இதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை "மடத்துவாசல் பிள்ளையாரடி" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்து பன்னிரண்டாவது ஆண்டில் காலடி வைக்கிறேன்.
இன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன்.
ஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.
இதுவரை "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி", மற்றும் "பாலித் தீவு - இந்துத் தொன்மங்கள் ஆகிய நூல்களை என் வலைப்பதிவு அனுபவ வெளிப்பாடுகளாய்ப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறேன்.
அடுத்த முயற்சியாக என் ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல் குறித்த நூலையும், கலைஞர்கள், படைப்பாளிகளோடு நான் கண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலையும் வெளியிட உள்ளேன். "மடத்துவாசல் பதிப்பகம்" என்ற என் வெளியீட்டகத்தின் வழியாக "பாலித் தீவு" நூலைத் தொடந்து வரும் அடுத்த படைப்பை 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நான் பிறந்த ஊரிலேயே வெளியீடு செய்யும் முனைப்பில் உள்ளேன்.
எனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில்
எனது ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக
மடத்துவாசல் பிள்ளையாரடி http://www.madathuvaasal.com/
என்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக
றேடியோஸ்பதி
http://www.radiospathy.com/
எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக
உலாத்தல்
http://ulaathal.blogspot.com.au/
இவை தவிர
காணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர
வீடியோஸ்பதி
http://videospathy.blogspot.com.au/
என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,
நான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர
கங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்
http://eelamlife.blogspot.com.au/
கங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்
http://eelamlife.blogspot.com.au/
அருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி http://isaiarasi.blogspot.com/
என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக இயங்கியிருந்தேன்.
ஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்சியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம், சுடரொளி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா, காக்கைச் சிறகினிலே, தமிழ் இந்து போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள், தென்றல், தமிழ் அவுஸ்திரேலியன் இன்னும் பிற "அனுமதி பெறாது பிரசுரிக்கும்" புலம்பெயர் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன்.
இதே வேளை என்னிடம் அனுமதி பெறாமல் என் ஆக்கங்களைப் பிரசுரித்த இணையத்தளங்கள், அச்சு ஊடக சஞ்சிகைகள், பத்திரிகைகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது இனியாவது அனுமதி பெற்றுப் பிரசுரிக்கும் எழுத்துலக அடிப்படைத் தார்மிகத்தைப் பேண அன்புடன் வேண்டுகிறேன்.
தொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.
அன்புடன்
கானா பிரபா
05.12.2016
2 comments:
உங்கள் வலைப் பதிவுகளைப் படித்துப் பயனடைன்தவள் நான் :-} நிறைய எழுதுங்கள், பதின் பருவத்தைத் தொடப் போகிறது உங்கள் வலைப் பூ. மென்மேலும் மெருகுற வாழ்த்து :-}
amas32
வாழ்த்துக்கள் கானா பாலா. தொடர்ந்து எழுத முயற்சி செய்யுங்கள் :-) .
உங்களின் றேடியோஸ்பதி தளம் இசையை ரசிப்பவர்களுக்கு ஏற்ற தளம். இதில் பகிரும் தகவல்கள் மிக சுவாரசியம்.
Post a Comment