பதுங்கு குழிகளும்
தறப்பாள் கொட்டில்களும்
ஓலமிட்டுக் கதறியிருக்கும்”
ஈழத்துப் படைப்பாளிகள் புனைவுகளை எழுத வேண்டிய தேவை இருக்காது. தாம் வாழ்ந்த வாழ்க்கையின் படிமங்களை அப்படியே கொடுத்தாலே போதும் அதுவொரு கனத்த இலக்கியமாக அமைந்து விடும்.
அங்கே இன்னொரு அம்சமும் தொக்கி நிக்கின்றது. அந்த வாழ்வின் இருப்பு குறித்த பகிர்வுகள் கதைகளாகவோ, கட்டுரைகளாக மட்டுமல்ல, கவிதைகளில் கூடக் கையாளப்படும் சூழலில் அங்கே வரலாறு தேக்கப்படுகிறது. ஒரு சிறு கவிதைக்குள் மிகப் பெரிய அநர்த்தத்தையோ, அந்த இன்னலில் அகப்பட்ட மனிதர்களையோ அடையாளப்படுத்த முடிகிறது.
“கரிகால தேசத்துக் காதலி” என்ற பிரபா அன்பு பகிர்ந்த கவிதைத் தொகுதியும் முன் சொன்ன “வரலாற்றைக் கடத்தி” ஆகவே விளங்கி நின்ற்கின்றது.
இந்தக் கவிதைகளில் இரண்டு பரிமாணங்களில் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
“நானும் காதலித்தேன்
ஆனால் எனக்குள்
பட்டாம்பூச்சி பறக்கவில்லை
எனக்கு முன்பாக
தோட்டாக்களே பறந்தன”
இவ்விதம், தன்னவன் பிரிவின் ஆற்றாமையால் எழுந்த அக உணர்வுப் பகிர்வுகள்.
இரண்டு, தன்னோடு உயிருக்குயிராய் வாழ்ந்திருந்து மடிந்த, களத்தில் நின்ற அந்த வீர மங்கையரின் இழப்பில் முகிழ்த்தவை.
பிரபா அன்பு தான் எடுத்துக் கொள்ளும் களம் குறித்த அச்சொட்டான கவிதைப் படிமம், அந்தச் சூழலின் முரண் நிலை எப்படியிருக்கும் என்பதைப் புரட்டிப் போட்டுப் பார்க்கும் பண்பு இவற்றோடு கவிதைகளைப் படைத்திருக்கிறார்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி அந்தக் களத்தில் நின்ற உறவுகளின் குணாம்சங்களை வைத்தே அவர்களை அடையாளப்படுத்தும் பாங்கில் தான் ஒரு பெரும் வலியை நம்முள் கடத்துகிறார். அந்த நாலைந்து வரிகளாலேயே முகம் தெரியாத அந்த வீர மங்கையருக்கான முகவரியைக் காட்டுகிறார்.
எழில் அக்கா பற்றி
“மடிப்புக் குலையாத
ஆடை அணிந்து
வசீகரிக்கும் புன்சிரிப்போடு
நிமிர்ந்த நடையில்
பவனி வருவாயே..”
பாசமலர் பற்றி
“களத்தினில்
ஒற்றைக் கையை
இழந்த போதும்
குழந்தைச் சிரிப்போடு நீ
துள்ளி வருவதைப் பார்த்து
கலங்கி நின்றவர்கள் நாங்கள்”
“யாழ்
உன் புகைப்படத்தைப்
பார்த்துக் கேட்கிறேன்
ஏனடி இந்தக் கோபப் பார்வை…”
“நிசப்தம் நிறைந்த
நடுநிசிப் பொழுதில்
வட்டமிட்டுச் செல்லும்
மின்மினியை
ஓடிச் சென்று
அள்ளி எடுக்கும் சமர்க்கனி…”
என்று தன்னோடு களத்தில் நின்ற ஒவ்வொரு சகோதரிகள் பற்றியும் அவர்களின் குணாதிசியத்தோடே கொடுக்கிறார்.
கார்த்திகையின் வளர்ச்சி என்ற கவிதையில் போர் தந்த விளைவில்
ஒவ்வொரு பெண்களின் வெவ்வேறு வலிகளைப் பதிவு செய்கிறார்.
நாம் இப்படியெல்லாம் வாழ்ந்திருந்தோம் என்பதைக் காட்ட
“பொன்னாரசு
பூத்திருக்கும் விசுவமடுவும்
நீர்வேலி கதலி வாழை இனிப்பும்
மன்னார் கட்டுக்கரைக் குளத்தின்
வெள்ளலைதின் நுரைப்பூக்களும்”
நாம் பயிற்சி பெற்ற இடம் இன்னதுதான், இங்கே இவர் இப்படி நின்றிருந்தார், அந்தத் தோழி என்ன செய்து கொண்டிருந்தார், அந்தப் பயிற்சி முகாமிலும் சீருடைக்குள் வைத்த தேசிக்காயை எடுத்து என்ன செய்தோம் இப்படியெல்லாம் கொண்டு போகும் “உலுவிந்தம் பழம்” “அமுதசுரபி” கவிதைகளில் அப்படியே இருண்ட காலத்தில் நிறுத்தி இவற்றுக்கெல்லாம் என்னென்ன நடந்தது பாருங்கள் என்று சொல்லுகிறார்.
“ரோபோவைப் போல்
ஓடு தளத்தில்
ஓடிச் செல்லும் நளாயினியும்
காணாமல் ஆக்கப்பட்டு விட்டாள்”
அங்கே தான் இந்த வரலாற்றுக் கடத்தியின் எழுத்தின் ஆழம் துலங்குகிறது.
“அந்தக் காட்டில்
பறிக்கப்படாமல்
உதிர்ந்து கிடக்கின்றன
உலுவிந்தம் பழங்கள்”
“அண்ணனின்
அகவை நாளிற்கு
வாழ்த்துக் கீறிப் பழகிய இடமோ
சருகுகளால் மறையுண்டு கிடக்கிறது”
கானா பிரபா
15.08.2026


0 comments:
Post a Comment