Pages

Saturday, October 16, 2021

மனப் பேயும் மறு பிறவியும்





“மனம் தான் பேய்” என்று அப்பா சொல்லுவார். 

ஆனால் தொட்டிலில் பழக்கம் போல எனக்குச் சின்னப் பிள்ளை காலத்தில் இருந்தே பேய், பிசாசு மேல் நம்பிக்கை இல்லை, நம்பிக்கை இல்லை என்பதன் அர்த்தம் அதுகள் எனக்கு ஏதாவது செய்து விடும் என்ற பயம் தான் அவ்வ். 

எல்லாம் சிவமயம் எண்டு சொல்லுவினம்,

நான் சின்னப் பிள்ளையாக  இருந்த காலத்தில் இருந்தே ராவானதும் வீட்டுக்கு வெளியே போகப் பயம், இருட்டைக் கண்டால் பயம், இருட்டுக்குள் யாராவது நடந்து போனால் பயம்,  ஏதும் சத்தம் கேட்டால் பயம், தனியாக இருக்கப் பயம், அது பயம் இது பயம் இப்பிடித் தெனாலி ரகம் நான். ஆனால் சின்ன வயசில் படித்த ஒரு புத்தகம் மட்டும் இந்தப் பய நம்பிக்கைகளை ஆங்காங்கே தகர்த்தெறியும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.

அதுதான் “ஆபிரகாம் கோவூர்” என்ற உளவியல் நிபுணர் எழுதி, வீர்கேசரி பிரசுரமாக வந்த “மனக் கோலம்” என்ற நூல்.

பேய்கள், வசியம், மாந்திரீகம் போன்ற மூடத்தனமான நம்பிக்கைகள் ஒரு மனிதனுடைய உளவியல் சிக்கல்களோடு தொடர்புபடுத்த வேண்டியை என்ற ரீதியில் தான் சந்தித்த அனுபவக் கதைகளைத் தான் அதில் அவர் அதில் பகிர்ந்திருந்தார். 

அந்த நூலை ஈழத்து நூலகத்தில் படிக்க

https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

கோர இரவுகள் என்ற அவரது இன்னொரு நூலும் வீரகேசரி பிரசுரமாக அப்போது வெளிவந்தது.

அந்தக் காலத்தில் இந்தியாவில் இருந்து குறிப்பாக கேரளாவில் இருந்து இலங்கைக்கு ஆசிரியர்கள் வருவது வழக்கம். அது போலவே அவரும் டாக்டர் கோவூர் கேரளாவில் பிறந்து இலங்கையில் தன் ஆசிரியப் பணியைச் செய்தவர். அதன் பின்னர் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஆராய்ச்சிகளை நிறுவியும், கடும் பிரச்சாரங்களையும் செய்து வந்தவர்.  Rationalist Association of Sri Lanka என்ற சங்கத்தையும் இதன் வழி தோற்றுவித்தார். 


டாக்டர் ஆப்ரகாம் கோவூர் அவர்களின் இம்மாதிரியான உளவியல் சார்ந்த பணியில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மலையாளத்தில் “புனர் ஜென்மம்” என்ற படம் வந்தது. சேதுமாதவன் இயக்கத்தில் 1972 இல் வெளிவந்தது.

அந்தப் படம் பின்னர் தமிழில் “மறு பிறவி” என்ற பெயரில் மீள எடுக்கப்பட்டது.

பழம் பெரும் இயக்குநர் T.R.ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் T.R. பாப்பாவின் இசையில் “ஏடி பூங்கொடி” https://www.youtube.com/watch?v=Cs0F8zK4tDE பாடல் உட்பட அற்புதமான பாடல்கள் நிறைந்த படம்.  இதுவே இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் தூண்டியது.

மறுபிறவி படத்தின் கதை இதுதான்.

பணக்காரக் குடும்பத்தில் பிறந்த மஞ்சுளாவின் கல்லூரிக்கு ஆசிரியராக வரும் முத்துராமனுக்கு மஞ்சுளாவின் மேல் ஈர்ப்பு வந்து விடுகின்றது. ஒரு கட்டத்தில் மஞ்சுளா இல்லாமல் தன் வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு வந்த சூழலில் மஞ்சுளாவின் தந்தை அசோகனின் எதிர்ப்பையும் சமாளித்துத் திருமண வாழ்வில் மஞ்சுளாவோடு இணைகிறார். ஆனால் இந்தத் தம்பதிக்கு நீண்ட காலமாகக் குழந்தை பாக்யம் இல்லை என்ற கவலை அசோகனுக்கு நோய்ப் படுக்கை வரை கொண்டு போகின்றது. ஆனால் காலம் கடந்து தான் தெரிகிறது இந்தத் தம்பதி தாம்பத்திய உறவில் இல்லாமல் இருப்பது தான். இதனால் எழும் பிரச்சனைகள் முற்றி டாக்டர் ஆப்ரகாம் கோவூரிடம் மஞ்சுளா மன நல ஆலோசனை கேட்கச் செல்கிறார். அதன் தொடர்ச்சியாக டாக்டர் கோவூரும் முத்துராமனைச் சந்திக்கின்றார். 

அந்தச் சந்திப்பின் வழியாக டாக்டர் கோவூர் ஒரு உண்மையைக் கண்டறிகிறார். அதுதான்

தன் தாயின் அதீத அரவணைப்பில் செல்லப் பிள்ளையாக வளர்ந்த முத்துராமனுக்கு தாயின் திடீர் மரணம் தாங்கவெண்ணா மன உளைச்சலை உண்டு பண்ணுகின்றது. அதனாலேயே மாற்றலாகி மஞ்சுளா படிக்கும் கல்லூரிக்கு வரும் அவர் மஞ்சுளாவைத் தன் தாயின் சாயலிலேயே பார்க்கின்றார் சொல்லப் போனால் இவரும் தன் தாய் தான். அது அரவணைப்பை மட்டுமே தேடும் மனம், இவ்விதம் இரட்டை மனத்தில் வாழும் முத்துராமனின் மாய எண்ணமே இந்த தாம்பத்திய வாழ்க்கையின் இடையூறாக இருக்கின்றது. இந்த உள வருத்தத்தை மஞ்சுளாவால் தீர்க்க முடியும் என்ற வழிகாட்டலை டாக்டர் சொல்லி முத்துராமனை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வருகிறார்.


டாக்டர் கோவூரின் உளவியல் ஆராய்ச்சி அனுபவக் கதைகளில் இதை விடச் சிக்கலான ஏராளம் கதைகள் இருக்கின்றன. அவற்றை இணைத்து ஒரு சங்கிலிப் படமாக எடுத்திருக்கலாம். ஒரேயொரு கதையை, அதுவும் உளவியல் அணுகுமுறையோடு சொல்லப்படவேண்டியதைத் திரையில் காட்டும் சிரமம் தெரிகிறது. தேவையற்ற நீள நகைச்சுவைகள் (எம்.ஆர்.ஆர்.வாசு & மனோரமா), விரசக் காட்சிகளின் திணிப்பு என்று தாராள மயமாக்கலில் அதிகம் கவனத்தில் இருப்பதால் டாக்டர் கோவூரின் படைப்பு என்ற வகையில் படைப்பு ரீதியாக அவ்வளவு சிறப்பான படமாக இதைச் சொல்ல முடியாது.

இன்று காலை இந்தப் படத்தைப் பார்த்து முடித்த பின்னர் தான் தெரிந்தது இன்று (அக்டோபர் 16) நடிகர் முத்துராமன் மறைந்து இன்றோடு 40 ஆண்டுகள்.

கானா பிரபா



No comments:

Post a Comment