
எந்த ஒரு தீர்வுமில்லாது இருந்ததையும் அழித்துத் துடைத்த ஈழ யுத்தம் முடிவடைந்த பின்னர், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த யுத்தத்துக்குப் பின்னான விளைவுகளின் தரிசனமாகவே ஈழத்தின் தமிழ்ப்பிரதேசங்கள் சாட்சியம் பகிர்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் இயங்கும் வானொலி மூலம் வன்னிப்பிரதேசப் பாடசாலை மாணவருக்கான அடிப்படைத் தேவைகள் பற்றிய உதவித்திட்டம் செய்ய முன் வந்தபோதுதாய் மட்டும் உள்ள பிள்ளை, தந்தை மட்டும் உள்ள பிள்ளை, தாயும் தந்தையும் இல்லாத பிள்ளை, பெற்றோர் இருந்தும் தன் அங்கங்களை இழந்த பிள்ளை என்று ஒவ்வொரு மாணவருக்குப் பின்னால் இருந்த இழப்புக்களைப் பட்டியலிட்டிருந்தது. ஈழப்போரில் முக்கியமாகப் பாதிக்கப்பட்ட வன்னிப்பெரு நிலப்பரப்பு மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆண்டாண்டு காலமாக வேளாண்மை செய்து வாழ்வை நடத்தியவர்கள். யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இருந்து யுத்த காலத்தில் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களோடு ஒப்பிடும் போது அந்த எண்ணிக்கையும் மிக மிகக் குறைவே. எனவே யுத்தம் ஓய்ந்த பின்னர் வன்னிவாழ் மக்களது பொருளாதாரம் குறித்த இருப்பும் பெரும் கேள்விக்குறியாகத் தொடர்கின்றது.
மேற்சொன்னவை ஒருபுறமிருக்க, ஈழப்போரில் போராளிகளாகப் பங்கெடுத்தவர்களில், இறந்தவர்கள் தவிர இராணுவத்திடம் சரணடைந்து இப்போது மீண்டும் பொதுவாழ்வில் தம்மை இணைத்துக் கொள்ள விரும்பும் சகோதரர்களின் வாழ்வு இன்னொரு அவலக் கதை பேசும். அதைத்தான் "இனி அவன்" திரைப்படத்தின் முக்கிய பாத்திரம் வழியாகச் சொல்லப்படுகின்றது. புனர்வாழ்வு முகாமிலிருந்து வரும் அவனின் வாழ்வில் அடுத்த பக்கங்களாக இந்தத் திரைப்படம் கொண்டு செல்லப்படுகின்றது. ஈழத்துச் சிங்களப் படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் பிரசன்ன விதானகே, அசோகா கந்தகம போன்ற விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே ஓரளவு தமிழர் பிரச்சனையின் நியாயங்களை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய நிலையில் இப்போதும் இருக்கின்றார்கள். அவர்களின் படைப்புக்களில் வெளிப்படும் நியாய தர்மங்கள் என்பது பொது நோக்கிலன்றி தனியே அவர்கள் எடுத்துக் கொண்ட கதையம்சத்தோடு வைத்துப் பார்க்கப்படவேண்டியது.

புனர்வாழ்வு முகாமிலிருந்து வெளியேறும் முன்னாள் போராளி தன் வாழ்க்கையை இன்னொரு பக்கத்திலிருந்து தொடங்கும் போது, யாழ்ப்பாணச் சமூகம் அவனை எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்கிறது என்பதைப் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் இயல்பாகக் காட்டப்படுகின்றது. சில உண்மைகள் கசப்பானவை என்றாலும் அங்கே இயங்கும் தற்போதைய சூழலின் பரிமாணமாக அமையும் போது என்ன செய்ய முடியும். இயக்கத்துக்குப் போக முன்னர், சாதிப்பாகுபாடால் இன்னொருவருக்கு வாழ்க்கைப்படும் காதலியை, போராளியாகிப் பின்னர் புனர்வாழ்வு முகாமிலிருந்து வந்து பழைய வாழ்க்கையை வாழ முனையும் போது சந்திப்பது கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றது. படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக அமைகிறது, இருந்த தொழிலையும் பறிகொடுத்த கணவனையும் பிள்ளைகளையும் காப்பாற்றவேண்டி, இவனோடு இணையும் பெண் பாத்திரம். வெளி நாட்டில் இருந்து வந்த அரைக்காற்சட்டை இளைஞன், சில்லறைக்கடை வர்த்தகர் உள்ளிட்ட பாத்திரங்கள் கூட நம் மத்தியில் உலாவருபவர்கள் தான்.
இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் இருந்து மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கும் காட்சிகளினூடு யுத்தத்தின் பின் விளைவுகளைக் காட்டிய இயல்பான வடிவம், பின்னர் அவன் தனக்கான ஒரு வாழ்க்கையைத் தேடச் செல்வதன் பின்னரான திரைக்கதை தடம் மாறுவது போல ஒரு பிரமை. நகைக்கடை முதலாளியின் இன்னொரு சொரூபம் நாம் தென்னிந்திய சினிமாக்களில் அதிகம் பார்த்ததாலோ என்னவோ அது யதார்த்தம் மீறிய சினிமாப் படம் என்ற எல்லைக்குள் செல்லும் அபாயம் இறுதிக்காட்சிகளில் தென்படுகின்றது. படத்தின் திரைக்கதையில் நுணுக்கமான சில விஷயங்களை, உதாரணமாக, வீட்டுக் காணியில் தங்க நகைகளைத் புதைத்து வைத்திருப்பது, யாழ்ப்பாணத்தின் சாதீயத் திமிர், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மாறும் இரட்டைத் தேசியம் பேசும் மனிதர்கள் என்று காட்சிகளின் வாயிலாக வெளிப்படுத்திய திறமான உத்தியைப் படத்தின் முடிவை நோக்கிய திரைக்கதையிலும் கொண்டிருக்கலாம். காட்சிகளை எடுக்கத் தகுந்த நடிகர்கள் கிட்டியது போல, யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பொருத்தமான இடங்களையும் ஒளிப்பதிவாளர் கச்சிதமாகக் கவர்ந்திருக்கிறார்.
படத்தின் இயல்பைச் சிதைக்குமாற்போல் பாடல்களைப் புகுத்தி மசாலா ஆக்காது, காட்சிகளுக்கு மெருகூட்டும் மென் இசையும் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு காட்சிகளையும் நாடகப்பாணி விழுங்கிடாது பெருமளவு காப்பாற்றுகின்றது இயக்கமும் படத்தொகுப்பும். சிங்கள இயக்குனருக்கு நம் தமிழ்ப்பிரதேச வாழ்வியல், சிக்கல்கள், மொழிப்பயன்பாடு போன்றவற்றை காட்சிப்படுத்தும் போது வரக்கூடிய சவால்களைப் போக்குகின்றது வதீஸ் வருணன், தர்மலிங்கம் ஆகியோரது உதவி இயக்கம்.
போருக்குப் பின்னான வாழ்வியலை ஒரு முன்னாள் போராளியை முக்கிய பாத்திரமாகக் கொண்டு நகர்த்தும் போது அவன் சார்ந்த சூழலையே முக்கியப்படுத்தப்படுகின்றது. படத்தின் திரைக்கதை அமைப்பில் யுத்தம் ஏற்படுத்திய உளவியல் சிக்கல்களை இன்னும் விரிவாக எடுத்துக் காட்டியிருக்கலாமோ? ஆனாலும் என்ன, அந்த முக்கிய பாத்திரம் இந்த வலியைத் தனக்குள்ளே புழுங்கி வெளிப்படுத்துமாற்போல அமையும் காட்சிகள் பலம் சேர்க்கின்றன.

யுத்த சூழல், அதன் பின்னான வாழ்வியல், ஆமிக்காறன், விடுதலைப்புலிகள் என்று எல்லா விஷயத்தையும் ஒரே படத்தில் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் சராசரி சினிமா ரசிகனாக இல்லாமல், இந்தப் படம் சொல்லும் சங்கதி என்ன , நாம் எங்கே போகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் படம் முடிந்த பின்னரும் கொஞ்சமாவது சிந்திக்க வைத்திருப்பதற்காகவே கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.

2 comments:
படத்தைப்பற்றி பல்வேறுபட்ட விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றது. ஒருக்கா தியட்டர்ல போய் பார்க்கணும்.
Superb.. Will definitely watch. The director's interview seems like a priest performing pooja with mantras..
:-)
Post a Comment