"என்ன தெரியுதா..இன்னும் திருப்ப வேணுமோ?""இன்னும் கொஞ்சம்...கொஞ்சம்...ஆ இப்ப சரி படம் வருகுது"
கூரையில் இருந்த அன்ரெனாவின் கழுத்தை மத்தாகத் திருகிக் கைவலித்த சின்ன அண்ணன் கீழே ஓடி வருகிறார். வீட்டுக்குள் இருந்து ரீவியின் காதைத் திருகித் திருகிப் படம் வரப் பண்ணி ஓரளவு ஆடி அசையும் முகங்களைக் கண்ட சந்தோசத்தில் நான்.
இதெல்லாம் ஒரு காலத்தில் எங்களூர் வீடுகளில் பெரும்பாலும் காணும் நிகழ்வுகள் தான். எதற்காக இந்தப் பகீரதப் பிரயத்தனம் என்றால் அது வெள்ளிக்கிழமை "ஒலியும் ஒளியும்" தூரதர்ஷனில் பார்க்க வேண்டுமே.
இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்பது போல என்னதான் இலங்கை வானொலியும், ரூபவாஹினி தொலைக்காட்சியும் இருந்தாலும், திருச்சி வானொலியைக் கேட்பதும், தூரதர்ஷனைப் பார்ப்பதும் எங்களுக்கு அலாதியான விஷயங்கள். எண்பதுகளின் ஆரம்பத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் எங்களூர் பணக்காரர் வீட்டுச் சொந்தங்களாக மட்டுமே இருந்தன. அப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியைக் காணாத சனம் சில புரளியையும் கிளப்பிவிட்டிருக்கும்.
"உந்தப் பெட்டியிலை இருக்கிற அன்ரெனாவை ராஜா தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை ஓடுற படம் வருமாம், சிறீதர் தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை போடுற படம் காட்டுமாம்" இப்படி தேவிமாமியின் தாய்க்கிழவி ஒரு புரளியைச் சந்தடி சாக்கில் போட்டு விட்டுப் போயிருந்தா.
தொலைக்காட்சிப் பெட்டிகளின் அறிமுகத்தை எங்களூர் வாசிகசாலைகள் செய்த கதையை முந்தி ஒரு பதிவில் சொல்லியும் இருக்கின்றேன்.
மெல்ல மெல்ல தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்ட ஒவ்வொரு வீட்டுக் கூரையிலும் கொம்பு (அன்ரெனா) முளைத்தது. அப்போதெல்லாம் ரூபவாஹினி தொலைக்காட்சி ஆரம்பித்த நாள் முதலே கலர் திரையில் தமது ஒளிபரப்பைத் தந்தாலும் அதைப் பார்க்கும் ஆர்வம் ஏனோ அதிகம் எமக்கு வரவில்லை. சின்னப் பிள்ளைகளை வைத்து "காயனா" என்ற பெயரில் ஒரு பாட்டு நிகழ்ச்சியும், "கோப்பிக் கடே" என்ற நாடகமும் , காதம்பரி, ஒரு சில ஈழத்துத் திரைப்படங்களைப் பாகம் பாகமாகக் காட்டியது என சொற்பமான சில நினைவுகளையுமே நினைவுகளையுமே ரூபவாஹினி விட்டுச் சென்றிருக்கிறது.
சின்ன அண்ணரின் இந்த முயற்சிக்குக் கண்காணிப்பாளராக நான். வீட்டுக்குள் பாய்ந்து ரீவியை எட்டிப் பார்ப்பதும் வெளியில் ஓடி வந்து கத்துவதுமாக இருக்கும். சில வேளை திரையில் தோன்றும் பாயாச மழையைப் பார்த்து ஏதோ சனக்கூட்டம் தெரிவது மாதிரி இருக்கு என்று நானே முடிவுகட்டிப் பின்னர் டோஸ் வாங்கியதும் உண்டு.
எப்படா வெள்ளிக்கிழமை வரும் ஒலியும் ஒளியும் பார்க்கலாம் என்று காத்திருந்தால் அந்த நிகழ்ச்சி வருவதற்கு முன்னால் தமிழ்ப்பாடமெடுக்கும் பேராசிரியர் நன்னன் எல்லாம் தெளிவாகத் தெரிவார். ஏழரைக்கு ஒலியும் ஒளியும் என்று கடிகாரத்தின் நாடி பிடிக்கும் நேரம் பார்த்து ரீவித்திரை கழுத்தறுத்து விடும். சிலவேளை எங்கள் அன்ரெனா திருப்பும் படலம் ஒலியும் ஒளியும் ஆரம்பிப்பதற்கு முன்னிருந்து அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த நேரம் வரை கடந்து அலுத்துப் போவோம். தப்பித் தவறி நல்ல தெளிவான காட்சியா ரீவியும் குழப்படி இல்லாமல் வேலை செய்தால் ஆற அமர உட்கார்ந்து பார்ப்போம்.
"அரை மணித்தியாலத்தில் அஞ்சு பாட்டுப் போடலாமே, ஏன் உவங்கள் மூண்டோட நிப்பாட்டிட்டாங்கள்" என்றும் சில வேளை கடுப்பை ஏற்படுத்தும் தூரதர்ஷன். கோவா கலரில் "இயற்கை என்னும் இளைய கன்னி" சாந்தி நிலையம் பாட்டு, கறுப்பு வெள்ளையில் "காதோடு தான் நான் பேசுவேன்" என்று இன்றும் அருமையாகப் பெருமையாகப் பார்த்த பாட்டுக்கள் நினைப்பில் இருக்கு,.
புதிதாக வரும் ஐ.ஆர் ரக அரிசி விளக்கத்தோடு ஒருவர் "வயலும் வாழ்வும்" நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு சீரியசாகப் பாடமெடுப்பார். செய்திகளைத் தொடர்ந்து வரும் காணாமற் போனோர் அறிவிப்பை விநோதமாகப் பார்ப்போம். தூரதர்ஷன் தவிர இந்தக் காணாமற் போனருக்கு முக்கியத்துவம் கொடுத்த தொலைக்காட்சி உண்டா என்ன?
எண்பதுகளின் இறுதிப் பகுதியில் தூரதர்ஷன் சிக்கல் இல்லாமல் ஓரளவு ஒளித்தரத்தில் தன்னைக் காட்ட எங்களுக்கும் அடிக்கடி அன்ரெனா திருப்பும் வேலையும் அதிகம் இருக்கவில்லை.
ஒளிபரப்பு ஆரம்பிக்கும் முன் வளையமாகச் சுழன்று எழுப்பும் அந்த ஒலியை நாமும் வேடிக்கையாக வாயில் ரியூன் போட்டு ரசிப்போம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஒளிபரப்பில் "மஹாபாரத்" என்ற கணீர்க் குரலோடு வரும் பாடலோடு ராமானந்த் சாகரின் மகாபாரதம் பார்த்த காலமும் உண்டு. இரண்டரை மணி நேரப் படத்தில் ஆயிரத்தெட்டு இடைவேளைகளும், "தடங்கலுக்கு வருந்துகிறோம்" அறிவிப்பும் வந்து போகும். ஒரு நாற்காலியும் பேப்பரும் பின்னால் திரையும் அமைந்த செட் அமைத்து அரங்கேற்றிய இழுவை தொலைக்காட்சி நாடகங்கள் கழிந்து, மெல்ல மெல்ல நிகழ்ச்சிகள் மெருகேறி, "ரயில் சினேகம் ரயில் சினேகம்" என்று ஜேசுதாஸ் பாட பாலசந்தரின் இயக்கத்தில் நிழல்கள் ரவி நடிப்பில் வந்த "ரயில் சினேகம்", ஓவ்வொரு
விதமான பெண் பாத்திரங்களை எடுத்து பார்த்திபன் போன்ற ஹீரோக்களை இணைத்து சுஹாசினி இயக்கிய "பெண்", எஸ்.வி.சேகர் இயக்கிய "வண்ணக்கோலங்கள்" என்று வரிசை கட்டி வந்த நாடகங்களைப் பார்த்த ஞாபகமும் உண்டு. இவற்றுக்கு மத்தியில் சுஜாதா எழுதிய "டாக்டர் நரேந்திராவின் விநோத வழக்கு" நாடகமும் தனித்து நின்றது.
தேசிய ஒளிபரப்பில் என்றோ பார்த்த, அமிதாப்பச்சன் கூலிங் கிளாசுடன் வில்லன் கோஷ்டிகளுக்கு மத்தியில் மறைந்து பாடும் அந்த ஹிந்திப் பாடலின் முகவரி தெரியாமல் அந்த மெட்டை மட்டும் இன்னும் முணுமுணுத்துத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஷோபனா ரவி, வரதராஜன் குரல்களில் வந்த செய்திகளின் தரமே தனி தான், அதெல்லாம் ஒரு காலம்
இருபது வருஷ இடைவெளியில் கடந்த சில வாரங்களாக கடல்கடந்து பொதிகையாய் என் வீட்டுத் தொலைக்காட்சியில் தெரிகிறது இப்போது. தேசியத் தொலைக்காட்சிகளாக மற்றைய நாடுகளில் இருக்கும் சேவைகள் தொழில்நுட்ப ரீதியிலும் நிகழ்ச்சித் தரத்திலும் எங்கோ உச்சத்துக்குப் போய் விட , பொதிகையின் ஒலித்தரமோ லவுட்ஸ்பீக்கரில் வரும் "சிறுபொன்மணி அசையும்" ரகமாக இருக்கின்றது. அதே காணாமல் போனோர் அறிவிப்புக்களும் செய்திகளைத் தொடர்ந்து வருகின்றன. வயலும் வாழ்வும் பெயர் மாறி வேறோர் பெயரில் வருகின்றது. நிழல்கள் ரவியும் ஏதோ ஒரு சீரியலில் போலீஸ் கதாநாயகன் வேஷம் கட்டி நடிக்கிறார். தனியார் தொலைக்காட்சிகள் சுவீகரிக்கமுன் உள்ள காலத்தில் வந்த உரிமம் வாங்கிய படங்களைப் போடுகின்றது. ஒரு காலத்து நினைவுகளை நெஞ்சுக்குள் புதைத்து வைத்த அதே திருப்தியோடு, அது மட்டும் போதும் என்று பொதிகை நினைக்கிறதோ.
