
கடந்த ஆகஸ்ட் 13, 2006 ஆனந்த விகடனை நோட்டமிட்டபோது கண்ணில் பட்டது வாரியார் சுவாமிகளுக்கு வயது 100 என்ற அருமையான கட்டுரை. 25 - 08 - 1906 இல் வேலுரில் அவதரித்த கிருபானந்த வாரியார் சுவாமிகள், தன் ஆன்மீகப் பணிகள் மூலம் 64 ஆவது சிவத்தொண்ட நாயனார் என்கிற அந்தஸ்தைப் பெற்றார். உங்களின் வாழ்வின் முடிவு எப்படியிருக்கும் என்று ஒருவர் கேட்டதற்கு , " என் அப்பன் முருகன் எனக்கு மயிலை அனுப்பி , ஒரு கஷ்டமும் நேராமல் அப்படியே என்னை அழைத்துக் கொள்வான்” என்றார் வாரியார். லண்டனின் ஆன்மீகத் சொற்பொழிவாற்றிவிட்டுத் தாயகம் திரும்பி வந்துகொண்டு இருந்தபோது வாரியாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, விமானத்தில் பறந்துகொண்டு இருந்தபோதே, 7.11.1993 அன்று அதிகாலை உயிர் பிரிந்து, முருகன் அனுப்பிய மயிலில் முருகனடி போய்ச் சேர்ந்தது .80 களின் ஆரம்பப்பகுதியில் தனது ஆன்மீகச் சொற்பொழிவுப் பயணததினை நடாத்த யாழ்ப்பாணம் வந்த வாரியார் சுவாமிகள், எங்களுர் செல்வந்தரும் எனக்குப் பாட்டனார் முறையான உறவினர் வீட்டுக்கு வாரியார் சுவாமிகள் வந்த நிகழ்வும், பேச்சின் நடுவே தானே இரசித்துத் தன் தொந்தி வயிறும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த காட்சியும் என் சிறுவயது ஞாபகத்தில் கறுப்பு வெள்ளைப் படமாக நிரந்தரமாக ஒட்டிக்கொண்டு விட்டது. பின்னாளில் நான் வாரியாரின் சொற்பொழிவு ஒலிப்பேழைகளைக் கேட்கும் காலம் தோறும் அந்தத் தெளிந்த நீரோடை போன்ற வாரியாரின் பேச்சில் வசீகரிக்கப்பட்டேன்.
சேக்கிழார் சுவாமிகள் தன் திருத்தொண்டர் புராணத்தில் 63 மூன்று நாயன்மாரின் ஆன்மீகப் புகழ் வரலாற்றைச் சொல்லிப் போனபோது ஒரு கட்டத்தின் "அடியார்க்கும் அடியேன்" என்று குறிப்பிடுவது போல் நாம் வாழும் காலத்தில் , கடந்த நூற்றாண்டின் மாமணிகளில் ஒருவராக இவ்வையகம் வந்து,பாமரமக்களிற்கும் ஆன்மீக அறிவை வளர்த்த அந்தப் பெருந்தகைக்கு "இராமர் அணைக்கு அணில் போட்ட மணல்" போல நேற்றைய செப்டம்பர் 09, 2006 எமது இன்பத்தமிழ் வானொலியில் நான் படைக்கும் கருத்துக்களம் என்ற நிகழ்ச்சின் முதற்பாதியை வாரியார் சுவாமிகள் பற்றிய நினைவுப் பதிவாகவும், ஈழத்துக்குச் சுவாமிகள் வந்தபோது அவரைத் தரிசித்து சொற்பொழிவுகளைக் கேட்ட அன்பர்களின் நினைவு மீட்டலாகவும் என் பங்கிற்குப் படைத்திருந்தேன்.
சீரணி நாகம்மாள், வல்வை அம்மன், உசன் கந்தசுவாமி கோவில், மஞ்சவனப்பதி முருகன் என்று பல ஈழஸ்தலங்களின் வாரியார் சுவாமிகளின் பாதம்பட்டது குறித்தும், அவுஸ்திரேலிய மெல்பன் தமிழ்ச்சங்கம் இவருக்கு முத்திரை வெளியிட்டுச்சிறப்பித்தது குறித்தும் அன்பர்கள் பேசுகின்றார்கள். அதன் ஒலிவடிவத்தை இங்கு தருகின்றேன்.
ஒலிப்பதிவைக் கேட்கக் கீழ்ச்சுட்டிகளை அழுத்தவும்.
முன்னை நாள் அகில இலங்கைக் கம்பன் கழகத் தலைவரும், தற்போது சிட்னி வாழ் தமிழ் அறிஞருமான
திரு. திருநந்தகுமாரின் வாரியார் சிறப்புப் பகிர்வு.
கேட்க
எமது வானொலியின் பெருமைக்குரிய நேயர்களின் வாரியார் சுவாமிகள் குறித்த அனுபவப் பகிர்வு.
கேட்க
கடந்த ஏப்ரல் 2006 நான் தாயகம் சென்றபோது செய்த உருப்படியான வேலைகளில் ஒன்று, எங்கள் வீட்டில் இருந்த பழைய புகைப்பட ஆல்பத்தைப் பத்திரமாக நான் நான் வாழும் நாட்டுக்குக் கொண்டு வந்தது. அதில் எம் ஊருக்கு வந்த சில பிரபலங்கள் எமது பாட்டனார் வீட்டுக்கு வந்த போது எடுத்த படங்களும் அடக்கம். அந்த வகையில் வாரியார் சுவாமிகள் ஈழம் வந்த போது எடுத்த படத்தையும் சிறப்பாக இங்கு தந்திருக்கின்றேன்.
அன்புடன்
கானா.பிரபா
