Pages

Wednesday, December 03, 2025

மணிக்குரலின் ஷண் றெக்கோடிங் ஸ்பொட்

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் நடுப்புறம் இரண்டடுக்கு மரத்துண்டுக் கட்டடத்தில் தான் முதன்முதலில் அவரைச் சந்திதேன்

மேஜர் ஷண்

அந்த மரக் கட்டடத்தின் சுவற்றில் நடிகை சுமித்ரா உள்ளிட்ட பிரபலங்களோடு அவர் நின்று எடுத்த படங்கள் மாட்டியிருக்கும்.

மணிக்குரல் ஒலிபரப்பு வழியாக யாழ்ப்பாண நகர்க் கடைகளின் விளம்பரங்களை ஒலிபரப்பிப் பாட்டுப் போடுவார்.

அவரின் மகன் சந்திரமோகன் என்ற மோகன் தான் எனக்கு மிக நெருக்கம். கண்ணாடி போட்ட அழகன், வள்ளி பட நாயகன் போலத் தோற்றம். ஹெட்போன் மாட்டிக் கொண்டு ஒவ்வொரு ஒலிப்பதிவுக் கருவியைச் சரி பார்க்கும் அழகே தனி. வளர்ந்த பின் நானும் ஒரு றெக்கோர்டிங் பார் வைக்க வேணும் என்று நினைப்பேன்.


ஷண் றெக்கோர்டிங் ஸ்பொட் யாழ்ப்பாண நகர பஸ் ஸ்ராண்டின் நடு நாயகமாக இருந்த நெட்டை மரப்பலகை மாடியில் இருந்து பதவி உயர்வு பெற்று யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத்துக்கு உள்ளே இருந்த கடைத்தொகுதியில் ஒரு அறையைப் பிடித்துக் கொண்டது. ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த அந்த ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வழி காட்டுவதே அப்போது வந்த இளையராஜாவின் படப்பாடல்களே.

ஸ்பீக்கர் வழியாக அந்த இசை நவீன சந்தைக் கட்டடத்தைத் தாண்டி வழிந்தோடும். "ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்" பாடலின் முகப்பு இசை அப்படியே காந்தம் போலக் கவர்ந்திழுக்கும்.

அப்போது கடும் போர்ச் சூழலில் ஒலிநாடாவுக்கும் தட்டுப்பாடு, ஏற்கனவே பதிவு செய்து பாவிக்காத ஒலிப் பேழைகளைக் கொண்டு போய்க் கொடுப்பேன். மோகன் அண்ணரும் பழையதை அழித்துப் புதுப் பாட்டுகள் பதிவு பண்ணித் தருவார்.
அன்ரி வீட்டில் துளசி அண்ணா பதிவு செய்து வைத்திருந்த பழைய ஓலிநாடாக்களைக் கேட்டு வாங்கி எடுத்து வந்து புத்தம் புதுப் பிரதி ஆக்கி விடுவேன்.
வைகாசி பொறந்தாச்சு பாட்டு ஒலிப்பேழை ஒரிஜினல் ராகம் 72 வெளியீடு. கொழும்பில் இருந்து சிவலிங்கம் மாமா கொண்டு வந்திருந்தார். இம்முறை நான் அவருக்குக் கொடுத்து மோகன் அண்ணா தன் றெக்கோர்டிங் பார் உபயோகத்துக்காக வைத்துக் கொண்டார்.

மோகன் அண்ணாவின் தம்பி கொழும்பில் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.

சகோதரர் Arunthavarajah Geneva வின் தொடர்பால் 30 வருடங்களுக்குப் பின் இன்று மோகன் அண்ணாவுடன் பேசினேன். பெரு மகிழ்ச்சி.

இன்று அவரின் தந்தை மேஜர் ஷண் இன் 24 ஆம் நினைவு நாளாம்.

“மணிக்குரல்” மேஜர் சண் புகைப்படம் நன்றி : நண்பர் K.P.லோகதாஸ்

No comments:

Post a Comment