Pages

Sunday, December 05, 2021

வலைப்பதிவு உலகில் நிறைந்த என் 16 ஆண்டுகள்


இதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை "மடத்துவாசல் பிள்ளையாரடி" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு 16 ஆண்டுகளை நிறைவு செய்து 17 வது ஆண்டில் காலடி வைக்கிறேன்.

இதுவரை 

415 பதிவுகள் 

மடத்துவாசல் பிள்ளையாரடி தளத்திலும்

http://kanapraba.blogspot.com/

ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுமாக

740 பதிவுகள் 

றேடியோஸ்பதி தளத்திலும்

http://www.radiospathy.com/

என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக

140 பதிவுகள்

உலாத்தல் தளத்திலும்

http://ulaathal.com

எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப் பிடிக்கும் அதற்காகவும் என்று வகைப்படுத்தி எழுதி வருகிறேன்.

106 பதிவுகள்

வீடியோஸ்பதி தளத்திலும்

https://www.youtube.com/c/videospathy

காணொளி ஊடகத்துக்காக வீடியோஸ்பதி வலைத் தளம், இரண்டு வருட காலத்துக்குள் கணிசமான இடுகைகளை அதில் இட்டிருக்கிறேன். 

தொடர்ந்து இன்னும் இதில் தீவிரமாக இறங்கவுள்ளேன்.

தவிர ஈழத்து முற்றம், இசையரசி, கங்காரு தேசம் போன்ற குழுமத் தளங்களிலும் பங்களித்திருக்கிறேன். அவை தனிக்கணக்கு.

இன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு ஒத்தடமாக என் வலையுலக வாழ்க்கையே துணை நின்றிருக்கிறது.

இந்தப் 16 ஆண்டுகளிலும் கை கொள்ளுமளவுக்காவது தொடர்ச்சியான வாசகர் வட்டத்தோடு என்னை இணைத்து வைத்துக் கொள்வது,

என் ஆத்ம திருப்திக்காகப் பகிரும் எழுத்து இதுவரை இரண்டு ஆராய்ச்சி மாணவியர் தம் பட்ட மேற்படிப்புக்காக என்னுடைய ஈழத்து வாழ்வியல், கலை இலக்கியப் பதிவுகளை வைத்துச் செய்து கொண்டது இவையெல்லாம் இந்த நீண்ட பயணத்தின் அறுவடைகளாகப் பெருமை கொள்ள வைக்கின்றது.

அவ்வப்போது வரும் தனி மடல்களில் நான் எப்போதோ எழுதிய பதிவை மேற்கொள் காட்டி வரும் அறிமுகங்களும் இந்த எழுத்துச் சேமிப்புகள் எங்கோ, எப்போதோ, எவருக்கோ பயன்படும் என்ற என் ஆரம்ப காலச் சிந்தனைகளை வேரூன்றி வைத்திருக்கின்றன.

பால்ய காலத்து ஈழத்து வாழ்வியலில் இருந்து எழுத்தாளர்கள் தாம் ஆதர்ச நாயகர்களாக அடையாளப்பட்டார்கள். தேடித் தேடி வாசிப்பதோடு நின்று விடாது எழுதி அதைப் பதிப்பிக்கவும் வேண்டுமென்ற வேட்கையில் அப்போது நானும் பள்ளிப் பிராயத்தில் இருந்தே எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன்.

ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளோசு உதயன் பத்திரிகை அப்போது கொண்டு வந்திருந்த அருச்சுனா என்ற சிறுவர் சஞ்சிகையில் கதைப் போட்டியில் சிறப்புப் பரிசு வாங்கியிருக்கிறேன். 

அவ்வப்போது அவுஸ்திரேலியாவில் வெளிவந்த ஈழமுரசு, உதயம் பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன்.

இந்தச் சூழலில் வலைப்பதிவு (Blog) யுகம் என்னுள் தேங்கியிருந்த எழுதும் ஆர்வத்தை மடை திறப்புச் செய்தது. வலைப்பதிவு உலகின் சிறப்பு என்னவெனில் அது எழுதுபவரையும், வாசிப்பவரையும் மிக அணுக்கமாக வைத்துக் கொள்வது. நான் ஒன்றை எழுதப் போக அதை இன்னொரு கோணத்தில் பார்க்கும் வாசகனையும், இன்னும் தேடலும் பதித்தலும் நிறைந்த வாசகர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. இதனால் வலைப்பதிவு உலகம் வெறுமனே எழுத மட்டும் களத்தை வழங்காமல் கற்றுத் தேறிக் கொண்டே இருக்கவும் வழி ஏற்படுத்தியது.

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன். எப்பேர்ப்பட்ட வரம் இது.

இறந்த காலத்து மனிதர்களை; அந்தக் காலத்துச் சம்பவங்களை உயிர்ப்பித்து எழுதி வந்த பதிவுகளைப் படித்துத் தங்கள் காலத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழுதும் உணர்வு வயப்பட்டும் எழுதிய தனி மடல்களும், பின்னூட்டல்களும் தான் என் எழுத்துக்கான இலக்கைத் தீர்மானித்திருக்கின்றன.

ஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.

இதுவரை 

"கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி", 

"பாலித் தீவு - இந்துத் தொன்மங்கள்  நோக்கி”

“அது எங்கட காலம்”  - ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல்”

ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறேன். 

இதோ இந்த டிசெம்பர் 2021 இல் வருகிறது 

SPB பாடகன் சங்கதி 

என்ற எனது நான்காவது படைப்பு.

தொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.

நேசம் கலந்த நட்புடன்

கானா பிரபா

05.12.2021

No comments:

Post a Comment