தான் கற்றேன். உங்கள் பாணி எனக்குப் பிடித்தது. காலக்கட்டம் வித்தியாசமாக இருந்தாலும் நம் அனுபவங்கள்;ஒன்றாக உள்ளது.ஏனையவையும் வாசித்து என்கருத்திடுவேன்.
மேலும்;மார்ச் 8 ;2006 ,தமிழ்மணத்தில்;திரு.குமரன் அவர்களின் பக்கமான "கூடலில்"; 156 வது கட்டுரையாக ,என் கட்டுரை "ஈழத்தின் இசை வளர்ச்சியில் நாதசுர,தவில் கலைஞர்களின் பங்கு" என்பது வந்துள்ளது. நீங்கள் படித்து ,கருத்துக் கூறவேண்டுமென விரும்புகிறேன்.சுமார் 10 வருடங்களுக்கு முதல் எழுதப்பட்டது. எனக்கு கணனிவிடயங்கள் சரிப்படாததால்,திரு.குமரன் இவ்வுதவி செய்தார்.
நன்றி
யோகன்
வணக்கம்யோகன்
தாங்கள் யார் என்று இப்பொழுது
தான்தெரிகிறது,உங்கள்கட்டுரையை இருவாரம்முன்னரே வாசித்து
மகிழ்ந்தேன்.
தங்களின் இப்பதிவை நான் நடாத்தும் " முற்றத்து மல்லிகை" என்ற வானொலி நிகழ்ச்சியில் ஒருபகுதியாகக் கொடுத்திருந்தேன். நல்லதொரு கட்டுரை, எமது உணர்வோடும், பாரம்பரியத்தோடும் ஒன்றிவிட்ட இக்கலையின் நிலை பற்றிய அழகான பார்வை இது.
வாழ்த்துக்கள்.
அருமையான நினைவுகள்.
Post a Comment