"இந்த நஷ்டஈடு என்பதே இறக்கும் இராணுவ வீரனுக்காகத் தானே கொடுக்கப்படுவது? அப்படி என்றால் எப்படி நாங்கள் இதை உரிமை கோர முடியும்? என் பிள்ளை நிச்சயம் வருவான், இந்த வீடு கட்டி முடிக்கப்படுவதற்கே அவன் போனான், அவன் உன்னுடைய திருமணத்துக்கு நிச்சயம் அவன் வருவான்" தன் மகளைப் பார்த்துச் சொல்கிறார் வன்னிஹாமி.
இதற்குச் சில வாரங்களுக்கு முன்பு,
சாதாரணர்கள் வாழும் இலங்கையின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சிங்களக் கிராமம் அது. கண் தெரியாத படு கிழவர் வன்னிஹாமி, கொட்டில் குடிசை, திருமணத்துக்காகக் காத்திருக்கும் கடைசி மகள் சுனந்தாவுக்கு வழக்கம் போல ஒரு காலைப் பொழுது விடிகின்றது.
அந்த ஊரின் சந்து பொந்துக்குள்ளால் மெல்ல ஊர்ந்து வருகின்றது ஒரு இராணுவ வண்டி, அதன் மேலே இலங்கைக் கொடி போர்த்திய ஒரு சவப்பெட்டி. சுனந்தாவால் அந்தச் சூழ்நிலையை ஊகிக்க முடிகின்றது, "அய்யேஏஏஏ" என்று அலறியடித்துக் கொண்டு அந்தச் சவப்பெட்டி சுமந்து வரும் கூட்டத்தை நோக்கி ஓடுகிறாள் அவள். மெல்ல மெல்ல ஊர்ச்சனங்கள் வன்னிஹாமியின் வீட்டில் மையம் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
வன்னிஹாமியின் மூத்த பெண்ணும் வந்தாகி விட்டது, ஈமைக்கிரிகைகளும் பெளத்த முறைப்படி செய்து முடிந்தாகி விட்டது, ஏன் அந்த சவப்பெட்டி கூடப் புதைத்தாகி விட்டது, ஆனால் வன்னிஹாமியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. இராணுவத்தில் சேர்ந்து இப்போது சவப்பெட்டியில் வந்திருப்பதாகச் சொல்லப்படும் தன் மகன் பண்டாரவின் இறப்பு அவரை எந்த விதத்திலுமே தாக்கவில்லை, ஏனென்றால் "பண்டார தான் இறக்கவில்லையே" என்பதில் எந்த விதத்திலும் தன் மனதை மாற்றிக் கொள்ளத் தயாராகவில்லை அவர்.
எல்லாமே முடிந்தாகி விட்டது, இனி அரசாங்கம் தரும் நஷ்ட ஈட்டுப் பணம் ஒரு லட்சத்தை வைத்துக் கொண்டு கட்டி முடிக்கப்படாத அரையும் குறையுமாக புல் பூண்டு மேவிய அந்தச் செங்கல் கட்டிடத்தை வீடாக்கும் முனைப்பில் சுனந்தாவின் எதிர்காலக் கணவன், மற்றும் சுனந்தாவின் அக்காளும் அத்தானும். அவ்வூர்க் கிராம சேவகருக்கும் இந்த நஷ்ட ஈட்டுப் படிவத்தை வன்னிஹாமி பூர்த்தி செய்து கொடுத்து விட்டால் தன் பணி முடிந்தது என்ற ரீதியில் தொடர்ந்து வன்னிஹாமி வீட்டுக்கு வந்து போகிறார். எல்லாவிதமான அழுத்தங்களும் கொடுத்தாகிவிட்டது. ஆனால் வன்னிஹாமி மட்டும் அதே பல்லவியைச் சொல்கிறார் "என் பிள்ளை வருவான், அவன் சாகவில்லை".
"Purahanda Kaluwara" (Death on A Full Moon Day) என்ற திரைப்படம் 1997 ஆம் ஆண்டு பிரசன்ன விதானகே என்ற சிங்கள சினிமா இயக்குனரால் எழுதி இயக்கப்பட்ட இத்திரைப்படம் NHK எனும் ஜப்பானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பில் உருவானது. Grand Prix , Amiens Film Festival இல் பரிசு, சிங்கப்பூர் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பரிசு, FIPRESCI எனும் சிறீலங்கவின் விமர்சகர்கள் கூட்டின் விருது, SIGNIS film awards இன் சிறந்த இயக்குனருக்கான விருது, International Critic's Award, NETPAC Award - Amiens இவையெல்லாம் இந்தத் திரைப்படத்துக்காகக் கிடைத்த விருதுகள். பிரசன்ன விதானகே, சிங்கள சினிமாவுலகில் நம்பிகை தரும் ஒரு படைப்பாளி என்பதற்கு அவர் இதுவரை கொடுத்துள்ள திரைப்படைப்புக்களே சான்று பகரும். பிரபலமான ஹிந்தி, தமிழ்ப்பாடல்களை உல்டா செய்தும், நகைச்சுவை என்ற பெயரில் கீழ்த்தரமான கோமாளித்தனங்கள் செய்தும் தொன்று தொட்டுப் புனையப்படும் சிங்கள சினிமாவில் ஒரு சில பிரசன்ன விதானகே போன்றோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். முன்னவர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ். இந்தத் திரைப்படம் சந்திரிகா காலத்தில் சிறீலங்கா அரசினால் தடைசெய்யப்பட்டு வெளிவரமுடியாது கிடப்பில் இருந்த படம்.
75 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தத் திரைப்படத்தினை இன்று டிவிடியில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. வன்னிஹாமி என்னும் ஏழைக் குடியானவனாக, கண்பார்வையற்ற பாத்திரமாகப் படத்தினை ஆக்கிரமிக்கும் ஜோ அபே விக்ரமசிங்கவுக்கு மிதமிஞ்சிய, மிகைப்படுத்தப்பட்ட நடிப்புக்குத் தான் பயிற்சி கொடுக்க வேண்டும். இப்படியான இயல்பான பாத்திரங்கள் என்றால் மனுஷர் வாழ்ந்து விடுவார். அதைத் தான் இப்படத்திலும் செய்திருக்கின்றார். அதே போல் இந்தத் திரைப்படத்தில் நடித்த இன்ன பிற பாத்திரங்களும் பெரும் நடிகர்கள் இல்லை, ஆனால் இந்தப் படைப்பினை உயர்த்துவதில் அவர்களின் சின்னச் சின்ன பிரதிபலிப்புக்களும் வெகு இயல்பாக அமைந்திருப்பது பெருஞ்சிறப்பு. அழுவதில் கூட மிகை நடிப்பு எட்டிப்பார்க்கவில்லை. எடுத்துக் கொண்ட மையக் கருவில் இருந்து இம்மியும் பிசகாமல், பாட்டு, நகைச்சுவை போன்ற வகையறக்களையும் புகுத்தாமல், ஏன் பின்னணி இசை கூட அந்தக் குக்கிராமத்தில் இயற்கை எழுப்பும் சத்தங்களாகவே வெளிப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு கச்சிதமாக இந்தப் படைப்பினைச் செதுக்கியிருக்கின்றது. கூடவே மகிந்தபாலவின் ஒளிப்பதிவு சிங்களக் கிராமத்தினை உள்ளதை உள்ளவாறாகக் காட்டுவதை மட்டுமே செய்கின்றது, செயற்கைச் சாயங்கள் இல்லாமல்.
எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அமைதியான, அழகான கிராமம். தன்னுடைய தேவைகளோடு மட்டுமே வாழப்பழகிக் கொண்ட அந்த பூமியைக் கூட இந்த இனவாத யுத்தம் விட்டுவைக்கவில்லை என்பதை விமர்சன ரீதியாக இல்லாமல் வெறும் காட்சிகளினூடே காட்டிச் செல்கின்றது இப்படம். இந்தப் படம் யார் பக்கம் என்பதை விட, உண்மையின் பக்கம் என்பதே பெருத்தமான குறியீடாக அமைந்து நிற்கின்றது.
வெகு நிதானமாக நடைபோடும் கிழவர் வன்னிஹாமியை போலவே நிதானமாக ஆனால் ஆழமான காட்சியமைப்புக்களோடு விரியும் இக்காவியம் முடிவில் வன்னிஹாமி தன்னை நிரூபிக்கும் காட்சியில் நிமிர்ந்து நிற்கின்றது, அவரைப் போலவே.
கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகக் கொழுந்து விட்டெரியும் ஈழத்து இனப்பிரச்சனை அங்குள்ள ஒவ்வொரு மனிதனையும் விட்டு வைக்காமல் தாக்கி வைக்கவே செய்கின்றது, பெரும்பான்மை சிங்கள இனம் கூட விதிவிலக்கல்ல. அதிகரித்து வரும் இராணுவ பட்ஜெட்டுக்களுக்கு ஈடுசெய்ய காய்கறிக்கடைக்காரனில் இருந்து உயர்பதவி வகிப்போன் வரி பாதுகாப்பு வரி சுமத்தப்படுகின்றது. இலங்கைப் பொருளாதாரம் அதல பாதாளத்தினை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கின்றது. இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்பட்ட தேசம் செங்குருதியால் முக்குளிக்கப்படுகின்றது. டொலரிலோ, பவுண்ட்சிலோ அல்லது இன்னொரு வெளிநாட்டுக் கரன்சியிலோ பாயும் வருவாயோடு பிழைத்துக் கொள்ளக்கூடிய குடும்பத்தோடு போட்டி போடுகின்றது தன் சொந்தச் சம்பளத்தோடு மட்டுமே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலும் இன்னொரு குடும்பம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி என்னும் அரக்கனோடு போரிட்டு வெல்ல முடியாமல் தத்தளிக்கின்றன அன்றாடம் தம் சொந்தப் பிழைப்பில் வாழும் குடும்பங்கள்.
நிலங்களை ஆக்கிரமிப்பது, கொடியேற்றுவது போன்ற குறுகியகாலக் களமுனை வெற்றிகள் தமது அரசியல் நாற்காலிகளுக்கு முண்டு கொடுக்கும் கற்களாக, ஆனால் அதன் பின்னே இருக்கும் குருதிக்குளிப்பும், பலியெடுப்புக்களும் கரிசனையற்றவையாக.
எங்கோ ஒரு குக்கிராமத்தில் இருக்கும் சாதாரண இளைஞன் தன் குடும்பத்தின் பொருளாதார விருத்திக்காகத் தன்னையே பலிகடாவாக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றான். இந்த நிர்ப்பந்ததின் அடிப்படையே யுத்தம் விதைத்த பொருளாதாரச் சீர்க்கேடு தானே.
வன்னிஹாமி என்று ஒருவரல்ல, பல்லாயிரம் குடும்பங்களின் நிலை இதுதான். இருந்தால் சில ஆயிரங்கள், இறந்தால் ஒரு லட்சம் என்ற விதியோடு வேள்விக்குப் பலிகொடுக்க பலியாடுகள் சிப்பாய்களாக. தம் பிள்ளை மீண்டும் உயிரோடு வருவான் என்ற நினைப்பில் காத்திருக்கின்றார்கள். மிஞ்சுவது வாழைக் குத்திகளை நிரப்பி, சடலம் என்ற போர்வையில் காத்திருக்கும் ஏமாற்றங்கள்.
எதிர்பாராதவிதமாக எனக்கு மின்னஞ்சல் மூலம் யாழில் இருந்து ஒரு நண்பர் அறிமுகமாகியிருந்தார். ஒரு சமயம் யாழில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் குறித்த சம்பாஷணை வந்தது. "ஏன் நீங்கள் வெளிநாடு செல்லக்கூடாது" என்று கேட்டேன். "அதெல்லாம் ஓரளவுக்காவது வசதி உள்ளவைக்கு வாய்க்கும் விஷயமெல்லோ அண்ணா" என்றார் அவர்.
என்று செத்துத் தொலையும் இந்தப் பாழாய்போன யுத்தம்?
27 comments:
இந்த படம் பற்றிய அறிமுகம் சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் பார்த்த ஞாபகம்!
இழப்புக்கள் என்றுமே ஈடு செய்யமுடியாத ஒன்று! அதுவும் உள்நாட்டுக்குள் தம் மக்களையே ஒரு சாராரினை எதிரிகளாக பாவித்து படுகொலைகள் செய்வதும் அதில் பல அப்பாவிகளை பலி கொடுக்கும் அரசின் செயல் கடும் கண்டனத்துக்குரியது !
யாராலும் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க இயலாமல் இருப்பதும் மிகுந்த வருத்தத்திற்குரிய விசயமாக உள்ளது :(
எம்மவர் தரப்பில் 60 பேர் மரணம்
எதிரிகள் தரப்பில் 100 பேர் மரணம்
இரண்டு பக்கமும் சேராமல் அனாதைப் பிணமாய் மனித நேயம்
என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் கோபத்தில் கிறுக்கி இருந்தேன். மனிதாபிமானம் முற்றிலும் புதைக்கப்பட்டுவிட்ட ஒரு தேசத்தின், ஒரு த்ரப்பாரின் நிலையை காட்டும் சினிமா,
நான் அதிகம் பாதிக்கப்பட்ட சினிமா இது. முன்பொருமுறை நீங்கள் அறிமுகம் செய்த மலையாளப் பட பட்டியலை பரீட்சைக்கு தயாராவது போன்றா மன நிலையுடன் பார்த்துக்கொண்டிருந்த நாட்களில் இந்த படத்தையும் பார்த்து சிங்கள, மலையாள திரைப்படங்கள் தமிழ் சினிமாக்களை விட எமது வாழ்வுக்கு நெருக்கமாக உள்ளன என்ற முடிவுக்கு வந்தது குறிப்பிடதக்கது
கானா... உங்கள் பதிவைப் படித்ததும் படத்தைப் பார்க்கவேண்டும் என்கிற என்ற எண்ணம் ஏற்படுகின்றது. இதன் டிவிடி எங்கே கிடைக்கும் - சொல்லுங்களேன்...
வணக்கம் பூம்பொழில்
நான் இதை கொழும்பில் இருந்து பெற்றுப் பார்த்த்தேன். கொழும்பில் இருக்கும் டிவிடிகடைகளில் தான் வாங்கும் வசதி இருக்கின்றது. இணையத்தில் கீழ்க்கண்ட தளத்தின் மூலம் வாங்கும் வசதி உண்டு என நினைக்கிறேன்.
http://www.toranavideo.com/
அன்பின் கானாபிரபா,
இத் திரைப்படம் வெளிவந்த நாட்களில் பெரும் களேபரத்தை அரசுக்கு ஏற்படுத்தியிருந்தது. அது கொண்டிருந்த உண்மையான விடயங்கள் பலரையும் கலவரப்படுத்தி இருக்கக் கூடும்.
மிக அருமையான திரைப்படம். நல்லதொரு விமர்சனம். இது போன்ற தரமான திரைப்படங்கள் பல சிங்களத் திரையுலகில் வெளிவந்துள்ளன. நீங்கள் அவை குறித்த பார்வைகளையும் எழுதவேண்டும்.
சில திரைப்படங்கள் என் வசம் உள்ளன. நீங்கள் பார்க்கவிரும்பின் தரலாம் !
//ஆயில்யன் said...
இந்த படம் பற்றிய அறிமுகம் சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் பார்த்த ஞாபகம்!//
வணக்கம் ஆயில்யன்
பிரசன்ன விதானகேயின் பேட்டியும் வந்திருந்தது.,போரின் கொடூரத்தை இன்னொரு கோணத்தில் யதார்த்தமாகக் காட்டியிருந்தது இப்படைப்பு.
பிரபா,உயிர்கள் என்பதும் பாசம் என்பதும் எல்லோருக்குமே ஒன்றுதானே !அரசியல்தானே எல்லாத்தையும் போட்டுக் குழப்பி உயிருக்கும் பாசத்துக்கும் மதிப்பே இல்லாமல் தன் பாட்டுக்குப் போய்க்கொண்டேயிருக்கு.
//அருண்மொழிவர்மன் said...
மனிதாபிமானம் முற்றிலும் புதைக்கப்பட்டுவிட்ட ஒரு தேசத்தின், ஒரு த்ரப்பாரின் நிலையை காட்டும் சினிமா,//
வணக்கம் அருண்மொழிவர்மன்
படத்தை நீங்களும் என் மனநிலையோடு பார்த்திருக்கிறீர்கள் என்று தெரிகின்றது, இப்படம் முடிந்ததும் பெரும் துயரம் ஒட்டிக் கொள்கின்றது நமது நாட்டின் போக்கை நினைத்து,
படம் பார்க்கத் தூண்டுகிறது விமர்சனம்!
//என்று செத்துத் தொலையும் இந்தப் பாழாய்போன யுத்தம்?//
ஹ்ம்ம்..! அதிகார வர்க்கங்களுக்கு அப்பாவி மக்களின் நிலைமை புரிவதெப்போது!
நல்ல படம். வெளிவந்தபோதே பார்த்தேன். ஞாபகப்படுத்தியதற்கு நன்றி
பார்க்க வேண்டும் என்ற ஆவலை உங்கள் விமர்சனம் உண்டாக்குறது தல.
ஆனா எப்படி!!!?
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்லதொரு சினிமா விமர்சனம் படத்தை தேடிப்பிடித்து பார்க்க வேண்டும்.
"அதெல்லாம் ஓரளவுக்காவது வசதி உள்ளவைக்கு வாய்க்கும் விஷயமெல்லோ அண்ணா"
இலங்கைத்தமிழர் எல்லோருக்கும் இது பொருந்தும் அவர்களுடைய கஷ்டம், கவலை எல்லோருக்கும் விளங்குவதில்லை.
//
என்று செத்துத் தொலையும் இந்தப் பாழாய்போன யுத்தம்?
//
ஆயுத வியாபாரிகளின் பேராசை அழியும் வரை இந்த உலகின் ஏதாவது ஒரு மூலையில் போர் நடந்து கொண்டு தான் இருக்கும்.
// எம்.ரிஷான் ஷெரீப் said...
அன்பின் கானாபிரபா,
சில திரைப்படங்கள் என் வசம் உள்ளன. நீங்கள் பார்க்கவிரும்பின் தரலாம் //
வணக்கம் ரிஷான்
இதே போன்று பல படைப்புக்கள் வந்ததாக அறிந்தேன், உங்களிடமிருக்கும் உள்ளவற்றையும் பெற்றுப் பார்க்க ஆவலாக இருக்கின்றேன். இனப்பிரச்சனை தவிர்ந்த மேலும் சில படைப்புக்களும் அடக்கம்.
//ஹேமா said...
பிரபா,உயிர்கள் என்பதும் பாசம் என்பதும் எல்லோருக்குமே ஒன்றுதானே !அரசியல்தானே எல்லாத்தையும் போட்டுக் குழப்பி உயிருக்கும் பாசத்துக்கும் மதிப்பே இல்லாமல் தன் பாட்டுக்குப் போய்க்கொண்டேயிருக்கு.//
வணக்கம் ஹேமா
அரசியல்வாதிகளின் குறுகிய நலனுக்காக பலிகடாக்களாகின்றார்கள் இல்லையா, என்ன செய்வது இந்த நாட்டின் தலைவிதி இது,
வருகைக்கு நன்றி சந்தனமுல்லை, மற்றும் டொக்டர்
கோபிநாத் said...
பார்க்க வேண்டும் என்ற ஆவலை உங்கள் விமர்சனம் உண்டாக்குறது தல.
ஆனா எப்படி!!!?//
வாங்க தல
இந்தப் படம் இணையத்தில் கிடைப்பது கஷ்டம், பார்ப்போம்.
//MANO said...
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்லதொரு சினிமா விமர்சனம் படத்தை தேடிப்பிடித்து பார்க்க வேண்டும்.///
மிக்க நன்றி நண்பரே
Joe said...
//
என்று செத்துத் தொலையும் இந்தப் பாழாய்போன யுத்தம்?
//
ஆயுத வியாபாரிகளின் பேராசை அழியும் வரை இந்த உலகின் ஏதாவது ஒரு மூலையில் போர் நடந்து கொண்டு தான் இருக்கும்.//
வாங்க ஜோ, நீங்க சொல்வது தான் எல்லாத்துக்குமே அடிப்படை :(
நன்றாக உள்ளது.இந்த படத்தை பாக்க நீங்கள் போக வேண்டிய இணையத்தளம் http://www.lankawe.com/movies/Pura_Handa_Kaluwara.html
வருகைக்கும், இணைப்பைத் தந்தமைக்கும் நன்றி சிவா அவர்களுக்கு
மிகச் சிறந்த ஒரு படத்தைப் பற்றிய பதிவு.நன்றி பிரபா. உடலத்துக்குப் பதிலாக வாழைக்குத்திகள் வைத்து அனுப்பப்பட்ட செய்தியிலிருந்து ப்ரசன்ன விதானகே உருவாக்கிய காவியமிது. இங்கு கனடாவில் ரதன் (வானரன்) சில ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்ததை வாசித்துவிட்டுத் தேடிப்பிடித்துப் பார்த்திருந்தேன்.(இங்கு பல இடங்களிற் கிடைக்கிறது.)விகடனிலும் நல்ல பதிவொன்றை வாசித்ததும் நினைவிலிருக்கிறது. ஒழுகும் வீட்டினுள் மழைநீர் படாமற்காப்பதற்காக உடலப்பெட்டியை அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாகத் திருப்பி அந்த வீட்டின் ஏழ்மையை விளக்கும் காட்சியொன்றே போதும் இயக்குநரின் திறமையைச் சொல்ல.ஜோ அபேவிக்ரம எனும் கலைஞன் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தாலும் - இந்தப்படம் அந்தக்கலைஞன்மீது ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. பின்னணி இசை பற்றி நீங்கள் எழுதியதை வாசிக்கும்போது காதுக்குள் சைக்கிள் செயினின் கிறீச்-ஒலி கேட்டுக்கொண்டிருக்கின்றது.
'கொலம்ப சன்னிய'
(Kolamba Sanniya -கொழும்புச் சன்னி) ஜோ அபேவிக்ரமவின் அற்புதமான ஒரு நகைச்சுவைப்படம். தேடுகிறேன்.
மிக்க நன்றி கரவெட்டியான்
'கொலம்ப சன்னிய' பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்
இனமத பேதமின்றி இந்த யுத்தம் எல்லொரையும் வாட்டி எடுக்கிறது என்பதுதான் உண்மை.
அரசின் அரசியல் நாடகத்தில் எம்மவர்கள் பாதிக்கபடுகிறார்கள் அதை எல்ல உலகமும் கண்மூடி பார்த்துக்கொண்டிருக்கிறது என்பது வேதனையாக இருக்கிறது.
அவர்களுக்கு அவர்களின் நாற்காலி பெரிதாக இருக்கிறது.உயிர் எல்லாம் தூசாகி மனித நேயம் மழுங்கடிகப் படுகிறது.
உங்கள் பதிவும் விமர்சனமும் உண்மைகளை தாங்கி வருகிறது
இன்னும் வரட்டும் சிறியவனின் வாழ்த்துக்கள்
உங்கள் வ்ருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர் கரவைக் குரலுக்கு,
அவருடைய படங்களை பற்றி பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன் சில காட்சிகளையும் பார்த்திருக்கிறேன் பகிர்வுக்கு நன்றி உங்கள் எழுத்து நடை எப்போதும் போல...
ஆனால் அந்த 5வது படத்துக்கு கீழே இருந்து எழுதியிருப்பதை இன்னமும் இந்த இலங்கையில் இருப்பவர்கள் புரிந்து கொள்ளவில்லையே எத்தனை முறை சொல்வது...
வாசித்து உங்கள் கருத்தையும் தந்தமைக்கு மிக்க நன்றி தமிழன்
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
hello, who would win in the Champions League? Barcelona or Real Madrid?
[url=http://medsonlinenoprescription.net/category/anti-depressants]buy antidepressants[/url]
Post a Comment