எங்கள் அம்மாவின் இளமைக்காலத்துப் பொழுதுபோக்கை, எங்கள் வீட்டின் புத்தக அறை மெய்ப்பிக்கும். ஆசிரியையாக மலையகத்துக்குச் சென்ற காலத்தில் இருந்து அவருடைய பேச்சுத்துணையில் முதல் ஆள் கல்கி, ஆனந்த விகடன் தான். அந்தக் காலத்துக் கல்கி, ஆனந்த விகடன் சஞ்சிகைகளில் வந்த கதைகளைத் திரட்டிப் பின்னர் கோர்த்து ஒவ்வொரு கதைகளின் சித்திர அட்டைகளை முகப்பில் ஒட்டி அடுக்கி வைத்திருப்பார்.
எங்கள் வீட்டில் எந்த அறைக்கும் சுதந்திரமாக உலாவலாம் எதையும் எடுக்கலாம் ஆனால் அந்தப் புத்தகக் கட்டுகளை எடுப்பதென்றால் அம்மா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறப் பகீரதப் பிரயத்தனம் தான் செய்ய வேண்டும். அப்பாவும் புத்தகப் பிரியர் என்றாலும் அவருடைய எழுத்தாளர்கள் கல்கி, ஜானகிராமன், அகிலன் என்று இருக்கும். அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா என்று அவ்வப்போது புதுசு புதுசாக வந்து கொண்டிருக்கும் சிறுவர் சஞ்சிகைகளை விழுந்தடித்துப் படித்துச் செரிமானம் அடைவதற்குள் இன்னொரு புத்தகத்தின் மேல் கை படரும். அப்படியான ஒரு நாளின் தான் என் தொல்லை தாங்காமல் அம்மா தான் கட்டி வைத்த புத்தகச் சொத்தில் இருந்து "ஓநாய்க் கோட்டை" என்ற சித்திர நாவலை எடுத்துத் தந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. "புத்தகத்தை ஒரு சிறு கீறலும் இல்லாமல் படிச்சு முடிச்சுட்டுக் குடுத்துடவேணும்" என்று என் அம்மாவின் கட்டளையெல்லாம் ஒரு காதில் போட்டாச்சு.
இலேசாகப் பழுத்துப் போன அந்தக் காகிதக் கற்றையில் பொதிந்த ஓவியக் குவியல்களோடு நான் இன்னொரு உலகத்துக்குப் பயணிக்கிறேன். ஒவ்வொரு பக்கம் பக்கமாகப் பிரமிப்போடு படிக்கிறேன் அதை. அன்றுதான் வாண்டுமாமா எனக்கு அறிமுகமானார். அம்புலிமாமா யுகத்தில் பொத்தம் பொதுவாக எழுத்தாளர் யார், எவர் என்ற ஆராய்ச்சி இல்லாமல் படித்துக் கடந்து போன எனக்கு "வாண்டு மாமா" என்ற எழுத்தாளரைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற உந்துதலை அந்தப் பால்யகாலம் விளைவித்தது. அவரின் எத்தனை கதைகளை நூலகங்களில் தேடிப் படித்திருக்கின்றேன் என்று நினைவில்லை. ஆனால் என் வாசிப்பு அனுபவத்தில் வாண்டு மாமா தான் அடையாளத்தைத் தேடி வாசிக்கும் பண்பை முதலில் வளர்த்தவர். என்னுடைய மத்திய வகுப்பில் வேடிக்கையாக "ஒற்றைக்கண் மந்திரவாதி" என்றெல்லாம் கதைகளை நானாகக் கைப்பட எழுதிச் சித்திரம் எல்லாம் வரைந்து நண்பர்களுக்குப் படிக்கக் கொடுப்பேன். அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் வாண்டு மாமா.
சிலவேளை வயதுக்கு மீறிய எழுத்துகளை நூலகத்தில் இருந்து காவி வந்து வீட்டுக்குள் வந்து என் அப்பாவின் கண்ணில் பட்டால் போதும் "இப்பிடியான அழுகல் புத்தகங்களை வாசிக்கக் கூடாது, அதெல்லாம் பெரியாக்களுக்குத் தான் எழுதினவை" என்று அப்பா கடிந்து கொள்வார். எங்கள் பால்ய காலத்தில் வீட்டில் பாடப்புத்தகத்துக்கு அடுத்ததாகச் சுதந்தரமாகச் சுற்றித் திரிந்தவை வாண்டுமாமாவின் சித்திரக்கதைக் கட்டுகளும், அழ.வள்ளியப்பாவின் பாடல்களும் தான். அவற்றை அப்பாவுக்குக் காட்டிக் காட்டி வாசிக்கும் போது ஏகப்பட்ட சலுகையும் மரியாதையும் கூடக் கிடைக்கும்.
இன்று நினைத்துப் பார்க்கும் போது எண்பதுகளுக்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் சிறுவர் இலக்கியத்தில் தேக்க நிலை இருப்பது போலத் தென்படுகின்றது. அதற்குக் காரணமே அந்தக் காலத்தில் மலையளவு கிட்டிய சிறுவர் இலக்கியப் படைப்புகள் தாம். ஒரு பக்கம் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் தரும் வண்ண வண்ண மொழிபெயர்ப்புப் படைப்புகள், இன்னொரு பக்கம் அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் இவற்றோடு அந்த நாளில் பொலிவோடு களமிறங்கிய கோகுலம் என்று சிறுவருக்குத் தீனி கொடுத்தவை ஏராளம்.
எங்கள் ஈழத்துத் தமிழ் மொழிவழக்கில் என் நினைவுக்கு எட்டியவரை "வாண்டு" என்ற சொற்பிரயோகத்தைப் பாவித்ததில்லை. அதற்கு மாற்றீடான சொல்லே புழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால் வாண்டுமாமா என்ற சொல்லின் அர்த்தம் எங்களுக்குத் தெரிந்தது அவர் கொடுத்த படைப்புகளாகத் தான். மூப்பும், பிரிவும் மனிதரைத் தாக்கும் என்றாலும், வாண்டுமாமாவின் பிரிவைக் கேட்டபோது ஒரு சில நிமிடங்களேனும் என் சொந்தக்காரரை இழந்த துயரை ஏற்படுத்திவிட்டதற்குக் காரணமே அவரின் எழுத்துகளின் வழியான பந்தமும், நெருக்கமும் தான்.
என் புத்தகப் பட்டியலில் இன்றும் சிறுவர் இலக்கியத்தைத் தேடி நுகர்வதற்கு முக்கியமாக வாண்டுமாமாவின் தாக்கம் மிகப்பெரியது.
ஏப்ரல் 21,2025 வாண்டுமாமா பிறந்த நூற்றாண்டு தினம், அதனையொட்டி எழுத்தாளர், நண்பர் என்.சொக்கன் அவர்களும், இணைய சமூகத்தில் பரவலாக அறியப்பட்ட சித்திரக்கதைப் பிரியர் மற்றும் வாண்டு மாமா நூற்றாண்டு நிகழ்வைத் தன் இலக்கிய குழாமோடு வெற்றிகரமாக நிகழ்த்திய நண்பர் கிங் விஸ்வாவும், வாண்டு மாமா நம்மை விட்டுப் பிரிந்த போது (12 ஜூன் 2014) வழங்கிய நினைவுப் பகிர்வையும் இந்த வேளை பகிர்ந்து கொள்கிறேன்.
Youtube
https://www.youtube.com/watch?v=Ct0KK9bujTA
Spotify
https://open.spotify.com/show/25ZvXOpdQymPa62Btp8GNG
கானா பிரபா