Sunday, August 16, 2026
கரிகால தேசத்துக் காதலி (கவிதைத் தொகுப்பு) ✍️ பிரபா அன்பு 📚நூல் நயப்பு
Monday, August 10, 2026
வாகரைவாணன் விண்ணேகினார்
வாகரைவாணன் விண்ணேகினார்
கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளி வாகரைவாணன் (சந்தியாப்பிள்ளை அரியரத்தினம்) தனது 85 ஆவது வயதில் இன்று விண்ணேகினார்.
டிசெம்பர் 22, 1941 ஆம் ஆண்டில் பிறந்த இவர் புனித பத்திரிசியார் கல்லூரியில் (1982 – 1996) ஆசிரியராகச் சேவை அளித்தவர்.
தன்னுடைய 15 ஆவது வயதில் 1956 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கியவர் 42 நூல்களை ஆக்கியளித்துள்ளார்.
தமிழ், ஆங்கிலம், லத்தீன் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர்.
கவிதை, நாடகம், ஆய்வுக் கட்டுரை, சிறுவர் இலக்கியம், சிறுகதை, மொழிபெயர்ப்பு என்று தன் இலக்கியப் பணியை விசாலமாக்கிக் கொண்டவர்.
இலங்கை அரசின் இலக்கிய விருது (சின்னச் சின்னப் பூக்கள்), யாழ் இலக்கியப் பேரவையின் விருதுகள் இரண்டு (அருளாளர் அந்தோனியார் மற்றும் பாலர் தமிழ்ப்பாட்டு ) எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் மட்டக்களப்பு (கிழக்கிலங்கைத் தமிழகம்) உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.
வாகரைவாணன் எழுதிய நூல்களில் சில
வாகரை ஒரு வரலாற்றுப்பார்வை
தமிழ் மண் மட்டக்களப்பு
மட்டக்களப்புக் காவியம்
கிழக்கிலங்கைத் தமிழகம்
பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்
பாலர் தமிழ்ப்பாட்டு
புதுக்கவிதைப் புத்தகம்
விபுலாந்தம்
தமிழ்ப் பாவை (நெடும் பாடல்)
தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்
வாகரை வாணனின் ஆய்வுக் கட்டுரைகள்
நந்திக்கொடி
இனிக்குந் தமிழ்
இன்னாசியார் காவியம்
இன்ரநெற் தமிழ் 2000 (ஆய்வுரைத் தொகுப்பு)
பனிச்சங்கேணி அரசி
கிறிஸ்து காவியம்
கிறிஸ்து தத்துவம்
சமயம் - சில சிந்தனைகள்
சின்னச் சின்னப் பூக்கள் (மணம் கமிழும் மழலைத் தமிழ்ப்பாட்டு)
நீ வா நிலாவே (மழலைக் கவிதைகள்)
தமிழ்ப்பாவை தைப்பாவை
My Country
Pros and peotry – Swami Vipulananthar
அரசி உலகநாச்சியார்
ஒரு பூ மலர்கின்றது
கடற்கரைப் பூக்கள்
வாகரை வாணன் குறித்த விரிவான பகிர்வைக் காண
வாகரையின் வாணன்
https://noolaham.net/project/1119/111824/111824.pdf
நன்றி : வாகரைவாணன் ஃபேஸ்புக் தளம்
வாகரையின் வாணன்
நூலகம் தளம்
நமது ஈழத்துப் படைப்பாளி வாகரைவாணன் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
Wednesday, July 01, 2026
கிழக்கு நோக்கி சில மேகங்கள் - சிறுகதைத் தொகுதி நயப்பு
“என் ஆசானுக்கும் வாசகர்களுக்கும்" என்ற முன்னுரையோடு எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி பகிர்ந்த விடயங்களில் தன்னுடைய வாசிப்புப் பின்புலம் குறித்துப் பகிர்ந்தவர், தன்னுடைய எழுத்துலக ஆசானாக இருந்த போதிலும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஈழத்து அரசியல் விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றும் நேர்மை தான் இவரை ஒரு சமரசமற்ற படைப்பாளியாக அடையாளப்படுத்துகிறது. இந்த மாதிரி ஒரு எழுத்தாளர் தன்னையும், தான் மதிப்போரையும் விமர்சனம் செய்து முன்னுரை கொடுப்பது ஒரு புது வாசிப்பனுபவம்.
இந்தச் சிறுகதைத் தொகுதிக்கு அணிந்துரை கொடுத்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்குச் சிறுகதைகள் குறித்த பார்வையை விட எழுத்தாளரின் வாக்குமூலம் தான் பிடித்துப் போகிறது.
“சாக்கொன்றில் கொஞ்சம் இறைச்சி
திண்ணையில் பரப்பி வைத்தனர், போயினர்
காலை பள்ளி போன பையன்"
என்ற ஈழத்துப் போரியல் வாழ்வின் அவலத்தைத் தன் முன்னுரையில் பகிர்ந்த பொ.கருணாமூர்த்தியின் அத்தகு பாங்கில் ஒரு சிறுகதை இந்தத் தொகுப்பில் இல்லையே என்ற ஆதங்கம் கொள்கிறார் இன்குலாப். அவர் வாழ்ந்து மடியும் வரை தன் இனத்துக்காகக் கடல் பிரிக்கா உணர்வு கொண்ட எழுத்துலகப் போராளி. ஆகவே அவரின் எதிர்பார்ப்பிலும் தப்பில்லை.
ஆனாலும் சிறுகதைகள் அனைத்தையும் படித்துத் தெளிந்த விமர்சகர் வழி அணிந்துரை பெற்றிருந்தால் ஒவ்வொரு கதையின் பரிமாணத்தை இன்னும் ஆழ அகலமாக ஒரு விமர்சனக் கண்ணாடி வழி தரிசித்திருக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது.
பொ.கருணாகரமூர்த்தி அவர்களைச் சமூக வலைத்தளங்கள் வழி பல்லாண்டுகளாக அறிந்த வகையில் அவர் தன்னுடைய படைப்புகளுக்குச் “சொல் வேட்டையாடும்” பாங்கைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு சிறுகதைகளிலும் ஈழத்தில் பயன்படுத்தப்படும் தனித்துவமான மொழியாடலை அவர் கையாண்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் நம்மூர்களில் ஆங்காங்கே தெருவோரங்களில் காணப்பட்ட ஆவுரஞ்சிக் கல், மாடுகள் தம் சுனைப்பைக் கட்டுப்படுத்தத் தம் உடம்பைத் தேய்க்கும்.
அந்தக் கல்லைப் பொருத்தமாக ஒரு சிறுகதையின் முக்கிய உவமானமாகக் கொண்டு வருபவர் “ஆவுரஞ்சிகள்” என்ற தலைப்பையும் கச்சிதமாகக் கொடுக்கிறார். கதையைப் படித்து முடித்ததும் எழும் அதிர்வலைக்கு நிகராக நியாயம் கற்பிக்கிறது அந்தத் தலைப்பு.
ஈழத்து வாழ்வியலின் நனைவிடை தோய்தலைப் புலம் பெயர் இலக்கியமாக்கி விட்டார்கள் போன்ற எதிர்வினைகளை மறுதலிக்கும் போக்கில் ஒவ்வொரு சிறுகதைகளின் களமும், புலமும் வேறு. அவற்றில் பேசப்படும் சிக்கல்களும், அனுபவங்களும் பன்முகப்பட்டவை.
“கல் தோன்றி
மண்தோன்றாக் காலத்துக்
கதையெல்லாம் தெரியாது. ஆனால்..!
என் முன் தோன்றிய
மூத்த பழங்குடி
அப்புவும்
ஆச்சியும்
வாழ்ந்த மண். ஏன்
அப்புவின் அப்புவும்
ஆச்சியின் ஆச்சியும் கூட
அங்கேயே வாழ்ந்தனர். அதுக்கு முன்
இன்னும்
ஒன்றிரண்டு தலைமுறை
அப்பு ஆச்சிமார்
கூட
இருந்திருக்கலாம். நான் கூட
பிறந்து வளர்ந்தது
அங்கேதான்
பிறந்த நாடுதான்
பொன்னாடு
என்றெல்லாம் சொன்னேன்
மகனுக்கு. அவனும் மொழிகிறான்.
உண்மைதான் அப்பா
பிறந்த நாடுதான்
பொன்னாடு
பிறந்த நாட்டை விட்டு
வரமாட்டேன் இலங்கைக்கு”
இப்படி என் அன்பு நண்பர், கவிஞர் ஈழநாதன் எழுதிய கவிதை தான் நினைப்புக்கு வந்தது “ஒரு கிண்டர் கார்டன் குழந்தையின் ஆத்ம விசாரங்கள்" கதை படித்த போது.
புலம்பெயர் வாழ்வில் தலைமுறை இடைவெளி கொண்டு வரும் சவால்கள் என்பது அடுத்த தலைமுறையின் தொட்டிலில் தொடங்குகிறது. அது முதலில் கை வைப்பது நமது ஆன்மிக நம்பிக்கைகளைத் தான். இந்தக் கதை அனுபவத்தைப் புலம்பெயர் வாழ் பெற்றோர் கடப்பது அரிது.
இந்த மாதிரியான போக்கில் கர்மாவைப் பற்றிய சிந்தனையோட்டத்தில் இன்னொரு கதையான “அது வேறு சமூகம்" எழுதப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு சிறுகதைகளின் போக்கு ஒரு நடைச்சித்திரமாக எழுதப்பட்டிருக்கின்றது, அது சிறுகதை மரபிலிருந்து விலகியதான நிகழ்வின் பரிமாறலும் எழுத்தாளரின் எண்ணவோட்டமுமாக அமைந்திருக்கிறது.
“கடைசி பஸ்" இந்தச் சிறுகதையின் ஓட்டம், கதைமாந்தர்களது அவதியை அப்படியே நம்முள் ஏற்றுகிறது. அதே பெண்ணைக் காதலிக்கும் காலத்தில் பழகிய விதமும், அவள் வேறிடத்தில் மண முடித்த பின் சந்திக்கும் போதும் உரு மாறும் மனவியலை வெகு அழகாக எழுத்தாளர் சித்தரிக்கிறார்.
அந்த நாயகன் தன்னைத் தானே ஆற்றுப்படுத்தல் என்பதும் வெகு
சிறப்பாக கதை முடிவோட்டத்தில் நிகழ்த்தப்படுகிறது.
ஈழத்தமிழர் கனடாவிலோ, ஐரோப்பாவிலோ அன்றி அவுஸ்திரேலியாவிலோ வாழ்ந்தாலென்ன அவர்களது வேலைப் பண்பு என்பது மிகவும் பொதுமையாக இருக்கும்.
குறிப்பாக வேலைத்தளத்தில் night shift எனும் நள்ளிரவு தாண்டிய வேலையை நம்மவர் அதிகம் தேர்ந்தெடுப்பர். அதுவும் தனி ஆளாக ஒரு கடையை நிர்வகிக்கும் சூழலில் அந்த உலகமே வேறு. அந்த ஏகாந்தத்தில் தமிழ் சினிமாப் பாடல்களை உரக்க ஒலிபரப்பிக் கொண்டு வேலைப் பொழுதைக் கடத்துவர்.
எழுத்தாளர் அடிப்படையில் ஒரு சாஸ்திரிய சங்கீத ரசிகர், தன்னுடைய இசை ரசனையைச் சிறுகதைகளில் கையாள்வதைப் படிக்கும் போதே சபாஷ் போட வைக்கிறது.
அதுவும் இரு வேறு தளங்களில் எழுந்த சிறுகதைகள்.
ஒன்று “நிதிசால சுகமா” . இந்தக் கதையின் களம் ஈழத்து வாழ்வியலை மிகவும் யதார்த்தபூர்வமான எழுத்து நடையில் கண் முன்னே வைக்கிறது.
அத்தாங்கு, வலைவெடி போன்ற கலைச்சொற்களைத் திரட்டி அவற்றை இந்தச் சிறுகதையிலும் பொருத்தமாகப் புகுத்துகிறார்.
“தரையில் ஒரு நட்சத்திரம்" என்ற கதையில் இந்திய சாஸ்திரிய சங்கீதத்தை ரசிக்கும் ஒரு ஜெர்மன் வழிப்போக்கனின் பின்னணியில் அவன் ஒரு மகா கலைஞன் என்று அறிந்து கொள்ளும் தருணமாக அமைகிறது.
இதுவோர் உலகத்தரமான கதை, எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் எழுத்தாளர் கொடுத்த கதையின் ஜீவன் அப்படியே இருக்கும் உன்னதம் நிறைந்தது.
கீழைத்தேய ஆன்மிக நாட்டமும், மேலைத்தேய நாகரிக வாழ்வியலுமாக மிதக்கும் வாழ்வோட்டத்தைக் காட்டுகிறது கிழக்கு நோக்கி சில மேகங்கள் கதை.
ஈழத்தமிழ்ச் சமூகத்தில் நிகழும் கலாசார அதிர்வலைகளை, கிடுகுவேலிகளுக்குப் பின்னால் இருக்கும் அந்தரங்கங்களைப் பறை சாற்றும் கதை வடிவங்களில், ஆவுரஞ்சிகள் கதையைப் படிக்கும் போதே ஒரு கிலேசம் எழுகிறது. இப்படியும் நடக்குமா என்ற கேள்வியைக் கடந்து, நடைமுறைச் செய்திகளின் வழியே பாலியல் சீண்டல்களின் விபரீதங்களை அறியும் போது இந்தக் கதையின் மெய்த்தன்மை புலப்படுகிறது.
இன்னொரு பக்கம் ஒரு பெண்ணின் ஆழ்மன ஆசையை ஈழத்துப் பெண்ணிய எழுத்தாளர்களே கை வைக்காத ஒரு கதையோட்டத்தில் கொடுக்கிறார் “ஒரு தனித்த வனத்தில்” சிறுகதையில்.
“பர்வதங்களும் பாதாளங்களும்” கதை கூட தனித்த பெண்ணின் எண்ணவோட்டங்களும், அவளின் எதிர்காலம் நோக்கிய முடிவுமாகப் பயணிக்கிறது.
“பேதையல்ல பெண்” என்ற சிறுகதை கூட பெண்ணிய சிந்தனை கொண்டவர்கள் கைக் கொள்ளும் கரு. ஈழத்தமிழ்ச் சமூகத்தில், ஈழத்து வாழ்வியலோட்டத்தில் பாலியல் சீண்டலை ஆவுரஞ்சிகள் சிறுகதை காட்டும் பாங்கும், மறுபுறத்தில் புலம்பெயர் தேசத்தில் ஒரு பெண் அதை எதிர் நோக்கும் போது கொடுக்கும் எதிர்வினையாக “பேதையல்ல பெண்” சிறுகதை விளங்குகிறது,
பொ.கருணாகரமூர்த்தியின் புலம்பெயர் வாசமென்றாலென்ன, ஊர்வாசமென்றாலென்ன அந்தந்தக் களங்களில் பிறக்கும் உவமையும் வெகு அற்புதம். உதாரணத்துக்கு ‘கலைஞன்" சிறுகதையில்
“வானம் சிவந்துள்ள அந்திக் கருக்கலில் அல்லது நிலவின் பின்னணியில் வட்ட வடிவமாக அமைந்த ஸ்டேசனின் பாரிய கோபுரத்தைப் பார்த்தால், ஒரே நாளில் கிரீடமும், குடியுரிமையும் பறிக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட ஒரு மகாராணியைப் பார்ப்பது போல் மனது சோகம் கொள்ளும்".
என்று பகிர்வார்.
அதே கதையில் அப்படியே தாயகத்தைத் தொட்டு
“ஊரிலும் இப்படித்தான் ஒரு மிருதங்க வித்துவான், அடுப்புக்கால்களை நாய் நகர்த்துமளவு வறுமை”
இப்படியாகத் தருவார்.
பெண்களை ஏமாற்றிப் பாலியல் அடிமைகளாக வைத்திருக்கும் புலம்பெயர் வாழ்வின் இருண்ட பக்கத்தையும் பேசும்
“ஸ்பொன்சர் தாத்தாக்களும் ஏற்பாட்டு மாமாக்களும்" கதையை ஜீரணிக்கவே கஷ்டமாக இருக்கும். உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கும் அந்தக் கதையில், இந்த உள் நாட்டு யுத்தம் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களது வாழ்வியல் கோலத்தையும் சீரழித்து விட்டது என்ற நோக்கில் தன் ஆதங்கத்தையும் பதிந்து விடுகிறார் எழுத்தாளர்.
பொ.கருணாகரமூர்த்தியின் எழுத்தில் தீவிரமான கதைக் களத்தைக் காட்ட முடியும், அதே சமயம் நகைச்சுவையான எழுத்தோட்டமும் கொடுக்க முடியும் என்பதற்குக் கச்சிதமான உதாரணம் பறைகிறது “காலத்தில் காதல் செய்து" நகைச்சுவைப் படம் பார்த்தது போலவொரு உணர்வு.
பொ.கருணாகரமூர்த்தியின் “கிழக்கு நோக்கி சில மேகங்கள்' சிறுகதைத் தொகுதி படித்து முடித்த பின்னர், ஒரு தலைசிறந்த வாசகர், எழுத்தாளராகப் பிறப்பெடுக்கும் போது அவரின் எல்லை கடந்த சிந்தையும் களமும், ரசனையும், வர்ணணைகளுமாக வியாபித்துத் தமிழ் இலக்கியச் சூழலில் மிக முக்கியமானதோர் படைப்பாளியாக அடையாளப்படுத்துகிறது.
கானா பிரபா
Saturday, June 27, 2026
எழுத்தாளர் செங்கை ஆழியான் புதல்வி, கவிதாயினி Dr. ரேணுகா பிரதீப்குமார் குணராசா விண்ணேகினார்
ஈழத்தின் மூத்த எழுத்தாளர், என் எழுத்துலக ஆசான் செங்கை ஆழியான் (க.குணராசா) அவர்களின் மூத்த புதல்வி Dr. ரேணுகா பிரதீப்குமார் அவர்களின் பிரிவுச் செய்தி அறிந்து பெருந்துயர் கொள்கிறேன்.
செங்கை ஆழியான் அவர்களின் எழுத்து வழி ப்ரிய ரேக்கா என்ற ரேணுகா குறித்து அறிந்தவன், புலம் பெயர் சூழலில் அவரின் நேசத்துக்குரிய நட்புக் கிடைத்தது.
பல்லாண்டு இணைய நட்பு மறக்க முடியாத பல நினைவுகள்.
“தென்றல் வந்து என்னைத் தொடும்” பாடல் சிலாகிப்பை எழுதிய போது அவர் தன் ரசனையைப் பகிர்ந்ததை அடிக்கடி நினப்பூட்டுவேன்.
அவரின் “காத்திருக்கும் வண்ண மயில்” கவிதைத் தொகுப்புக்கு வாழ்த்துப் பகிர்வு இப்படியாகப் பகிர்ந்திருந்தேன்.
கலைத்துறை போன்று இலக்கிய உலகில் நேரடி வாரிசுகள் களமிறங்கும் பண்பு நம் தமிழ்ச் சூழலில் அதிகம் நிகழ்ந்ததில்லை. அதுவும் ஈழத்து இலக்கியச் சூழலில் இத்தகைய போக்கை விரல் விட்டு எண்ணி விடலாம்.
பெருமதிப்புக்குரிய எங்கள் எழுத்துலக ஆசான் என்று போற்றக்கூடிய செங்கை ஆழியான் அவர்களது மூத்த புதல்வி “ரேக்கா” என்ற Dr. ரேணுகா பிரதீப்குமார் குணராசா அவர்களது கவிதைப்படைப்பான
“காத்திருக்கும் வண்ண மயில்” அச்சு வாகனமேறுவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
இங்கே அவரை “ரேக்கா” என்று அடையாளப்படுத்துவதற்குக் காரணம் அவரின் தந்தையார் குணராசா அவர்கள் செல்லமாகத் தன் மகளை அழைப்பதைஅந்தக் காலத்து எழுத்துகளில் கூடப் படித்த ஞாபகம் மனதில் ஊறியிருக்கிறது.
ஈழத்தில் பிறந்த நம் காலத்துத் தலைமுறைக்கு இலக்கிய அரிச்சுவடியைக் கொடுத்தவர் செங்கை ஆழியான். அவர் எழுதி எழுதிச் சுடச்சுடப் பதிப்பில் வரும் சிறுகதைகள், நாவல்களைப் படித்த காலம் கடந்து அவரின் ஆரம்ப கால எழுத்துகளையும் மிச்சம் மீதி விடாமல் படித்து ரசித்தது ஒரு காலம். இன்று சம காலத்தில் அவரின் வாரிசின் கவிதைப் படைப்புகளை வாசிப்பதென்பது செங்கையாழியானின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீட்சியோடு நாமும் தொடரும் பாங்கைக் காட்டுகின்றது.
“காத்திருக்கும் வண்ண மயில்” அந்தக் கவித்துவமான தலைப்பே ஒரு அழகுணர்ச்சியை உண்டு பண்ணிவிடுகின்றது.
தான் எடுத்துக்கொண்ட கவிதைப் பணியிலும் சமூக நோக்கிலான சிந்தனைகளை நறுக்கென்று காட்டி நிற்கும் வகையில் முழுமையானதொரு கவிதாயினியாக அடையாளப்படுகிறார் ரேணுகா.
இன்மையின் இரு பக்கங்களைச் சிறப்பாக அடையாளப்படுத்தும்
“கதை சொல்லிப் பாட்டிகள்
காணவில்லை இன்று
கதை கேட்காச் சந்ததிகள்
காலத்தின் பரிதாபம்”
வழியே நிஜத்தின் இரு பரிமாணங்களை நுட்பமாகக் காட்டுவது ஒரு சோறு பதமாக.
ஈழத்துச் சிறுகதை, நாவல் இலக்கியம் மற்றும் வரலாற்றுத் தேடலில் தடம் பதித்த மூத்த ஆளுமை செங்கை ஆழியான் அவர்களது மகள் Dr. ரேணுகா பிரதீப்குமார் குணராசா கவிதைப் பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிப்பது அவரின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றது.
“ரேக்கா” என்ற Dr. ரேணுகா பிரதீப்குமார் குணராசாவின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன் 🙏
கானா பிரபா
27.06.2026
Tuesday, June 23, 2026
லிங்கன் கூல் பார் உரிமையாளர் விண்ணேகினார்
ஶ்ரீ மாஸ்டரிடம் CCA tuition centre இல் படிக்கும் போது வகுப்பு இடைவேளையில் பக்கத்தில் இருக்கும் லிங்கன் கூல்பாருக்குப் போய் ஒரு சர்பத், இரண்டு றோல்ஸ் சாப்பிடுவோம்.
ஒரு காலத்தில் சுபாஸ் கபே, கல்யாணி கிறீம் ஹவுஸ் வைத்திருந்த இடத்தை 90 களில் ராஜபோகமாக வைத்திருந்தது லிங்கன் தான்.
கல்லாப் பெட்டியில் உரிமையாளர் வெள்ளை வெளேரென்று முகப் பொலிவோடு இருப்பார்.
இப்போதும் தாயகம் போனால் கஸ்தூரியார் வீதியில் இருக்கும் கடையிலும், வெலிங்டன் சந்திக் கடையிலும் ஒரு ஸ்பெஷல் ஐஸ்கிறீம் வாங்கிச் சாப்பிடாட்டி ஆவல் அடங்காது எனக்கு.
ஊர் நினைவுகளுக்காக லிங்கனையும் படம் எடுப்பேன். 1971 இல் நிறுவப்பட்டு ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியம் அது.
லிங்கன் உரிமையாளர் நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் 🙏
Wednesday, May 20, 2026
நீளிரா வை மறந்த சமூகம்
அகலக் கண் விரித்து, ஆச்சரியத்தோடும், பிரமிப்போடும், மிரட்சியோடும் பார்க்கும் அந்தச் சிறுவனின் வயதை ஒத்த அதே பருவத்தில் தான் நானும் ஆகப் பெரிய அந்தப் போர்க் காலத்தை முதன் முதலில் அனுபவித்தேன்.
இந்திய அமைதிப் படை காலம் என்பது என்பது என் பதின்ம வயதில் என்னை உள ரீதியாகப் பலமாகத் தாக்கியதை முன்னர் பல அனுபவப் பகிர்வுகள் மூலம் எழுதியிருக்கிறேன்.
ஒரு ஐந்து நிமிடக் கண தூரத்தில் ஷெல் வீச்சில் இருந்து நாம் தப்பியதும், எமக்கு முன்னே போன குடும்பம் மாண்டதும் கூட நான் எழுதியதில் ஒன்று.
எனவே அந்த உலகத்தில் ஒன்றரை மணி நேரம் கொஞ்சமாவது வாழ்ந்து விட்டு வந்தது போலவே “நீளிரா”
பட அனுபவம் வாய்த்தது.
நீளிரா வில் துவக்கோடு விளையாடும் சிறுவர்கள், கல்யாண அமளியில் பெரியோர்கள் என்று இரண்டு தடங்களில் அந்த ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதைப்போக்கு.
அந்தச் சிறுவனின் பார்வையிலேயே கதையை நகர்த்தி இருக்கலாம்.
“அழியாத கோலங்கள்” கொடுத்த தன் குருநாதர் பாலுமகேந்திராவின் உத்தியை சீடர் சோமிதரன் கையாண்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.
நீளிரா போலவே வீடியோ கடையில் பட கசெட் எடுத்துப் போட்டு பார்ப்பது, ஊமை விழிகள் விஜயகாந்த் மேலான நேசம், “அடுத்த நாள் ஐந்து மணிக்கு முன்னம் கசெட்டைக் கொண்டு வாங்கோ” என்ற வீடியோக் கடைக்காரரின் விதிமுறை இதெல்லாம் கண்டு அனுபவித்தவன்.
அந்தப் பெடியன் போலவே ஒரு பட போஸ்டர் கிடைக்குமா என்ற நப்பாசையும் இருந்தது.
போர்க்கால நடைமுறையில் எங்கள் வாழ்வியல் அந்தந்தக் காலப்பகுதியை ஒட்டி மாறிவிடும்.
தேசிய அடையாள அட்டைக்குப் பதில் பாடசாலை அடையாள அட்டையைக் காட்டுவது இன்னும் பாதுகாப்பானது என்ற அந்த நுணுக்கமான வாழ்க்கை முறையை அனுபவித்தவன் இங்கே அதையும் படத்தில் பதிவு செய்த போது உருவாக்கத்தின் நேர்த்தியில் ஒரு சோறு என நினைத்துக் கொண்டேன்.
பெட்டியில் துவக்கு மறைத்து வைத்தல், சாரத்தோடு பெடியள், நேரு படம் மாட்டிய வீட்டுச் சுவர், தாடிக்கார அண்ணன்மார், பெடியளுக்குச் சாப்பாட்டு பார்சல் கொடுப்பது, திடீர் சுற்றி வளைப்புகள், தலையாட்டியின் காட்டிக் கொடுப்பில் சிக்கும் அப்பாவி, துவக்கால் அடி வாங்குவது இதெல்லாம் கூட நாம் கண்டதும் கேட்டது.
ஒரு கல்யாண வீட்டின் இரவு தான் கதைக் களம். ஆனால் அதைச் சுற்றிப் பின்னப்பட்ட திரைக்கதையும் சரி, காட்சியமைப்புகளும் சரி ஒட்டுமித்த அமைதிப்படை காலத்து விவரணப் படமாகக் காட்சி தருகிறது.
அந்த 87,88 களில் எடுத்த புகைப்படங்களை எடுத்துப் பார்த்தால் அவற்றின் நிறக்கலவை எப்படியிருக்குமோ அதையே பிரதி பண்ணிய அச்சொட்டான ஒளிப்பதிவு நேர்த்தி.
படத் தொடக்கத்தில் அதிர்வூட்டும் பின்னணி இசை உறுத்தல் எழுத்தோட்டத்தை வித்தியாசப்படுத்த வந்திருக்கும் என்று நினைத்தால் தொடர்ந்து வரும் காட்சியமைப்புகளுக்கும் ஒரே திசையில் பயணிக்கும் பின்னணி இசையில் இன்னும் அதிகம் மினக்கெட்டிருக்கலாம்.
சிறப்புச் சப்தத்துக்கான வேலைகளை அந்த இயற்கைச் சூழல் ஒலிகளை வைத்தே இன்னும் செம்மையாக்கி இருக்கலாம்.
குறிப்பாக ஆங்காங்கே காட்டிய கோழியின் கொக்கரிப்பு, நாய் குரைப்பு போன்ற நேர்த்தி பின்னர் இல்லாமல் இருக்கிறது.
ஒரு கட்டத்தில் பரபரப்பான காட்சிகளில் தான் இசையமைப்பாளர் கே நிமிர்கிறார்.
பாத்திர வடிமைப்பில் கயல் வின்சென்ட் இன் அனுபவ விளைச்சல் தெரிகிறது. தாய் பாத்திரம், அந்தக் காதலர்கள் காட்சியும் சிறப்பு, ஆனால் மீதிப் பாத்திரங்களை இன்னும் செம்மையாக்கி இருக்கலாம். கதையோட்டத்தை மழுங்கடித்து விடும் என எண்ணி இருக்கலாம்.
அந்த மன நிலை பிறழ்ந்த பெண் பாத்திரம் அந்தப் போர்க்காலத்தின் நிதர்சன சாட்சி தான் ஆனால் நீளிராவின் கதைத் திருப்பத்தை அவரை வைத்து நகர்த்தியது படத்தின் யதார்த்த மீறல்.
“நீளிரா” படத் தலைப்பு அதீத கவிதைத்தனமாகப்பட்டது. எழுத்தாளர் உமா வரதராஜன் சொன்னது போல “நீண்ட இரவு” போல எளிமைப்படுத்தி இருக்கலாம்.
படத்தின் இறுதிக் காட்சியில் இந்திய இராணுவத் தளபதி மன்னிப்புக் கேட்பதை வைத்து விமர்சனமும் கண்டேன். அதெல்லாம் நடக்குமா என்றெல்லாம் கேட்பவர்கள் அந்த இடத்தில் தாத்தா சொல்லும்
“எத்தனை பேரிட்ட மன்னிப்பு கேட்பியள்” என்பதைத் தவிர்த்து விட்டார்கள். இந்த மாதிரியான காட்சியமைப்பு படைப்பாளி தான் சொல்ல வந்த செய்தியைக் கடத்தப் பாவிக்கும் ஒரு உத்தி மட்டுமே. வேறெந்த அரசியலும் இல்லை.
இந்தப் படத்தைப் பார்த்தவர்களில்
ஒன்று
இந்திய அமைதிப் படை காலத்தில் அந்த அனுபவங்களைச் சந்தித்தவர்கள்,
இரண்டு
இந்திய அமைதிப் படை காலம் மட்டுமல்ல, போர்ச்சூழல் கூட அந்நியப்பட்ட ஈழத்தவர்
மூன்று
ஈழத்துக்கு வெளியேயான எமது இனத்துக்கு நிகழ்ந்த கொடுமைகளைக்
கேட்டு மட்டுமே அறிந்த சமூகம்
இந்த மூன்று தரப்பில், மூன்றாவது தரப்பு மனிதர்களால் மட்டுமே நீளிராவை நேசிக்க முடிந்தது என்பது வேதனையானதொரு செய்தி.
நாங்கள் அனுபவித்த அந்தக் கொடுமையான காலத்தை மீண்டும் பார்க்க விரும்பவில்லை என்று என் சமகாலத்தவர் சொன்னபோது உள்ளுக்குள் வேதனைப்பட்டேன்.
நம்முடைய காயங்களை, துன்பியல் வரலாறுகளை நாங்கள் மீண்டும் மீண்டும் நினைப்பூட்ட வேண்டும்.
எங்கள் அடுத்த தலைமுறைக்கும் அந்த வலியையும், வேதனையையும், வாழ்வியலையும் சொல்ல வேண்டும்.
சொல்லப் போனால் “நீளிரா” படம் வெளியான போது சோமிதரன் இந்தியாவுக்குச் சோரம் போனார் என்று விமர்சன சிகாமணிகள் சிலரது கருத்தைப் படித்துச் சஞ்சலப்பட்டேன்.
படத்தைப் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வருவோம் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கியவன், அந்தக் கதையில் வரும் எளிய மனிதர்களின் உணர்வுகளுக்குள் அடங்குப்பட்டேன்.
மொத்தத்தில் சோரம் போகும் அப்படி ஒரு வெங்காயமும் இல்லை என்ற கருத்தையே பதிவாக்குவேன்.
ஏனெனில் இந்தப் படைப்பில் காட்டிய அத்தனை வாழ்வியலையும் கண்டவன்.
தற்போது Zee 5 தளத்தில் கிடைக்கிறது.
அந்த அனுபவங்களுக்கு நீங்களும் சென்று வாருங்கள்.
பதிவை எழுதியவர் : கானா பிரபா
உயிரினும் மேலான பாடல் பின்னாளில் வந்தது, நிதர்சனம் தொலைக்காட்சி பார்ப்பது கூட அந்தக் காலச் சூழலுக்குப் பொருந்தாது. அதன் இயக்கம் 87 உடன் நிறுத்தப்பட்டது.
மணிச்சாமான் என்று கதைப்பதை இன்றைய யுகம் தெரிந்து வைத்திருக்குமோ என்னமோ அதை ஞாபகப்படுத்தியதும் நேர்த்தியின் ஒரு துளி.
87 ஆம் ஆண்டு டயறி படிப்பது போல இந்தப் படம் இருக்கிறது, குறியீடாகவும் பல காட்சிகள் உண்டு.
ஒரு படத்துக்குள் ஓராயிரம் அனுபவ இடுக்குகளோடு எடுக்கப்பட்ட படம் மட்டுமல்ல, பொருத்தமான காலக் காத்திருப்பில் எடுக்கப்பட்டதால் அந்தக் களம் குறித்த காட்சிச் சமரசம் இல்லை.
ஒரு வீட்டை வைத்து சோமிதரன் ஒரு காலத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார் பெருந்திரையில்.
கானா பிரபா
20.05.2026
Monday, May 18, 2026
தேனிசை செல்லப்பா
தேனிசை செல்லப்பா அவர்கள் மறைந்த தினம் ஏப்ரல் 28 ஆம் திகதி.
தேனிசை செல்லப்பாவின் பாடல்களில் இரண்டு பரிமாணங்கள் விளங்குகிறது.
Sunday, April 12, 2026
ஆழிரங்கல் 🙏 ஈழத்து எழுத்துலக ஆளுமை "ஞானம்" தி.ஞானசேகரன்
ஈழத்து இலக்கிய உலகில் ஐம்பத்திரண்டு வருடங்களாக இயங்கி வருபவர்.
1941ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி து. தியாகராசா ஐயர் – பாலாம்பிகை தம்பதியினரின் புதல்வராக யாழ். மண்ணில் பிறந்தார்.
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்ப் பாடசாலை, உரும்பிராய் இந்துக் கல்லூரி, இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைமாணி (B.A.) பட்டம் பெற்றவர்.
வைத்தியராக நீண்டகாலம் மலையகத்தில் பணிபுரிந்தவர்.
இதுவரை இவரது பதினைந்து நூல்கள் வெளியாகி உள்ளன.
இவரது முதலாவது சிறுகதை 1964இல் கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. இதுவரை இவரது சிறுகதைத் தொகுதிகளாக காலதரிசனம், அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், தி. ஞானசேகரன் சிறுகதைகள் ஆகியவை வெளிவந்துள்ளன.
இவற்றுள் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதைத் தொகுதி தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் கலைமாணி (B.A.) பட்டப்படிப்புக்கு பாடநூலாக விளங்குகிறது.
இவர் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘பரதேசி” என்ற மகுடத்தில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
இவர் எழுதிய நாவல்களாக புதிய சுவடுகள், குருதிமலை, லயத்துச் சிறைகள், கவ்வாத்து ஆகியவை வெளிவந்துள்ளன.
இவற்றுள் புதிய சுவடுகள், குருதிமலை ஆகிய இரண்டு நாவல்களும் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றவை.
லயத்துச்சிறைகள், கவ்வாத்து ஆகிய நாவல்கள் மத்திய மாகாண சாகித்திய விருதினைப் பெற்றன.
குருதிமலை நாவல் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, தலெனயகட என்ற பெயரில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது.
குருதிமலை நாவல் 1992-1993 காலப்பகுதியில் தமிழக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுமாணி (M.A.) பட்டப்படிப்புக்குப் பாடநூலாக அமைந்துள்ளது.
இவரது பயண நூல்களாக அவுஸ்திரேலிய பயணக்கதை, வடஇந்திய பயண அனுபவங்கள், லண்டன் பயண அனுபவங்கள் ஆகியவை வெளிவந்துள்ளன. ஐரோப்பிய பயண இலக்கியம் அச்சில் உள்ளது.
2000 ஆம் ஆண்டுமுதல், கடந்த பதனேழு ஆண்டுகளாக ‘ஞானம்” என்ற மாதாந்த கலை இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார்.
இச் சஞ்சிகை மூலம் இவர் வெளிக்கொணர்ந்த 600 பக்கங்களில் வெளிவந்த ஈழத்துப் போர் இலக்கியம் மற்றும் 976 பக்கங்களில் வெளிவந்த புலம்பெயர் இலக்கியம் ஆகிய பாரிய தொகுப்புகள் தமிழலக்கியத்திற்கு புதிய இலக்கிய வகைமைகளை அறிமுகப்படுத்திதோடு வரலாற்று ஆவணங்களாகவும் திகழ்கின்றன.
ஞானம் சஞ்சிகையை இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழக தஞ்சைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஆய்வு செய்து B.A., M.A., Mphil, PhD ஆகிய பட்டப்படிப்புகளை நிறைவுசெய்துள்ளனர்.
ஞானம் பதிப்பகம் என்ற வெளியீட்டகத்தின் மூலம் பலதரப்பட்ட இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகிறார். இதுவரை 40 நூல்கள் இவரது பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்துள்ளன.
ஞானம் இலக்கியப் பண்ணை என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் இலக்கிய விழாக்கள், சான்றோர் கௌரவம், நூல்வெளியீடுகள், நினைவு அஞ்சலிகள், இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நிகழ்த்தி வருகிறார்.
சர்வதேச ரீதியாலான எழுத்தாளர்கள் விழாக்கள், மாநாடுகளில் பங்குபற்றி பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இம்மாநாடுகள் சிலவற்றில் அரங்கத் தலைமை வகித்துள்ளார்.
இலங்கை அரசின் கலாபூஷணம் விருது உட்பட பல்வேறு இலக்கிய நிறுவனங்களின் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.
ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தனித்துவம் மிக்க எழுத்தாளராகத் திகழும் இவரின் இன்னொரு முகம் “ஞானம்” என்ற சஞ்சிகையைக் கடந்த 25 வருடங்களாகப் பிரதம ஆசிரியராக இருந்து தொடர்ந்து வெளியிட்டு வருவது. தற்போதைய சூழலில் வெளிவருகின்ற ஈழத்துச் சஞ்சிகைகளில் இதுவே இவ்வளவு தொடர்ச்சித் தன்மை கொண்ட சஞ்சிகை ஆகும்.
வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கும் சமயம் அவரின் இலக்கிய வாழ்வு குறித்த நீண்டதொரு ஒலி ஆவணப்படுத்தலைக் செய்திருந்தேன். அந்தப் பகிர்வைக் கேட்க
https://www.youtube.com/watch?v=sDndCLpUQME
ஈழத்து இலக்கிய உலகின் பேரிழப்பாக
ஞானம் சஞ்சிகை ஸ்தாபகர், சாகித்யரத்னா, வைத்தியக் கலாநிதி தி. ஞானசேகரன் அவர்களின் இழப்பில் துயருறுகிறோம்.
கானா பிரபா
12.04.2026
Friday, April 10, 2026
சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு - தாமரைச் செல்வி (சிறுகதைத் தொகுப்பு) நூல் நயப்பு
சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு
(சிறுகதைத் தொகுப்பு) - தாமரைச் செல்வி
நூல் நயப்பு
ஈழத்து எழுத்தாளர்களில் கடந்த அரை நூற்றாண்டாக இயங்கி வரும் தாமரைச் செல்வி அவர்கள் வன்னி மண்ணில் பிறந்த கதை சொல்லி. அவரின் சமீப காலத்து வரவாக இச்சிறுகதைத் தொகுதி எதிர் வெளியீடு வழியாக வெளி வந்திருக்கிறது.
“இரவில் நிலா வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு மடியில் படுத்திருக்கும் பிள்ளைக்குத் தன் வாழ்க்கைக் கதைகளை மனோலயப்படி சொல்லும் தொனியில் எளிமையாகப் பேசும் இச்சிறுகதைகள்”
என்று முன்னுரையில் இந்திரன் அவர்கள் காட்டிய வண்ணமே இந்த நூலைப் படித்து முடித்த பின்னர் உணர்வெழுகின்றது.
இன்னும் சொல்லப் போனால் அந்தந்தக் கதைகளுக்குள் வாழ்ந்து விட்டு வந்தது போலொரு உணர்வை, ஒவ்வொரு கதைகளின் பரப்பை விவரிக்கும் பாங்கிலும், கதை மாந்தர்களை உலாவ விடும் விதத்திலும், போலித்தனமில்லாத, அதே சமயம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு கதைப்பின்னணியிலும் யதார்த்தம் கொண்டு படைத்திருக்கின்றார்.
“எளிமையும், உண்மையும், மனிதாபிமானமும் நிறைந்த யதார்த்த எழுத்துகளே இவரது முத்திரை”
என்று அணிந்துரையில் ரஞ்ஞனி சுப்ரமணியம் பகிர்ந்ததும், நம்முடைய வாசிப்பனுபவத்தின் சாட்சியாக அமைகின்றது.
முடித்து வைக்கப்பட்ட போ ரின் ஆறா வடு, மறுபடி ஆரம்பப் புள்ளியில் இருந்து வாழத் தலைப்படும் சமூகம் எதிர் நோக்கும் அடுத்த கட்டச் சவால்களையே இச் சிறுகதைத் தொகுப்பில் காணும் படைப்புகள் பலதும் கோடிட்டுக் காட்டுகின்றன.
தன்னுரையில் எழுத்தாளர் தாமரைச் செல்வி அதையே முக்கியப்படுத்திப் பதிவாக்குகிறார்.
எழுத்தாளர் என்பவர் நீதிபதியா அல்லது நிகழ்வின் சாட்சியமா என்பதற்கான விடை பகரும் முடிவிடமாக இச் சிறுகதைகள் அமைகின்றன.
நம்முடைய வாழ்வோட்டத்தில் சந்தித்த மனிதர்கள் மட்டுமன்றி சந்திக்காதோரது சிக்கல்களைக் கூடத் தன் சிறுகதைகளில் காட்டி நிற்கும் போது அவற்றின் மெய்த்தன்மை கேள்விக்குட்படுத்தப்படாது ஏற்குமளவுக்கு அங்கே நம் தாயகத்துச் சொந்தங்களின் துன்பியல் வாழ்வு அமைந்திருக்கிறது. எனவே இவ்வாறான அனுபவ ஓட்டத்தில் புனைவு என்பது தேவையே இல்லை என்பதைத்தான் தாமரைச் செல்வியின் கதைகள் உணர்த்துகின்றன.
யாரொடு நோவோம் சிறுகதையின் பின்புலத்தில், முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களின் வலிகளைப் பிரதிபலிக்கும் சூழலில், தன் கணவன் இறந்து விட்டான் என்ற முடிவில் இருக்கும் ஒரு அபலையின் வாழ்வில் எதிர்ப்படும் அதிர்ச்சி நிகழ்வும், அந்தச் சூழலின் முடிவும் காட்டப்படுகிறது.
“கனவுகளின் மீள் வருகை”, “கசிந்துருகிக் கண்ணீர் மல்கி”, இருட்டின் நிறம் வெள்ளை
முள்ளிவாய்க்கால் காலத்துப் பின்னணியோடு அமைந்த இருவேறுபட்ட கதைப் பின்னணிகள். அவை கொடுக்கும் கனதியும் தனித்தனி.
மெளன யுத்தம் தமிழ்ச் சூழலில் ஒரு பொதுத்தன்மை கொண்ட கதை மாந்தர்களைக் கொண்டு அமைந்திருக்கிறது.
புலம்பெயர் வாழ்வின் பரிமாணங்களைக் காட்டும் சிறுகதைகளாக, எதிர்பார்ப்பு, வெயிலோடும் மழையோடும், மழை வரும் காலம் , தேவதைகளின் உலகம் ஆகிய சிறுகதைகள் அமைந்திருக்கின்றன. இங்கும் எடுத்துக் கொண்ட பார்வை ஒவ்வொன்றிலும் தனித்து நிற்கிறது. சில முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வாசகனையும் தூண்ட வைக்கிறதோ என்று எண்ண வைக்கும் எழுத்தோட்டம்.
பால்ய காலத்துக் காதலையும் கூட ஒரு ஈழத்துத் துயர் தேய்ந்த பின்னணியில் உணர்வுபூர்வமாகத் தர முடியும் என்பதை அவனும் அவளும் கதை படித்த போது உணர வைத்து விடுகிறது. ஒரு முழு நீள நாவலைப் படித்த திருப்தி இந்தச் சிறுகதைக்குள் இருக்கிறது.
“பறவைகளின் நண்பன்” ஜோவின் கதையைப் படித்த பின்னர் ஒரு கலையம்சம் பொருந்திய கொரிய சினிமாவைப் பார்த்த உணர்வே மேலோங்கியது. எழுத்தாளர் தாமரைச் செல்வியின் கதைகளின்
பன்முகம் என்ற நோக்கில் இது புதுவித வாசிப்பனுபவத்தையும், வியப்பையும் எழுப்புகிறது. ஒரு நேர்த்தியான படைப்பாளியின் கையில் சிக்கினால் கலைச் செறிவான குறும்படமாகலாம்.
இந்தக் கதையை எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் பேதமில்லாத உணர்வூட்டம் தரும்.
“சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு” அவதிப்படும் அந்தக் கிழவரோடு நம்மையும் அலைக்கழிக்க வைத்து விடுகிறது. இந்தக் கதை தாமரைச் செல்வியின் வாழ்வியலில் கடந்து போனதாகவும் இருக்கலாம்.
இனி வரும் நாட்கள், வாழ்தல் என்பது, நிழல் ஆகிய சிறுகதைகள் சமீப காலத்தில் ஈழத் தமிழ்ச் சமூகம் சந்திக்கும் சமூகச் சிக்கல்களின் காலக் கண்ணாடியாக அமைந்திருக்கின்றன.
இதில் பிரமிக்கத்தக்க விடயம் என்னவென்றால் வெறும் தமிழ்ச் சமூகத்தினுடைய வாழ்வியல் சிக்கல்களை மட்டுமன்றி, வன்னி மண் கடந்து, அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்துச் சூழலில் அமையும் கதைகளாகவும் அவை அமைந்து சிறப்புச் சேர்க்கின்றன.
ஒரு குறுகிய வட்டத்தில் நில்லாது, பரப்புரை அற்ற எழுத்தாக,
தாமரைச் செல்வி அவர்களின் பரந்துபட்ட பார்வையே கதைகளின் விதைகளாக அமைந்திருக்கின்றன.
தன்னுடைய எழுத்துலக வாழ்வியலின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தாமரைச் செல்வியின் சிறுகதைகளை அணுகினால் அவை ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுக் கூறாகக் கூட இருக்கும் என்பது மிகையில்லை என்பதை இந்த நவீன காலத்துச் சிறுகதை எழுத்துகளின் நீட்சியில் வரையறுக்கின்றன.
கானா பிரபா
10.04.2026
Monday, March 09, 2026
“அந்தோனி அதுவாகவே அவரை உள்வாங்கிக் கொண்டது" ஈழத்தவர்களுடன் இசைஞானி இளையராஜா ❤️❤️❤️
“அந்தோனி அதுவாகவே அவரை உள்வாங்கிக் கொண்டது"
ஈழத்தவர்களுடன்
இசைஞானி இளையராஜா ❤️❤️❤️
ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் கலைவளரி சக ரமணதாஸ் மற்றும் சுகந்தினி தயாரிப்பில், இசைஞானி இளையராஜா அவர்களுடைய இசையில், மார்ச் மாதம் 13 ஆம் திகதி வெளியீடு காண்கிறது “அந்தோனி” என்ற திரைப்படம். இது தமிழ்,சிங்களம்,மலையாளம் மொழிகளில் வெளியாக இருக்கிறது.
விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரொடக்ஷன்சின் ஶ்ரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இலங்கைத் திரைப்பட வரலாற்றில் சிங்கள சினிமாக்களை இந்தியத் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்த போதும், இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் தமிழ்ப் படங்கள் உருவான போதும் தென்னிந்திய இசையமைப்பாளர்களின் பங்களிப்பு அமைந்திருக்கிறது.
ஆனால் நேரடி இலங்கைத் திரைப்படமொன்று இளையராஜா இசையில் வெளிவருவது என்பது முக்கியமான செய்தி.
இன்று ஐம்பது ஆண்டுகளைத் தொடும் இளையராஜாவின் இசை இயக்கமானது பின்னணி இசையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக நிலை நிறுத்தியிருக்கிறது. மூன்றாவது தலைமுறையிலும் அவரது தேவை உணரப்படுகிறது.
சிம்பொனி நாயகன் இளையராஜா இலங்கைத் திரைப்படமொன்றுக்கு இசையால் உணர்வூட்டுவது என்பது மிக முக்கியமான பங்களிப்பு என்பதோடு அவரது இசை வரலாற்றிலும் இப்படம் தனித்துவமாக அடையாளப்பட்டு நிற்கப் போகிறது.
முன்னர் காசி படத்தின் பாடல்களை இளையராஜாவிடம் உரிமை பெற்று சிங்களத்தில் “சூர்யா” என்ற பெயரில் எடுத்தார் நிரஞ்சன். ஆனால் படத் தயாரிப்பில் பலவகையிலும் ஏமாற்றப்பட்டு அந்தப் படம் வெளிவராமலேயே இறந்து போனார்.
இந்த நிலையில் அந்தோனி திரைப்படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகிப் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சுகிர்தன் கிறிஸ்துராஜா- ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ளனர்.
ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இரட்டையர்கள் இயக்கத்தைக் கவனித்துக் கொள்ள, “கயல்" திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த ஈழத்தவர் வின்சென்ட் நாயகனாகவும், TJ பானு நாயகியாகவும் (இவர் வாழ் திரைப்படத்தின் வழியாகக் கவனத்தை ஈர்த்தவர்) மற்றும் சுதர்சன், சவுமி இருவரும் இலங்கை நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் போன்ற தென்னிந்திய நட்சத்திரங்களின் துணையோடு படம் உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழன் பத்திரிகையின் தமிழ் முரசு வார இதழுக்காக இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஜெனோசன் வழங்கிய பேட்டி இது.
அந்தோனி என்பது ஈழத்தில் தனித்துவமான பெயர்ச்சொல் அந்தப் பெயரைச் சூட்டியதற்கு வாழ்த்துகள், ஈழத்தில் வாடைகாற்று என்ற நாவல் கடலோரக் கிராமத்தவரது வாழ்வியலோடு படைக்கப்பட்டுத் திரைப்படமானது. இன்று ஐம்பது வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படைப்பு வருவதையிட்டு பெருமகிழ்ச்சி
ஈழத்தில் இருந்து இரட்டை இயக்குநர்கள் பெருமையுடன் படைக்கும் “அந்தோனி" என்ற திரைப்படம் இந்திய, இலங்கை ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்போடு பார்க்கப்படுகிறது.
திரைத்துறையில் உங்கள் பின்புலம் குறித்தும், முன்னர் வழங்கிய படைப்பனுபவம் குறித்தும் பகிர முடியுமா?
அந்தோனி எங்களது கனவுத் திரைப்படம், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் பதினைந்து வருடங்களாகத் திரைத்துறையில் இருக்கிறோம். ஒன்றாகவே பல படைப்புகளில் பணியாற்றியிருக்கிறோம் அதே போலவே நாம் இயக்கும் படத்திலும் ஒன்றாக இயங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். நான் யாழ்ப்பாணத்தில் குருநகர் வாசி பின்னர் இளவாலைக்கு இடம்பெயர்ந்தேன், சுகிர்தனும் குருநகரில் இருந்து அல்லைப்பிட்டிக்கு இடம்பெயர்ந்தவர். இருவருமே யாழ் மத்திய கல்லூரியில் படித்தோம். நான் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் படித்திருக்கிறேன். இருவருக்குமான பொது ஒற்றுமை, இருவருமே நாடகமும் அரங்கியலில் தீவிரமாக இயங்கி பாடசாலைக் காலத்தில் இருந்தே நாடகங்களை இயக்கி நடித்திருக்கிறோம். அதன் அடிப்படையில் தான் எமக்கு சினிமா ஆசை துளிர்விட்டது.
இந்தியாவிலும், இலங்கையிலும் திரைத்துறையில் ஈடுபட்டோம். சினிமாவுக்குள் வந்தவுடனேயே உதவி இயக்குநர் வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் கடை நிலை உதவியாளராக இருந்து உதவி இயக்குநர்களாகி, திரைப்படைப்பின் எழுத்தாளர்களாகி என்று ஒரு படி நிலை வளர்ச்சி தான் இதற்குள் இருக்கிறது. இப்படியான படி நிலை வளர்ச்சி ஒரு ப்ரொபெஷனலான சினிமாவாக இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எமக்கு அளித்தது. அந்த வகையில் எம் இலக்கை நிறைவேற்றும் ஒரு பரிபூரண படைப்பாக இப்படத்தை எடுத்திருக்கிறோம்.
இந்தப் படத்துக்கு யார் இசையமைக்கலாம் என்று பார்க்கும் போது இந்தப் படத்தை எம் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அதை ஒரு கனவு முயற்சியாக இளையராஜா அவர்களின் பெயரை எழுதி வைத்து விட்டுத்தான் எம் முயற்சியை ஆரம்பித்தோம்.
அதற்குப் பின் இந்தப் படைப்பைப் பற்றி அவரிடம் கொண்டு போய்ப் பேசுவதற்கு நிறையத் தடங்கல்கள் இருந்தன. ஆனாலும் நாம் எம் முயற்சியைக் கை விடவில்லை அதன் பெறுபேறாக அவர் படத்தைப் பார்த்து விட்டு இசையமைத்துத் தந்திருக்கிறார்.
இது அந்தோனி தனக்குத் தானே எடுத்துக் கொண்ட பெரும் தாக்கமது.இளையராஜா அவர்களை இந்தப் படத்தில் உள்வாங்கிக் கொண்டது இந்தப் பிரபஞ்சத்தின் ஏற்பாடு தான். அதற்கு நான் இந்தப் பிரபஞ்சத்துக்கும், கடவுளுக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியறிதலைத் தெரிவிக்கிறேன்.
ஆகவே இந்த அழகான வாழ்வியல் கதைக்கு இளையராஜா தேவை என்பதை அந்தோனி முடிவு பண்ணியது தான்.
அந்தப் படம் அது தன்னைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டது என்பது தான் முற்றிலுமான உண்மை.
அந்தோனி படம் ஒரு மாறுபட்ட சினிமாவாக வரும் என்பதை அதன் நேர்த்தியான முன்னோட்டம் காட்டி நிற்கின்றது. இந்தப் படைப்பு சொல்ல வருவது என்ன?
இலங்கையில் வெளிவந்த திரைப்படைப்புகளில் இது ஒரு நேர்த்தியான திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு படைப்பின் கதை, உருவாக்கம், நடிப்பு எல்லாமே அழகாக இருக்க வேண்டும். இது மாதிரி எல்லாமே முற்றுமுழுதாக நன்றாக இருந்தால் தான் நல்ல படமென்று மக்களால் சொல்லப்படுகிறது. அந்த வகையில் உதாரணத்துக்கு Arri""Alexa""60 கேமராவில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். அந்த வகையில் இதுவொரு புதுமுயற்சி எனலாம். இந்த உயர் தரப் படமாக்கலை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இதுவரை காலமும் இருந்த இந்த மாதிரியான குறைபாட்டை இது நீக்கியிருக்கிறது. இதற்காகவே காத்திருந்தே படத்தை சமரசமின்றி எடுத்தோம்.
இது ஒரு மசாலாப் படமல்ல, கடலோர மக்களில் மீனவரின் வாழ்வியலை, தொழில் முறைக் காதலை மக்களுக்கு இப்படைப்பு சொல்லும் என நான் நம்புகிறேன்.
நடிகர் தேர்வில் ஈழத்து மற்றும் இந்தியக் கலைஞர்களின் பங்களிப்பு இருப்பது போலப்படுகிறதே அதுபற்றி?
ஆமாம், ஈழத்தில் பிறந்து தற்போது தமிழ் சினிமாவில் அடையாளப்பட்ட “கயல்” வின்சென்ட் அவர்களோடு தென்னிந்திய நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். பானு அவர்களின் நாயகி பாத்திரத்துக்கு சரியாக யாருமே முன்னர் கிடைக்கவில்லை. அதாவது கடின உழைப்பும், சினிமா மீதான வேட்கையும் கொண்டவர்களை எங்களால் அடையாளப்படுத்த முடியவில்லை. நடிப்பின் உண்மையான ஆர்வத்தையோ, வெளிப்பாட்டையோ கொண்டவரை இலங்கையில் நாங்கள் தேடிய போது கிடைக்கவில்லை என்பது கவலையான விடயம். அப்படி புரிதல் கொண்டோர் எமக்கு அகப்படவில்லை. பின்னர் நம் தேடல் விளைவாகக் கிட்டியவர் தான் TJ பானு, அவர் வாழ் படத்தில் கொடுத்த நடிப்பை பலர் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். அவரும் கதை பிடித்து இந்தப் படைப்பில் இணைந்து கொண்டார், ஐரோப்பிய ஈழத்துக் கலைஞர்கள் தயாநிதி, குணபாலன், சீலன் என்று பலரும் நடிகர்களாக இணைந்துள்ளனர். ஆகவே இது ஐரோப்பிய, இலங்கை, இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் அமைந்த படம் தான்.
அப்படியொரு கூட்டு முயற்சி இருக்கவே விரும்பினோம். அதுவே அமைந்து கொண்டது.
இந்தப் படத்துக்கான தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பக் குழுவை எப்படி அமைத்துக் கொண்டீர்கள்?
ஓசை பிலிம்ஸ் “கலைவளரி” ரமணதாஸ் சத்தியநாதன் மற்றும் சுகந்தினி தம்பதியினர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். அவர்களுக்கு ஐரோப்பிய நண்பர்கள் முதலீட்டாளர்களாவும் கை கொடுத்துள்ளனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
சுரேஷ் A பிரகாஷ் பிரபல படத்தொகுப்பாளர் RRR, சர்கார், பொன்னியின் செல்வன் ஆகிய பல படங்களின் அசோசியேட் எடிட்டர். பிரபல படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் இன் உதவியாளர். கனா புரொடெக்ஷன் சார்பில் விக்கி ஆனந்த் அவர்களும் இணைந்துள்ளார் அவர் ட்ராபிக் ராமசாமி படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் பல வேலைகளை ஒருங்கமைத்து உதவ அவர் பெரும் பலமாக இயங்கினார்.
ஒரு காலத்தில் இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் படங்கள் அமைந்தன இங்கே புதுமையாக சுயாதீனமாகவே நீங்கள் அந்தவொரு முயற்சியை எடுத்தீர்கள் அப்படி ஒரு எண்ணம் எப்படி அமைந்தது?
அது எமது தயாரிப்பாளரின் ஆசை தான், இப்படியொரு ஈழத்துப் படைப்பை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற வேட்கை இருந்தது.
அவர்கள் கொடுத்த சுதந்திரம் தான் இப்படியானயொரு படைப்பைக் கொண்டு வர முடிந்தது.
இசைஞானி இளையராஜாவைப் பொறுத்தவரை அவர் ஐம்பது வருடங்கள் கடந்து பின்னணி இசை நாயகனாக விளங்குகிறார்.
அவரை எப்படி உள்வாங்கிக் கொண்டீர்கள்?
அவர் ஒரு இசை மேதை, மேஸ்ட்ரோ, சிம்பொனி மன்னன் என்று எவ்வளவோ சொல்லலாம். அவர் அருகில் இருக்கும் போதே அந்த ஆர்மோனியப் பெட்டியில் அவரின் விரல்கள் எப்படி இசையமைக்கிறது, எப்படியெல்லாம் இசைக்குறிப்பை எழுதுகிறார் என்பதை அவரோடு இருந்த அந்த பத்து நாட்களும் ரசித்துக் கொண்டிருந்தோம் நானும் சுகிர்தனும். எங்களை அழைத்து படத்தின் குறித்த காட்சியமைப்பைக் கேட்பார், படத்தைப் போட்டுக் காட்டுமாறு கேட்பார். அதெல்லாம் அற்புதமான நாட்கள். இதெல்லாம் அந்தோனி தான் உள்வாங்கிக் கொண்டது. அந்தோனியார் பக்தர்கள் நாம், அவரே இப்படியொரு இசை மேதையை உள்வாங்கிக் கொண்டது எம் பாக்கியம்.
இளையராஜா இந்தப் படைப்பைப் பார்த்து விட்டுத் தன் கருத்தைப் பகிர்ந்து கொண்டாரா?
நல்ல நாள்யா வாங்க என்று தொடக்க நாளுக்கு அழைத்தார் சின்னச் சின்ன விஷயங்களில் சிரிப்பார், அவரின் முக பாவங்களில் இருந்தே அவருக்குப் பிடித்தது என்றே சொல்வேன். குறிப்பாகக் காட்சிகளுக்கு அவரின் இசை உயிர் கொடுத்தது.
இந்தியக் கலைஞர்கள் என்றாலும் இயல்பான ஈழத்து மொழி நடையை அவர்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள். நம் அடையாளத் தமிழைக் காட்ட வேண்டும் என்ற சிந்தனை ஏன் வந்தது?
இந்தக் கதை எமது பிரதேசம் சார்ந்தது, அதனால் எம் அடையாளம் என்ன , உண்மைத்தன்மை என்ன என்பதை மறைத்து எடுக்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் தமிழை சினிமா நடைமுறைகளுக்கு ஏற்பவும், உலகத்தில் இருக்கும் எல்லாத் தமிழருக்கும் புரியும் மாதிரியாகவும் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். அவ்வளவு தான். யாரையும் குறைத்து மதிப்பிடாமல் இன்னொரு பேச்சு வழக்கைக் குறைத்து மதிப்பிடாமல் எடுத்திருக்கிறோம். எல்லாப் பிரதேச வழக்கியலையும் நாம் மதிக்கிறோம். எல்லோருக்கும் புரியும் வகையில் கொடுக்க வேண்டும் என்ற எங்கள் எண்ணம் நிறைவேறியதை, இப்பட முன்னோட்டத்தைப் பார்த்த பலர் வழங்கிய பாராட்டில் இருந்து நாம் புரிந்து கொண்டோம்.
பேட்டி கண்டவர் : கானா பிரபா
09.03.2026
















