Pages

Saturday, September 13, 2008

ஓய்ந்து விட்ட கான(மூர்த்தி)சுரம்

எங்களின் கானமூர்த்தி என்னும் நாதஸ்வர மேதை கடந்த புதன் கிழமை காலமாகிவிட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவர். ஈழத்தாய் பெரும் நாதஸ்வர வித்துவான்களையும், தவில் மேதைகளையும் ஈன்ற வரிசையில் வி.கே.கானமூர்த்தி - வி.கே.பஞ்சமூர்த்தி இரட்டையர்களின் வாசிப்பும் தனித்துவமானது என்பதை ஈழமண் கடந்த புலம்பெயர் தமிழ் உலகமே அறியும்.

எங்கள் ஊரவர் என்பதால் இன்னும் அதிகப்படியாக வி.கே.கானமூர்த்தி அவர்களை காணவும் அவரின் நாதஸ்வர வாசிப்பைக் காது குளிரக் கேட்கவும் பல்லாயிரம் தடவை எனக்கும் வாய்த்தது நான் புலம்பெயரும் வரை. கானமூர்த்தி அவர்களின் கடைசிமகன் சந்திரசேகர் என் சகபாடியும் கூட.

வெற்றிலை, சுண்ணாம்பு கொடுத்த செஞ்சிவப்பு வாயும், குங்குமப் பொட்டும், அலங்கார வேலைப்பாடு பதித்த அங்கவஸ்திரத்தைத் தோளில் சாய்த்து இவர் கோயிலுக்கு வரும் மிடுக்கே அழகு. எந்த நேரமும் சிரிப்பை தவழவிடும் எடுப்பான முகலட்சணம் இவருக்கு ஆயுளுக்கும் ஆண்டவனால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம்.

அமைதியாக வந்து உட்கார்ந்து வாயில் நாதசுரத்தின் பொருத்தியை வைத்து சுருதி சரி பார்த்து விட்டு இந்த சகோதரர்கள் நாதஸ்வர கானம் எழுப்ப ஆரம்பித்தால் , இவர்களின் திறந்த மேனியில் அலைபாயும் பதக்கம் பொருத்திய வடச்சங்கிலிகள் இசைந்து ஆட, அந்த நாதஸ்வர வாசிப்பு ஓயும் போது தேன் மழையில் முக்கிக் குளித்த பரவசத்தோடு ரசிகர்கள் திளைப்பார்கள்.


மேலே: எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா 2007 இல் எடுக்கப்பட்ட படம். இதில் நாதஸ்வரக் கலைஞர்கள் வரிசையில் நான்காவதாக நிற்கின்றார் அமரர் வி.கே.கானமூர்த்தி அவர்கள்

மேளச்சமாவினைப் பருகும் ஆவலோடு ஊர் ஊராகப் பெருந்திருவிழாக்களைத் தேடிச் சென்று இசையின்பம் தேடும் ரசிகர்கள் வி.கே.கானமூர்த்தி - வி.கே.பஞ்சமூர்த்தி இரட்டையர்களுக்காவும் நாடி ஓடிச் செல்வது காலம் காலமாக நம் ஈழத்தில் நிலவும் வழக்கில் ஒன்று.

இனி நான் ஊருக்குப் போகும் போது தொலைந்து போனவைகளில் கானமூர்த்தி அவர்களின் தரிசனமும் இருக்கப்போகின்றது என்று தட்டச்சுப் போதே பெரும் மூச்சு வந்து முன் நிற்கின்றது.

அந்த இறவாக் கலைஞன் மீண்டும் எம் மண்ணில் பிறக்கவேண்டும் என்ற பேராசையோடு
என் நினைவுகளின் ஓரமாக இவரை இருத்தி வைக்கின்றேன்.

தொடர்புபட்ட இடுகை: மேளச்சமா

நேற்று எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நாதஸ்வர இசைக்கலைஞர் வி.கே.கானமூர்த்தி அவர்களுக்கான இசை அஞ்சலியை வழங்கியிருந்தோம்.

அதில் தற்போது நாதஸ்வர மேதை என்.கே.பத்மநாதனின் மறைவின் பின்னர் ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பிரதம நாதஸ்வரக் கலைஞராகவும், வி.கே.கானமூர்த்தியின் மருமகனாகவும், இறுதிக் காலத்தில் கூடவே நாதஸ்வர இசையை கானமூர்த்தி அவர்களோடு வாசித்த பேறும் பெற்ற திரு பாலமுருகன் அவர்கள் வழங்கிய நினைவுப் பகிர்வும்,

சிட்னி முருகன் ஆலயத்தின் பிரதம நாதஸ்வர வித்துவானாகவும், விகே.கானமூர்த்தி அவர்களின் உறவினராகவும் விழங்கும் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் வழங்கும் நினைவுப் பகிர்வும்

வி.கே.கானமூர்த்தி பஞ்சமூர்த்தி இரட்டையர்கள் வழங்கும் நாதஸ்வர வாசிப்பின் பின்னணி கலந்து ஒலித்தொகுப்பாக வருகின்றது. இந்த நிகழ்ச்சியைத் தயாரித்தளித்தவர் எமது அன்பு அறிவிப்பாளர் திரு.நவரட்ணம் ரகுராம் அவர்கள்.

ஒலி வடிவில் கேட்க


தரவிறக்கிக் கேட்க

திரு வி.கே.கானமூர்த்தி அவர்கள் கோண்டாவில் மேற்கு காலி கோவிலடியைச் சேர்ந்தவர். இவர் 1948 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 14 வது வயதில் நாராயணசாமி என்பவரிடம் நாதஸ்வரக்கலையை முறைப்படி பயின்றவர். அதன்பின் இவர் மாவிட்டபுரம் ராசாவிடம் இக்கலையின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார்.



இளவயதிலேயே இசைக்கச்சேரிகளை நடத்திய இவர், பின்னர் தனது இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து கச்சேரிகளை நடத்தினார்.

மிக நீண்டகாலமாகவே நாதஸ்வர உலகில் இரட்டையர்களாகப் பிரகாசித்த இவர்களது கச்சேரி இடம்பெறாத கோவில்கள், பொது இடங்கள், நிகழ்ச்சிகளே இல்லையெனுமளவுக்கு அகில இலங்கை முழுவதும் பெரும் புகழ் பெற்றிருந்தனர்.




ஈழத்தில் மட்டுமல்லாது இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள தேசங்களுக்கெல்லாம் சென்று புகழ் பரப்பியதுடன் வெளிநாட்டவர்களாலும் போற்றப்பட்டனர்.

இந்த இரட்டையர்களின் ஆரம்ப காலத்தில் ஒருமுறை சென்னையில் இவர்களது இசைக்கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவ்வழியால் சென்ற இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலஷ்மி தனது பயணத்தை இடையில் நிறுத்திவிட்டு இவர்களது கச்சேரிக்குக் சென்று முழுமையாக ரசித்ததுடன் இருவரையும் பெரிதும் பாராட்டியிருந்தனர்.

இந்த இரட்டையர்களுக்கு யாழ்.குடாநாட்டில் பெரும் ரசிகர் கூட்டமேயிருந்தது. இவர்களது கச்சேரி எங்கு நடந்தாலும் அங்கு பெரும் கூட்டம் சேர்ந்து விடுமளவுக்கு அனைவரையும் இவர்கள் தங்கள் இசைப்புலமையால் கட்டிப் போட்டிருந்தனர்.

கர்நாடக இசையில் மட்டுமல்லாது அதனூடாக இவர்கள் மெல்லிசையிலும் புகழ் பெற்றிருந்தனர்.

2005 ஆம் ஆண்டில் இந்த இரட்டையர்களுக்கு இலங்கை அரசு கலாபூஷணம் விருது வழங்கிக் கெளரவித்தது.

கோவில்கள், பொது அமைப்புக்கள், இசைச் சங்கங்களால் பல கெளரவ விருதுகளையும் பட்டங்களையும் இவர்கள் பெற்றிருந்தனர்.

நாட்டுச் சூழ்நிலைகளால் இசைவிற்பன்னர்கள் சற்று நலிவுற்றிருந்தபோதும் தனது பிறந்த மண்ணில் தொடர்ந்து கலைப்பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக சுகயீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இவர் செப்டெம்பர் இரவு யாழ்ப்பாணத்தில் உயிர் துறந்தார்.


ஆண் பிள்ளைகளும் 2 பெண் பிள்ளைகளையும், மனைவியை விட்டுப் பிரிந்துள்ள அவரின் இறுதிக் கிரியைகள் கோண்டாவில் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் செப்டெம்பர் 14, 2008 அன்று நடைபெற்றது.

கானம் இழந்த ஈழம்
ஹேமாவின் வலைப்பதிவில்

கானம் இவன் கண் மூடினான்.
மூர்த்தியோடு ஜோதியாகினான்.

கானம் ஒன்று கண் மூடியது.
நாதம் ஒன்றை ஈழம் இழந்தது.
தோடி தொட்ட நாதஸ்வரம்
மூர்ச்சையுற்றுப் போனது.
குழலுக்குள் மூச்சைக் கொடுத்து
உலகையே மகுடியாய் மயக்கியது.


இன்று...


ஊரே கலங்கி நிற்க
ஊமையாய் உறங்கியது.
நாதக் குழலின் காற்றும்
திசை மாறிப் பறந்தது.
குன்னக்குடிக்குச் சோடியாய்
இறைவனடி வாசிக்க
இருவராய் விரைவோம் என்று,
திரும்பாத தேசம் ஒன்றில்
மேடையும் கண்டு பிடித்தது.


பெரிய அண்ணாவாய்...தந்தையாய்...ஆசானாய்
என்னை வளர்த்த என் அண்ணாவுக்கு,
பூத்தூவி என் கண்ணீரோடு என் இதய அஞ்சலி.
என்றென்றும் மறவோம் நாம்.
தூரம் இருந்து தவிக்கிறோம் அண்ணா.
நாதஸ்வரத்துள் நாதம் வாழும் வரை
நீங்களும் எங்களோடு.
அண்ணா...அண்ணா...அண்ணா!!!

நன்றி:
* இந்த தகவலை உடன் பகிர்ந்து, கானமூர்த்தி அவர்களின் புகைப்படத்தைத் தந்துதவிய ஹேமா

* எமது பரராஜ சேகரப்பிள்ளையார் ஆலயத்தின் பிரத்தியோக இணையத்தளம்

* அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்காக அஞ்சலிப் பகிர்வை தந்துதவிய நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.நவரட்ணம் ரகுராம்

*அமரர் கானமூர்த்தி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பைப் பதிந்திருந்த
தினக்குரல் நாளேடு 12 செப்டெம்பர் 2008

* அமரர் கானமூர்த்தியின் இறுதி நிகழ்வுகள், அஞ்சலிப்பகிர்வுகளை அளித்திருந்த யாழ்ப்பாணம் உதயன் நாளேடு 12 செப்டெம்பர் 2008 மற்றும் 13 செப்டெம்பர் 2008


22 comments:

  1. இசைக்கலைஞனை பிரிந்து துயர் அடைந்திருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும்,நாதஸ்வர இசை ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!

    ReplyDelete
  2. /ஆயில்யன் said...

    இசைக்கலைஞனை பிரிந்து துயர் அடைந்திருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும்,நாதஸ்வர இசை ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!/


    வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  3. ஈழப்போரும் , எனது பதின்மங்களும் மத்திமம் கொண்டிருந்த 90 களின் மத்திய பகுதி. அப்பொழுது கோவில்களுக்கு நான் செல்ல முக்கியா காரணங்களுல் ஒன்றாக திகழ்ந்தவர்கள் காணமூர்த்தி-பஞ்சமூர்த்தி சகோதரர்கள். சுதுமலை அம்மன் கோவில், அட்டகிரி, வேலக்கை பிள்ளையார் கோவில் என்று அந்த சந்தர்ப்பத்தில் அவரது வாத்தியம் நிகழும் இடங்களுக்கு தவறாமல் எனது சமுகம் நிகழும். எனது பெற்றோர் அவர்கள் வாசிக்கும் தில்லானா மோகனாம்பாள் பாடல்களுக்கும், நாம் அவர்களது விடுதலை, சமகால திரை இசை பாடல்களுக்கும் தீராத ரசிகர்களாக இருந்த காலம் ஒன்றுண்டு. (இதே ஆலயங்களில் அப்போது பஞ்சபுராணம் பாடுவதில் சூப்பர் ஸ்டார் என் நண்பன் தெய்வீகன்). புலம்பெயர்ந்த நாட்களில் இவற்றை பற்றிய இழப்புணர்வு வரும்போதெல்லாம் நான் நாடியது ரமி இசைத்தட்டு வெளியிட்ட VK கானமூர்த்தி-பஞ்சமூர்த்தி இசைத்தொகுப்புகள் தான்....

    அக்காலத்தில் நான் ரசித்த இசைக்கலைஞர்கள் இவர்களும், அளவெட்டி பத்மநாதனும், சுதுமலை நாகராஜா + புதல்வர்களும். நாகராஜாவின் மகன் இளங்கோ எனது பால்ய கால் நண்பன். அவன் வண்ணத்து பூச்சி வயசென்ன ஆச்சு பாடலை பாட அடிமையாக ரசித்தவன் நான்.

    நன்றி பிரபா
    அற்புதமான படைப்புக்கும், உண்மையான உங்கள் ரசனைக்கும்

    ReplyDelete
  4. // ஆயில்யன் said...
    இசைக்கலைஞனை பிரிந்து துயர் அடைந்திருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும்,நாதஸ்வர இசை ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!//

    வருகைக்கும் உங்கள் அஞ்சலியைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி ஆயில்யன்.

    ReplyDelete
  5. நிஜமா நல்லவன்

    வருகைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  6. // அருண்மொழிவர்மன் said...
    ஈழப்போரும் , எனது பதின்மங்களும் மத்திமம் கொண்டிருந்த 90 களின் மத்திய பகுதி. அப்பொழுது கோவில்களுக்கு நான் செல்ல முக்கியா காரணங்களுல் ஒன்றாக திகழ்ந்தவர்கள் கானமூர்த்தி-பஞ்சமூர்த்தி சகோதரர்கள்.//

    வணக்கம் நண்பா

    நீங்கள் தாயகத்தில் இருந்த காலகட்டத்தில் இருந்ததால் உங்கள் பின்னூட்டத்தில் சொன்ன இடங்களும் நினைவுகளும் மீண்டும் நினைவில் வருகின்றன. நீங்கள் குறிப்பிட்ட அதே விடயங்களுக்காகவும் அதிகம் இவர்கள் வாசிப்பை நேசித்தவன் நான்.

    ReplyDelete
  7. எமது ஊர்களில் எல்லாம் இசை இரட்டையர் என்ற பெயருடன் வலம் வந்து கானமழை பொழிந்த கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதரரில் கானமூர்த்தி இசை இனி விண்ணுலகில் ஒலிக்கும். மண்ணுலகில் அவர் தந்த நாகசுர இசை கேட்காதவர் எவரும் இல்லை. வாழ்க அவர் நாமம்! அனுதாபங்களும் ஆறுதலும் குடும்பத்தினருக்கும் இசை உலகத்தினருக்கும். நல்ல பதிவு பிரபா!

    ReplyDelete
  8. விசாகன்

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

    ReplyDelete
  9. அமரர் கானமூர்த்தியைப் பற்றிய பதிவை எதிர்பார்த்தேன். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    நேரடியாக செல்ல முடியாவிட்டாலும் முழு ஈழத்து மக்களுமே மனதால் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    ReplyDelete
  10. சிறந்த ஈழத்துக் கலைஞனின் மறைவு பற்றிய உங்களின் பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  11. //இறக்குவானை நிர்ஷன் said...


    நேரடியாக செல்ல முடியாவிட்டாலும் முழு ஈழத்து மக்களுமே மனதால் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.//

    உண்மை தான் நிர்ஷான்

    இவரின் இறப்பு முழுமையான தமிழ் உலகிற்கே இழப்பு.

    //Aravinthan said...
    சிறந்த ஈழத்துக் கலைஞனின் மறைவு பற்றிய உங்களின் பதிவுக்கு நன்றிகள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் அரவிந்தன்

    ReplyDelete
  12. அமரர் கானமூர்த்தி அவர்கள் தொடர்பாக பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    இறுதிக்காலத்தில் கானமூர்த்தி ,பஞ்சமூர்த்தி இருவருடையதும் கானமழை சேர்ந்து ஒலிக்காதது வருத்தம் தான் !

    ReplyDelete
  13. எங்களூருக்குப் பெருமை தந்த மற்றுமொரு நாதஸ்வரம் பற்றிய உங்கள் பகிர்வு அருமை. இன்றைய எம் போன்ற இளைய தலைமுறை இவர்கள் பற்றித் திரிந்து கொள்ளவேண்டும்.


    //இசைக்கலைஞனை பிரிந்து துயர் அடைந்திருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும்,நாதஸ்வர இசை ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!//


    வழிமொழிகிறேன் நானும்.

    ReplyDelete
  14. வெற்றியிலும் இவர் காலமான துயரச் செய்தியைப் பகிர்ந்து கொண்டோம்.. பல நேயர்கள் (நாடு முழுவதுமிருந்து) உண்மையிலேயே துயர் கொண்டனர்

    ReplyDelete
  15. :( நிச்சயம் இசைத்துறைக்கு ஓர் பெரும் இழப்பு

    ReplyDelete
  16. :( ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  17. //மாயா said...

    இறுதிக்காலத்தில் கானமூர்த்தி ,பஞ்சமூர்த்தி இருவருடையதும் கானமழை சேர்ந்து ஒலிக்காதது வருத்தம் தான் !//

    வணக்கம் மாயா

    நான் தாயகத்தில் இருந்த காலம் வரை சகோதரர்கள் இருவரும் சேர்ந்தே கச்சேரிகளைச் செய்வதைப் பார்த்திருக்கின்றேன். காலமாற்றத்தாலும், இடப்பெயர்வுகளாலும் இந்த நிலை ஏற்பட்டு சேர்ந்து ஒலிக்காதது உண்மையில் வருந்தத்தக்கது

    ReplyDelete
  18. // LOSHAN said...
    வெற்றியிலும் இவர் காலமான துயரச் செய்தியைப் பகிர்ந்து கொண்டோம்.. பல நேயர்கள் (நாடு முழுவதுமிருந்து) உண்மையிலேயே துயர் கொண்டனர்//

    வணக்கம் லோஷன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள், உங்கள் வானொலி மூலம் இப்படியானதொரு நிகழ்வை வழங்கியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  19. //Thooya said...
    :( நிச்சயம் இசைத்துறைக்கு ஓர் பெரும் இழப்பு//

    உண்மைதான் தூயா, இப்போது புலப்பெயர்வாலும் பொருளாதாரக் காரணங்களாலும் இவ்வாறான பல கலைஞர்கள் உருவாவதும் அருகி வருவதும் கவலைக்குரியது

    //சந்தனமுல்லை said...
    :( ஆழ்ந்த அனுதாபங்கள்//

    வணக்கம் சகோதரி

    தங்கள் துயரைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  20. www.vimbam.blogspot.com


    tna interview

    ReplyDelete
  21. my deepest condolances for the great man's family. emathu eelathu valvil mika mukkiyamanavarkalil oruvarai ilathuvittom

    ReplyDelete
  22. வணக்கம் வெண்காட்டான்

    அன்னாருக்கான இரங்கலைப் பதிந்தமைக்கு நன்றிகள். அவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

    ReplyDelete