skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Sunday, July 06, 2014

மறந்திராத நினைவில் பேராசிரியர் கார்த்திகேசு.சிவத்தம்பி

இன்று ஜூலை 6 ஆம் திகதி ஈழத்தின் கல்விப்பெருந்தகை பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த மூன்றாவது ஆண்டாக அமைகின்றது. ஈழம் உள்ளிட்ட உலகத்தமிழ்ச் சமுதாயத்தின் அடையாளங்களில் ஒன்றாக இயங்கியவர் சிவத்தம்பி அவர்கள்.
அவர் இல்லாத இந்த மூன்று ஆண்டுகளைத் திரும்ப நினைத்துப் பார்க்கும் போதுதான் நமது கல்விச் சமூகத்தின் எவ்வளவு பெரிய ஆளுமையை இழந்து விட்டோம் என்ற இழப்பின் கனப்பை ஆசானின் பங்களிப்பை முழுமையாக அறிந்தவர்கள் உணர்வர். கல்விமானாகவும், திறனாய்வாளராகவும் இயங்கிய சிவத்தம்பி அவர்களை ஈழத்தில் இயங்கி வந்த இன்னொரு பல்கலைக்கழகமாகவே நான் கருதுவேன்.
என்னுடைய வானொலி வாழ்வின் பதினைந்து வருட காலகட்டத்தில், எத்தனையோ பகிர்வுகளைச் செய்வதற்கு அவர் உறுதுணை புரிந்திருக்கின்றார் என்ற நினைப்பைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாத அளவுக்கு அவர் தந்த பல்வேறு ஒலிப்பகிர்வுகளைக் கேட்கும் போதெல்லாம் உணர்வேன். எனக்கு மட்டுமன்றி பொதுவாகவே அனைவருக்கும் அணுகக்கூடிய மிகச் சில கல்விமான்களில் அவர் தலையாயவர். தன்னுடைய இறுதிக்காலம் வரை அதை ஒரு தவமாகவே பின்பற்றியிருக்கின்றார். "

சேர்! கவிஞர் முருகையன் இறந்த செய்தி வந்திருக்கு வானொலியில் அவரைப் பற்றி ஒரு நினைவுப்பகிர்வு செய்யவேணும்" - நான்
"ஓம் ராசா நான் தயார் இப்பவே செய்யவேணுமோ'
என்றுவிட்டு ஒலிப்பதிவைச் செய்ய ஆரம்பிக்கும் போது எழுதி வைக்காத பகிர்வு சிவத்தம்பி அவர்களிடமிருந்து கொட்டும் போது அவை வெறும் இட்டு நிரப்பல்களாக இராது.
அந்தப் பகிர்வின் வழியாக இன்னொரு கனதியான செய்திக்குவியல் அவர் சொல்ல வந்த ஆளுமை குறித்தோ அல்லது குறித்த நிகழ்வு பற்றியோ இருக்கும். அந்தளவுக்கு அவரிடம் ஊறிப்போயிருக்கின்றது தமிழ் இலக்கியம், சமூகம், ஆளுமைகள் குறித்த வரலாறு. அதனால் தான் அவரை நான் பல்கலைக்கழகமாகவே பார்க்கின்றேன். அவர் எழுதிப் பகிர்ந்த ஆய்வுகள் தான் இன்னும் பல தசாப்தங்கள் தமிழ்க் கல்விச் சமூகத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதைச் சொல்லவேண்டிய தேவை இல்லை.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கொண்டிருந்த கல்வி மற்றும் பன்முக ஆளுமையை இன்னும் கொண்டாடத் தவறிவிட்டதோ நம் கல்விச் சமூகம் என்ற நினைப்பு அவரை இழந்த மூன்றாவது ஆண்டிலும் வருமளவுக்கு ஒரு ஆதங்கம் உண்டு. அதை மெய்ப்பிக்குமாற்போல "யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்து நிலை" என்ற அவரது நூலில் தனது வாக்குமூலமாக இப்படிச் சொல்லுகிறார், "அங்கு (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) என் இருப்பு எல்லாவேளைகளிலும் இனியதாக இருக்கவில்லை. நான் கூறிய கருத்துகளுக்காக ஒரங்கட்டப்பட்டேன். ஆனால் அதே நேரத்தில் சில புலமையாளர்களின் மதிப்பையும், பல மாணவர்களின் அன்பையும் பெற்றிருந்தேன் என்பது இப்பொழுது நான் இளைப்பாறிய நிலையிலேயே எனக்குத் தெரியவருகின்றது. இது மனதுக்கு நிறைந்த திருப்தியைத் தருகின்றது". 
ஈழத்து எழுத்தாளர்களது நூல்களிலே சிவத்தம்பி அவர்கள் அணிந்துரை பகிரும் போது அங்கே வெறும் புகழாரம் இருக்காது. மூன்று நான்கு பக்கங்கள் கடந்து இன்னொரு இலக்கிய வரலாற்றுப் பதிவைச் சொல்லி வைத்திருப்பார். கடந்த வாரம் சிட்னி தமிழ் அறிவகத்தின் வழியாக பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் எழுதிய "யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்து நிலை" மற்றும் "பண்டைத்தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி" ஆகிய இரு நூல்களை எடுத்து வந்தேன். இவற்றில் "யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்து நிலை" நூலில் சிவத்தம்பி அவர்கள் பகிர்ந்த பொதுவான சில கருத்துநிலைகளை இங்கே பகிர்கின்றேன்.

"ஒரு சமூக முறைமையின் தொடர்ச்சிக்கு அதன் தனித்துவம் பற்றியும், அந்தத் தனித்துவத்தின் சிறப்புக்கள் பற்றியும், அதனைப் பின்பற்றுவோரிடத்துக் காணப்படும் பிரக்ஞை (Consciousness) முக்கியமானதாகும். அந்தப் பிரக்ஞை அதன் பண்பாடு பற்றிய பிரக்ஞையாகவும் அந்தப் பண்பாட்டினது பெருமைகளைப் பற்றிய பிரக்ஞையாகவும் தொழிற்படும். பண்பாடு என்பது மனித சமூகத்தின் குறியீட்டு அமிசங்கள் பற்றியதும், அச்சமூகம் கற்றறிந்து ஒள்ளும் அம்சங்கள் பற்றியதுமாகும். கருத்து நிலை என்பது (இதனால்) பண்பாட்டினுள்ளிருந்து மேற்கிளம்புவதாகவே இருக்கும். அதாவது எந்த ஒரு கருத்து நிலையும் தனது பண்பாட்டினை எடுத்துக் காட்டுவதாகவே இருக்கும். ஆனால் ஒன்று, அவ்வாறு எடுத்துக் காட்டும் கருத்து நிலையானது அப் பண்பாட்டினுள் இடம்பெறும் சகல நடைமுறைகளையும் ஒழுங்கு திரட்டிப் பிரதிபலிக்காது. அந்தப் பண்பாட்டினுள் மேலாதிக்கம் செலுத்தும் குழுமத்தினது கருத்துகளின் பிரிவு ஆகவே இருக்கும். எனவே ஒரு சமூகத்தின் கருத்து நிலை என்பது அச் சமூகத்தின் பிரதான சக்திகளினை எடுத்துக்காட்டுவதாகவே இருக்கும். "

"தங்களின் பிரச்சனைகள் பற்றிய காய்தல், உவத்தலற்ற ஒளிவுமறைவற்ற, உண்மையான புலமைத்துவ நெறிப்பட்ட கலந்துரையாடல் வழிவரும் நற்பலன் இந்தச் (யாழ்ப்பாணச்) சமூகத்துக்கு மறுதலிக்கப்பட்டே வந்துள்ளது. தெழிற்றுறைக் கல்வியில் எமது சமூகம் அதிக ஆர்வமும், சிரத்தையும் காட்டியதால் வேண்டிய அளவு சமூக அறிவியலாளரை (Social Scientists) நாம் தோற்றுவிக்கவில்லை. தப்பியொட்டிப் படித்தவர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். வெளிநாடு சென்றிருப்போர் பற்றிய ஒரு பிரச்சனை என்னவென்றால் தமிழ்ப் பிரதேசங்களின் சென்ற காலத்துக் குறைபாடுகள் மனதில் நிற்கின்ற அளவுக்கு, நிகழ்காலப் பிரச்சனைகள் அவர்களுக்குத் தெரிவதில்லை".

"இங்கு தெய்வம் என்பது சித்தப் பொருளாகவல்லாது உணர்வுப் பொருளாக, உணர்வுறவு ஊடகமாக அமைவதைக் காணலாம். மாணிக்கவாசகரிடத்துக் காணப்பட்ட அதே பக்தி உணர்வு, நாவுக்கரசரிடத்துக் காணப்பட்ட அதே பக்தி உணர்வு, கந்தரிடத்துக் காணப்பட்ட அதே பக்தி உணர்வு செல்வச் சந்நிதியிற் கும்பிடும் சாதாரண விவசாயிடத்தும், மீன்பிடிக்காரனிடத்தும், விவசாயத் தொழிலாளியிடமும் காணப்படுகின்றது என்று சொல்ல மரபின் "தடிப்புத்" தடுக்கலாம். ஆனால் இத்தகைய சாதாரண மனிதர்கள் தான் - சலவைத் தொழிலாளி, பறையர் குலத்தவன், மீன்பிடிகாரன், சாதாரண விவசாயி, மட்பாண்டம் வனைந்தவன் முதலியோரே - பக்தி இயக்கத்தின் தூண்களாக அமைந்தனர் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்களை நாயனாராக்கி, அறுபத்து மூவர்களாக வழிபடத்தொடக்கிவிட்டு, அந்த உணர்வையே அந்தச் சமூக மட்டங்களில் இருந்து அந்நியப்படுத்திக் கொள்வது (alienating) கருத்தைப் பொருளுருப்படுத்திய பின்னர் அப்பொருளை உச்சாணி விடயமாகப் போற்றும் மனோபாவத்தின் வெளிப்பாடேயாகும்".

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நம்முடன் இருந்த காலத்தில் அவரின் எழுபத்தைந்தாவது அகவையை ஒட்டி அவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள், மற்றும் கல்விமான்களின் ஒலிப்பகிர்வைக் கோர்த்து ஒரு நெடிய வானொலி நிகழ்ச்சி செய்திருந்தேன்.
அந்த நிகழ்ச்சியில் பகிரப்பட்ட கருத்துகளைக் கோர்த்து சிறு நூலாக்கும் எண்ணம் இன்னும் என் மனதில் இருக்கின்றது. அந்த ஒலிப்பகிர்வில் கலந்து சிறப்பித்த பேராசிரியர் சி.மெளனகுருவின் பகிர்வை இந்த வேளை மீளப்பகிர்ந்து கொள்கின்றேன்.


"பேராசிரியர் சி.மௌனகுருவின் பகிர்வு"
பேராசிரியர் சிவத்தம்பிக்கு 75 வயது ஆகிவிட்டது. இன்று ஓய்வு பெற்ற நிலையிலே இன்று அவர் ஓய்வு பெறாதவராக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக அவர் மதிக்கப்படுகிறார். இவற்றிற்கும் அப்பால் இவர் மிகச்சிறந்த நாடக எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும், நாடக நெறியாளராகவும் இருப்பதும் ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்வதும் சிலர் அறியாத விடயமாகும். நான் இங்கு பேராசிரியரின் நாடக விடயங்களையும் அவருடன் எனக்கிருந்த உறவுகளையும் அழுத்திக் கூற விரும்புகிறேன். எனக்கும் பேராசிரியர் சிவத்தம்பிக்குமான உறவு ஏறத்தாழ 45 வருடகால உறவாகும். இதை அரை நூற்றாண்டு உறவு எனலாம்.

ஈழத்தின் வடபால் பிறந்த ஒருவர் பேராசிரியர் சிவத்தம்பி. ஈழத்தின் கிழக்கிலே பிறந்தவன் நான் . இந்த இரண்டையும் இணைத்து வைத்த பெருமை நாடக கலைக்கு இருப்£தை நான் இப்போது சிந்தித்துப் பார்க்கின்றேன். 1959ஆம் ஆண்டு பேராசிரியர் சிவத்தம்பியை சந்தித்தேன். அப்போது நான் 16-17 வயது மாணவனாக வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலே பயின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு கூத்து அரங்கேற்றப்பட்டது. பேராசிரியர் நித்தியானந்தனும் பேராசிரியர் சிவத்தம்பியும் அந்த கூத்தை பார்வையிட வந்திருந்தனர். இரண்டு பெரிய ஆகிருதிகளும் அந்த கூத்தை வெகுவாக இரசித்தார்கள். கூத்து முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் கூத்தாடிய எல்லா மாணவர்களுக்கும் உச்சி முகர்ந்து கன்னம் தடவி வாஞ்சையுடன் எமமை வாழ்த்தினார்கள். அந்தப் பார்வை , அந்த நெருக்கம் , அந்த உறவுதான் எனக்கும் போராசிரியர் சிவத்தம்பிக்கும் ஏற்பட்ட முதலாவது உறவாக அமைந்தது. அதன் பின்பு அந்த கூத்தை பேராதனைப் பல்கலைக்கழக மேடையில் அரங்கேற்றினார்கள். அப்போது நிறைந்த ஆதரவு எங்களுக்கு கிடைத்தது. அதை மேடை ஏற்றும்படி கூறியிருந்தவர்கூட பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தான். 1961 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. கிழக்கு மாகாணத்திலிருந்து மிகக்குறைந்தோரே அப்பொழுது பல்கலைக்கழகத்திற்கு செல்வார்கள். அந்த காலப்பகுதியில் சரத் சந்திரா அவர்கள் சிங்கள நாடக உலகிலே கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்தார். சிங்கள மரபு வழி நாடகங்களை அடிப்படையாக வைத்து அவர் "மனமே சிங்கபாகு" அவர் போன்ற சிறந்த நாடகங்களை தயாரித்திருந்தார். அவை தனித்துவம் கொண்ட சிங்கள நாடகங்களாக அறியப்பட்டிருந்தன. அதனால் அவை நல்ல வரவேற்பை பெற்றன. பேராசிரியர் சரத் சந்திரா ஒரு நல்ல மனிதர், மிகவும் இன செளஜன்யத்தை விரும்புகின்ற ஒரு நல்ல புத்திஜீவி.தனது நாடகங்களுக்காக தமிழ்க்கூத்திலிருந்தும் சில அம்சங்களை தான் "மனமே சிங்கபாகு" போன்ற நாடகங்களுக்கு எடுத்துக் கொண்டதாக அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார். இவற்றைப் பார்த்தபோது தான் பேராசிரியர் வித்தியானந்தனுக்கு ஈழத்துக் கூத்து மரபில் இருந்து ஈழத்து தமிழ் நடன நாடக வடிவத்தை உருவாக்க முடியாதா என்ற சிந்தனை ஏற்பட்டது. அதற்கு அடித்தளமாக மட்டக்களப்புக் கூத்துக்கள் அமைந்திருந்தன. மட்டக்களப்பு கூத்துக்களில் தான் தாளக்கட்டுக்களும் ஆடல்களும் நிறைந்திருந்தன. அவற்றை அடிப்படையாகக்கொண்டு பேராசிரியர் நித்தியானந்தன் இத்தகைய நாடகங்களை தயாரிக்க வேண்டும் என்று அவாக் கொண்டிருந்தார். இதற்கு பின்பலமாக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். நாங்கள் பேராதனைக்கு சென்றபோது பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள் கூத்துக்களைப் போட ஆரம்பித்திருந்தார்.

எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது, பின்னோக்கிப் பார்க்கின்ற பொழுது 61 ஆம் ஆண்டிலே கர்ணன் போர், 62 ஆம் ஆண்டிலே நொண்டி நாடகம், 64 இலே இராவணேசன், 65 இலே வாலி வதை என்று மட்டக்களப்பின் தென்மோடி, வடமோடி நாடகங்களை செழுமைப்படுத்தி பேராசிரியர் சரத் சந்திரா பாணியிலே வித்தியானந்தன் தயாரிக்க ஆரம்பித்திருந்த காலம் அது. காலனித்துவ சிந்தனைகளாலும் மேற்கு மோகத்தாலும் சூழ்ந்திருந்த அந்த பேராதனை மண்ணிலே கூத்துக்கள் மத்தள ஒலியும் சலங்கை ஒலியும் கேட்க ஆரம்பித்தன. கிராமிய சூழலிலமைந்த கூத்துக்கள் ஆட ஆரம்பித்தன. அந்த நாடகங்களை தமிழ் மாணவர்கள் வியப்போடு பார்த்தார்கள். அப்போது ஒரு கலக்கு கலக்கியது பேராதனைப் பல்கலைக்கழகம். எப்படி சிங்கள மாணவர்கள் மத்தியிலே பேராசிரியர் சரத்சந்திரா அவர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ வகித்தாரோ அதே தாக்கத்தை பேராசிரியர் நித்தியானந்தன் பேராசிரியர் சிவத்தம்பியின் உதவியுடன் தமிழ் மாணவர்கள் மத்தியிலே ஏற்படுத்தினார். அந்த அருமையான காலங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அப்போது தான் பேராசிரியர் சிவத்தம்பி பற்றி மெல்ல மெல்ல அறிய ஆரம்பித்தேன். அவர் அதற்கு முன்னரேயே பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் நடித்திருக்கிறார். அவர் மாத்திரமல்ல பேராசிரியர் கைலாசபதியும் நடித்திருக்கிறார். பேராசிரியர் சிவத்தம்பி ஒரு மேடை நடிகராகவும் வானொலி நடிகராகவும் இருந்திருக்கிறார். அவருடைய விதானையார் வீடு என்ற நாடகத்திலே அவர் பாத்திரம் மிகவும் பிரபல்யமானது .

இதைவிட அவர் நாடக எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். இவ்வண்ணமாக இந்த ஆய்வுத்துறைக்கு வர முதல் ஒரு நாடக கலைஞர் ஆகத் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அறிமுகமாகியிருக்கிறார். இதைப்பற்றி கனக செந்திநாதன் தனது ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே குறிப்பிடுகின்ற பொழுது இவர் நடிப்பிலே சிறந்தவராக இருந்தவர் என குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களை எப்படி சுருக்கலாம் என்ற ஆலோசனைகளை தந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. இந்தக் காலகட்டத்திலே தான் பேராசிரியர் சிவத்தம்பியினுடைய நாடகப் படைப்பாற்றல் பணிகளை நான் அருகிலிருந்து அவதானித்தது மாத்திரமல்ல, அவரிடமிருந்து அதிகம் பெறவும் கூடியதாக இருந்தது. இந்தக் கூத்துக்களை எப்படிச் சுருக்கலாம் என்பதை எனக்கு அவர் மிகவும் அதிகமாக விளங்கப்படுத்தினார். கர்ணம் போர், நெண்டி நாடகம், போன்ற நாடகங்களை மட்டக்களப்பு மரபு வழி நாடகங்களில் இருந்து நாங்கள் சுருக்கினோம். ஏற்கனவே கூத்தில் கொஞ்சம் பரிச்சயம் என்றபடியால் என்னைத்தான் அவற்றைச் சுருக்குவதற்குக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் முழு ஆலோசனைகளையும் தந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும் , பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களும். பிறகு அந்தக் கூத்துக்கள் மேடையேற்றுகின்ற போது கூத்தின் வீரியம் கெடாமல் ஒரு வட்டக்களரியில் ஆடப்பட்ட கூத்தினை எப்படிப் படச்சட்ட மேடைக்குள் போடலாம் என்பதை அதனுடைய வீரியமும் அதனுடைய தன்மையும் கெடாமல் அதனுடைய தாற்பரியங்களைப் புரிந்து கொண்டு மேடையிலே போடவைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

இராவணேசன் மட்டக்களப்பு கூத்துப் பாணியில் இருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாடகம். காரணம் மட்டக்களப்பு கூத்துக்களிலே ஒரு எடுத்துரை அரங்காகத் தான் அது இருக்கும். ஆனால் அதில் பாத்திரப் பண்புகள் வராது. இராவணேசனை பாத்திர குணாம்சம் பொருந்தியவராக மாற்றுவதற்கு பேராசிரியர் சிவத்தம்பி விரும்பினார். துன்பியல் நாயகனாக அவனைப் படைக்கவேணும் என்று அவர் கூறினார். துன்பியல் நாயகனை கிரேக்க நாடகங்களில் காணலாம். கிரேக்க நாடகத்திலே விதிக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கின்ற போட்டியிலே மனிதன் விழுவான். அந்த வீழ்ச்சி ஒரு துன்பியலாக இருக்கும். பல நல்ல குணங்கள் இருந்தும் ஒரு தீய குணத்தால் தன் வீழ்ச்சியை தானே தேடிக் கொள்பவன் தான் துன்பியல் நாயகன். இராவணேசனை அப்படியொரு துன்பியல் நாயகனாக மாற்றவேண்டுமென சிவத்தம்பி அவர்கள் கூறினார். அதன்படி அவர் கம்பராமாயணத்தில் யுத்தகாண்டத்தை எனக்குப் படிப்பித்தார்கள். இதைத்தான் எழுதும் படி கேட்டுக் கொண்டார். எப்படி இராவணன் சிந்தித்தான், எப்படிப் போனான், எப்படி துன்பியலுக்கான அடித்தளம் போடப்படுகின்றது என்பதை யுத்தகாண்டத்தினை படிப்பிப்பதனூடாக கூறி அந்த பாத்திரத்தை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார். இதன் விளைவாகத் தான் இராவணேசன் உருவாகியது. இந்த இராவணேசன் நாடகத்தில் ஒரு கூத்தை நாடகமாக மாற்றுவதற்கு பேராசிரியர் நித்தியானந்தனுக்கு பேராசிரியர் சிவத்தம்பி நிறைய உதவியாக இருந்தார். அவர் சொல்லுவார் பாட்டை எப்படி நடிப்பாக வைரமுத்து அவர்கள் மாறினார்களோ அதோ போல ஆட்டம் நடிப்பாக மாறவேண்டும் என்று அடிக்கடி சிவத்தம்பி அவர்கள் கூறுவார். முக்கியமாக இராவணேசனின் பிரதியாக்கம் பெற உதவியாக இருந்தார். அது மாத்திரம் இல்லை கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன் போன்ற நாடகங்களுக்கு உதவித்தயாரிப்பாளராகவும் இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கர்ணம் போரில் தயாரிப்பாளர் அதாவது நெறியாளர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.உதவியாளர்கள் பேராசிரியர் கைலாசபதியும், பேராசிரியர் சிவத்தம்பியும். பிறகு வந்த நாடகங்களுக்கெல்லாம் உதவியாளராக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். பாடல்களைத் தெளிவாகப் பாடுதல், உணர்ச்சி படப்பாடுதல், சொற்களை எடுத்து சில சொற்களைப் படுத்தும் பாடுதல் என்று பாடும் முறைமையினைக் காட்டித் தந்ததோடு, ஒரு வட்டக்களரியிலே ஆடும் ஆட்டத்தை படச்சட்ட மேடையில் ஆடும் முறைமையினையும் எமக்கு விளக்கியவர் சிவத்தம்பி அவர்கள். உதாரணமாக இராவணேசனில் ஒரு காட்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. இராவணேசன் தன் படையை அனுப்புகின்ற கட்டம். நான் தான் இராவணனாக நடித்தேன். மிகுந்த பயிற்சியை எனக்கு அவர்கள் தந்தார்கள்.அவன் நீலன், சிங்கன், மகரற்கண்ணன், குருதிக்கண்ணன் என்று அணியணியாக அரக்கர்களை இராமனுக்கு எதிராக ஏவுகின்றான்.அதற்கு பின்னணியாக அப்போது விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் கணீரென்று "போவதோ எனது வீரம் வீழ்வதோ புகழென்றெண்ணி அடி சூழ் சேனையோடு சிங்கனை அனுப்பி வைத்தான்" என்று பாடலைப் பாடியவுடன் அந்த இராணவனாக நடித்த நான் அபிநயத்து, மெல்ல நடந்து, மத்தள ஓசைக்குத் தக்க திரும்பி ஆடி, வேகமாக ஆடி மேடையின் வலது கீழ் மேடைக்கு வந்து இரண்டு கைகளையும் தூக்கி படைகளை அனுப்பி வைப்பேன். தொடர்ந்து ஒலிக்கும் பறையும் உடுக்கும், மத்தளமும், சங்கும் படை போவது போன்ற பிரமையை ஏற்படுத்தும். திடீரென்று அவை நின்றதும் இராவணன் உடலிலே சோர்வு தோன்றும். மேடையில் அமைதி நிலவும். படைகள் அழிந்து போகின்ற உணர்வு வரும். பிறகு மீண்டும் படைகளை அனுப்புவதற்கான பாடலை சண்முகதாஸ் அவர்கள் பாடுவார்கள். இவ்வண்ணமாக கூத்திலே இல்லாத ஆனால் கூத்தை அடிநாதமாகக் கொண்ட காட்சியமைப்புக்களை மிக அற்புதமாக உருவாக்கினார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அதே போல் இராவணனும் இராமனும் போரிடுகின்ற கட்டத்தை அவரே படைத்தார். கூத்திலே அப்படி ஆடுவதில்லை. மிக இலாவகமாக, மிக வேகமாக ஆடி அந்தக் களரி ஆட்டத்தை முடிப்பார். எனக்கு ஒரு ஞாபகம் வருகின்றது. ஒரு நாள் ஒத்திகை நடந்து கொண்டிருக்கின்றது. இராவணேசன் நாடகம், இராவணேசனாக நான், நீலன், மகரன், குருதிக்கண்ணன் எல்லாரையும் அனுப்பி, இந்திரஜித்தையும் அனுப்பி, உறவுகளையும் இழந்து, எல்லாரும் போய் விட்டார்கள், இனி யுத்தத்திலே வெல்ல முடியாது என்கின்ற நிலையிலே இராவணன் நிற்கின்றான். அவனுடைய சோர்வு, துக்கம், துயரம், வெட்கம், கோபம், எல்லாவற்றையும் முகத்திலே கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது முயற்சி எடுத்து நடிக்கின்றேன். சிவத்தம்பி அவர்கள் தலையாட்டிப் போட்டுச் சொல்கின்றார் போதாது என்று. அருகிலே சுங்கானோடு பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் நிற்கின்றார். உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கின்றார். மீண்டும் நடிக்கின்றேன். வித்தியானந்தனும் திருப்தியின்றித் தலையசைக்கின்றார். இருவர் முகத்திலும் திருப்தியில்லை. என்னால் இனிமேல் நடிக்கமுடியவில்லை. சோர்ந்து போனேன், அப்போது எனக்கு வயது 21 இருக்கும். சிவத்தம்பி அவர்கள் என்னை அழைக்கின்றார்கள். யுத்த காண்டத்தில் இராவணேசனின் தோல்வியை விளக்கி கம்பன் பாடல் ஒன்ரையும் கூறி விளக்குகிறார். தோல்வி மேல் தோல்வி பெற்ற இராவணன், வாளினைப் பார்க்கிறான், தன் தோளினைப் பார்க்கிறான், வலிய தன் கைகளைப் பார்க்கிறான், இறுதியில் நாணத்தால் குறுகிச் சிரிக்கிறான், அழுகிறான், கோவிக்கிறான், வெட்கப்படுகின்றான். இதற்கான கம்பனுடைய பாடலைக் கூறி கம்பன் கடைசி அடியிலே நகும், அழும், முனியும், நாணும் என்று கூறுகின்றார். "எங்கே சிரியும், அழும், கோபியும், நாணப்படும், இந்த உணர்வுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் முகத்திலே கொண்டுவாரும்" என்று அவர் கேட்கவும், அவர் கூற்றை உள்வாங்கிக் கொண்டேன். "எனக்கு கொஞ்ச நேரம் தாருங்கள்" என்றேன். ஒரு சின்ன இடைவேளை. நாங்கள் பழகிக் கொண்டிருந்த விரிவுரை மண்டபத்துக்கு அருகிலே தான் பாத்றூம் இருந்தது. சுற்றி வர நிலைக்கண்ணாடி. போய் நடித்துப் பார்க்கின்றேன். திருப்பி திருப்பி நடித்துப் பார்க்கின்றேன். திருப்தி ஓரளவுக்கு வருகின்றது. மீண்டும் அவர்களுக்கு முன்னால் வந்து ஒத்திகை ஆரம்பமாகின்றது. நானும் காட்சியைச் செய்தபோது வித்தியானந்தனின் முகமும், சிவத்தம்பியின் முகமும் மலர்ந்ததும், ஒத்திகை முடிய அவர்கள் வந்து பாராட்டியதும் என் வாழ்வில் மறக்க முடியாத கணப்பொழுதுகள். இன்றும் அதை நினைத்து நினைத்து மகிழ்வேன், நெகிழ்வேன். செதுக்கிய அந்தச் சிற்பிகள் மீது மிகுந்த மரியாதை இருக்கின்றது. கூத்தை நாடகமாக்கிய அந்தக் காலகட்டங்களிலே தான் கிழக்கத்தேய நடிப்பு முறை என்ற உண்டு என்பது எனக்கு பொருள்பட விளங்கியது. இத்தனை சிக்கலான ஆக்கங்களும், தாளக்கட்டுக்களும், செழுமையான பாடல்களும் கொண்ட இக்கூத்து எப்படி ஒரு கிராமிய நாடகமாக இருக்க முடியும் என்று எம்மிடம் கேட்பார் சிவத்தம்பி அவர்கள்.

அக்கினிக் குஞ்சாக என் மனதுக்குள் புகுந்த அவரது கருத்துத் தான், எனது "மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்" என்ற பி.எச்.டி ஆய்வாக விரிந்தது. 660 பக்கங்களிலே அது வந்திருக்கின்றது. அதில் தமிழர்களுடைய தொன்மை பொருந்திய மரபில் ஒன்று கூத்து என்று நான் எழுதியிருக்கின்றேன். டைனோசரின் எலும்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி டைனோசரை உருவாக்கினார்களோ அதேபோல் இந்த கூத்தை வைத்து கொண்டு செழுமை பொருந்திய பழைய நாடகமரபை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். உலகளாவிய பல விடயங்களை வயதுக்கு மீறி திணித்து சிந்திக்க வைத்து செதுக்கிய பெருமை முக்கியமானவர்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பியும், வித்தியானந்தனுமே. அந்த உறவு பின்னர் நன்றாக விரிந்தது. கொழும்பிலே அவர் அப்போது நாடகக்குழு தலைவராக இருந்தார். ஈழத்தின் தமிழர் வாழ் பிரதேசங்களுக்கெல்லாம் சென்று அந்தக் கூத்து மரபுகளை அறிகின்ற பணியிலே எங்களை ஊக்குவித்தார்.நானும்; சண்முக சுந்தரமும் எல்லா இடங்களுக்கும் பேராசிரியர் சிவத்தம்பியின் பிரதி நிதிகளாகச் சென்றோம். வன்னியிலே 1971/ 72 இலே ஒரு பெரிய மாநாட்டை கூட்டுவதற்கு ஒழுங்கு செய்தார் சிவத்தம்பி. வன்னிக்கலைகளை வெளியுலகுக்கு கொண்டு வருகின்ற முயற்சி தான் அது. வன்னி மாநிலத்திலே இருக்கின்ற கூத்து, கரகம் கோவலன் கூத்து சிலம்பு கூறல் குடக்கூத்து போன்ற பல்வ்வேறு கலைகளை வன்னி மாநிலத்திற்க வெளியே கொண்டு வருகின்ற முயற்சி தான் இது. அந்தக் காலகட்டத்திலே தான் கொழும்பிலே தாசீசியஸ், சுந்தரலிங்கம் ஆகியோர் கொழும்பிலே நாடகங்களைப் போடுகின்றார்கள். சுந்தா என்று அறியப்பட்ட பி.பி.சி சுந்தரலிங்கம் அவர்களின் வீட்டில் நான் குடியிருந்தேன். அந்த வீட்டு மொட்டை மாடியில் இந்த வகையான நாடகங்கள் பழகப்பட்டன. அந்த மொட்டை மாடியில் இருந்து சுந்தா, கைலாசபதி, சிவத்தம்பி, எல்லோரும் சூழ்ந்திருக்க தாசீசியஸ், நான், சுந்தரலிங்கம் போன்றோர் இந்த நாடகங்களைப் பழகிய அற்புதமான காலங்கள், கொழும்பில் இருந்த காலங்கள். பிறகு 80 களுக்கு பிறகு நான் யாழ்ப்பாணம் வந்து விடுகின்றேன். அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நுண்கலைத் துறைத் தலைவராக இருக்கின்றார். அவருக்கு கீழே நுண்கலைத் துறை விரிவுரையாளராக இருந்தேன். யாழ்ப்பாணத்திலே புதிய நாடக மரபு ஒன்று உருவாக ஆரம்பிக்கின்றது. அந்த நாடக மரபுக்குப் பின்புலமாக இருந்து ஊக்க சக்தி கொடுத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். நான் அப்போது தயாரித்த எல்லா நாடகங்களுக்கும் அவர் ஆலோசகராக இருந்தார். முக்கியமாக புதியதொரு வீடு நாடகம் தயாரிக்கப்பட்ட போது அவர் ஸ்ரனிஸ்லவஸ்கியின் மெதேட்டை எப்படி கொண்டு வரலாம் என்பதை அன்று நடிக்கப் பழக்கினார். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். இராவணேசன் மூலம் கீழத்தேய மரபை சிவத்தம்பி மூலம் கற்ற நான் யாழ்ப்பாணத்தில் ஸ்ரனிஸ்லவஸ்கியின் நாடக மரபை கற்கக் கூடியதாக இருந்தது. அவர் ஓய்வு பெற்ற பின் கிழக்குப் பல்கலைகழகத்திற்கு இரண்டாண்டுகள் வந்து, லயம், இராவணேசன், கிழக்கிசை அவருடைய வழிகாட்டலில் நுண்கலைத்துறை செய்கின்றது. ஒன்றை மட்டும் நிறைவாகச் சொல்லி வைக்கின்றேன்.

சிவத்தம்பி அவர்களை தந்தை போன்று உரிமையோடு சண்டை இட்டுக்கொள்வோம், சண்டை வரும், சமாதானம் வரும், தந்தைக்கும் மகனுக்குமுரிய எல்லா மோதல்களும் அதிலே வரும். ஆனால் அடி நாதமாக ஓடுவது ஒரு பாசம் தான். அந்த உறவு தான் ஸ்தாயிபாவமாக எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். ஆரம்ப காலத்திலே தத்துவத்தின் அடியாகத்தான் எல்லாவற்றையும் விளக்க முயன்றார். நடந்து கொண்ட எல்லா விடயத்தையும், நடைமுறைகளையும் தத்துவமாக உருவாக்க முயன்றார். அதை எப்படிக் கூறலாம் என்று சொன்னால் விளக்க முயன்ற காலம் பழைய காலமானால் விளங்கமுயன்ற காலம் பிற்காலமாக காணப்படுகின்றது. நாடகத்துக்கூடாக மக்களை அறிய முயன்றார், தமிழர்களை அறிய முயன்றார், பண்பாட்டை அறிய முயன்றார். பண்பாட்டில் வலிமையிலே அவர் மிகவும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஆனபடியால் தான் அவர் பொருளாதாரக் கட்டுமானத்துக்கும் அப்பால் சென்று பண்பாட்டடியாக தமிழ் மக்களைப் புரிந்து கொள்ள அவர் முயன்றார். சிவத்தம்பி அவர்கள் ஆய்வாளர் , விமர்சகர் , கவிஞர் , சிந்தனையாளர். இவற்றுக்கும் அப்பால் ஒரு நடிகர் நாடக எழுத்தாளர். நாடக நெறியாளர். மரபு வழி நாடகங்களை செழுமைப்படுத்தியவர். நாடகங்களையும் அரங்கியலையும் உருவாக்கியவர். ஒரு பாரம்பரியத்தை தனக்கு பின்னால் உருவாக்கி சென்றவர். இந்த பகுதி இன்னும் விரிவாக எழுதப்படுகின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பியின் இன்னொரு ஆளுமையின் முகம் வெளியே தெரிய வரும் என்றார் பேராசிரியர் சி.மெனகுரு.
Posted by கானா பிரபா at 7:57 PM Email This BlogThis! Share to X Share to Facebook

1 comments:

Yarlpavanan said...


பேராசிரியர் சிவத்தம்பி அவர்களை உள்ளக் கண்ணில் பார்க்க வைத்துவிட்டீர்கள்!
சிறந்த பகிர்வு

July 06, 2014 10:48 PM

Post a Comment

Newer Post Older Post Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (7)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ▼  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ▼  July 2014 (2)
      • இந்தக் கதிரைக்கும் ஒரு கதை இருக்கு
      • மறந்திராத நினைவில் பேராசிரியர் கார்த்திகேசு.சிவத்த...
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes