இவர்கள் மகாத்மாக்கள்
வாழ்வியல் சித்திரங்கள் - கணபதி சர்வானந்தா
மனித வாழ்வில் உயர் நெறிகளைக் கொண்டு வாழ்ந்து வழிகாட்டிகளாகத் திகழ்ந்த பல மகாத்மாக்களை நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் நம்மைச் சுற்றி, நம் வாழ்வியலில் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களோ அன்றி எதிர்பாராச் சந்தர்ப்பங்களில் காணும் மானுடர்களோ ஏதோவொரு வகையில் தம் செயல்களால், குணங்குறிகளால் அந்த மகாத்மாவுக்கான இலக்கணம் பொருந்தியவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களை அக்கணத்தோடே கடந்து விடுவோம்.
இந்த வாழ்வியல் சித்திரங்களாக எழுத்தாளர் கணபதி சர்வானந்தா அவர்களின் ஒவ்வொரு பகிர்வுகளிலும் காணும் மனிதர்கள் அத்தகு சாதாரணர்களே, ஆனால் அவ்வச் சந்தர்ப்பங்களில் அவர்களின் மேன்மையான குணத்தால் எப்படி மகாத்மாக்களாக அடையாளப்படுகிறார்கள் என்பதை சிறுகதை இலக்கணம் பொருந்த எழுத்தாளர் வடித்துள்ளார்.
ஒவ்வொன்றுமே ஒவ்வொரு பரிமாணத்தில் துலங்குகின்றன. களங்கள் வேறு, மனிதர்கள் வெவ்வேறு என்று எடுத்துக் கொண்டு ஒரு அற்புதமான வாசிப்பனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் இந்த நூலில் திரட்டிய 25 மனிதர்களைப் பற்றிப் படித்துக் கொண்டு போகும் போது அவர்கள், எழுத்தாளர் மனதில் இடம் பிடித்தது போலவே நம் மனதிலும் இருக்கிறார்கள்.
படித்த பின் அசை போட வைக்கிறார்கள்.
சிறுவர் இலக்கியம், மூத்தோர் இலக்கியம் என்ற வகைக்குள் வராது எல்லோருக்குமான வாசிப்புக்கேற்ற அனுபவப் பொதி இந்த நூல். இந்த மாதிரியான இலக்கியங்களைப் படிக்கும் போது மனது இளகி விடுகிறது. அற்ப சிந்தனைகள் எழாது.
எழுத்தாளர் திரு.கணபதி சர்வானந்தா ஒரு களப் பணியாளராக அனுதினமும் சமூக நீரோட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பவர்.
“காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாததாகும், உவப்பதன்கண்
குற்றமே தோன்றாக் கெடும்”
என்று அறநெறிச்சாரம் காட்டும் பாரபட்சம் காட்டாத விமர்சன நேர்மை கொண்டவர்.
அவரது பத்தி எழுத்துகள் ஈழத்துப் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும் “இவர்கள் மகாத்மாக்கள்” என்ற இந்த நூலைப் படித்த போது பேராச்சரியம் மேலோங்கியது. தான் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு பகிர்வுக்கும் காட்சிப் படுத்தும் களம், மனிதர்களது குண நலன்கள் இவற்றில் ஒரு மூத்த எழுத்தாளரில் எழுத்தாண்மை மேலோங்கியிருக்கிறது. அதே சமயம் போலித்தனமான அலங்காரங்கள் இல்லாத, கச்சிதமாகச் சம்பவக் கோவைகளை இணைக்கும் உத்தியோடு அதீத போதனையற்ற யதார்த்த நடை மிளிர்கின்றது. மூன்று பக்கங்களுக்குள் நின்று விடுகிறார். இவை தான் இந்த நூலை முழு மூச்சாகப் படிக்க வைத்த தூண்டல்கள்.
புது விதியில் தொடர்ந்து பகிர்ந்தவை ஜீவ நதி வெளியீடாக வந்திருக்கிறது.
இவர்கள் மகாத்மாக்கள் நூலை
“தியாகம், எளிமை, மனித நேயம் என்பவற்றோடு வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றார்.
கணபதி சர்வானந்தா எங்களூரவர் என்பதால் இந்த நூலைப் படித்து முடித்த பின் அவரால் செய்யக் கூடிய இன்னொரு பணியை எதிர்பார்க்கிறேன்.
எம் மண்ணின் மனிதர்கள் குறித்து உங்களின் பகிர்வுகள் நீளட்டும்.

