என்னதான் தொழில்நுட்ப மாயைகள் புதிது புதிதாய் வந்து விழுந்தாலும் வானொலி என்ற ஊடகம் எல்லாவற்றுக்கும் சளைக்காமல் நின்று பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றது. வானொலி கேட்பதில் உள்ள சுகம், ஏதாவது வேலையைப் பார்த்துக் கொண்டே அதுபாட்டி ஓடிக்கொண்டே இருக்கும். காதலா காதலா படத்தில் கமல் பாடுமாற் போல "ஒரே கல்லுல ரெண்டு மாங்கா" என்ற இந்தச் சுகானுபவம் தொல்லைக்காட்சியில் கிட்டாது தானே. பிடித்தமான எழுத்தாளரின் நாவலொன்றைப் புரட்டிப்படிக்கும் போது அதில் வரும் கதை மாந்தர்களை நாமே கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் சுகம் வானொலியில் ஏதோ ஒரு பாடலைக் கேட்கும் போது, அதுவும் பார்க்காத படமாக இருக்கும் பட்சத்தில் மனக்குதிரை அப்படியே ஒரு காட்சியோட்டத்தைப் பாடலோடு ஓட்ட ஆரம்பிக்கும். இந்தளவு தூரம் ஈடுபாட்டோடு கேட்கும் ஒரு பாடலை கண்ணுக்கு முன்னால் மரத்தை எழெட்டுத் தரம் சுத்தி தாய்லாந்திலோ அமெரிக்காவிலோ தாவிப் போகும் காட்சி அமைப்பில் பொருத்தினாலும் அவ்வளவு தூரம் இருக்காது. அது தான் வானொலியின் மகத்துவம். அதுவும் ஒரு தேர்ந்ததொரு அறிவிப்பாளர் கையில் நல்ல பாடல்கள் கிடைப்பது தேர்ந்தெடுத்த ஓவியன் கையில் கிட்டும் தூரிகை மாதிரி. பாடல்களை அறிவுக்கும் பாங்கும், எந்தப் பாடலை எந்த நேரம் கொடுக்க வேண்டும் என்பது கூட அறிவிப்பாளனுக்குப் புரியா விட்டால் அந்தப் பாவம் நேயர்களைத் பதம் பார்க்கும். எத்தனைவானொலி கேட்கும் அனுபவம் என்பது தொட்டிலில் இருந்து என் சுடுகாடு வரை ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கும் போல. என் பதின்ம வயசுக்காலம் வரையான வானொலி கேட்பு அனுபவங்களை முன்னர் ஆகாச வாணியும் விவித் பாரதியும்....! என்ற பதிவில் சொல்லியிருக்கிறேன். இரண்டாவது கட்ட அனுபவத்தில் நானும் ஒரு ஒலிபரப்பாளனாக, நிகழ்ச்சித்தயாரிப்பாளனாகவும் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புக்கிட்டியிருக்கின்றது. கிட்டத்தட்ட 12 வருஷங்கள் கடந்த ஒலிபரப்பு அனுபவங்கள் சுகமும் சவாலும் நிறைந்த கலவையாகத் தான் பயணிக்கிறது. அது ஒருபுறமிருக்க, வானொலி நேயராகத் தொடரும் பயணத்தின் இன்னொரு பரிமாணத்தைத் தான் இங்கே சொல்ல வந்துள்ளேன். அதுதான் இணையவானொலிகள் என்றதொரு பரிமாணம்.
இணைய வானொலிகளில் தமிழ்ச்சேவை செய்து வரும் வானொலிகள் பல இன்னும் இந்த செல்பேசியூடான வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். நான் கேட்டவரை THR ராகாவின் ஒலிபரப்பின் ஒலித்துல்லியம் மகா அருமை. சிங்கப்பூர் வானொலியையும் முதலிடத்தில் சேர்த்துக் கொள்வேன் ஆனால் இடையிடையே வரும் மக்கரை சரிசெய்து
கொண்டால்.இப்போதெல்லாம் செல்பேசி நிறுவனங்கள் செல்போனில் பாவிக்கும் இணையப் பாவனையைத் தாராளமாக்கியிருக்கின்றன. எனவே அதிக கட்டணம் ஆகும் என்றெல்லாம் பயந்து பயந்து வானொலியைக் கேட்க வேண்டிய காலமும் மெல்ல மறைகிறது.
காதுக்குள்ளே இன்ரநெற் றேடியோவைக் கேட்டுக் கொண்டே பதிவு எழுதுவதும் கூடச் சுகம் சுகமே... ;-)












