நினைவழியா வடுக்கள் - சிவா சின்னப்பொடி
நூல் நயப்பு : கான பிரபா
ஈழத்தமிழினத்தின் இருண்ட வரலாற்றில் இன வாதத்தால் விளைந்த போரின் அனர்த்தங்கள் எவ்வளவு தூரம் பேசுபொருளாக இருக்கிறதோ அது போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட “சாதீய” வன்*முறைகள்.
ஈழத்தில் நிகழ்ந்த சாதி ஒடுக்குமுறைகளும் அவற்றுக்கு எதிரான கிளர்ச்சிகளும் எழுத்து ஆவணங்களாகவும், நேரடி சாட்சியங்களாகவும் இன்றும் உலாவுகின்றன.
அப்படியொரு ஆளுமை தான் சகோதரர் சிவா சின்னப்பொடி.
வலைப்பதிவு காலத்தில் இருந்து சுமார் 20 வருடப் பழக்கம் இருந்தாலும்,
அவரின் “நினைவழியா வடுக்கள்” படித்த பின்புதான் யாழ்ப்பாணத்தில் தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை நான் வாழ்ந்திருந்தாலும், எண்பதுகளுக்கு முந்திய அதாவது தாயக சுதந்திர வேட்கையோடு கிளம்பிய புதிய யுக மாற்றத்துக்கு முந்திய காலப்பகுதி வரை அதி தீவிரம் பெற்றிருந்த சாதிய ஒடுக்கு முறைகளின் அனுபவங்களின் கொடுமையைத் தீவிரமாக அவர் எழுத்தினூடே வாசிக்க முடிந்தது.
பல இடங்களில் கண் தரித்து நின்று இரத்தக் கண்ணீர் வராத குறை.
சிவா சின்னப்பொடி அண்ணரின் பிறப்பு, அதற்கு முற்பட்ட இரண்டு தலைமுறைகள் சாதிய ஒடுக்குமுறைகளால் நாளாந்தம் அனுபவித்த துயர்கள் இவற்றின் நீட்சியாகத் தன் பத்து வயது வரை நேரே சந்தித்த, தீண்டாமையால் விளைந்த இழப்புகளை ஒரு டயரி போலப் பதிந்து கொண்டே போகிறார். தன்னுடைய அனுபவக் குறிப்புகளின் இறுதி அத்தியாயத்தில் ஒரு முழு மனிதனாக அவர் வெள்ளாள மேலாதிக்கத்தைத் தாண்டி கல்வியில் மேன்மை பெற்றதோடு முடிக்கவில்லை.
இன்றும் இலை மறை காயாக, நேரடியாக புலம் பெயர்ந்த சூழலிலும் சாதிப் பாகுபாடு பார்க்கும் நம் தமிழரின் முகங்களை அடையாளப்படுத்துகிறார்.
இந்த நூலின் தனித்துவம் அல்லது அவரின் தனித்துவம் அதுவெனலாம். ஏனெனில் இவ்விதம் ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து வெளிக்கிளம்பி மேன்மை பெற்ற பலர் தம் அடையாளத்தை மறைத்து, அல்லது தம் சமூகம் குறித்த பிரக்ஞை எழுதுவுமற்ற போலிகளாக இருப்பதையும் சந்தித்தித்திருக்கிறோம்.
இங்கே சிவா சின்னப்பொடி அண்ணர் தன் சமூகத்தை அடையாளப்படுத்தி, இன்னும் ஓயவில்லை இதுவென்கிறார்.
பொதுவாக சாதிய ஒடுக்குமுறைகளால் அல்லற்பட்ட சமூகத்தினர் சக தீண்டாமை ஒழிப்பு செயற்பாட்டாளர்கள், பொதுவுடமைப் போராளிகள், இனவாதத்துக்கு எதிராகத் தோன்றிய இயக்கங்கள் என்று இந்த மூன்று புள்ளிகளும் ஒருமித்துச் சந்திக்கும் மனிதர்கள் மிக அரிது. அல்லது ஒருகட்டத்தில் பிறழ்வு நிலைக்குப் போய் விடுவார்கள். ஆனால் இந்த மூன்று நோக்கிலும் ஒரு “தெளிவான” பார்வை கொண்ட சிவா சின்னப் பொடி, இன விடுதலையைப் புறந்தள்ளும் கள்ளத்தனமற்றவராகவே அடையாளப்படுகிறார்.
சாதி எங்கில்லை எங்குமுண்டு சிங்களவரிலும் கூட என்பதை வரலாற்றை அடியொற்றி விரிவாக அந்தப் பக்கத்தையும் தொட்டிருக்கிறார்.
ஈழத்தில் உள்ளக சாதி அமைப்புகளின் தோற்றம், மேற் சாதியோடு கலந்து தம்மை உயர்வாகக் காட்டி நின்ற சாதிய மாற்றம், தேச வழமைச் சட்டத்தை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு சாதிய அடையாளப்படுத்தல், ஒடுக்குமுறைகளைச் சட்ட ரீதியாகக் கையாளுதல் போன்ற வெள்ளாள மேலாதிக்கத்தின் அணுகுமுறைகளை தான் அனுபவித்த வாழ்வியலோடு பதிவாக்குகிறார்.
கந்த முருகேசனார், பொன் கந்தையா என்ற இரு பெரும் ஆளுமைகள் அந்தக் காலத்திலேயே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக நிகழ்த்திய சமூக மாற்றங்கள் பதியப்பட்ட்டிருக்கின்றன.
குறிப்பாக பொன் கந்தையா ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நிகழ்த்திய களச் செயற்பாடுகள், அவர் அரசியல் பிரதிநிதியாக மாறிய பின்பும் தொடர்ந்த அந்தத் தூய பணியின் வரலாறு சிலிர்க்க வைத்தது.
“நீ யார்” என்ற கேள்வியில் தொடங்கி மூன்றாம் வகுப்புப் பையன் சிவாவின் சிந்தனையைக் கிளறிய “தமிழ்த் தாத்தா” கந்த முருகேசனார் என்ற தமிழறிஞர், ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெடியனை மடியில் வைத்துப் பாடம் நடத்தியதற்காக ஒத்துழையாமை நடத்திய மற்றைய பிள்ளைகளின் பெற்றோருக்கு எதிராக நிமிர்ந்து நின்றது எல்லாம் இந்த வரலாற்றுப் புத்தகத்தின் பொன் எழுத்துகள்.
இரண்டு தலைமுறைக்கு முன்பு
கந்தமுருகேசனார் கேட்ட கேள்வியை நமக்குள்ளும் கேட்க முடிகிறது.
உலகம் முற்றிலும் அரச தலைமுறைகளை அறிந்து வைத்த அளவுக்கு எவ்வளவு தூரம் நம் ஒவ்வொருவரின் தலைமுறைகளின் முன் நீட்சியை அறிந்து வைத்துள்ளோம்?
சிங்களப் பெளத்த பேரினவாத எதிர்ப்பு என்பதை வாக்குச் சீட்டு அரசியலுக்காகவும், தங்களுடைய வர்க்க நலனுக்காகவும் மட்டுமே பயன்படுத்திய அன்றைய தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களிடையே உள்ள முரண்பாடுகளைக் களைந்து உண்மையான தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்ப முன்வரவில்லை என்ற யதார்த்தத்தை முன் வைக்கிறார்.
பெண்கள் ரவிக்கை அணிய எதிர்ப்பில் இருந்து ஆலய உள் நுழைவு எதிர்ப்பு, கிணற்றில் தண்ணீர் அள்ள மறுப்பு,
கல் வீடு கட்ட மறுப்பு, பள்ளிக்கூடங்களில் சமமாக இருந்து கற்கவோ அன்றி அங்கு வழங்கப்படும் இலவச மதிய உணவை சம உரிமையோடு அருந்தவோ மறுப்பு என்று உயர்சாதியினர் என்று அடையாளப்பட்டவர்களால் நிகழ்த்தப்பட்ட சமூக வன்முறைகள் ஆதாரங்களோடும் தன் வாழ்வின் கூறுகளின் வழியாகவும் குறிப்பிடுகின்றார்.
மேற்சட்டை அணியும் போராட்டத்தில் பலிகடா ஆக்கப்பட்ட சின்னாச்சியின் தற்கொலை, தம்மைச் சீண்டிய ஐயருக்கு எதிராகச் சின்னப் பெடியன்களின் விபரீத முயற்சியின் விளைவால் அநியாயமாகக் கொல்லப்பட்டு கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட தன் தோழனும், பெரியப்பா குடும்பத்தின் ஒரே வாரிசுமான சந்திரன் என்று கலங்கடிக்க வைத்த சாதியக் கொடூரங்கள்.
அவரின் முடிவுரை சத்திய வாக்காக அறைகிறது இப்படி,
“கற்களும் முட்களும் கணக்கில்லாத வேலியாய்
தடைகளாக மாறினாலும் ஓய்ந்து போக மாட்டோம் நாம்
சொற்களும் செய்கையும் சொல்லொணாத வகையினில்
தீயைப் போல எரிப்பினும் துவண்டு போக மாட்டோம் நாம்”
கானா பிரபா