வெள்ளைப் பிரம்பும் விழிப்புணர்வும் - கணபதி சர்வானந்தா
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி உலகளாவிய ரீதியில் சர்வதேச வெள்ளப் பிரம்பு தினம் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வற்றவர்கள் மீது விழிப்புணர்வுள்ளவர்கள் கவனத்தைத் திருப்புவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
விழிப்புணர்வற்றவர்கள் எதிர்கொள்கின்ற சமூக, பொருளாதார, கலாசார, சூழலியல் சிக்கல்களையும் தடைகளையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள்கள் அறிவதன் மூலம் அவர்கள் மூன்னேற்றத்துக்கு உதவலாம் என்பதுவும் இத்தினத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். எனவே அவர்கள் பற்றிய விழிப்புணர்வே நாம் அவர்களுக்குச் செய்யக் கூடிய முதன்மையான உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே அவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் சிறந்த இடம் பாடசாலைகள் என்பது எனது கருத்து. ஏனெனில் ஒருவன் சிறுவயதில் அறிந்த விடயங்களே அவன் வாழ்நாள் வரைக்கும் அவனைத் தொடரும் என்பது பலரது அனுபவம். எனவே இது போன்ற சமூகப்பொறுப்பை விதைக்கச் சிறந்த இடம் எனப் பாடசாலைகளையே நான் அடையாளப் படுத்த விரும்புகிறேன்.
அது மட்டுமல்லாது இது போன்ற விடயங்களை குறிப்பாக மாணவ சமூகத்துக்கு அறிவூட்ட வேண்டிய தேவை ஏன் முக்கியம்? ஒன்று அவர்களுக்குச் சமூகப் பொறுப்பை ஏற்படுத்துவது. அடுத்தது உதவுகின்ற மனப்பாங்கை அவர்களுக்குள் வளர்ப்பது. இந்த வகையில் வெள்ளைப் பிரம்பின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்வது ஒரு சமூகத் தேவையாகவும் காணப்படுகிறது.
பின்வரும் ஒரு சிறு சம்பவம் அதன் முக்கியத்துவத்தை நன்கு விளக்கும் என நம்புகிறேன்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பிரபல பாடசாலை ஒன்றின் முன்னால் நடந்த சம்பவம். ஒருநாள் நண்பகல் பாடசாலை விட்ட சமயம் ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் வீடு செல்வதற்காக அங்குள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் காத்திருந்தார்கள். அவர்களுக்கு எதிரே ஒரு பாவையற்றவர் நின்று கொண்டு தான் வைத்திருந்த வெள்ளைப் பிரம்பினால் “சைகை” காட்டி அத் தெருவைக் கடப்பதற்கான உதவியைக் கோருகிறார். ஏறத்தாழ பதினைந்து நிமிடம் அப் பெரியவர் அங்கு நின்றவாறு வெள்ளைப் பிரம்பின் மூலம் சைகை காட்டியபடியே நின்று கொண்டிருக்கிறார். எவரும் உதவ முன்வரவில்லை. உடனே நான் சென்று அந்தப் பெரியவருக்கு உதவ முன்னர் அந்த மாணவர்களுக்கு அவர் வெள்ளைப் பிரம்பின் மூலம் சைகை காட்டித் தெருவைக் கடக்க உதவி கோருகிறார் என்ற விடயத்தைச் சொல்லியதுதான் தாமதம் பல மாணவர்கள் ஓடிச் சென்று அவருக்குத் தெருவைக் கடக்க உதவினர்.
எனவே அந்த நிகழ்வு எமக்குச் செல்வதென்ன?
அந்த விடயத்தில் ஒரு வெள்ளைப் பிரம்பின் முக்கியத்துவத்தை அந்த மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்காதது யார் குற்றம்? வெள்ளைப் பிரம்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தாதது யார் தவறு?
மேற்படி சம்பவத்தை வைத்துக் கொண்டு மாணவர்களுக்குச் சமூகப் பொறுப்பு இல்லை என்ற முடிவுக்கு வரலாமா? அப்படி வந்துவிட்டால், அதன் மூலம் பரப்பப்படும் செய்தி ஒட்டு தொத்தச் சமூகத்தைப் பற்றிப் பிறர் தரக் குறைவாக விளங்கக் காரணமாக இருக்காதா!
மேற்படி சம்பவம் நடைபெற்றுச் சில தினங்களில் ஒரு விழிப்புலற்றவர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு நிறுவனத்தின் உதவியுடன் ஒரு கடிதத்தை எழுதிக் கொண்டு சென்று அது தொடர்பான ஒரு அதிகாரியைச் சந்தித்தேன். இது போன்ற விடயங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பாடசாலை மட்டங்களிலே ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு ஒரு திட்டம் இவர்களிடம் இருக்கிறது. அதற்கு அனுமதி கேட்டே இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். பாடசாலைகளில் தினமும் காலையில் பிரார்த்தனை நடக்கும். அதன் பின்னர் ஒரு ஐந்து நிமிடத்தை ஒதுக்கி ஒரு சமூகப்பொறுப்பு என்ற வகையில் மாணவர்களுக்கு வெள்ளைப் பிரம்பின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லலாம். அதற்கு இந்த நிறுவனமும் உதவும்.
அந்த நிறுவனமே அதனைச் செய்ய வேண்டும் என நான் விரும்புவது ஏனெனில் “அவர்கள் வலியையும் , அனுபவத்தையும் அவர்கள் சொல்வதே சிறந்தது. அது மட்டுமல்ல அவர்கள் குரலாக அது ஒலிக்கின்றபோதே அது வலுப்பெறும். மாணவர்கள் மனதில் நிலைபெறும்” என்று எடுத்துரைத்தேன்.
அந்தக் கடிதத்தைப் படித்ததும் அந்த அதிகாரி எனக்கு “எமது பாடத்திட்டத்தில் அதற்கான செய்முறை இருக்கிறது. எனவே அதனை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம். நீங்கள் கஷ்டப்பட வேண்டாம்.” எனப் பதில் அளித்திருந்தார்.
அதையே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை விரும்பும், ஒரு சமூகப் பொறுப்பை ஏற்படுத்த விரும்பும் அதிகாரியாக அவர் இருந்திருந்தால் அவர் அந்த செயற்திட்டத்தை ஆதரித்திருப்பார். அதற்கான அனுமதியைக் கொடுத்திருப்பார். பெரும்பாலும் அவர் அதனைச் செய்ய விரும்பவில்லை என்றே தோன்றியது. காரணம் ஏன்? என இன்றுவரை எனக்குப் புரிய வில்லை. இல்லாவிடில் அதனைப் புரிந்து கொள்ளக் கூடிய பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லையோ! தெரியவில்லை.
அண்மையில் நடைபெற்ற ஒரு ஊடகவியலாளருக்கான நினைவு தின விழாவிலே கலந்து கொண்டேன். அந்த ஊடகவியலாளர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அங்கே வெளியிட்டிருந்தார்கள். அந்த விழாவிலே ஒரு போராசியர் பேசினார். அவர் சொன்ன விடயம் “சுருக்” என எனது மனதைத் தொட்டது. அவர் பேச்சினூடாக மேற்படி சம்பவத்தைப் பார்ர்போமாகில் பல உண்மைகள் தெரியவரும்.
ஒரு எதிரி ஒரு சமூகத்தை மந்தமாக வைத்திருக்க அல்லது அழிக்க நினைத்தால் அவனை அறிவூட்டக் கூடிய வழிகளை முதலில் அடைப்பது. அல்லது அதனை நிர்மூலமாக்குவது. அதற்குப் பெரியதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அச் சமூகம் சார்ந்து அதற்கு வலுவூட்டக் கூடிய அரச திணைக்களங்களில் திறமையற்றவர்களை அல்லது மந்த கதியில் அதனை இயக்கக் கூடிய அதிகாரிகளை நியமித்தால் போதும். அதனால் சமூகம் வலுவிழக்கும். நல்லவை மழுங்கடிக்கப்படும். அதனால் எதிர்விழைவுகள் அதிகம் காணப்படுகின்ற ஒரு சமூகமாக அது மாற்றம் பெறும். அதனால் இலகுவாக ஒரு சமூகத்தை அழித்துவிடலாம் என்ற சாரப்படி அவர் பேசி இருந்தார். அது ஒரு சிறந்த உண்மை. எமது சமூகம் வலுவிழந்து போவதற்குரிய காரணங்களில் அதுவும் ஒன்றாக இருக்கலாம். இது ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.
எனவே எப்போதும் எமக்கு சமூகத்தை விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாவிட்டாலும், ஒரு வருட கலண்டர் நாட்களில் பல தினங்கள் வருகின்றன. அதனை ஐக்கிய நாடுகள் நிறுவனம் உலக தினங்களாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. அந்தந்தந்த நாட்களிலாவது அதற்கு முக்கியத்துவத்தைக் கொடுத்து அவற்றைக் கொண்டாடி அதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவோம். ஏனெனில் இன்றை மாணவர்களே நாளை தலைவர்கள். அவ்வாறான சிறந்த தலைமைகளை உருவாக்க வேண்டியதும் ஒரு கல்விசார் நிறுவனத்தின் பொறுப்பு என்றதையும் இத்தினத்தில் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
Kanapathy Sarvananda
Senior Journalist - Freelance
Jaffna, SriLanka

0 comments:
Post a Comment