இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அமைந்துவிட்ட சம்பவம் என்பதால் இதை நான் எழுதுகின்றேன்.இப்பதிவில் நான் சொல்லப்போகும் அனைத்து நிகழ்வுகளும் கலப்படமில்லாத உண்மை.
கடந்த மாதம் பெங்களூரிற்கு வேலைத்திட்டம் காரணமாகச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். இப்படியான கடந்த என் பெங்களூர்ப் பயணங்களிலும் வார இறுதிநாட்களைச் சென்னையில் தான் செலவிட்டேன். நமது சொந்த ஊருக்குப் போன அனுபவம் கிடைக்கும் என்பது முதற் காரணம்.
அது போலவே இம்முறையும் வார இறுதி நாட்களைச் சென்னையில் கழிப்பதாக உத்தேசித்துக்கொண்டேன். என்னோடு வேலைபார்க்கும் இரு சீனப்பெண்களும் சென்னையைப் பார்ப்பதற்காக என்னோடு ஊர்சுற்ற வந்தார்கள்.
சனிக்கிழமையன்று நாங்கள் ஒழுங்கு செய்த வாடகைக்கார் மூலம் மகாபலிபுரம் செல்வதாக ஏற்பாடு. காலையில் சீக்கிரமாகவே கிளம்பி எங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு காரில் பயணித்தோம். வாடகைக்கார் சாரதி மது மிகவும் நட்புடன் தன் வாழ்வியல் அனுபவங்களையும் நடப்பு தேர்தல் நிலவரங்களையும் பகிர்ந்துகொண்டே வண்டியை ஓட்டினார்.
"சார் மகாபலிபுரத்தை நாம சீக்கிரமாவே போயிடலாம், நிறைய நேரமிருக்கு, உங்களுக்கு ஆட்சேபணை இல்லேண்ணா நாம சிதம்பரம் போய் வரலாம்" இப்படியாகப் பயண இடைவழியில் மது கேட்டார்.
எனக்கும் அது சரியாகப்பட்டது. சீனத்தோழிகளிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி நான் விளக்கியபோது சந்தோஷத்துடன் இதற்கு ஆமோதித்தார்கள். எமது பயணம் சிதம்பரம் நோக்கிப்போனது.
"மதியம் நடை சாத்துறத்துக்கு முன்னாலயே போயிடலாம் சார்" என்று சொல்லிக்கொண்டே காரின் வேகத்தைக் கூட்டினார் மது.
ஒருவழியாகச் சிதம்பரம் வந்து சேர்ந்தோம். கார்க் கதவைத்திறக்கும் போது தன் கைக்குழந்தையோடு "ஐயா...சாமீ! பிச்சை போடுங்கையா" என்ற ஈனசுரதுடன் ஒரு இளம் பிச்சைக்காரி.
"வரும்போது பார்க்கலாம்" என்று நான் சொல்லிக்கொண்டே நடக்கும் போது ஒருவர் பலராகி எம் நடைப் பயணத்தின் பின்னால் யாசித்துக்கொண்டே வந்தார்கள்.
பாதணிகளை ஒரு கடையில் வைத்துவிட்டுத் திரும்பும் போது மது சொன்னார், " ஜாக்கிரதை சார், கண்டபடி யார்கிட்டையும் பேச்சுக்கொடுக்காதீங்க".
நானும் மற்றய இரண்டு சீன நண்பிகளும் கோயிலை நோக்கி நகரும்போது
"சார்..சார்.. நான் கைடு சார்..." என்றவாறே நைந்துபோன வேஷ்டியும் புழுதி சாப்பிட்ட வெள்ளைச்சட்டையுமாக ஒரு முதியவர்.
"வேணாம் சார், அதெல்லாம் நாம பாத்துக்கிறோம்" இது நான்.
அவரோ விடுவதாக இல்லை, தனக்குத் தெரிந்த ஆங்கில மொழியில் கோயில் வரலாற்றைச் சொல்லிக்கொண்டே வந்தார். எமது கவனம் அவர்பால் இல்லை என்று தெரிந்ததும் தன் வழியே திரும்பிச்சென்றார். இவையெல்லாம் நான் எதிர்பார்த்தவை தான், எனவே எனக்கு அதிகம் அவை அசெளகரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் கோயிலுக்குள் நுழைந்தபோது நடந்தது தான் இன்னும் என்னால் மறக்கமுடியாத சினத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக மாறிவிட்டது.
கோயிற்பிரகாரங்களைச் சுற்றி வரும் போது சீனப்பெண்களுக்கு ஒவ்வொன்றாக விளக்கியவாறே தரிசனை செய்துகொண்டு வந்தேன். ஒரு பிரகாரத்திலும் இப்படி நாம் வரும் போது திடீரென ஒரு குரல், "
Madam! You have to sign this visitor book " இப்படி ஒரு கட்டளை ஒரு அர்ச்சகரிடமிருந்து வந்தது. இவர்களை மட்டும் கேட்பதன் மர்மம் என்ன என்று மனதுக்குள் நினைத்து, சீன நண்பிகளைத் தடுத்துவிட்டு நான் என்ன அந்தப் பதிவேட்டைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்ட ஒருவிடயத்தைச் சடுதியாகக் கண்டுவிட்டேன்.
" நாங்க தரிசனம் முடிச்சாப்புறம், வந்து பதிவைப் போட்டுர்ரோம்" இப்படி நான் அந்த அர்ச்சகருக்கு பதிலளிக்கும் போது
" அதெல்லாம் முடியாது, அவுங்களை இதில எழுதச்சொல்லுங்கோ" என்ற அந்தக் குரல் வந்த திக்கைப் பார்த்தேன். இளம் அர்ச்சகர்கள் நான்கு பேர் அமர்ந்திருந்த திக்கில் இருந்து வந்த ஒரு அர்ச்சகரின் குரல் தான் அது.
"இல்லீங்க, நாங்க திரும்ப வந்துடறோம்" என்று சொல்லி விட்டு என்னோடு வந்த சீனப் பெண்களிடம் ஒன்றும் செய்யாமல் வாருங்கள் என்று இரகசியமாகக் கட்டளையிட்டுவிட்டுத் திரும்பும் போது
அதே இளம் அர்ச்சகர் எம்முன்னால்.
"இப்ப நீங்க இதில எழுதாமப்போனாப் பெரிய பிரச்சனையாயிடும்" என்றவாறே தன் வேட்டியை சற்றுமேலாக வரித்துக்கட்டிகொண்டே எம்மை நோக்கி வந்தார். நான் நிற்பது சரித்திரப் பிரசித்திபெற்ற கோயிலா என்று ஒருகணம் திகைத்தேன், ஆனாலும் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டே
" எதுக்கு இப்படி டார்ச்சர் பண்றீங்க" என்று என்குரலில் கடுமையை ஏற்றிக்கொண்டேன்.
" இது நம்ம ஆலயத்தோட வழக்கம், ஆலய முகப்பில கூட எழுதியிருக்கு" இது அந்த ஐயர்.
நான்:சரி வாங்க பார்க்கலாம், எங்க எழுதியிருக்குன்னு
ஐயர்:அதெல்லாம் காட்டமுடியாது, இவங்க இப்ப sign பண்ணீட்டுத்தான் போகணும். "
நான்: ரொம்ப பிரச்சனை பண்ணாதீங்க அப்புறம் போலீஸ் போகவேண்டியிருக்கும். நாந்தானே சொல்றேன், வரும் போது பார்த்துக்கலாம்னு.
பக்தர்கள் எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் தம் தொழுகையைத் தொடர்ந்தனர்.
அந்த இளம் ஐயர் கொஞ்சம் பின்வாங்கி " ஆலயதர்சனம் முடிஞ்சதும் இங்க வந்துடணும்" என்று உறுமிவிட்டுத் தன் சகாக்களுடன் போய் இருந்தார். அவர்கள் ஏதோ பேசிச்சிரிப்பது கேட்டது.
என்னுடன் வந்த சீனப் பெண்களுக்கு நிலைமையின் விபரீதம் விளங்கியதும் முகம் வெளிறிவிட்டது.
என்னோடு வந்த சீனபெண்களில் ஒருத்தி என்கைகளை இறுகப்பற்றி "let's go Praba" என்றாள். வேண்டாவெறுப்பாக நான் அவர்களை அழைத்துக்கொண்டு பிரகாரச்சுற்றலில் மீண்டும் இறங்கியபோது கையை ஆட்டிக்கொண்டே ஒரு முதியவர் வந்தார். "அவுங்க அப்பிடித் தான், நீங்க ஓண்ணும் செய்யாதீங்க" என்று என்னருகில் வந்து இரகசியமாகக் கிசுகிசுத்தார்.
வரும் பிரகாரங்கள் ஒவ்வொன்றும் அர்ச்சகர்கள், அவர்கள் கண்களுக்கு உள்ளூர்வாசிகளைவிட எம்மைத் தான் தெரிந்தது போலும், "வாங்க சார், வந்து பிரசாதம் வாங்கிக்கோங்க" என்று எம்மை இலக்கு வைத்தார்கள்.ஆலயதரிசனத்தில் மனம் ஒன்றவில்லை.
என்னதான் நான் அந்த இளம் ஐயரோடு முரண்டு பிடித்தாலும் அந்நியப் பிரதேசத்தில் இருக்கிறோமே என்ற பய உணர்வும் வந்தது.
இருள்கவ்விய உட்பிரகாரத்தில் சுற்றிவந்த பக்தர்களைத் திரும்பத்திரும்பப் பயத்துடன் பார்த்தவாறே
நாங்கள் எவ்வளவு விரைவாகக் கடக்கமுடியுமோ அவ்வளவு விரைவாக நடையின் வேகத்தைக் கூட்டி ஆலய முகப்புப் பகுதிக்கு வந்தோம். "சார், நீங்க பணம் கட்டீட்டுப் போங்க நாம பிரசாதத்தை மெயில்ல அனுப்பிச்சுர்ரோம்" மூலஸ்தானத்திலிருந்து வெளிப்பட்ட இன்னொரு ஐயரின் குரல் அது. "இல்லீங்க, அப்புறம் வர்ரோம்" என்றவாறே சீன நண்பிகளை அழைத்துக்கொண்டு வேகமாக வெளியில் வந்தேன்.
வெளியில் எங்களுக்காகக் காத்திருப்பதுபோல் நின்ற ஒரு தம்பதி தங்களைத் தென்னாபிரிக்கா வாழ் இந்திய வம்சாவளி என்றும், தங்களையும் இப்படி எமக்குச்சொன்னதுபோல் செய்யச் சொன்னதாகவும் பிறகு ஆளுக்கு 100 அமெரிக்கன் டொலர் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் அந்தப் பெண் கவலையுடனும் பயத்துடனும் கூறினார்.
நான் சடுதியாக அந்தப் பதிவேட்டைப் பார்த்தபோது அதில் ஆட்களின் பெயர்களும் அவர்கள் தம்கைப்பட எழுதிய பணத்தொகையும் இருந்ததை மீண்டும் எனக்கு நினைவுபடுத்தினேன்.
"என்ன சார், தெப்பக்குளம் பார்த்தீங்களா? எல்லாப் பிரகாரங்களும் போனீங்களா?" வாசலில் நின்ற மது கேட்டார்.
" அடப்போங்க சார்" என்றவாறே சினத்தோடு நடந்தவற்றைக்கூறினேன்.
"இப்பெல்லாம், தனியாளுங்க தான் ஆலயத்தோட நிர்வாகம், எல்லாமே தலைகீழ்" என்று செருப்புக் காவல் வைத்த கடைக்காரர் சொன்னர்.
எம்மை மனக்கிலேசத்திற்கு உட்படுத்திய அந்த இளம் அந்தணருக்கு இந்தத்திருக்குறள் சமர்ப்பணம்.
"அந்தணர் அன்போர் அறவோர் மற்றெவுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுகலான்"(எல்லா உயிரினங்கள் மேல் தயை உள்ளம், தர்மத்திலே ஈடுபாடு, விரதங்களிலே பற்று இவைகளையெல்லம் கொண்ட துறவிகளே அந்தணர்கள் எனச்சொல்லப்படுகிறார்கள்.)
தம்வாழ்க்கைச் செலவினங்களுக்காக ஆலயத்தைப் பராமரிப்பவர்கள் கோயிலை வைத்து வருமானம் பார்ப்பதில் தப்பில்லை அதற்காக இப்படியான மிரட்டல் வழிகள் ஒருபுனிதமான ஆலயத்தின் சிறப்பையும் கெடுத்து, வழிபடவருவோரிற்கும் மனச்சுமையை ஏற்படுத்தும்.
"சோழ பாண்டிய மன்னர்களால் கட்டிக்காப்பற்றப்பட்ட சிதம்பரம் ஆடல்தெய்வம் நடராஜரின் சிறப்பு மிகு ஆலயம், பொற்கூரை வேயப்பட்ட கர்ப்பக்கிருகமும் தெப்பக்குளமும் அணி செய்யச் சைவமத்தின் நிலைக்களனாக விளங்குகின்றது"
"நந்தனாருக்கு சுவாமி தரினம் தரத் தில்லை நடராஜப்பெருமானே "சற்றே விலகியிரும் பிள்ளாய்" என்று நந்திக்குக் கட்டளையிட்டு விலகச்செய்ததும், தில்லை நடராஜரின் ஆனந்தத் தாண்டவத் தரிசனமும், தில்லை மூவாயிரவர் என்று ஆண்டவனைத் தோத்தரித்த அந்தணர்கள் என இதன் வரலாற்றுப்பெருமையை இன்னும் நீட்டும்.
பாலா மாஸ்டர் இந்துநாகரிகம் வகுப்பில் படிப்பிக்கும் போது கற்பனையுலகில் அதைஉருவகித்து வியந்தது ஒருகாலம்,
கண்முன்னே எம்மதத்தவரே அதைச் சீர்க்கெடுப்பது நிகழ்காலம்.
வெளியில் வந்தபோது நின்ற பிச்சைக்கரர்கள் கண்ணியமானவர்களாத் தெரிந்தார்கள்.
மனநிறைவு ஏற்படாத என் சிதம்பர ஆலயதரிசனத்தைத் தாயகம் சென்று ஈடுகட்டுவது என்று நினைத்துக்கொண்டேன். திருமூலரால் சிவபூமி என்றி சிறப்பிக்கப்பட்டது நம் ஈழவளநாடு.
வடக்கே திருக்கேதீஸ்வரம், வடமேற்கே முன்னேஸ்வரம், கிழக்கே திருக்கோணேஸ்வரம்,தெற்கே பொன்னம்பலவாணேஸ்வரம், தென்மேற்கே காலிநகர்ச்சிவன்கோவில் என்று ஐந்து திக்குகளிலும் சிவ ஆலயங்களால் சூழப்பட்டது இலங்கைத்தீவு. சிறப்பாக "ஈழத்துச்சிதம்பரம்" என்று சிறப்பிக்கப்படுவது காரைநகர்ச்சிவன்கோவில்.
இம்முறை யாழ்ப்பாணம் சென்றபோது காரைநகர்ச்சிவன்கோவிலுக்கு செல்லவேண்டும் என்று நினைத்தும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.

கொழும்பு வந்தபோது பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு எப்படியாவது போவது என்று தீர்மானித்துக்கொண்டேன். வெள்ளவத்தையில் வைத்துப் புறக்கோட்டைக்குப் போகும் பஸ்ஸில் தாவிப் புறக்கோட்டை வந்தேன். ஆட்டோ மூலம் கோயிலுக்குப் போகலாம் என்று நினைத்து ஒரு ஆட்டோவை அழைத்தேன். சாரதி ஒரு சிங்களவன் என்பதால் நான் கேட்ட "பொன்னம்பலவாணேஸ்வரம்" தெரியாது திருகத் திருக முழித்தான்.



சட்டென்று யோசனை வந்து "கொட்டகேனா சிவன் கோயில்" என்றதும் தலையாட்டிக்கொண்டே போகலாம் என்றான். நான் சொன்ன கொட்டகேனா சிவன்கோயில் பொன்னம்பலவாணேச்வரர் கோயிலாக இருக்கக்கடவது என்று பிரார்த்தித்துக்கொண்டேன். நல்லவேளை ஓட்டோவும் பொன்னம்பலவாணேஸ்வரத்தில் தான் வந்து நின்றது. எனக்கு நினைவு தெரியாத நாளில் சிறுவயதில் நான் வந்த கோயில்.
இப்போது தான் இதன் கலையழகை நின்று நிதானித்து இரசிக்கமுடிந்தது. எழில் தரும் கருங்கற் சுரங்கமாக அமைதியான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது. முழுக்க முழுக்கக் கருங்கல் வேலைப்பாடோடு அமைந்த இவ்வாலயம் நூற்றாண்டு கடந்தும் அதே சிறப்போடு விளங்குகின்றது. 1856 இல் செங்கற் கொண்டு
சேர் பொன் இராமநாதனின் தந்தையாரால் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இவ்வாலயம் பின்னர் சேர் பொன் இராமநாதனால் 1906 ஆம் ஆண்டில் புனருத்தானத்திற்காக இடிக்கப்பட்டு 1907 - 1912 வரையான ஆண்டுகளில் முழுமையான கருங்கல் வேலைப்பாட்டோடு மீள எழுந்தது. 


பாடசாலையில் எமது சித்திரவகுப்பு ஆசிரியர் மாற்கு அவர்கள் இந்தக் கருங்கல் வேலைப்பாடு கொண்ட ஆலயத்தின் சிற்பக்கலைநயத்தை விதந்து பாடம் எடுத்தது நினைவுக்கு வந்தது. ஆலயம் அன்று போல் இன்றும் தன்சிறப்புக்கெடாது பராமரிக்கப்படுகின்றது.ஆலய உள்வளாகத்தில் படம் பிடிக்க அனுமதியில்லை. படக்கமராவில் ஆலய வெளிவளாகத்தைச் படம் சுட்டுக்கொண்டேன்.சிற்பங்களில் கை போடாதீர் என்றும் அறிவுறுத்தப்படுகின்றன. எந்தவித இடையூறும் இன்றி மனச்சாந்தியோடு எம்பெருமான் சன்னிதியை வலம் வந்தேன். மனதில் பாரம் சற்றுக்குறைந்தது போலத்தோன்றியது எனக்கு.




(முதற்படம் தவிர்ந்த அனைத்தும் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் எடுக்கப்பட்டவை)
