

செங்கை ஆழியானின் படைப்புக்கள், அவை நாவலாகட்டும் அல்லது சிறுகதைகளாகட்டும் அந்தந்தக் காலகட்டத்து ஈழச் சமூகத்தின் காலப்பதிவுகளாக இருக்கின்றன. அதற்குப் பல உதாரணங்களை இவரின் படைப்புக்களை வைத்தே கூறலாம். அதாவது இவரின் ஒரு படைப்பை வாசிக்கும் ஒரு வாசகனுக்கு வரலாற்றின் எந்தக் காலகட்டத்தில் எந்த வகையான வாழ்வியல் அமைப்பில் ஈழத்தமிழன் இருந்தான் என்பதை அது காட்டி நிற்கும்,பொதுவாக ஒரு குடும்பச் சிக்கலைச் சொல்லுவதாக அவை அமைந்து நிற்கா.

ஈழத்தில் இருந்து ஆரம்பகாலத்தில், அதாவது அறுபதுகளுக்குப் பிந்திய காலம் முதல் பொருளாதார வலுவை ஏற்படுத்திக் கொள்வதற்காகப் பலர் தமது வீடு, காணி போன்றவற்றை ஈடுவைத்து வெளிநாடுகளுக்குப் போக ஆரம்பித்தார்கள். தமது பெற்றோர் இறக்கிவைத்த பாரங்களாக எஞ்சி நிற்கும் நாலைந்து சகோதரிகளோடு பிறந்த ஒருவன் இவர்களுக்குச் சீதனம், சீர் செய்ய உள்ளூர் உழைப்பை நம்பியிருக்கமுடியாது. ஆயிரத்துக்கும் குறைவான சம்பளம் வாங்கிக்கொண்டு நாளாந்த சீவியத்தை நடத்துவதே பெரிய காரியம். இதனால் தான் கெளரவமான உத்தியோகத்தில் இருந்தவர்கள் கூடத் தம் பதிவையை உதறிவிட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணித்தார்கள். அதாவது தாயகம் கொடுக்கும் சின்னச் சின்னச் சந்தோஷங்களையும் அடவு வைத்துத் தம் குடும்பத்துக்காக உழைத்து உழத்து நரை தட்டி, வழுக்கை விழுந்து அரைக்கிழவனாகி, கல்யாண வயது தாண்டி கல்யாணமே கட்டாமல் வாழும் பலரை நான் பார்த்திருக்கின்றேன், அறிந்திருக்கின்றேன்.
இப்போது அகதியாக ஓடும் தலைமுறைக்கு முந்திய காலம் அப்படியிருந்தது. இப்போது எல்லாமும் கலந்த ஒரு இடப்பெயர்வாகிவிட்டது.
"கிடுகு வேலி" நாயகன் சண்முகம் கூட அன்றைய யாழ்ப்பாணத்துச் சராசரி இளைஞன். அதாவது கிராமத்தின் மதகு, ஆலமரத்தடி வாசிகசாலை, மருதனாமடச் சந்தி என்று சுற்றும் இருக்க, சைக்கிளில் ஏறி மண் ஒழுங்கையில் ஓடி, மதகில் ஏறி உட்கார்ந்து, நண்பர்களுடன் அரட்டை அடித்து, கீரிமலைக்குச் சென்று கூவில் கள் குடித்து.... என்று தன் எல்லாச் சந்தோஷங்களையும் அடகுவைத்து விட்டு குவைத்துக்குப் போய் ஊருக்குத் திரும்பாமல் ஐந்து வருடங்கள் மாடாய் உழைத்து தன் குடும்பம் கரைசேர நினைத்தான்.
புதிதாகக் கல்யாணமாகி மூன்றே மாதங்களில் மனைவி நிர்மலாவையும் பிரிந்து மூன்று தங்கைகளையும், ஒரு தம்பியையும் கரை சேர்க்கவேண்டும் என்ற முனைப்பில் நாடு விட்டு ஓடும் சண்முகம் தன்னுடைய உழைப்பின் பலாபலன்கள் எப்படி இருக்கின்றன என்பதைக் காணும் போது அவனுக்குக் கொடுக்கும் ஏமாற்றங்கள் தான் இக்கதையின் களன்.
கிடுகுவேலி என்பது யாழ்ப்பாணத்தின் ஒரு குறியீட்டுப் பெயர், அந்தக் கிடுகுவேலியின் நேர்த்தியில் தான் யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுப் பாரம்பரியங்கள் இருக்கின்றன. ஆனால் திடீர் வெளிநாட்டுப் பணமும், அதீத நாகரீக மோகமும் எப்படியெல்லாமோ இந்தக் கிடுகுவேலிக் கலாச்சாரத்தைச் சிதைத்துவிடுகின்றன. வெளிநாட்டில் அரைவயிறு கால் வயிறு நிரம்ப, இரண்டொரு மணி நேரத் தூக்கத்தோடு இரண்டு மூன்று வேலை செய்து ஒருவன் தான் வாழ்வை இழந்து கொண்டு போகின்றான். மறுபுறத்தின் அவன் உடன்பிறப்புக்கள் இரண்டு மடங்கு உச்சபட்ச வாழ்வுக்குள் போகின்றார்கள். இப்படியான சண்முகங்களின் குடும்பங்கள் பல இன்னும் நம் நாட்டில்.
இந்த நாவலுக்கு முன்னுரை அளித்த பேராசிரியர் சிவலிங்கராஜா சொல்லுவது போல்
"பணம் வந்ததும் குணம் மாறித் தனது மைத்துனனை இழக்கும் கிளிகளையும், மற்றவனையும் ஒரு மாதிரி வெளியே அனுப்பி மற்ற மகளுக்கும் மாப்பிளை வேட்டையாட நினைக்கும் சண்முகத்தின் தாயும் இன்றைய சமூகத்தின் வகைமாதிரியான பாத்திரங்களாகும். இவை மாறலாம், மாற வேண்டும். ஆனால் இப்படியானதொரு சூழ்நிலை யாழ்ப்பாணத்திலேயே நிலவுகிறது என்பதைப் படம் பிடிக்கக் கிடுகுவேலி போன்ற நாவல்கள் தேவைப்படுகின்றன".
வெளிநாடு போன சண்முகத்தின் கோணத்தில் நாவலை நகர்த்தி வாசகனை, சண்முகத்தின் பார்வையில் நாவலோட்டத்தை அனுபவிக்க வைக்கின்றார் நாவலாசிரியர். தன் குடும்பம் தானே, நான் தானே காப்பாற்றவேண்டும் என்ற அவனின் மனோபாவம், தொடர்ந்து அவன் சந்திக்கும் நிகழ்வுகளால் தவறாகிப் போகின்றது. அதுபோல் ஆரம்பத்தில் திமிர்பிடித்தவள் போலச் சித்தரிக்கப்படும் சண்முகத்தின் மனைவி நிர்மலா, திருமணமான மூன்றாம் மாதமே தன்னைத் தவிக்கவிட்டும், ஐந்து வருடங்களாக பிள்ளையின் முகத்தைப் பார்க்காத தந்தையாக சண்முகம் இருப்பதையும், தன்னையும் பழைய காதலன் பகீரதனையும் இணைத்து ஊரார் பேசும் குசுகுசுப்புக்களையும் தாங்கி வாழவேண்டியவள் என்று காட்டும் போது அனுதாபத்துக்குரிய பாத்திரமாக மாறுகின்றாள். எனவே ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் கதையை நகர்த்தாமல், காட்சிகளும் சம்பவங்களும் ஒரு பொதுவான தளத்தில் இருந்து பார்க்கும் வண்ணம் நாவலை எடுத்துச் சென்றிருக்கின்றார் செங்கை ஆழியான்.
ஐந்து வருடங்கள் கழித்து ஊருக்கு வரும் சண்முகத்தின் பார்வையில் கிடுகுவேலிகள் தொலைந்த மதில்களும், கல்வீடுகளும், வீடுகள் தோறும் முளைத்திருக்கும் ரீவி அன்ரெனாக்களும் என்று வெளிநாட்டுப் பணத்தின் சித்துவிளையாட்டுக்கள் பேசப்படுகின்றன.
தன் வீட்டுக்காரர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள், கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தைச் சேமித்து வைத்திருப்பார்கள் என்ற நினைப்பில் இருக்கும் சண்முகம் காணும் நாகரீக மாற்றங்கள் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. எந்த நோக்கத்துக்காகத் தன்னையே அவன் இழந்தானோ அவனின் கனவுகள் எல்லாம் பொடிப் பொடியாகின்றன.
மச்சாள் பவளம், மற்றும் நிர்மலா போன்ற பாத்திரங்கள் இந்தச் சமூக அமைப்புக்குள் இருந்து வெளியே வரமுடியாதவர்களாக தாம் விரும்பியவனையே திருமணம் செய்துகொள்ள முடியாத அபலைகளாக காட்டப்படுகின்றார்கள்.
அதுபோல் அத்தான் சீராளனையே மனதில் வரிந்துகொண்டிருக்கும் சண்முகத்தின் தங்கை கிளி, திடீர் வெளிநாட்டுப் பணம் கொடுக்கும் மாயையில் அவனை ஒதுக்குவதும் கூட கசப்பான நிஜவாழ்வில் குறியீடுகளே.
குவைத்தில் தன்னோடு வேலைபார்க்கும் சுப்பிரமணியம் வருடத்தில் பதினைந்து நாளாவது ஊருக்குப் போய் தன் குடும்பத்துடன் விடுமுறையக் கழித்து வருவதும் சண்முகத்துக்கு ஏளனமாகப்படுகின்றது.
"எப்படித்தான் வாழ்ந்தாலும் மனைவியுடன் வாழ்வது போல் எதுவுமில்லை. உணர்வுகளையெல்லாம் ஒடுக்கி அடக்கி எனக்காகக் காத்திருக்கும் அவளுடன் வருடத்தில் ஒரு சில நாட்களாவது வாழாவிட்டால் பிறகெதுக்கடா சண்முகம் பணம்?..."
சுப்பிரமணியத்தின் அந்த வார்த்தைகள் ஊருக்குத் திரும்பியபின் தான் சண்முகத்தைச் சுடும் நிஜங்களாகின்றன. திருமணம் முடித்து மூன்றே மாதங்களில் மனைவியைப் பிரிந்து, அவளின் அபிலாஷைகளை ஒதுக்கித் தன் குடும்பத்தைக் கரைசேர்க்க ஓடியதை நினைத்து வருந்துகின்றான்.
கிரைண்டர், ரேப் ரெக்கோடர், ரீ, ரெக் என்று பட்டியல் போடும் தங்கைகள், தன் உழைப்பைச் சேமிக்காமல் ஆடம்பரமான வீட்டைக் கட்டிய அம்மா, "தம்பி எப்ப வந்தது? இனி எப்ப போறது?" (பக்கத்து வீட்டு செல்லப்பர்), "ஊரெல்லாம் மாப்பிளை இருக்குது தம்பி, ஆனா அவங்களை வாங்க முடியாது, ஒவ்வொருத்தனின்ர றேற்றும் வானத்தை எட்டுத்து" (வேலுப்பிள்ளை அம்மான்), இவர்கள் எல்லாம் நம் சமூகத்தில் வாழும் குறியீடுகள். சேமித்த காசெல்லாம் கரைந்து போய் இன்னொரு வெளிநாட்டுப் பயணம் தான் தன்னுடைய இன்னொரு தங்கையைக் கரைசேர்க்கும் என்ற நிலையில் இருக்கும் சண்முகத்துக்கு ஆறுதலாக, சீதனமில்லா மாப்பிளையாக வரும் முருகானந்தம் போலவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
1983 இல் திருநெல்வேலியில் நடந்த இராணுவ டிறக் மீதான தாக்குதலோடு கதைக்களின் இறுதி முடிவு நகர்வதும், செங்கை ஆழியான் கதைகளில் பெரும்பாலான முடிவாக இருக்கும் அவலச் சுவையும் இந்த நாவலின் திருப்பத்துக்கும், முடிவுக்கும் கைகொடுத்திருக்கின்றனவே ஒழிய மற்றப்படி இவை செயற்கையான உள்ளீடுகளாகவே இருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்தில் வாழும் மக்கள் வாழும் மக்களின் பேச்சுவழக்கில் நுணுக்கமான வித்தியாசம் இருக்கும். ஆனால் அதீத இலக்கணத் தமிழ் இருக்காது. ஆனால் செங்கை ஆழியான் நாவல்களில் இந்த பேச்சு வழக்கை பாத்திரங்கள் வாயிலாகச் சொல்லும் போது இலக்கணத்தமிழை விடுத்து முழுமையான பேச்சு வழக்கிலேயே நகர்த்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதைத் தான் கிடுகு வேலிக்கும் சொல்லிக் கொள்ள வேண்டும்.
1984 ஆம் ஆண்டு ஜூனில் முதற்பதிப்பாக ரஜனி பதிப்பகம் வெளியிட்ட இந்த நாவல் நான்காம் பதிப்பாக ஏப்ரல் 2003 இல் கமலம் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. 1983-1985 ஆண்டுகளில் இலங்கையில் வெளியாகிய குறுநாவல்களுள் சிறந்ததாகக் "கிடுகுவேலி"யைத் தேர்ந்தெடுத்து தமிழ்க் கலைஞர் வட்டம் (தகவம்) பரிசும் சான்றிதழும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாவல் என்றால் முன்னூறு நானூறு பக்கங்களில் இருக்கவேண்டும் என்ற சிலரின் எழுதப்படாத விதிகளை மீறி, 96 பக்கங்களோடு அங்கிங்கு அலைந்து திரிந்து போகும் தொடராக அல்லாது "கிடுகு வேலி" சொல்ல வந்ததைச் சொல்லி நிற்கின்றது.


இந்தப் படம் வந்து (ஆகஸ்ட் 2007),ஒரு சில மாதங்களுக்குள் பார்த்துவிட்டேன் என்றாலும் இப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை மாறவில்லை. Hirak Deepthi என்ற பெயரில் பெங்காலி எழுத்தாளர் Sunil Gangopadhyay எழுதிய நாவலே இயக்குனர் ஷியாம பிரசாத் இயக்கத்தில் வெளியாகியிருக்கின்றது. இதே நாவலை சத்யஜித் ரே கூடப் படமாக்க முனைந்ததாகவும் செய்தி உண்டு. ஒரே கடலைப் பார்த்து முடித்ததுமே நாவலை எவ்வளவு தூரம் சிதைக்காமல் கொண்டு வந்திருக்கின்றார் என்பதை நாவலை வாசிக்காமலேயே உணரமுடிகின்றது. காரணம் குறிப்பிட்ட நான்கு பாத்திரங்களினூடாக நுட்பமான மன உணர்வுகளைக் கீற்றாகக் கொண்டே இப்படம் நகர்கின்றது. வேறு எந்த சினிமாவுலக வர்த்தக சமாச்சாரங்களுமே இல்லை. இயக்குனர் ஷியாம பிரசாத்தின் முன்னைய படங்கள் கூட இதே அளவுகோலில் இருப்பதாக அவரின் பிரத்தியோக இணையத்தளம் மூலமே அறிய முடிகின்றது.
டாக்டர் நாதனாக மம்முட்டி, நடுத்தரக் குடும்பத் தலைவி தீப்தியாக மீரா ஜாஸ்மின், அவளின் கணவன் ஜயனாக (அஞ்சாதே) நரேன், மற்றும் மம்முட்டியின் தோழி பெல்லாவாக ரம்யா கிருஷ்ணன் என்று இந்த நால்வருமே ஒரே கடலைத் தாங்கும் பாத்திரங்கள். பொருத்தமான தேர்ந்தெடுப்புகளும் கூட.ஒசப்பச்சனின் இசை படத்தில் பேசும் நுட்பமான உணர்வுகளை வாத்தியத்தில் காட்டியிருக்கின்றது. சிறந்த நடிகைக்காக மீரா ஜாஸ்மினுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்காக ஒசப்பச்சனுக்கும், சிறந்த எடிட்டராக வினோத் சுகுமாரனுக்கும் கடந்த ஆண்டின் கேரள அரசின் விருது இப்படத்திற்காகக் கிடைத்திருக்கின்றது.

தியேட்டரில் விசில் அடித்துப் படம் பார்க்கவும், கதாநாயகனை டாய் போட்டுக் கூப்பிடவும் தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படும் மீரா ஜாஸ்மின் ஒரே கடலில் மிகப்பெரும் நடிப்புக் கடலாக இருக்கின்றார். தன் தரப்பு நியாயங்களையும், கனவுகளையும் பக்கம் பக்கமாக வசனம் பேசி நிரப்பாமல் தன் முகபாவங்களாலேயே காட்டிச் சிறப்பித்திருக்கின்றார். வாடகை, குடும்பச் செலவு, குழந்தைக்கு மருத்துவச் செலவு என்று பாறங்கல்லாய் அழுத்தும் செலவினங்களுக்கு வேலையில்லாக் கணவனிடம் கையேந்துவது, டாக்டர் நாதனிடம் அசட்டுச் சிரிப்போடு பணம் கேட்டு நிற்பது, டாக்டர் நாதனின் ஆசைக்கு முடிவெடுக்க முடியாமல் திணறுவது, டாக்டர் நாதனையே பின்னர் தன் வாழ்வாக வரித்துக் கொண்டு கனவுலகில் வாழ்வது, புத்தி பேதலித்து முரண்பட்ட வாழ்வில் திணறுவது என்று தன் நடிப்பில் வித்தியாசமான பரிமாணங்களைக் காட்டியிருக்க மீராவுக்கு இப்படம் பெரும் தீனி.

"நல்லாப் போங்க.....இப்பவே போங்க.... உங்கள் கடமைகளையெல்லாம் முடிச்சிட்டு வாங்க. அதுவரை நான் காத்திருக்கிறன். ஐந்து வருஷமாகக் காத்திருக்கிறன். இனி எத்தனை வருடமானாலும் காத்திருக்கிறன். இனி எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கிறன். எப்ப நீங்கள் எனக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழ வருகிறீர்களோ, உங்கட மனதில் நாங்கள் இருவரும் முழுமையாக எப்போது வாழ முடியுமோ அப்போது தான் நான் இந்தக் கட்டிலில் படுப்பன்...."(கிடுகுவேலி நாவலில் நிர்மலா)

ஒரு பெண்ணின் உணர்வுகளையும், ஆசாபாசங்களையும் புரிந்து கொள்ளாமல் வாழத்தலைப்படும் ஆண் சமூகத்துக்கு இரண்டு வேறு தண்டனைகளைக் கொடுத்திருக்கின்றார்கள் "கிடுகுவேலி" நிர்மலாவும், "ஒரே கடல்" தீப்தியும்.
ஷியாம பிரசாத்தின் இணையத்தளம்