Wednesday, December 07, 2005
தேவராசா அண்ணை குடும்பம் இருந்த வீடு
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இராணுவ நடவடிக்கைய தொடர்ந்து இடம்பெயர்ந்தவர்களில் தேவராசா அண்ணர் குடும்பமும் ஒன்று. எங்களூர் கார்த்திகேசு அண்ணர் மகள் கலியாணம் கட்டி கனடா போனவுடன் அவவுக்கு சீதனமாக் கிடைச்ச வீடு வெறுமையாக கிடக்கவும் அதில் குடியேறினார்கள் தேவராசா அண்ணர் குடும்பம். அவருக்கு மூண்டு பிள்ளைகள், மூத்தவள் படிப்பில் படுசுட்டி, எங்களூர் சைவப்பிரகாசா வித்தியாசாலையில் அவள் சேர்ந்த நாள் முதல் படிப்பிலும் பேச்சுப் போட்டிகளிலும் அவள் தான் முதலிடம். தன் தாயின் முன்னால் கத்தி கத்தி பேச்சு போட்டிக்கு பயிற்சி எடுப்பது இப்போதும் என்ர காதில கேட்குது.
இரண்டாவது பிள்ளை லாவண்யன் அவனுக்கு அப்போது பத்து வயது இருக்கும். நான் எங்கட வைரவர் கோயில் பூசைக்கு பின்னேரம் ஆயத்தமாகும் போது அவன் தான் கூடமாட ஒத்தாசை செய்வது வழக்கம். கூட்டுவதில இருந்து தண்ணீர் கொன்டுவருவது, என்னோடு சேர்ந்து பஜனை பாடுவது எண்டு அவன் பங்கை செய்வான்.
அவர்களில் கடைக்குட்டி சரியான வெக்கறை, அப்போது அவளுக்கு மூண்டு வயது இருக்கும் மதிலுக்கு பின்னால ஒளிச்சிருந்து தன்ர அண்ணன் என்னோடு வைரவர் கோயில் பூசை செய்வதை பார்த்துக்கொண்டு இருப்பாள். கிட்டவந்து எங்களோட சேர்ந்து தானும் இணைய அவளுக்கு விருப்பம் இருப்பதை அவளுடைய கண்கள் காட்டிக்கொடுத்து விடும்.
தாய்க்காறி குளிப்பட்டும் போது சோப்பு நுரை கண்ணில பட்டு அவள் கத்தும் கத்து ஊரையே கூட்டிவிடும்.
தேவராசா அண்ணையும் அவருடைய மனைவியும் சண்டை பிடிச்சு ஒரு நாள் அறியன்.
பிழைப்புக்காக சைக்கிள் திருத்தும் கடை வச்சிருந்தார்.
இலங்கை ஆமி 95ஆம் ஆண்டு பிளேனால குண்டு போடேக்க அவர்கள் வீட்டுக்க தான் பதுங்கி இருந்தவையாம். குண்டு இலக்காக இவர்கள் வீட்ட தான் பதம் பார்த்தது. முழுக்குடும்பமும் அழிஞ்சு போச்சு.
2005 மார்ச் கடைசியில பத்து வருடம் கழிச்சு ஊருக்கு போனேன்.
தேவராசா அண்ணர் வீடு அதே அழிபாட்டோட கிடந்தது.
அதுதான் இந்தப்படம்.மூத்தவள் கத்தி கத்தி பேச்சு போட்டிக்கி பயிற்சி எடுப்பதும், கடைக்குட்டியின் வெக்கச்சிரிப்பும், என்ர மனசுக்குள்ள ஒருக்கா அந்தநேரம் வந்து போனது.
" பிரவு அண்ணா வைரவரடிக்கு போவமே" எண்டு லாவண்யன் கூப்பிடுவது போல எனக்குப்பட்டது அந்த நேரம்.
5 comments:
யாழ்ப்பாணத்தமிழில் எழுதும் உங்களுடைய பாணி மிகவும் அருமையாக உள்ளது.
தொடர்ந்தும் எழுத எனது வாழ்த்துக்கள்.
அருமைத் தமிழுடன் அருமையாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள்.
மேலும் தொடருங்கள்
படிச்சு முடிக்கேக்க சரியான கஷ்டமா இருந்தது...
இம்மாதிரியான இடுகைகள், நம்மூரில் நடந்த சோகங்களைப் பதிவு செய்யும் இம்மாதிரியான இடுகைகள் அவசியமானவை.
நன்றி!
-மதி
//" பிரவு அண்ணா வைரவரடிக்கு போவமே" எண்டு லாவண்யன் கூப்பிடுவது போல எனக்குப்பட்டது அந்த நேரம்.//
:(((
பதிவைவிட துன்பம்தந்தது அந்தவீட்டின் (சமாதி) படம்.
எமது உள்ளங்களுக்கு ஒரு வடிவம்கொடுத்தால் அது அந்த வீட்டைப்போலத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்கள் ஞாபகத்தெளிவும் மீட்டலும் வியக்கவைக்கிறது கானாபிரபா..!
வாங்கோ கோகுலன்
எப்படி இதையெல்லாம் மறக்கமுடியும், மறக்கவும் நான் விரும்பவில்லை. அந்த நினைவுகளே போதும்.
Post a Comment